71 – ருத்ராதித்யன்
அரண்மனையில் இருந்து கிளம்பிய நரசிம்மன் முதலில் வடக்கு பக்கமாக சென்றான். மிகவும் அடர்ந்த காடுகள் கொண்ட வடக்கு பக்கத்தில் பல அபாயகரமான விலங்குகள் வாழ்கின்றன.
வடக்கில் இருக்கும் கூட்டப்பாறை என்ற இடத்தில் மகர வகை யாளிகள் வாழ்வதாக சிலர் கூறுகிறார்கள். நரசிம்மன் அந்த யாளியை காணும் ஆவலோடு மகதனை தனக்கு முன்னால் செல்லவிட்டு பின்னால் வந்தான்.
21 நாட்களுக்குள் அவன் அனைத்து தேவிகளையும் தரிசித்து ஆசியோடு மலரும் பெற்று வரவேண்டும்.
8 திசைகளில் வீற்றிருக்கும் இந்த தேவிகள் தான் அனைத்து நாட்டினருக்கும் காவல் தெய்வங்கள். அகண்ட தென்பாரத கண்டத்தில் இந்த தேவிகளை வழிபடாமல் எவரும் மலைக்குள் அடி எடுத்து வைப்பதில்லை. தேவியின் அருள் இல்லாவிட்டால் அவர்கள் காட்டினுள் நுழையமுடியாமல் முதல் கட்டத்திலேயே திருப்பியனுப்ப படுவார்கள். மரங்களும், காற்றும், அடவியில் வாழும் உயிர்களும் தேவியின் ஆணைக்கு இணங்க அவற்றை நிறைவேற்றி வருகின்றன.
இந்த பயணத்தில் நரசிம்மனுக்கோ, மகதனுக்கோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கான ஏற்பாடுகள் அடுத்த 60 நாட்களுக்குள் செய்து தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இங்கே அரண்மனையில் வனயாத்திரை அமரபுசங்கரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனை குடைந்து கொண்டிருக்கிறாள்.
“சொல்லுங்கள் அண்ணா….. 21 நாட்கள் எடுக்கும் அளவிற்கு எந்த எந்த கோவில்களுக்கு செல்வார்? யாரும் ஏன் உடன் செல்லக்கூடாது? மகதனை யாரிடம் இருந்து அவர் காப்பாற்றினார்? குருகுலத்தில் தானே அவர் இத்தனை ஆண்டுகள் இருந்தார்.. எப்போது மகதனை கண்டார்? எங்கே கண்டார்?”, அமரர் செல்லும் இடமெல்லாம் அவன் கைப்பிடித்து கொண்டு பின்னோடு கேள்விக் கணைகளை பொழிந்தபடி சென்றாள்.
“அம்மாடி வனயாத்திரை…. நீ நன்றாக அம்பெறிவாய் என்பதை அறிவேன் இப்படி கேள்விகளும் அம்பு மழையாக பொழிந்தால் நான் எப்படி பதில் கூறுவது? கொஞ்சம் அமைதியாக இரு… பொறுமையாக நமது பயணத்தில் அனைத்தும் கூறுகிறேன்.. இப்போது அரசர் அழைத்து இருக்கிறார் நான் செல்லவேண்டும்.. நீ மகாராணியாரிடம் சென்று அவருடன் இரு….”, என கூறி அவளை அவ்விடம் விட்டு அனுப்பிவிட்டு அரசர் கூறிய இடத்திற்கு குதிரையில் ஏறி வேகமாக காட்டிற்குள் சென்றான்.
“வா அமரா.. ஏன் இத்தனை தாமதம்?”, அரசர் வரத யோகேந்திர ஆதித்தர் அவனை அமர செய்கை செய்தபடி கேட்டார்.
“யாத்திரை தான் தொணதொணத்து கொண்டு உடன் வந்தபடி இருந்தாள் அரசே… அவளை மகாராணியாரிடம் அனுப்பிவிட்டு வந்தேன்… அவளின் கேள்விக்கணைகளால் எனை துளைத்துவிட்டாள்…. ஆனாலும் ருத்ர சமஸ்தான இளவரசிகள் இருவரும் பெண்களாக பிறந்துவிட்டார்கள்…. இல்லையென்றால் அவர்கள் நிச்சயம் பேரரசாக உருவெடுத்து இருப்பார்கள்…. “, சிரிப்பு போல கூறினான்.
