95 – ருத்ராதித்யன்
சயன கோலத்தில் தேவியின் திருவுருவம் கண்களுக்கு தெரிந்ததும் அங்கு ஒரே தாவலில் சென்று நின்றவனை ஏமாற்றும் விதமாக மீண்டும் தேவியவள் உருவம் மறைந்தது.
நரசிம்மன் மகதனை ஓர் பார்வை பார்த்துவிட்டு அங்கிருக்கும் சிறுகுன்றின் மேலே ஏறி நின்று கைகளை உயரத்தூக்கி தேவியை மனதின் ஆழத்தில் இருந்து அழைத்தான்.
“அம்மா வனதேவி.. உன் பிள்ளை உன்னை காண வந்திருக்கிறேன். கண்முன்னே வந்து வந்து மறைந்து மாயம் நிகழ்த்துகிறாய். உன் விளையாட்டை உணர்ந்து உள்ளம் உவகை கொண்டாலும், மறுபக்கம் உனக்கு மலர்களை சூட்ட முடியாமல் மனம் சுணங்கி நிற்கிறேன். ஏதேனும் தவறாக நான் கூறியிருந்தால் எனை மன்னித்துவிடு. உனை நம்பி உன் ஆசி பெற வந்திருக்கிறேன். அருள்செய்..” என வாய்விட்டு கூறி கண்கள் திறந்தான்.
அவன் நின்ற குன்றுக்கு எதிர்பக்கமாக அவள் மீண்டும் தோன்றினாள். இம்முறை நரசிம்மனும் மகதனும் அவசரமாக அங்கே ஓடவில்லை. பொறுமையாக அங்கேயே நின்றனர்.
சுமார் பத்து நிமிடங்கள் கழித்து அவர்கள் அந்த குன்றில் ஏறி நின்றதும் மீண்டும் மறைந்தாள். இப்படியாக இரண்டு ஜாமம் அவள் அவர்களுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள்.
மகதனுக்கு இந்த தாமதத்தின் காரணம் புரிந்தது ஆனால் நரசிம்மன் அதை உணரவேண்டும் என்று அமைதியாக தேவியின் விளையாட்டில் பங்கு கொண்டான்.
மூச்சு வாங்க இருவரும் யாளிக்கு அருகே வந்து அமர்ந்தனர். மகதன் ஓர் திசையைப் பார்த்து அமர்ந்தபடி யாளியின் மீது படுத்தான். யாளியும் அவன் பார்க்கும் திசையையே பார்த்தது. இருவரும் ஒரே திசையில் பார்ப்பதால் நரசிம்மன் அங்கே பார்த்தான்.
அவனது கண்களுக்கு அங்கே மரமும், மலர்களும் தான் தெரிந்தன. ஆனாலும் இத்தனை நேர விளையாட்டில் யாளி அமைதியாக ஒதுங்கி நிற்பது வழக்கமானதாக அவனுக்கு தோன்றவில்லை. நேற்று அமரன் காற்றில் கலந்து வந்ததை நொடிக்கும் குறைவான நேரத்தில் உணர்ந்து அவனை தடுத்து நிறுத்திய ருத்ரவிக்னன் இன்று நானும், மகதனும் இத்தனை ஓடி களைத்து வந்து அமர்ந்தும் கூட தங்களை சட்டை செய்யாமல் அதே திசையைப் பார்ப்பது அவனுக்கு யோசனையை கொடுத்தது.
நரசிம்மன் மட்டுமே பதற்றமாக அங்கே இருந்தான். மகதன் அவனுடன் ஓடினாலும் பதறவில்லை, தவிக்கவில்லை. அவன் விளையாட்டாக அங்கும் இங்கும் குதித்தது இப்போது தான் அவனது கருத்திற்கு புலப்பட்டது.
இங்கே வந்த நொடி நரசிம்மன் விரைவாக செல்லவேண்டும் என்று கூறியதும் உடன் நினைவு வந்தது. தான் செய்த தவறும் அவனுக்கு புரிந்தது. இப்போது எழுந்து மகதனும், யாளியும் பார்த்த திசையில் மெல்ல நடந்துச் சென்றான்.
