30 – காற்றின் நுண்ணுறவு
“நாச்சியா”, என வல்லகியின் குரல் எதிரே திரையில் ஒலித்தது.
“வல்லா”, என அவளும் பிடியைத் தளர்த்தினாள், அதில் ம்ரிதுள் அவளை மடக்கி அவன் கைகளுக்குள்ளே அவளைக் கட்டிக்கொண்டான்.
“நீ எங்க இருக்க? எப்படி இருக்க? அம்மாவ போய் பாத்தியா? அப்பா எப்படி இருக்காரு?”, வரிசையாகக் கேட்டாள்.
“அவங்க நல்லா இருக்காங்க நாச்சியா…. நீ ஏன் அவனுக்குள்ள நிக்கற வெளியே வா”, என வல்லகி அவள் நிற்கும் நிலையைச் சுட்டிக்காட்டினாள்.
“விடு என்ன”, என திமிறினாள்.
“கொஞ்சம் விட்டா ரொம்ப தான் துள்ளுற நீ…. விடமுடியாது”, என ம்ரிதுள் சிரித்தபடிக் கூறினான்.
வயிற்றில் முஷ்டியால் குத்த போக அவன் லாவகமாக அவள் கைகளைப் பிடித்துச் சுழற்றி அவளைத் தூரமாக நிற்கவைத்தான்.
“இருக்கறவங்கள நினைச்சி சந்தோஷப்பட்டுக்க…. சீக்கிரம் உன் தங்கச்சி கிட்ட பேசிட்டு வேலைய ஆரம்பி…. யோகேஷ்”, என அதட்டும் குரல் ஒன்று கொடுக்கவும் யோகேஷ் மற்ற ஆட்களை ஏவினான்.
அனைத்தும் ம்ரிதுள்ளின் ஆணையின்படி நடக்கிறது என்பது இனியனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
காலையில் வல்லகியை யாரோ கடத்திக் கொண்டு செல்வதாக முகுந்த் கூறியது நினைவு வந்தது. இப்போது வல்லகி திரையில் தெரிகிறாள் என்றால் இவர்கள் அனைவரும் ஒரே கூட்டம் என்ற முடிவுக்கு வந்தான்.
இதை தர்மதீரனுக்கு கூற வேண்டும் என்று எண்ணி போனைப் பார்க்க அதில் சுத்தமாக டவர் இல்லை.
“இவனுங்க எப்படி வீடியோ கால் பண்றானுங்க? நமக்கு டவரே காட்டல…. எத்தன டெக்னாலஜி வந்தாலும் கடத்தறவனுங்க தான் ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கானுங்க… காப்பாத்தறவனுக்கு தகரடப்பா தான் குடுக்கறானுங்க பாவிங்க”, முணுமுணுத்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.
இனியன் மேலும் அந்த இடத்தை, வேலை செய்வதுப் போலச் சுற்றிச் சுற்றி வந்து மனதிற்குள் வரைபடமாக வரைந்துக்கொண்டான்.
எத்தனை முயற்சித்தும் நாச்சியா அருகில் மட்டும் செல்லமுடியவில்லை. அவளுக்கு தனி காவல் ஆட்களை நியமித்திருந்தான் ம்ரிதுள்.
வல்லகி நாச்சியாவை மட்டுமின்றி அவளைச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள்.
இனியன் வேண்டுமென்றே நாச்சியாவுக்கு அருகில் வந்து அங்கிருந்து ரிஷி வினோத்தை அழைத்துச் சென்று அவர்கள் அறையில் விட்டான்.
அதில் வல்லகி புரிந்துக்கொண்டு நாச்சியாவுக்கு அவன் யாரெனத் தெரியப்படுத்தினாள்.
“நம்ம என்னதான் செஞ்சாலும் இவனுங்க நம்மல ஈஸியா ஆளுங்கள வச்சி தூக்கிட்டு வந்துடறானுங்க நாச்சி. நான் இப்ப UAE ல இருக்கேன். அப்பா பிரண்ட் பிறைசூடன், என் பிரண்ட் பாலா எல்லாரையும் இங்க ஒருத்தி கொண்டு வந்துட்டா…. “,என தான் இருக்கும் இடத்தின் விவரத்தைக் கூறினாள்.
