5 – காற்றின் நுண்ணுறவு
அடுத்த நாள் விடிகாலை 3 மணியளவில் ஜேக் மற்றும் சார்லஸ் இருவரும் தங்களுடன் இரண்டு மோட்டார் படகில் ஆட்களை ஏற்றிக்கொண்டு கடலோடத் தயாராக இருந்தனர்.
அனைவரும் நீச்சல் உடை தரித்துக்கொண்டு, உயிர்காக்கும் உபகரணங்களை எடுத்துவைத்தபடி இருந்தனர்.
படகில் ஜேக் முன்னேற , சார்லஸ் அவனுக்கு அடுத்த படகில் வந்துக்கொண்டிருந்தான்.
ஜேக் கூறியபடி போட்டோவும் வீடியோவும் எடுக்க ஆட்களை ஏவிவிட்டு தானும் எடுத்துக்கொண்டிருந்தான்.
அதே ஐந்தாவது கி.மீ எல்லையில் அனைத்து படகுகளும் நின்றன.
படகுகள் வந்து நின்ற நொடி சுழல் உருவாவதை இம்முறை ஜேக் தன் கண்ணால் கண்டான். அனைத்து படகுகளையும் பின்னால் செல்ல சொல்லிவிட்டு தானும் சில அடிகள் பின்னால் சென்றான்.
கடல் இப்பொழுது சாதாரணமாக காட்சியளித்தது. சார்லஸ் வியப்புக்குள்ளாகி தன் கேமிராவில் பதிவானதை ஜேக்கிடம் காட்டினான்.
அலைகள் ஒரே போல சீராக அவ்விடத்தில் காணப்பட்டாலும், உள்ளே நீரின் போக்கு ஓரளவு பிடிபட்டது.
ஜேக் சார்லஸிடம் மற்ற படகுகளை இதே சுற்றளவில் சுற்றிச்சென்று அங்கு நிகழ்பவைகளைப் படம்பிடிக்க ஆணையிடக் கூறிவிட்டுக் கடலில் குதிக்கத் தயாரானான்.
“வேணாம் ஜேக். இது ரொம்ப ரிஸ்க்”, சார்லஸ் கலக்கத்துடன் தடுத்தான்.
“நம்ம வேலையே ரிஸ்க் தான் சார்லஸ். நம்ம பாஸ்அ கான்டாக்ட் பண்ணி நான் கடல்ல குதிக்கற வீடியோ அனுப்பு…. முடிஞ்சா லைவ் ல இருக்கட்டும்”.
“இத நம்ம பெரிய பாஸ்க்கு காட்டினா கூட ப்ரயோஜனம் இருக்கும் ஜேக். அவன்கிட்ட காட்றது வேஸ்ட்… “, சலிப்புடனும் ஜேக்கை தடுக்கும் வழி புரியாமலும் பதிலளித்தான்.
“சரி அதையே பண்ணு. நான் போறேன்”, எனக் கூறி கடலில் குதித்தான்.
சார்லஸ் மற்ற படகுகளை ஜேக்கின் யோசனைப்படி அனுப்பிவிட்டு கேமிராவை ஸ்டடியாக வைத்துவிட்டு நீரையே உற்றுப்பார்த்தபடி இருந்தான்.
தண்ணீரில் இறங்கிய ஜேக் சிறிது நேரம் மேலே நீந்திவிட்டு அந்த எல்லை வந்தததும் உள்நீச்சல் அடிக்க ஆரம்பித்தான்.
அவனின் கணிப்புப்படி நீரலைகளின் அசைவைப் பொறுத்து சுழல் உருவாகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான்.
முடிந்தவரை அருகில் செல்லலாம் என முயன்று சுழலில் சிக்கி பாறையில் வீசியறியப்பட்டான்.
தகுந்த முன்னேற்பாடுகளுடன் வந்த காரணத்தால் அதிகமான காயம் ஏற்படாமல் சற்று தூரத்தில் நீந்தியபடி அந்த இடத்தை வெளிச்சம் பாய்ச்சி வீடியோ எடுத்தான்.
