41 – ருத்ராதித்யன்
ரிஷித் அங்கே சாலக்குடி லேப்பில் கொதித்துக் கொண்டிருந்தான். தன் ஆராய்ச்சியின் முக்கிய பங்கான மகதன் முதல் அர்ஜுன் யாத்ரா, கண்மயா என அனைவரும் தப்பித்து சென்றதை அவனால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.
“இடியட்ஸ்….. யூஸ்லெஸ் f***** இல்லிடரேட் ஸ்டுப்பிட்ஸ்….. அரை நாள் உங்களால அவங்கள உருப்படியா பாத்துக்க முடியாதா? எனக்கு நாளைக்கு காலைல அவங்க எல்லாரும் இங்க இருக்கணும்.. இல்லைனா நீங்க யாரும் உயிரோட இருக்க முடியாது…. இதோ.. இவன பாரு.. இவன மாதிரி நூறு மடங்கு உங்கள சாகவிடாம கூறுபோடுவேன்….”, என ருதஜித்திடம் அங்கிருந்த திலக் உடலை காண்பித்தான்.
ஆம்…. காசியில் இருந்து தப்பி சாலக்குடிக்கு வந்து அவன் சிபிஐ இடம் மாட்டிக் கொண்டது முதல், தப்பித்து வந்தது வரை அனைத்தும் கூறிவிட்டு, சர்வேஸ்வரன் அவனிடம் கொடுத்த சூட்கேஸை கொடுத்தான்..
சூட்கேஸை பக்கத்தில் வைத்துவிட்டு சகஸ்ராவுக்கு கொடுக்கும் நரம்பு முறுக்கும் ஊசியை அவனுக்கு மொத்தமாக ஐந்தை செலுத்தினான்.
அவன் அலறிய அலறலில் அந்த இடமே அதிர்ந்தது. சகஸ்ரா திலக்கை வெறுக்கும் பார்வை பார்த்துவிட்டு, ரிஷித்தை ஏளனமாக பார்த்தாள்.
“என்ன பார்வை இங்க?”, ரிஷித் உருமினான்.
“என்னை வச்சி என் மாயாவ எப்படி எல்லா டார்ச்சர் பண்ண… இனிமே உனக்கு இருக்கு ரிஷித்…. உன் சாவு ரொம்ப கிட்ட வந்துருச்சு…. அந்த இயற்கை உனக்கு ஒரு முடிவு எழுதிரிச்சி… “
“அந்த இயற்கைக்கு நான் முடிவு எழுதிட்டேன் சகஸ்ரா …. என்னோட சுயரூபம் இனிமே தான் எல்லாருக்கும் தெரியும்”, என கூறிவிட்டு வெளியில் சென்றவன் நேராக அந்த கிழவனின் முன்னால் நின்றான்.
“என்னோட மிச்ச சுவடி எங்க இருக்கு? நீ இதுக்கு மேல எனக்கு தேவை இல்லை…. நீ இல்லைனாலும் என்னால அந்த சுவடிய கண்டுபிடிக்க முடியும்…..”, திருவானைக்காவலில் நானிலனிடம் சுவடியை கொடுத்த அந்த பெரியவர் அங்கிருந்த ஒரு அறையில் கட்டிவைக்க பட்டு இருந்தார்.
“இந்த முறை நிச்சயம் நீ ஜெயிக்க முடியாது அபராஜித வர்மா… சிங்கத்துரியன் வெளிய வரத்தான் போறான். உன்னை அழிக்கத்தான் போறான்….”, என கூறிவிட்டு தனது மூச்சை தானே அடக்கி தன் இன்னுயிர் நீத்துக் கொண்டார்.
“ஆ……. “, என ரிஷித் கத்தி தனது ஆத்திரத்தை அடக்க முயற்சித்தான்.
“ராஜ்….. எனக்கு அந்த மீதி சுவடி வேணும்….. எங்க இருக்குனு இவன் போன எடம் எல்லாம் தேடி பாத்து கண்டுபிடி…. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எனக்கு எல்லா சுவடியும் வேணும்….”
“ரிஷி…. கொஞ்சம் பொறுமையா இரு… நம்ம பண்ணை வீட்ல கலாட்டா செய்ய வச்சது அந்த டேம் கட்ர கம்பனி….. அதிபன் இத செய்யலன்னு சொல்றான். ஆனா அவனுக்கு கீழ வேல பாக்கற ஏதோ ஒரு சின்ன கம்பனி இப்டி செஞ்சிருக்கும்ன்னு சொல்றத என்னால நம்ப முடியல..” ராஜ் கர்ணா கூறினான்.