அங்கே ஓர் மாயத்திரை அவன் முன்னே விரிந்து கிடந்தது. அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பள்ளம் இருப்பது போல தெரிந்தது. ஆனாலும் அவனது மனம் அங்கே தேவி இருக்கிறாள் என்று கூறியது. அவன் மனம் கூறுவது பொய்யானால் அவனது உடல் கூட மிஞ்சாது. மன்னவன் மனம் திடமாய் உரைக்க தேவியின் மேலே பாரத்தை போட்டுவிட்டு, உச்சியில் இருந்து பள்ளமாக தெரிந்த பகுதியில் காலை வைத்தான், அங்கிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தான்.
மகதன் அவன் பின்னோடு வந்து ஓர் மரத்தின் மேலே விழுந்து நின்று அவனது உடையை வாயினால் கவ்வி பிடித்தான்.
“பள்ளம் பெரிதாக இல்லை மகதா. என்னை விடு நான் நிலம் தொடுவேன்.”
மகதன் அவன் கூறியதை கேட்காமல் அவனை மேலே இழுத்து மரக்கிளையில் அமரவைத்தான்.
அவனை தன்னை பின்தொடரும்படி கூறிவிட்டு, அந்த மரத்திற்கு மேலே தெரிந்த கிளையில் தாவி ஏறி அதற்கு எதிர்பக்கமிருக்கும் மரத்தை தொட்டு அதற்கு மேலே தெரிந்த பாறை பிளவில் சென்று நின்றான்.
நரசிம்மனும் அவனைப் பின்தொடர்ந்து அந்த பாறை பிளவிற்கு அருகே நின்று மகதனைப் பார்க்க, அவன் அந்த சிறு பிளவின் வழியாக உள்ளே நுழைந்தான்.
பாம்பு செல்லும் அளவே இருந்த இடைவெளியில் மகதன் எவ்வாறு சென்றான் என்று சிந்தித்தபடி அவனும் அந்த பிளவின் மத்தியில் காலை வைத்ததும் அவன்உடல் செல்லும் அளவிற்கு பாறை இடம் கொடுத்தது.
அப்படியாக சுமார் நான்கு நாழிகை நேரம் அந்த பாறைக்குள்ளே நடந்து, ஒரு கை அகலம் கொண்ட வட்ட வடிவ சுனை அருகே வந்து நின்றனர். அதற்கு மேலே செல்ல இடமில்லை. இந்த நீரும் ஆழமாக இருப்பதைப் போல தெரியவில்லை.
மகதன் அவனது தலையை உள்ளே கொடுக்கும்படி செய்கை செய்தான். நரசிம்மனும் மறுநொடி தலையை உள்ளே நுழைத்தான். கண்களை திறந்து நீரில் பார்க்க, இளஞ்சிவப்பு நிறத்தில் அன்னையின் உருவமானது பிரகாசித்துக் கொண்டிருந்தது.
அப்படியான ஒரு பிரகாசத்தை இதுவரையில் எந்த இடத்திலும், எந்த பொருளிலும் அவன் கண்டதேயில்லை. அப்படியான ஒளி வீச்சு அவளிடம் இருந்து வெளிபட்டது.
அவன் மனம் அவள் புன்னகையில் இலயித்தநொடி அவள் அந்த நீருக்கு மேலே காட்சிக் கொடுத்தாள். உள்ளிருந்ததை விட பலமடங்கு பிரகாசம் கொண்டு, சிறுகுழந்தை உருவத்தில் இருந்து நூறாண்டு கிழவியின் உருவம் வரையிலும் அவர்கள் இருவருக்கும் கிடைத்தது.
யாளியும் இதைக் கண்டால் நன்றாக இருக்குமென்று எண்ணிய நேரம் இருவரும் அவர்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்திருந்தனர். யாளியும் அங்கே புன்னகை முகமாக மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருந்தது.
பாறைகளுக்கு நடுவே அவர்கள் இருந்ததை இங்கிருந்தே யாளி பார்த்துக் கொண்டிருந்தது. அங்கிருக்கும் அத்தனை மாயைகளும் யாளிக்கு தெளிவாக தெரிந்தது. அதனால் தான் ஆரம்பம் முதலே அது ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.
இது அவர்களின் பரீட்சை நேரம் அங்கே யாளிக்கு வேலையில்லை என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தது. நரசிம்மன் யாளியைப் பற்றி எண்ணியதும் தேவி நிலத்தின் மேலே வந்து அனைவருக்கும் காட்சி கொடுத்து அமர்ந்துக் கொண்டாள்.
