32 – காற்றின் நுண்ணுறவு
பல்லவபுரத்தில் தமிழோவியனும், நிலவரசியும் பின்பக்க கதவை திறந்துக்கொண்டுச் சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தபடி வெளியே வந்தனர்.
நிலவரசி இப்போது நன்றாகவே நடந்தார். தமிழோவியனை உள்ளே செல்லக் கூறிவிட்டு அவர் மட்டும் வாழை மரங்களுக்கு மத்தியில் இருந்த மோட்டார் ரூமைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றார்.
சத்தம் செய்யாமல் அடியில் இருந்த பாதாள பாதையை திறந்தவர் உள்ளே இறங்கி நடந்து பாலாவின் வீட்டு மாட்டு கொட்டகையில், தரையில் இருந்த கதவை திறந்து மேலே ஏறி வந்தார்.
பாலாவின் வீடு அதே தெருவில் அவர் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி உள்ளது .
இரண்டு வீட்டிற்கும் முன்பே இந்த சுரங்கப்பாதை இருந்தது போல. அதை இவர்கள் எதேச்சையாகக் கண்டுபிடித்து, அந்தப் பாதையைச் சுத்தம் செய்து வைத்துக்கொண்டனர்.
அந்த சுரங்கவழி இப்போது இவர்களுக்கு பல வகையில் உபயோகமாக இருந்து வருகிறது.
பின்பக்க வாசலைப் பார்க்க வெளிச்சம் இல்லை. அந்த சமிக்ஞையைப் புரிந்துக்கொண்டு மெல்ல சத்தம் செய்யாமல் நடந்தவர் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே சென்றுத் தாழிட்டுக்கொண்டார்.
“கோத…. கோத….”, என மெல்ல அழைத்தார்.
“வா அரசி…. அவர் முழிச்சிட்டாரு… அதான் தகவல் அனுப்பினேன்”, என பாலாவின் தாய் ஒரு அறைக்கு அரசியை அழைத்துச் சென்றார்.
“சார்….சார்…”, என பாலாவின் தந்தை பிரகலாதன் கட்டிலில் படுத்துக்கிடந்தவரை எழுப்பினார்.
“ம்ம்”, என மெல்ல முனகியவர் கஷ்டப்பட்டு கண்விழித்துப் பார்த்தார்.
“சார்… என்னை தெரியுதா?”, அரசி அவர் அருகில் வந்து அமர்ந்துக் கேட்டார்.
“ம்ம்… நாச்சியா அம்மா”, என மெல்லத் தொண்டையை செருமிக்கொண்டுப் பேசினார்.
“உங்களுக்கு இப்ப வலி எதுவும் இல்லையே”, என அவரை ஆராய்ந்தபடிக் கேட்டார்.
“பரவால்ல…. என்னை எப்படி இங்க கொண்டு வந்தீங்க?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தார் தசாதிபன்.
“நாச்சியாவோட பிரண்ட் தான் உங்கள இங்க தூக்கிட்டு வந்தான்… அப்ப நீங்க மயங்கி இருந்தீங்க”
தசாதிபனைச் சுட்டுவிட்டு ம்ரிதுள் சென்றதும், அவன் ஆட்கள் அவரைத் தூக்கிச் சென்றுப் புதைத்தனர்.
நாக் அங்கே மறைந்திருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்ததால், அவர்கள் அந்த பக்கம் சென்றதும் இவன் ஓடி வந்து அவரை குழியில் இருந்து மேலே தூக்கிக் கொண்டு தான் இருக்கும் பழங்குடி மக்கள் பகுதிக்கு தூக்கிச் சென்றான்.
அன்றிரவே நாச்சியாவின் டீமை அங்கிருந்து கிளப்பிக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்றதால் ‘நாக்’ஐ யாரும் கவனிக்கவில்லை.
அங்கே அவர்களுக்கு தெரிந்த முதலுதவி செய்துவிட்டனர், ஆனாலும் இரத்த கசிவு நிற்கவில்லை.
“இத நிறுத்த முடியாதா?”, என நாக் கவலையாக அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டான்.
“எங்களால முடிஞ்சது இவ்வளவு தான். இங்க ஒரு சித்தர்சாமி இருக்காரு. அவர் நினைச்சா நிறுத்தமுடியும்”, என அக்கூட்டத்தில் ஒருவர் கூறினார்.
