40 – அகரநதி
ஸ்டெல்லா மதுரன் இருவரும் தங்களின் காதலைப் பகிர்ந்த தருணத்தை இதமாக அனுபவித்து சந்தோஷித்துக்கொண்டிருந்தனர்.
மேலே வந்த தேவ் மீராவைத் தேட அவள் நதியாளின் அருகில் நின்றிருந்தாள்.
“யாள்….. மீராகிட்ட பேசணும்”, தேவ் மீராவைப் பார்த்தபடி கூறினான்.
“மீரா….. போய் பேசிட்டு வா”, நதியாள் அவளை அனுப்பி வைத்தாள்.
மாடிப்படியின் அருகில் நின்று தேவ் மீராவைப் படிகளில் அமரச் சொன்னான்.
“பரவால்ல….. “, என மறுத்து மறுபக்கம் நின்றாள் மீரா.
“நான் பேசினத கேட்டிருப்ப மீரா. இருந்தாலும் நான் சொல்றேன். நான் உன்னை நேசிக்கறேன். உன்கூட தான் என் வாழ்க்கைய அமைச்சிக்கணும்னு நினைக்கறேன். உன் மனசுல இருக்கறத சொல்லு”, தேவ் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
மீராவிற்கு என்ன சொல்வது என்ற பதட்டமும், இதற்கு முன் ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையும் நினைவிற்கு வர அவளால் நிலையாக இதற்கு ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை.
பின் ஆழ்ந்து மூச்செடுத்து “தேவ் சார்….”,என மீரா ஆரம்பிக்க,” தேவ்னு கூப்பிடு மீரா. சார் வேணாமே”, என தேவ் அவள் அழைத்த விதத்தை மாற்றக்கூறினான்.
“இங்க பாருங்க தேவ். நம்மல வச்சி அதுவும் என்னோட ஒழுக்கத்தையும் பெண்மையையும் ஏற்கனவே தப்பா பேசி என்னை காயப்படுத்தி இருக்காங்க உங்க ரிலேடீவ்ஸ். இப்ப உங்க காதல நான் ஏத்துகிட்டா அந்த பேச்சு நிஜம்னு ஆகிடாதா?”, மீரா.
“இல்ல மீரா…அது…..”, தேவ் என்ன கூறுவது எனத் திணறினான்.
“நான் பேச வேண்டியத பேசிடறேன் தேவ்……
நீங்க நல்லவர். உங்க குடும்பத்துல இருக்கறவங்களும் நல்லவங்க தான். ஆனா உங்க க்ளோஸ் ரிலேட்டீவ் சரிதாவும் வினயும் உங்க குடும்பத்தோட முக்கியமான நபர்கள். அவங்கள என்னால காலத்துக்கும் சகிச்சிட்டு இருக்க முடியாது. என் அப்பா இரண்டு வருசத்துக்கு முன்ன இறந்துட்டாரு. அப்ப இருந்து யாள் தான் அவங்க அப்பாவ வச்சி, எனக்கும் என் குடும்பத்துக்கும் எல்லா பாதுகாப்பும் செஞ்சி குடுத்து இன்னிக்கு வர எனக்கு அப்பா இல்லைன்னு நான் கலங்காம பாத்துக்கறா…… சின்ன வயசுல இருந்தே நதியாளோட குடும்பத்துல ஒருத்தியா தான் என்னை நடத்தறாங்க..உங்களால என் குடும்பமும் , என் யாளோட குடும்பமும் எந்த விதத்துலயும் அசிங்கப்படறதையோ, அவமானப்படறதையோ நான் ஏத்துக்க முடியாது….. அதுவும் இல்லாம உங்க அத்தை பொண்ணு உங்க மேல விருப்பப்படறாங்க போல. நீங்க அவங்கள கல்யாணம் பண்ணிக்கறது தான் எல்லாருக்கும் நல்லது…..”, என மீரா கூறிவிட்டு திரும்பி நடக்கத்தொடங்கினாள்.
“ஒரு நிமிஷம் மீரா….. இதுல உனக்கு என்னை பிடிக்கலன்னோ, நீ என்னை விரும்பலன்னோ சொல்லவே இல்லையே…..”, தேவ் அவளைக் கேள்விக் கேட்டு பார்வையால் துளைத்தான்.
மீராவும் அவனின் பார்வையை எதிர்கொண்டு, “எனக்கு என் குடும்பத்தோட சந்தோஷமும் நிம்மதியும் கெடுக்கற எந்த விஷயமும் பிடிக்காது தேவ். நீங்க உங்க வாழ்க்கைய நல்ல படியா அமைச்சிக்கோங்க…. “, எனக் கூறிவிட்டு கீழே சென்றுவிட்டாள்.
தேவ் மனதில் பாரம் கூடியபடி அகரன் அருகில் வந்து அமர்ந்தான்.
“என்ன சொன்னா தேவ்?”, அகரன் கேட்டான்.
