36 – ருத்ராதித்யன்
காசி நகர்…..
பழங்காலந்தொட்டு இன்றுவரையிலும் அறிவியலிலும், ஆன்மீகத்திலும் உச்சந்தொட்டுக் கொண்டிருக்கும் ஊர். இயற்கையுடன் இணைந்து, ஆன்மீகத்தில் உச்சம் காண பலரும் சென்று சேரும் இடம் காசி தான்.
கர்மாவின் நேர்மறை எதிர்மறை பயன்களை அனுபவித்து கடந்தால் மட்டுமே அந்த மண்ணை தொட முடியும் என்பது ஓர் அதீத நம்பிக்கை. காசி விஸ்வநாதனை தரிசித்து அப்படியே வெளியே வந்தால் தாய் அண்ணபூரணியை அருகிலேயே நடந்து தரிசித்துக்கொள்ளலாம்.
வடமாநிலங்களில் கர்ப்பகிரத்திற்குள்ளே சென்று இறைவடிவை தொட்டு வணங்கலாம். ஏனோ அந்த முறை தென்மாநிலங்களில் மட்டும் இல்லை. காசி விஸ்வநாதர் தொட்டு தழுவி தரிசித்துவிட்டு வெளியே வந்தால் அப்படியொரு மன அமைதி உள்ளுக்குள் ஏற்படுகிறது. எத்தனை அறிவியல் சார்ந்த செயற்கை சாதனங்களினாலும் இத்தகைய அமைதியை கொடுக்கமுடியாது.
மதம் சார்ந்த பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று காசிவிஸ்வநாதருக்கு ஓர் கோவிலை முழுதாய் கட்டிமுடித்திருப்பது சந்தோஷத்தை கொடுக்கிறது. அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்வதற்கேதுவாக ஏற்பாடுகள் இன்றும் நடந்துக்கொண்டுதானிருக்கின்றன.
ரன்வீர் மற்றும் திலக் இருவரும் அக்கோவிலின் வாசல் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
“டேய் திலக்… வா டா.. போய் விஸ்வநாதரை பார்த்துட்டு வரலாம்…. மணி நாலு, இப்ப தொட்டு கும்பிடலாம் டா….”, என அழைத்தான்.
“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல ரன்வீர். நீ போ.. நான் இந்த பக்கம் விசாரிச்சிட்டு இருக்கேன்…..”, என கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் கடைவீதியின் பக்கம் சென்றான்.
“இதுல என்னடா நம்பிக்கை…. இந்த உலகத்த படைச்சது இறைவன் தானே… இயற்கையா இருந்தாலும் அதை நிர்மாணிக்க, நடத்த ஒரு சக்தி இருக்குல்ல… அதிபுத்திசாலித்தனமான முட்டாள்தனம் டா இது…. நான் விஸ்வநாதரை தரிசனம் பண்ணிட்டு கேஸோட முக்கிய துருப்போட வரேன் இரு டா….”, என தனக்கு தானே பேசிக்கொண்டு உள்ளே சென்று வரிசையில் நின்றான்.
மாலை வேளை பூஜைக்காக கோவில் முழுவதும் தண்ணீர் விட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்துக் கொண்டிருந்தது. வெள்ளை மார்புள் கல், தண்ணீர் பட்டதும் இன்னும் பளிச்சென தெரிந்தது. ஆங்காங்கே உண்டியல் உள்ளிருக்கும் பணத்தை பார்க்கும்படியான கண்ணாடியோ, கனமான ப்ளாஸ்டிக் கொண்டோ செய்து வைத்திருந்தனர்.
அதைக் கண்டதும் அவனுக்கும் சற்று சிரிப்பு தான் வந்தது. “பண்ற பாவமெல்லாம் பண்ணிட்டு கடவுளுக்கு காசு குடுத்துட்டா விட்டுடுவாரா என்ன? எவ்வளவு பணம் அதுல இருக்கு… இதை வச்சி நடக்கற நன்மைகள் விட அதிகாரிகளும், மந்திரிகளும் அதை எடுத்துக்கறது தான் அதிகமா நடக்குது.… இன்னும் இந்த நாட்ல எப்ப தான் சுய ஒழுக்கம், சுய சிந்தனை, சுய கட்டுப்பாடு எல்லாம் வருமோ தெரியல…. “, என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவனை பக்கவாட்டில் வந்தவன் இடித்துவிட்டு முன்னே சென்றான்.
அவன் இடித்ததில் அருகில் வந்துகொண்டிருந்த ஒரு பெரியவரின் மேல் மோதி நின்றான்.
