32 – மீள்நுழை நெஞ்சே
“இந்த பக்கம் ஷீமேல் (shemale) அதிகமா ட்ரைவர்?”, எனக் கடைதெருக்களைப் பார்த்தபடிக் கேட்டான்.
“ஏன் சார்?”, அவனையும் துவாரகாவையும் பார்த்தபடி கேட்டார்.
“நான் நேத்திருந்து அதுங்கள தான் அதிகமா இந்த பக்கம் பாக்கறேன்…. இங்க ரெட் லைட் ஏரியாவும் இருக்கா என்ன?”
“இல்ல சார்.. இது பஜார் மட்டும் தான்”, என மீண்டும் அவர் துவாரகாவைப் பார்க்க அவளுக்கு சங்கடமாக இருந்தது.
“இங்க யார் இருந்தா என்ன? என்ன என்ன கேக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு…. தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீங்க”, என மெல்லக் கூறினாள்.
“இங்க நான் தான் புருஷன். நீ பொண்டாட்டி. நான் சொல்றது மட்டும் தான் நீ கேக்கணும்… என்ன பேசணும்? எப்படி பேசணும்னு எனக்கு நீ சொல்லாத”, என முறைத்தபடி கூறிவிட்டு மீண்டும் ட்ரைவரிடம் பேச ஆரம்பித்தான்.
இவள் ஹோட்டல் வந்ததும் ரூமிற்கு சென்று விட, சிறிது நேரத்தில் அறைக்கு வந்தவன், “என்னை பாத்தா நாப்பது வயசு ஆளு மாறியா இருக்கு? “, என திடீரென்று கேட்டான்.
“ஏன் இப்படி கேக்கறீங்க?”
“அந்த ட்ரைவர் சொல்றான். எனக்கு நாப்பது வயசாம். உனக்கு இருபதாம்…. உனக்கும் எனக்கும் ஒரு வருஷம் தானே வித்தியாசம்….”, என ஆங்காரமாகக் கேட்டான்.
“அவருக்கு அப்படி தெரிஞ்சதோ என்னவோ… வந்து இந்த ட்ராலி தொறங்க உங்க துணியெல்லாம் மடிச்சி வைக்கணும்”, என அழைத்தாள்.
“ஏய்….. நான் கேக்கறதுக்கு மொத பதில் சொல்லு… நான் பாக்க நாப்பது வயசு ஆளு மாதிரியா இருக்கேன்”, எனக் கத்தினான்.
“உங்கள பாத்தா அப்படியெல்லாம் இல்ல…. அவருக்கு கண்ணு சரியா தெரிஞ்சிருக்காது…. “, என அவள் கூறவும் அப்போதைக்கு அமைதியானான்.
“உங்க ட்ராலி தொறங்க… “
“என் ட்ராலில நானே எடுத்து வச்சிக்கறேன். நீ உன்னோடது மட்டும் எடுத்து வை….”, எனக் கூறிவிட்டு போனுடன் வெளியே சென்றான்.
ஊரில் இருந்து கிளம்பியதிலிருந்து அவளும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறாள். திருமணம் நிச்சயமானதிலிருந்து இவன் பேசியதை விட அவன் தாய் அவளிடம் பேசியது தான் அதிகம். அத்தனை அக்கறையுடன் பேசுவார். மகளைப் போல பார்த்துக் கொள்வேன் என்று கூறியதோடு நில்லாமல் அவளது பிறந்தநாளுக்கு அவர் தனியாக புடவை எடுத்து கொடுத்தார்.
திருமணமான பின் கூட அவளிடம் தான் அதிக நேரம் பேசுவார். அவரின் பேச்சும் சுபாவமும் அப்பாவித்தனமாக இருப்பதாக அவளும் நம்பினாள் திருமணம் முடியும் வரை.