“நீங்க எல்லாம் எதுக்குடா பிரண்டுன்னு இருக்கீங்க? ஒழுங்கா எனக்கு மீராவ கட்டி வச்சிடுங்க இரண்டு பேரும், இல்லை நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என தேவ் அகரனிடம் தன் கோபத்தைக் காட்டினான்.
“அந்த பொண்ணு உன்னை விரும்பினா கட்டி வைக்க நாங்க ரெடி. அவ விருப்பம் இதுல ரொம்ப அவசியம் தேவ்”, அகரன்.
“எங்க அதான் சென்னைலயே குழி பறிச்சிவிட்டுட்டாங்களே எனக்குன்னு வாய்ச்ச அத்த பெத்த இரத்தினங்க”, என தேவ் குமுறினான்.
“அப்ப மீரா விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாளா தேவ்?”, நதியாள் கேட்டாள்.
“அவ குடும்பத்தோட சந்தோஷத்தையும் நிம்மதியையும் கெடுக்கற எந்த விஷயமும் அவளுக்கு பிடிக்காதாம். இதுல நான் சரிதாவ கட்டிக்கறதாம் உன் பிரண்ட் ப்ரீ அட்வைஸ் குடுத்துட்டு போறா”, தேவ் நதியாளிடம் பாய்ந்தான்.
“ஏன் இப்படி சொன்னா?”, அகரன் புரியாதது போல கேட்டான்.
“நான் அவள கல்யாணம் பண்ணிகிட்டா அவ குடும்ப சந்தோஷம் கெடுமாம்…. சரிதா என்னை கட்டிக்க ஆசைபடறாமாதிரி தெரியுது அவள கட்டிக்கோன்னு சொல்லிட்டு போய்ட்டா”, தேவ் தன் காதல் நிராகரிக்கப்பட்டதில் நொந்துக் கொண்டான்.
“சோ….என்ன பிரச்சினைன்னு மீராவே சொல்லிட்டா. சரிதா தான் மீரா உன்னை கட்டிகிட்டா பிரச்சினை பண்ணுவா. அவளோட அவ அண்ணணும் சேர்ந்துப்பான். அவ சொல்றது சரி தானே. அவள ஏற்கனவே காயப்படுத்தினவங்க தானே அவங்க”, நதியாள்.
“அதுக்கு நான் என்ன பண்ணட்டும் யாள்? அதான் அப்பவே திட்டி அனுப்பிட்டேன்ல அவங்கள?”, தேவ் தலையில் கைவைத்தபடிக் கூறினான்.
“திட்டி அனுப்பிட்டா மீராக்கு ஏற்பட்ட அவமானம் இல்லைன்னு ஆகிடுமா தேவ்?”, நதியாள் பார்வையால் அவனைத் துளைத்தபடிக் கேட்டாள்.
“வேற நான் அப்ப என்ன செய்யணும் யாள்? மீரா மேல ஆரம்பத்துல இருந்தே ஒரு ஈர்ப்பு இருக்கு. அது காதல்னு நேத்து தான் நான் உணர்ந்தேன். அவகிட்ட சொல்லி சந்தோஷமா அவகூட வாழ்க்கை முழுக்க வாழணும்னு ஆசைபடறேன்”, தேவ்.
“காதல் ஈஸியா வந்துடும் தேவ். அதை தக்கவச்சிக்க தான் ரொம்ப கஷ்டப்படணும்…. உன்னோட சரிபாதியா வரவளுக்கு நீ குடுக்கப்போற மரியாதை என்ன? அவ காயம் பட்டு இருக்கா… அதுக்கு நீ மருந்து போட வேணாமா?”, அகரன் தேவ்விற்கு விளங்க வைக்க முயற்சித்தான்.
தேவ் அவனைக் குழப்பம் படிந்த முகத்துடன் பார்த்தான்.
“தேவ்… மீரா மாதிரி பொண்ணு கிடைக்க நீ கொஞ்சம் நிறைய வேலை செய்யணும். உன்னோட வாழ்க்கைல அவள இணைக்கிறது வெறும் பேருக்காகவும், ஊருக்காகவும் இல்லாம உன் உணர்வுகளோட இணைச்சிக்கணும். கல்யாணம்ங்கிறது அவ்வளவு ஈஸி இல்ல தான், ஆனா அத சந்தோஷமான சூழ்நிலையா எப்பவும் வச்சிக்கற உபயமா வச்சிக்கணும். அவளோட காயத்துக்கு மருந்து போடு…. அப்பறம் உன் விருப்பத்தை சொல்லு அவகிட்ட”, நதியாள் பொறுமையாகவும் நிதானமாகவும் வார்தைகளைக் கையாண்டு அவனைக் காயப்படுத்தாமல் கூறினாள்.