அந்த சுழல்களைத் தாண்டி நிறைய மீன் கூட்டம் சுற்றியபடி இருந்தது.
அதை “மயக்கமூட்டும் திரள்”, எனக் கூறுவர்.
அதைப் பார்க்கப் பார்க்க நமக்கு மயக்கம் ஏற்பட்டு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிடுவோம்.
கடல் எப்பொழுதும் மிகப்பெரிய பொக்கிஷம்.
அது இது தான் , இது மட்டும் தான் என நம்மால் என்றுமே வரையறுக்கமுடியாது.
அடி ஆழம்வரைச் சென்று நீர் உலகை அறிந்த மனிதர் யாருமில்லை, புரிந்தவரும் இல்லை.
அதே நிலையில் தான் ஜேக்கும் இப்பொழுது இருக்கிறான். இப்படியான சுழல்களுக்கு அருகில் மீன்கூட்டங்கள் திரளாக சுற்றியபடி இருப்பது சற்றே விந்தையாக இருந்தது.
இந்த பக்கம் நீர்ச்சுழலும், அந்த பக்கம் மீன்சுழலும் அந்த இடத்தை நிரப்பி இருந்தது.
சற்று நேரம் மீன்களின் அழகிலும் அதன் நேர்த்தியான திரளணியிலும் லயித்தவன் மயக்கநிலைக்குச் செல்லத் தொடங்கினான்.
சார்லஸ் அவனுக்கு கயிற்றைக் கட்டியே அனுப்பி இருந்தான் என்பதால், அதிக தூரம் அவன் இழுக்கப்பட்டால் அவனை தங்கள் பக்கம் இழுக்க முன்னேற்பாட்டுடன் தான் இருந்தான்.
ஜேக் கையில் இருந்த கேமிரா நழுவி ஜேக்கின் மயக்கமான முகத்தை காட்டவும் இங்கு திரையில் சார்லஸ் அவனை கவனித்தபடி இருந்தவன் பதறிக் கயிற்றை இழுக்க உத்திரவிட்டான்.
“பாஸ்ட்… பாஸ்ட்… பாஸ்ட்…. ஹீ இஸ் ட்ரௌனிங் டீப்”, என கத்தினான்.
யோகேஷூம் அந்த வீடியோவை லைவ்வில் பார்த்துக்கொண்டு இருந்ததால் ஜேக் மயங்கியதும் சற்றே அதிர்ந்தான்.
சார்லஸை தொடர்புக்கொண்டு ,” அங்க என்ன நடக்குது சார்லஸ்? சீக்கிரம் அவன மேல இழு”, என யோகேஷ் கூறிமுடிக்கும் முன்,” நோ…. அவன மூழ்க விடு… கூட இன்னொருத்தனும் அவன் கூடவே மூழ்கி போகட்டும். ஐ வான்ட் டு நோ வாட் இஸ் தேர்”, என ஆளுமையான குரலில் கூறிவிட்டு, தன் முகத்தைச் சிறு குழந்தைப் போல வைத்து, ஜேக்கின் கை கேமிரா வழியே ஆழ்கடலின் மர்மத்தை அறியும் ஆவலோடு அமர்ந்திருந்தான் ஒவிஷ்கர்.
அதித் ஒவிஷ்கர்……
ஒவிஷ்கரைக் கண்டதும் சார்லஸ் முதலில் பதற்றமாகி,பின் தன்னை திடப்படுத்திக் கொண்டு” பாஸ்…. அவன் செத்துட்டா என்ன பண்றது?”.
“அவன் சாகமாட்டான்…. எனக்கு அங்க என்ன இருக்குன்னு தெரியணும்…. இன்னொரு கேம் எடுத்துட்டு ஆள குதிக்க சொல்லு… எவ்ளோ ஆழம் போகுதுன்னு நான் பாக்கணும்”.
