63 – ருத்ராதித்யன்
“என்னடா எல்லாரும் கத்தறீங்க?”, சிங்கமாதேவி வெளியே வந்து கேட்டாள்.
“கல்யாண ஏற்பாடு சீக்கிரம் நடக்கட்டும் சிங்கம்மா…. அம்மை கிளம்ப தயாராகிட்டாங்க…”, ஆச்சி வனத்தின் சத்தங்களைக் கூர்ந்துக் கவனித்தபடிக் கூறினார்.
“சிலை எடுத்துட்டாங்களா ஆச்சி?”, ஆர்வமாகக் கேட்டாள் .
“இல்ல… சிம்மேசன் அனுமதி கெடச்சிரிச்சி…. இனி பெருசா தடையிருக்காது…. “, எனக் கூறியவர் தரையில் விழுந்து வனதேவி குகை இருக்கும் திசைப் பார்த்துக் கும்பிட்டார்.
“2 நாள்ல அமாவாசை வருது… “
“அதுக்குள்ள ஏற்பாடு முடியணும்… அவன் இங்க வந்துட்டு போயிட்டான்… அடுத்து அவன் இங்க வரப்போ உங்க மனசு வேந்தனோட சேர்ந்து இருக்கணும்…. “
“உங்க வேந்தன் மனசு என்னை தேடுமா?”, கேலியுடன் கேட்டாள்.
“வேந்தன் காத்திருந்தது உங்களுக்காக தான் தேவி… கடந்த சில பிறவிகளா நான் தான் உங்க ரெண்டு பேரையும் சேரவிடாமல் பிரிச்சி வச்சேன்.. இந்த முறை நானே சேர்த்து வைக்கும் கருவியா இருக்கேன்…. காலம் கைகூடி வந்தா யாரோட சதியும் எடுபடாது…”
“சிங்கத்துரியன் பத்தின கவலை இப்போ இல்லையா?”
“என்னை சோதிக்க நினைக்கிறீங்களா தேவி? அவன் நினைவு இல்லாம இல்ல, ஆனால் நான் செய்த பாவம் அவனை என்னைவிட்டு பிரிச்சி நிறுத்தி இருக்குன்னு நான் உணர்ந்துட்டேன்…”, தலைக் குனிந்து ஆச்சி கூறியதும் சிங்கமாதேவி அவரை ஆதுரமாக அணைத்து ஆசுவாசப்படுத்தினார்.
பைரவன் தீரனோடு காட்டில் நடந்துக் கொண்டிருந்தான். யாத்ரா மகதனோடு ஒருபக்கம் சுற்றிக்கொண்டிருந்தாள்.
தாஸ் நிற்கவைத்திருந்த ஆட்கள் எல்லாம் அவளைக் கண்டு சற்று பயந்தாலும் மனதில் கவலையுடன் அவளைப் பார்த்தனர்.
ஜான் அச்சமயம் அவளைத் தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தான்.
“பூவழகி…..”, தலுதலுக்க அழைத்தான்.
மகதன் அவனைக் கண்டு உறுமவும், “மகதா இவன் நம்ம ஆளு தான்…. நீ சுத்திட்டு வா…”, என மகதனை அனுப்பிவிட்டு ஜான் அருகில் சென்றாள்.
8 அடிக்கு மேல் வளர்ந்து நிற்கும் யாத்ராவைக் கண்டு ஜான் மனம் வெகுவாக கவலைக் கொண்டது.
“என்ன ஜான்…. நான் சொன்னது செஞ்சிட்டியா? பரிதி என்ன சொன்னா?”, என அவனைத் தனியாக அழைத்து சென்றாள்.
அவளின் கூரிய நகம் பட்டு ஜான் கைகளில் இரத்தம் வழிந்தது.
“சாரி ஜான்.. அழுத்தி பிடிச்சிட்டேன் போல இரத்தம் வருது.. வா கைய கழுவு… “, என அவனை மகதனின் குகை அருகே அழைத்துச் சென்று தண்ணீரில் காயம் கழுவி, அங்கிருந்த பச்சிலையை எடுத்து காயத்தின் மேலே பிழிந்து விட்டாள்.
“பூவழகி…. நீ பழையபடி மாறுவ தானே?”, கண்களில் வழியும் நீருடன் கேட்டான்.