“ம்ம்…. சரிதான் யாள். மருந்து போடாம நான் என் விருப்பத்த திணிக்கறது தப்பு தான். அவளோட காயத்துக்கு மருந்து போட்டப்பறம் நான் மீராகிட்ட போறேன். ஆனா அதுவரைக்கும் மீரா……”, தேவ் கேள்வியை முடிக்காமல் இழுத்தான்.
“கவலை வேணாம். அவளும் எங்க கூட படிக்க வரப்போறா. அதுக்கு நாங்க ஏற்பாடு பண்ணிட்டு தான் இருக்கோம். சோ உனக்கு நேரம் இருக்கு. என் மீராவ காயப்படுத்தற மாதிரி இன்னொரு சம்பவம் நடக்கக்கூடாது. அப்படி நடந்தா நானே உங்க கல்யாணம் நடக்க விடமாட்டேன் தேவ். அதையும் நீங்க நியாபகம் வச்சிக்கோங்க”, என நதியாள் தன் வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி அவளின் முடிவின் திடத்தைச் சொல்லாமல் சொன்னாள்.
“கண்டிப்பா என் மீராக்கு இன்னொரு காயமும், வலியும் நான் கொடுக்கமாட்டேன் யாள்”, தேவ்வும் தன் உறுதியைக் குரலில் காட்டினான்.
“சரி வாங்க கீழ போலாம். எல்லாரும் வந்துட்டாங்க போல. அகன் நானும் சென்னை வரதுக்கு நீ தான் எல்லார்கிட்டயும் பேசணும்”, நதியாள் அகரனிடம் உதவி கோரினாள்.
“கண்டிப்பா உன்ன விட்டுட்டு நானும் போறதா இல்ல நதிமா. வா பேசிக்கலாம்”, அகரன் அவளின் தோளணைத்துக் கீழே அழைத்து வந்தான்.
பெரியவர்கள் அனைவரும் வந்து ஆசுவாசமாக அமர்ந்து இருந்தனர். அவர்கள் முகத்தில் இருந்த சோர்வு அவர்களின் அலைச்சலை அப்பட்டமாகக் காட்டியது.
அமர்ந்திருந்த அனைவரிடமும் பேசிக்கொண்டே சுந்தரம் தாத்தா அருகில் வந்தாள்.
“என்ன சுந்தா ரொம்ப டயர்டா இருக்கீங்க எல்லாரும்…… இவ்வளவு நேரம் என்ன செஞ்சீங்க கோவில்ல? உங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வரட்டா?”, என நதியாள் அவர் அருகில் வந்து அவர் கழுத்தில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்துவிட்டு அவருக்கு சட்டையைக் கழட்ட உதவி செய்து அருகில் இருந்த துணி மாட்டும் ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, கீழே அமர்ந்து அவரின் கால்களை இதமாகப் பிடித்துவிட்டாள்.
“ராசாத்தி…. கால்வலிக்கு நல்லா இருக்குடா நீ அழுத்திவிட்டதும்….. கொஞ்ச நேரம் போகட்டும். அப்பறம் குடிக்கலாம்”, என அவளின் தலையை வருடிவிட்டார் சுந்தரம் தாத்தா.
“சரி சுந்தா….. கோவில்ல இன்னிக்கு விஷேசம் ரொம்ப நல்லா இருந்தது. நான் இதுவரை நம்ம ஊர் கோவில் திருக்கல்யாணம் பாத்தது இல்ல…. இவ்வளவு கிராண்டா சாமிக்கு கல்யாணம் செய்வாங்களா ஒவ்வொரு வருஷமும்?”, நதியாள் அவரின் கால்களைப் பிடித்துவிட்டபடிக் கேட்டாள்.
“ஆமா கண்ணு. ஒவ்வொரு வருஷமும் கோவில்ல சாமிக்கு திருக்கல்யாணம் பண்றது ரொம்பவே விஷேசம். பெரும்பாலும் திருவிழா அப்பவே மத்த கோவில்ல பண்ணிடுவாங்க. நம்ம பௌர்ணமில தான் பண்ணுவோம். ஒருசில கோவில்ல சித்திரா பௌர்ணமிலையும் கல்யாணம் நடத்துவாங்க. அன்னிக்கு தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் நடந்ததாம். மதுரைல மீனாட்சி சுந்தரேஷ்வரர் கல்யாணமும் அன்னிக்கு தான் நடக்கும். இன்னும் பெருமாளுக்கும் மகாலட்சுமிக்குமே அன்னிக்கு தான் கல்யாணம் நடந்ததா சொல்றாங்க ஒருசிலர். ஒவ்வொரு மாசம் வர பௌர்ணமியும் ஏதாவதொரு விஷேஷத்தோட தான் இருக்கும். கார்த்திகை பௌர்ணமியும் தைமாச பௌர்ணமியும் முருகனுக்கு ரொம்ப விஷேசம்”, சுந்தரம் தாத்தா தனக்குத் தெரிந்த தகவல்களைக் கூறினார்.
