4 – ரெட்டைக்குன்றுக் கோட்டை
“இந்த ரிசார்ட் எப்போ கட்டின? என்கிட்ட சொல்லவே இல்ல? என்னோட ஷேர் எவ்ளோ இங்க?” என முன்பக்க இருக்கையில் அமர்ந்தபடிக் கேட்டான்.
“இது என்னோட தனிப்பட்ட ஷேர். உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. 5 நிமிஷம் லேட்.” என அவனை முறைத்துவிட்டு வேகமாக வண்டியைக் கிளப்பினான்.
“இன்னும் சாப்பிடவே இல்ல..” என சேகர் கூற, “கோட்டைல தான் சாப்பாடு” என அவனைப் பார்க்காமலே பதில் கூறிவிட்டு வாகனத்தை ஓட்டினான்.
‘ரூம்ல இருந்த சாக்லேட் எடுத்துட்டு வந்திருக்கலாம்..’ என சாலை வளைந்து செல்லும்போது நினைத்தான்.
கவிநேசன் ஒரு பாக்கெட் மிட்டாயை அவனிடம் நீட்டினான். சேகரும் உடனே ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு சாய்வாக படுத்துவிட்டான். மலைப்பாதை இறக்கத்தில் சென்றாலே அவனுக்கு வாந்தியும், தலைச்சுற்றலும் வந்துவிடும்.
கவிநேசன் தனது அன்பை செயலில் காட்டும் பழக்கமுடையவன் அதனால் தம்பிக்கு தேவையானதை ஊருக்கு கிளம்பும் முன்பே வாங்கி வைத்துவிட்டான். சேகர் சாய்வாக படுத்துக் கொண்டதும் அவன் முகத்தில் வெயில் படாத வண்ணம் மறைவும் போட்டுவிட்டான்.
இங்கே சென்னையில் கும்மிருட்டான அறையில் ஒரு மெழுகுவர்த்தி மினுக் மினுக் என எரிந்துக் கொண்டிருந்தது. அதன் எதிரே ஒரு வயதான பெண்மணி அழுது வடிந்த கண்களுடன் அந்த வெளிச்சத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த 23 வயது யுவதியின் முகத்தை பரித்தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“உங்க வீட்ல ஒரு ஆன்மா ரொம்ப வருஷமா சுத்திட்டு இருக்கு. நீங்க இருக்க வீடு அந்த ஆன்மா இருந்த வீடு..”
“நாங்க வாடகை வீட்ல தாங்க இருக்கோம்..” என அந்த பெண்மணி கூறினார்.
“வாடக வீடோ சொந்த வீடோ , நீங்க அங்க தானே இருக்கீங்க?” என அந்த யுவதியின் அருகே அமர்ந்திருந்தவன் கேட்டான்.
“ஆமாங்க பேய்சாமி..”
“பேய் சாமியா? வெறும் சாமின்னு சொன்னா போதும்..”
“நீங்க பேய் ஓட்டரவரு தானே அதான் அப்படி கூப்பிட்டேன்..”
“இதே மாறி தான் வீட்ல இருக்க பேய்கிட்டயும் பேசியிருக்கீங்க போல..?” என அவன் முறைத்தபடிக் கேட்டான்.
“நான் மரியாதையா தான் அந்த பேய அந்த வீட்ட விட்டு போக சொன்னேனுங்க.. ஆனா பாருங்க அது என் புருஷன அடிச்சி வீசிறிச்சி.. நீங்க தான் அந்த பேய்கிட்ட பதமா சொல்லி அந்த வீட்டவிட்டு போக சொல்லணும். அது பேய் தானே எங்க வேணா இருக்கலாம். நம்ம அப்படியாங்க?” என அந்த பெண்மணி இப்போதும் நியாயம் பேசினார்.
“இது என்ன வீட்ட காலி பண்ணாது போலவே..?” என அந்த யுவதியின் காதில் அருகிலிருந்தவன் கிசுகிசுத்தான்.
“இங்க பாரும்மா.. நீங்க இனிமேலும் அங்கயே இருந்தா உயிருக்கு தான் ஆபத்தா முடியும்..”
“யார் உயிர்க்கு? என் மாமியார் செத்துருமா?”
