38 – மீள்நுழை நெஞ்சே
“ஹலோ மேடம்…பாத்து வரமாட்டீங்களா? இப்படி வந்து என் வண்டில விழறீங்க? “, என பைக்கில் இருந்தவன் திட்டத் தொடங்கினான்.
“மிஸ்டர்.. நீ கண்ண எங்க வச்சிட்டு ஓட்டிட்டு வந்த? ரெட் சிக்னல்ல குறுக்க வர…. சிக்னல்ல நிக்கமுடியாத அளவுக்கு எந்த கோட்டைய பிடிக்க போற? “, துவாரகா தன் கையில் இருந்த பைலை எடுத்துக்கொண்டே திட்டினாள்.
அதற்குள் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிட ட்ராஃபிக் போலீஸும் வந்து சேர்ந்தார்.
“என்ன கூட்டம் இங்க? எல்லாரும் நகருங்க.. நகருங்க….”, என விரட்டியபடி இன்னொரு அதிகாரியும் வந்தார்.
“என்னம்மா பிரச்சனை?”
“இந்தாளு தான் சார்.. சிக்னல்ல நிக்காம நடந்துபோற என் மேல வந்து வண்டிய விடறான்…. “, என துவாரகா அவனை முறைத்தபடி கூறினாள்.
“சார்.. சிக்னல் விழுந்த அப்பறம் தான் சார் வந்தேன். இந்த பொண்ணு தான் சிக்னல் பாக்காம நடந்து வந்து என் வண்டில விழுது”, என்றான்.
“நீ கவனிக்காம ரோட்டுல போறவங்க மேல் வண்டிய விட்டுட்டு அவங்க மேலயே குத்தமும் சொல்லியா? சார்.. இந்தாள அரெஸ்ட் பண்ணுங்க சார்.. அட்டெம்ப்ட் மர்டர்ன்னு நான் கேஸ் தரேன்….”
“அட்டெம்ப்ட் மர்டரா? ஏய் துவாரகா… நான் உன் அண்ணன் டி… என் மேல கேஸ் போடுவியா நீ?”, என அவள் அண்ணன் திவாகர் அவள் அருகே வந்து கேட்டான்.
“அண்ணனோ தம்பியோ சட்டம் நியாயம் எல்லாம் எல்லாருக்கும் ஒன்னு தான்… நீங்க இவன ஜெயில்ல போடுங்க சார்”, என கூறிவிட்டு நடந்தாள்.
“சாரி சார்… வீட்ல ஒரு சின்ன சண்டை அதான் இப்படி பேசறா”, என திவாகர் அதிகாரிகளை கவனித்துவிட்டு அவள் பின்னே வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான்.
“துவாரகா… துவா….. நில்லு “
“எதுக்கு இங்க வந்த? உனக்கு நெறைய வேலை இருக்குமே…. உன் பாட்டி உன்னை எப்படி இவ்வளவு தூரம் விட்டுச்சு?”, என கேள்வி கேட்டாள்.
“யாரு என்ன சொன்னாலும் என் தங்கச்சியை நான் பாக்கறத யாரு தடுக்கமுடியும்? நான் சரியா ஊர்ல இல்லாதப்ப எல்லா குழறுபடியும் நடந்திருக்கு…. எப்படி இருக்க துவா?”, என அண்ணனாக அவள் அதிகமாக கஷ்டப்பட்ட காலத்தில் அருகில் இல்லாமல் போன தன்னை நொந்தபடி கேட்டான்.
“இருக்கேன் திவா…. நீ எப்படி இருக்க?”, அவனின் கண்கள் கலங்குவது கண்டு அவளும் அமைதியாக பேசத் துவங்கினாள்.
“நல்லாவே இல்ல….”
“கல்யாண மாப்பிள்ளை இப்படி சொல்லலாமா? பொண்ணு கேட்டா கோச்சிக்குவா ….”
“என் தங்கச்சி இல்லாம மட்டும் இல்ல நானும் இல்லாம தான் என் நிச்சயம் நடந்துச்சு…. “, என்றதும் அவள் அவன் முகத்தை பார்த்தாள்.
“என்ன பாக்குற? இப்படியே ரோட்ல நின்னு எல்லாத்தையும் பேசணுமா? வா எங்கயாவது போய் சாப்டுட்டே பேசலாம்… “, என அவளை அழைத்தான்.
“இல்ல… எனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு. ப்ராஜெக்ட் டெஸ்டிங் பண்ணணும்….”
“நீயா டெஸ்ட் பண்ணப் போற…கால் பண்ணி சொல்லிட்டு வா… நிறைய பேசணும். அதுக்காக தான் வீட்டுக்கு கூட போகாம இங்க வந்தேன்…”, என அவன் சொன்னதும் சிறிது யோசித்துவிட்டு அதிதிக்கு அழைத்தாள்.
