40 – மீள்நுழை நெஞ்சே
துவாரகா இப்படியான ஒரு கேள்வியை அவனிடம் எதிர்பார்க்கவே இல்லை. அவளால் இன்னும் அந்த அதிர்வில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
“துவாரகா…. துவாரகா….”, என்று அவன் தோள் தொட்டு அழைத்ததும் வெடுக்கென அங்கிருந்து எழுந்து நின்றாள்.
“சாரி முகில் .. என்னால முடியாது…. இந்த நினைப்ப இத்தோட விட்ருங்க… உங்களுக்கு உங்கம்மா நிறைய பொண்ணுங்க பாத்துட்டு இருக்காங்க அதுல பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க”, எனக் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.
இவள் இப்படித்தான் கூறுவாள் என்று ஏற்கனவே அவன் ஊகித்திருந்ததால், “துவாரகா….மொதல்ல இங்க வந்து உக்காரு… பொறுமையா பேசலாம்”, என இருந்த இடம் விட்டு எழுந்திருக்காமல் அழைத்தான்.
“நான் வீட்டுக்கு போறேன்…”, எனக் கூறிவிட்டு அங்கு வந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.
“ஊப்பூஃஃஃஃஃஃ….. இவள எப்படி சமாளிச்சி எப்ப சம்மதிக்க வச்சி எப்ப கல்யாணம் பண்றது…? அம்மா சொன்ன மாதிரி கடைசிவரைக்கும் பிரம்மச்சாரியா தான் இருக்கணுமா?”, என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு ஒரு டீ ஆர்டர் செய்துக் குடித்துவிட்டு அவனும் கிளம்பினான்.
அவளுக்கு முன் அவன் சரியாக ஆட்டோ நிற்கும் இடத்தில் காத்திருந்தான்.
அவனைக் கண்டதும் துவாரகா நிற்காமல் நடக்கத் தொடங்கினாள்.
மாலையில் நடைபயிலும் சிலர் அவர்களைக் கண்டு சிரிப்போடு தலையசைத்துக் கடந்துச் சென்றனர்.
“நில்லு துவாரகா…. நான் ரோட் சைட் ரோமியோ இல்ல… இரண்டு பேருமே மெச்சூர் மைண்டட்ன்னு நினைக்கறேன்… உக்காந்து பேசலாம்”
“உங்க அளவுக்கு நான் மெச்சூர் இல்லைங்க முகில் சார்… எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன்… அது உங்களுக்கு புரியலியா?”, கோபமாகக் கேட்டாள்.
“விருப்பம் இல்லைன்னு சொல்றத நான் ஏத்துக்கற மாதிரி சரியான காரணம் சொல்லு”
“ஒரு காரணம் போதும்…..”
“இதோ பாரு… நீ டிவோர்ஸீ நான் கன்னிப்பையன்னு சில்லி ரீசன் எல்லாம் சொல்லாத…. நான் ஒத்துக்கமாட்டேன்”, என அவளுக்கு முன் முந்திக்கொண்டுப் பேசினான்.
“நான் அத சொல்லவும் மாட்டேன்… எனக்கு காதல் கல்யாணம் மேல நம்பிக்கை இல்லை…. “, எனக் கூறிவிட்டு அவன் முகம் பார்த்தாள்.
“காதல் கல்யாணம் வேணாம்னா நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம் துவாரகா”
“முகில் ப்ளீஸ்.. என்னை டென்ஷன் பண்ணாதீங்க…. எனக்கு யார் மேலையும் நம்பிக்கையும் இல்லை, முக்கியமா கல்யாணத்துல சுத்தமா இல்ல”
“காலம் பூரா இப்படியே இருக்க போறியா? உனக்கான வாழ்க்கைய நீ வாழ மாட்டியா?”, கோபமாகக் கேட்டான்.
