39 – ருத்ராதித்யன்
நுவலியும், ரணதேவ் தாத்தாவும் ஒருவழியாக காட்டின் நடுவில் இருந்த வனதேவி கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
ரணதேவ்வை கோவிலுக்கு பின்னே இருந்த ஊற்றில் குளிக்கச் சொல்லிவிட்டு, நுவலி பூஜைக்கு தேவையான பொருட்களை பிரித்து வைத்தாள்.
ரணதேவ்வுக்கு ஒரு வெள்ளை வேஷ்டியும், மேல் துண்டும் கொடுத்து கட்டிவரக் கூறினாள்.
“இதெல்லாம் தான் முதுகுல கட்டிட்டு வந்தியா நுவலி? சொல்லியிருந்தா நானும் கொஞ்சம் நேரம் சுமந்துட்டு வந்திருப்பேனே மா?”, ரணதேவ் அவள் எடுத்துவைத்திருந்த பொருட்களை பார்த்தபடி கூறினார்.
“உங்க சுமையே ரொம்ப பெரிசு பெரியய்யா… நான் உங்கள அஜகரன்கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்ததே கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்கு…. ஆனாலும் உங்கமேல எனக்கும் ஒரு கோவம் இருக்கு… கொஞ்சம் சந்தேகமும் இருக்கு….”, தீர்க்கமான குரலில் கூறிவிட்டு அவரின் கண்ணை கூர்மையாக பார்த்தாள்.
“உன் கோவம் புரியுது…. சந்தேகம் என்னனு கேளு நுவலி”, எனக் கூறிவிட்டு அவள் அருகில் வந்தார்.
“ஏன் அஜகரனோட குடும்பத்த கலைச்சீங்க? அவங்கள காக்கவேண்டிய பொறுப்பு உங்களோடது… அப்படியிருந்தும் நீங்களே ஏன் அவனோட குடும்பத்த கொல்ல காரணம் ஆனீங்க?”
“அது என் புத்திகெட்ட நேரம்னு தான் சொல்லணும் நுவலி… யார் சொல்லியும் கேக்காம அவங்க இருப்பிடத்தை யாரோ ஒருத்தனுக்கு காட்டிகொடுத்துட்டேன் …. கேவலம் அந்தஸ்து பணத்துக்காக தான் பண்ணேன். ஆனா நானும் இன்னிக்கு குடும்பத்த இழந்துட்டு தனியா தான் நிக்கிறேன்”
“உங்க வாரிசா ஆருத்ராம்மா இருக்காங்க… அஜகரனுக்கு அப்படி யாருமே இல்லையே பெரியய்யா…. அவன் குடும்பத்த நீங்க அழிச்சும் இப்பவரை உங்க வாரிச அவன் தானே காத்துட்டு வரான்… இதுக்கு என்ன பதில் செய்யப்போறீங்க? “, ஊசியென வந்தன வார்த்தைகள்..
“அதுக்கான மன்னிப்பும் பிராயச்சித்தமும் பண்ண இப்ப தயாரா தான் வந்திருக்கேன் நுவலிம்மா…. வனதேவியும், வனயட்சியும் சொல்றதுக்கு முழு மனசோட கட்டுப்பட்டு வந்து நின்னிருக்கேன். என்ன பண்ணணும் சொல்லுங்க…. “, கைக்கட்டி தலைக்குனிந்து வனதேவியின் சிலையின் முன்னால் வந்து நின்றார்.
“அவனுக்கான துணைய நீங்க கொண்டுவரணும்”, நுவலியின் குரல் முற்றிலும் வேறாக வெளிவந்தது அவளது குரல்வளையில் இருந்து.
“ஆனா… இவங்க இனமே இவனோட முடியுதுன்னு நீங்க தானே சொன்னீங்க தேவி… நான் எங்க இருந்து அஜகரனுக்கு துணைய கொண்டு வருவேன்?”, பவ்யமாக குனிந்து அமர்ந்து கேட்டார்.
“இவனோட துணை இவனுக்காக காத்திருக்கு விக்கிரமா …. அதை தேடி கொண்டு வா…. சமுத்திரத்துக்கு நடுவுல இருக்கு… தேடுதல் தொடங்கு… உனக்கான அடுத்த பாதை கண்ணுக்கு தெரியும்… “, எனக் கூறி நுவலி பத்மாசனத்தில் கண்மூடி அமர்ந்தாள்.
“விக்கிரமா…. வனதேவிக்கு உன்கையால அபிஷேகம் செய்து பூஜை பண்ணு…. உன் பேத்தி இந்த இயற்கைக்கு ஆற்ற வேண்டிய பெரிய கடமை இருக்கு… அவளுக்கு ஆதரவா எல்லா விதத்திலும் நீ கூட நில்லு… அவளும், அவள் கணவனும் மிகப்பெரும் கருவிகள் எங்களுக்கு… அதை நீ ஞாபகம் வைத்து இனிவரும் காலத்தை திட்டமிட்டு செயலாற்று… “
ரணதேவ் நுவலி வாயின் வழி வந்த வார்த்தைகளை அசைபோட்டபடியே கலக்கமான மனதுடன், தனக்கு இடப்பட்ட வேலையை செய்ய தயாரானார்.