“ஓக்கே பாஸ்”, என பணிந்துவிட்டு மற்றொருவனை கயிற்றில் கட்டி நீரில் இறக்கினான்.
இந்த நேர இடைவெளியில் ஜேக் நூறு அடிக்கும் கீழே சென்று இருந்தான்.
அவன் நினைவடுக்குகளில் எதேதோ வெளிவந்து அவனை அவனுக்குக் காட்டியது.
ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி….
உலகின் தொன்மையான பல்கலைகழகங்களில் ஒன்று. அங்கே தான் ஜேக் தன் அன்டர் கிராஜுவேஷன் டிகிரியை முடித்தான்.
வெற்றிகரமாக தங்கம் பெற்றுச் சந்தோஷச் கூச்சலுடன் வீட்டிற்கு விரைந்தான்.
“ஹேய் ஜேக்…….. எப்ப பார்டி தரப்போற?”, நண்பன்.
“முதல்ல இத அப்பா அம்மாகிட்ட காட்டணும் டா.. சாயந்திரம் பாக்கலாம்.. கண்டிப்பா பார்டி இருக்கு……..கவலைபடாதீங்க”, என சிரித்தபடி பதிலளித்துவிட்டுக் கிளம்பினான்.
தாய் கிரேஸ் ஜோன்ஸ், தந்தை டேவிட் ஜோன்ஸ்.
“மாம் … டேட்…… ஐ காட் மெடல் “, என சந்தோஷமாக ஆர்ப்பறித்துக்கொண்டு வீட்டில் நுழைந்தான்.
அங்கே வீடே மயான அமைதியில் இருந்தது. ஏதோ சரியில்லை என்று தோன்ற அவசரமாக தாய் தந்தை இருக்கும் அறைக்குச் சென்றுப் பார்த்தான்.
அவர்கள் அங்கில்லை. வேறெங்கும் வீட்டில் இல்லை. இவன் பலமுறை அழைத்தும் பதில் இல்லாமல் போக அப்படியே படிகளில் அமர்ந்தான். கீழே பாதாள அறையில் ஏதோ சத்தம் கேட்க அங்கே ஓடினான்..
அவன் கீழே சென்று கதவை திறக்கும் சமயம் அவன் தாய் தந்தை இருவரையும், துடிதுடிக்க கழுத்து நரம்புகளை அறுத்துக்கொண்டிருந்தாள் அவள் .
“சோ….. இனிமே நீ தப்பு பண்ணமாட்ட டேவிட். அதான் இப்படி பண்ணேன்…. பாய்…. “,என அவர்கள் நெற்றியில் முத்தமிட்டு தன் ஆட்களுடன் கதவருகில் நிற்கும் ஜேக்கைப் பார்த்து நகைத்துவிட்டுச் சென்றாள்.
ஜேக் அவளை தாக்க முனைந்து அடிபட்டு கீழே விழுந்தான்.
“யூ கெட் லாஸ்ட் புவர் பாய். அவங்க என்கிட்ட குடுத்த வாக்க மீறிட்டாங்க. அதான் தண்டனை குடுத்தேன். நீ இருக்கற பணத்த வச்சிட்டு சந்தோஷமா வாழு… உன் அப்பா அக்கவுண்ட்ல நூறு மில்லியன் டாலர் இருக்கு. அதை நான் எடுக்கல. உனக்கு குடுக்க சொல்லி பாஸ் சொல்லிட்டார். என்ஜாய். ஹேவ் ஃபன் டியர்”, என அவன் தலையைக் கோதியபடி அவன் காதருகில் பேசிவிட்டு அவனையும் முத்தமிட்டு வெளியேறினாள்.
தன்னை பெற்றவர்களைக் கொன்றுவிட்டு செல்பவளை ஏதும் செய்யமுடியா நிலையில் அவன் கதறி துடித்து அழுதழுது மயங்கிக் கிடந்தான்.