“அதிதி…. நான் இன்னிக்கு லீவ்…. டெஸ்டிங் பண்ண ஆரம்பிச்சிடுங்க. நாளைக்கு நான் வந்து எரர்ஸ் பார்த்துடறேன்….”, என அவள் கூறியதும் அதிதிக்கு அப்பாடா என்று ஆனாது.
“ஓக்கே துவாரகா… நான் எம்டி கிட்ட சொல்லிடறேன்…. டேக் கேர்”, என கூறிவிட்டு மதியூரனிடம் ஓடினாள்.
“மதி… துவாரகா இன்னிக்கு லீவ்…. “
“நிஜமாவா? இன்னும் ஒரு வாரம் லீவ் எடுத்துக்க சொல்லு அதிதி…”
“இது டூ மச் மதி… இன்னிக்கு ஒரு நாள் நமக்கு இருக்கு. அதுக்குள்ள அந்த ப்ராஜெக்ட் டென்டர சரிபண்ண பாரு.. இதுக்கு மேல நாம லேட் பண்ண முடியாது… மெயில் நமக்கு நேத்து நைட்டே வந்துரிச்சி இந்த வாரத்துல டெஸ்டிங் செஞ்சி ரிப்போர்ட் வரணும்னு”, அதிதி.
“இன்னிக்கு செட் ஆகிடும் அதிதி… அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்….”, என கூறிவிட்டு அவன் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
அதிதி இன்று நள்ளிரவு நேரத்திற்கு மேல் டெஸ்டிங் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய சென்றாள்.
திவாகரும், துவாரகாவும் அமர்ந்து பேச ஏதுவான உணவகத்திற்கு வந்து சேர்ந்தனர். இருவரும் ஃபேமிலி ரூமில் அமர்ந்து கொள்ள அவனுக்கு சாப்பிட ஆர்டர் செய்தாள்.
“நீ சாப்பிடலியா?”
“நான் ஆண்ட்டி வீட்ல சாப்டு தான் கிளம்பினேன்…. கடைசியா ஐஸ்க்ரீம் சொல்லிக்கறேன். நீ சாப்பிடு.. இங்க நான்வெஜ் எல்லாமே நல்லா இருக்கும்…”, என அவனுக்கு பிடித்ததை ஆர்டர் செய்துவிட்டு அவனை பார்த்தாள்.
“உடம்பு இப்ப பரவால்லையா துவா?”
“பரவால்ல திவா…. இன்னும் கொஞ்சம் வீக்னெஸ் தான் இருக்கு… அது சாப்பாட்டுல தான் சரியாகும்….”
“முகம் கொஞ்சம் தெளிவா இருக்கு…. எதாவது கவுன்சிலிங் போனியா?”
“நான் இருக்க வீட்லயே எல்லா கவுன்சிலிங் செஷ்ஷனும் நடக்குது… விகாஷ்னு பெரிய ரிலாக்ஸ் இருக்கான்… அந்த குட்டி பையனோட அதிக நேரம் இருக்கேன்… அப்பறம் பத்மினி ஆண்ட்டி, அன்பு ஆண்ட்டி, மித்ரான்னு எனக்கு இங்கு நிறைய பேர் கவுன்சில் பண்றாங்க… உண்மைய சொல்லணும்னா இப்பதான் கொஞ்சம் சுலபமா முச்சு விடறேன் …. ஊருல என்னால முடியல டா.. அதான் வீட்ட விட்டு கிளம்பிட்டேன்….”
“இடம் மாற்றம் பெரிய அளவுல மனச மாத்தும்னு எல்லாரும் சொல்வாங்க… உன் விஷயத்துல அது நடந்திருக்கு அதுவரைக்கும் சந்தோஷம் தான்…. எப்ப அப்ராட் போற?”
“இந்த ப்ராஜெக்ட் முடிச்சிட்டு வரச்சொல்லி இருக்காங்க… வில்ஸ் தான் வேலைக்கு ஏற்பாடு செஞ்சான்….”
“ம்ம்….. அப்பா அம்மா கிட்ட பேசினியா?”
“…………”
“சொல்லு துவா….”
“எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல திவா…. பேசினா கண்டிப்பா உடனே கிளம்பி வான்னு தான் சொல்வாங்க.. அம்மா ஒருபக்கம் கத்துவாங்க… மறுபடியும் அதே கூண்டுக்குள்ள போய் அடைஞ்சிக்க எனக்கு விருப்பம் இல்ல….”
“அட்லீஸ்ட் நாட்ட விட்டு போறதுக்கு முன்னயாவது பாக்கலாம்னு இருக்கியா இல்லையா?”
