72 – ருத்ராதித்யன்
“பைரவக்காட்டை பற்றி நமக்கு இன்னும் தீர்மானமாக தெரியாது மகளே…. அதை வைத்து இப்படி ஒரு ஆராய்ச்சி அவசியம் தானா என்பதை சிந்தியுங்கள்….. “, அரசர் கூறிவிட்டு எழுந்து சென்றார்.
அமரபுசங்கர் பைரவக்காடு எனும் வார்த்தை காதில் விழுந்ததும் மனதளவில் குமைந்துக் கொண்டிருந்தார்.
அந்த காட்டிற்கு செல்லும் வழியை கண்டறிய முற்படுகையில் தான் அவனின் பெற்றோர் அகாலமரணம் அடைந்தனர். அந்த மரணத்தினால் தான் இவர்களுக்கு ‘பைரவக்காடு’ என்ற இடம் இருப்பதே தெரிந்தது. ஆனாலும் அங்கே இதுவரை யாரும் சென்று வந்ததாக தெரியவில்லை. எந்த மனிதனும் அதைக் கண்டதாக எந்த குறிப்புகளும் எங்கும் பதிவாகவும் இல்லை. இப்படியான குழப்பமான நிலையில் அமரனின் தாயும் தந்தையும் இறந்து போனது கூட பலரின் கரிசனத்தை எட்டவில்லை. அந்த இடத்தை அறியத்தான் பலரும் சுற்றி திரிந்தனர்..
“பைரவக்காடு” என்ற பெயர் கேட்டதும் அவன் மனம் வேதனையில் துடிப்பது சிங்கமாதேவிக்கு விளங்கியது. அவன் அருகே சென்று அமர்ந்து அவன் தோளில் கைவைக்க, அவனும் வலியை விழுங்கிய மென்னகையை சிந்தினான்.
“தங்களுக்கு வேதனை அளிக்கும் விதமாக பேசிவிட்டேனா சகோதரா?”, மென்மையாக கேட்டாள்.
“இல்லை தேவி… அவர்களின் மரணத்தின் காரணத்தை இன்று வரை அறிய முடியவில்லையே என்ற வருத்தம் தான் என்னை அதிகம் வாட்டுகிறது…. அதை தவிர அரசரும் அரசியும் எனை அவர்கள் ஈன்ற புதல்வனை காட்டிலும் ஒரு படி அதிகமாக தான் அன்பை ஊட்டி வளர்த்தனர்… இருவரும் எனை இன்றும் கண்ணின் மணியாக காத்து வருகின்றனர் என்பதை நான் அறிவேன்…. “, கூறியபடி மெல்ல இருவரும் அரண்மனை இருக்கும் திசையில் குதிரையை செலுத்தினர்.
“யாத்திரை எனை அழைத்துவருவதாக கிளம்பி இருக்கிறாள் இப்போது வரை அவள் என்னை காணவில்லை….. அரண்மனை போகத்தில் மூழ்கி விட்டாளா சகோதரா?”, என பேச்சை வேறுபக்கம் திருப்பினாள்.
“அவள் இருந்ததினால் தான் இன்று நரசிம்மனை அதட்டி உருட்டி யுவராஜா பயணத்திற்கு அனுப்ப முடிந்தது. என்ன கூறு அவள் வார்த்தை ஜாலத்தை வைத்தே காரியத்தை சாதித்து விடுகிறாள்….”
“அதே வார்த்தை ஜாலம் வைத்து என்னவர் மனதில் நுழைய முடியுமா அவளால்?”, சிரிப்புடன் கேட்டாள்.
“உன்னவர் என்றான பின் அவள் ஏன் அவனை காணப் போகிறாள் தேவி? அவளுக்கு நரசிம்மன் உடன் பிறந்த தம்பி வேண்டுமாம்… அவனை அவளே உருவாக்க ஆராய்ச்சி செய்யப் போகிறாளாம்…. அவனைத் தான் அவளவன் ஆக்கி கொள்வாலாம் …… “
“அதெப்படி இப்போது?”, என சிங்கமாதேவி சிந்திக்கவும், ஏதோ நினைவு வர, “அமரரே.. .அவள் இவரது ஆராய்ச்சி கூடம் சென்று அங்கிருக்கும் முக்கிய திரவங்களை எடுத்து வந்திருக்கிறாள்… உடனடியாக அரசரும் அரசியும் இருக்கும் இடம் சென்று பார்க்க வேண்டும்.. அவர்களின் உதிரத்தை அவள் எடுக்கும் முன் செல்ல வேண்டும்..”, என குதிரையை கிளப்ப, அமரனும் பின்னோடு சென்றான்.
