77 – ருத்ராதித்யன்
“தங்களுக்கு பரிட்சயம் தேவையில்லை என்று புரிகிறது. ஆனால் வனயட்சி இப்படியொரு முகம் கொண்டிருக்கிறார் என்று இன்று தான் நான் அறிகிறேன்.. நான் சிங்கத்துரியன் பற்றி கூறும்பொழுது கூட தாங்கள் தெரிந்ததாய் கூறவில்லையே தமையா ?”, ஆருத்ரா கேட்டாள்.
“இவரின் ஓவியம் நமது தலைமை வைத்தியசாலையில் இருக்கிறது ருத்ரா… அங்கே பார்த்திருக்கிறேன்.. வனயட்சி எனும் பெயர் பலரும் கொண்டிருக்கிறார்கள் என்பதால் நான் எதுவும் கேட்கவில்லை. நேரில் கண்டதும் தான் தெரிந்தது அவர் தான் இவரென… இவர் மகாராணியாரின் நெருங்கிய தோழியும் அல்லவா ?”, எனக் கூறி மெல்ல சிரித்தான்.
“அதனால் தான் இங்கே ஓய்வெடுக்க அனுப்பிவைக்கப்பட்டேன் மகனே.. என் அப்பன் நரசிம்மன் எப்படியிருக்கிறார் ?” , என வாஞ்சையுடன் கேட்டார்.
“யுவராஜா பட்டம் ஏற்று தேவியின் ஆசீர்வாதம் பெற சென்றிருக்கிறார் அம்மா.. விரைவில் கோட்டை திரும்பியதும் அரசராக முடி சூட்டப்படுவார்…”
“ஹாஹாஹா .. நல்லது .. ஆனால் வரத யோகேந்திரர் இருக்கும் வரை என் அப்பன் அரியாசனம் ஏறமாட்டார். அவர் நிகழ்த்த வேண்டிய அதிசயங்கள் பல இனிதான் இருக்கின்றன.. இளவரசியும், இளவரசரும் இணைந்து செய்யும் ஆராய்ச்சியானது வெற்றியடைய வேண்டுமல்லவா …? தவிர பெரும் பொருப்பொன்று உங்கள் அனைவருக்கும் வரவிருக்கிறது .. உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்… “, எனக் கூறிவிட்டு அனைவருக்கும் மூலிகை உருண்டையைக் கொடுத்தார்.
அதை உண்டதும் பயணம் செய்தக் களைப்பு நொடியில் நீங்கி உடலில் ரத்தம் வேகம் கொண்டது. தசை முதல் நரம்பு வரையிலும் புது வலுசேர்ந்த உணர்வு எழுந்தது.
“என்ன மூலிகை இது ? வழக்கமாக எடுக்கும் குளிகைகளை விட நான்கு மடங்கு உடலில் புத்துணர்ச்சி கொள்ளச்செய்கிறது..” , என அமரன் கேட்க, “இது பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கொடி மூலிகை.. இது அரிதான மலை உச்சிகளில், முதல் சூரிய கிரணங்கள் படும் இடத்தில் மட்டுமே முளைக்கும்.. இதை திரட்ட தான் துரியன் சென்றிருக்கிறான்.. பல மருந்துகளுக்கு இது மிகவும் வலுசேர்ப்பதோடு, காயம் ஏற்பட்ட இடத்தில் விரைவாக திசுக்களை வளரவைக்கும்… “, எனக் கூறிவிட்டு யாத்திரையை வனயட்சி பார்க்க, அவள் கண்கள் மின்ன அந்த மூலிகை உருண்டையை ஆராயத் தொடங்கினாள்.
வாசனையை வைத்து முடிந்தவரை அதில் கலந்துள்ளப் பொருட்களைப் பிரித்துவிட்டு, அந்த கொடியை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வைத்தாள்.
“யாத்திரை அதை ஆராய்ந்தது போதும் எடுத்து உண்.. உனக்கு இதைப்பற்றி விரிவாக உன் ஆசான் பாடமெடுப்பான்… “, என வனயட்சி கூறியதும் எடுத்து ஒன்றாக உருண்டையாக்கி உட்கொண்டாள்.
“மிகவும் துவர்ப்பாகவும், கசப்பாகவும் இருக்கிறது ..”, என ருத்ர சமஸ்தான அரசர் கூறியதும், “தங்களின் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதால், அதை அதிகரிக்க தங்களுக்கு சற்று அதிகம் இந்த கொடியை சேர்த்து அரைத்து வந்தேன்.. மறுக்காமல் சாப்பிடுங்கள் அரசே ..”
