39 – மீள்நுழை நெஞ்சே
“சரி என்ன சொல்றா உன் தங்கச்சி?”
“அதே தான் ஆண்ட்டி…”
“என்னடா ஆண்ட்டின்னு சொல்ற? மினி பேபின்னு தானே கூப்பிடுவ.. அப்படியே கூப்பிடு”, என்றார்.
“இல்ல.. அங்கிள்…..”, என்று இழுத்தான்.
“அவரு இங்க இல்ல… குன்னூர் போயிட்டாரு… நீ எப்பவும் போல பேசு யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க….”, என்றார் துவாரகாவை முறைத்தபடி.
“மினி ம்மா…. பயங்கரமா பேசறீங்க போங்க.. பாவம் திவாகர் பயந்துட்டாரு…. “, என மித்ரா சிரித்தபடிக் கூறினாள்.
“நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாப்பா…. அதுக்குள்ள சமையல் முடிச்சிடறோம்….”, அன்பரசி.
“சரிங்க ஆண்ட்டி…. “
துவாரகா அவனை தன் அறைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தாள்.
விகாஷுடன் சிறிது நேரம் விளையாடியபடி இருந்தவள், அவன் தூங்கியதும் மித்ரா அறையில் உடைமாற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சி துவா?”, மித்ரா மென்மையாகக் கேட்டாள்.
“என்ன பண்றதுன்னு தெரியல மித்ரா…… ஒரே குழப்பமா இருக்கு….. ஊருக்கு போக ஆசையும் இருக்கு பயமாவும் இருக்கு…..”
“எத பாத்து பயந்தாலும் அத மறுபடியும் ஃபேஸ் பண்ணா தான் பயம் போகும். இது நீங்க அடிக்கடி சொல்ற விஷயம்… உங்களுக்கும் நீங்களே சொல்லிக்க மறந்துடறீங்க துவா….”
“ஆனா…. “
“எல்லா ஆனாவும் ஒரு ஓரமா வச்சிட்டு உங்க ஆசைய யோசிங்க. உங்களுக்காக அங்க காத்திருக்கறவங்கள பத்தி யோசிங்க…”
“ம்ம்….. “, எனத் தலைக்குனிந்து அமர்ந்துக் கொண்டாள்.
அவளுக்குள் ஒரு பெரும் போராட்டமே நடந்துக் கொண்டிருந்தது. அவள் மனமே இரண்டாக பிரிந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தது.
பயமும், ஆசையும் மாறி மாறி போர் செய்ய, பயத்தை வென்றாக வேண்டிய அவசியம் புரிந்துக்கொண்டாள்.
பிற்போக்குத் தனமான விஷயங்கள் மீது அவளுக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. மற்றவர்களை இக்காரணம் கொண்டு ஒதுக்கி வைத்தாலே சண்டைக்கு செல்பவள், இன்று தானே அப்படி இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.
என்று இருந்தாலும் இதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதற்கான சந்தர்ப்பமாக இதை மாற்றிக்கொள்ளலாம் என ஒரு முடிவுக்கு வந்தாள்.
முடிவு செய்ததும் கனிமொழிக்கு அழைத்தாள்.
“சொல்லு துவா இந்நேரத்துல கால் பண்ணிருக்க…”, என்று எடுத்ததும் கேட்டாள்.
“நீயும் அதே கூட்டம் தானே அப்பறம் என்ன புதுசா கேக்கற.. எங்கண்ணன சரியா நான் ஆபீஸ் போற நேரத்துல வந்து மடக்க சொல்லி ஐடியா குடுத்தது நீன்னு நல்லாவே தெரியும்…”
“தெரிஞ்சிடிச்சில்ல விடு… என்ன முடிவு பண்ணி இருக்க ?”, என விட்டேத்தியாகக் கேட்டாள்.
“எல்லாம் என் நேரம் டி. வரேன்…. வந்தா உன் வீட்ல தான் தங்குவேன்…. அதுக்கும் எதாவது சொல்லாதீங்க…. கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்ன வரேன்…ப்ரொஜெக்ட் அதுக்குள்ள முடிஞ்சிடும். கையோட அப்ராட் போறதுக்கும் சொல்லிக்கிறேன்”, என்று நிதானமான குரலில் கூறினாள்.