“அவர் எங்க இருக்காரு சொல்லுங்க”
“அவரா நினைச்சா வருவாரு…. போவாரு டவுன்சாமி…. நாங்க போய் பாக்கறது கஷ்டம்”
“எங்க இருப்பாருன்னு சொல்லுங்க நான் முயற்சி பண்ணி பாக்கறேன். இவர நான் ஊரக்குள்ள தூக்கிட்டு போனாலும் கொன்றுவாங்க… இவர் ரொம்ப நல்லவர்.. இவர காப்பாத்தினா தான் இன்னும் பதினைஞ்சு பேர காப்பாத்த முடியும்…”, என நாக் அங்கிருந்தவர்களிடம் கெஞ்சினான்.
“அதோ சித்தர் சாமி வராரு…. நகருங்க நகருங்க”, என தூரத்தில் ஒருவன் கத்தியபடி ஓடி வந்தான்.
“உங்க அதிர்ஷ்டம் சாமியே இப்ப வராரு… அவருகிட்ட கேளுங்க டவுன்சாமி”, என அங்கிருந்தவர் கூறினார், அந்த சித்தரின் காலில் அனைவரும் விழுந்தனர்.
அவன் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
“நீங்களும் விழுங்க டவுன்சாமி”, என ஒருவர் கூறினார்.
“நான் அவர் கால்ல விழுந்தா என் பாவம் போகாது பச்சயசாமி…. அவர் இவர காப்பாத்தினா போதும்”, எனக் கூறிவிட்டு சித்தரின் அருகில் சென்று கையெடுத்துக் கும்பிட்டு, “அவர காப்பாத்துங்க…. அவரால தான் நிறைய உயிர காப்பாத்த முடியும்”, என முகத்தில் கலக்கத்தோடுக் கூறினான்.
“பல உயிரைக் காவு வாங்கி பிறந்தவன், வளர்ந்தவன்…. இப்போது மற்ற உயிர் காக்க, இன்னுயிர் இழுத்துவைக்க போராடுகிறான்…. ஐயனே ஈசா….”,என ஆகாயத்தைப் பார்த்துக் கையெடுத்து கும்பிட்டுவிட்டு, இடைக்கச்சையில் இருந்த மூலிகை எடுத்து காயத்தில் பிழிந்துவிட இரத்த கசிவு சில நொடிகளில் நின்றது.
“நாகேஷ்வரா….. இந்தா இதை நாளுக்கு நான்கு வேலை சிறுசங்கு அளவு வாயில் புகட்டு…. வேறெந்த ஆகாரமும் வேண்டாம். கண்விழித்த பின் இளஞ்சூட்டில் மஞ்சள் மிளகு பூண்டு சேர்த்து பாலில் நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்தபின் மற்ற உணவு எடுக்கலாம். பத்து தினங்களில் கண் விழிப்பான். உடலில் உள்ள விஷம் முறிந்தபின் எழுந்து அமர்வான்”, என ஒருக் குடுவையை அவனிடம் கொடுத்து விட்டு விவரம் கூறினார்.
“உங்களுக்கு என் பேரு?”, என தயங்கித் தயங்கிக் கேட்டான்.
“அறிவேன்… விரைந்து நாச்சியாவின் இல்லத்தில் இவனை சேர்த்திடு. அவர்கள் பார்த்துக்கொள்வர்”, எனக் கூறிவிட்டு நிற்காமல் வேகமாக நடந்துச் சென்று மரங்களுக்குப் பின்னே மறைந்துப் போனார்.
நாக் எனப்படும் நாகேஷ்வர் அவர் கொடுத்தக் குடுவையைப் பத்திரப்படுத்தி எடுத்துக்கொண்டு, இரண்டு பேர் உதவியுடன் காட்டுவழியே வந்து வண்டி பிடித்து ஊருக்குள் வந்தபின் தமிழோவியனுக்கு அழைத்தான்.
“சார் நான் நாக்…. முக்கியமான விஷயம்”, எனக் கூறி அவரை ஒரு இடத்திற்கு வரவழைத்தான்.
