31 – காற்றின் நுண்ணுறவு
வல்லகியை டைஸி கடத்திச் சென்ற பிறகு, பிறைசூடனின் இடத்திற்கு வந்த தர்மனுக்கும் முகுந்திற்கும் பெரும் திருப்புமுனைக் கிடைத்தது.
மற்ற சிசிடிவி தடயங்களை அழித்தவர்கள், பழுதுப் பார்க்க தொங்கவிடப்பட்டிருந்த ரோபோவை விட்டுவிட்டனர்.
அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த மற்ற ரோபோக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
பாலாவும் வல்லகியும் நிச்சயமாக ஏதேனும் தடயத்தை விட்டிருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அங்கு வந்தவர்களுக்குப் பெரும் பொக்கிஷமே கிடைத்தது போல் இருந்தது.
அந்த இடத்தை சுற்றி வந்துக் கொண்டிருந்த தர்மனுக்கு, அங்கே தொங்கவிடப்பட்டிருந்த ரோபோவின் கழுத்தில் ஏதோ மின்னுவது போல தெரிய அதன் அருகில் சென்றுப் பார்த்தான்.
அது வல்லகியின் செயின், அந்த ரோபோவில் மாட்டப்பட்டிருந்தது. அதன் கண் தவிர மற்ற இடத்திற்கு மேக்கப் செய்யப்பட்டிருந்தது.
நிச்சயம் அவர்கள் இருவரின் வேலையாகத் தான் இருக்கும் என்று நினைத்தபடி, அந்த ரோபோ பங்ஷன்ஸ் பார்த்த தர்மன் அதைக் கம்யூட்டருடன் கனெக்ட் செய்து அதில் பதிவாகியிருந்தவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தான்.
“சார்… இத நம்ம இடத்துக்கு எடுத்துட்டு போயிடலாமே”, முகுந்த்.
“இங்க இருக்கற எல்லாத்தையும் எடுத்துட்டு போய் தான் ஆகணும் முகுந்த். நீங்க ஆளுங்கள கூப்பிடுங்க… “, எனக் கூறிவிட்டு ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதில் இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவாகியிருந்த ஒரு காட்சியை ஓடவிட்டான்.
“ஹேய் வகி…. உன்னவிட நான் தான் பெரியப்பாவுக்கு க்ளோஸ் ஸ்வீட் ஹார்ட்… ஆமா தானே பெரியப்பா?”, என பாலா புல்வெளியில் பிறைசூடனுக்கு டை அடித்தபடிப் பேசிக்கொண்டிருந்தாள்.
“நான் தான் ஒன்லி ஸ்வீட் ஹார்ட்…. சொல்லுங்க பெரியப்பா”, என சவரம் செய்யும் கத்தியுடன் வந்து நின்று கேட்டாள் வல்லகி.
“கழுத்துல கத்திய வச்சிட்டு கேட்டா நான் என்னடா சொல்வேன்? “, பிறைசூடன் பாவமாகப் பார்த்தபடிக் கூறினார்.
“நான் தான் நல்ல புள்ள…. பாருங்க எவ்வளவு ஆசையா உங்களுக்கு டை அடிச்சி க்ளாமர் ஏத்தறேன்…. அவ மோசம். போடி ரவுடி ரங்கம்மா”, என டையை முகத்திற்கு நேராக வைத்துக் கொண்டு பேசினாள்.
“தங்கங்களா… இரண்டு பேரும் கஷ்டப்பட வேணாம். நானே இதுலாம் பண்ணிக்கறேன் விட்றுங்கடா”, எனக் கெஞ்சினார்.
“நான் தான் உங்களுக்கு ஷேவ் பண்ணுவேன் உக்காருங்க பெரியப்பா”, வல்லகி இழுத்து அமரவைத்தாள்.
“நான் தான் உங்களுக்கு டை அடிப்பேன்”, என பாலாவும் மறுபக்கம் இழுத்தாள்.
“ஏய் முதல்ல ஷேவ் தான் பண்ணணும்….”
” இல்ல டை தான் அடிக்கணும்….”
“ஷேவ் தான்”
“டை தான்”
“ஷேவிங்”
“டையிங்”
இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர்.