“பெண்களாக இருந்தால் பேரரசுகள் உருவாகாதா அமரா? நமது ஆதித்த அரசு ஒரு பெண்ணால் தான் உருவானது. அது பேரரசு ஆகவும் நமது குளத்தில் பிறந்த பெண் தான் முக்கிய காரணம். நாம் கண்முன்னால் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் தான் ஆராய்ந்து அதற்கான செயல்பாடுகளில் இறங்குவோம். ஆனால் பெண்கள் மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். அவர்களது பார்வை அவர்களின் வம்சவாரிசுகளின் நலனை தான் முதலில் ஆராய ஆரம்பிக்கும். அந்த வாரிசுகளுக்காக என்று இன்று நம்மை உழைக்க கூறுவார்கள். அவர்களது வார்த்தைகள் சத்தியமாகும் பொழுது தான் அன்று நாம் சிந்திய வியர்வையும், இரத்தமும் எத்தனை முக்கியமான தருணம் என்பதை நமக்கு விளங்கவைக்கும்…. இன்று நாம் இப்போது கூடி பேசுவதும் மகாராணியார் ஆலோசனையின் பேரில் தான்…. இதில் ருத்ர சமஸ்தான மூத்த இளவரசியும் பங்கு கொள்வார்….”, என அரசர் கூறியதும் அங்கே குதிரையில் இருந்து மிக்க கம்பீரமாக ஒரு பெண் இறங்கி வந்தாள்.
அவளின் குழல் தலைப்பாகையினுள் இருந்து எட்டி பார்த்து தனது தோழர்களுக்கு உளவு கூறியது. அவளின் கண்கள் இருட்டை கிழித்தெறிந்து சூரியனையொத்த பிரகாசத்தை கொண்டிருந்தது. அவள் இடை தழுவிய நீண்ட வாழும், உரம் ஏறிய கைகளும், அழுந்த பாதம் வைத்து நடந்த நடையும் அவள் சர்வலோகத்தையும் ஆட்டிவைக்கும் வல்லமையும், தீரமும் கொண்டவள் என்று பார்ப்பவர் கண்கள் மூலமாக இதயத்திற்கு தெரிவித்தது.
அவள் ஆருத்ரா சிங்கமாதேவி….. ருத்ர சமஸ்தானத்தின் முதல் இளவரசி…. நரசிம்மன் உடன் அவளும் இத்தனை காலம் குருகுலத்தில் பயிற்சி எடுத்து இன்று தான் இல்லம் திரும்புகிறாள்.
அவள் பின்னோடு இன்னும் இருவர் வந்து அரசரை வணங்கி அமர்ந்தார்கள், அவர்கள் அரசவை வைத்தியர்கள்.
“வணங்குகிறேன் அரசே….. சற்று தாமதமாகிவிட்டது…. நமது வடகிழக்கு காட்டினில் வெகு நாட்களாக கர்ப்பமான பெண் மான்களை வேட்டையாடும் கும்பல் ஒன்று இன்று கண்ணில் பட்டது.. அவர்களை பிடித்துவர நேரமாகிவிட்டது….”, என கூறி அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கத்தை வைத்தாள்.
“அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா தேவி?”, அமரன் சிரிப்புடன் கேட்டான்.
“வாய் நன்றாக தான் இருக்கிறது…. காதும் கேட்கும் திறனை கொண்டிருக்கிறது…. மற்றவைகள் இல்லை… தேவையும் இல்லை அல்லவா?”, அவள் மென்னகையோடு கேட்ட விதம் அரசரை புளங்காகிதம் அடையச் செய்தது.
“அருமை மகளே….. எத்தனை காதம் இன்று பிரயாணித்தாய்?”
