6 – காற்றின் நுண்ணுறவு
அன்றிரவு பஸ் ஏறிய வல்லகி விடிகாலை 5 மணியளவில் ஊர் சென்று சேர்ந்தாள்.
பல்லவபுரம்…..
வல்லகி மற்றும் பாலவதனியின் சொந்த ஊர். இருவரும் சிறுவயது முதல் தோழிகளாக பழகினாலும் நெருக்கமானது கடந்த இரண்டு வருடங்களாகத்தான்.
இருவரும் பள்ளி வரை ஒன்றாய் பயின்றுவிட்டு கல்லூரி படிப்பை தொடர வெவ்வேறு இடம் சென்றனர்.
படிக்கும் பொழுதே நேர்காணலில் வேலையும் கிடைத்தது. மீண்டும் இருவரும் இணைந்தது அலுவலகத்தில் தான்.
“ஹேய் வகி….. நீ தானே….. நான் பாலா… “.
“பாலா…. என்னடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்ட…”, வகியும் அவளை அணைத்தபடி விசாரித்தாள்.
“நீ மட்டும் என்னவாம்…. ஸ்கூல்ல இருந்தவரைக்கும் வளரவே இல்ல. இப்ப திடீர்ன்னு பாதி பனைமரம் அளவுக்கு வளந்து நிக்கற… என்ன பண்ண அப்படி? எனக்கும் டிப்ஸ் குடேன்”.
“எனக்கு நீ எப்படி முடிய மெயின்டெயின் பண்றதுன்னு சொல்லிக்குடு. நான் உனக்கு அத சொல்லித்தரேன்”.
“சரி .. நீயும் அதே க்வாலிபிகேஷனா? நான் கோடிங் செலக்ட் பண்ண போறேன். நீ?”, பாலா.
“இதென்ன உன் கம்பெனியா நீ கேட்டதும் அவங்க தூக்கி குடுக்க. இங்க ஒரு மாசம் ட்ரைனிங். அதுல பாஸ் பண்ணா தான் உள்ள இல்லைன்னா வெளியே பேபி”,சுவிங்கத்தை மென்றபடிக் கூறினாள் வகி.
“எத்தன தடவை பாஸ் பண்றது… ஏற்கனவே ஏழு ரவுண்டு வச்சது பத்தலன்னு இங்க ஒரு ஏழரைய வேற வைக்கப்போறானுங்களா?”, என பாலா சற்று சத்தமாக பேச அங்கிருந்தவர்கள் வாயிற்குள் சிரித்துவிட்டு எழுந்து நின்றனர்.
“என்ன எல்லாரும் நிக்கறாங்க?”, பாலா எட்டி பார்க்க முன்னே ஒருவன் நின்றிருந்தான்.
“நீ பேசினத கேட்டு எழுந்து நிக்கறாங்க போலவே பாலா. இங்கயும் நீ தான் டான்னு சொல்லிட்டியா?”, வகி கேட்டபடி சற்று குரலை உயர்த்தி, “போதும் போதும் மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும்…. உக்காருங்க…. எதிர்ல என்ன இருக்குன்னு தெரியமாட்டேங்குதுல்ல…. டேய் முட்டபோண்டா… தள்ளி நில்லுடா”, வகி வாயாடித்தபடி சாய்ந்துப் பார்த்தாள்.
“சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… அடடா….. ஹேஹேஏஏஏஏ… “, என பாட்டு பாடியது.
“யார் மொபைல் அது? ஆப் பண்ணுங்க”, என அவன் கனீரென பேசினான்.
“யார்ரா அது? வாய்ஸ் இவ்வளவு கனீர்ன்னு வருது… எனக்கு மேல வரும் போலவே…..”,என யோசித்தபடி இன்னும் சாய்ந்துப் பார்க்க சேர் அவளைப் பக்கவாட்டில் தள்ளிவிட்டது.
“வாட்ஸ் ஹேப்பனிங் தேர்?”, அவன் முன்னிருந்து கேட்க ,” உன் கண்ணு டொக்கா டா…. விழுந்துட்டேன் டா… என்னடா சேர் இது? என் வெயிட்ட கூட தாங்காம உடையுது… சே… டப்பா கம்பெனி போல”, என வாய்க்கு வந்ததைப் பேசியபடி எழுந்தாள்.
அவள் எழுந்து நிற்கவும் அவன் அவள் முன்னே வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
” என்ன சொன்ன?”, கோபமாக கேட்டான்.
