64 – ருத்ராதித்யன்
அடர்ந்த மரங்களின் ஊடே இருட்டு கூட பயப்படும் அளவிற்கு அத்தனை கருப்பாக இருந்தது அந்தப் பகுதி. அதில் மின்னும் கருப்பில் தனது உடலை மரங்களின் ஊடே புகுத்தி மரத்தின் வழியாகவே நகரும் அந்த கருநாகம், சிம்மேசனின் கர்ஜனை உணர்ந்து தன் எல்லைக்கு வந்து நின்றது.
அந்த நாகத்தின் உடல் நீளமும், அகலமும் கற்பனையிலும் அங்கிருந்த யாரும் இதுவரை கண்டதில்லை . அதைக் கண்டு நானிலன் மயங்கியே விட்டிருந்தான் வல்லகியின் முதுகினில் சாய்ந்து.
நுவலி அஜகரணை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் இந்த கருநாகத்தினை கண்டு உடல் சிலிர்த்து அதனை அருகில் சென்று காண ஆவல் கொண்டாள்.
நாச்சியார் இத்தனை பெரிய நாகம் இங்கு இருக்கும் என்று ஊகத்தில் தான் இருந்தாள், அதனால் மனதை திடப்படுத்திக் கொண்டு அடுத்த பகுதியை சரியாக கடக்க என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தாள்.
இதுவரை நாச்சியார் வழி ஏதும் கூறவில்லை, மிருகங்களே அவர்களை வழிநடத்தி சென்றுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவளும் செல்லும் பாதையை குறித்துக் கொண்டு, சுவடியில் கிடைத்த தகவல்படி சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தாள்.
அவளின் கூற்றுப்படி சிலை எடுக்கும் இடம் தான் சவாலாக இருக்கும் என்று தோன்றியது.
“வல்லா…..” நாச்சியார் அழைத்தாள்.
“சொல்லு நாச்சி….”
“சிலை எடுக்கறது தான் ரிஸ்க் அஹ் இருக்கும்ன்னு நினைக்கறேன்…. வழி எல்லாம் சரியா தான் போகுது இப்போவரை…”
“இதுக்கு மேலயும் போகுதான்னு பாத்துக்கோ நாச்சி… சிலை எடுத்த அப்பறம் சரியா நாம வெளிய போகணும்…”
“அந்த பாம்பு இப்போ நம்மள பக்கம் வந்து செக் பண்ணுமா?”, கண்மயா பயத்துடன் கேட்டாள்.
“வர சொல்லட்டா கண்மயா?”, வல்லகி சிரிப்புடன் கேட்டாள்.
“அச்சச்சோ .. வேணாம் வல்லகி… அதோட தலையே எவ்ளோ பெருசா இருக்கு…. நம்மள முழுசா முளுங்கிடும் போல ஒரே மூச்சுல…. இப்படி யானை மேலயே கூட போயிடலாம்…. அது மட்டும் பக்கம் வர வேணாம்…”
“அப்பறம் எப்படி நாலு அடி தேள் அஹ் நீங்க உயிர்ப்பிச்சி வச்சிங்க கண்மயா..?”
“அது கூண்டுகுள்ள தான் இருக்கும்.. இது எவ்ளோ நீளம் இருக்குன்னு தெரியல.. “
“ஹாஹாஹா….. இதையும் கூண்டுகுள்ள அடைச்சா நீங்க ரிசர்ச் பண்ணுவீங்க தானே?”
“மாட்டேன்….. போதும் நான் ஆராய்ச்சி பண்ண வரைக்கும்.. கம்முனு நான் ஸ்கூல் டீச்சர் அஹ் போயிடறேன் இனிமே……”
“அக்கா.. அக்கா… எனக்கு ஆசையா இருக்கு க்கா… என்னை அந்த பாம்புகிட்ட கூட்டிட்டு போறீங்களா?”, நுவலி ஆசையுடன் கேட்டாள்.
“எதே….. என்னம்மா நீ அது அஜகரன் மாதிரின்னு நெனைச்சிட்டியா? “, நாச்சியார் கேட்டாள்.
“நம்மள எல்லாம் எதுவும் ஒன்னும் பண்ணாதுக்கா…. வாங்க கிட்ட போலாம்.. ஆதி அண்ணாகிட்ட கேளுங்க….”
“இங்க பாரு ஒருத்தன் என் முதுகுல மயங்கி கடக்கறான்… இவன வச்சிட்டு உனக்கு இப்படி எல்லாம் ஆசை வருது… “, வல்லகி நானிலனை கிண்டல் செய்து கூறினாள்.