அவள் வருகிறேன் என்று கூறியதே கனிமொழியை துள்ளிக்குதிக்க செய்தது. அதற்குமேல் அவளை வற்புறுத்த அவளும் விரும்பவில்லை. துவாரகா கூறிய அனைத்திற்கும் சரியென்று தலையாட்டிவிட்டாள்.
ஃபோனை வைத்துவிட்டு தலையை நிமிர்த்த எதிரில் பத்மினி தேவி நின்றிருந்தார்.
“நீங்க நினைச்சது நடக்குது ஆண்ட்டி…. நான் ஊருக்கு போறேன் … இனிமேலாவது கொஞ்சம் சிரிங்க….”, என முயன்று வரவழைத்த சிரிப்புடன் கூறினாள்.
“நீ கல்யாணம் முடியும்வரை அங்க இருந்தா தான் நம்புவேன்… உன்னையெல்லாம் நம்பமுடியாது”, எனக் கூறிவிட்டு அவளுக்கு குடிக்க பழரசம் கொடுத்துவிட்டு சென்றார்.
வீட்டில் அனைவருக்கும் பத்மினி தேவியே அவள் திருமணத்திற்கு செல்லும் செய்தியை பரப்பிவிட்டார். அன்பரசி அவளை மென்மையாக அணைத்து, “இதை உன்னால கடந்து வர முடியும் ராகா… தைரியமா இரு”, என்று திடம் கூறினார்.
“முயற்சி பண்றேன் ஆண்ட்டி…”, எனக் கூறிவிட்டு அவள் அண்ணன் அருகில் சென்றாள்.
“நீங்க போட்ட ப்ளான் வர்க் அவுட் ஆகிரிச்சி.. நீ எப்ப ஊருக்கு கிளம்பற?”, எனக் கேட்டாள்.
“அவன ஏன் தொறத்துர? என் திவா செல்லம் நாளைக்கு நைட் தான் ட்ரைன்ல போவான்…”, என பத்மினி அவனுக்கு முன் பேசினார்.
“ரொம்ப தான் ரெண்டு பேரும் க்ளோஸோ?”, என துவாரகாவும் இப்போது ஆன்ட்ராக்கில் வந்தாள்.
“ஆமா… உனக்கு என்ன? என் செல்லத்து கிட்ட நான் பேசணும். நீ அப்பறமா வந்து பேசிக்க”, என பத்மினி தேவி அவனைக் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.
“எல்லாம் என் நேரம்….”, என முனகியபடி தன் அறைக்கு சென்றாள்.
“அதிதி… நாளைக்கு டெஸ்டிங் பண்ணிடணும். கம்பெனில இருந்து டபுள் ப்ரஷர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க…. “, என அதிதிக்கு அழைத்து பேசியபடி கூடத்தில் இருந்த பால்கனி வந்தாள்.
“கண்டிப்பா இன்னிக்கு மிட் நைட் ஆரம்பம் ஆகிடும் துவாரகா.. நான் அந்த ஏற்பாடு தான் செஞ்சிட்டு இருக்கேன்…. “
“ஏன் டிலே பண்றீங்கன்னு எனக்கு தெரியல பட் இதுக்கு மேல நானே நினைச்சாலும் டிலே பண்ணமுடியாது…. அதனால மதியூரன்கிட்ட சொல்லி கொஞ்சம் வேகமா வேலைய பாக்க சொல்லுங்க… கொஞ்சம் பர்ஸனல் வேலை அதான் திடீர்ன்னு லீவ் எடுக்க வேண்டியதா போச்சு”
“பரவால்ல துவாரகா… நீங்க அங்க பீஸ்புல்லா இருங்க… நாளைக்கு நீங்க வரப்ப முதல் ரவுண்ட் டெஸ்டிங் முடிஞ்சி இருக்கும்… அதுக்கு நான் பொறுப்பு….”, எனக் கூறி அழைப்பை முடித்தாள் அதிதி.