“டப்பா கம்பெனி…. வந்த முதல் நாளே என்னை கீழ தள்ளிடிச்சி…. சே… பேட் சைன்”,என அவனை பார்த்தும் அலட்டிக் கொள்ளாமல் தன் உடையைத் தட்டிவிட்டாள்.
“ஒழுங்கா சேர்ல உக்கார தெரியாம விழுந்தது நீங்க… அதுக்கு கம்பெனிய ஏன் குறை சொல்றீங்க…. சே… பட்டுகாட்டு பொண்ணுங்கள எல்லாம் எம்.என்.சி ல எடுத்தா இப்படித் தான் இருக்கும். ஓக்கே காய்ஸ்…. லிஸ்ஸன்….”, அவன் கூறியபடி முன்னே சென்றான்.
“ஹலோ மிஸ்டர்… யார பட்டிக்காடுன்னு சொன்னீங்க?“, வகி கோபமாக கேட்டாள்.
அவன் நின்று திரும்பி அவளின் கோபமான முகத்தை பார்த்துவிட்டு ,” உன்னத்தான்…”, என அழுத்தமாக கூறிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
“ஏய் வகி.. வேணாம்டி.. முதல் நாளே பிரச்சினை பண்ணாத…. விட்றுடி…”, பாலா வகியிடம் கெஞ்சினாள்.
“அவன் யாருடி என்னை பட்டிக்காடுன்னு சொல்றதுக்கு…. கூப்பிடுடி அவன…. இன்னிக்கு நானா அவனான்னு பாத்துடலாம்”, வகிக்கு கோபத்தின் அளவு கூடிக் கொண்டே போனது.
“வேணாம் வகி… விட்றுடி… அறியாத பையன் தெரியாம செஞ்சிருப்பான்… விட்றுடி.. அப்பறம் பாத்துக்கலாம் அவன… முதல் கம்பெனில ஸ்டெடி ஆகலாம்”, பாலா இன்னும் கெஞ்சுவதாக அவனை கீழிறக்கி பேச அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஹேய்…. இரண்டு பேரும் வாங்க இங்க.… முதல் நாளே அவ்ளோ திமிரா”, என அவனும் கோபமாக பேச ஆரம்பித்தான்.
“ஹாய் காய்ஸ்…. ஹியர் இஸ் மிஸ்டர். கருணாகரன், ஜி.எம் ஆப் அவர் கன்செர்ன்… ஹி இஸ் கோன்னா வெல்கம் யூ ஆல்”, என உயர் அதிகாரிகள் நால்வர் வந்துவிட அந்த சச்சரவு அப்படியே நின்றது.
வல்லகியும் அவனும் முறைத்தபடியே நின்றிருந்தனர்.
கருணாகரன் அவர்களுக்கு நல்லுரை உரைத்துவிட்டு வேறெதுவும் சிரமம் அல்லது பிரச்சினை இருந்தால் கேட்டு கொள்ளும்படி கூறினார்.
“எக்ஸ் க்யூஸ் மீ மிஸ்டர். கருணாகரன்….. காலேஜஸ்ல நீங்க வேலைக்கு தேர்ந்தெடுக்கறப்ப ஊர் பாத்து தான் எடுப்பீங்களா? எம்.என்.சி ல கிராமத்துல இருந்து யாரும் வந்து வேலை பார்க்க கூடாதுன்னு எதாவது இருக்கா?”, வல்லகி பாலாவின் கையை தட்டிவிட்டு விட்டு எழுந்து நின்றுக் கேட்டாள்.
கருணாகரன் அவளை யோசனையுடன் பார்த்துவிட்டு,” அப்படி எதுவும் இல்லை மிஸ்….”
“வல்லகி”
“இல்ல மிஸ் வல்லகி…. ஏன் இப்படி கேக்கறீங்க?”
“உங்க ஸ்டாப்ல ஒருத்தருக்கு எங்கள்ள சிலர பட்டுக்காடுன்னு சொல்றாரு… பட்டுகாட்டுன்னா அவ்வளவு இளக்காரமா இருக்கும் போல.. நீங்களும் உங்க கம்பெனியும் அப்படி தான் நினைக்கறீங்களா?”, வல்லகியின் கேள்வியில் அவன் கோபத்துடன் முறைக்க, கருணாகரன் அவனை முறைத்தார்.
“நீங்க என் ரூம்க்கு வாங்க.. என்ன பிரச்சனைன்னு பேசலாம்….”, கருணாகரன்.