“நான் நிஜமா டையிங் டா…. “, என கழுத்தில் அழுத்தியிருந்த கத்தி பட்டு இரத்தம் கசிந்தது.
வல்லகி பதறிக் கத்தியைத் தூக்கி எறிந்துவிட்டு, “சாரி பெரியப்பா… நான் லேசா தான் பிடிச்சேன்”, என மன்னிப்புக் கேட்டபடித் துணியை வைத்தாள்.
பாலா முதலுதவிப் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து பஞ்சை வைத்துவிட்டு மருந்து வைத்தாள்.
“ரொம்ப வலிக்குதா பெரியப்பா… ஹாஸ்பிடல் போலாமா?”, என பாலாவும் கவலையாகக் கேட்டாள்.
“சின்ன கீறல் தான்டா…நான் மருந்து போட்டுக்கறேன். நீங்க பீல் பண்ற அளவுக்கு ஒன்னும் இல்ல”, என அவர்களை சமாதானம் செய்தார்.
வல்லகி அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் விளையாட்டு அறையில் புகுந்து வெறி கொண்டவள் போல சிலம்பு சுற்றிக் கொண்டிருந்தாள்.
எத்தனை அவளை வற்புறுத்தி அழைத்தும் அது அவள் காதில் புகவில்லை.
“வகி வாடி…. சின்ன காயம் தான். நீ ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகற? “
“பதறிட்டேன் பாலா இரத்தம் பாத்ததும். என் மனசு இன்னும் அமைதியாகல … நீ போ வரேன்”, என அவளை அனுப்பிவிட்டாள்.
“பெரியப்பா அவள பீச் கூட்டிட்டு போலாமா? “, பாலா.
“வெளியே வேணாம் டா. சேப் இல்ல…. இங்கயே அவளோட எமோஷன்ஸ்அ அவ கன்ட்ரோல் பண்ணட்டும்…. ரோபோவோட சண்டை போட விடு… நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன் … வெளியே மட்டும் போகாதீங்க டா”, என கூறிவிட்டு அவர் உறங்கத் தயாரானார்.
“சரி பெரியப்பா… உங்களுக்கு ரொம்ப வலிச்சா டாக்டர வர சொல்லலாமே”
“அந்தளவுக்கு இல்லடா….ரெஸ்ட் போதும்… நீ அவள பாரு. அவ பிஹேவியர கேப்சர் பண்ணு…. “, எனக் கூறிவிட்டு உறங்கினார்.
மீண்டும் பாலா வல்லகியைத் தேடி சென்றாள். இவையனைத்தையும் அந்த ரோபோ உடன் வந்தபடி பதிவு செய்துக் கொண்டிருந்தது.
வல்லகியின் கோபம் எல்லை மீற மீற அவள் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தது.
அதையும் கண்டுகொள்ளாமல் சிலம்பு சுற்றி தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு, அவள் சிலம்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்.
வல்லகியைக் கண்டவள் பதறி அவளருகில் வந்து அவளை ஓங்கி அறைந்து கம்பு பிடித்து தூர வீசிவிட்டு, இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“மாஸ்…. பர்ஸ்ட் எய்ட் கிட் எடுத்துட்டு வா… சீக்கிரம்”, என உடன் வந்த ரோபோவை அனுப்பிவிட்டு தன் மேல் இருந்த துணியை கிழித்து அவள் மூக்கில் வைத்தாள்.
வல்லகியின் கண்களில் நீர் சொறிய ஆரம்பிக்கவும் அவளுக்கு மூச்சுத் திணறல் எடுத்தது.
“வகி… வகி…. என்னாச்சி….? அச்சச்சோ…. மூச்சு தெணறுதே… இப்ப என்ன பண்றது? பெரியப்பா…. பெரியப்பா “, எனக் கத்தியபடி அவள் அங்கிருந்து ஓடினாள்.
ரோபோ வல்லகியை பின்னால் சாய்த்து அவளது மூக்கில் வழிந்த இரத்தத்தை துடைத்துவிட்டு அவளை நிமர்ந்து அமரவைத்தது.