அவளே போலீஸையும் அனுப்பி பெற்றவர்களை கொன்றதாகக் கூறி அவனை சிறைக்குள் அடைத்துவிட்டாள்.
அவன் எத்தனை முயன்றும் அவனால் அவன்மீது சுமத்திய குற்றத்தை அகற்றமுடியவில்லை, அவளையும் நெருங்க முடியவில்லை.
ஐந்து ஆண்டுகள் சிறையில் கழித்து வெளியே வந்தவன் தன் இல்லம் சென்றான்.
குப்பையாக கிடந்த இல்லத்தில் இறுதியாக தன் தாய் தந்தையைக் கண்ட இடத்தில் சென்று அமர்ந்துவிட்டான்.
பராமரிப்பு இல்லாமல் குப்பையாக கிடந்த வீட்டை மெல்ல மெல்ல சுத்தம் செய்து பெற்றவர்களின் வாசம் அதில் வருகிறது, இதில் வருகிறதென மோப்பம் பிடித்து அவர்கள் பொருட்களை அவர்கள் அறையில் வைத்துவிட்டு தன்னறைக்கு வந்தான்.
அங்கே அவன் அன்று வாங்கிய மெடல் கீழே கிடந்தது. அதை கையில் எடுத்தவன் மனம் கனத்து போக ஐந்தாண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருந்த கங்கிற்கு எரியூட்டியாக மாறி அவனை பெரும் தீர்மானம் எடுக்க வைத்தது.
ஆம்…. அந்த நொடி தான் அவன் தன் வாழ்வில் முக்கிய திருப்புமுனையைத் தேர்ந்தெடுத்தான்.
சார்லஸின் ஆணைக்கிணங்க கடலில் குதித்தவன் கயிற்றின் உதவியோடு ஜேக்கை பிடித்துக்கொண்டு கேமிராவை சுற்றிக் காட்டினான்.
தன் கணிணியில் ஒவிஷ்கர் அதை பார்த்தபடி வந்தவன் ஓரிடத்தில் ஏதோ மிளிரவும் அவ்விடத்தின் அருகில் செல்ல ஆணையிட்டான் சார்லஸ் மூலமாக.
“என்னால முடியல… அங்க சுழல் இருக்கு… இவர பிடிச்சிட்டு போக முடியாது”, ஜேக்கை பிடித்த படி அவ்விடத்தை நெருங்க முடியாது திணறினான் கடலோடி.
“பாஸ் .. அங்க சுழல் இருக்கு… யாரும் நெருங்கறது கஷ்டம்”, சார்லஸ்..
“ஒவ்வொருத்தனுக்கும் பத்து மில்லியன் டாலர்ஸ் தரேன்னு சொல்லு”,யோகேஷ்.
“ஷட் அப் யோகேஷ்…. ஒரு உயிரோட மதிப்பு அவ்வளவு தானா? சார்லஸ்… நீயே குதி… கூட சிலர கூப்பிட்டுக்க… ஜேக்க மேல கொண்டு வரச்சொல்லு… கேம்ல ரெக்கார்ட் பண்ணிட்டு வந்தா போதும்”, தீர்க்கமான குரலில் கட்டளையிட்டான்.
ஜேக்கை மேலே போட்டில் ஏற்றிவிட்டபின் கடலில் குதித்தான்.
கீழே செல்ல செல்ல ஆழ்கடலின் இருட்டு சார்லஸை விழுங்கவும் ஒளியைப் பரப்பியபடி அவனைச் சுற்றிலும் ஆறு பேர் வந்தனர்.
ஆட்களின் சலசலப்பு அதிகமானதும் சுழலின் வேகம் அதிகரித்தது.
சார்லஸ் அந்த மிளிரும் இடத்தை நெருங்க முயற்சித்து முன்னே சென்றவன் சுழலில் சிக்கி நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டான்.
ஒவிஷ்கர் முகத்தில் மர்மமான மென்னகை ஒளிர்ந்தது.