65 – ருத்ராதித்யன்
முதலில் அந்த பள்ளத்தாக்கை தாண்டிய நாகம் எதிரே நின்ற கஜயாளியை கண்டு அந்த பகுதியின் எல்லையில் உடல் தேய்த்து சறுக்கி நின்றது. சிங்கங்கள் தாவியபடி அடுத்தடுத்து வரவும் நாகம் சிங்கங்களை தனது வாலில் சுருட்டி பிடித்து லாவகமாக தரை இறங்க வைத்தது.
நானிலன் கத்திய கத்தலில் அவன் அமர்ந்திருந்த சிங்கம் எரிச்சல் கொண்டு தனது நகங்களால் கயிற்றை அறுத்து அவனை கீழே வீசியது.
நானிலன் அங்கிருந்த பாறையை பிடித்துக் கொண்டு அப்படியே படுத்துக் கொண்டான்.
வல்லகி அந்த சிங்கத்தை ஆதுரமாக தடவி கொடுத்து பிடரியில் கை நுழைத்து விளையாடவும் சிங்கமும் அவளுடன் முகம் உரசி கொஞ்சியது.
“அவன் ரொம்ப கத்திடானா? சின்னபையன் அவன மன்னிச்சிடு…..”, என வல்லகி கூறவும் அந்த சிங்கம் நானிலனை பார்த்துவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு அவளது முகத்தை நாவால் நக்கி அன்பை வெளிப்படுத்தியது.
மற்றவர்களும் தரை இறங்கி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
சிம்மேசன் கடைசியாக வந்து நின்றதும் அவன் மேலே இந்த ஆதியைக் கண்டு அந்த கஜயாளி ஒரு அடி முன்னே வந்து அவனை கூர்ந்து பார்த்தது.
அர்ஜுன் மற்றவர்களை தன் பின்னே நிற்கவைத்து கொண்டு ஆதியை மட்டும் முன்னே செல்லக் கூறினான்.
மற்ற மிருகங்கள் போல யாளியிடம் நாம் அத்தனை எளிதாக நெருங்க முடியாது. அவை மிகவும் நுண்ணிய உணர்வுகளையும் உணரக்கூடியவை.
கோவில்களில் யாளிக்கு ஏன் அத்தனை முக்கியத்துவம் கொடுத்து தூண்களில் வடிக்கிறார்கள் என்ற காரணம், அவை நல்ல அதிர்வுகளையும், தீய அதிர்வுகளையும் மிக சுலபமாக கண்டறிந்து தீய அதிர்வுகளை அழிக்கும் ஆற்றல் அதற்கு உண்டு என்பதால் தான்.
ஆனால் யாளிகள் வாழ்ந்த அடையாளம் இன்னும் இந்த நவீன அறிவியல் உலகுக்கு தெரியவில்லை என்பதால் அவற்றை பற்றிய விசயங்கள் குறைவாகவே காணக்கிடைக்கிறது.
யாளியின் பலத்தை ஒரு இலக்கிய பாடல் நமக்கு கூறுகிறது. ஓர் பெரிய யானையை தனது நகத்தின் நுனியால் அதன் தலையை குத்தி கிழித்து இழுத்தே கொள்ளுமாம் யாளி.
நகத்தின் நுனியை வைத்தே ஓர் வளர்ந்த யானையை கொள்ளும் அளவிற்கு அதன் உயரமும், பலமும் அத்தனை பெரிதென கூறுகிறார் அந்த பாடலின் ஆசிரியர்.
முக்கியமாக அதர்வண வேதத்தை பயன்படுத்தி ஏவப்படும் அனைத்து தீய அதிர்வுகளையும் அழிக்கும் ஆற்றல் யாளிக்கு உள்ளது என்ற கருத்து இங்குள்ளது.
முதல்முறையாக கண்மயா யாளியைக் கண்டதும் அப்படியே மெய்மறந்து நின்று கன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கஜம் என்றால் யானை . கஜயாளி என்றால் யானையை போன்ற முகம் கொண்ட யாளி.