ஐந்து நிமிடத்தில் பிறைசூடன் ஓடிவர, பின்னால் பாலா இரண்டு மூலிகை தொட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.
வல்லகியின் முகத்துக்கருகில் அதை வைத்து சிறிது நேரத்தில் அவளது மூச்சுத் திணறல் சரியானது.
“இதுக்கு தான் சொல்றது ஓவரா ஸ்ட்ரைன் பண்ணாதன்னு…. பாரு கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்ட.. எரும எரும….”, என பாலா திட்டியபடி அவளது தலைக் கோதி கட்டிக்கொண்டாள்.
“ஏன்டா இவ்வளவு கோவம்?”, பிறைசூடன் அவளது கையைத் தடவி கொடுத்தபடிக் கேட்டார்.
“நீங்க மட்டும் சொல்லாம இருந்திருந்தா கழுத்தே கட் ஆகி இருக்கும் பெரியப்பா… நான் லேசா தான் பிடிச்சேன். அது எப்படி இரத்தம் வர்ற அளவுக்கு போச்சின்னு தெரியல….”, வல்லகி தன்னை ஆசுவாசப்படுத்தியபடிக் கூறினாள்.
பிறைசூடன் மெல்ல அவள் அருகில் அமர்ந்து, ” இங்க பாரு வல்லகி. நீ சாதாரண பொண்ணு இல்ல… எங்கள விட உனக்கு நாலு மடங்கு எல்லாமே அதிகம் …. அத உன் உடம்ப தான் முதல் பாதிக்கும். எப்படி பட்ட சூழ்நிலை வந்தாலும் உன் மனச நீ கன்ட்ரோல் பண்ணா தான் உன்னால செயல்பட முடியும். அதிகமா நீ எமோஷனல் ஆனா உனக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. உன் உடம்பு ரொம்வே சுத்தமான காத்த மட்டும் தான் ஏத்துக்குது… கொஞ்சம் மாசுபட்ட காத்த கூட உள்ள அனுமதிக்கறது இல்ல…. இவ்வளவு எமோஷனல் ஆகாத…. எனக்கு ஒன்னும் இல்ல. சின்ன ப்ளாஸ்டர் தான் போட்டு இருக்கேன் பாரு. நாங்க அழுத்தம் கொடுத்து பிடிக்க வேண்டியத நீ விளையாட்டா பிடிச்சாலே போதும். இது சாதாரண விஷயம் தான். மனச அமைதி படுத்து”, நீளமான விளக்கம் கொடுத்து அவளை சமாதானம் செய்தார்.
“சரி வா வகி…. எதாவது விளையாடலாம்”
“என்ன விளையாட போறீங்க? அவளுக்கு மூச்சு திணறல் வந்துரிச்சி பாலா… ஓடக்கூடாது”, பிறைசூடன்.
“ஒரு நிமிஷம் வரேன்”, என உள்ளே ஓடினாள்.
வல்லகி தன் அருகில் இருந்த பூந்தொட்டியை எடுத்து நன்றாக ஆழ மூச்சிழுத்தாள். அதே போல ஐந்து நிமிடம் செய்யவும் அவளது உடல் சகஜநிலைக்குத் திரும்பியது.
“இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு வல்லகி”, என அவளைக் கூர்ந்துக் கவனித்தவாறு பிறைசூடன் அமர்ந்துக் கொண்டார்.
பத்து நிமிடம் கழித்து வந்த பாலாவின் கையில் மேக்கப் கிட் இருந்தது.
“மாஸ்…. இங்க வா”, என அதை அருகில் அழைத்து அதன் முகத்தில் க்ரீம் தடவ ஆரம்பித்தாள்.
“ஏய் என்ன இது?”, வல்லகி புரியாமல் பார்த்தபடி அதட்டினாள்.
“நம்ம மாஸ்அ…… மாஸா ரெடி பண்ணப் போறோம்…. வா… எடுத்து பெயின்ட் அடி “, என அவள் கவனத்தைத் திசைத் திருப்பிக் கொண்டிருந்தாள் பாலா.
“பெரியப்பா…..”, வல்லகி.
“போடுங்க டா… நானும் பாக்கறேன்…. அதுக்கு ஒன்னும் ஆகாது”, எனக் கூறி அவரும் உற்சாகப்படுத்தினார்.