“உங்க உயிருக்கு தான். அந்த பேய்க்கும் உங்கள மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்து அவங்க பேசி பேசியே இவங்கள தற்கொலை செஞ்சிக்க வச்சிருக்காங்க. அதனால உங்கள அணு அணுவா ரசிச்சி கொல்ல போகுதாம்..” என அந்த யுவதி ஒருமாதிரியான கட்டை குரலில் பேசவும் அந்த பெண்மணியின் கண்களில் பயம் அதிகரித்தது.
“இல்ல .. நான் உடனே அந்த வீட்ட காலி பண்ணிடறேன்…எங்க வீட்ல இருக்க பேய அந்த ரூம் விட்டு கொஞ்ச நேரம் வெளிய வர சொல்லுங்க. நான் அங்கிருக்க பொருளெல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பிடறேன்..” எனக் கூறினார்.
“சரி பணத்த வச்சிட்டு இந்த எழுமிச்சை பழத்தை முந்தானைல கட்டிக்கிட்டு, முக்காடு எடுக்காம அந்த ரூமுக்குள்ள போய் எல்லாத்தையும் எடுத்துட்டு உடனே கிளம்பிடுங்க. இன்னிக்கி மதியம் 2 மணிக்குள்ள நீங்க அந்த ஏரியா விட்டு தாண்டியிருக்கணும்..” என அந்த யுவதி கூறியதும் அந்த பெண்மணியும் ஐந்தாயிரம் ரூபாயை அங்கிருந்த உண்டியலில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்.
அவரின் கணவரை நேற்று ஒரு அமானுஷ்யம் அடித்து போட்டதால், மனிதர் இன்னும் கண்விழிக்காமல் போகவும் மருத்துவமனையில் அருகில் பேசிய ஒருவரின் கூற்றை நம்பி இங்கே வந்துவிட்டு போகிறார் இந்த பெண்மணி.
“எப்படியோ இன்னிக்கி நம்ம வீட்டு வாடகை குடுத்துடலாம். நான் போய் அந்த ஹவுஸ் ஓனர்கிட்ட நம்ம கமிஷன் வாங்கிட்டு வரேன்…” என்றான் அவளின் அருகேயிருந்த அருள்நம்பி, அவளின் பால்யகால நண்பன்.
அவள் இனன்யா, 23 அகவையுடைய பெண். வழக்கமான இன்ஜினியரிங் மாணாக்கர்கள் இருவரும். இனன்யாவின் தந்தை அவள் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். அவள் பிறக்கும்போதே அன்னையும் இறந்துவிட்டார். இத்தனை ஆண்டுகள் தந்தையும் மகளும் தான் குடும்பமாக வாழ்ந்தனர். இவர்களின் வீட்டின் அருகே தான் அருள்நம்பியும் தனது ஒரே தங்கையுடன் வாழ்ந்து வருகிறான். இவனின் தங்கை அஞ்சலி. இருவரின் பெற்றவர்களும் கட்டிடவேலையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர். அப்போது தான் அருள்நம்பி இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். தங்கையும், இனன்யாவும் ஒரே வயதையுடைவர்கள். அருள்நம்பி இவர்களை விட 2 வயது மூத்தவன்.
இனன்யா, அருள்நம்பி, அஞ்சலி மூவருமே நன்றாக படித்ததால் இலவசமாகவே இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துமுடித்தனர். ஆனால் அவர்களுக்கு வேலை தான் நிலையாக அமையவில்லை. இனன்யா செல்லும் இடமெல்லாம் அவளது வேலையை கெடுக்கவென்றே யாரேனும் ஒருவர் அவள் பணிசெய்யும் இடத்தில் இருந்தனர்.