“அந்த அதிபன் டெண்டர்க்கு வந்த பணத்துல பாதிக்கு மேல சொத்து வாங்கி போட்டுட்டான்…. ஆனாலும் டேம் வேல நிக்காம நடக்குது…. அதுவே அவனுக்கு இன்னும் தெரில…. இதுல நமக்கு தெரியாத பெரிய கை வேற இருக்கு…. அதிபனுக்கு எதிரா அந்த டெண்டர் வாங்க ட்ரை பண்ணது யார் யாருன்னு பாரு…. அந்த ஆதிய சாதாரணமா எடை போடாத…. அவனோட காண்டாக்ட்ஸ் எல்லாமே விசாரிக்க சொல்லு… ஆதித்யா மட்டுமே என் லேப் புகுந்து அவங்கள கொண்டு போயிருக்க முடியாது…ரெண்டு மாஸ்டர் மைண்ட் ஒண்ணா இருக்கு…. கண்டுபிடி…. நான் கொஞ்சம் இந்த சுவடிய படிக்கணும்… இது படிக்க தெரிஞ்ச ஆளுங்கள ஏற்பாடு பண்ணு….. சர்ஸ்வரன் கொண்டு வந்த ஃபைல் பாத்துட்டு வரேன்… எனக்கு அந்த வல்லகி பொண்ணு வேணும்.. ஒவிஸ்கர் எதோ பெருசா தேடறான்… அவன் அந்த பொண்ண கொல்றதுக்கு முன்ன அந்த பொண்ணு எனக்கு வேணும்…. “, மூச்சு விடாமல் பல கட்டளைகளை பிறப்பித்து விட்டு உள்ளே சென்றான்.
(காற்றின் நுண்ணுறவு கதையில் வரும் கதாப்பாத்திரம் தான் வல்லகி, ஒவிஸ்கர்)
ராஜ் கர்ணா ஒரு நொடி செல்லும் நண்பனை பார்த்துவிட்டு அவன் கூறிய அனைத்தும் நிறைவேற்ற சித்தமாக சென்றான்.
ஆதித்யா கூறியபடி ஜான் மற்றும் தாஸ் இருவரும் மொத்த மேகமலையை அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இடையில் செந்தில்நாதன் ஒருமுறை யாத்ரா பற்றி பேசி அறிந்து கொண்டு அவ்விடம் வந்து கொண்டு இருக்கிறார்.
பரிதி தன்னால் இயன்ற உதவி புரிவதாக வாக்களித்தாள். நரேன் அர்ஜுன் நிலை பற்றி அறிந்து கொண்டு, நந்தன் அடிபட்ட விசயமும் கூறினான்.
“சரிங்க சார்.. நீங்க நந்துவ பாத்துக்கோங்க…. இங்க ரெண்டு பேர் தேவை… நம்பிக்கையான ஆளா அனுப்புங்க….”, ஆதித்யா.
“நான் நேரடியாக அனுப்பினா உங்க மேல பார்வை விழும்… வேற பிளான் செஞ்சி அனுப்பறேன்…. நீங்க அந்த ரிஷித் கண்ல சிக்காம இருக்கறது இப்போ நல்லது .. ரெண்டு பேய்ல ஒன்னு முழிக்கற வரைக்கும் தான்….”, என கூறிவிட்டு நரேன் சிரித்தான்.
“இத ரெண்டு பேரும் கேட்டா உங்க நிலமை கஷ்டம் நரேன் சார்…”, ஆதியும் கொஞ்சமாக முறுவலித்தான்.
“அது வரப்போ பாத்துக்கலாம் ஆதி… நீங்க ஜாக்கிரதையா இருங்க…”, என கூறிவிட்டு தனது அலுவலகம் விரைந்தான்.
அவன் அலுவலகம் உள்ளே நுழையும் போதே ரன்வீர் அவன் எதிரே வந்தான். திலக் தப்பிச் சென்ற விசயத்தை கூறிவிட்டு, நரேன் உடன் நடந்தான்.
இந்த வழக்கிற்காக கூட்டி இருந்த சிறப்பு கூட்டத்தை கான்பரன்ஸ் ரூம் வரச் சொல்லி விட்டு, தனது அறைக்குள் புகுந்து கொண்டான்.
“ரன்வீர்…. எனக்கு பயமா இருக்கு….. என் டியூட்டி டைம்ல தான் அவன் தப்பிச்சி போனான். நம்ம எல்லாத்தையும் சஸ்பென்ட் பண்ணிடுவாரோ ?”, ஒருவன் கேட்டான்.
“தெரியல டா….. எல்லாரையும் சஸ்பென்ட் பண்ண வாய்ப்பு இல்ல….. அதுக்கு ஒரு விசாரணை நடத்தி தான் முடிவு எடுப்பாங்க…. அந்த திலக்னால நம்ம தலை தான் உருளுது….”
“நீ அவன அப்பவே சுட்டு இருக்கணும் ரன்வீர்… பாரு இப்ப நம்ம தலை எப்ப உருளுமோன்னு பயப்பட வேண்டியதா இருக்கு….. “
“நந்தன் சார் அவன உயிரோட பிடிக்க சொல்றப்போ நான் என்ன பண்ண முடியும்? பாவம் அவர சுட்டு ஆஸ்பத்திரியில இருக்காரு…. சிபிஐன்னு வந்துட்டா எல்லாமே தானே சமாளிக்கணும்….”