அங்கே சிங்கமாதேவி கூறியது போல யாத்திரை 12 குடுவைகளை வைத்துக் கொண்டு மகாராணியாரின் இரத்தம், தோல், மற்றும் இன்னபிற உடல் மாதிரிகளை எடுத்து குடுவைகளில் போட்டுக் கொண்டிருந்தாள்.
“என்ன நடக்கிறது இங்கே?”, என கேட்டபடி அரசர் அங்கே சென்றதும் அவரிடமும் அதே போல அவரின் உடல் மாதிரிகளை எடுத்து குடுவைகளில் இட்டு பாதுகாப்பாக எடுத்து வைத்தாள்.
“என்ன செய்கிறாய் யாத்திரை?”, எனக் கேட்டபடி சிங்கமாதேவி உள்ளே வந்து சகோதரியை முறைத்தாள்.
“எனக்கான மணவாளனை உருவாக்கும் முயற்சி நடக்கிறது அக்கா…. அதற்குள் கயவர்களை கொன்றுவிட்டு வந்துவிட்டாயா? அரசரும் அரசியும் இருக்கிறார்கள் அவர்களை முதலில் வணங்கு பிறகு என்னிடம் முணங்கு…”, என கூறிவிட்டு நகைத்தாள்.
“யாத்திரை….”, என அவளை முறைத்துவிட்டு, “மன்னிக்க வேண்டும் அரசே.. வணங்குகிறேன் அரசி..”, என இருவரின் பாதம் பணிந்து எழுந்தாள்.
“நிறைவாக வாழ்வாயாக மகளே…”, இருவரும் ஒரே குரலில் வாழ்த்தினர்.
“அவள் சிறுபிள்ளை தனமாக ஏதோ கூறுகிறாள் என்று தாங்களும் தங்களின் இரத்த மாதிரிகளை கொடுக்கிறீர்களே அரசே… இதனால் விபரீதம் விளைந்தால்…?”
“அவளின் ஆராய்ச்சி முறை மற்றும் முழு விளக்கமும் கேட்ட பின் தான் கொடுத்தோம் ருத்ரா…. அவள் மேல் நம்பிக்கை இருக்கிறது… என்ன இப்போது குடுவையில் மகன் பிறந்தால் அதை வளர்க்க ஓடுவது ஒன்று தான் கஷ்டம். மற்றப்படி இவளை இப்படியே இளமையாக இன்னும் 15 வருடங்கள் வைத்திருக்கும் முறையை நாங்கள் கண்டறிய வேண்டும் அவ்வளவு தான்….”, என கூறி மகாராணியார் சிரித்தார்.
“இது நல்ல யோசனை அத்தையாரே…. நாளையே ஒரு ஆராய்ச்சி குழுவை உருவாக்கி அந்த பணியை தொடங்குங்கள்.. நானும் எனது பணியை தொடங்குகிறேன்….”, என கூறவும் அனைவரும் சிரிக்க சிங்கமாதேவி வனயாத்திரையை முறைத்தாள்.
“நிஜத்தில் பிறந்து வளர்ந்திருக்கும் ஒருவரை மணந்து கொள்ளாமல் இதென்ன இப்படி ஒரு யோசனை உனக்கு ? இதற்கு தான் என்னை அழைத்து வருவதாக அரண்மனை விட்டு கிளம்பி வந்தாயா யாத்திரை ? இது சரியான யோசனையும் அல்ல, முயற்சியும் அல்ல.. உடனடியாக அதை அரசரிடம் ஒப்படைப்பாயாக..”, குரல் உயரத்தாமல் சினத்தை வார்த்தைகளில் காட்டி சகோதரியை முறைத்தாள்.