“அப்பாஆஆஆஆ…..எவ்வளவு விஷேசம் இருக்கு……. “, எனக் கூறியபடி மதுரனும் வந்து அமர்ந்தான் அவர் அருகில்.
பின்னர் திலகவதி ஜூஸ் பிழிந்துக் கொடுக்க, அதை மீரா அனைவருக்கும் கொடுத்தாள்.
மதுரனும் தாத்தாவும் ஜூஸ் குடித்தபடிப் பேச ஆரம்பித்தனர்,” என்னடா பேராண்டி முகம் பிரகாசமா இருக்கு… என்ன சேதி?”, எனச் சிரித்தபடிக் கேட்டார்.
“நல்ல சேதி தான் தாத்தா. நீங்க சொன்னமாதிரி உங்க பேத்திகிட்ட பேசி அவள ஓக்கே பண்ணிட்டேன். எப்படி தாத்தா அவளோட மனசுல இதுதான் இருக்குன்னு சரியா சொன்னீங்க?”, மதுரன் குரலைத் தாழ்த்தியபடிப் பேசினான்.
“ஸ்டெல்லாவ பத்தி எனக்கு பழகின கொஞ்ச நாள்லயே நல்லா புரிஞ்சிடிச்சி. அதுவும் நம்ம நதி மாதிரி நல்ல குணமான புள்ளை ஆனா வேற மாதிரி….. துடுக்கத்தனம் அதிகம் அதேமாதிரி எதுக்கும் துணிஞ்சி நிப்பா… தன் கூட பழகினவங்களா இருந்தாலும் தப்புன்னா தப்பு தான் அவளுக்கு. அச்சு அடிச்சாப்புல அப்பன போல புள்ளைன்னு சொன்னாலும் இரண்டு பேருக்கும் தனி அடையாளம் இருக்கோணும். அப்படிதான் இவளுக்கும் தனி அடையாளம் இருக்கு. நதியாளும் இவளும் வாயடிச்சி வெளி ஆளுங்கள மெரட்டி உருட்டறதால இரண்டு பேரும் ஒன்னுன்னு அவங்களா முடிவு பண்ணிக்கறாங்க. நதியும் இவளும் எங்கயாவது போனா போற இடமெல்லாம் அவளும் நதியாள் மாதிரி பேசறா நடக்கறான்னு எல்லாரும் சொல்லவும் அவளுக்கு மனசுல சுணக்கம் வரும் அப்பறம் மறந்துடுவா. ஆனா கட்டிக்கறவன் அவள அவளுக்காவே காதலிக்கணும்னு நினைக்கிறது இயற்கை தானே… அத தான் உன்கிட்ட சொன்னேன். எப்ப கல்யாணம் சாப்பாடு போடப்போற ?”, சுந்தரம் தாத்தா அவன் தோளில் தட்டியபடி கேட்டார்.
“சுந்தா….. நீங்க தான் இவனுக்கு ஐடியா குடுத்தீங்களா?”, நதியாளும் அவருக்கு மறுபக்கம் அமர்ந்தபடிக் கேட்டாள்.
“ஏதோ என்னால முடிச்ச சின்ன வேலை நதிகுட்டி. நீ மட்டும் தான் உன் சிநேகிதிங்களுக்காக யோசிப்பியா? நான் என் பேத்திங்களுக்காகவும், பேரனுங்களுக்காகவும் யோசிக்கமாட்டேனா?”, எனக் கேட்டு சுந்தரம் தாத்தா செல்லமாக அவள் தலையை முட்டினார்.
“தாத்தா. …. செம கேடி நீங்க….எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருக்கீங்க”, என நதியாளும் சிரித்தபடி அவரின் தோள் சாய்ந்து கொண்டாள்.
அதைக் கண்ட அகரனுக்கு வந்ததே கோபம், எழுந்து சுந்தரம் தாத்தா அருகில் வந்தவன்,” நீங்க உங்க பொண்டாட்டிய கொஞ்சிகோங்க. இவ என் பொண்டாட்டி….”, என அவளின் கைப்பிடித்து இழுத்தான்.
நதியாளோ அகரனை வம்பிலுக்க எண்ணி இன்னும் நன்றாக சுந்தரம் தாத்தாவின் கையை இறுக்கப் பற்றி அவரின் தோளில் நன்றாகச் சாய்ந்துக்கொண்டாள்.
அவளை பார்த்துவிட்டு, “டேய்…. நான் அப்படித்தான் கொஞ்சுவேன். எத்தனை நாள் என் பொண்டாட்டிய கொஞ்சி என்னை வெறுப்பேத்தி இருக்க. இனி என் ஆட்டம். கம்முனு வேடிக்கை மட்டும் தான் நீ பாக்கணும். வேணும்னா போய் மீனுவ கொஞ்சிக்க”, என சுந்தரம் தாத்தா அவனைக் கடுப்பாக்கினார்.