“சார் வந்துட்டாரு…”, என கூறிவிட்டு அனைவரும் எழுந்து நின்றனர்.
“உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல? அடிப்பட்ட ஒருத்தன உங்களால உருப்படியா பிடிச்சி வைக்க முடியல…… யார் அந்த நேரம் டியூட்டி பாத்தது?”, நரேன் உள்ளே நுழைந்ததும் பொரிந்தான்.
“நான் என ஒருவன் முன்னே வந்தான்…”
“மத்தவங்க?”
“நாங்க தான் சார்…”, என்று சாப்பிட சென்ற மற்றவர்களும் முன்னே வந்தனர்.
“ரன்வீர்… நீ தானே கடைசியாக அவன பாத்த?”, நரேன் முறைப்புடன் கேட்டான்.
“எஸ் சார்…. அவன விசாரிக்க போனேன்.. அப்போ அவன் தப்பிக்க எந்த முயற்சியும் எடுத்தமாதிரி தெரியல சார்…”, ரன்வீர் முன்னால் வந்து கூறினான்.
“உன்ன தான் முதல் சஸ்பென்ட் பண்றேன்….. குற்றவாளிய சரியா பாதுகாக்க தவறின உங்க எல்லாருக்கும் தண்டனை உண்டு…. யாருக்கு என்ன தண்டனைன்னு மெயில் வரும்…. கெட் அவுட் ஆல் ஆப் யூ….”, கத்தினான்.
ரன்வீர் நரேனை ஒருமுறை திரும்பி பார்த்து சல்யூட் வைத்து விட்டு சென்றான்.
அதிரனும் விதுரனும் தங்கள் டேம் கர்நாடகாவில் யார் யார் எல்லாம் எடுத்து செய்கின்றனர் என்று அலசிக் கொண்டு இருந்தனர்.
விதுரன் பணம் வந்ததும் உல்லாச பயணம் சென்ற விட்டான். அதிரன் தான் ஆசைப்பட்ட நில சொட்டுக்களை வாங்கி குவித்தான். அரசாங்கம் கொடுத்த பணத்தில் பாதிக்கு மேல் செலவு செய்தும் டேம் கட்டுமான வேலை மட்டும் நிற்காமல் எந்த தொய்வும் இல்லாமல் நடந்து இருப்பது கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.
“என்னடா நடக்குது? நம்ம கைல பணமே இல்ல.. ஆனா பொருள் எல்லாம் வந்து வேலையும் நிக்காம எப்படி நடந்து இருக்கு?”, விதுரன் வாய் விட்டு கேட்டான்.
“நம்ம பேர்ல இன்னொருத்தர் இந்த ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்காங்க விது….”, அதிரன் அனைத்து இடங்களிலும் நடந்து முடிந்து இருக்கும் வேலைகளை பார்த்தபடி கூறினான்.
“யாரு டா கை காச போட்டு நமக்கு பேர் வாங்கி குடுக்கறது?”
“தெரியல… தேடுவோம்..”, என அவனிடம் கூறிவிட்டு மனதில் ஒரு முடிவிற்கு வந்தான்.
விதுரனிடம் எதுவும் கூறாமல் ராஜ் கர்ணாவிற்கு அழைத்தான். இந்த டேம் பிரச்சனையை தூண்டி விட்டது யார் என்று நாளை காலையில் கூறுவதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
நேராக அந்த கர்நாடகா சுற்றி டேம் கட்டுமானத்திற்கு தங்களிடம் ஒப்பந்தம் செய்த கம்பெனிக்கு சென்றான். அங்கிருந்த மேனேஜரிடம் ஆரம்பம் முதல் இப்போது வரை நடந்த அனைத்து விசயங்களையும் விசாரித்து அறிந்து கொண்டான்.
தான் பணம் அனுப்ப தவறிய போது எல்லாம் அவர்களுக்கு தேவையான பணம் மற்றும் பொருட்கள் சரியாக வந்து சேர்ந்து இருந்தது புரிந்தது… ஆனால் எப்படி வந்தது? யார் என்ன? போன்ற விவரங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டு இருந்தன.
அதற்கு மேல் மேனேஜருக்கு ஒன்றும் தெரியவில்லை அல்லது வாய் திறக்க மனமில்லை என்று தான் கூறவேண்டும். அதிரன் தனக்கு கிடைத்த விவரங்களை வைத்து யார் என்று ஓரளவு யூகித்தான். அதை ஊர்ஜிதம் செய்து கொள்ள மற்றொரு இடத்திற்கு சென்றான். அங்கு அவனுக்கு தேவையான தகவலுடன் மற்றொரு முக்கியமான தகவலும் கிடைத்தது.