“சரியாக உண்ணாமல் உறங்காமல் எல்லைப்பகுதியே கதியென இருந்தால் வேறு என்ன செய்வது யட்சி ? சொல்பேச்சு கேட்பதே இல்லை.. இவரைக்கொண்டே இரு புதல்விகளும் வந்துள்ளனர். இதில் என்பாடு தான் பெரும்பாடாக இருக்கிறது..”, ருக்மணி தேவியார் குறைப்பட்டுக் கொண்டார்.
“எனக்கென்னவோ தாங்கள் அரசரையும், என்னிரு தங்கைகளையும் புகழ்வதாக தோன்றுகிறது அரசியாரே … அவர்கள் கொண்ட கடமையில், எடுத்த காரியத்தில் என்றும் பின்வாங்குவதும் இல்லை, தோற்பதும் இல்லை..”, எனக் கூறிவிட்டு அவரின் முகம் பார்த்து சிரித்தான்.
“நீயே கேள் அமரா … இவர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டுமா இல்லையா? கொள்ளையர்களையும், கள்ள வேட்டைக்காரர்களையும் பிடிக்கிறேன் என வனத்தில் புகுந்தால் ஒரு வாரம் கடந்தாலும் வெளியே வருவதில்லை. இங்கு நானல்லவா மன அவஸ்தைப்படுகிறேன்… இளவரசிகள் இருவரும் வெளியே இருக்கும்போது நான் தனியாக என்ன செய்வது? இவர்கள் அளவிற்கு எனக்கு தைரியமில்லையய்யா… “, எனக் கூறி சோர்வாக அமர்ந்தார்.
“இரண்டு வீர மகள்களை பெற்றெடுத்த மாவீர மங்கையம்மா நீ .. உனக்கேன் இந்த நினைப்பு ? இவர்கள் இருவரும் இருபது ஆண் பிள்ளைகளுக்கு சமம் என்பதை மறந்தாயா? “, யட்சி கூர்மையாகப் பார்த்தபடிக் கேட்டார்.
“எனது பயமே அது தான் யட்சி… இவர்கள் என்னைப்போல களம் காணாத மங்கையாக இல்லாவிட்டாலும், ஓரிடத்தில் இருந்து நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.. ஆனால் இருவரின் ரத்தமும் வீரமும், ஞானமும் நிறைந்து வந்திருக்கிறது.. இந்த அதீத ஞானம் இவர்களுக்கு ஆபத்தை வரவழைத்து விடக்கூடாது என்று அஞ்சுகிறேன்.. நவ- வர்ம நாட்டின் இளவரசன் மருத்துவ ஞானம் நிறைந்த ஆட்களை எல்லாம் கடத்துவதாக கேள்விப்பட்டேன்.. அதில் உங்கள் நால்வரையும் நான் காப்பாற்றி கொள்ளவேண்டுமே என்ற தவிப்பு அதிகமாகிறது யட்சி.. “, எனக் கூறி யட்சியின் தோள் சாய்ந்துக் கொண்டார்.
“இது எப்போது ?”, என அமரனும், ருத்ராவும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
“நேற்று தான் இந்த தகவல் வந்ததம்மா .. இதைப்பற்றி நாம் பின்னர் பேசுவோம் .. இப்போது அனைவரும் உணவுண்ணுங்கள் ..”, என அரசர் கண்டிப்புடன் கூறவும் வேறு விஷயங்களைப் பேசியபடி உணவுண்டு எழுந்துச் சென்றனர்.
“என்ன நடக்கிறது யட்சி ?”, ஆருத்ரா தனது அறைக்கு வந்ததும் கேட்டாள்.
“பல விஷயங்கள் நடக்கிறது ருத்ரா.. நீ நலமாக இருக்கிறாயா ? பயிற்சிகள் எல்லாம் முடிந்ததா ?“, என ஆசையுடன் அவள் தலையை வருடினார்.
“இங்கே வந்து அமரு யட்சி ..”, என அவரை ஊஞ்சலில் அமரவைத்து அவரது மடியில் தலைவைத்துப்படுத்துக் கொண்டாள்.
“முடிந்தவரை குருநாதர் பயிற்சிகள் கொடுத்து அனுப்பிவிட்டார்… நரசிம்மரும் நானும் தான் அதீத பயிற்சிகளில் ஒரே போல வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம் .. வனயாத்திரை குருகுலம் செல்ல விருப்பம் கொண்டிருக்கிறாளா?”