அதிதி வைத்த சிறிது நேரத்தில் வில்ஸ் அழைத்தான்.
“ஹே ராக்ஸ்…. என்ன பண்ற? ஏன் லீவ்?”
“அண்ணன் வந்திருக்கான் டா… பஞ்சாயத்து பேச… ஒருவழியா இப்பதான் முடிஞ்சது… அடுத்த வாரம் ஊருக்கு போகணும்… அந்த டைம்ல ப்ராஜெக்ட் வேலை நீ தான் பாக்கணும் இப்பவே சொல்லிட்டேன்”
“ரியலி….. சூப்பர் ராக்ஸ்…. அதுலாம் நான் பாத்துக்கிறேன். நீ போய் அப்பா அம்மாவ பாரு…. தவிர சீக்கிரமே நீ இங்கேயும் கிளம்பி வந்துடுவல்ல… ஐ எம் சோ எக்ஸைடட் ராக்ஸ்”
“அதே வீடு இருக்கா வில்ஸ்?”
“நான் இன்னும் அதே வீட்ல தான் இருக்கேன். நீ இந்த தடவை இங்கேயே தங்கிக்கோ… லில்லியும் இங்கேயே வந்துட்டா… நாம ஜாலியா இருக்கலாம்”, எனக் குதூகலமாகக் கூறினான்.
“லில்லிக்கு இங்கேயே காலேஜ் கிடைச்சிடிச்சா?”, சந்தோஷத்துடன் கேட்டாள்.
“ஆமா…. இங்க இருந்து ஒன் ஹவர் ட்ராவல் தான்…. சோ பிரச்சினை இல்லை… நானும் ரெண்டு வீட்ட க்ளீன் பண்ற வேலை இருக்காது, நீயும் இங்கயே தங்கிட்டா….”, என மீண்டும் தன் கருத்தை முன்வைத்தான்.
“நானும் உங்க கூடவே தங்கிக்கறேன் டா… கவலைபடாத”
“வீட்ல பேசமாட்டாங்களா?”
“நான் இப்ப தெளிஞ்சிட்டேன் டா… “, எனக் கூறினாள்.
“ராக்ஸ் … ஆர் யூ ஆல்ரைட்?”
“ட்ரையிங் டூ பீ…. தேங்க்யூ வில்ஸ்…. சீக்கிரம் நேர்ல பாக்கலாம்”, எனக் கூறிவிட்டு அழைப்பை முடித்தாள்.
“என்ன மேடம் இப்பவே வீடு எல்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டீங்க போலவே…?”, எனக் கேட்டபடி முகிலமுதன் அங்கே வந்து அமர்ந்தான்.
“போகணும்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம் அதுக்கான ஏற்பாட்டையும் பாக்கணுமே முகில்”, எனக் கூறிவிட்டு தலைக்கவிழ்ந்து தன்னை நிலைபடுத்திக் கொண்டாள்.
“அப்ப நிஜமா கிளம்ப போறியா துவாரகா?”, என்று அவன் கேட்ட குரலில் என்ன இருந்தது என்பது அவளுக்கு புரியவில்லை.
“ஆமா … ப்ராஜெக்ட் அல்மோஸ்ட் முடிஞ்சது. டெஸ்டிங் வேலை போயிட்டு இருக்கு. அது முடிஞ்சா நானும் அது கூடவே கிளம்பணும்…”, என்றாள் பிசிரில்லாத குரலில்.
“அப்ப நான்?”, என அவன் கேட்டதும் துவாரகா முழித்தாள்.
“என்ன நீங்க?”
“இல்ல… எங்கள எல்லாம் விட்டுட்டு போயிடுவியான்னு கேட்டேன்…”, வழக்கமான சமாளிக்கும் பதில் தான், ஆனால் அவன் மனது சமாளிக்க ஒத்துழைக்கவில்லை.
“நான் இங்கேயே எத்தனை நாள் இருக்க முடியும் முகில்…? ஒரு நாள் கிளம்பி தானே ஆகணும்…”, என்றால் அவன் முகத்தைப் பார்த்து.
“சரி…. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… சாயந்தரம் நீ ப்ரீயா இருந்தா வெளிய
போலாமா?”