“டேய்… “, என முன்னால் சென்றவனைக் கண்டு சத்தமிட்டு விட்டு அந்த பெரியவரை ஒரு தூண் ஓரமாக பிடித்துச்சென்று அமரவைத்தான்.
“ரொம்ப நன்றி தம்பி… “, பெரியவர்.
“நான் தான் மன்னிப்பு கேக்கணும் . உங்கள இடிச்சி கீழ தள்ளியிருப்பேன்….”
“உங்கள ஒருத்தர் இடிச்சதால தானே என்பக்கம் சாயவந்தீங்க… என்னமோ தெர்ல காலைல இருந்து யாராவது என்னை இடிச்சிட்டே இருக்காங்க…. “, என கூறியபடி கால்களை நீவிவிட்டுக்கொண்டார்.
“வேற யாரு இடிச்சாங்க தாத்தா… கோவில்ல கூட்டமும் கம்மியா தானே இருக்கு… கடைதெருவுலையும் அவ்வளவா கூட்டம் இல்லையே….”
“இங்க இல்ல… படித்துறைகிட்ட…. இரண்டு பேர் ரெண்டா பக்கம் ஓடினாங்க… உடம்பெல்லாம் காயமா இருந்தது. ஒருத்தர் வயசானவர்… ஆனா என்னைவிட கம்மிதான்… இன்னொருத்தர் உன்னவிட கொஞ்ச வயசு அதிகமுள்ள ஆளு… ஆளுங்க வந்து மறுபடியும் பைத்தியங்கன்னு சொல்லி இழுத்துட்டு போனாங்க….”
“எந்த படித்துறைகிட்ட தாத்தா? “, ரன்வீர் சந்தேகம் கொண்டு கேட்டான்.
“மானசரோவர் படித்துறைகிட்ட… “
“சரி சரி… நீங்க இன்னும் கொஞ்ச நேரம் உக்கார்ந்து இருக்கீங்களா? சந்நிதானம் தொறந்துட்டாங்க போல.. நான் போறேன்….”
“சரிப்பா… நீ கும்பிட்டுட்டு கிளம்பு…. என் பையன் இப்ப வந்துடுவான்… “, என கூறிவிட்டு அமர்ந்து கொண்டார்.
ரன்வீர் வரிசையில் நின்று விஸ்வநாதரை தொட்டு வணங்கிவிட்டு மானசரோவர் படித்துறை நோக்கிச் சென்றான்.
இடையில் தன்னுடன் வந்த திலக்கை அழைக்க, அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் இவன் மட்டும் அந்த படித்துறை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வழியில் ஆங்காங்கே காலையில் பெரியவர் கூறிய அடையாளத்தின்படி நடந்தவை பற்றி விசாரித்துக் கொண்டே சென்றான்.
நந்தன், செந்தில் கூறிய கூற்றை நினைத்தபடி நண்பனை நினைத்து சற்று கலக்கம் கொண்டிருந்தான். இந்த வழக்கில் இதுவரை அனைத்துமே மருத்துவம் சார்ந்த குற்றங்களாக அனைத்து இன உயிர்களுக்கும் நடந்து வந்திருக்கிறது. இதில் தன் நண்பணும் அவன் காதலியும் சிக்கியிருப்பது என்னென்னவோ சிந்தனையை தூண்டியது.
அக்கூட்டத்தில் இருந்தபோது பரத்திற்கு செந்தில் அழைக்க, பரத் நெடுமாறனின் சொற்படி அவர்களுக்கு கொடுக்கவேண்டிய தகவல்களை மட்டும் கொடுத்துவிட்டு ஆதியும், சிரஞ்சீவும் அர்ஜுனை மீட்க சென்றுகொண்டிருப்பதை கூறினான்.
“பரிதி …. இதுவரை எந்த வகைலையும் நாம பாக்காத ஒரு வழக்கு இது… தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கலன்னா நம்ம பக்கம் தான் இழப்புகள் அதிகமா இருக்கும்… “, செந்தில்.
“நம்ம நகரமுடியாதபடி இங்கேயே கட்டிப்போட்டு வச்சிருக்கறமாதிரியான விஷயங்கள் தான் அதிகமாக இருக்கு… பீல்ட்க்கு நாம போகவே முடியாது….”, நரேன்.
“நாம பீல்ட்க்கு போகவே வேணாம்…. இங்கிருந்து உதவிய மட்டும் அனுப்ப ஏற்பாடு பண்ணலாம் நரேன். செந்தில் நீங்க?”, என அவரை பார்த்தாள்.
