5 – ருத்ராதித்யன்
வேலையாள் அழைத்ததும் கயல் அவசரமாக வெளியே சென்றுப் பார்க்க, அவர்கள் புதிதாக வாங்கியிருந்த பசு கன்றை ஈன்று இருந்தது.
குட்டி என்று கூறினால் நம்புவது மிகவும் கடினம் அப்படி ஒரு திடத்துடன் கூடிய உயரம் கொண்டு பிறந்திருந்தது.
அந்த சாம்பலும் வெள்ளை நிறமும் கலந்து பிறந்திருந்த கன்று பார்க்கவே அத்தனை கம்பீரமாகக் காட்சியளித்தது.
“என்ன சாமியய்யா….. எதுக்கு இத்தனை பதட்டமா கூப்பிட்ட? என்னாச்சி? “, என தமிழன்பன் கேட்டார்.
“ஐயா நம்ம தேனு கன்னு போட்டுரிச்சிங்க…. ஆனா பாக்கவே வித்தியாசமா இருக்குங்க”, எனக் கூறியபடி தொழுவம் நோக்கி அழைத்துச் சென்றார்.
“நல்ல விஷயம் சொன்னீங்க…. தேனுக்கு ஒன்னும் சிரமம் இல்லையே…. இப்பதானே நான் பாத்துட்டு வந்தேன், அப்ப வலி இருந்த மாதிரி தெரியலியே சாமியண்ணே”, கயல் கூறியபடி வேகமாக எட்டு வைத்து முன்னே சென்றார்.
மாதங்கி, பூமிநாதன், தமிழன்பன் மூவரும் சற்று தள்ளி நின்று பார்க்க கயல் அருகில் சென்று தேனுவைத் தடவிக் கொடுத்தார்.
குட்டியையும் அவர் தடவச் சென்ற சமயம் அது அவரின் கை தன் மேல் படவிடாமல், அர்ஜுனும் ஆதியும் நிற்கும் பக்கம் சென்றது.
தட்டுத்தடுமாறி நடந்து வரும் கன்றை ஆதி முன்னே வந்து நிறுத்தி தடவிக் கொடுக்க, வாகாய் அவனுக்கு தலையை வளைத்துக் கொடுத்தது.
அர்ஜுனும் தடவிக் கொடுக்க அவனின் காலில் தலையை உரசி மா என அழைத்தது.
நடக்கும் அனைத்தும் மற்றவருக்கு பிரமிப்பாக இருக்க, சாமியய்யா, “ஐயா…. அது உருவம் மட்டுமில்லைங்க நடந்துக்கறதும் வித்தியாசமா தான் இருக்கு, அதானுங்க உங்கள கூப்புட வந்தேன்”, எனக் கூறினார்.
சிவியுடன் வந்த இதழி தன் தமையன்கள் அருகில் நிற்கும் கன்றைக் கண்டு சிரிப்புடனும் யோசனையுடனும் அருகில் சென்றாள்.
“முகை… பசுவ தொட்டு கும்பிட்டுட்டு குட்டிய தொடு மா… வயித்து புள்ளையோட இருக்கற சமயம் இந்த பாக்கியம் கிடைக்கறது ரொம்ப நல்லது”, என மாதங்கிக் கூற, இதழியும் பசுவை தொட்டு வணங்கி குட்டியைத் தடவிக்கொடுத்தாள்.
அதன் பின் அந்த குட்டி கயல் அருகில் வந்து நின்று புடவையில் உரசியது.
“இத்தனை நாளா நான் உன்ன கவனிச்சா நீ அவனுங்க கிட்ட தான் முதல்ல போறல்ல…. உன்ன என்ன பண்றது?”, என கயல் கன்றுடன் உரையாட ஆரம்பித்தார்.
அவரின் பேச்சில் அனைவருக்கும் சிரிப்பு வர பக்கென்று சிரிக்க பசுவும் மாஆஆஆ என கத்தி அந்தச் சிரிப்பில் கலந்து கொள்வது போல சத்தம் கொடுத்தது.
