7 – வலுசாறு இடையினில்
ஒரு வாரம் கடந்த நிலையில் ஏகாம்பரம் ஒரு வழியாக பணத்தைப் பிறட்டி தணிகாச்சலம் கைகளில் கொடுத்துவிட்டு இல்லம் வந்தார்.
“சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா ?”, மனைவி உள்ளிருந்து கேட்டார்.
“எடுத்துவை .. “, எனக் கூறிவிட்டு முகம் கழுவச் சென்றார்.
தட்டில் சாதம் வைத்துக்கொண்டு, “ஏங்க இருந்த பணத்தை கொண்டு போய் கொடுத்துட்டீங்க .. திடீர்னு நம்ம பொண்ணுக்கு வரன் கூடி வந்துட்டா என்னங்க பண்றது ?”, எனக் கேட்டார் காமாட்சி.
“அந்த சனியன் நம்மல விட்டு போறதுக்கு எப்டி வேணா பணத்த பொறட்டிக்கலாம் .. அவர் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண வேணும்-ன்னு சொல்றபோ நான் குடுக்க முடியாதுன்னு சொல்லமுடியாது.. பணத்த பத்தி உனக்கு என்ன கவல ? வீட்ட மட்டும் நீ பாரு .. இல்லைன்னு சொன்னா உங்கப்பன் வீட்ல இருந்து கோடி கோடியா கொட்டிட்டு தான் வேற வேல பாப்பீங்களோ?”, எரிச்சலை மனைவியின் தலையில் கொட்டிவிட்டு எழுந்தார்.
“இல்ல.. அந்த ஜோசியர் சொன்ன மாதிரி பிரச்சனை வருது.. ஏதாவது நமக்கு பரிகாரம் பண்ணிக்கலாமாங்க ?”, காதில் கொட்டப்பட்ட வார்தைகளை கழுத்தின் வழி விழுங்கிவிட்டு மீண்டும் கேட்டார்.
“நானும் யோசிச்சிட்டு தான் இருக்கேன்.. அந்த ஆளு சொன்ன மாறி பண நெருக்கடி தான் மொத வருது.. அந்த கெரகத்துக்கு என் கௌரவம் கொறையாம செஞ்சி வைக்கணும்-ன்னு பாக்கறேன்.. அது என்னை தெருவுல தள்ளாம விடாது போல “, சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடிக் கூறினார்.
“நாளைக்கு போய் கேட்டுட்டு வரலாமாங்க ?”
“நாளைக்கு கடைல வேலை இருக்கு .. புதுசரக்கு வருது.. ரெண்டு நாள் கழிச்சி பாக்கலாம் “, என உறங்கச் சென்றுவிட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து, “இன்னிக்கி ஒரு ஆளு வீட்டுக்கு வந்தாருங்க .. பக்கத்து ஊராம் .. நம்ம பொண்ணு ஜாதகம் குடுத்தா பாக்கறேன்னு சொன்னாரு .. “, தயங்கித் தயங்கி கூறினார்.
“யாரு ? பேரு ஏதாவது சொன்னானா ?”, உணவுண்டபடிக் கேட்டார்.
“பழனி-ன்னு சொன்னாரு “
“மேலூர் பழனியா ?”, ஏகாம்பரம் யோசனையுடன் கேட்டார்.
“ஆமாங்க “
“அந்த ஊருக்கும் கிழக்குபுரிகாரணுங்களுக்கும் தான் எப்போ பாரு பிரச்சனை வருது .. அந்த ரெண்டு ஊரும் நமக்கு வேணாம் .. “
“பொண்ணு பக்கத்துலயே குடுத்தா நமக்கும் வசதியா இருக்கும்-ங்க .. நம்ம தம்பி ராஜானுக்கும் சௌகரியமா இருக்கும் “
“நமக்கு தோது வந்தா பாக்கலாம் காமாட்சி .. சீக்கிரம் கெளம்பு போய் அந்த ஜோசியர பாத்துட்டு வரலாம் “, எனக் கூறிவிட்டுத் தயாராகச் சென்றார்.