“தெரியல ஜான்…. ஆனால் முன்ன விட இப்போ ரொம்ப பலமா உணர்றேன்… பறவைங்க பாஷை, மிருக பாஷை எல்லாம் தெரியுது… நிறைய இந்த பூமியொட அதிர்வுகளை புரிஞ்சிக்க முடியுது… மனுஷனோட இதயத்துடிப்பு வரைக்கும் எனக்கு துல்லியமா கேட்குது… இதுலாம் சாதாரண மனுக்ஷபிறவியா இருந்தா தெரியாது தானே?”, வருத்தம் கலந்த சிரிப்பு அவள் இதழ்களில் தெரிந்தது.
“நீ ஏன் என்னை விட்டுட்டு டெல்லி போன?”, நடந்து முடிந்த விசயங்களை அவனால் இன்னுமும் ஜீரணிக்க முடியவில்லை.
“உன்னையும் எங்கள போல மாத்தி இருப்பாங்க சிக்கியிருந்தா… இன்னும் நீ உயரமா வளர்ந்திருப்ப தான்.. ஆனாலும் என் செழியன விட அதிகமா இருந்திருக்காது….”
“அர்ஜுன் சார் எப்படி இருக்காரு பூவழகி?”
“அவனும் நானும் நல்லா தான் இருக்கோம்… அந்த ஆச்சியும், கண்மயாவும் தான் எதேதோ செஞ்சி இப்போ நாங்க நடமாடிட்டு இருக்கோம்…. ஆனாலும் கொஞ்சம் சிக்கல் இருக்கு தான் நாங்க இப்படி மாறினதுல…. பாப்போம்.. காலம் இன்னும் என்ன என்ன அதிசயங்களை வச்சிருக்குன்னு.. சரி நீ போன விசயம் என்னாச்சி? சீனியர் எப்படி இருக்காரு?”
“பரிதி மேடம் நிறைய இடத்தில உதவி கேட்டு இருக்காங்க…. இந்த மிருகவதை கேஸ் நீ சொல்லாம முடிக்க கூடாதுன்னு நெனைக்கறாங்க, ஆனா அது உடனே ஆயுஷ் வச்சி முடிக்கணும்ன்னு பிரஷர் வருது.. .செந்தில் சார் சஸ்பென்ஷன் வாங்கிட்டு வந்திருக்காரு… அவர் மனைவி குழந்தைகள் எல்லாம் பாதுகாப்பா ஒரு இடத்தில உக்கார வச்சிட்டோம்… பரத் அந்த லேப்ல கிடச்ச சாம்பிள் வச்சி எந்த எந்த உயிரினம் எல்லாம் மறுபடியும் எழுப்பப்பட்டு இருக்குன்னு ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டு இருக்காரு… நந்தன் கால் இன்னும் குணமாகல அதனால் லீவுல நரேன் சார் வீட்ல இருக்காரு… பாலாஜி சிஸ்டம் கன்ட்ரோல்ல இருக்காரு… கதிர் சர்வேஸ்வரன் சார் கூட இன்னும் ஹாஸ்பிடலில் தான் இருக்காரு.. சர்வேஸ்வரன் சாரோட பையன் தான் இறந்து போனது… அருணாச்சலப் பிரதேசம்ல நந்தன் சார் பார்த்த டெட் பாடி…”
“அவர் பொண்ணு எங்க இருக்கு?”
“அது இன்னும் தெரியல… தேடிட்டு இருக்கோம்…. சர்வேஸ்வரன் சார்கிட்ட இப்போதிக்கு எதுவும் சொல்ல வேணாம்… அமாவாசை முடிஞ்சி ரெண்டு நாள்ல கல்யாணம். அது முடிஞ்சி பஞ்சமி அன்னிக்கு நாங்க எல்லாரும் ஒரு இடத்துக்கு போகணும் .. அங்க போயிட்டு வந்த அப்றம் இதபத்தி மேற்கொண்டு பேசிக்கலாம்…. அந்த ராஜ் கர்ணாவுக்கு எங்கெங்க கனெக்சன் இருக்குன்னு பாக்க சொல்லு… ருதஜித் மேல இருக்க கேஸ் எல்லாம் எடுக்க சொல்லு… இன்னும் 10 நாள்ல அவனுங்க ரெண்டு பேரும் நம்ம கைக்குள்ள இருக்கணும்…. வல்லகி நாச்சியார் பத்தி விசாரிச்சியா?”