ஐடி கலாச்சாரம் ஊறிய ஊரில், அந்த கலாச்சாரம் பிடிக்காமல் ஒதுங்கி வாழும் வித்தியாசமான பிறவி இவள். அதனாலேயே எந்த ஆடவனின் பேச்சிற்கும் மயங்காமல் அவள் இருக்க, அவளின் வனப்பில் மயங்கும் ஆடவர்களோ அவளின் கைப் பிடிக்க, இவளோ அவர்களை அடித்து வெளுத்துவிடுவாள். அதன்பின் பெரும் ரகளை நடந்து அவள் அங்கிருந்து வெளியேறும் நிலை வந்துவிடும். இப்படியாக ஒரே ஆண்டில் மூன்று கம்பெனி மாறிவிட்டாள். சென்றமுறை ஒருவரை அடித்தத்தில் அவன் மதுபோதையில் கீழே விழுந்து மண்டை உடைந்துபோனது. ஆனால் அவனோ இவள் தான் மண்டையை உடைத்தாள் என்று இவளின் மேல் புகார் கொடுத்ததால், அதை சரி செய்ய அருள்நம்பி ஆட்களை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறான்.
அப்படி அலையும் போது தான், ஒரு வீட்டை காலி செய்ய வைத்தால் உதவி செய்வதாக கூறினர். அந்த மனிதரின் ஒரு வாடகை வீட்டை விட்டு நகராமல் இருந்த ஒரு குடும்பத்தை பேய் இருப்பது போல நம்பவைத்து மிரட்டி அங்கிருந்து இப்போது கிளப்ப செய்கிறார்கள்.
“சார்.. நீங்க தான் இனன்யா மேல எந்த கேசும் இல்லாத அளவுக்கு பாத்துக்கணும். நீங்க சொன்னபடி வீட்டை அந்த அம்மா இன்னிக்கே காலி பண்ணிடும்..” என அருள்நம்பி மெல்ல கூறினான்.
“பரவால்லையே நேத்து சொன்னேன் இன்னிக்கி காலி பண்ண வச்சிட்டீங்க.. என்ன சொன்னீங்க அப்படி?” என அவர் ஆவலுடன் கேட்டார்.
அதற்குள் ஃபோன் மணி அடிக்க, “ஹலோ.. என்னய்யா வீடு கட்டி வச்சிருக்க? ஒரு பேய் வீட்ல இவ்ளோ நாளா எங்கள தங்கவச்சி இன்னிக்கி என் புருஷன் எந்திரிக்க முடியாம கிடக்கறான். நான் குடுத்த அட்வான்ஸ் பணத்த உடனே குடுயா.. நான் வேற வீட்டுக்கு போறேன்..” என அந்த பெண்மணி அந்த பக்கமிருந்து கத்தினார்.
“இரும்மா 8 வருஷமா நீ தானே ராசியான வீடு நான் எந்திரிக்க மாட்டேன்னு ராவடி பண்ண. இப்போ நீயே இப்படி மாத்தி பேசற.. உனக்கு ஒரு பைசா குடுக்க முடியாது. ஃபோன வை…”
“நீ மட்டும் எனக்கு அட்வான்ஸ் பணத்தோட ஒரு லட்சம் அதிகம் குடுக்கல உன் வீட்டுக்கு யாரும் குடிவரவிடமாட்டேன். நானா பொய் சொல்றேன்? வந்து இங்க ஆஸ்பத்திரில பாரு என் புருஷன் எப்படி கடக்கறான்னு.. இன்னும் ரெண்டு வருஷம் இருந்து சொந்த வீடு கட்டிக்கிட்டு போலாம்னு இருந்தேன் அதுக்குள்ள என் புருஷன தூக்கி குடுக்க வச்சிருவ போலவே..” என அந்தம்மா அந்த பக்கம் ஒப்பாரி வைத்தது.
“என்னடா பண்ணீங்க? அந்த பொம்பள என்னென்னமோ சொல்லுது..” என அவர் அருள்நம்பியைக் கேட்டார்.
“நீங்க தான் சார் உடனே வீடு காலி பண்ண வைக்கணும்னு சொன்னீங்க அதான் நம்ம பசங்கள வச்சி கொஞ்சம் வேலை பண்ணி பேய் இருக்குன்னு நம்பவச்சேன்..”
“டேய் அறிவுக்கெட்டவனே.. பேய் இருக்குன்னு சொன்னா வேற யாருடா குடி வருவாங்க இனி? இருக்கற பிரச்சனைய பெருசு பண்ணி வச்சிருக்கீங்க… ஒழுங்கா ஓடிரு.. இனிமே ஏதாவது கேட்டுட்டு இந்த பக்கம் வந்த உன்னை கொன்னுடுவேன்..” என அவர் காச்மூச்சென கத்தி அவனை விரட்டிவிட்டார்.