இருவரும் சென்ற நேரம் அங்கே ஏகாம்பரத்திடம் பணம் வாங்கியிருந்த இரத்தினம் நின்றிருந்தார்.
“வாங்க ஏகாம்பரம் .. என்ன திடீருன்னு இந்த பக்கம் ?”
“கிழக்குபுரிகாரங்க மட்டும் தான் இங்க வரணுமா என்ன ?”, ஏகாம்பரம் உள்ளுக்குள் யோசனையும், வெளியே சிரிப்புமாகக் கேட்டார்.
“வடக்கூர்காரவங்களுக்கு இல்லாதது எதுவும் யாருக்கும் இல்லயே .. நீங்க ஜோசியர பாக்க வந்தது தான் ஆச்சரியமா இருக்கு “, தன் கேள்வியில் மீண்டும் நின்றார்.
“பொண்ணுக்கு வரன் பாக்க சொல்லி இவருகிட்ட தான் குடுத்து இருக்கேன் இரத்தினம்.. அதான் ஒரு எட்டு பாக்கலாம்னு வந்தேன்”
“அப்படியா .. ரொம்ப சந்தோஷம் .. நானும் என் பையனுக்கு இங்க தான் குடுத்து இருக்கேன் .. வாங்களேன் பொருத்தம் இருக்கான்னு பாப்போம் “, இரத்தினம் சிரித்தபடி உள்ளே வந்தார்.
ஏகாம்பரம் ஒரு பெருமூச்சுடன் பின்னே நடந்தார்.
“வாங்க வாங்க .. கிழக்கும் வடக்கும் சேர்ந்து வந்து இருக்கீங்க .. “, ஜோசியர் நையாண்டியுடன் வரவேற்றார்.
“என்ன ஜோசியரே .. எந்த திக்குல இருந்தாலும் உங்கள தேடி வரோம்ன்னு நக்கல் பண்றீங்களா ?”, இரத்தினம் சற்றே குரல் உயர்த்திக் கேட்டார்.
“ கிழக்குபுரி காரங்க கிட்ட நையாண்டி பண்ணிட்டு நான் இங்க இருக்க முடியுமா என்ன ? ரெண்டு பேரும் ஒண்ணா வந்து இருக்கீங்கன்னு தான் கேட்டேன் “
“நம்ம ஏகாம்பரம் பொண்ணு ஜாதகம் உங்ககிட்ட இருக்காமே.. என் பையனுக்கு பொருத்தம் வருதான்னு பாருங்க “, இரத்தினம் பேசியபடி கீழே அமர்ந்தார்.
ஜோசியர் ஒரு நொடி யோசித்து, “பாத்துடலாம் .. ஏகாம்பரம் ஐயா வாங்க .. வாங்க மா .. “, என அனைவரையும் வரவேற்று அமரவைத்தார்.
“பையன் போட்டோ இந்தாங்க ஜோசியரே “
“நல்லது.. பையன் கல்யாணம் பண்ண சரின்னு சொல்லிட்டானா ?”, ஜோசியர் அவர் மகன் சயந்தன் ஜாதகத்தைத் தேடியபடிக் கேட்டார்.
“அதுலாம் சொல்லிட்டான் .. நீங்க பொருத்தம் பாருங்க”, என அந்த பேச்சை திசைமாற்றினார்.
“இதோ ரெண்டு ஜாதகமும் எடுத்து வச்சிட்டு இருக்கேன் “, என எடுத்து இறைவன் முன்னிலையில் வைத்து மனதாரக் கும்பிட்டு எடுத்தார்.
சிறிது நேரம் பஞ்சாங்கம் வைத்து, சில விஷயங்களைக் குறித்தவர், அவர்கள் மூவரையும் பார்த்தார்.