“எனக்கான வாழ்க்கை கல்யாணத்துல தான் இருக்குன்னு எதாவது கட்டாயம் இருக்கா? எனக்கு ஆத்மதிருப்தி தரக்கூடிய விஷயங்கள் தான் என் வாழ்க்கை. அதை நான் தேடிக்கறேன்”
“துவாரகா….. நீ வெறுத்து போய் பேசற”
“ஆமா… வெறுத்துட்டேன்… எல்லாத்தையும்…. என்னை மறுபடியும் தொந்தரவு பண்ணமாட்டீங்கன்னு நம்பறேன்”
“அப்ப என்னை நீ நம்பற? அப்படிதானே?”
“இந்த டீன்ஏஜ் டிரிக் எல்லாம் என்கிட்ட காட்டாதீங்க முகில்… “
“துவாரகா……”
“டோன்ட் டிஸ்டர்ப் மீ”, எனக் கூறிவிட்டுத் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.
அவள் சுலபமாக ஒத்துக்கொள்ள மாட்டாள் என்பது தெரியும் தான், ஆனால் இப்படி உதாசீனமாகப் பேசிவிட்டு செல்வாள் என்று அவனும் நினைக்கவில்லை.
இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக நடந்துச் சென்றனர்.
துவாரகா உடனே வீட்டிற்கு சென்றால் தன்னால் இயல்பாக இருக்கமுடியாது என்றெண்ணி அருகே இருந்த பூங்காவிற்கு சென்றாள்.
அங்கே ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் அமர்ந்து மனதை சமன் செய்ய முயற்சித்தாள்.
முகிலனும் அதே பூங்காவிற்கு வந்து அவளுக்கு பின்புறம் அமர்ந்துக் கொண்டான்.
இருவரும் ஒருவரை ஒருவர் கவனிக்கவில்லை, ஆனால் இருவரின் மனமும் ஒரு நிலையில் இல்லை.
இத்தனை வருடங்கள் கழித்து அவனுக்கு வந்த காதல் அவள். இதற்கு முன் காதல் செய்து அது கல்யாணத்தில் முடியாமல் போனதாலே திருமணத்தைத் தள்ளிக்கொண்டிருந்தான்.
துவாரகாவை சந்தித்ததில் இருந்து அவளின் மேலே ஈர்ப்பு ஏற்பட்டு அவள் குணம் மற்ற இத்யாதிகள் கண்டு நாள் போக்கில் காதலாக மலர்ந்திருந்தது.
இப்போது அவள் உடனே கிளம்ப போகிறாள் என்றதும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளை விட்டுவிடவும் முடியவில்லை.
அவளை நேசிப்பதாக வீட்டில் கூறினால் யாரும் மறுக்கமாட்டார்கள் தான். ஆனால் அவளின் விருப்பமும், சம்மதமும் முதலில் பெற வேண்டும் என்று தான் தன் மனதை இன்று திறந்தான். அதை அவள் உதாசீனப் படுத்துவாள் என்று எண்ணவில்லை.
அவனுக்கு கொஞ்சம் வலித்தது தான். அவளுக்கு இன்னும் அதிகமாக வலித்தது ஏதேதோ விஷயங்களை நினைத்து.
துவாரகாவின் மனதில் கல்யாணம் என்றாலே வெறுப்பு தான் முதலில் வந்து நிற்கிறது. இந்நிலையில் முகிலமுதன் இப்படி கூறியதும் கோபத்துடன் படபடப்பு அதிகமாக வந்துவிட்டது.
சிறுவயதில் இருந்து அவளது அப்பத்தா பேசிய பேச்சுக்கள் எல்லாம் அவள் பலவீனமாக இருக்கும் இச்சமயத்தில் சரியாக வேலை செய்து இன்னும் பலவீனப்படுத்தியது. இது மட்டும் தெரிந்தால், “போற இடத்துல எல்லாம் ஒரு ஆம்பளைய எப்படி தான் பிடிக்கறியோ?”, எனப் பச்சையாகவே கேட்பார் முகிலன் பேசியதைக் கேட்டால்….