“விசாரிச்சேன்… அந்த பொண்ணுங்க சொன்னது நிஜம் தான்னு முன்னேயே ஆருத்ரா மேடம் சரி பாத்துட்டு தான் அவங்கள இங்க வரவச்சாங்க… வல்லகிக்காக நிறைய கும்பல் சுத்திட்டு இருக்கு.. அந்த பொண்ணுக்கு இருக்க பவர் பத்தி தெரிஞ்சி ஆராய்ச்சி பண்ணவும், அந்த பொண்ண தங்களோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துக்கவும் நிறைய பேர் கிளம்பிட்டு இருக்காங்க….”
“மம்… அந்த பொண்ணயும் பாதுகாப்பா வைக்கணும்.. ஆனா அடச்சி வைக்க முடியாது…. அதுக்கு நாம வேற வழி யோசிக்கணும் ஜான்…”
“உன்னையும் அர்ஜுன் சாரையும் தேடி கூட ஆளுங்க வராங்க பூவழகி… உங்களையும் ஆராய்ச்சி பண்ணி உங்கள மாதிரி இன்னும் நிறைய பேர மாத்தனும்ன்னு நெனைக்கராங்க….”
“மனுஷன் எவ்ளோ சல்லித்தனமா இருக்கான்ல…. சுயநலத்துக்காக ஒருத்தன் இயற்கைய அழிக்க வரான்.. இன்னும் சிலர் மத்தவங்களை மிருக-கலவையா மாத்த நினைச்சி தேடிட்டு வராங்க… இவங்களுக்கு எல்லாம் தனியா நாம தண்டனை இனிமே யோசிக்கணும் ஜான்.. இப்போ குடுக்கறது எல்லாம் ஒன்னுமே இல்ல இவனுங்க குரூர எண்ணங்களுக்கு முன்னாடி…..”, யாத்ரா கோபத்துடன் தரை உதைத்து பாறையில் குத்த, பாறை தான் சிறு சிறு கற்களாக சிதறியது.
அவளின் பலம் கண்ட ஜான் அரண்டு தான் போனான் அந்த சில நொடிகளில்… அவள் கண்கள் கோபத்தில் இலைபச்சை நிறத்தில் மின்னுவது கண்டு வசியமும் ஏற்பட்டு அப்படியே நின்றான்.
“ஜான்…. மேகமலைல பாதுகாப்பு எப்பவும் டைட் அஹ் இருக்கணும்… அதிக பச்சம் 10 நாள்ல நடக்கற மர்மம் தெரிஞ்சிடும்…”
“10 நாள்ல நீயும் பழையபடி மாறிடுவியா பூவழகி?”, ஆவலுடன் கேட்டான்.
“எனக்கு தெரியல ஜான்…. ஆனா எங்க வாழ்க்கை முன்ன மாதிரி மாறுமா தெரியல…. நாங்களும் மாறுவோமான்னு தெரியல… எப்படியும் அடுத்த கட்டத்துக்கு காலம் போய் தானே தீரணும்.. பாத்துக்கலாம்…. நீ கிளம்பு…. “, என சில விசயங்களை காதில் கூறி அவனை அனுப்பிவிட்டு மகதனைத் தேடி காட்டிற்குள் நடந்தாள்.
இரவு முழுவதும் யாத்ரா காட்டை வலம் வந்து கொண்டிருந்தாள். ஆதி ஆருத்ரா திருமணம் வரையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு பின் இங்கிருக்கும் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். அந்த கொடூர எண்ணம் கொண்ட ரிஷித் கைகளில் இனியும் எந்த உயிரினமும் சிக்கி அவஸ்தை படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
ரிஷித் ராஜ் கர்ணாவிடம் கண்டபடி கத்திக் கொண்டிருந்தான். ஆதி சென்ற இடம் எதுவென அவனால் இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவனிடம் இருக்கும் சுவடிகளில் அந்த இடம் பற்றிய எந்த விவரமும் இல்லை. அவனின் இத்தனை கால முயற்சி அந்த சிலை வெளி வந்தால் தூசியாக போய்விடும். அதனை நடக்க விடக்கூடாது என்று வெறி பிடித்தவன் போல கையில் கிடைப்பவர்களை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தான்.