“இந்த ரெண்டு ஜாதகமும் பொருந்தல.. நீங்க ரெண்டு பேரும் வேற பாக்கலாம் “, என ஒரே வரியில் முடித்துவிட்டார்.
“ஏன் ? என்ன சரி வரல .. “, இரத்தினம் அவசரமாகக் கேட்டார்.
“ரெண்டு பேருக்கும் சரி வராது… அப்டி வந்தா புருஷன் பொண்டாட்டி பிரிஞ்சி இருப்பாங்க .. “
“அய்யய்யோ .. அப்போ வேணாம் ஜோசியரே “, என காமாட்சி பதறிக் கூறினார்.
“யோவ் ஜோசியரே .. என்ன சொல்ற ? ரெண்டு குடும்பமும் பல வருஷ பழக்கம் உள்ளவங்க .. இரத்தினம் என் ஸ்நேகிதன் .. நல்ல வசதி, நல்ல பேர் உள்ள குடும்பம்.. ஏன் சரி வராது? பொட்ட கழுதை எங்கள மீறி எதுவும் பண்ண முடியாது “, ஏகாம்பரம் கோபமாகக் கேட்டார்.
“ஏகாம்பரம் ஐயா .. இந்த ஜாதகம் வெறும் பேப்பர் இல்ல.. இது எல்லாமே அறிவியல் தான்.. அதுல ஒரு துளி எனக்கு புரிஞ்சதால தான் சொல்றேன்.. நீங்க ஜாதகமே பாக்காம கூட கல்யாணம் பண்ணலாம் .. ஆனா அத பாத்து, சரி வராதுன்னு தெரிஞ்சப்பறம் பண்றது தற்கொலைக்கு சமம் .. “, ஜோசியர் பொருமையாகவே பதில் கொடுத்தார்.
“யாருக்கு இப்போ சரி வராது ?”, இரத்தினம் கேட்டார்.
“ரெண்டு பேருக்குமே சரி வராது இரத்தினமய்யா … “
“ஜோசியரே .. எனக்கு பொண்ண நல்லா தெரியும்.. வீட்ட எதிர்த்து எதுவும் பண்ற அளவுக்கு ஏகாம்பரம் வளர்ப்பு இருக்காது.. என் பையன வெளி நாட்டுல இருந்து இங்க வரவைக்கறேன்.. ஏகாம்பரம் .. என்னைய பத்தியும், என் குடும்பத்த பத்தியும் உனக்கு நல்லா தெரியும்.. என் பையன் படிச்சிட்டு வெளிநாட்டுல வேலைல இருக்கான்.. மாசம் லட்ச கணக்குல சம்பாதிக்கறான்.. உனக்கு சம்மதமா சொல்லு .. நம்ம புள்ளைங்க நம்ம கண்ணு முன்னாடியே இருக்கும்”, இரத்தினம் பட்டென கேட்டதும் ஏகாம்பரம் யோசனையுடன் காமாட்சியைப் பார்த்தார்.
“நான் வீட்டுக்கு போய் பேசிட்டு சொல்றேன் இரத்தினம்.. தெரிஞ்ச ஆளுங்களா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான் .. வேற விஷயத்த ஜோசியர் கிட்ட பேசணும் .. நீ பேசரத பேசு நான் வெளிய இருக்கேன் “, எனக் கூறிவிட்டு எழுந்து வெளியே தள்ளிநின்றார்.
“யோவ் ஜோசியரே.. அவரு கிட்ட சரி-ன்னு சொல்ல வைக்கற மாதிரி பேசு.. ஆளு நல்ல பணம் உள்ளவன் .. பொண்ணுக்கு எழுவது சவரன் வாங்கி இருக்கான்னு கேள்வி பட்டேன்.. பொண்ணும் அம்சமா இருக்கு.. இத விட்டா என் பையன் அந்த வெளிநாட்ட விட்டுவர முடியாம போயிடும்.. உன்ன நல்லா கவனிக்கறேன் .. வரேன் .. “
“இரத்தினம் ஐயா .. நான் என் தொழிலுக்கு துரோகம் பண்ணமாட்டேன்.. ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க எந்த சாத்தியமும் இல்ல.. என்னால எதுவும் யாருக்கும் சாதகமா பேச முடியாது .. “, ஜோசியர் நெற்றியில் அடித்தது போலக் கூறிவிட்டார்.