அவர்கள் பார்த்த யானையை விட நான்கு மடங்கு உயரமும் அகலமும் கொண்ட அந்த விலங்கைக் கண்டு அனைவரும் மலைத்து நின்றனர்.
இதுவரை கோவில் தூண்களில் மட்டுமே கண்ட உருவம் உயிரோடு தங்கள் எதிரில் நிற்பதைக் கண்டு கலவையான உணர்வுப் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தனர்.
அர்ஜுனும் அதன் உருவம் கண்டு மலைத்து நின்றிருந்தான். இந்த மிருகங்களைப் பற்றி எந்த குறிப்பும் தற்போதைய உலகத்தில் இல்லாத காரணத்தால் வல்லகியும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த பாவனையில் சற்று முன்னே சென்று பார்த்தாள்.
சுமாராக 30 அடி உயரம் கொண்ட கஜயாளியை அருகே சென்று காணும் ஆவலில் அவள் எல்லைக் கோட்டை மிதித்துவிட்டாள்.
அவள் கோட்டை தொட்டதும் யாளி சத்தம் எழுப்பி அவளை பின்னே செல்ல கூறியது. அந்த சத்தம் நூறு யானைகளின் பிளிறலை ஒன்றாக கேட்டதைப் போல காதை அடைத்தது. சில நிமிடங்கள் காதே யாருக்கும் கேட்கவில்லை என்று கூறலாம்.
நாச்சியார் வேகமாக வல்லகி அருகே சென்று கோட்டை தாண்டாமல் வல்லகியை பின்னே இழுத்து நிறுத்தினாள்.
“இங்கேயே நில்லு… கோட்டை தாண்டாத… பாரு எந்த சிங்கமும் கோட்டுக்கு பக்கமே வரல…”, என கூறி காண்பித்தாள்.
“இங்க இவரு தான் டான் போல…. நாச்சி… பாத்தியா எவ்ளோ பெருசு…. சத்தியமா இன்னும் என்னால நம்பவே முடியல டி…. இத பாலா பாத்தா எப்படி ரியாக்ட் பண்ணி இருப்பா?”, என ஆச்சர்யம் விலகாமல் கேட்டாள்.
“அவ வராதது நல்லது…. இல்லன்னா இத பாத்தே அவளுக்கு ஜுரம் வந்திருக்கும்…. இது வாழ்ந்த ஆதாரமா இதோட எழும்பு கூட இன்னும் நமக்கு கிடைக்கல டி…. ஆனா இத பாத்த அப்பறம் மனசுல ஒரு பயமும், தெளிவும் சேர்ந்து வருது…. “, நாச்சியாரும் மலைப்பு நீங்காமல் தான் பேசிக் கொண்டு இருந்தாள்.
“பாத்தியா எவ்ளோ கம்பீரம்…. இப்படி ஒரு உயிரினம் இப்போ இல்லன்னு கவலை படறதா? சந்தோஷப்படறதா தெரியல….”
“மம்.. இது இந்நேரம் இருந்திருந்தா ஜனத்தொகைல 90% அழிச்சி இருக்கும்…. “
“ஏன்?”
“இதுக்கு நம்ம எண்ணங்களை உணர்ற சக்தி அதிகமா இருக்காம்… நாம கற்பனைக்கு தப்பா எதாவது நினைச்சா கூட இதுக்கு தெரியுமாம்…. நம்ம ஆத்மா வரைக்கும் அலசி ஆராய்ன்ஜி நம்ம இங்க வாழணுமா வேணாமான்னு யோசிக்குமாம்…”
“இதுலாம் உனக்கு யாரு சொன்னா?”, வல்லகி
“ஒரு கோவில தோண்டினப்ப சில சுவடிகள் கெடச்சது அதுல படிச்சேன் ஆனா முழுசா விவரம் கிடைக்கல….”
“ வேற என்ன பண்ணும் இது?”