சூப்பர் மார்கெட் செல்வதாக புறப்பட்டு சென்ற தழிழோவியன் அங்கே நாக்-ஐ பார்த்தார் .
“என்ன நாகேஷா….. நாச்சியாவ பாத்தியா? எதாவது சொன்னாளா?”, என ஆர்வமாகக் கேட்டார்.
“அவளைமும் ராகவியும் வேற இடத்துக்கு கூட்டிட்டு போயிட்டாங்க…. என்னை நாச்சி காட்டுக்குள்ளயே இருக்க சொல்லிட்டா….”
“எங்க கூட்டிட்டு போயிருக்காங்க?”, தவிப்புடன் கேட்டார்.
“தெர்ல சார். முக்கியமான விஷயம்”, என சுற்றிலும் பார்வையைப் பார்த்துவிட்டு, “தசாதிபன் சார சுட்டுட்டாங்க”, எனக் கூறினான்.
“வாட்? “, அதிர்ச்சியாகிக் கத்தினார்.
அவரின் சத்தத்தில் அருகில் இருந்தவர்கள் அவரைப் பார்க்க, தன்னை சமாதானம் செய்துகொண்டு வேறு பக்கம் சென்றார்.
“என்ன சொல்ற நாகேஷா? அவர ஏன் சுட்டாங்க? அவர் தானே லீட். அவர சுட்டுட்டு பசங்கள என்ன பண்ணப்போறாங்க?”, பதற்றத்துடன் கேட்டார்.
“பதறாதீங்க சார். அவர காப்பாத்தி இங்க தூக்கிட்டு வந்திருக்கேன். ஆனா பத்து நாள் ஆகும் அவர் கண் முழிக்க. நீங்க தான் அவர பாத்துக்கணும்”, நிலைமையை விவரித்தான்.
“வீட்ல ஏற்கனவே போலீஸ், டிடெக்டீவ், கேங்ஸ்டர்ஸ்ன்னு ஆள் மாத்தி ஆள் காவலுக்கு நிக்கறாங்க. அவர பாத்தா தேவையில்லாத கேள்விகள் வரும். தவிர அவர இந்த நிலைமைல நான் எப்படி வீட்டுக்கு கொண்டு போறது”, என தன் சூழ்நிலையை விளக்கினார்.
“உங்ககிட்ட இருந்தா தான் அவர் சேப்பா இருப்பாரு சார்…. “, நாகேஷ்வரன்.
“கொஞ்சம் இரு”, என தூரமாகச் சென்று மனைவிக்கு அழைத்து விவரம் கூறினார்.
“கோத வீட்ல வச்சி அவர பாத்துக்கலாம்ங்க…. நான் பேசறேன். இங்க ஏற்பாடு பண்ணப்பறம் அவர அங்க கொண்டு போலாம்”, நிலவரசி.
“என்னம்மா சொல்ற? பிரகலாதன் இதுக்கு ஒத்துப்பாரா? நம்ம பிரச்சினைல அவர ஏன் இதுல இழுக்கணும்?”, தமிழோவியன்.
“வேற வழி இல்லைங்க…. அவங்கள தவிர இங்க நாம யார நம்ப முடியும்?”
“சரி நீ பேசிட்டு சொல்லு. நான் நாகேஷ்கிட்ட சொல்றேன்”, எனக் கூறி வைத்துவிட்டார்.
“என்ன சார் ?”, நாகேஷ் ஆர்வமாக கேட்டான்.
“பக்கத்துல இன்னொரு வீட்ல அவர வச்சி பாத்துக்க முடியும். அவங்கள கேட்டுட்டு சொல்றதா அரசி சொல்றா…. அவருக்கு ஆபத்து ஒன்னும் இல்லையே”, மீண்டும் தசாதிபனின் நிலையைக் கேட்டார்.
“ஒன்னுமில்ல சார். நான் காட்டுல இருந்து வரப்பவே மருந்தும் வாங்கிட்டு வந்துட்டேன். இந்த சங்குல ஒரு நாளைக்கு நாலு வேலை வாயில ஊத்தினா போதும். பத்து நாள்ல கண் முழிப்பாரு அப்ப பசும்பால்ல மஞ்சள் மிளகு பூண்டு போட்டு காய்ச்சி இளஞ்சூட்டுல அந்த பால அவருக்கு குடிக்க குடுத்தப்பறம் மத்த சாப்பாடு சாப்பிடலாம்”, எனத் தான் கொண்டு வந்திருந்தச் சங்கைக் காண்பித்தான்.