நரசிம்மன் இப்போது அமைதியும், தெளிவும் கொண்டு மலர்களை அவளின் மேல் சொறிந்தான். பரிபூரணமாக அவளை மனதில் நிறைத்துக் கொண்டு அவளின் முன்னால் விழுந்து வணங்கினான்.
அவன் கைகளில் மூன்று கருப்பு நிற மலர்கள் வந்து விழுந்தன. மகதன் அதில் ஒன்றை உட்கொள்ள, மற்ற இரண்டையும் நரசிம்மன் பத்திரப்படுத்திக் கொண்டான்.
“இங்கு வந்ததும் உடனே தரிசனம் கண்டு அடுத்த இடம் செல்ல நான் அவசரம் கொண்டது தவறு என்று புரிந்தது. நிகழ்காலத்தில் ஆகவேண்டிய காரியமும், கிடைக்கக் வேண்டிய அனுபவமும் பெறாமல் வரும்காலத்திற்கு செல்ல நான் அவசரப்பட்டது பெரும்பிழை தான். இனி இதுபோன்ற தவறை செய்யமாட்டேன். நிகழ்காலத்தை முழுவதுமாக அனுபவிப்பேன்.” என அவளின் முன்னே அமர்ந்து பிரமாணம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து யாளியின் மேலே அமர்ந்து வடமேற்கு திசைக்கு பயணத்தைத் தொடர்ந்தான்.
அடுத்த இடம் அமரக்கோட்டைக்கும், நவ-வர்ம நாட்டிற்கும் இடையே இருக்கும் எல்லையில் அமைந்திருந்தது.
நரசிம்மனை கண்டபின் அமரபுசங்கன் நேராக சிங்கத்துரியன் இருக்குமிடம் சென்றான். ருத்ரக் கோட்டையில் வனயட்சியிடம் பாதி குறிப்புகளை மட்டும் காட்டி விடைக் கேட்டு அமர்ந்து இருந்தான்.
“என்ன ஆனது?”
“விரைவில் கோட்டை வந்திடுவார்.. மேற்கு திசை சென்றுவிட்டார்..”
“நல்லது. நானும் இந்த குறிப்புகளின் முக்கிய புள்ளிகளை கேட்டுக்கொண்டு உங்களை வந்து சந்திக்கிறேன் இளவலாரே..” என சிங்கத்துரியன் கூறியதும் அமரன் அங்கிருந்து புறப்பட்டு தன் கோட்டைக்கு சென்றான்.
வனயாத்திரை ஆதித்ய கோட்டையில் தனியாக ஆராய்ச்சி கூடம் அமைத்து அவளது ஆராய்ச்சியினை தொடங்கியிருந்தாள். சிங்கத்துரியனின் போதனையும், அவளது ஆர்வமும் சேர்ந்து அவளை பல விஷயங்களை தேடி செல்ல வைத்தது. அப்படி அவள் ஓர் குழந்தையை உருவாக்க தேவையான சூழலும், தேவையான மூலிகைகளும் இருக்குமிடம் ஆதித்ய கோட்டையின் அடர்வனம் அவளுக்கு பேருதவியாக இருந்தது.
கோட்டையை விட்டு வெகுதூரம் தள்ளி அவளுக்கு தேவையான ஆட்களை நியமித்து அரசரும் அரசியுமே நேரடியாக அவளை பார்த்துக் கொண்டனர்.
விஸ்வக்கோட்டையின் அரசன் செய்யும் அநியாயங்களை எல்லாம் அங்கே அமர்ந்து விவாதிப்பதும் நடக்கிறது. ஆருத்ரா தந்தைக்கு துணையாக வனம் சென்று தெற்கு பக்கம் முழுதுமே தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து எங்கும் யாரும் மிருகங்களை கடத்தி செல்லாத அளவிற்கு காவலை பலப்படுத்தியிருந்தாள்.
இதனால் சேயோன் அரசகேசரியின் அதீத கோபத்திற்கும் ஆளாகி வந்தான். இன்னும் ஒரு வாரத்தில் நவ-வர்ம நாட்டின் இளவரசன் விஸ்வக்கோட்டை வரப்போகிறான். அவன் வந்ததும் அவனது கொடூரமான ஆராய்ச்சிகள் அவனுக்கென ஏற்படுத்தியிருக்கும் இடத்தில் நடக்கத் தொடங்கும்.
