89 – ருத்ராதித்யன்
அமரபுசங்கன் தனது உடலை கையாள முயன்றுக் கொண்டிருந்தான். வன யாத்திரை சிங்கத்துரியனின் கட்டளையின் பேரில் அவனது உடல் அசைவுகளையும் இதயதுடிப்பையும், நாடிகளின் துடிப்பையும் கண்காணித்து குறித்துக் கொண்டிருந்தாள்.
ஆருத்ரா வனயட்சியிடம் சில விஷயங்களை அறியவும், புரிந்து கொள்ளவும் வேண்டிய கேள்விகளை மனதில் அணிவகுத்தபடி தனது அறையில் இருக்கும் உப்பரிகையில் அமர்ந்து ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.
ருத்ரக்கோட்டை அரசரும் அரசியும் தான் மிகவும் மனம் கனத்து தங்களது அறையில் அமர்ந்து இருந்தனர். அமரபுசங்கனின் இந்நிலைப் பற்றி பேரரசரும், மகாராணியாரும் வந்து கேட்டாள் என்னவென்று பதில் உரைப்பது? இந்த திரவம் அவனது அன்னை செய்து வைத்திருந்தாலுமே அதை அவன் பருகிய பின் உடல் மறைந்து போகும் இந்த நிலையை வைத்துக் கொண்டு எப்படி அவனுக்கு ஓர் குடும்பம் அமைப்பது? அன்றைய பகல் பொழுதினில் தான் ருத்ரக்கோட்டை அரசியார் கூட அவனது திருமணம் பற்றி பேசினார். இந்நிலையில் எப்படி அதை நடத்துவது? அமரனின் மனநிலையும், உடல்நிலையும் என்ன?
இப்படியாக பல சிந்தனைகள் இருவரின் உள்ளத்திலும் ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் குகை சென்று திரும்பும்போதே விடியத்துவங்கிவிட்டது. அதனால் வனயட்சி தனது குடிலுக்கு சென்று நீராடி வனதேவிக்கு பூஜை செய்துவிட்டு வருவதாக கூறிச் சென்றிருந்தார்.
“அரசே.. விரைவில் நீராடி வாருங்கள். நாமும் தேவியின் ஆலயம் சென்று வருவோம்..” என அரசியார் கூறிய பின் எழுந்துச் சென்று தயாராகி வந்தார். அரசியாரும் அதற்குள் குளித்துவிட்டு பூஜைக்கு வேண்டிய மலர்களை ஏற்பாடு செய்யும்படி பணிப் பெண்களிடம் கூறிவிட்டு, அபிஷேக ஆராதனைகளுக்கு தேவையான அனைத்தும் தயாராக வைத்திருக்கக் கூறினார்.
அரசர் பட்டுத் துணி இடுப்பில் உடுத்தி, மேல் துண்டு மட்டும் அணிந்து அந்த கோட்டையின் வடகிழக்கு மூலையில் குடியிருக்கும் வனதேவி ஆலயம் சென்றார். பெரும் மரங்களின் வேருக்கு நடுவே சுயம்புவாக தோன்றியிருக்கும் அந்த தேவிக்கு அரசரும், அரசியாரும் அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனைகள் செய்து மனமார பிரார்த்தித்து தங்களது அறைக்கு திரும்பினர்.
அதே நேரத்தில் தான் வனயட்சியும் அங்கே வந்து சேர்ந்தார். ஆருத்ராவும் குளித்துத் தயாராகி அரசரின் அறை வாயிலில் வந்து நின்று அனுமதி கேட்டு உள்ளே சென்றாள்.
அமரபுசங்கன், சிங்கத்துரியன் மற்றும் வனயாத்திரை மூவர் மட்டும் இன்னமும் உடல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்தனர்.
“யாத்திரை.. இதுவரை குறித்து வைத்த நாடிகளின் கணக்கில் உனக்கு ஓர் முடிவு தெரிகிறதா?” என சிங்கத்துரியன் கேட்டான்.