“அவள் துரியனிடம் பாடம் கற்றுக் கொள்கிறேன் எனக் கூறி வனத்தில் ஆராய்ச்சி கூடம் நிறுவி, அங்கேயே அனைத்து பயிற்சிகளும் எடுத்து வருகிறாள்.. அரசர் அவ்வப்போது அங்கே சென்று தங்கி அலுவல் கவனிக்கிறார்.. இங்கே ஆதுரசாலைகளுக்கு தேவையான மூலிகை பதப்படுத்தும் வேலையை நான் பார்க்கிறேன்.. இனி எனது பேரரசி என்ன செய்யப் போவதாக இருக்கிறீர்கள் ?”, என இறுதிக் கேள்வியை சிரிப்புடன் கேட்டார்.
“நாங்கள் எடுத்திருக்கும் வேலையை முதலில் முடிக்க வேண்டும். அவர் நாடு திரும்பும் முன் நான் அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. நிச்சயம் தாமும், துரியரும் எனக்கு இதில் உதவ வேண்டும்.. தவிர ..”
“என்ன தவிர ?”
“யாத்திரை செய்யும் ஆராய்ச்சியைப் பற்றி முழு கட்டுரையும் எனக்கு வரவேண்டும் … “, எனக் கூறி அவள் அங்கே கூறியதைக் கூறினாள்.
“கள்ளி .. எனது அறையில் அன்று அவள் நுழையும் போதே நினைத்தேன் … ஆனாலும் வெறும் பசையெடுக்க வந்தேன் எனக் கூறிவிட்டு ஓடிவிட்டாள்..”
“அப்படியா ?”, ஆருத்ரா ஆச்சரியப்படுவதைப் போல சிரித்தபடி கேட்கவும், “துரியன் கூறிய வேலையை செய்துவிட்டாள் யாத்திரை.. இருவரும் தான் அதை சாதிக்க பிடிவாதமாக உள்ளனர்.. உங்கள் இருவரை போலவே ..”, எனக் கூறிவிட்டு எழுந்து வெளியே சென்றார்.
“தங்களுக்கு இதில் விருப்பமில்லையா ?”
“இதில் என் விருப்பம் என்பதை விட இயற்கை நடத்த முடிவு செய்துவிட்டது.. இனி இதை தடுக்கமுடியாது.. இதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்க முடியாது மகளே.. அனைத்திற்கும் மனதை திடமாக்கிக் கொண்டு முன்னேறுங்கள்.. இன்றில்லையென்றாலும், வருங்காலத்தில் இந்த ஆராய்ச்சி பெரும் உதவியாக இருக்கும்.. அது மட்டுமே நான் கூற முடியும் … நீ ஓய்வெடு .. நான் இளவலாருடன் அளவளாவி வருகிறேன் ..”, எனக் கூறி வெளியே சென்றார்.
அவர் வெளியே சென்றதும், ஆருத்ரா அவர் கூறிய கடைசி வாக்கியங்களை நினைத்துப் பார்த்து, அதன் சாராம்சம் புரிந்து கொள்ள முற்பட்டாள். சிறு வயதிலேயே வனயட்சி எந்த வினைக்கும் எதிர் வினையும், எந்த காரியத்திற்கும் இரண்டு பக்கமும் இருக்கும் என்று சொல்லி சொல்லித் தான் அவளை வளர்த்தார்.
தனது தாயின் மடியில் படுத்துறங்கியதை விட யட்சியின் மடியினில் தான் பல இரவுகள் ஆழ்துயில் கொண்டிருக்கிறாள்.
இயற்கையின் நாடி வரை நன்கு உணர்ந்திருந்த வனயட்சிக்கு பல விஷயங்கள் யாரும் கூறாமலே புரிந்தது. பிரபஞ்சத்தின் பெரும் சக்தியும் எப்படி செயல்படுகிறதென ஓரளவு புரிந்து வைத்திருந்தார். அதன்படி ஓர் செயலின் கர்மா என்பது எப்படி எல்லாம் வரும், எப்படி எல்லாம் நடக்கலாம் என்று யூகிக்கும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.
இயற்கையை மீறிய படைப்புகளை தன் பிள்ளைகளே இயற்கையின் அரிய மூலிகைகளின் துணைக் கொண்டு உருவாக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அதற்கான வித்து தான் தான் என்பதும் அவர் அறியாமல் இல்லை.. இதன் கர்மா நிச்சயமாக நேர்மறை விஷயங்களை விட எதிர்மறை விஷயங்களைத் தான் அதிகம் நிகழ்த்த போவதாக அவரின் ஆழ் மனமும் எச்சரித்தபடி இருக்கிறது.
இதோ இப்போது தொடங்கிவிட்டது கொடிமூலிகையின் முளைப்புடன், புது உயிரினம் உருவாக்கும் காரியமும்… இனி நடக்கப்போகும் விஷயங்களுக்கு காரணகர்த்தாவாக, தானும் ஓர் மைய புள்ளியாக இருக்கிறோம் என்ற எண்ணம் வலுவாக மனதில் பதிந்தது.