“மிஸ்டர் சுந்தரம். இது உங்களுக்கு நல்லது இல்ல….. அவள விடுங்க”, என வீம்பிற்கு நின்றான் அகரன்.
“முடியாது டா பேராண்டி. இன்னும் ஆறு மாசத்துக்கு நீ என்ற பேத்தி பக்கம் வரவே கூடாது…. இல்லைன்னா இன்னும் ஆறுமாசம் தள்ளி போடுவேன் பாத்துக்க”, எனக் கிண்டலாக மிரட்டினார் சுந்தரம் தாத்தா.
“ஏங்க சும்மா புள்ளைய கோவப்படுத்தறீங்க? நீ இங்க வா ராசா…… “, என மீனாட்சி பாட்டி அகரனை அழைத்தார்.
சுந்தரம் தாத்தாவை முறைத்தபடி அகரன் மீனாட்சி அருகில் சென்று, அவர் மடியில் படுத்துக்கொண்டான்.
அனைவரும் அவர்களின் பேச்சில் சிரித்தனர்.
மதுரன் அங்கிருந்த ரம்யமான சூழ்நிலையைக் கண்ணும் மனதும் குளிர இரசித்துக்கொண்டு இருந்தான்.
இங்கே நதியாள் சுந்தரம் தாத்தா தோளில் சாய்ந்தபடிக் கதைப் பேசிக்கொண்டு இருக்க, அகரன் தாத்தாவுடனான செல்ல சண்டைக்கு பின், பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டான்.
மீராவும் ,ஸ்டெல்லாவும், ராதா செல்லம்மாள் மற்றும் திலகவதியின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க……. கண்ணன் , சிதம்பரம் , பரமசிவம் மூவரும் ஒருபக்கம் விருந்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். தேவ் அவர்களுடன் அவ்வப்பொழுதுக் கலந்துக்கொண்டான்.
இவர்களின் நடுவில் இருக்கும் அன்பும், புரிதலும் சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த மதுரனுக்கு புதிதாக இருந்தது. இன்னும் அவனுக்கு இப்படி ஒரு குடும்பம் இல்லையே என்ற ஏக்கத்தைக் கொடுத்தது என்று தான் கூறவேண்டும்.
எத்தனை பெரிய பிரச்சினையை இவர்களின் புரிதலும் அன்பும் எத்தனை எளிமையாகத் தீர்த்துவிட்டது? மனதில் குறை இருந்தாலும் இதுவரை யாரும் அகரனை ஒரு வார்த்தைத் திட்டவில்லை. அவனிடம் அவர்களின் வருத்தத்தைக் கூடக் காட்டவில்லையே….
இவர்களின் அன்பின் பிணைப்பு எத்தனை அதிசயம் …… எத்தனை அற்புதம்….. எத்தனை பவித்திரமானது……
ஒரு சிறு துளி கண்ணீர் அவன் கண்ணின் ஓரம் கசிந்ததை லாவகமாகத் துடைத்துக்கொண்டு, இச்சமயத்தை ஆனந்தமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான் மதுரன்.
“சுந்தா…. நான் நாளைக்கு சென்னை கிளம்பட்டுமா?”, நதியாள் மெல்ல ஆரம்பித்தாள்.
“நாளைக்கு புடவை நகையெல்லாம் எடுக்கணும் டா. விருந்து முடிஞ்சி போகலாம்ல….”, சுந்தரம் தாத்தா.
“அத்தனை நாள் நான் சும்மா இருக்க முடியாதே தாத்தா…. பிராஜெக்ட் வேற இருக்குல்ல. அது முடிச்சா தான் மேற்படிப்புக்கு ஏற்பாடு பண்ண முடியும்”, என அவள் பேசிக்கொண்டு இருந்தாள்.
“இந்தாட்டி….. படிச்சது போதும். இப்ப படிக்கறத பரிட்சை எழுதி முடிச்சிட்டு மருமகளா இங்க வந்துடணும். வேற எதுவும் பேசக்கூடாது”, மீனாட்சி பாட்டி .
“அதுல்லாம் முடியாது மீனு. நான் இன்னும் மேல படிக்கணும். அப்பத்தானே அகரனோட சேர்ந்து வேலை செய்ய முடியும்…… பாருங்க திலாத்தை….”, என நதியாள் தன் மாமியாரைத் துணைக்கு அழைத்தாள்.
“யாள்….. பெரியவங்க சொல்றபடி கேட்டு நடக்கணும். சின்னபுள்ள மாதிரி அடம்பிடிக்க கூடாது”, என ராதா கண்டிப்புக் குரலில் கூறினார்.
“அம்மா….. நான் ஏற்கனவே பிளான் பண்ணபடி தான் இது நடக்கணும். அதான் பிரிஞ்சி இருக்கணும்னு சொல்லிட்டீங்கல்ல… நான் இரண்டு வருஷம் படிச்சிட்டு வந்துடறேன்”, நதியாள் தன் பக்க வாதத்தை தொடர்ந்தாள்.