“என்ன கலக்கம் விக்கிரமா?”,கண்கள் மூடிய படியே நுவலி கேட்டாள்…
“நான் செஞ்ச பாவத்தால் தான் சிங்கம்மா
இன்னிக்கி இவளோ கஷ்டம் படறா…. இனிமேலாவது அவ குடும்பத்தோட சந்தோசமா இறுக்கம் இல்லாத சூழ்நிலையில் வாழனும் .. “, என தயங்கி தயங்கி பேசினார்.
“உன் கடமைய நீ சரியா செஞ்சிருந்தா இன்னிக்கி உன் குடும்பமும் உன்னோட இருந்திருப்பாங்க… உன்னோட பகட்டும் அதிகார சிந்தனையும் தான் உன்னோட இந்த நிலைமைக்கு காரணம். மிதிலனோட குடும்பமும் உன்னால தான் இன்னிக்கி இந்த நிலமைல இருக்கு…. “, நுவலி இதை கூறுகையில் அவள் கண்களில் கண்ணீர் விழியோரம் வழிந்தது.
“என்னை காப்பாத்த வந்து மிதிலனோட அப்பா இறந்துட்டாரு… என்னால இன்னிக்கி ரெண்டு குடும்பம் அழிஞ்சி போச்சி ம்மா…. அந்த குற்ற உணர்வே என்னை தினம் தினம் கொள்ளுது…. நான் என்ன செய்யறது ?”, என தன்னுள் இருந்த அகங்காரம், அதிகாரம் அந்தஸ்து எல்லாம் விடுத்து மனம் திருந்தி கண்ணீர் விட்டார்.
” உன் கண்ணீர் துடைக்கற கரம் ஒன்னு இருக்கு… அத கண்டுபிடி….. அந்த கரத்ததோட உதவி உங்களோட இந்த பயணத்துக்கு தேவை…. “, எனக் கூறிவிட்டு பூஜையை ஆரம்பிக்க கூறினாள்.
நுவலி கண்மூடியபடியே செய்முறைகள் கூற கூற ரணதேவ் அனைத்தும் செய்து முடித்து தீபாராதனை காட்ட ஆயத்தமானார்.
அந்த சமயத்தில் சரியாக அஜகரன் எனும் நாகம் அங்கே வந்து சன்னதியின் உள்ளே சென்று தேவி சிலைக்கு குடையாக படம் எடுத்து நின்றது.
எத்தனை கோபம் இருந்தாலும் தனது கடமையை சரியாக வந்து ஆற்ற நிற்கும் அஜகரனைக் கண்டு ரணதேவ் மண்டியிட்டு மன்னிப்பு வேண்டினார்.
தன் குடும்பம் அழிய காரணமானவன் எதிரில் இருந்தும் பழியுணர்வை அடக்கிக் கொண்டு அஜகரன் வனயட்சி குகைக்கு முன்னால் வழி காட்டி சென்றது.
நுவலி அஜகரன் பின்னால் செல்ல, அவளுக்கு பின் ரணதேவ் கையில் பெரிய மூங்கில் கூடையை தூக்கி கொண்டு சென்றார்.
நீர் வீழ்ச்சியின் மேலே இரண்டு பெரிய கூர் பாறைகளின் இடையில் புகுந்து, சில நூறுஅடிகள் சென்றதும் ஓர் அடர்ந்த வனம் தெரிந்தது. அது தான் அந்த காட்டின் நடு பகுதி ஆகும். அங்கே பாம்பின் உடல் போல பினைந்தபடி வளர்ந்திருந்த ஒரு அரியவகை மரத்தின் அடியில் இருந்த காளி சிலைக்கு வணக்கம் வைத்து விட்டு எதிரில் இருந்த பெரிய பாறையின் பக்கவாட்டில் படி போல கற்கள் ஆங்காங்கே போடப்பட்டு இருந்தன.
அந்த படிகளில் ஏறியதும் அந்த பாறையின் உச்சியில் மீண்டும் ஓர் மரத்தின் வேர் ஓடியது. அந்த வேரை ஒட்டியபடி சில அடி தூரம் சென்று பல்லாயிர ஆண்டு கால பழமையான சந்தன மரத்தின் அருகில் வந்து நின்றனர் மூவரும்.
“அஜகரா…. தேவிக்கு பூஜை போடணும். உள்ள கூட்டிட்டு போ… “, நுவலி கூறியதும் அஜகரன் ரணதேவை பார்த்தது.
“இந்த முறை மனசு திருந்தி வந்திருக்காரு…. நம்ம கடமைய நம்ம செய்யலாம்….”, என நுவலி கூறியதும் அஜகரன் அந்த சந்தன மரத்தின் மேல் ஊர்ந்து ஏறி உச்சியில் இருந்த பொந்தில் புகுந்து மரத்தின் வேர் வரை இறங்கி தன் சட்டையை மரத்தில் உராய்ந்து கழட்டிவிட்டு, சிலதுளி இரத்தம் சிந்தி பூமிக்கும், வேருக்கும் இடையில் பற்களை வைத்து அழுத்த மரத்தின் பின்னால் மறைந்து இருந்த குகை கண்ணிற்கு தெரிந்தது.