“தோராயமாக அவர் உணர்ச்சிவசப்படும் பொழுதில் எல்லாம் அவரது உடலின் கட்டுப்பாடு அவரிடத்தில் இருப்பதில்லை. சிறிது நேரம் அவர் உறங்கினார் அல்லவா அப்போதும் அவரது உடல் முழுதாக மறைந்து இருந்தது. அவர் மூளை விழித்தெழும் அந்த நொடியில் அவரது உடலும் கண்களுக்கு புலப்பட்டது.” எனக் கூறவும் அமரனும் அவள் கூறுவதை கவனித்துக் கொண்டிருந்தான்.
“இன்னொரு முக்கியமான விஷயம் இவர் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதால் அவரது உடலின் சூடு எப்போதும் இருப்பதை விட நான்கு மடங்கு அதிகமாக ஆகிறது..”
“அவர் சாதாரணமாக இருக்கும்போது அவரின் உடல் சூடும், நாடியும் சாதாரண மனிதனுக்கு இருக்கும் அளவில் இருக்கிறதா?”
“இல்லை.. நேற்று நீங்கள் குகையில் எடுத்த குறிப்பில் ஒரு மடங்கு கூடுதல் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தீர்கள். இப்போது 3 மடங்கு சூடு அதிகமாகி இருக்கிறது, நாடி துடிப்பு குறைந்து இருக்கிறது. மிகவும் நிதானமாக ஒரு நிமிடத்திற்கு 45 வீதம் துடிக்கிறது. அவர் அந்த திரவத்தை குடித்ததும் அவர் உடலின் மர்ம புள்ளிகளும், மர்ம நாடியும் உயிர்பெற்று எப்போதும் இயங்க ஏதுவாக இருக்கிறது. அந்த புள்ளிகளும் நாடியும் தான் அவரது உடலை மறைய வைக்கிறது என்று நினைக்கிறேன். மொத்ததில் ரத்தமில்லா புது நாடி ஒன்று அவரது உடலில் இப்போது ஓடி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாடியின் இருப்பிடம் அவரது நாபியில் இருக்கிறது. அந்த இடம் மட்டும் நிலையாக இல்லை. ஒரு நேரம் பனிக்கட்டி போல இருக்கிறது மறுநிமிடம் சுடுநீர் போல கொதிக்கிறது. அதை மட்டும் இன்னும் சிறிது நேரம் கவனித்தால் ஓரளவு இவரது உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஆணிவேர் வரை பார்த்து விடலாம் குருவே..” என அவள் கூறி முடித்த நொடி அமரனும், சிங்கத்துரியனும் ஆளுக்கு ஒரு பக்கமாக அவளைக் கட்டிக் கொண்டனர்.
“என் குலத்தின் விடிவிளக்கே.. உனது அறிவும், ஆராயும் திறமையும் இந்த அளவிற்கு இருக்கும் என்று நான் எண்ணியதே இல்லை. விளையாட்டாக எனது மொத்த உடலையும் வெட்டிஎடுத்து பார்த்தது போல கூறுகிறாய். இப்போது எனக்கு என்னுடல் பற்றி நான் எத்தனை அறிந்து உள்ளேனோ நீயும் அத்தனை அறிந்திருக்கிறாய்.” என அமரன் அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.
சிங்கத்துரியன் முகத்தில் பெருமையும், கர்வமும் போட்டிப் போட்டுக் கொண்டு மிளிர்ந்தன.
“போதும் சகோதரா உன்னுடலை நீ கையாள கற்றுக் கொள். நீ இப்போது எங்கள் கண்களுக்கு தெரியவில்லை. நான் காற்றில் மிதப்பதாக தான் காண்பவர்களுக்கு தெரியும்.” என யாத்திரை கூறியதும் அவளை மெல்ல இறக்கி விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
“குருவே.. நான் கூறியவை சரிதானா?” என சிங்கத்துரியன் ஓர் வார்த்தையும் பேசவில்லையே என அவனிடம் கேட்டாள்.