“இல்ல மிஸ்டர் கருணாகரன். இங்க பேசின வார்த்தைக்கு இங்கயே தான் தீர்வும் தேடணும். இங்க வந்திருக்கற முக்கால் வாசி பேர் கிராமம் அதாவது உங்க பாஷைல பட்டிக்காடு தான். இங்க எங்க திறமைக்கு மதிப்பா இல்ல ஊருக்கான்னு இப்பவே சொல்லிட்டா நாங்க இப்பவே ஊர பாத்துட்டு கிளம்புவோம்”,வல்லகி நேர்பார்வையுடன் கூறினாள்.
இதற்கிடையில் அங்கே என்ன நடந்ததென உடன் வந்திருந்தவர் விசாரித்திருக்க, அவர் கருணாகரன் காதில் கிசுகிசுத்தார்.
கருணாகரன் அவனை முறைத்துவிட்டு, “சாரி மிஸ் வல்லகி. உங்கள ஹர்ட் பண்ணமாதிரி பேசினதுக்கு…. இனிமே இப்படி நடக்காது”
“நீங்க ஏன் சாரி கேக்கறீங்க… யார் பேசினாங்களோ அவங்க கேக்கட்டும்”
அவன் அவளை முறைத்தபடி நிற்க, கருணாகரன் சைகை காட்டியும் அமைதியாக நின்றான்.
“ஹலோ மிஸ் வல்லகி… இன்னும் நீங்க இங்க ஜாயின் கூட பண்ணல அதுக்குள்ள இப்படி பேசறீங்க…”, மற்றவர் அவளிடம் வாய் கொடுத்தார்.
“அதே தான் நானும் கேக்கறேன். ஜாயின் பண்றதுக்கு முன்னயே இப்படி இன்சல்ட் பண்றீங்க. ஜாயின் பண்ணிட்டா நீங்க என்ன சொன்னாலும் பொறுத்துட்டு போகணுமா? அது உங்க கம்பெனி நார்ம்ஸ்ல இருக்கா மிஸ்டர்?”,வல்லகி சற்றும் உஷ்ணம் குறையாது கேட்டாள்.
“நிறுத்துங்க சுதாகர். மிஸ் வல்லகி உங்ககிட்ட இப்ப மிஸ்டர் தர்மதீரன் சாரி கேப்பார்… இந்த மீட்டிங் முடிஞ்சி நீங்க என்னை வந்து பாருங்க”, எனக் கூறிவிட்டு அவனைப் பார்த்தார்.
அவன் அவள் அருகில் வந்து,” உன்கிட்ட நான் சாரி கேக்கணுமா?”, எனத் திமிராக கேட்டான்.
“பேசினதுக்கு கேட்டு தான் ஆகணும்”, அவளும் திமிர் குறையாது பதில் கொடுத்தாள்.
“மிஸ்டர் கருணா… இவங்கள ஹர்ட் பண்ணணும்னு நான் பேசல. இன்பேக்ட் வேற யாருக்கும் அது காதுல கூட சரியா விழல… சோ அவங்க மனசு கஷ்டப்பட்டதுக்கு நான் வருத்தம் தெரிவிச்சிக்கறேன்… கேரி ஆன் த செஷ்ஷன்…. பாய் ஆல்”, எனக் கூறி விட்டு நிற்காமல் அங்கிருந்து அழுத்தமாக பாதணிகளை பதித்துச் சென்றான்.
“சரியான திமிர் பிடிச்சவன் போல… “, வாயிற்குள் அவள் முனகிவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ஒருவழியாக சச்சரவு தற்சமயம் முடிந்து வேலையைப் பற்றின வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தனர்.
உணவு இடைவேலையில் அவளும் பாலாவும் கருணாகரனைச் சந்திக்க சென்றனர்.
“மே ஐ கம் இன்”, வல்லகி.
“எஸ்…..”
“என்ன விஷயமா என்னை வரசொன்னீங்க ?”
அவளை தலை முதல் கால் வரை அளந்தவர் அவளின் தோரணையில் ஈர்க்கப்பட்டு இருந்தார்.
அவர் பதில் எதுவும் கூறாமல் அவளை அளப்பதை உணர்ந்து டேபிலில் தட்டி,” மிஸ்டர் கருணாகரன்”, என உசுப்பினாள்.
“டோன்ட் மிஸ்டேக். உங்கள பாக்கறப்ப என் பொண்ணை பார்க்கிற மாதிரி இருக்கு… “
“புரியல”
“உங்க தைரியம்..”
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி தான். ஒரே மாதிரின்னு யாரும் இல்லை. அவங்கவங்க தனித்தன்மை அப்படியே இருக்கறது தான் நல்லது”, சிரித்தபடி பதிலளித்தாள்.