அஜகரன் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மரத்தின் மத்தியில் இருந்த பொந்தில் இருந்து வெளியே வந்து அந்த குகையின் உள்ளே சென்றது.
அதன் பின் இவர்களும் உள்ளே செல்ல அந்த குகை மீண்டும் புற கண்களுக்கு மறைந்து போனது.
நுவலியின் சொற்படி அங்கும் அனைத்து பூஜைகளும் முடிய, ரணதேவ் தேட வேண்டிய உதவி கரத்தினை பற்றி வினவினார்.
“அந்த கரம் உன் நிழலில் தான் ஜீவனம் செய்கிறது. அவன் தேவையை நீ பூர்த்தி செய்… அவன் தாயின் உடல் நிலை அடுத்து வரும் நாட்களில் மோசமடையம்…. அதை கொண்டு நீ அவனை கண்டறியலாம்…. அவன் மனதின் முழு சம்மதம் பெற்று இந்த பிரபஞ்ச கடமையை ஆற்ற ஆசிகள்”, என வனயட்சியாக மாறி கூறினாள் நுவலி.
அந்த நொடியே அவள் மயங்கி விழ அஜகரணும், ரணதேவும் அவளை ஒரே சமயத்தில் தாங்கினர். அதன் பின் ரணதேவ் அவளை தோளில் சுமந்து கொள்ள இரவு நெருங்கும் சமயம் அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அஜகரன் வனத்தின் எல்லையில் நின்று கொண்டு ஆச்சியின் இல்லம் பார்த்தது. அந்த குறிப்பு உணர்ந்த ரணதேவ் நுவலியை அங்கே கொண்டு சென்றார்.
“வா விக்கிரமா… அடுத்த கை கெடைச்சதா ?”, ஆச்சி தலை தூக்காமல் கேட்டார்.
“தேடி கண்டு பிடிக்க சொல்லி இருக்காங்க ஆச்சி…”
“கண்டுபிடி… உன் பேத்தி வந்துட்டா போல…. அந்த ரெண்டு புள்ளைகளையும் படுக்க வச்சி வைத்தியம் பாக்க எடத்த ஏற்பாடு பண்ணு …. மகதன வைக்க காட்டுக்குள்ள பாறை கூட்டம் சேர்ந்த இடத்தில பாதுகாப்பு வளையம் போடு… “, என உத்தரவு இட்டபடி வெளிய அவர் வரவும் அர்ஜுன் யாத்ரவுடன் அவர்கள் வரவும் சரியாக இருந்தது.
ஆதியும், ஆருத்ராவும் சோகமான முகத்துடன் வண்டியை விட்டு இறங்கி வந்தனர்.
அர்ஜுனும், யாத்ராவும் சுய நினைவு தப்பி இதயஓட்டம் நிற்கும் தருவாயில் இருந்தனர்.
மகதன் சற்று தெளிவு பெற்று, ஆருத்ராவை கவனித்துக்கொண்டு படுத்து இருந்தது.
“ஆச்சி… அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்துங்க….. நீங்க குடுத்த சாறு குடுத்தும் இன்னும் அவங்க மயக்கம் தெளியல…. மூச்சும் வேக வேகமா விடறாங்க…. “, ஆருத்ரா யாத்ராவை வருடியபடி கூறினாள்.
“அந்த குடிசைல ரெண்டு பேரையும் படுக்க வைங்க…. அர்த்தநாரி சொரூபமே.. இங்க வா…. இத அவங்க தொப்புள்ல கொஞ்சம் கொஞ்சமா ஊத்து…. இந்த குடுவ பையனுக்கு, இது பொண்ணுக்கு….. மகதன் எங்க?”
“வண்டிகுள்ள ஆச்சி…. பைரவா… உன் தோழன் வந்துட்டான் டா…. “, என்றதும் பைரவ் பாய்ந்து ஓடி வந்தது.
ஒரே ஓட்டத்தில் மகதன் இருந்த வண்டியில் தாவி ஏறி, கூண்டிற்குள் புகுந்து கொண்டது.
மகதன் முதலில் மெல்ல முகர்ந்து பார்த்தது. பைரவனும் மெல்ல அருகில் சென்ற முகர்ந்து பார்த்தது. இருவருக்கும் என்ன பந்தம் தெரிந்ததோ, உடனே நாவல் ஒருவரை ஒருவர் நக்கி தங்கள் பிரிவு, ஏக்கம், அன்பு, சண்டை என அனைத்தும் அடுத்த அரை மணிநேரம் பகிர்ந்துக் கொண்டார்கள்.
தீரனும் தூரத்தில் இருந்து தன் குரல் கொடுத்து தனது இருப்பை தெரிவித்தது.
இரண்டு நெடுமாறன்களும் இந்த காட்சியை கண்டு ஆச்சர்யம் கொண்டதோடு, தங்கள் மனதிற்கினிய இரண்டு உயிர்களின் நிலை கண்டு வருத்தமும் கொண்டனர்.