ஊரிலிருந்து வந்ததில் இருந்து ஒரு முறை கூட அவளிடம் யாரும் பேசவில்லை. இவளாக இவள் தந்தைக்கு ஓரிரு முறை பேசியதோடு சரி. அவள் பேசும்போது அவனும் அருகில் தான் நிற்பான். ஆனால் அவன் பேசுவது மட்டும் இவளுக்கு கேட்கவே கூடாத தூரத்தில் தான் பேசுவான்.
மாமனார் மாமியார் இருவரில் யார் அத்தனை கிரிமினலாக இருக்கிறார் என்று அவள் அறியவேண்டும் என்ற எண்ணத்தில் நடப்பதை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் பர்ச்சேஸ் என்பதால் அருகிருந்த கடைத்தெருவுக்கு செல்லத் தயாராகினர்.
“எங்கம்மாவுக்கு கம்மல் வாங்கணும்….”, எனக் கூறினான்.
“சரி கைட் கிட்ட நல்ல ஜூவல்லரி ஷாப் எதுன்னு கேட்டுட்டு போலாம்”
“எங்கப்பா போன தடவை இங்க வந்தப்ப ஒரு கடைக்கு போனாராம். அங்கேயே போய் வாங்க சொல்லி இருக்காங்க…. “, எனக் கூறியபடி டிஸ்ஷுவால் செய்திருந்த பாத்ரூம் ஸ்லிப்பர் அணிந்துக் கொண்டான்.
“இது பாத்ரூம் ஸ்லிப்பர்..வெளியே போட்டுட்டு நடந்து போக எல்லாம் தாங்காது…. உங்க ஷூ போட்டுட்டு வாங்க”
“எல்லாம் தாங்கும்… நீ எதுக்கு இப்ப இப்படி வகிடு எடுத்திருக்க… நேர் வகிடு எடு… ஜடை பிண்ணு… “
“முடி இன்னும் காயல… ஜடை பின்னினா தலைபாரம் பிடிச்சிக்கும்… வாங்க போகலாம்… ஹேர் பேண்ட் கைல எடுத்துட்டு தான் வரேன். முடி காய்ஞ்சதும் போட்டுக்கறேன்”, எனக் கூறி முன்னே நடந்தாள்.
“நீ என்னை விட அழகா சின்ன பொண்ணா தெரியணும்னு தானே இப்படி வர்ற?”, எனக் குதர்க்கமாகக் கேட்டான்.
அவள் பதில் பேச வாய்திறக்கும் முன் அவளை போட்டோ எடுக்க நிற்க கூறினான்.
“நீ தான் அழகா ரெடி ஆகி இருக்கல்ல… உன்ன போட்டோ எடுக்கறேன் நில்லு….”
“நீங்களும் நல்லா தானே ரெடி ஆகி நிக்கறீங்க நில்லுங்க.. உங்கம்மாவுக்கு போட்டோ அனுப்புனும்”, என கூறியதும் பள்ளி மாணவன் போல நின்று சிரித்தான்.
ஊருக்கு வந்து இரு தினங்களில் அவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறையாக அனைத்தும் செய்தான்.
அவளுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது. அந்த சமயத்தில் மனதை வேறு பக்கம் திருப்ப ஏதேனும் நாவல் படிக்கலாம் என்று எடுத்த போது ராணி தென்றலின் “தென்றலே தீண்டாதே” கதை அவளுக்கு அந்த சமயத்தில் பெரிதும் உதவியது. இன்னும் சொல்லப்போனால் துவாரகா அவனை கொலை செய்யாமல் இருந்ததற்கு காரணம் அந்த கதை என்றும் கூறலாம். அப்படி மனதை இழுத்துச் செல்லும் ஒரு அற்புதமான கதை.
இருவரும் ஒரு வழியாக அவன் தாய் கூறிய நகைக்கடையை தேடிச் சென்று சேர்ந்தனர்.
“எங்கம்மாவுக்கு ஒரு செட் கம்மல் எடுக்கணும்… அப்பறம் ஒரு செயின் வாங்கணும்….”, எனக் கூறினான்.