“சுமாராக 4-5 காததூரம் இருக்கும் அரசே.. எனது குதிரை குருகுலம் தாண்டிய மடுவில் இருக்கிறது…. காட்டில் திரிந்த குதிரைகளை தான் அவர்களை பிடிக்க ஓட்டி சென்றேன்… இரண்டு குதிரைகளுக்கு கால்களில் காயம் கண்டுவிட்டது…. மருத்துவ குழுவை அனுப்பி இருக்கிறேன்…. “
“இது எத்தனையாவது குதிரை இளவரசி?”
“இது 6-வது குதிரை….. நமது தெற்கு காட்டினில் ஏறி வந்தேன்….”, என கூறிவிட்டு தான் கொண்டு வந்த குடுவையை அரசர் கைகளில் கவனமாக கொடுத்தாள்.
“அரசே.. நான் கூறிய திரவம் இது தான்…. ஆனால் இன்னும் முழுமையடையவில்லை… இதை அடிபட்ட மிருகத்திற்கு செலுத்தினால் ரத்தப்போக்கு உடனடியாக நின்று, உடலில் இரத்தம் ஊற ஆரம்பிக்கும்…. ஆனால் நாம் எந்த மிருகத்திற்கு கொடுக்கிறோமோ அந்த மிருகத்தின் ஒரு துளி ரத்தம் முதலில் இந்த திரவத்தில் சேர்ந்து 2 நாழிகைக்குள் அந்த மிருகத்தின் உடலில் செலுத்த வேண்டும்…. இது வடக்கு காடுகளில் கிடைக்கும் மரப்பட்டைகளை அரைத்து பொடியாக்கி, நாம் காயங்களுக்கு இடும் பச்சிலைகளை அரைத்து அதனோடு கலந்து சூரிய கதிர்களின் முன்னாள் 60 நாழிகைககள் வைத்து எடுத்து பனை மட்டையில் மடித்து வைத்துக் கொண்டால், 3 ஆண்டுகள் வரை இந்த மருந்து வேலை செய்யும்…. “, என விளக்கம் கொடுத்தாள்.
“அற்புதம் மகளே…. இது நிச்சயம் நமது காட்டில் வாழும் உயிர்களுக்கு உதவும். நமது மருத்துவகுழுக்களும் பாரம் அதிகம் சுமக்காமல் அதிக தொலைவு காட்டினில் திரிந்து அடிபட்டிருக்கும் உயிர்களுக்கு குணம் செய்ய முடியும்….”, மனதார பாராட்டினார்.
“இந்த திரவம் பொடியாக மாற்றுவதால் அதன் பலன் கொடுக்கும் தன்மையில் பாதிப்பு ஏற்படுமா?”, அங்கிருந்த மருத்துவர் கேட்டார்.
“இல்லை மருத்துவரே…. காய்ந்த பொடியாக பனை மட்டையில் வைத்து கட்டும்பொழுது அதன் பலனில் எந்த பாதிப்பும் ஏற்படாது… சுத்தமான நீரில் கலந்து கொடுக்கலாம், இல்லையென்றால் நேரடியாக இரத்தம் வெளியேறும் இடத்தில் வைத்து கட்டினால் உடனே வேலை செய்ய தொடங்கிவிடும்…. யானைகளும் இதனால் பெரும் பயன்பெறும்.. இந்த பொடியில் 3 மட்டை பொடியை நன்கு வளர்ந்த முதிர்ந்த யானைக்கு கொடுத்தாலும் இரத்தம் ஊறி உடலில் வலு கூடும்…. நான் 4 வகை யானைகளுக்கு கொடுத்து பார்த்தேன். நல்ல முன்னேற்றம் தெரிந்தது. நிச்சயம் இது ஆயுளை கூட்டும்….”, என தெளிவாக பொறுமையாக விளக்கம் கூறினாள்.
“மிக்க நன்று…..”, மருத்துவர் அந்த குடுவையை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டார்.
“இளவரசி செய்யும் மற்றொரு ஆராய்ச்சி பற்றியும் இங்கே உரைத்தால் நன்று….”, அமரன் கூற சிங்கமாதேவி அவனை பார்த்தாள்.