“குருவை மிஞ்சும் சிஷ்யையாக நீ மாறிக்கொண்டே வருகிறாய் என அவன் வாயடைத்து நிற்கிறான் யாத்திரை. உனது கணிப்புகளை கேட்ட எனக்குமே உன்னை தூக்கி சுற்ற ஆசை வந்தது. அற்புதம் உனது கவனமும், ஆராயும் தன்மையும்.. நீ நீடூழி வாழ்ந்து இவ்வுலகிற்கு நல்லவை பல செய்வாயாக..” என வனயட்சி அவளை பாராட்டினார்.
ஆருத்ராவும் அவளைக் கட்டிக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். அரசரும் அரசியாருமே தங்கள் புதல்வியின் அறிவைக் கண்டு மகிழ்ந்து நின்றிருந்தனர். இத்தனை மாதங்களாக அவள் கோட்டைக்கு வராமல் என்ன கற்றுக்கொள்கிறாள் என்ற அரசியாரின் நச்சரிப்பு கேள்விக்கு சான்றாக இந்த காட்சி அமைந்து போனது. அரசர் அரசியாரிடம் கண்களாலேயே, ‘பார்த்தாயா என் மகளை?!’ என பெருமையாக கூறினார். அரசியாரும் பெருமைப் பொங்க யாத்திரையை பார்த்துவிட்டு அரசரைப் பார்த்து சிரித்தார் தலையசைத்தபடி.
“மகளே உனது கணக்குகள் அனைத்தும் சரி தான் இன்னும் நீ முக்கியமான சில விஷயங்களை கவனிக்க வேண்டும்..” என வனயட்சி அவளது காதுகளில் சில விஷயங்களை கூறினார்.
அவள் அவரின் முகம் பார்த்துவிட்டு தனது அறைக்கு ஓடிச் சென்று ஓர் சுவடியை கொண்டு வந்து அவரிடம் காட்டி விவரம் கேட்டுக் கொண்டாள்.
“சரி யட்சி.. நான் அதை பார்த்து கொள்கிறேன். நீங்கள் முழு கதையை கூறுங்கள்..”
“முழு கதை நிச்சயம் யுவராஜர் வந்த பின் தான் கூற வேண்டும். அதுவரை நீயும், துரியனும் அமரனுடன் இருந்து அவனை கண்காணித்தபடி இருங்கள்.” என அவளிடம் கூறிவிட்டு அமரன் அருகே வந்து, “மகனே.. உனக்காக உன் அன்னை சில விஷயங்களை உனது அறையில் இருக்கும் உங்கள் சிறுவயது ஓவியத்தின் பின்னே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள். உடனடியாக அதை நீங்கள் கண்டுணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது. உணவுண்டவுடன் மூவரும் கிளம்புங்கள்..” எனக் கூறி அவனின் கையில் ஓர் வரைப்படம் கொடுத்து கைக்கு அடங்கும் சிறிய வாளும் கொடுத்தார்.
“நிச்சயம் புறப்படுகிறேன் அம்மா.. தாங்களும் என்னுடன் வரலாமே..”
“இப்போது வரமுடியாது மகனே.. என் சிங்கம்மாவிற்கு சில விஷயங்களை நான் சொல்லவேண்டியது உள்ளது. யுவராஜன் இன்னும் எட்டு நாட்களில் கோட்டை வந்து விடுவார். அப்போது உன்னையும், அவரையும், மகாராணியாரையும் அங்கு வந்து சந்திக்கிறேன்.” எனக் கூறி நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வதித்தார்.
“அப்படியென்றால் மஹாராஜா?” யாத்திரைக் கேட்டாள்.
“அவர் நாளை மாலை இங்கே வந்துவிடுவார் மகளே. அவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்யச்சொல்லுங்கள்.. நமக்கு இனி வேலைகள் தலைக்கு மேலே இருக்கின்றன. யுவராஜன் வந்ததும் திருமணம் பற்றியும் பேசி ஒரு முடிவிற்கு வந்து விடவேண்டும். அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அந்த பாதையில் நடக்கத் துவங்கிவிட்டோம். இனி செயல்கள் யாவும் அம்மையப்பனுடையது..” என வனத்தினையும் ஆகாசத்தையும் நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார்.