ஒரு மணிநேரம் மாஸ் அவர்களிடம் மாசுப்பட்டது.
“சூப்பர்… மாஸ்… நீ ரொம்ப அழகா இருக்க”, என பாலா அதற்கு நெட்டி முறித்தாள்.
“ஏதோ குறையுதே….”, என யோசித்த வல்லகி தன் கழுத்தில் இருந்த செயினை அதற்கு மாட்டிவிட்டாள்.
“மாஸ்.. இப்ப இருந்து நீ உர்ரமாஸ்”, என இருவரும் அதைப் பாடாய் படுத்தி எடுத்தனர்.
அந்த ரோபோவும் சார்ஜ் இருக்கும் வரை அவர்களுக்கு ஈடுகொடுத்துவிட்டுக் கவுந்துவிட்டது.
அதை அடுத்த நாள் பிறைசூடன் சரிபார்க்க அங்கே மாட்டி வைத்தார்.
அதற்கு பின் அங்கே நடந்த நிகழ்வுகளைப் பார்த்தவன் அன்று நடந்ததை பார்க்கும் போது பவர் சப்ளைத் தடைபட்டு சிஸ்டம் ஆப் ஆனது.
“முகுந்த்… இந்த ரோபோல இருக்க வீடியோஸ் தனியா சேவ் பண்ணணும்…. என்னாச்சி கரெண்ட் சப்ளை இல்லையா?”, எனக் கேட்டான்.
“ஆமா சார். ஆளுங்க வந்துட்டாங்க… சோழன் சார் அங்க வெயிட் பண்ணிட்டு இருக்காரு…. ஏதோ உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணுமாம்…..வழுதி சார் இப்ப சொன்னாரு”, எனக் கூறிவிட்டு அங்கிருந்து அவர்களுக்குக் கிடைத்தத் தடயங்களை எடுத்துக்கொண்டுக் கிளம்பினர்.
“இனியன் எதாவது மெஸேஜ் அனுப்பினாரா முகுந்த்?”
“இல்ல சார். அந்த அருவிய தாண்டி போக முடியலன்னு அப்ப சொன்னாரு…. யாரோ அந்த பக்கம் வந்துட்டு இருக்கறதா இரண்டாவது செக்போஸ்ட்ல இருந்து சொன்னாங்களாம் அதான் அங்கயே வெயிட் பண்றாரு”, முகுந்த் வண்டியை ஓரம்கட்டினான்.
“இனியன் சொல்ல சொல்ல கேக்காம இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கறாரு…. நான் போறேன்னு சொன்னா கேக்கல…. அவரு ஜாக்கிரதையா வந்துட்டா போதும்”, தர்மன் உண்மையான வருத்தத்துடன் கூறினான்.
“கேஸ்ன்னு வந்துட்டா நாம எல்லாருமே வேலை செஞ்சி தானே சார் ஆகணும். அவர் சமாளிப்பாரு…. நீங்க இங்க பார்த்தே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கு. அதை மறந்துட்டீங்களா சார்?”, முகுந்த்.
“ம்ம்ம் … நாச்சியா அப்பாகிட்ட பேசினீங்களா முகுந்த்… அங்க எதாவது நடந்ததா?”, தர்மதீரன்.
“பேசினேன் சார். அங்க ஒரு பிரச்சினையும் இல்ல…. அவனும் மனுஷன் தானே சார் எங்கயாவது அவனும் தப்பு பண்ணி தான் ஆகணும். எவ்வளவு கணக்கு போட்டாலும் ஒரு சில விஷயங்களை அவனால யோசிக்கமுடியாது”, எனக் கூறியபடி வந்தவன் மேலே எதிரே வந்தவன் மோதினான்.
“சாரி சாரி….”, வேதகீதன்.
“என்ன கீதன் எதிர்ல வர்றவங்கள கூட பாக்காம வர்ற அளவுக்கு என்ன யோசனை?”, என தர்மதீரன் கேட்டான்.
“ஒரு முக்கியமான விஷயம்”, என இருவரையும் தன் காருக்கு அழைத்துச் சென்றான்.