“அர்ஜுன்…. நுவலி பாம்புகிட்ட போகணுமாம்…”
“இருங்க எப்படியும் நம்மள செக் பண்ண கிட்ட வருவாங்க…. அங்க சிங்கமும், நாகமும் ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்க…. ”, அர்ஜுன் கூறிவிட்டு நானிலனை அடித்து மயக்கம் தெளிவித்தான்.
“அம்மா….. பாம்பு… பெருசா… அங்க.. அங்க….. பாம்பு…”, என பயத்தில் உளறினான்.
“கம்முனு இரு டா… இப்ப கிட்ட வரும் ஒழுங்கா அமைதியா இரு… பாவம் அந்த பொண்ணு எவ்ளோ நேரம் உன்ன தாங்கும் முதுகுல…? இனிமே மயங்கின உன்ன அந்த சிங்கம் மேல ஏத்தி விற்றுவேன்…”, அர்ஜுன் உருமினான்.
“உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா சார்? நான் பூனை எலி பாத்தாலே அந்த பக்கம் ஒரு வாரம் போகமாட்டேன்.. என்னை இந்த காட்டுல இவளோ மிருகம் மத்தில ஒரு யானை மேல படுக்கவச்சி கூட்டிட்டு போறீங்க… எனக்கு அழுகையா வருது சார்….”, என கண்களை துடைத்தான்.
“ஏன்டா நீ எப்படி டா காலேஜ் டான் ஆன? இப்படி பயப்படற?”, வல்லகி கேட்டாள்.
“நான் டான்- ன்னு உங்களுக்கு யாரு சொன்னது?”
“உன்ன நாங்க மேகமலைக்கு கொண்டு வரமுன்ன உன்னப்பத்தி எல்லாமே எங்கண்ணிக்கு ரிப்போர்ட் வந்துருச்சு…. பயப்படாம வா… உனக்கு ஒன்னும் ஆகாது…..”
“இளா….”, ஆதி அழைத்தான்.
சிம்மேஸன் உருமவும், அர்ஜுன் மண்டியிட்டு ஆதியை வணங்கி அருகில் சென்று நின்றான்.
“அவங்கள இறங்க சொல்லு…. இனி யானை மேல போறது கஷ்டம்… “
“ஏற்கனவே அங்க நானிலன் மயங்கிட்டான் ஆதி…. இந்த இருட்டுல நடந்து போறது யோசனை தான்….”
“நடந்து போகனும்னு நான் சொல்லவே இல்ல … அவங்கள இறங்க சொல்லு….”, என கூறி அனுப்பினான்.
“எல்லாரும் கீழ இறங்குங்க…”, யானைகளுக்கு அவன் கட்டளையிடவும் அது துதிக்கையினால் அவர்களை கீழே இறக்கி நிற்க வைத்தது.
நானிலனை கீழே விட மட்டும் அந்த யானை அத்தனை விளையாட்டு காட்டி, அவனை தொப்பென கீழே போட்டது.
அவன் பயந்து அலறி யானையை கெட்டியாக பிடித்துக் கொண்டான். கண்கள் மூடி கொண்டு அதன் துதிக்கையை பிடித்துக் கொண்டிருந்தவனை, யானை பிளிறல் செய்து தன் துதிக்கையை விடுவித்துக் கொண்டது.
அர்ஜுன் சிரிப்புடன் அந்த யானையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். நானிலனை தூக்கி கொண்டு முன்னே சென்று நிறுத்த, சிம்மேசன் நானிலன் அருகில் வந்து உறும, உடல் நடுங்கிக் கொண்டு நின்றான்.
அச்சமயம் அடர்ந்த பிடரிகள் கொண்ட சிங்கங்கள் அங்கே வந்து சேர்ந்தன. நபருக்கு ஒரு சிங்கத்தின் மேல் ஏறி கொள்ளச் சொல்ல, அனைவரும் பயத்துடன் ஏறவே தயங்கி நின்றனர்.
நுவலி முதலில் தான் கொஞ்சிய சிங்கத்தின் மேலே ஏறிக் கொள்ள, நாச்சியார் வல்லகியின் கையை பிடித்தபடி ஒரு சிங்கத்தின் மேலே அமர்ந்தாள்.
கண்மயாவும், நானிலனும் தான் அதிகம் பயந்து வெடவெடத்து நின்று கொண்டிருந்தனர்.