“என்கிட்ட பேச என்ன இருக்கு வெளிய போய் பேசற அளவுக்கு?”
“அம்மா தாயே .. கொஞ்சம் மனுஷியா மாறு…. மனுஷனோட அவஸ்தைய புரிஞ்சிக்க…. நான் ஒன்னும் உன்னை கடிச்சி சாப்பிட மாட்டேன்… உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அவ்வளவு தான்”, என்றான் அடக்கப்பட்ட ஆற்றாமை குரலில்.
சிறிது யோசித்துவிட்டு சரியென்றாள். மாலை ஐந்து மணிக்கு வெளியே செல்லலாம் என்று கூறினான்.
“என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போவீங்களா?”
“எங்க போகலாம் நீயே சொல்லு”, அவள் வருகிறேன் என்று கூறிய சந்தோஷத்தில் கேட்டான்.
“மருதமலைக்கு”
“நீ தான் நான்வெஜ் சாப்டா கோவில் போகமாட்டியே துவாரகா?”
“ச்சே… அத மறந்துட்டேன்…. சரி எதாவது மனசுக்கு அமைதி கிடைக்கற இடத்துக்கு கூட்டிட்டு போங்க”, எனக் கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
முகிலமுதன் திவாகருடன் நன்றாக பழகினான். அவன் மட்டுமல்ல அவ்வீட்டில் அனைவரும் திவாகருடன் சகஜமாக பலநாள் பழகிய நபரிடம் பழகுவது போல தோன்றியது துவாரகாவிற்கு.
இராஜாங்கமும் மாலை நான்கு மணியளவில் வீடு வந்து சேர்ந்தவர் திவாகருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.
“நமக்கு தெரியாம இங்க பல வேலை நடக்குது போல…. என்னமோ?”, என்று தனக்குத் தானே பேசியபடித் தயாராகச் சென்றாள்.
அவளும் முகிலும் வெளியே கிளம்பி நிற்பதைக் கண்டு அங்கே யாரும் வித்தியாசமாக நினைக்கவில்லை. இங்கு துவாரகா வந்த பிறகு அவர்கள் இருவரும் தான் ஷாப்பிங் சென்று வருவர். ஆனால் துவாரகாவிற்கு ஏனோ மனதில் சிறு நெருடல் எழுந்தது.
ஒரு அழகான பூங்காவுடனான ரெஸ்டாரெண்டில் வண்டியை நிறுத்தினான் முகிலமுதன்.
அந்த இடம் மிகவும் இரம்யமாக, இயற்கையை நிதானமாக அமர்ந்து இரசிக்கும்படியான இடத்தில் அமைந்திருந்தது. சுற்றிலும் இருந்த பூச்செடிகள் பல, மாலை நேர மலர்தலுக்காக மொட்டுக்களை தயார் செய்துக் கொண்டிருந்தன.
முகிலமுதன் துவாரகாவைப் பார்த்தபடி ஏற்கனவே புக் செய்திருந்த டேபிள் அருகில் சென்று அமர்ந்தான்.
“ரொம்ப அழகா இருக்கு முகில்…. இப்படி ஒரு ரெஸ்டாரண்ட் இங்க இருக்கறது இவ்வளவு நாளா தெரியவே இல்லை எனக்கு….”, எனப் பிரமிப்புடன் கூறினாள்.
“நீ வந்து ஒரு மாசம் தான் ஆகுது துவாரகா… தவிர நீ நிறைய விஷயங்களை பாக்கறதும் இல்ல கவனிக்கறதும் இல்ல”, என்றான்.
“ப்ளீஸ் முகில் நீங்களும் எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க… ஒரு வாரமா உங்கம்மாகிட்ட மட்டுமில்லாம எல்லார்கிட்டயும் நிறைய வாங்கிட்டேன். இதுக்கு மேல முடியாது…..”, எனத் தலையைப் பிடித்தபடி அவன் எதிரில் அமர்ந்தாள்.
“என்னாலையும் இதுக்கு மேல சொல்லாம இருக்க முடியாது துவாரகா….. என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?”, என்று நேரடியாகக் கேட்டான்.