“பாத்துட்டு போகணும் னு தான் நினைச்சிருக்கேன்.. அதுக்குள்ள உன் கல்யாணம்…. உன் கல்யாணம்னு சொன்னதும் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்”, என ஒரு நொடி தடுமாறி கூறினாள்.
“என் கல்யாணம் நீ இல்லாம நடந்துடுமா துவா? உன்னை நான் விட்டுடுவேன்ன்னு நினைச்சியா?”, திவாகர் பொறுமையாகவே கேட்டான்.
“நான் இப்ப ஊர பொறுத்தவரைக்கும் அபசகுணம் திவா.. நான் வந்து உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா.. பயமா இருக்கு….”
“துவா… நீயா இப்படி பேசற?”
“நான் தான் …. இத்தனை மாசத்துல என்னால இன்னும் அந்த சொல்லை மறக்க முடியலை…. வீட்டுக்கு வந்தவன் போறவன் எல்லாம் என் காது பட பேசின பேச்சு அப்படி…. எனக்கே என்மேல் நம்பிக்கை இல்லாம தான் வீட்ட விட்டு வந்தேன். ஆனாலும் இன்னும் அந்த ஸ்டுப்பிட் சென்டிமென்ட் பேச்சு என்னை விட்டு போக மாட்டேங்குது…”, என உடைந்து போன குரலில் கூறினாள்.
“லூசுத்தனமா பேசாத துவா…. ஒரு தடவை சருக்கிட்ட அவ்வளவு தான். அதுக்காக நீ அபசகுணம் ஆகிடுவியா? எப்பவும் நீ எங்க வீட்டு இளவரசி தான்… “
“மனுஷியா பாக்கலாம் மொதல்ல…..”
“சரி.. நானும் அப்பாவும் உன்னை வேணும்னு ஹர்ட் பண்ணல… எங்க சூழ்நிலை அப்படி அப்ப பேச வச்சது… உன் நிலைமைல இருந்து யோசிக்காம போனது தப்பு தான். அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்… “, என கைகூப்பினான்.
“கைய இறக்கு…. நான் முழுசா யாரையும் தப்பு சொல்ல முடியாது இந்த விஷயத்துல... நானுமே எதையும் பெருசா கவனிக்காம விட்டது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்…. அது தவிர இது என் விதி… அனுபவிக்கறேன்… அவ்வளவு தான்…. “
“சரி என் கல்யாணம் நீ இல்லாம நடக்காது. நீ வரலன்னா …..”
“நான் வரலன்னா நீ நிறுத்திடுவியா? அந்த அப்பத்தா கிழவி தனியா இருந்தாலே நடக்காது.. இதுல உன் வருங்கால மனைவியோட பாட்டியும் கூட்டு… தொண்டைல இருந்து காத்த கூட வெளியே வரவிடமாட்டாங்க …. தவிர அந்த பொண்ணு பாவம் டா…. உன்மேல நிறைய பாசம் வச்சிருக்கா…. “
“உண்மை தான். அங்க நான் வாய தொறக்க முடியாது தான். ஆனா என் வாழ்க்கைய ஆரம்பிக்காம இருக்க முடியும்… “, என்றதும் அவள் அவனை முறைத்தாள்.
“நிறைய பழைய படம் பாக்கற போல….”, என்று கூறி சிரித்தாள்.
பல மாதங்கள் கழித்து சிரிக்கும் தங்கையைக் கண்டு அவன் மனம் உள்ளுக்குள் கனத்து போனது. எப்படி சிரித்த முகத்துடன் வளைய வந்தவள் சிரிப்பை மறந்து, அவளையும் மறந்து இருந்தால் இத்தனை காலம். இன்று அவள் இயல்பாக சிரித்தது அவனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
“சரி சொல்லு…. நீ எப்ப வர? அம்மா உனக்காக பாத்துட்டு இருக்காங்க.. அப்பா வெளியே காட்டிக்கலன்னாலும் உன்னையே தான் நினைச்சிட்டு இருக்காரு. சித்தி சித்தப்பா எல்லாம் உனக்காக நான் எதிர்பாத்துட்டு இருக்காங்க… உனக்காக நாங்க இத்தனை பேரு காத்துகிட்டு இருக்கோம். எங்களுக்காக நீ வரமாட்டியா?”, என அவன் கேட்டதும் அதில் இருந்த உண்மை அவளை அசைத்துப் பார்த்தது.
“திவா…. என் கல்யாணத்த பத்தி எனக்கு பெருசா எந்த கனவும் இருந்தது இல்ல.. ஆனா உன் கல்யாணத்த பத்தி நானும், கனியும் நிறைய பேசி இருக்கோம்… இப்ப நான் அங்க வந்தாலும் ஒதுங்கி தான் நிக்கணும்… அத என்னால தாங்க முடியுமா தெரியல டா…..”