அந்த ஆராய்ச்சியில் மனிதமும், கருணையும் என்பது சொல்லுக்கு கூட இருக்காது என்பது அவர்கள் அறிந்திருந்தனர்.
“இப்படியே சென்றால் நமது அடவி வாழ் உயிரினங்கள் அனைத்தும் அவன் இங்கு வந்த 5 வருடங்களில் பாதிக்கு மேல் அழிந்து போகும். ஏற்கனவே பல பகுதிகளில் இணை சேர விடாமலும், புதிதாய் ஈன்ற குட்டிகளையும் கடத்தி செல்கின்றனர். நாம் இத்தனை கட்டுக்காவல் வைத்தும் எப்படி அவர்களால் விலங்குகளை கொண்டு செல்ல முடிகிறது?” என மஹாராஜா கொதித்தார்.
“மாயாஜாலம் நடப்பது போல தான் சில இடங்களில் நடந்திருக்கிறது அரசே.. நமது வீரர்கள் அவர்களை சுற்றி வளைக்கும் வேலையில் அவர்கள் அங்கிருந்து மறைந்து இருக்கிறார்கள்..” என வனம் காக்கும் மந்திரி கூறினார்.
“ருத்ரக் கோட்டையின் எல்லையில் ஆருத்ரா இருவரை பிடித்து இருக்கிறார். கையில் வனப்பறவைகளின் முட்டைகள் இருந்திருக்கின்றன. அதுவும் நூற்றுக் கணக்கில்.. அத்தனை முட்டைகளும் ஆராய்ச்சி நிமித்தமாக அவர்கள் கைகளில் கிடைத்திருந்தால் ஒவ்வொரு வகையில் ரணப்பட்டிருக்கும்.. இருவரில் ஒருவன் கொடுவிஷம் உண்டு அந்த நொடியே மாண்டுவிட்டான். மற்றொருவன் வனயட்சி கண்காணிப்பில் வைத்தியம் பார்க்கப்பட்டு வருகிறான். அமரபுசங்கர் அங்கே சென்று மற்றதை பார்த்துக் கொள்வார். இதுபோல இனி தொடரக்கூடாது. இணை சேரும் காலங்களில் யாரும் வேட்டையாடவே கூடாது என்று கடுமையாக கட்டளைகள் பிறப்பியுங்கள். மீறினால் கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும் என்று அனைத்து ஊர் நிர்வாக மையங்களுக்கும் உத்தரவு அனுப்புங்கள். அம்புவிக்கோட்டை அரசர்களிடம் இருந்து தகவல் ஏதேனும் வந்ததா முதல் மந்திரி?” என அரசர் கேட்டார்.
“இல்லை அரசே.. எந்த தகவலும் மதியம் வரையிலும் வரவில்லை..”
அரசர் மனதிற்குள் நரசிம்மனின் பயணம் எதுவரை சென்றிருக்கும் என்ற யோசனையில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார். அப்போது மகாராணியார் உள்ளே வந்து அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு தனது ஆசனத்தில் அமர்ந்தார்.
“இன்றைய கூட்டத்தின் முடிவு சாதகமா? பாதகமா அமைச்சரே?” என கேள்வியெழுப்பினார்.
“இரண்டும் சமமாக உள்ளது அரசியாரே.. நமது இடங்களில் பல கைகூலிகள் இருக்கிறார்கள் என்பது நிச்சயமானது…”
“அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்?”
“கொடூரமான தண்டனை வழங்கவேண்டும் என்று யோசித்து வைத்திருக்கிறோம்..”
“இல்லை.. அவர்களை பத்திரமாக நமது மேற்கு எல்லை கோட்டையில் வைத்து சகல வசதிகளும் செய்து கொடுங்கள்.. வெளியேற விடாமல் அனைத்து போகங்களும் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யுங்கள்.”
அவர் இப்படி கூறியதும் மற்றவர்கள் குழப்பமாக பார்க்க மஹாராஜா உதட்டில் மென்னகை அரும்பியது. அவரது உதடுகள், “என்மகன் வந்துவிட்டான்..” என முணுமுணுத்தது.

