17 – காற்றின் நுண்ணுறவு
காரில் ஒளிந்திருந்த நாச்சியாரும் ராகவியும் புதிதாய் வந்தவனைப் பார்த்தனர்.
அங்கிருந்து தப்ப முடியுமா என்பது தான் நாச்சியாரின் அதிகபட்ச சிந்தனையாக இருந்தது.
ம்ரிதுள்…. அதித் ஓவிஸ்கரின் தம்பி. தன் தந்தையின் மற்றொரு மனைவியின் மைந்தன்.
அவன் தலைமையில் அமர்ந்து போடும் திட்டங்களை, களத்தில் இறங்கி கூலியாட்களுடன் கலந்து வேலை செய்பவன்.
இவன் தன்னை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ள முனைந்ததும் இல்லை.
இவனது தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆதலால் தமிழ் ஆண்மகனாகவே வளர்ந்து பல கலைகள் கற்றவன். ஆனால் அவன் பெயரின் அர்த்தத்திற்கு நியாயம் செய்யாது வாழ்ந்து வருகிறான்.
“வாங்க ம்ரிதுள்…. அதித் பாஸ் வருவாருன்னு நினைச்சேன். உங்கள சந்திச்சதுல சந்தோஷம்”, என கஷ்டப்பட்டு முகத்தில் சிரிப்பை வரவழைத்து வரவேற்றான்.
“கஷ்டப்பட்டு சிரிக்காத யோகேஷ். அந்த பொண்ணுங்கள வச்சிருக்கற இடத்துக்கு போ”, கத்திரியில் கத்தரித்தாற் போல வேலையில் இறங்கக் கூறினான்.
“உடனே போலாம்…. “, என காரின் முன்பக்க இறுக்கையில் அமர்ந்து அவனே காரை எடுத்தான்.
ம்ரிதுள் பின்பக்கத்தில் ஏறிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
ராகவியும், நாச்சியாவும் மூச்சைக் கூட வெளியிட முடியாமல் அமைதிக் காத்தனர்.
சிறு சத்தமும் அவர்களை வெளிகாட்டிவிடக்கூடும். ஆதலால் வாய் பொத்தி உடல் குறுக்கி அடியில் படுத்துக்கொண்டிருந்தனர்.
“யோகேஷ்…. வண்டிய காட்டு பங்களாக்கு விடு”, என ஆணையிட்டான்.
“அந்த பொண்ணுங்க…..”, என யோகேஷ் தயக்கமாக ஆரம்பித்த போதே, “சொன்னத செய்” , என்ற பதில் முகத்தில் அடித்தாற் போல வந்தது.
காட்டு பங்களாவிற்குச் செல்ல எப்படியும் நான்கு மணிநேரம் ஆகும். அதுவரை பெண்கள் இருவரும் அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது சற்று கடினம் தான்.
தமிழோவியன் சமைக்க தேவையான காய்கறிகளை வெட்டிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு முக்கியமான அழைப்பு வர பாலாவை கவனிக்க கூறிவிட்டு அலுவலக அறைக்குள் புகுந்துக் கொண்டார்.
பாலா காலை டிபனுக்கு சாம்பார், காரசட்னி, இட்லி என அனைத்தும் தயார் செய்திருந்தாள்.
அவள் சமையலறை விட்டு வெளியே வரவும், தமிழோவியன் தன் அலுவலக அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
“அப்பா ….. சமையல் முடிச்சிச்சிட்டேன். ஐஞ்சு நிமிஷம் குளிச்சிட்டு வந்துடறேன்ப்பா… அப்பறம் ஒன்னா சாப்பிடலாம்”, எனக் கூறி பாலா குளிக்க தேவையானவைகளை எடுத்துக்கொண்டிருந்தாள்.
“சரி வதனிம்மா… நான் வல்லகிய எழுப்பறேன். அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருந்தது உனக்கு ஹெல்ப் பண்ண முடியல சாரிடா….”, தமிழோவியன்.