விநாயக் அவனின் மூர்க்கம் கண்டு மனதில் திடுக்கிட்டு வெளியே செல்வது போல சென்றுவிட்டு ரிஷித் அறையில் வந்து மறைந்து நின்றான்.
அவன் இவனிடம் வந்த நாள் முதல் ரிஷித் எதைத் தேடுகிறான் என்று இன்னும் அவனுக்கு முழுதாக புரியவில்லை. ஆனால் உலகம் முழுக்க இவர்களுக்கு ஆட்களும், இருட்டு உலகின் பெரிய வேலைகளில் இவர்களின் கைகளும் இருக்கிறது என்று அவனுக்கு புரிந்தது..
உலகின் எந்த நாட்டின் சட்டமும் இவர்களின் ஆராய்ச்சிக்கு அனுமதி தராது அப்படியான கொடூரமான விசயங்களை ரிஷித் செய்துக் கொண்டிருக்கிறான்.
இவனின் இயற்கையை அழிக்கும் எண்ணம் மட்டும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. அன்று ராஜ்கர்ணாவிடம் இவன் பிறவிகள் பற்றி பேசியதும் இவன் கேட்டதினால், அறிவியல் தாண்டிய மர்மமான விசயங்களும் இதில் உள்ளது என்றும் புரிந்தது.
இன்று ஏதோ ஒரு தீவினை இத்தனை முக்கியமாக தேடும் அளவிற்கு என்ன அங்கே இருக்கிறது என்ற ஆவல் இவனுக்கும் பிறந்தது.
அதிநவீன சேட்டிலைட் இணைந்த கம்யூட்டர் மூலமாக ஆதி சென்ற தடத்தினை உணர்ந்து அவன் சென்ற இடத்தினைப் பார்த்தால் அங்கே கடல் நீர் மட்டுமே இருப்பதாகக் காட்டியது. ஆனால் ஆதி அந்த இடத்தை தாண்டி எங்கும் செல்லவில்லை என்பதும் நன்றாக தெரிந்தது.
கடல் நீர் சூழ்ந்த இடத்தில் ஆதி என்ன செய்கிறான் ? அவனுடன் சென்றவர்கள் என்ன செய்கிறார்கள்?
சிம்மேசன் கர்ஜனையில் மொத்த இடமும் பதற்றம் கொண்டு தீவின் நடுவே வந்து நின்றது. ஆனால் எந்த மிருகமும் தனக்கு இடப்பட்ட எல்லையினை தாண்டி வரவில்லை. இன்னும் 2 மணிநேரத்தில் சூரியன் உதித்துவிடுவான். அதற்குள் அந்த தீவின் வடகிழக்கு பகுதிக்கு சென்று சேரவேண்டும்.
சிம்மேசன் ஆதியினை தன் மேல் அமர்த்திக் கொள்ள மற்றவர்கள் யானையின் மேல் ஏறிக் கொண்டனர்.
மூன்றாம் பகுதி முழுக்க சிங்கமும் புலிகளும் தான் வித விதமாக சுற்றித் திரிந்தன. அவைகளின் உயரமும், அகலமும் பார்த்தே நானிலன் நடுங்கிக் கொண்டு வல்லகியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
கண்மயா பயமும் ஆச்சர்யமும் கொண்ட விழிகளில், இத்தனை ஆண்டுகளாக அழிந்து போனதாக சொல்லப்பட்ட பல மிருக வகைகள் இங்கே ஜீவித்திருப்பதுக்கண்டு ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நாச்சியார் தன் கையில் இருந்த வரைபடத்தை வைத்து செல்லும் வழியை சரிபார்த்துக் கொண்டிருந்தாள். நுவலியோ விடுமுறைக்கு வந்த குழந்தையைப் போல அத்தனை குஷியாக சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
அர்ஜுனும், வல்லகியும் தான் அடுத்து என்ன இருக்கும் என்று யோசனையுடன் சென்றுக் கொண்டிருந்தனர்.
மூன்றாம் பகுதியின் முடிவில் வந்து நின்று சிம்மேசன் கர்ஜிக்க, அடர்ந்த மரங்களின் உள்ளிருந்து ஓர் உருவம் வேகமாக இவர்களை நோக்கி வந்தது.
60 அடி உடலை 4 மரங்களில் சுற்றிக் கொண்டு தலையை மட்டும் இவர்கள் நிற்கும் பக்கமாக காட்டியது ஓர் கருநாகம்…….