அதற்குபின் அமரனுடன் சிங்கத்துரியனும், வனயாத்திரையும் பிரயாணம் செய்யத் தயாராகினர்.
வனத்தினூடே செல்லலாம் என திட்டமிட்டு மூவரும் குதிரைகளில் புறப்பட்டனர். ருத்ரக் கோட்டை அரசர் ஆதித்ய அரசரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யும்படி கூறி மந்திரியிடம் கூறினார். மந்திரியும் அன்று அதிகாலை வந்த ஓலையை அவரிடம் காட்டிவிட்டு அதற்குண்டான ஏற்பாடுகளையும் கட்டளைகளாக பெற்றுக் கொண்டு விரைவாக செயலில் இறங்கினார்.
ருத்ரக்கோட்டை எதிர்பார்த்தது போலவே அடுத்த நாள் மதியமே பேரரசர் அங்கே வந்து சேர்ந்தார். வந்தவர் நேராக வனயட்சியின் குடிலுக்கு சென்று அங்கே அமர்ந்திருக்கும் வனதேவியை விழுந்து வணங்கினார்.
“யட்சி.. இனி தாங்கள் என்னுடன் வரவேண்டும். நமக்கு பல வேலைகள் இருக்கின்றன. பல உயிர்கள் வதைப்பட்டு துடித்துக் கொண்டுள்ளன. அவற்றை எல்லாம் காக்க தங்களின் பங்களிப்பு இப்போது மிகவும் எங்களுக்கு தேவை. இதை மகாராணியார் தங்களிடம் கொடுக்கச்சொன்னார்.” என ஓர் ஓலையும் கொடுத்தார்.
“வணங்குகிறேன் அரசே.. நான் எங்கிருந்தாலும் இந்த இயற்கையை விட்டு விலகுவதும் இல்லை, தள்ளி நிற்பதும் இல்லை. தங்கள் சகோதரியின் உயிர் தியாகம் இப்போது பலன் பெற போகிறது. அதற்கு முதல் கட்டமாக அவர் தயாரித்த மூலிகை திரவத்தை அவரது மகனே பருகிவிட்டார்.” என அவருக்கு காஞ்சனையின் வாழ்வு முதல் இங்கிருக்கும் குகை வரையில் அத்தனையும் கூறிவிட்டு உடனே யுவராஜானுக்கும், ஆருத்ராவிற்கும் திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.
“தங்கள் சொல்படி நிச்சயம் நடக்கும்.. தாங்கள் எப்போது கோட்டை வருவீர்கள்?”
“யுவராஜன் கோட்டை வந்த இரவு நான் அங்கே இருப்பேன்..” எனக் கூறி மேலும் சில விஷயங்களை பேசி முடித்தனர்.
பேரரசர் முகத்தில் கோபமும், கலக்கமும் மாறி மாறி வந்து செல்வதை கவனித்த ஆருத்ரா விஷயம் பெரிதென ஊகித்துக் கொண்டாள்.
தனது தனிப்படையை களத்தில் இறக்கும் நேரம் வந்ததையும் உணர்ந்து தனது தனி வனத்தினில் நுழைந்தாள். அங்கே பல வகையான பறவைகள், பாம்புகள், நாய்கள், நரிகள், காட்டு முயல்கள் என பல இனங்களை சேர்ந்த அத்தனை உயிரினங்களையும் ஒரே இடத்தில் காணலாம்.
அவைகளிடம் அவைகளின் பாஷையில் பேசியவள், அவள் கேட்கும் விஷயங்களை விரைவில் கொண்டு வந்து சேர்க்க கட்டளையிட்டதும், அனைத்தும் அங்கிருந்து வேகமாக கிளம்பின, எதிரிகளையும், துரோகிகளையும் களையெடுக்கவும், கணக்கெடுக்கவும்..