“சரி… அவங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்பி பிடிச்சது வாங்கிக்கலாம்”
அவன் பழைய மாடலாக தேடி எடுக்க, துவாரகா புதிய மாடலாக தேடி எடுத்து வைத்தாள். அதற்கும் அவன் அவளிடம் முறைக்க, “உங்கம்மாவுக்கு பிடிச்சத எடுங்க… இதுலாம் புது டிசைன். போட்டா நல்லா இருக்கும்”, எனக் கூறி நகர்ந்துவிட்டாள்.
பின் அவனே செயினை தேர்வு செய்ய ஆரம்பித்தான். அதுவும் அவனால் முழுதாக முடியாமல் போக, “என்ன நீ பாட்டுக்கு வந்து உக்காந்துட்ட… வந்து செயின் எடு…. எங்கம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு என்னை வளத்தாங்க தெரியுமா? அவங்க பணத்துல அவங்களுக்கு நல்லதா வாங்கி குடுக்கணும்னு நினைப்பு உனக்கு இருக்கா இல்லையா?”, எனக் கேட்டான்.
“உங்களுக்கு தான் நான் எடுக்கறது பிடிக்கலையே அப்பறம் என்ன?”
“பரவால்ல வந்து எடு. அப்பறம் எங்கம்மா கேட்டா நான் என்ன சொல்றது?”
ஆயாசமாக பெருமூச்சு விட்டபடி செயின் செக்ஷன் சென்றாள். அதில் பெரிதாக எதுவும் தேறவில்லை. அவன் அம்மாவிற்கும் அவர்கள் போட்டோ எடுத்து அனுப்பிய எதுவும் பிடிக்கவில்லை. அதனால் இரண்டு செட் கம்மல் மட்டும் தேர்வு செய்தனர்.
“துவாரகா … உனக்கும் எதாவது வாங்கிக்க ம்மா….”, என அவள் மாமியார் கூறினார்.
“வேணாம் அத்த…. எனக்கு இப்ப தானே எல்லாமே வாங்கினது… “, என மறுத்துவிட்டாள்.
“தம்பி அவளுக்கு மோதிரம் வாங்கி குடு… வாங்காம வரக்கூடாது சொல்லிட்டேன்”, என மகனிடம் கூறிவிட்டு அழைப்பை வைத்தார்.
“பில் போட சொல்லிட்டீங்களா?”
“வா.. உனக்கு மோதிரம் வாங்கி குடுக்கணும்”, என அவள் கைப்பிடித்து இழுத்தான்.
“எனக்கு எதுவும் வேணாம்…. இருக்கறது போதும்”
“எங்கம்மா சொல்லிட்டாங்க… வாங்கி தரலன்னா திட்டுவாங்க… உன்னால நான் திட்டு வாங்கணுமா? அதுலாம் முடியாது… வா… “, என அவள் விரல் சுற்றளவுக்கு தகுந்த டிசைன் எடுத்து காட்டக் கூறினான்.
அவனே ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்து போட்டு பார்க்க கூற, அது அவள் விரலுக்கு சரியாக இருக்கவும் அதையும் சேர்த்து பில் போட கூறினான்.
“பாத்தியா எங்கம்மாவுக்கு நான் எடுத்த தோடு தான் பிடிச்சிருக்கு. நீ பாவம்னு …. நீ எடுத்ததுல ஒன்னு எடுக்க சொல்லிட்டாங்க…. “, எனச் சிரிப்புடன் கூறினான்.
“அவங்க தான் போட்டுக்க போறாங்க அவங்களுக்கு பிடிச்சது எடுத்து போட்டுக்கட்டும்… இதுல நான் பாவமாக ஒன்னும் இல்ல… “, என பட்டும்படாமல் கூறிவிட்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டாள்.