“ஆனா மொத்தமே அறநூறு சொச்சம் கேரக்டர் தான் இந்த உலகத்துல இருக்குன்னு இவங்களுக்கு யாரும் சொல்லல போல”, எனக் கூறியபடி அவளின் அருகில் இருந்த இருக்கையை இழுத்து எதிரில் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
“தோராயம் தான் அதுவும்னு உங்களுக்கும் யாரும் சொல்லல போல”, வல்லகி நக்கலாக பதிலளித்தாள்.
“அப்ப ஒரே மாதிரி யாருமே இருக்க மாட்டாங்கன்னு சொல்றியா? “
“ஆமா…. ஒட்டி பிறந்தவங்களா இருந்தாலும் அவங்க கைரேகை வேற வேற தான். அதே மாதிரிதான் எல்லாரும். ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கு”, திடமாக பதில் கொடுத்தாள்.
“போதும் … நீ இங்க எதுக்கு வந்த தர்மா?”,கருணாகரன்.
“இந்த மேடம்கிட்ட என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சிக்கத் தான்”, அவளை முறைத்தபடிப் பதிலளித்தான்.
“அடுத்தவங்க விஷயத்துல மூக்க நுழைக்கறது தான் இவருக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் போல?”,திமிரான மென்னகை மிளிர்ந்தது.
“முதல் நாளே தைரியமா தப்ப தட்டி கேட்டாங்கன்னு பாராட்ட தான் கூப்பிட்டேன். நீ கிளம்பு… “.
“அப்ப இத்தனை நாளா நாங்க கேட்டதுலாம் என்ன? சொல்லுங்க மிஸ்டர் கருணாகரன்”, அவன் இப்பொழுது அவரை முறைத்தான்.
அச்சமயம் சுதாகர் உள்ளே வந்தான். அதற்கு முன் பாலா தீரன் வந்த பொழுதே உள்ளே வந்தவள் அங்கு நடப்பவைகளை வேடிக்கை பார்த்தபடி நின்றாள்.
“அந்த ஜிதேஷ் போர்ட் மெம்பரோட க்ளோஸ் ரிலேட்டீவ். அவன வேலைய விட்டு தூக்க விடமாட்றாங்க… சேர்மேன் ஊர்ல இல்ல டா”, கருணாகரன்.
“இன்னிக்கு இரண்டு பொண்ணுங்க ரிசைன் பண்ணிட்டாங்க. அதுக்கு என்ன சொல்றீங்க… இன்னும் ஒரு மாசத்துல அவன வேலைய விட்டு அனுப்பலன்னா யாரும் வேலை பண்ணமாட்டாங்க…”, சுதாகர்.
“இப்ப என்ன பண்ண சொல்றீங்க ?”, கருணாகரன் தலையில் கைவைத்தபடிக் கேட்டார்.
“இதோ இவங்க தான் தப்பு எங்க நடந்தாலும் தட்டி கேக்கறாங்களே இவங்கள அவன் டீமுக்கு அனுப்புங்க. அங்க எப்படி கேக்கறாங்கன்னு பாக்கலாம்”, தீரன் அவளை இதில் இழுத்துவிட்டான்.
“டேய்… அந்த பொண்ணு புதுசு டா”, கருணாகரன்.
“என்னை சாரி கேக்க வச்சப்பவும் புதுசு தான்”.
“நீங்க தான் சாரி கேக்கவே இல்லையே”, வல்லகி அவனை கேட்டாள்.
“அவன ஒரு வாரத்துல இங்கிருந்து ஓட வச்சிடு… உன்ன கட்டிபிடிச்சி சாரி கேக்கறேன்”, தீரனும் விறைப்பாக பதிலளித்தான்.
“ஆமா… அது கால பிடிச்சின்னு தானே சொல்லணும்”, என யோசனையாக கேட்டபடி பாலாவும் பேச்சில் கலந்துகொண்டாள்.
வல்லகி அவளை முறைக்க, மற்றவர்கள் அவளை விநோதமாக பார்க்க, பாலா அசடு வழிந்தபடி, “இல்ல… அவரும் வந்தாரா பிரச்சனையோன்னு உள்ள வந்தேன்… நான் போறேன். வகி வா போலாம்”, என அவள் கைபிடித்து இழுத்தாள்.
கருணாகரனிடம் மட்டும் தலையசைத்துவிட்டு அவனை முறைத்தபடி எழுந்து நடந்தாள்.
“திமிருக்கு அரசின்னு நினைப்பு போல அவளுக்கு”, அவனும் முணுமுணுத்தான் அவளைப் பற்றி.