“இங்கயும் ஸ்பீக்கர்ல போட்டு தான் படம் ஓடிட்டு இருக்கு வல்லா … ஜாக்கிரதை…. அப்ப அப்ப பேச முயற்சி பண்ணு”, நாச்சியார்.
“நீயும் முயற்சி பண்ணு.. பக்கத்துல இருக்கறவங்கள கவனி. உன்ன நம்பி இருக்கறவங்கள பாத்துக்க. எதுக்குன்னே தெரியாம இந்த லூசுங்க என்னை இங்க தூக்கிட்டு வந்திருக்குதுங்க….”, வல்லகி காலை நீட்டி எதிரில் இருந்த சோபாவில் போட்டபடி பேசிக்கொண்டிருந்தாள்.
“நான் ஒரு மாசமா இருக்கேன். என்ன தேடறேன்னு இப்ப வரைக்கும் தெரியல… “, அவளும் அங்கலாய்த்துக்கொண்டாள்.
“சரி…. அந்த பாரின் ஓநாய் கூப்பிடுது…. ஜாக்கிரதை நாச்சி”, எனக் கூறிவிட்டு தூரத்தில் வரும் ரிஷியை பார்த்துவிட்டு இணைப்பை துண்டித்தாள் வல்லகி.
“என்ன இரண்டு பேரும் இவ்வளவு கேசுவலா பேசிக்கறீங்க?”, என ரிஷி நடந்துவந்தபடியே ஆச்சரியத்துடன் கேட்டான்.
“வேற என்ன பண்ண சொல்ற? ஒப்பாரியா வைக்கமுடியும்? அவனுங்க வேலை முடியாம இந்த நாதாரிங்க நம்மல விடமாட்டானுங்க .. வா இதுங்களுக்கு தேவையான எழும்ப தேடலாம்”, எனக் கூறிவிட்டு இளவெழிலியைத் தன்னுடன் அழைத்துச்சென்றாள்.
“ஏய்…. ஓவரா பேசற நீ”, என யோகேஷ் அவ்விடம் வந்தான்.
“நேத்து வாங்குனது உனக்கு பத்தல போல… நகரு… எனக்கு வேலை இருக்கு”, என அவனை அசட்டையாகத் தள்ளி விட்டுவிட்டு நடந்தாள்.
“ம்ரிதுள்…..”, என அழைத்தபடி யோகேஷ் அவனிடம் சென்றான்.
“அவ தங்கச்சி எதுக்கு?”, ம்ரிதுள் அதித்திடம் பேசிக் கொண்டிருந்தான்.
“அவளுக்கு சில ஸ்பெஷல் பவர்ஸ் இருக்கு. நம்ம அந்த இடத்த க்ராஸ் பண்ண இவளால முடியும்ன்னு தோணுது…. “, அதித் டைஸியின் இடையை ஒரு பக்கம் தடவியபடிக் கூறினான்.
“ரொம்ப சின்ன பொண்ணா தெரியுது…. தேவையில்லாம ஒரு உயிர் கூட போககூடாது அதித்”
“அத நான் பாத்துக்கறேன். நீ அங்க சீக்கிரம் வேலை வாங்கு … நமக்கு டைம் ரொம்ப கம்மியா தான் இருக்கு…. பத்து நாள்ல நாம அந்த இடத்துக்கு போயே ஆகணும்”, என அதித் ஆவேசமாகக் கூறியபடி டைஸியை வன்மையாக ஆக்கிரமித்தான்.
ம்ரிதுள் டைஸியை உணர்வுகளற்ற பார்வைப் பார்த்து விட்டு, இணைப்பைத் துண்டித்துவிட்டுத் திரும்பினான்.
“அது…. அது டைஸி தானே?”, யோகேஷ் எச்சிலை விழுங்கியபடிக் கேட்டான்.
“ம்ம்…. என்ன விஷயமா நீ வந்த?”, ம்ரிதுள்.
“அவளும் இந்த மிஷன்ல இருக்காளா?”