“அவ படிக்கட்டும் அண்ணி. புள்ள ஆசைய ஏன் கெடுக்கணும். ஒரே வீட்ல தனி தனியா வைச்சா நல்லா இருக்காதுல்ல”, திலகவதி தன் மருமகளுக்கு ஆதரவாக பேசத் தொடங்கினார்.
“அதுக்காக இரண்டு வருஷம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கணுமா அண்ணி ? சென்னைலயே வேணும்னா படிச்சிகட்டும்…. அதான் ஆறுமாசத்துல இந்த படிப்பு முடியுதுல்ல. அதுக்கப்பறம் அடுத்த இரண்டு வருஷம் அகரன் தம்பி சொல்றத செய்யட்டும். அவர தனியா இரண்டு வருஷம் இருக்க வைக்கிறது நல்லா இருக்காது அண்ணி. நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க இந்த விஷயத்துல”, ராதா திலகவதியின் வாதத்தை மறுத்துப் பேசினார்.
“ஏன் ராதா ஏன்? என் அத்தையே படிக்க ஓக்கே சொல்லிட்டாங்க. நீ ஏன் தடுக்கற?”, என நதியாள் சண்டைக்கு நின்றாள் தன் தாயிடம்.
“இந்தாட்டி….. இந்த சிலிப்பிகிட்டு நிக்கற கதையெல்லாம் இங்க நடக்காது ஆமா…… நான் சொல்றது தான்…. ஒழுங்கா என் பேரனோட குடும்பம் நடத்தற வழிய பாரு. படிப்பெல்லாம் போதும்…….”, மீனாட்சி பாட்டியும் மல்லுக்கு நின்றார்.
நதியாள் அகரனைக் கண்களால் தனக்கு சாதகமாகப் பேசச் சொல்லி கேட்க, இவனோ காது கேட்காதது போலக் காதைக் குடைந்துவிட்டு மீண்டும் அவளின் முகம் பார்த்துக் கள்ளமாகச் சிரித்தான்.
அவனின் செய்கையில் கோபம் கொண்டவள் கண்களாலேயே மிரட்ட ஆரம்பிக்க, அவனோ அதற்கும் அசராமல் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான்.
தன்னவனின் இந்த விளையாட்டை மனதில் இரசித்தாலும் தன் கனவு கைக்கூட அவனின் ஆதரவிற்காக ஏங்கினாள் பேதை.
இவர்களின் சம்பாஷணையைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் தாத்தா,” முதல்ல புள்ளைங்க விஷேசத்த முடிக்கலாம். இதுலாம் அப்பறம் பேசிக்கலாம். இங்க விருந்து முடிக்கற வரைக்கும் இரு டா கண்ணு. அகரன் நாளைக்கு சாயந்திரம் பட்டணத்துக்கு கிளம்பட்டும். விருந்துக்கு இரண்டு நாள் முன்ன வந்துடட்டும். இதுக்கு மேல யாரும் பேசக்கூடாது”, என்று சுந்தரம் தாத்தா அத்தோடு அவர்களின் வாதத்தை முடித்துவிட்டு எழுந்துக் கொண்டார்.
சிதம்பரம் , கண்ணன், பரமசிவம் மூவரும் நடந்த சம்பாஷணையை கேட்டுக்கொண்டு அமைதியாகவே இருந்தனர். சிதம்பரம் தன் மகனின் விளையாட்டையும் மருமகளின் சைகையையும் கவனித்துவிட்டு,” இவங்க ஏற்கனவே முடிவு எடுத்துட்டாங்க…. நம்ம வாயால சொல்ல வைக்க தான் இந்த நாடகம் நடக்குது. நாம மூனு பேரும் கம்முனு வேடிக்கை பாக்கலாம் “, எனக் கூற மற்ற இருவரும் சிரித்துவிட்டு சரியென ஒப்புக்கொண்டனர்.
அன்றிரவு ஒன்றாக அனைவரும் உணவருந்திவிட்டு அடுத்த நாள் நல்ல நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று கூறியபடி அவரவர் இல்லம் சென்றனர்.
அகரன் மட்டும் நதியாளை விட்டு நாளை செல்லவேண்டுமே என்ற எண்ணத்தில் சற்றே வாட்டமாக அமர்ந்திருந்தான்.
அதைக் கண்ட மதுரன்,” என்ன அகர்? ஏன் டல்லா இருக்க?”, எனக் கேட்டான்.
“நாளைக்கு நதிய விட்டுட்டு சென்னை போகணும்னு சொல்லிட்டாங்க. ரொம்ப கஷ்டம் டா அவள பாக்காம இருக்கறது. அதான் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”, எனக் கூறினான் அகரன்.
“விட்றா ஒரு வாரம் தானே”, மதுரன்.
“ஒரு வாரம் டா…… “, என அகரன் இழுத்துக் கூறினான்.