“நான் செய்வது முறையல்லவென்றால் நீயும் அத்தானும் செய்வது கூட முறையற்ற செயல் தான் அக்கா .. மனித மிருக கலவையில் புது உயிரினம் உருவாக்குது எவ்வகையில் நல்லதாகும் ?”, யாத்திரை கேட்டதும் ஆருத்ரா அவள் இக்கேள்வியை எதிர்பார்த்து இருந்ததை போலவே முகத்தை வைத்திருந்தாள்.
“நாங்கள் உலக நன்மைக்காக இந்த ஆராய்ச்சியை தொடங்கியுள்ளோம் .. இதனால் மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் பெரும் நன்மை கிடைக்கும்.. அனாவசியமாக சண்டையிட்டு மடியும் மிருகங்களின் எண்ணிக்கை குறையும் .. மிருகங்களை பாதுகாக்க இப்படி ஒரு உயிரினம் இருந்தால் அது பல வகைகளில் நமக்கு மட்டுமின்றி இயற்கைக்கும் நன்மை பயக்கும்..”
“அப்படியென்றால் மனிதர்களான நம்மால் இந்த இயற்கையை காக்கமுடியாமல் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கி அதன் மூலமாக நம்மையும் மிருகங்களையும் காக்க போகிறீர்கள் அப்படி தானே ?”, யாத்திரை ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி உச்சரிக்க அரசர் அவளை கூர்ந்து கவனித்தார்.
“என்ன கூற வருகிறாய் மகளே ? இவர்களின் ஆராய்ச்சி பற்றி உனக்கு நன்றாக தெரிந்திருக்கிறது .. அதில் உனக்கு ஏற்பட்டிருக்கும் ஐயம் என்ன ? ஒவ்வாமை என்ன ?”, என நேரடியாக அரசர் அவளை கேட்டார்.
“நாம் சற்று தனிமையில் பேசலாமா அரசே ?”, என சுற்றும் முற்றும் பார்க்க, அவர் அங்கிருந்த காவலர்கள் முதல் வேலையாட்கள் வரையிலும் வெளியேற கூறினார்.
“இப்பொழுது கூறு மகளே..”, மகாராணியார் பேசச் சொன்னார்.
“நேற்று முக்கியமான ஒரு செய்தி எனது தந்தைக்கு வந்தது அரசே.. அந்த விஷயத்தை கூறுவதற்கு தான் என்னை அனுப்பி வைத்தார். அத்தான் இருந்த பொழுது கூறாமல் இப்பொழுது கூற முக்கியக்காரணம் அவர் யுவராஜா பதவியை ஏற்க வேண்டும் என்பதற்காக தான்.. நமது விஷ்வக்கோட்டை சமஸ்தான அரசன் அரசகேசரி, நவ-வர்ம நாட்டின் இளவரசனை சமீபத்தில் சந்தித்ததாக தகவல் வந்திருக்கிறது…”
“யார் அவன் ?”
“இளவரசர் கூறிய வட மேற்கு பகுதி இளவரசன்.. இதுவரையிலும் எண்ணாயிர உயிர்களை ஆராய்ச்சி என்ற பெயரில் கொன்று குவித்திருக்கிறான்.. அவனது பார்வை இப்பொழுது நமது தென்திசை மீது விழுந்திருக்கிறது.. நமது அடவியில் வாழும் அறிய மிருக இனங்களை எல்லாம் கடத்தி சென்று ஆராய்ந்து அவன் விருப்பத்திற்கு இணங்க அந்த உயிர்களை உருவாக்கி வாழவைப்பது .. அதாவது அவனே படைப்பவனாக, அவன் படைத்தவை மட்டுமே இங்கே வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் அவன்.. . அவனது பெயர் அபராசித வர்மன்.. இந்த பாரத கண்டத்தின் வடமேற்கு பகுதியை ஆளும் பேரரசரின் ஒரே மகன்.. “
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆருத்ரா மனதில் பல முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்தன. சற்று நேரம் முன்பு அவள் கொன்ற மிருகவதை கூட்டம் அரசகேசரியின் ஆட்கள் என்பது தெளிவாக தெரிந்தது.