“நீ எதுக்கு வந்தன்னு சொல்லு யோகேஷ்”, ம்ரிதுள் கண்டிப்பானக் குரலில் கேட்டான்.
“அவ… அந்த நாச்சியா…. ரொம்ப… ரொம்ப பேசறா…. “, என திக்கித் திக்கிக் கூறினான்.
“எதுக்கு நீ டைஸிய பாத்துட்டு டென்ஷன் ஆகற? ஒரு வாரம் தான் டைம். அதுக்குள்ள அவ மேப் போட்டே ஆகணும். சொல்லிடு … வேண்டியத செஞ்சிக்குடு…. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்”, எனக் கூறிவிட்டு வெளியே கிளம்பினான்.
யோகேஷ் டைஸிப் பற்றிய நினைவுகளைத் தூரம் வைத்துவிட்டு ஆட்களை, அடுத்தக் கட்டப் பாதுகாப்பு அடுக்கிற்காக ஏவினான்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை காவல் ஆட்களை சுழற்சி முறையில் மாற்றி நிறுத்தினர். முன்பை விட இப்போது ஆட்கள் அதிகம் இருப்பதால் கட்டுக்காவலும் அதிகமாகவே இருந்தது.
இனியனுடன் வந்த மற்ற மூவரும் அந்த அடியாட்களுடன் நன்றாகக் கலந்துக்கொண்டனர்.
இனியன் மட்டும் நாச்சியா இருக்கும் தளத்தில் இரண்டு முறை ரோந்து செல்ல அனுப்பிவைக்கப்பட்டான்.
எப்படியாகினும் அவளைப் பார்த்து பேச வேண்டும் என அவனும் அதற்கான வழிகளை ஆராய்ந்தபடிச் சுற்றிக்கொண்டிருந்தான்.
வெளியே சென்றுவிட்டு வந்த ம்ரிதுள் மீண்டும் வேட்டைக்கு செல்கையில் இனியனையும் அழைத்துச் சென்றான்.
முன்பிருந்தது விட ஆட்கள் மூன்று மடங்கு அதிகமானதால் அதிகமான விலங்குகள் இன்று வேட்டையாடப்பட்டது.
“இங்க வா… உனக்கு பௌ சூட் தெரியுமா?”, என ம்ரிதுள் இனியனைக் கேட்டான்.
இனியன் தயங்கியபடி போட்டிருக்கும் வேஷத்தை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு குறி பார்த்து தப்பாக அம்பெய்தான்.
“ஹாஹாஹா…. பாத்தா ரொம்ப ஷார்பான ஆள் மாதிரி இருக்க, ஆனா குறி வைக்கத் தெரியல….கத்துக்கோ… உனக்கு நல்ல பொஷிசன் தரேன்”, என அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு கண்ணில் பட்ட முயல், மான், ஓநாய் என அனைத்தும் வேட்டையாடினான் ம்ரிதுள்.
“ஓக்கே சார்”, எனக் கூறிவிட்டு அவனுக்குத் தேவையானதை சுமந்தபடி ம்ரிதுள்ளின் திறமையை அருகில் இருந்து கண்காணித்தான்.
“சார்….”, மெல்ல அழைத்தான்.
“ம்ம்”
“இல்ல பணம் முழுசா அக்கவுண்ட்ல போட்டு இருப்பாங்களா? வீட்ல அதவச்சி தான் குடும்பம் ஓடும்”, என தயங்கித் தயங்கிக் கேட்டான் இனியன்.
“என்ன படிச்சிருக்க?”, ம்ரிதுள்.
“பி.டெக். ஐடி சார்”
“ஹேக் பண்ண தெரியுமா?”
“கொஞ்சம் சார்”
“வேற என்ன தெரியும்?”
“ஏதோ கொஞ்சம் சிஸ்டம்ல வேலை செய்வேன்….”, தலையைக் குனிந்தபடி மெல்லக் கூறினான்.
“ம்ம்ம்”, என பதில் கொடுத்துவிட்டு நடந்தான்.
அவன் வேட்டையாடிய மிருகங்களை பத்து பேர் சாக்கில் தூக்கிக் கொண்டு வந்தனர்.
“யோகேஷ்”, என உள்ளே வந்ததும் அழைத்தான்.