வெளிநாடுகளில் தங்க நகைகளுக்கு, தங்கத்தின் விலையுடன் செய்கூலி மாத்திரம் தான், சேதாரம் என்று தனியே நம்மிடம் பணம் வாங்குவதில்லை. அங்கிருக்கும் விலைவாசிக்கும் அந்த நாட்டு பணத்தின் மதிப்பிற்கும், சிறு குழந்தைகள் பணம் சேர்த்தால் கூட வருடத்திற்கு சில பவுன்கள் தங்கம் சேர்க்கலாம் என்கிற ரீதியில் இருந்தது தங்கத்தின் விலை.
அதையெல்லாம் யோசித்தபடி அமர்ந்திருந்தவளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் மால் சென்றான்.
அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருக்க அவன் கையைப் பிடித்தபடி அவளும் அவன் வேகத்திற்கு நடந்தாள். விட்டால் அங்கே தேடி பிடிப்பது மிகவும் சிரமம். அப்படி நடக்கும் போது அவள் மார்பு அவன் கையுடன் ஒட்டியபடி சில அடிகள் நடக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது.
அவன் அவளையும், அவன் கையையும் பார்த்தபடியே நடந்து வந்துக் கொண்டிருந்தான்.
சிறிது தூரத்தில் நெரிசல் குறைந்துவிட, அவன் கைகளை விட்டுவிட்டு அருகில் நடக்க ஆரம்பித்தாள்.
“துவாரகா…. “
“சொல்லுங்க”
“இப்ப ஏன் அது நடந்துச்சி?”, எனப் பூடகமாகக் கேட்டான்.
“எது நடந்துச்சி?”, அவள் ஒன்றும் புரியாமல் கேட்டாள்.
“இல்ல.. நடக்கறப்ப…. அது ஏன் அப்படி இருந்துச்சி? “, என ஒருமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.
“எனக்கு புரியல.. என்ன சொல்றீங்க?”
“இல்ல… நடக்கறப்ப உன் செஸ்ட் என் கைல பட்டுச்சி…. நீ ஏன் அப்படி நடந்த?”, என அவன் கேட்டதும் அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. அவன் இப்படியெல்லாம் யோசிப்பானா என்று தான் தோன்றியது.
“கூட்டத்துல மிஸ் ஆகிட கூடாதுன்னு தான் கைய பிடிச்சேன்…. வேற எந்த அர்த்தமும் இல்லை….”, என அதிர்ச்சியில் திக்கித் திணறி பதிலளித்தாள்.
“இப்படியெல்லாம் நீ நடந்தா மட்டும் நான் நீ சொல்றத கேப்பேன்னு நினைக்காத…. நல்ல பொண்ணா நடந்துக்க”, என அவன் கூறவும் அவளுக்கு ஏற்பட்ட அன்றைய மனநிலையை என்னவென்று வரையறுப்பது என்று காலங்கள் பல கடந்தும் கூட புரியவில்லை.
அதன் பின் அவள் அவன் அருகில் செல்லவே இல்லை. எப்போதும் இரண்டடி இடைவெளிவிட்டே நடந்தாள், அமர்ந்தாள்.
அதையும் கண்டு அவன் குதர்க்கமாக பேச அவள், “தேவையில்லாம பேசாத வரைக்கும் நல்லது…. “, என கண்கள் சிவக்க கூறவும் அமைதியாகிவிட்டான்.
அன்றிரவு அவர்களுக்காக பிரத்யேகமாக கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதைக் கண்டதும், ‘இருக்கற நிலைமைக்கு இது ஒன்னு தான் கொறச்சல்’, முணுமுணுத்தபடி சென்று அமர்ந்தாள்.
அவனோ அவனை மாப்பிள்ளை பார்க்க வந்திருப்பதைப் போல வெட்கம் கலந்த முகபாவனையுடன் ஏற்றியிருந்த விளக்கையும், அவள் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆர்கனைஸர் ஸ்பெஷலாக ஏதோ செய்யக்கூற அவள் அதை மறுத்துவிட்டு இரண்டு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள்.
அவன் பொறுமையாக அனைத்தையும் உண்டு, வாந்தியெடுத்து ஒரு மணிநேரம் கழித்து அறை வந்து சேர்ந்தான்.