“சரி அதுக்கு என்ன பண்றது? பெரியவங்க பேச்ச கேட்டு தானே ஆகணும்”, தேவ் சமாதானம் கூறினான்.
“என்னடா மாநாடு இந்த நேரத்துல?”, எனக் கேட்டபடி சரண் வந்தான்.
“நீ எங்கடா போனா இவ்வளவு நேரமா?”, என மதுரன் கேட்டான்.
“கோவில்ல நடந்த விஷேசத்துக்கு எல்லாம் செட்டில்மெண்ட் பண்ணிட்டு, அடுத்த வாரம் விருந்துக்கு மண்டபம் பாத்து அட்வான்ஸ் குடுத்துட்டேன். அப்பறம் காய்கறிக்கு சொல்லிட்டு, கெடாவிருந்துக்கும் நல்ல கருப்பாடு, நாட்டுக்கோழி, காடை, கவுதாரின்னு எல்லாம் சொல்லி வச்சிட்டேன். மீன் அப்ப பிடிச்சிக்கலாம்… சமைக்கவும் ஆள பேசியாச்சி….”, என வரிசைப்படுத்திக் கூறினான் சரண்.
“ப்பாஆஆஆ…. பாதி வேலை முடிச்சிட்ட… அண்ணனா கெத்து காட்றடா சரண்”, மதுரன் சரணின் தோளை கட்டிக்கொண்டுக் கூறினான்.
“பின்ன அண்ணன்னா சும்மாவா?”, எனக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான் சரண்.
“சரி பத்திரிகை எப்ப அடிக்க குடுக்கணும்?”, தேவ்.
“அது நாளைக்கு மாமா அப்பா பாத்துப்பாங்க. சீக்கிரம் தூங்குங்க நாளைக்கு சீக்கிரம் பர்சேஷ் கிளம்பணும்ல… எத்தனை டிப்போ பிடிக்கணுமோ நாளைக்கு கடைக்கு போனா தான் தெரியும்”, எனக் கூறியபடி சரண் தூங்க ஏற்பாடுகள் செய்துவிட்டு படுத்தான்.
மற்றவர்களும் அடுத்த நாளை எதிர்நோக்கி சற்றே கண்ணயர்ந்தனர்..
நதியாளும் அகரனும் மட்டும் இடைக்காலப் பிரிவை நினைத்து தூக்கம் மறந்து வெறுமனே படுத்திருந்தனர்.
அடுத்த நாள் அழகாய் விடிய அகரனும் நதியாளும் தான் முதலில் குளித்து ரெடியாகி ஒருவர் மற்றவரைத் தேடத் தொடங்கினர். ஆனால் காணத்தான் முடியவில்லை அச்சோ பாவம்…………
“எல்லாரும் வெரசா கிளம்புங்க. ஒன்பது மணிக்கு கடைக்குள்ள போயிரணும். மொதல்ல நகை எடுத்துட்டு அப்பறம் துணி எடுக்கணும். பொம்பளைங்க வெரசா அத்தனையும் வாங்கணும். அந்தி சாயரதுக்குள்ள வீட்டுக்கு வந்துடணும்”, என சுந்தரம் தாத்தா அனைவரையும் அவசரப்படுத்திக் கிளப்பிக்கொண்டிருந்தார்.
“இந்த மனுசன் இப்பவே கூப்பாடு போட ஆரம்பிச்சிட்டாரா…. அம்மாடி திலகா…. அந்த லிஸ்ட் எடுத்துக்கத்தா…. செல்லம்மா ராதா எங்க இன்னும் காணோம்”, என அவரும் ஒரு பக்கம் கிளம்பிக்கொண்டிருந்தார்.
நதியாள் சுடிதார் அணிந்து வருவதைப் பார்த்த செல்லம்மாள்,” கண்ணு சேலை கட்டிட்டு வாடா… அப்ப தான் உனக்கு எல்லாம் வச்சி பாக்க நல்லா இருக்கும்”, என அவளை தாஜா செய்து உடைமாற்ற அனுப்பி வைத்தார்.
அவள் அந்தபக்கம் சென்றதும் ராதாவும் கண்ணணும் உள்ளே வந்தனர்.
“சே…. சேலை கட்டிட்டு எத்தனை நாள் தான் ஓட்றது? எப்படித்தான் எல்லாரும் தினம் சீலை கட்றாங்களோ தெரியல”, என நதியாள் சத்தமாகப் பேசிக்கொண்டுச் சலித்தபடிப் புடவையை எடுத்தாள்.
“புடவை கட்ட உனக்கு என்ன கஷ்டம்? நான் தான் முன்னயே சொன்னேன்ல புடவை கட்டுன்னு. பாரு இரண்டு வேலை உனக்கு தான்”, என மீரா அவளிடம் பேசியபடி அவளுக்கு புடவைக் கட்ட உதவினாள்.