“நமது நாட்டிற்கும் இயற்கைக்கும் துரோகம் இழைக்கிறானா அவன் ?”, என அமரபுசங்கன் குருதி சூடேற கேட்டான்.
“ஆம் சகோதரா .. ஆனால் நேரடியாக அவன் இந்த நாச வேலைகளை செய்யவில்லை . அதற்கான ஆதாரமும் நம்மிடம் இல்லை.. அவனது மறைமுக கூட்டு சதி ஆரம்பித்து ஆண்டுகள் பல சென்றுவிட்டன என தந்தை கணிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் .. “
“முழுதாக கூறம்மா ..”, அரசர் கேட்டார்.
“நமது அமரக்கோட்டை சமஸ்தான அரசரும் அரசியும் இறந்தது கூட இவர்களின் கூட்டு சதியாக இருக்கும் என்ற ஐயம் எழுகிறது ..”, என கூறி அமரபுசங்கனை பார்க்க அவன் கண்கள் ரத்த சிவப்பாக மாறி இருந்தது.
“அவனை கொன்று புதைத்துவிட்டு வருகிறேன் அரசே ..”, என அமரபுசங்கர் வேகமாக வெளியேற சென்றார்.
“நில் மகனே .. “ மகாராணியார் தடுத்தார்.
“இத்தனை ஆண்டுகளாக அவன் நமது கண்களில் இருந்து தப்பியது எப்படி என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.. இன்னும் என்ன என்ன நாச வேலைகளை அவன் செய்கிறான் என்று அறியவேண்டும்.. யாத்திரை .. இன்னும் தகவல் மீதமிருக்கிறதா ?”, அரசியார் கேட்டார்.
“எனக்கு தனிப்பட்ட முறையில் வந்த தகவல் ஒன்று இருக்கிறது அரசியாரே ..”
“என்ன அது ?”
“நமது மகதனை அவன் கடத்தப்போவதாக வந்தது. நமது இளவரசரும், இளவரசியும் மேற்கொள்ளும் இதே விசித்திர ஆராய்ச்சியை அந்த அபராசித வர்மனும் நடத்திக் கொண்டிருக்கிறானாம்.. “ , என கூறி ஆருத்ராவை பார்த்தாள்.
யாத்திரை கூறிய இச்செய்தி அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆருத்ரா சில நொடிகள் ஸ்தம்பித்து பின் அடுத்து செய்யவேண்டிய காரியங்களை மனதில் வரைபடமிட்டு பார்க்க ஆரம்பித்தாள்.
யாத்திரை அருகில் வந்தவள், “உனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் கூறியது யார் ?”, என கேட்டாள்.
“அதை கூற முடியாது.. அது எனது தனிப்பட்ட உளவுத்துறை .. “, என கையைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக கூறினாள்.
“நிச்சயமாக இப்போது வருந்துகிறேன் மகளே இன்னொரு மகனை ஈன்றெடுக்காமல் போய் விட்டேனே … “, அரசியார் அவளை அருகே அழைத்து அணைத்துக் கொண்டார்.
“கவலை வேண்டாம் அத்தை.. நிச்சயம் தங்களின் இரண்டாம் புதல்வனை நான் குடுவையில் இருந்து பிறப்பெடுக்க வைப்பேன்.. அதே போல என் இளமையை பாதுகாக்கும் மூலிகையை தாங்கள் தயார் செய்ய ஆணையுடுங்கள்..”, என கூறி சிரித்தாள்.
“ஆருத்ரா .. அமரா .. தனி குழுக்களை உருவாக்கி உங்கள் சமஸ்தானங்களில் இருந்து அனுப்பி அவனை உளவு பார்க்க கூறுங்கள்.. இங்கே நான் மாகாராணியாரோடு கலந்தாலோசித்து இங்கிருந்து செய்ய வேண்டிய பணியினை செய்கிறேன். இனி ஒரு உயிர் கூட இங்கிருந்து அந்த இளவரசனுக்கு சென்று சேரக்கூடாது.. “, அரசர் கண்களில் அதீத தீவிரம் தென்பட்டது.