“அந்த ஆளு சொன்னத பண்ணனும்னா உயிர் பயம் காட்டினா தான் எந்திரிப்பாங்க.. கமிஷனே குடுக்கலியே.. டிரஸ் வாடகை வேற தரணும்..” என யோசித்தபடி அருள்நம்பி ஒரு பெட்டிக்கடையில் நிற்க, அங்கே அஞ்சலி இனன்யாவுடன் வந்துச் சேர்ந்தாள்.
“என்னடா பணம் வாங்கிட்டியா ?” என இனன்யா கேட்டாள்.
“எங்க? அதுக்குள்ள அந்த பொம்பள ஃபோன் பண்ணி கலவரம் செஞ்சி என்னை இந்த ஆளு கண்டபடி திட்டி அனுப்பிட்டான்…”
“எதுக்கு திட்டினான்?” அஞ்சலி கேட்டாள்.
“வீட்ல பேய் இருக்குன்னு ஏன் சொன்னன்னு தான். வேற யாரும் அங்க குடி வரமாட்டாங்கலாம்..”
“இத தானே நானும் சொன்னேன் நேத்து.. நீங்க ரெண்டு பேரும் தான் ஒத்துக்கல.. இந்த டிரஸ் வாடகையே மூவாயிரம்..” என அஞ்சலி ஒரு பையை காட்டினாள்.
“நீ வா நம்பி.. நம்ம போய் அவங்கிட்ட பணம் வாங்கிட்டு வரலாம். அவன நம்பி தான் நேத்து நம்ம இவ்ளோ வேலை செஞ்சோம். பசங்களுக்கு எல்லாம் பணம் தரணும்..” என இனன்யா அவனை அழைத்துக் கொண்டு அந்த ஆளின் வீட்டிற்கு சென்றனர்.
“மறுபடியும் எதுக்கு வந்த ?” என அவர் நம்பியை பார்த்ததும் கத்தினார்.
“நீ சொல்லி தானே நாங்க வீட்ட காலி பண்ண வச்சோம். இப்ப பணம் தரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என இனன்யா முன்னே வந்து கேட்டாள்.
“நீங்க செஞ்சி வச்சிருக்க வேலைக்கு பணம் தான் கேடு. அதுலாம் தரமுடியாது. இடத்த காலி பண்ணுங்க..” என அவர் மீண்டும் சிடுசிடுக்க, இனன்யா நேற்று அவர் பேசியதை படமாக மொபைலில் காட்டினாள்.
“நீ இப்போ பணம் தரலன்னா இதை அந்த பொம்பளைக்கு அனுப்பிடுவேன். அப்பறம் உனக்கே தெரியும் அந்த அம்மா என்னென்ன பண்ணும்னு.. அனுப்பவா?” என இனன்யா கோணலாகச் சிரித்தபடிக் கேட்டாள்.
“இது பொய்.. கிராபிக்ஸ்..”
“ஆமா இந்த ஆள கிராபிக்ஸ் செஞ்சி மிரட்டற அளவுக்கு கோடி கோடியா வச்சிருக்காரு பாரு.. யோவ்.. பணத்த எடுயா.. இல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கும் இது போகும்..” என அருள்நம்பி எகிறினான்.
உடனே அந்த மனிதரிடம் பேசிய பணத்தை விட முப்பது ஆயிரம் அதிகமாக வாங்கிக் கொண்டு வந்தனர்.
“இதுவே நல்லா வருமானம் குடுக்கும் போலவே இனன்யா..” என அருள்நம்பி கையில் இருந்த எண்பது ஆயிரத்தைத் தடவியபடிக் கூறினான்.
“இத இன்னும் பிளான் பண்ணி செஞ்சா இதவிட அதிகமா சம்பாதிக்கலாம் நம்பி.. அதுக்கு நம்மகிட்ட வர்றவங்க கிட்ட அதீத பயமும், நம்ம மேல நம்பிக்கையும் வரணும்..” என இனன்யா கூறினாள்.