“பத்து நாள் சாப்பாடு இல்லாம எப்படி டா அவர் உடம்பு தேறும்?”.
“இது மூலிகை சாறு சார். காட்ல ஒரு வைத்தியர் குடுத்தாரு. அவர் உடம்புல இருக்கற விஷம் இறங்கணும் , உடம்பும் தேறணும்னா இத மட்டும் தான் குடுக்கணும்னு சொல்லிட்டாரு”, சித்தர் சொன்னதை நினைவுபடுத்திக் கூறினான்.
“சரி…. இரு போன் வருது”, என வேறுபக்கம் வந்தார்.
“ஏங்க… கோதை சரின்னு சொல்லிட்டா… அவங்க உறவுல ஒருத்தர் முடியாம இருக்கறதா சொல்லியிருந்தா, அவருன்னு சொல்லிக்கறாளாம் யாராவது கேட்டா… அவங்க இரண்டு பேரும் ஒரு மணிநேரத்துல அவர கூட்டிட்டு போறாங்களாம். நீங்க சொல்லிட்டு வீட்டுக்கு வந்துடுங்க. தர்மன் தம்பி போன் பண்ணுச்சி ஏதோ சொல்லணுமாம்”, எனக் கூறிவிட்டு வைத்தார் நிலவரசி.
அதன்பின் கோதையும், பிரகலாதனும் ஆஸ்பத்திரியில் இருந்து அவரை தன் இல்லத்திற்கு அழைத்து செல்வது போல பாசாங்குச் செய்து தங்கள் இல்லத்திற்கு இரவு நேரம் கூட்டிவந்தனர்.
நாகேஷ் ஆஸ்பத்திரியிலேயே விவரம் கூறிக் கிளம்பிவிட்டான்.
அன்றிலிருந்து கோதையும், பிரகலாதனும் தான் அவரைக் கவனித்து வருகின்றனர்.
நிலவரசியும், தமிழோவியனும் அவ்வப்போது சுரங்கவழியாக இரவில் வந்துக் கவனித்துக் கொள்கின்றனர்..
“ரொம்ப நன்றி உங்க எல்லாருக்கும். என்னால தான் உங்க பொண்ணுக்கு இவ்வளவு பிரச்சினை. நான் அதை தொட்டு இருக்க கூடாது. நானே அதை சரி செய்யறேன்.. நான் கிளம்பறேன்”, என எழுந்தார்.
“இருங்கய்யா… இத குடிச்சிட்டு முதல்ல சாப்பிடுங்க…. அப்பறம் போலாம். நடுசாமத்துல எங்க போவீங்க? அந்த பயலுக்கு தகவல் சொல்லி இருக்கோம் அவனும் வந்துடுவான்”, என இளஞ்சூட்டில் பாலை கொடுத்துவிட்டு அவர் உண்ண உணவு எடுத்து வந்தார் கோதை.
“கோத….உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல… எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்க தெரியுமா நீ? எங்களால உங்களுக்கு மேல மேல கஷ்டம் தான். பாலாவுக்கு எதுவும் ஆகாம கொண்டு வந்து சேக்கறது எங்க பொறுப்பு…. “, எனக் கோதையை அணைத்துக்கொண்டுக் கண்கலங்கினார் நிலவரசி.
“அரசி…. என்னம்மா இது? நீங்க இல்லன்னா எங்களுக்கு பாலா எப்பவோ இல்லாம போயிருப்பா…. உங்க புள்ளையா தானே அவளை நீங்க தேத்தி காப்பாத்தி குடுத்தீங்க… நமக்குள்ள என்ன? வல்லகியும் நாச்சியாவும் கண்டிப்பா பாலாவ பத்திரமா கொண்டு வந்துடுவாங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…. அப்ப அப்ப அவள பத்தி தகவல் மட்டும் சொல்லிட்டே இருங்க போதும்”, என பிரகலாதன் மகளை நினைத்துக் கண்கலங்கினார்.