இரத்தினம் ஜோசியரை யோசனையுடன் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து கையில் நங்கையின் புகைப்படத்துடன் சென்றார்.
உள்ளே வந்த ஏகாம்பரம், “ஜோசியரே .. நீ சொன்ன மாறி எனக்கு பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கு.. பண நெருக்கடி தான் அதிகமா வருது.. அந்த சனியன சீக்கிரம் வீட்டவிட்டு ஒழிக்கணும்.. இந்த இரத்தினம் பையனுக்கு குடுத்தா என்ன ?”, எரிச்சலுடன் தன் கேள்விகளைக் கேட்டார்.
“ஐயா அந்த பையன் நம்ம பொண்ணுக்கு அமையாதுங்க .. நம்ம கொஞ்சம் பொறுமையா நல்ல இடமா பாக்கலாம் .. “
“அப்போ எனக்கு பிரச்சனை வராம இருக்க ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லு”
“துர்கைக்கு செவ்வாய்\வெள்ளி பொண்ண வெளக்கு போட சொல்லுங்க.. சீக்கிரமே நல்லது நடக்கும்”
“எனக்கு பிரச்சனை வராம இருக்க ஏதாவது சொல்லுய்யா .. அந்த சனியன் நல்லா தானே இருக்கு வீட்ல”
“ஐயா.. பொம்பள புள்ளைய இப்பிடி சொல்லாதீங்க.. அவங்க நல்லா இருந்தா தான் எல்லாமே நல்லா இருக்கும்.. உங்க பொண்ணுதான் உங்கள காப்பாத்தும்..”
“சிங்க குட்டியாட்டம் என் பையன் இருக்கான்யா.. அவன் தான் என்னை வச்சு தாங்குவான் .. பொட்டக்கழுத கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கப்பறம் மறுபடியும் நான் ஏன் வீட்டுகுள்ள சேர்த்த போறேன் ? எனக்கு பிரச்சனை வராம இருக்க என் பொண்டாட்டி ஏதாவது பண்ணனுமா சொல்லு “
ஏகாம்பரத்தின் பேச்சில் ஜோசியர் மனதில் வெறுப்புடன் சிரித்துக்கொண்டு, “இவங்களும் பொண்ணு கூட போய் 5 எண்ணெய் கலந்த வெளக்கு ஏத்தலாம் .. “, என கூறிவிட்டு நங்கைக்கு பொருந்தும் சில மாப்பிள்ளை ஜாதகங்களை எடுத்துக்கொடுத்தார்.
“இதுல எது பொருந்தும் ஜோசியரே ?”, அத்தனை நேரம் அமைதியாக இருந்த காமாட்சி இப்போது தான் வாய் திறந்தார்.
“இது எல்லாமே பொருத்தம் இருக்கற வரன்கள் தான் மா .. உங்களுக்கு இந்த வரன்ல எது தோது படுதோ அத மேற்கொண்டு பேசிக்கலாம் மா”
“சரி .. நான் இதுலாம் பாத்துட்டு வரேன் ஜோசியரே “, எனக் கூறிவிட்டு சில நூறு ரூபாய் நோட்டுகளை அவர் நோட்டில் வைத்தார் ஏகாம்பரம்.
“இருக்கட்டும் ஏகாம்பரம் ஐயா.. பொண்ணுக்கு நல்ல பையனா முடிச்சிட்டு வாங்கிக்கறேன் “
“இப்போ பணம் உனக்கு குடுக்கற அளவுக்கு இருக்கு யா .. வரேன் “, என ரூபாய்யை திணித்துவிட்டு இருவரும் கிளம்பினர்.