கன்று கயலை நீங்காமல் ஒட்டியே நின்று நின்று அதனை தடவிக் கொடுக்கச் செய்துவிட, ” சரியான கேடி தான் நீ”, என செல்லமாக திட்டிய படியே கயலும் தடவிக்கொடுத்தார்.
“சாமியய்யா … டாக்டர வரசொல்றேன்… இடத்த சுத்தம் பண்ணிட்டு பசுக்கு தேவையானத குடுக்கச் சொல்லுங்க”, எனக் கூறிவிட்டு அனைவரும் அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.
கன்று ஓடி வந்து ஆதி மற்றும் அர்ஜுன் அருகில் நின்று அவர்கள் நகரமுடியாதபடி செய்ததது.
“என்னடா இது….. இத்தனை நாள்ல நீங்க பசுவ கிட்ட கூட வந்து பாக்கல … இப்ப இந்த கன்னுகுட்டி உங்க பின்னாடியே வருது”, கயல் அதிசயமாகக் கேட்டார்.
“என்ன அண்ணாஸ்…. குட்டிய அதுக்குள்ள எப்படி கவுத்தீங்க?”, என முகையும் கிண்டல் செய்தாள்.
“எங்களுக்கும் ஒன்னும் புரியல இதழ்…… “, என அர்ஜுன் கூற , ஆதி அதன் தலையைத் தடவிக் கொடுத்து, “தீரா நீ உன் அம்மா கூட இரு…. நாங்க அப்பறம் வரோம்”, எனக் கூற அது அர்ஜுனைப் பார்த்தது.
“ஆமா தீரா…. அம்மா கூட இரு… அப்பறம் கண்டிப்பா வரோம்”, என அர்ஜுனும் தலையைத் தடவிக் கூற, அது அவர்களைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே பசுவின் அருகில் சென்று நின்றுக் கொண்டது.
“அதுக்குள்ள பேர் சொல்லி கூப்பிடற அதுவும் போகுது… என்னடா நடக்குது இங்க?”, கயல் புரியாமல் கேட்டார்.
“தெர்லமா… அந்த பேர் வாய்ல அதுவே வந்துரிச்சி…….”, ஆதி சிரிப்புடன் கூறினான்.
“நல்ல பேர் தான் மாப்பிள்ளை… அதுக்கு உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சி போச்சிப் போல”, எனக் கூறி பூமிநாதன் சிரித்தார்.
“ஆமா…. அதுக்கு பிடிச்சி என்ன பண்ண, எதாவது பொண்ணுக்கு பிடிச்சாக் கூட பரவால்ல”, என சிவி வாயிக்குள் முனகினான்.
“என் காதுல விழுந்துரிச்சி சிவி”, என அர்ஜுன் அவன் தோளில் அடித்துக் கூறினான்.
“உங்க அண்ணணுக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்தா தான் மாப்பிள்ளை உனக்கு நடக்கும் அதான் அப்படி சொன்னேன்”, என சிவி கூற, “அதுக்கு எதுக்கு மாப்ள என்னை பலிகடா ஆக்கறீங்க? அவனுக்கே முதல்ல பண்ணிடலாம்”, என ஆதி மறுபக்கம் வந்து கூறினான்.
“சாமிங்களா நான் ஒன்னுமே சொல்லல…. உங்க கிட்ட சிங்கிளா நான் மாட்டிகிட்டேன்.. என் தங்கச்சிங்க வரட்டும் அப்பறம் உங்கள கவனிச்சிக்கறேன்”, என சிவிக் கூற, “சிங்கிளா? இதழிம்மா மாப்ள சிங்கிள்னு சொல்றாரு… உன்ன கல்யாணம் பண்ணத வெளிய சொல்லமாட்டாராம்… என்னனு கொஞ்சம் கவனிடா”, என அர்ஜுன் இதழி காதில் ஓதிவிட்டு உள்ளே சென்றான்.
“அஜ்ஜூ……. “, என சிவி கத்த, ஆதி சிரிப்புடன் பூமிநாதன் அருகில் சென்று நின்று கொண்டான்.
“என்ன சொன்னீங்க சஞ்சு இப்ப? “, என இதழி சற்றே முகத்தை கோபமாகக் காட்டினாள்.