“இன்னும் அந்த ஆராய்ச்சி முற்று பெறவில்லை அமரரே … நானும் நரசிம்மரும் நிச்சயம் அதில் வெற்றி பெறுவோம்… அதன்பின் அதனை பற்றி விளக்கமாக கூறுகிறேன்…..”
“அப்படி என்ன ஆராய்ச்சி அம்மா அது?”, அரசர் கேட்டார்.
“அரசே… அனைத்து உயிர்களுக்கும் ஒத்துப்போகும் படியான இரத்தம் இந்த பூமியில் இல்லை… நமது ரத்தம் மிருகங்களுக்கு சேராது.. மிருக இரத்தம் நமக்கு சேராது…. அனைத்து வகை ரத்தங்களும் உடல்கள் ஏற்கும் வகையில் ஒருதிரவம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறோம்… அதன் முதல் மாதிரியாக தான் இந்த திரவம் கண்டுப்பிடித்தோம்….”
“இது இயற்கைக்கு எதிரானது இல்லையா?”, அரசர் கேள்வி கேட்டார்.
“இயற்கையை காப்பதற்காக தான் இந்த முயற்சி அரசே… வடகிழக்கில் ஒரு இளவரசன் செய்யும் கொடூரமான ஆராய்ச்சிகளை பற்றி குருகுலத்தில் கேள்விப்பட்டோம்.. அவன் இயற்கையை அழிக்க அத்தனை முயற்சிகளை எடுத்து, பல்லாயிர உயிர்களை இதுவரை வதைத்துவிட்டான். அந்த பக்கங்களில் மிருகங்கள் முதல் மனிதர்கள் வரையிலான மொத்த எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. அவனது அடுத்த குறி நமது தென்பாரதம் தான்… இங்கே ஒரு உயிருக்கும் அவனால் தீங்கு நேரக்கூடாது. அப்படி காயம்கொண்டால் நமது உதிரம் கொடுத்தேனும் நமது அடவிவாழ் உயிர்களை காக்க வேண்டும்… எந்த இனமும் மனிதர்களின் அறிவீனத்தால் அழிந்துவிட கூடாது. அதற்காக தான் இந்த முயற்சி…. இது வெற்றியடைந்தால், நம்மால் இன்னும் பல நூறு உயிர்களை காப்பாற்ற இயலும்… மடியும் நிலையில் இருக்கும் உயிர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்….“
“உனது நல்ல எண்ணம் உன்னை வழிநடத்தி வெற்றிபெற வைக்கட்டும்… மருத்துவர்களே நீங்கள் கிளம்புங்கள்.. இந்த மருந்தினை அதிகமாக தயாரித்து கிடங்கில் சேர்த்து வையுங்கள்…. “, என அரசர் அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்.
“ருத்ரா… நீ செய்யும் முக்கியமான ஆராய்ச்சி பற்றி கூறவில்லையே…”, மருத்துவர்கள் தூரமாக சென்றதும் கேட்டார் அரசர்.
“எது அரசே?”, அவரின் கண் பார்த்து கேட்டாள்.
“மிருகமனித கலவை ஆராய்ச்சி பற்றி தான்…. ஏன் இந்த விபரீத எண்ணம்?”, கண்டிப்போடு கேட்டார்.
“இதில் விபரீதம் ஒன்றும் இல்லை அரசே… காட்டினில் வாழும் விலங்குகள் மனிதன் சொல்வதை கேட்காது. தேவையற்ற சண்டைகளினால் பல உயிர்கள் கொல்லப்படுகிறது.. அவர்களை பிரித்து அதட்டி காவல் காக்க, மனித மிருக கலவையில் இருக்கும் ஓர் இனம் இருந்தால் நமக்கும் மிருகத்திற்கும் காவலாக இருக்கும் என்ற எண்ணம்….”
“யாருடைய யோசனை இது?”
“நானும் இளவரசர் நரசிம்மரும் சிந்தித்தது தான்…. பைரவகாடு பற்றி அறிந்தபின் எங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை அரசே….”,என கூறி அமரரை பார்த்தாள்.