“வனதேவி தாயே .. நீயே எப்போதும் துணை எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் … உன்னை மீறி யாரும் எதுவும் செய்யவில்லை.. உனது தூண்டுதல் தான் இனி நடக்கப் போகும் காரியங்களுக்கு அடிக்கல்.. சிறு கல்லாக நானும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்று மட்டும் புரிகிறது … எது நடந்தாலும் நீ தான் காக்க வேண்டும், எப்பிறவியிலும் எங்களை வழிநடத்த வேண்டும்… “, என ஆத்மார்த்தமாக வேண்டுதல் வைத்துவிட்டு அமரபுசங்கன் இருக்கும் இடம் சென்றார்.
“இளவலாரே … உறங்கவில்லையா ?”, எனக் கேட்டபடி அந்த அறைக்குள் நுழைந்தார்.
“இச்சமயத்தில் உறங்கும் பழக்கமில்லை அம்மா .. வழக்கமாக வனத்தில் இருக்கும் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன்… இங்கு மாலை வரை ஓய்வெடுக்கச் சொல்லி அரசர் கட்டளையிட்டு சென்று இருக்கிறார்.. அதனால் தான் இங்கே அமர்ந்து வனத்தினை கண்களால் மட்டும் அளவளாவிக் கொண்டிருக்கிறேன் … “, என அவரின் முகத்தினை ஆவலுடன் பார்த்துக் கூறினான்.
“என்ன ஐயா எனது முகத்தை அப்படி பார்க்கிறாய் ?”, என புன்னகையுடன் கேட்டார் என்பது வயதைக் கடந்த வனயட்சி.
“தாங்கள் தானே எனது தாயுடன் அதிக நாட்கள் இருந்திருக்கிறீர் ? அவரை பற்றி தாங்கள் கூறுவீர்களா ?”, என்று அவன் கேட்டதும் வனயாட்சியின் கண்கள் அவனை வாஞ்சையுடன் பார்த்து, அவனை தனது மடியில் படுக்கவைத்து தலைக்கோதி விட்டார்.
“காஞ்சனாவை பற்றி திலகவதி ஏதும் உன்னிடம் கூறவில்லையா மகனே ?”
“கூறியிருக்கிறார் .. ஆனால் அவரை சிறுவயது முதல் பார்த்து வளர்த்தவர் தாங்கள் தானே ? தவிர நான் பிறக்கும்போது பிரசவம் பார்த்ததும் தாங்கள் தானே .. அதனால் தான் கேட்டேன் .. நான் பிறக்கும்போது என் தாயிற்கு மிகவும் சிரமம் கொடுத்து விட்டேனா ? “
“இல்லை மகனே .. நீ வலியே பெரிதாக கொடுக்காமல் அவளது கைகளில் தவழ்ந்துவிட்டாய் … உனது அன்னை இருக்கிறாளே அவள் சரியான கெட்டிக்காரி மட்டுமல்ல கைகாரியும் தான்… என்னை விட பத்து வருடங்கள் சிறியவள் தான்.. ஆனால் எனை விட அதிக புத்திசாலி, தைரியசாலி .. இன்னும் சொல்லப் போனால் வரத யோகேந்திரர் கட்டுப்பட்டு நிற்பது அவளது பார்வைக்கும், வார்த்தைக்கும் தான்.. அவளின் சாமர்த்தியம் இன்றுவரை நான் எங்கும் காணவில்லை.. சாமர்த்தியசாலி மட்டுமல்ல, சமயோஜித புத்தியுடன் நொடியில் செயல்படுவாள்.. அவள் மந்திர வித்தைகளை கற்க சென்ற இடத்தில் தான் உனது தந்தையை கண்டாள்.. மனம் சேர இருவரும் உனை உருவாக்கிவிட்டு தான் ஊரரிய கல்யாண சாங்கியங்கள் நடந்தது. அப்போது நீ அவளது வயிற்றில் நான்கு மாத கருவாக வளர்ந்து கொண்டிருந்தாய்… அதே மந்திரங்கள் அவளது உயிரை காவுவாங்கியது தான் இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை மகனே … “, எனக் கூறி வானத்தை வெறித்தார்.
“என்ன மந்திரங்கள் கற்றார் யட்சி அவர் ?”, என யாத்திரை கேட்டாள்.
“பிரபஞ்சத்தின் பெரும் சக்தி வாய்ந்த மந்திரம் … சிவசக்தி மந்திரம்… ஆரம்பமும், அழிவும் நிகழ்த்தும் மந்திரம் …”