“அப்படி சொல்லல முகை….. இப்ப நீங்க முனு பேரும் சேர்ந்து என்னை லாக் பண்றீங்க… அவனுங்க பொண்டாட்டி எனக்கு தங்கச்சிங்க தானே… அப்ப எனக்கும் செட் கிடைக்கும்னு சொன்னேன்”, என மலுப்பலாக பதில் கூறி அங்கிருந்து அர்ஜுனைத் துரத்திக்கொண்டு ஓடினான்.
அங்கே சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது. பசுவும் கன்றும் கூட மந்தகாச புன்னகை கொண்டதோ என எண்ண வைத்தது ஒரு நொடி காணும் பொழுது …..
செந்தில் உச்சகட்ட கோபத்தில் கொதித்துக்கொண்டு இருந்தார். இப்பொழுது அவர் தான் யாத்ராவின் அபீசியல் டீம் ஹெட்.
“யாத்ரா எங்க மேன்?”, என எதிரில் நின்றிருந்தவனைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“மேடம் எங்கள முன்ன போக சொல்லிட்டாங்க சார்…. அவங்களே வந்துடறதா சொன்னாங்க… “, தலைக்குனிந்து நின்று ஹிந்தியில் பதில்கொடுத்தான் அவன்.
“போன்னு சொன்னா வந்துடுவீங்களா? டீம் வொர்க் குடுத்தா இப்படி தான் பண்ணுவீங்களா? உனக்கு சொன்ன ஆர்டர் என்ன? நீங்க செஞ்சது என்ன?”, செந்தில் கோபமாக மீண்டும் கேட்டார்.
“நீங்க இத தான் செய்ய சொன்னீங்கன்னு யாத்ரா மேடம் சொன்னாங்க சார்”, என அருகில் நின்ற மற்றொருவன் கூறினான்.
“உங்கள டீடைல் கலெக்ட் பண்ண சொல்லி அனுப்பினா நீங்க என்ன செஞ்சிட்டு வந்து இருக்கீங்க? மேல யாரு பதில் சொல்வா?”, செந்தில் சற்றும் கோபம் குறையாமல் கேட்டான்.
“சாரி சார்….”, சுஷில் மற்றும் கவின் தலைகவிழ்ந்து நின்றபடி மன்னிப்பு கேட்டனர்.
“யாத்ராவ அவங்க எங்க கொண்டு போனாங்கன்னு தெரியுமா?”, செந்தில் கத்தினான்.
“அந்த வண்டிய பாலோ பண்ண முடியல சார்…. யாத்ரா மேடம் வேணாம் போங்கன்னு சைகை பண்ணிட்டாங்க”, கவின் பதில் கூறினான்.
“யாத்ரா…. யாத்ரா…. எங்க தான் போனியோ? பரிதிய சொல்லணும் அந்த கேஸ்ல உள்ள போனதுல இருந்து எல்லாத்துலயும் விளையாட்டா போறா…. “, என புலம்பியபடி பரிதிக்கு அழைத்தான்.
இப்பொழுது பரிதி தான் அவர்கள் உளவுத்துறையின் முக்கிய பதவி வகிக்கிறாள்.கலெக்டர் பதிவியில் இருந்து சென்ற மாதம் தான் விலகி இப்பிரிவில் சேர்ந்தாள்.
செந்தில் அவளிடம் தான் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
“சொல்லுங்க செந்தில்….என்ன விஷயம்?”, பரிதி.
“யாத்ராவ இந்த கேஸ்ல போடாதன்னு சொன்னேன். யாரும் கேக்கல இப்ப அவனுங்க அவள தூக்கிட்டு போயிட்டானுங்க”, செந்தில் மற்றவர்களை வெளியேறக் கூறிவிட்டுப் பேசினான்.
“அவ உடம்புல டிராக்கி சிப் இருக்கும்ல… அத வச்சி பாருங்க”, பரிதி.
“நேத்து அத எடுத்துட்டு தான் இந்த மிஷன்க்கு போயிருக்கா”, செந்தில் கடுப்புடன் கூறினான்.