அவனைப் பார்க்க பார்க்க துவாரகாவிற்கு மனபாரம் தான் ஏறியது. இன்னும் இரண்டு நாள் ஊருக்கு சென்று பேசிக் கொள்ளலாம் என பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் அவளை தலைக்கு குளிக்க கூடாது என்று அடம் பிடித்தான். அவளும் அவனுடன் போராட விரும்பாமல் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டை போட்டுக்கொண்டாள்.
“இப்ப பாத்தா நான் தான் சின்ன பையனா தெரிவேன். நீ தான் வயசான மாதிரி இருக்க”, எனக் கூறி குதூகலித்தான்.
“ஆமாமா… சின்ன பையன் தான் ….”, எனக் கூறிவிட்டு அமைதியாகிவிட்டாள்.
ஊருக்கு திரும்பும் நாள் அவளை அவன் அம்மாவிற்கு வாங்கிய கம்மலில் ஒன்றை போட்டுக்கொள்ள கூறினான்.
ஏன் என்று கேட்டதற்கு, பில்லை பார்த்தால் டேக்ஸ் கட்டவேண்டும், அதனால் அவன் அப்பா அப்படி கூறினார் என்று கூறினான்.
அவளும் அவள் தேர்ந்தெடுத்த கம்மலை போட்டுக்கொண்டு அனைத்தையும் எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள்.
“ஏய்.. இத ஏன் போட்ட? நான் எடுத்தது போடு….”
“அது எனக்கு ரொம்ப பெருசா இருக்கும். இது தான் என் காதுக்கு சரிவரும் “
“அதுல்லாம் பேசாத அத போடு… நீ மட்டும் அழகா வயசு கம்மியா தெரியலாம்னு நினைக்காத… “, என அவன் கூறவும், அவனை வெறித்து பார்த்துவிட்டு கம்மலை மாற்றினாள்.
ப்ளைட் ஏறி ஒரு வழியாக விமானம் புறப்பட்டது. போர்வை வேண்டுமா என பணிப்பெண் கேட்டதற்கு வேண்டாம் என்று கூறிவிட்டான். அதனால் அவள் மட்டும் போர்வை வாங்கிப் போர்த்திக் கொண்டாள்.
சாப்பாடும் அளவாக சாப்பிட்டுவிட்டு அமர்ந்துவிட்டாள். அன்று அவனும் கம்மியாக சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டான். நேரம் ஆக ஆக குளிர் எடுக்கத் தொடங்கியது.
குளிர் தாங்காமல் அவளது போர்வையை அவன் எடுத்துக்கொண்டான்.
“உங்களுக்கு வேணும்னா கேளுங்க குடுப்பாங்க….”
“உனக்கு மட்டும் வாங்கிக்கற.. எனக்கு வாங்கி வைக்க மாட்டியா?”
“நீங்க தானே வேணாம்னு சொன்னீங்க?”
“நான் சொன்னா அப்படியே விட்றுவியா? எங்கம்மாவா இருந்தா எனக்கு வாங்கி போர்த்திவிடுவாங்க… நீ யாரோ தானே? எனக்கு பொண்டாட்டி மாதிரியா நடந்துக்கற… “, என அவன் பேசிக்கொண்டே போக அருகில் அமர்ந்திருந்தவர் பணிப்பெண்ணை அழைத்து ஒரு போர்வை வாங்கி கொடுத்தார் துவாரகாவை அனுதாபமாகப் பார்த்தபடி.
அந்த பார்வை பலமாக அவளைச் சுட்டது. அவளுக்கு கண்கள் கலங்கிவிட வேறுபக்கமாக திரும்பிக் கொண்டாள்.
வழக்கமாக போடும் மாத்திரைகள் போட்டுக்கொண்டு அவன் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் உறக்கம் பறிபோனது தன் வாழ்க்கை கேள்விக் குறியானதை நினைத்து….