“இது கஜயாளி வகை…. யானை முகம் பாரு அதே போல துதிக்கை இருக்கு… “
“எத்தன வகை யாளி இருக்கு?”
“நமக்கு தெரிஞ்ச வரைக்கும் 6 இருக்கு…..”
“என்ன என்ன?”
“இது கஜயாளி, மகரயாளி – முதலை முகம், அஷ்வயாளி – குதிரை முகம், சிம்மயாளி – சிங்க முகம், சுவன யாளி – நாய் முகம், மூஷிக யாளி – மூஷிக முகம்…”
“நாய் யாளி, மூஷிக யாளி கூட இவளோ பெருசா இருக்குமா?”, நுவலி கேட்டாள்.
“யாளினாலே உருவம் பெருசு தான்… ஆனா யாருக்கும் அதோட உருவத்தோட உயரம் அகலம் எல்லாம் தெரியாது…. இனிமே நாம இங்க பாத்தா வேணா தெரிஞ்சிக்கலாம்…”
“இன்டர்ஸ்டிங்…..”, கண்மயா.
“நானிலன் எங்க?”, வல்லகி கேட்டாள்.
“அதோ அந்த பாறைக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்காரு.”, என நுவலி கைக்காட்டினாள்.
“அவன….”, வல்லகி பல்லை கடித்தபடி அங்கே சென்று அவனை இழுத்துக் கொன்டு வந்தாள்.
அவன் கண்ணே திறக்காமல் வல்லகியின் கையை பிடித்துக் கொண்டு அப்படியே தலை குனிந்து நின்றான். இன்னும் அவன் எதிரே நிற்கும் விலங்கினை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இப்படி அமைதியாக நிற்பானா என்ன?
“ஆதி….. நீ தான் முன்ன போய் அனுமதி வாங்கணும்…. “, அர்ஜுன் நாகத்திடம் பேசிவிட்டு கூறினான்.
“மம்…”, என கனமான குரலில் வெளியிட்டுவிட்டு, அந்த எல்லையில் நின்றான்.
கஜயாளி அவனை பக்கம் வந்து கூர்ந்து பார்த்தது.
அவன் இந்த இடத்தில் அம்மன் சிலையை வைக்கும் பொழுது மனிதர்கள் இங்கே வரமுடியாத படி முன்னிருந்த 4 பகுதிகளிலும் வித விதமான விலங்குகளை நிரப்பினான். ஆனால் அதர்வண வேதத்தை உபயோகித்து எந்த மனிதனோ, மிருகமோ, ஆத்மாக்களோ நுழைந்து விடக்கூடாது என்பதற்காக தான் இங்கே யாளியை அமர்த்தினான்.
அவன் அப்போது வாழ்ந்த காலத்தில் யாளியும் சொற்பமான எண்ணிக்கையில் வாழ்ந்தன. அவற்றை பாதுகாக்கவே இங்கேயும் அவற்றை கொண்டு வந்து காவலுக்கு வைத்தான்.
இது பத்தாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஆரம்பித்த போர். இன்னும் பல பிறவிகள் கடந்தும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்போர் இவர்களது இப்பிறவியிலாவது முடியுமா? அம்மையும் அப்பனும் அதற்கு மனம் வைப்பார்களா? காத்திருந்து பார்ப்போம்…..
“கஜ பத்ரா……”, ஆதி மனதில் இருந்து அழைத்தான்.
அவனது அழைப்பில் அந்த கஜயாளியும் அவனை இன்னும் அருகில் சென்று பார்த்தது. அவனது ஆத்மாவை இனம் காண முயற்சிக்கிறதோ ?