“வேற வழில நமக்கு தகவல் குடுப்பா வெயிட் பண்ணலாம்… நான் கேட்ட ரிப்போர்ட்ஸ் என்னாச்சி? எனக்கு மீட்டிங் இருக்கு டூ ஹவர்ஸ்ல, அதுக்குள்ள வேணும்”, எனப்
பரிதி கேட்டாள்.
“இதோ குடுத்து அனுப்பறேன் பரிதி”, செந்தில் சற்று குரல் தழைந்து வந்தது.
“நீங்களே கொண்டு வாங்க… நாம இரண்டு பேரும் தான் போகணும்.. கான்பிடென்சியல்”, எனக் கூறி வைத்துவிட்டாள்.
செந்தில் ஐந்து நிமிடத்தில் தயாராகி பரிதி அறைக்குச் சென்று பேசிவிட்டு இருவரும் ஒன்றாக மீட்டிங் கிளம்பினர்.
ரணதேவ் விக்கிரமர் மேகமலையில் இருக்கும் தங்கள் விருந்தினர் மாளிகை வந்து சேர்ந்து, அந்தக் காற்றை ஆழ சுவாசித்து வெளியேற்றினார்.
“என்ன தாத்தா… பாட்டி கூட ஹனிமூன் இங்க தான் வந்தீங்களா? இவ்வளவு பீல் பண்றீங்க இங்க வந்ததும்?”, என சக்தி குறும்புடன் வினவினான்.
“அடி வாங்குவ டா படவா…. போய் உள்ள எல்லாத்தையும் வைக்க சொல்லு வரேன்”, என அவனை அடக்கிவிட்டு வீட்டின் பின்பக்கம் சென்று தூரமாகத் தெரியும் மலையைக் கண்டார்.
பத்து நிமிடங்கள் கடந்து ரணதேவ் உள்ளே சென்று தன் அறையில் குளித்து தயாராகி வெளியே வந்தார்.
சிறிது சாப்பிட்டு முடித்ததும் வேலனிடம் சில வேலைகளை கூறிவிட்டு, சக்தியிடமும்
“சக்தி அந்த லீஸ் எடுத்தவங்கள இன்னிக்கு வந்து என்னை பார்க்கச் சொல்லு”, எனக் கட்டளையிட்டவர் ஜீப் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
ஒரு மலைக் கிராமத்தில் நின்றது அந்த ஜீப் . அவரைக் கண்ட வயதான முதியோர்கள் அவசரமும், ஆர்வமுமாக வரவேற்று அவரை உபசரித்தனர்.
“மிதிலன் எங்க ?”, ரணதேவ்.
“அவன் இன்னும் வரலைங்க சாமி…. காட்டுக்குள்ள ஒரு பொண்ணு காணாம போயிரிச்சின்னு காவக்காரங்க தேட கூப்பிட்டாங்கன்னு போனான்…. “, இருளய்யன்.
“சரி. அவன் வந்தப்பறம் வீட்டுக்கு வரசொல்லு…. நான் கிறம்பறேன்”, எனக் கூறிக் கிளம்பினார் ரணதேவ்.
“சரிங்க சாமி….. “, என அனைவரும் வணங்கி விடை கொடுத்தனர்.
வீடு வந்து சேர்ந்தபின், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு சக்தியை அழைத்தார்.
“சிங்கம்மாக்கு தகவல் குடுத்துட்டியா?”, ரணதேவ்.
“குடுத்துட்டேன் தாத்தா. உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க”, சக்தி.
“சரி…. எத்தனை மணிக்கு அவங்கள வர சொல்லியிருக்க?”, ரணதேவ்.
“ஐஞ்சு மணிக்கு வரதா சொல்லி இருக்காங்க தாத்தா……”, சக்தி.
“ம்ம்…… இந்த ஊர் தலைவர பாக்கணும் ஏற்பாடு பண்ணு”, எனக் கூறிவிட்டு யோசனையுடன் சேரில் சாய்ந்து அமர்ந்தார் ரணதேவ்.
“சரிங்க தாத்தா… “, எனக் கூறி சக்தி வெளியேறினான்.