“அப்படின்னா நீங்க இரண்டு பேரும் சீலை தான் கட்டணும். ஒழுங்கா எனக்கு கம்பெனி குடுங்க”, என நதியாள் அவர்கள் இருவரையுமே சீலை கட்ட வற்புறுத்தினாள்.
“நீ கட்டு டி. நாங்க எதுக்கு கட்டணும்? “, என ஸ்டெல்லா கேட்டாள்.
“இப்ப நீங்க கட்டல அப்பறம் நடக்கறதே வேற….. உங்களுக்கு எப்படி வசதி?”, என நதியாள் மிரட்ட, மீராவும் ஸ்டெல்லாவும் தலையில் அடித்துக் கொண்டு அவளையும் இரண்டு அடி அடித்துவிட்டு அவர்களும் புடவை கட்டிக்கொண்டனர்.
கருநீல நிற மைசூர் சில்க் சேலையில் எளிமையாகத் தயாராகி பத்து நிமிடத்தில் கீழே வந்தாள் நதி.
அவளைக் கண்டு திருஷ்டி கழித்த திலகவதி அவளின் தலையில் கோர்த்த குண்டுமல்லிச்சரத்தை வைத்துவிட்டார். பின் மீராவையும் ஸ்டெல்லாவையும் அழைத்து அதே போல அவர்களுக்கும் பூ வைத்தார்.
“இந்தாட்டி… இந்த சங்கிலிய போடு”, என மீனாட்சி பாட்டி ஒரு நீளமான சற்று கனமான தங்கச்சங்கிலியைக் நதியாளிடம் கொடுத்தார்.
“எதுக்கு மீனு அதான் செயின் போட்டு இருக்கேன்ல”, என நதியாள் சலித்தாள்.
“கல்யாணம் ஆகி மொத தடவை நம்ம எல்லாரும் ஒன்னா போறோம். இத போடு. இந்தாங்கடி மீரா டல்லா…… ஆளுக்கு ஒரு சங்கிலிய போடுங்க. பொம்பள புள்ளைங்க நகை போட்டுக்க சலிச்சிக்க கூடாது”, எனத் திட்டியபடி மூவருக்கும் தங்க சங்கிலி கொடுத்துவிட்டுச் சென்றார்.
பெண்கள் மூவருமே மெலிதான புடவையணிந்து பெண்களுக்கே உரிய நளினமும் லட்சணமும் சேர, தேவ கன்னிகைகள் போல காட்சியளித்தனர்.
கன்னியர்களை கண்ட கொண்டவர்களின் உள்ளம் தான் அவர்களை விட்டு விழியெடுக்க முடியாது திணறியபடி, பெரியவர்களிடம் வசைப்பெற்றுக்கொண்டு ஒருவழியாக கடைக்கு வந்து சேர்ந்தனர்.
அந்நாள் அனைவருக்கும் இனிமையாகவே கழிந்தது. தேவ் வாராதது மீராவிற்கு சற்றே சோர்வு கொடுத்தது.
மதுரன் ஸ்டெல்லாவிற்கு தன் முதல் காதல் பரிசு கொடுத்தான். அகரனும் தன்னவளுக்காக இன்பதிர்ச்சி கொடுக்கவென்றே தனியாக துணியும் நகைகளும் வாங்கினான்.
சிதம்பரமும் திலகவதியும் மீரா ஸ்டெல்லா இருவருக்கும் துணி நகை என்று தங்களின் பெண்பிள்ளையாக நினைத்து எடுத்துக் கொடுத்தனர்.
ராதாவும் கண்ணணும், செல்லம்மாவும் பரமசிவமும் கூட தோழியர்கள் இருவருக்கும் பாராபட்சமின்றி பட்டுப்புடவை நகை என்று எடுத்து கொடுக்க,அவர்களின் அன்பில் திணறித்தான் போயினர் இருவரும். அதை மறுக்க முடியாது ஒரு வழியாக சுந்தரம் தாத்தா பேசிப் பேசியே அவர்களை அனைத்தும் வாங்க வைத்துவிட்டார்.
பின் அகரன் நதியாளை ஏக்கமாகவும், காதலாகவும் பார்த்தபடி விடைபெற்று அன்று மாலை சரண் மற்றும் மதுரனோடு சென்னைக்குக் கிளம்பினான்.
நதியாளுக்கு தான் வயல், தோட்டம், என ஊர் முழுக்க சுற்றியும் கூட அகரனின் நினைவில் இருந்து விடுபடமுடியாமல் தவித்துப்போனாள்.
அகரனின் மீதான தன் காதலும் அன்பும் இந்த இடைவெளியில் புரிந்தது மட்டுமின்றி பெருகியும் இருந்தது ஒரு வார காலத்தில். அந்த ஒரு வாரத்தில் பெண்ணவள் இடையும் மெலிந்ததோ ஏனோ?
ஒருவழியாக அகரன் ஊருக்கு வரும் நாள் வந்தது….. அவன் கூடவே …………