“இதுல என்னப்பா இருக்கு… இதுக்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு…. நீங்க அவள எழுப்புங்க.. கும்பகர்ணியாட்டம் தூங்கறாப்பா இப்ப எல்லாம்….. “, எனக் கூறியபடி பாத்ரூமில் புகுந்துக் கொண்டாள்.
“வல்லகி…. செல்லம்மா… எழுந்திரு டா….”, என மெல்ல அவளை எழுப்பினார்.
” இன்னும் கொஞ்ச நேரம் அவ தூங்கட்டும்ங்க…. “, நிலவரசி.
“சாப்டு தூங்கட்டும்மா… நான் உன்னை தயார் செய்யறேன் வா… வல்லகி … எழுந்திரு டா”, அவளைச் சற்று பலமாகத் தட்டியதும் கண்விழித்தாள்.
“சாரிப்பா…. நான் டிபன் செய்யறேன்..நீங்க குளிச்சிட்டு வாங்க….”, என அரைதூக்கத்தில் உளறினாள்.
“அதுல்லாம் எல்லாமே ரெடி. நீ குளிச்சிட்டு வா வகி சாப்டலாம். நேத்து நைட்டும் சரியா சாப்பிடல.. இப்ப சரியான பசில இருக்கேன் …. “, பாலா தயார் ஆனாள்.
“சரி. அம்மாவ நான் ரெடி பண்றேன்ப்பா….”
“என் பொண்டாட்டிய நான் தான் ரெடி பண்ணுவேன். நீ போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா. வதனிம்மா பசில இருக்கா பாரு.. நாங்க அடுத்து வரோம். அரசி.. கை குடு”, என மென்மையான புன்னகையோடு அவரைக் கைப்பற்றி அருகில் அமரவைத்து கையில் ஏந்திக்கொண்டே பின்பக்கம் சென்றார்.
இப்படி செல்பவர்களைக் கண் இமைக்காது பார்த்துவிட்டு, வல்லகியும் பாலாவும் மென்னகையைப் பரிமாறிக்கொண்டனர்.
பாலாவின் அவசரத்தில் வகியும் குளிக்கச் சென்றுவிட்டு பத்து நிமிடத்தில் தயாராகி வந்து பாலாவிற்கு முதலில் இட்லி வைத்து பின் முறுகலாக தோசை சுட்டுக் கொடுத்தாள்.
“சுட்டுட்டு நீயும் வா வகி. சேர்ந்தே சாப்பிடலாம்… “, பாலா ஹாலில் அமர்ந்துக் கத்தினாள்.
“கத்தாத டி. வரேன். அப்பா அம்மா வந்ததுக்கு அப்புறம் அவங்களுக்கு சூடா சுட்டுக்கலாம்… பானை தண்ணி வேணுமா?”, சமையலறை உள்ளிருந்துக் கேட்டாள்.
“நான் உனக்கும் எடுத்துட்டு வந்துட்டேன். நீ சாப்பிட வா…..”, இவர்கள் உரையாடல் வீட்டுற்கு வெளியே மேலும் நான்கு ஜோடி காதுகளில் விழுந்தது.
“வரேன் வரேன்… எதுக்கு தான் இப்படி கத்துவியோ தெர்ல பாலா நீ…. ஊருக்கே கேக்கும் நீ பேசறது”, வல்லகி செல்லமாகக் கடிந்தபடி வந்தமர்ந்தாள்.
“கேக்குது ஊருக்கு.. ஏன் பாதாள லோகம் வரைக்கும் கேக்குதுன்னு சொல்லேன்”, என பாலாவும் கொணட்டிக்கொண்டாள்.
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இருவரும் சகஜமாக உரையாடுவது இருவருக்குமே மனதிற்கு இதமாக இருந்தது.
“அந்த டாக்டர் என்ன சொன்னாரு அப்பா கிட்ட?”, வல்லகி வாயில் இட்லியைப் பிட்டு வைத்தபடிக் கேட்டாள்.
“சாப்பிடறப்ப பேசக்கூடாது”, எனக் கூறியபடி நிலவரசி தமிழோவியனின் கையில் மிதந்து வந்தார்.