“……………..”
“அம்மாவும் அழும்…. அப்பாவுக்கும் மனசு நோகும்…. உனக்கும் அத்தாச்சிக்கும் தங்கச்சிமுறைக்கு எல்லாம் இருந்து செய்யப்போறது நம்ம தங்கச்சி தான்…. ஆனாலும் நான் உன் கூட பொறந்தவ… அதுலாம் நான் செய்யாம இருக்கிறது நிஜமா எனக்கு வலிக்குது… அதனால தான் கல்யாணத்துக்கு வரலன்னு சொல்றேன்”
“இதுலாம்……”
“நான் அங்க வந்து, என்னை பாத்து எல்லாரும் கஷ்டப்படறதுக்கு, நான் உன் கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்து உங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பலாம். அது அந்தளவுக்கு வலிக்காது டா”
“இங்க பாரு துவா…. நீ இல்லாம என் கல்யாணம் நடக்காது. அத நான் இப்ப முடிவு பண்ணிட்டேன். என் கல்யாணம் நடக்கணுமா வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ…. “, என கூறிவிட்டு எழுந்து சென்றான்.
மீண்டும் மீண்டும் அவளை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர் அனைவரும்.
பணத்தை கட்டிவிட்டு அவளும் எழுந்து அவன் பின் சென்றாள்.
“திவா… திவா…. நில்லு….”
“நீ தங்கி இருக்க வீட்டுக்கு போகலாம் வழி சொல்லு”
“அங்க எதுக்கு…?”
“நான் முறைப்படி அழைக்கணும்…. வண்டில ஏறு….”
இருவரும் அன்பரசி இல்லம் வந்து சேர்ந்தனர். மதிய நேர சமையலுக்காக பத்மினியும், அன்பரசியும் ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருந்தனர்.
“ஆண்ட்டி…. “
“என்ன துவா அதுக்குள்ள வந்துட்ட?”, என கேட்டபடி அன்பரசி வந்தார்.
“இவன் என் அண்ணன் திவாகர்….”, என்று அறிமுகம் செய்தாள்.
“வாப்பா… நல்லா இருக்கியா? ஊருல எல்லாம் நல்லா இருக்காங்களா?”, என சிரித்த முகமாக விசாரித்தார்.
“நல்லா இருக்கேன் ஆண்ட்டி.. நீங்க எப்படி இருக்கீங்க…? காயம் எல்லாம் ஆறிடிச்சா?”, என சோஃபாவில் அமர்ந்தபடி கேட்டான்.
“நல்லா இருக்கேன்.. சரியா துவா வந்து என்னை காப்பாத்திட்டா…. அதனால நல்லாவே இருக்கேன்…. நீ எப்ப தமிழ்நாடு வந்த திவாகர்?”
“இன்னிக்கு காலைல தான்… வந்ததும் துவாவ பாக்க வந்துட்டேன்…. ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி எல்லாத்துக்கும்… “
“இதுல என்ன இருக்கு.. அவ என் உயிர காப்பாத்தினா நான் அவள் என்கூடவே வச்சிகிட்டேன் அவ்வளவு தான். இன்னும் சொல்லப்போனா எனக்கொரு பையன் இருந்தா அவனுக்கு இவள கல்யாணம் பண்ணி கூடவே வச்சிருப்பேன். எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அதனால முடியாம போச்சி….”
“சோ வாட் ம்மா…. நானே துவாவ கல்யாணம் பண்ணிக்கறேன். இந்த நாட்ல கூட இப்ப சட்டபூர்வமா அங்கீகாரம் குடுத்துட்டாங்களே… “, என கூறியபடி மித்ரா விகாஷை தூக்கிக்கொண்டு வந்தாள்.
“இவ என் பொண்ணு மித்ரா… இது அவ பையன் விகாஷ்….”, என அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“வந்த பையனுக்கு தண்ணி கூட தராம பேசிட்டே இருந்தா எப்படி?”, என கேட்டபடி ஜூஸுடன் அங்கே வந்தார் பத்மினி தேவி.
“இவங்க தி க்ரேட் பத்மினி தேவி….”, என துவாரகா அறிமுகம் செய்துவைத்தாள்.
“எங்களுக்கு இன்ட்ரோ தேவையில்லை. நாங்க ஆல்ரெடி பேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ்”, என அவளிடம் வக்கணைத்துவிட்டு திவாகர் அருகில் வந்து அமர்ந்தார்.
“இது வேறயா?”, என்பது போல துவா திவாகரை பார்த்தாள்.