அப்பப்பா… அந்த கண்கள் கண்டால் நிச்சயமாக பயத்திலேயே மயக்கம் வந்துவிடும்… யானையைப் போன்ற முகம் கொண்டிருந்தாலும் உடலானது மிகவும் திடமாக கட்டுமஸ்தாக தான் இருந்தது. யானையின் சாம்பல் நிறத்தோடு, அந்திவான சிகப்பையும், ஆரஞ்சு வர்ணத்தையும் சேர்த்தால் வரும் அடர் ஆரஞ்சு நிறம் உடல் முழுக்க மின்னியது. அந்த சாம்பலும் அடர் ஆரஞ்சும் உடலில் கன்னாபின்னாவென்று கலந்து பார்க்கவே அத்தனை கவர்ச்சியாக இருந்தது. இதை வெயிலில் கண்டால் நிச்சயம் நம் மனம் பறித்துக் கொள்ளும் அளவிற்கு அற்புதமாக இருக்கும். இரவில் நட்சத்திர வெளிச்சமும் பெரிய பெரிய மின்மினி பூச்சிகள் அங்கே உலவும் வெளிசத்திலேயே அத்தனை ரம்யமாக இருந்தது.
“ருத்ர விக்னன் எங்கிருக்கிறான்?”, ஆதி எல்லையில் இன்னும் நெருங்கி நின்று கேட்டான்.
கஜபத்ரன் ஆதியின் அருகே வந்து துதிக்கையால் ஆதியின் நாசியை முகர்ந்து பார்த்து அவனது தொப்புள் அருகே துதிகக்கையை கொண்டு சென்று சத்தம் எழுப்பினான்.
“உன் மேல் துணிய கழட்டு ஆதி ….”, அர்ஜுன் நாகம் கூறியதை கூறினான்.
ஆதியும் தன் மேல் உடையை களைந்து கஜபத்ரன் அருகே சென்றான்.
கஜபத்ரன் தனது துதிக்கையால் அவன் மேல் உடல் முழுதும் தொட்டு பார்த்து கடைசியாக தொப்புளில் துதிக்கையை வைத்து மூச்சை இழுத்தான்.
ஆதி அவன் இதயத்தை சீராக வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டான்.
அவனின் அதீத இதய துடிப்பை உணர்ந்த யாளி அவன் இதயின் அருகே மெல்ல தடவி கொடுத்தது. ஆதி அதில் சற்று ஆசுவாசமாகி அதன் துதிக்கையை பிடித்துக் கொண்டான்.
கஜயாளி வனை முழுதாக சோதனை செய்த பிறகு துதிக்கையால் அவனை தூக்கி தன் முகத்தின் அருகே துதிக்கையின் மேலே நிற்கவைத்தது.
ஆதி அதனை இரு கைகளாலும் அனைத்துக் கொண்டு முத்தமிட்டான். யாளியின் கண்களிலும் இருதுளி கண்ணீர் வெளிவந்தது.
நாகத்திடம் லேசாக சத்தம் கொடுத்து மற்றவர்களை பார்த்தது.
“எல்லாரும் காத நல்லா மூடிக்கோங்க….”, அர்ஜுன் கூறியதும் காதை அடைக்கும் கருவியை அனைவருக்கும் கொடுத்த கண்மயா, நானிலனுகு தானே மாட்டி விட்டாள் . அவன் இன்னும் முழுதாக மயக்கம் தீர்ந்து நிற்கவில்லை. சிங்கத்தின் மேல் வந்தபோதே அறைமயக்கத்தில் தான் வந்தான்.
ஏற்கனவே காதை அடைப்பதை போல இருக்கிறதே என நினைத்து இப்போது தான் விழி திறந்து எதிரே நிற்கும் யாளியை கண்டதும் அலறினான்.
யாளி தன் சகாக்களுக்கு தங்களது தலைவன் வந்துவிட்ட செய்தியை அறிவிக்க சந்தோசமாக பிளிறியது. அந்த சத்தத்தில் நானிலன் மூர்ச்சையாகி கீழே சரிந்தான். ஆதியைக் காண கூட்டமாக நிலமும் நீரும் அதிரும் வண்ணம் சில உருவங்கள் ஓடி வருவது தூரமாக தெரிந்தது.