“ஆமா அரசி…. பாலா உனக்கும் பொண்ணு தான்னு எனக்கு தெரியும். அவள நீங்க பாத்துக்கற விதமும் அவ இங்க வந்தப்ப ஒளிஞ்சிருந்து பாத்தோம். உங்க பொண்ணாவே நடத்தறீங்க…. போன்லையும் அவ வல்லகி அப்படி பண்ணா இப்படி செஞ்சான்னு ஓயாம சொல்லுவா… அவளுக்கு மட்டுமில்ல நம்ம புள்ளைங்க யாருக்கும் ஒன்னும் ஆகாது. மாரியாத்தா பாத்துக்குவா….. நீ தைரியமா இரு. அந்த நாகேஷ் தம்பிக்கு சொல்லிட்டோம். அவனும் வாரேன்னு சொல்லி இருக்கான்”, கோதை அரசியை சமாதானம் செய்தார்.
“அம்மா”, என தசாதிபன் அழைத்தான்.
“சொல்லுக்கய்யா இன்னொரு இட்லி வைக்கட்டா?”, என கோதை கேட்டார்..
“போதும்மா….. உங்களுக்கு தான் ரொம்ப நன்றி சொல்லணும். நாச்சியா அம்மா…. இங்க என்ன நடக்குது…. அத சொல்லுங்க”, என அவர்கள் பேசியது காதில் விழுந்ததால் கேட்டார்.
நிலவரசியும் தனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறினார்.
“அவன் அந்த இடத்த நெருங்கிட்டான்னு நினைக்கறேன். ஆனா அது ரொம்பவே ஆபத்தான இடம். அங்க என்ன இருக்குன்னு யாருக்குமே தெரியாது… பசங்க எல்லாரையும் அவன் பலி குடுக்கறதுக்கு முன்ன நான் அங்க போயாகணும். எனக்கு தெரிஞ்ச ஆபீஸர்ஸ் கிட்ட நான் பேசறேன்”, என அவர்களிடம் போனைக் கேட்டார்.
“இல்ல சார். இதுபத்தி போலீஸுக்கு எதுவும் தெரியவேணாம். தெரிஞ்சா பிரச்சினை தான் அதிகமாகும். நாங்க நாச்சியாவ கடத்திட்டதா புகார் குடுக்கப்போனப்பவே அதை அவங்க ஏத்துக்கல…. பெரிய ஆளுங்க சப்போர்ட் இல்லாம இப்படி நடக்காது…. “, நிலவரசித் தடுத்தார்.
“இப்படியே விடமுடியாதும்மா”, தசாதிபன் சலித்துக்கொண்டார்.
“கொஞ்சம் வையிட் பண்ணுங்க என் ஹஸ்பண்ட் வந்து உங்களுக்கு விவரம் சொல்வாரு”
“நானே உங்க கூட வரேன்”, தசாதிபன்.
“சரி வாங்க”, என அவரை தான் வந்த வழியே தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் நிலவரசி.
“ஏங்க”, என மெல்ல அழைக்கவும் தமிழோவியன் கதவைத் திறத்தார்.
அவருடன் தசாதிபன் நிற்பதுக் கண்டு, அவசரமாக இருவரையும் உள்ளே அழைத்து கதவைத் தாழிட்டுவிட்டுக் கூடத்திற்கு வந்தார்.
“பேஸ்மெண்ட் போயிடலாம்”, என நிலவரசி முன்னே சென்றார்.
“வாங்க சார்…. உடனே நடக்க முடியுதா உங்களால…. ஆச்சரியமா இருக்கு பத்து நாளா ஆகாரம் இல்லாம இவ்வளவு தெம்பா இருக்கறது”, எனப் பேசியபடி தமிழோவியன் நடந்தார்.
“உங்களுக்கு தான் சிரமம் குடுத்துட்டேன். ரொம்ப நன்றி மிஸ்டர்”, என இழுத்தார்.
“நான் தமிழோவியன். இவங்க என் மனைவி நிலவரசி”, எனத் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டார்.
“அவங்க சாயல் தான் நாச்சியார். அதனால அடையாளம் தெரிஞ்சது”, எனக் கூறிவிட்டு, “அடுத்து என்ன பண்றது மிஸ்டர் தமிழ்?”, என கேள்விக்கு வந்தார்.