அர்ஜுன் அவர்களை சமாதானம் செய்தபடி ஏறச் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆதி அவர்களின் பயம் கண்டு, “மாயா… நிலன்… நீங்க ரெண்டு பேரும் ஒரு பெரிய விஷயத்த செய்ய வந்திருக்கீங்க… இங்க இருக்க சின்ன எறும்பு கூட உங்கள காயப்படுத்தாது. பயப்படாம ஏறுங்க….”, என அவர்களை ஏற்றி அமர்வைத்தான்.
“எல்லாரும் பிடரிய கெட்டியா பிடிச்சிக்கணும்… வேகமா இந்த இடத்த நாம தாண்டியாகனும்…. அர்ஜுன் நீ நாகத்து மேல ஏறிக்க….”, என கூறிவிட்டு சிம்மேசன் மேலே அமர்ந்து கொண்டான்.
அர்ஜுன் அந்த கருநாகத்தை வணங்கி அதன் உடலில் ஏறிக் கொள்ள, நாகம் சீறிக் கொண்டு தரையில் இறங்கி வேகமாக ஊர்ந்து சென்றது.
நாகத்தை தொடர்ந்து ஆதி, நுவலி, கண்மயா, நாச்சி, நானிலன், வல்லகி என வரிசையாக பின்னே சிங்கத்தில் தொடர்ந்தனர். அந்த சிங்கங்களின் ஓடும் வேகம் கண்டு ஆதியை தவிர மற்றவர்கள் பயம் கொண்டு கெட்டியாக பிடரியை பிடித்துக் கொண்டு கண்மூடி படுத்து விட்டனர்.
ஆதியின் மனம் தான் பலதரப்பட்ட சிந்தனைகளை நினைவுப்படுத்தி கொண்டு சென்றது. மற்ற சிங்கங்களை விட சிம்மேசனின் வேகமும், தாவும் தூரமும், பல அடிகள் முன்னே சென்றது. நாகம் தன்னை பற்றிக் கொண்டு வரும் அர்ஜுனை தன் உடல் பின்னி அவனை கெட்டியாக பற்றிக் கொள்ள உதவியது. உடல் பின்னிய நிலையில் அத்தனை வேகமாக அத்தனை கனமான சரீரத்தை இயக்கும் அதன் திறம் கண்டு அர்ஜுன் மலைத்து போனான்.
அதனுடன் பேச ஆவல் கொண்டு அர்ஜுன் பாம்பு பாசையில் பேச ஆரம்பித்தான்.
“எப்படி உடம்பு பின்னிட்டு வேகமா போறீங்க? நான் உங்க கழுத்த கெட்டியா பிடிச்சிக்கறேன் .. கீழ விழமாட்டேன்…..”
“அர்ஜுனா…. உனை காப்பது எங்கள் கடமை… எங்களின் காவலனாக பிறந்தவன் நீ… உன்னை பத்திரமாக பைரவகாட்டிற்கு அனுப்பும் வரையிலும் அந்த பொறுப்பு எங்களுக்கு உண்டு…. இன்னும் கெட்டியாக பற்றிக்கொள்…. இப்போது பள்ளத்தை தாண்ட வேண்டும்…”, என கூறி வேகமாக உடலை உந்தி மேலே எழுந்து ஒரே தாவலில் அந்த பெரிய பள்ளத்தாக்கை தாண்டியது.
சிங்கங்களும் அங்கிருந்த பாறையின் மேலே ஏறி பள்ளத்தைத் தாவித் தாண்டியது. அதில் அனைவரும் பயந்து இன்னும் சிங்கத்தின் உடலோடு ஒட்டி கொண்டனர். வல்லகி முன்பே நானிலனை சிங்கத்தோடு கயிறு கொண்டு பிணைத்துவிட்டாள். கண்மயாவும், நாச்சியாரும் பிடரியை தாண்டி சிங்கத்தின் கழுத்தினை இறுக்கமாக பிடித்துக் கொண்டனர்.
நுவலி சிறு குழந்தையை போல கத்திக் கொண்டு வந்தாள்.
ஆதி ஒருவிதமான ஆதுர பார்வையுடன் அவர்களை பார்த்துக் கொண்டு கடைசியாக வந்தான். சிம்மேசன் அனைவரின் பாதுகாப்பு பொறுப்பும் தன்னுடையது என்பதை போல சுற்றிலும் கவனித்துக் கொண்டே வந்தது.
கால் நாழிகையில் அந்த இருண்ட வனத்தை கடந்து எல்லையில் வந்து நின்றார்கள். நான்காவது பகுதியை கடந்து அந்த தீவின் வடகிழக்கு மூலையின் எல்லைத் தொடங்கும் இடத்திற்கு வந்து நின்றனர்.
அங்கே……