“என்னையும் கடத்திட்டாங்கன்னு நாடகத்தை போட்றவா?”, செந்தில் யோசனையுடன் கேட்டார்.
“அதுவும் நல்ல ஐடியா தான்…. நீங்க நேரா யாத்ரா இருக்க இடம் போயிடுங்க… நானும் நரேனும் இங்க பாத்துக்கறோம்….”, பரிதி கூறியதும் செந்தில் சில விஷயங்களை அவளுடன் கலந்துரையாடிவிட்டு நாடகத்தை அரங்கேற்ற சென்றார்.
“பரிதிக்கா… எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு…. வேற மாதிரி குற்றங்கள்னா அர்ஜுனனும் யாத்ராவும் அசால்ட்டா அவங்கள தட்டி தூக்கிட்டு வந்துடுவாங்க. இவங்க மருத்துவத்த வச்சி தான் தப்பே பண்ணிட்டு இருக்காங்க…. டோபோரிஜோ ல அந்த மனுஷன் மேல் தோல் உரிக்கப்பட்டு கெடந்தது நினைச்சா இப்ப கூட மனசு கலங்குது.. அவன் உயிரோடு இருக்கறப்பவே அந்த தோலை உரிச்சி இருக்காங்க…. அதனால ஏற்பட்ட இரத்த போக்குனால தான் அவன் செத்திருக்கான்… தவிர… அது சர்வேஸ்வரன் சார் பையனா இருக்க வாய்ப்புகள் இருக்குன்னு தோணுது…”, எனக் கூறிவிட்டு நிறுத்தி அவர்கள் முகத்தை பார்த்தான்.
“என்னடா சொல்ல வர?”, நரேன் பொறுமையை இழுத்துப் பிடித்து கொண்டு கேட்டான்.
“நம்ம அஜ்ஜுவுக்கும் ரவுடிக்கும்…”, என நந்து இழுக்கும்போதே பரிதி நிறுத்தச்சொன்னாள்.
“நந்து… நீ நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா நடக்காதுன்னு நம்புவோம். நம்ம சக்திக்கு பலமடங்கு பெரிய எதிரிகிட்ட தான் மோதிட்டு இருக்கோம். நம்ம வேலைய நாம பாக்கலாம்… “, எனக் கூறிவிட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என கூற ஆரம்பித்தாள்.
அங்கிருந்த அனைவரும் செய்யவேண்டிய ஏற்பாடுகளை பிரித்துக்கொண்டு அவரவர் வேலையைத் தொடங்கச் சென்றனர்.
“பரிதி மேடம்…. நீங்க சொல்றபடி நடந்தா அதிக ரிஸ்க் தான்.. அர்ஜுனையும் யாத்ராவையும் காப்பாத்திடலாம் தான்… ஆனா…. நமக்கு இத ஹேண்டில் பண்ண பெரிய சப்போர்ட் தேவை…. “, நரேன் திவாகர் எழுந்தபின் நின்று கூறினான்.
“உண்மை தான் நரேன். நம்ம சோர்ஸ் வச்சி இவங்கள நம்ம ஒன்னும் செஞ்சிட முடியாது தான். நெடுமாறன் சொன்னவிஷயத்த பாத்தா இது இயற்கைக்கும் செயற்கைக்குமான போர்…. இதுல நம்ம பங்கு எந்த பக்கங்கறது மட்டும் தான் நாம் முடிவு பண்ண முடியும். மத்ததது சூழ்நிலைக்கேற்ப செயல்படுத்திக்கலாம்…. முதல்ல மிருக பாதுகாப்பு வாரியத்துல இருந்து நீங்க லிஸ்ட் வாங்குங்க… அத வச்சி நாம பேசிக்கலாம்… “, பரிதி.
“ஜான் அனுப்பின கடைசி சிக்னல்படி கேரளால ஒரு குடோன்… நந்து சொன்னது வச்சி பாத்தா டெல்லில ஒன்னு இருக்க வாய்ப்பிருக்கு… இது ரெண்டும் நான் என்னனு பாக்குறேன். சர்வேஸ்வரன் சார் கிடைச்சா இன்னும் கொஞ்சம் தகவல் கிடைக்கும்….”
“கிடைப்பாரு… பாத்துக்கலாம் நரேன்… நானும் ஒரு முக்கியமான வேலைய இது சம்பந்தமா முடிச்சுட்டு வரேன்…”, என அவனிடம் விடைப் பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.