“சொல்லு ம்ரிதுள்”
“இவன நாச்சியா பக்கத்துல போடு…. அவளோட சிஸ்டம்ல இவன் மட்டும் தான் எடுத்து எல்லாம் பண்ணணும். நெட் இருக்க கூடாது அவங்க யாருக்கும்….அவங்களா எதையும் சிஸ்டம்ல செய்யக்கூடாது”, எனக் கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றான்.
“மேல போ…. நீங்க இதுல்லாம் பின்னாடி கொண்டு போய் குடுங்க”, என ஆட்களை ஏவிவிட்டு மேலே சென்றான்.
நாச்சியாவின் அறைக்கு முன்னால் நின்றிருந்த இனியனை யோகேஷ் சைகைகாட்டி அழைத்துவிட்டு அவள் அறைக்குள் நுழைந்தான்.
“நாச்சியா”, என்று அழைத்தான்.
தன் டீம் ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்துவிட்டு, புருவத்தை உயர்த்தி என்னவென கேட்டாள்.
“இவன் தான் உங்களோட சிஸ்டம்ஸ்ல இனிமே வர்க் பண்ணுவான். எல்லாரோட லேப்டாப்பும் இவன்கிட்ட தான் இருக்கணும்”, யோகேஷ்.
“ஒரே நேரத்துல பத்து பேர் சிஸ்டம்ல வேலை செய்வோம்…. அது எல்லாத்தையும் இவனே செய்வானா?”, நாச்சியா வெறுப்புடன் கேட்டாள்.
“லுக் … உங்கள நாங்க தான் கடத்திட்டு வந்திருக்கோம். நீ எங்கள கடத்திட்டு வரல… சொல்றத மட்டும் செய்…. இனிமே நீங்க யாரும் சிஸ்டம் ஹேன்டில் பண்ணக்கூடாது”, எனக் கூறிவிட்டு வெளியே வந்தான்.
“சார்”, என இனியன் அழைத்ததும்,
“சிஸ்டம்ல வர்க் பண்ண தெரிஞ்ச நாலு பேர கூப்பிட்டு வச்சிக்கோ…. “, எனக் கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றான்.
இனியன் அமைதியாக கீழே வந்து தன்னுடன் வந்த மூன்று பேருடன், தனக்கு கார்ட் கொடுத்தவனையும் அழைத்துக்கொண்டு நாச்சியாவின் அறைக்குச் சென்றான்.
“மேடம்”
“இப்ப வேலை இல்ல…. அப்பறம் வா”, என இளவெழிலி அவர்களை அனுப்பிவிட்டு கதவை அடைத்தாள்.
நாச்சியா அங்கிருந்து சென்றது முதல் நடந்த நிகழ்வுகள் அத்தனையும் மற்றவர்கள் பகிர்ந்துக்கொண்டனர். பின்னர் நாச்சியாவும் நடந்தவற்றைக் கூறிக்கொண்டு இருந்தாள்.
இவையனைத்தும் ம்ரிதுள் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.
“போற போக்க பாத்தா இவ நமக்கு சமாதி கட்டிருவா போலவே….. சீக்கிரம் இவங்கள பிரிச்சி வேலை வாங்கணும்”, என மனதிற்குள் எண்ணியபடிக் குளித்து தயாராகி வெளியே வந்தான்.
அடைக்கப்பட்ட வாசலில் இனியனும் மற்ற நால்வரும் அப்படியே நின்றிருந்தனர்.
“அவங்க தான் கதவ மூடிட்டாங்கல்ல… கிளம்பு…. “, ம்ரிதுள்.
“யாருமே லேப்டாப் எங்ககிட்ட குடுக்கல சார். யோகேஷ் சார் அதையெல்லாம் வாங்கி வச்சிக்க சொன்னாரு”
“இடியட். நான் ஒன்னு சொன்னா அவன் ஒன்னு செய்வான்….”, என முணுமுணுத்துவிட்டு,” அதுல்லாம் வாங்க வேண்டிய அவசியம் இல்ல.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க”, என அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு நாச்சியாவின் அறைக் கதவைத் தட்டினான்.