“இத சொல்ல மட்டும் சரியா வந்துடுவீங்களே…. நாச்சியாவும் வருவாளே உங்களுக்கு வரிஞ்சிகட்டிகிட்டு… “, எனக் கூறியதும் அத்தனை நேரம் இருந்த லகுதன்மை முற்றிலும் மறைந்துப் போனது.
வல்லகி மீண்டும் மனப்பாரம் கொண்டு உண்ணாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
தமிழோவியன் நிலவரசியை தயார் படுத்திவிட்டு, தானும் தயாராகி வரும் வரையிலும் வல்லகி அப்படியே அமர்ந்திருப்பதுக் கண்டு, ” செல்லம்மா… சீக்கிரம் சாப்பிடு அக்காவ தேடி போலாம். உன்னால அவள கண்டுபிடிக்க முடியும்”, என அமைதியாகக் கூறினார்.
அவர் கூறியது கேட்டு நிலவரசியும் ஏதும் புரியாத பாவனையில் தன் கணவரைப் பார்த்தார்.
“என்னப்பா சொல்றீங்க…. அக்கா இருக்க இடத்த இவ எப்படி கண்டுபிடிக்க முடியும்?”, பாலாவும் புரியாமல் கேட்டாள்.
“வல்லகி தெருமுனைல உட்கார்ந்திருந்த இடத்துல தான் அரசி குண்டடிப்பட்டு கிடந்தா… அந்த இடத்துல வச்சி தான் நாச்சியாவ கடத்தி இருக்காங்க….”, தமிழோவியன்.
“ஆனா…. அப்பா…. அக்கா இப்ப எங்க இருக்காங்க ன்னு அவளால எப்படி சொல்ல முடியும்?”, பாலா.
“முடியும். இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்து அவ மனச ஒருமுகப்படுத்தி காத்தோட பேசணும், பழகணும், உறவாடணும்….”, ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கூட்டி உரைத்தார்.
“அது எப்படிப்பா நான் பண்ண முடியும்?”, வல்லகி.
“உன் உடம்புல ஏற்பட்டிருக்கற மாற்றங்கள் உன்னால முடியும்னு சொல்லுது செல்லம்மா…. சாப்பிடு… நமக்கு நிறைய வேலை இருக்கு…. தர்மதீரன் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு… இன்னும் ஒரு சிலர நாம போய் சந்திக்கணும்… “, என யோசனையில் ஆழ்ந்தபடியே பேசினார்.
தன்னால் நாச்சியாவை கண்டுபிடிக்க இயலும் என்ற வார்த்தையே வல்லகியைப் புத்துணர்ச்சிப் பெறச் செய்தது.
தன்னுடன் பிறந்தவளைக் கண்டுப்பிடிக்கத் தயாரானாள்.
நாலரை மணி நேர பயணத்திற்குப் பின், காட்டிற்குள் செல்லும் பாதையில் கார் நின்றது.
“யோகேஷ்…. எனக்கு பத்து பேர் வேணும்…. அந்த ஆர்க்கியாலஜி டீம இங்க கொண்டு வந்துடு…….. நாளைக்குள்ள…. “.
“அவங்க தான் இன்னும் நமக்கு தேவையானத கண்டுபிடிக்கலையே ம்ரிதுள்….. “.
“அந்த ப்ரோபசருக்கு நல்லாவே தெரியும்… அவனுக்கு தெரிஞ்சது அசிஸ்டண்ட் பொண்ணுக்கும் தெரியும்… ”
“அந்த பொண்ணு அங்க இருக்கே.. அதையும் இங்க கொண்டு வரவா?”
“தேவையில்ல… டிக்கி தொற… இரண்டு பொண்ணுங்களும் இங்க தான் இருக்காங்க”, என அவன் சொன்னதும் அதிர்ந்து நின்றான் யோகேஷ் .
தானே டிக்கி திறந்து ராகவியையும் கைக் கொடுத்து இறக்கி அவன் எதிரில் வந்து நின்றாள் சுடரெழில் நாச்சியார்.
இருவரின் பார்வையும் கூர்திட்டிய ஆயுதமாக ஒருவரை ஒருவர் நோக்கி நின்றது……
[…] முந்தின அத்தியாயம் படிக்க.. […]