அவளுக்கு ஆசுவாசம் கிடைத்த இடம் இப்போது அதிகமாக மூச்சு முட்ட வைத்தது. நிதானமில்லாமல் ஏதேதோ யோசித்தாள். கண்களில் நீர் வழிந்தது. இன்னும் முடிந்த திருமண வாழ்வின் வலி ஏற்படுத்திய பக்கங்கள் அவ்வப்போது மனக்கண்ணில் வந்து போனது….
‘நீ என்ன ‘அந்த மாதிரி’ பொண்ணா? நான் ஷை டைப்பான்னு என் அக்காகிட்ட கேட்டு இருக்க?’
‘எதுக்கு புடவை விலகுது …? இத காட்டி என்னை மயக்கப்பாக்கறியா?’
‘யாருக்காக இப்ப இவ்வளவு அலங்காரம் பண்ற?’
‘அவன் ஏன் உன் பக்கத்துல உக்காந்தான்?’
இதுபோன்ற பல நிகழ்வுகள் மனதில் தோன்றி தோன்றி மறைந்தது.
மனதின் அழுத்தம் தாங்காமல் அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவள் விழுந்ததும் அங்கே சோளம் விற்பவர் முகிலனை அழைத்தபடி ஓடி வந்தார். அவனை அழைத்து பின்னால் காண்பிக்க, துவாரகா மயங்கி விழுந்திருப்பதுக் கண்டு பதறியவன், அவளைத் தூக்கிக் கொண்டு வந்து தனது வாகனத்தில் படுக்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்தான்.
அவள் மயக்கம் தெளியாமல் இருக்கவும் பதற்றம் அதிகமாகியது.
“சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க சார்… பக்கத்துல ஒரு க்ளினிக் இருக்கு”, என்று சோளம் விற்பவர் கூறினார்.
“தேங்க்ஸ் அண்ணா…. “, எனக் கூறிவிட்டு அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.
வாசலில் காரை நிறுத்தி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான். அவளை அவசர பிரிவில் அனுமதித்து விட்டு மித்ராவிற்கு அழைத்து மருத்துவமனை வரும்படி கூறிவிட்டு அறை வாயிலில் காத்திருந்தான்.
இராஜாங்கமும், மித்ராவும் கால் மணி நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தனர்.
“என்னாச்சி அமுதா? துவாரகா எங்க?”, எனக் கேட்டபடி அருகில் வந்தார்.
“திடீர்னு மயங்கிட்டாப்பா… எழுப்பினா எந்திரிக்கவே இல்ல… “, எனக் கூறிவிட்டு மித்ராவை அணைத்துக் கொண்டான்.
“எங்க போனீங்க? எப்படி மயங்கினா?”, என மித்ரா மெதுவாகக் கேட்டாள்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கறியான்னு அவள கேட்டேன்… என்னை திட்டிட்டு ஆட்டோல கிளம்பி வந்துட்டா…. நான் உடனே வீட்டுக்கு வரமுடியாம பார்க் போனேன். எனக்கு முன்ன அவ அங்க இருந்திருக்கா … பக்கத்துல சோளம் விக்கறவர் தான் அவ விழுந்திருக்கறத பாத்துட்டு கூப்பிட்டாரு… தண்ணி தெளிச்சும் எந்திரிக்கல மித்து…. பயமா இருக்கு…..”, என்றபடி அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.
இராஜாங்கம் அனைத்தும் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தார். மகனின் மனதை முன்பே அவர் கணித்திருந்தார் என்பதால் அதிர்ச்சியுறவில்லை.. ஆனால் துவாரகா மயங்கியது அவரைக் கவலைக்குள்ளாக்கியது.
மருத்துவர் வெளியே வந்து இராஜாங்கத்தைத் தனது அறைக்கு வரும்படிக் கூறிவிட்டு நடந்தார்.
“டாக்டர்”
“மன அழுத்தம் அதிகமானதுல மயங்கி இருக்காங்க… ரொம்ப டென்ஷன் ஆனாங்களா? “
“ஆமா…. வேலைல கொஞ்சம் அதிக டென்ஷன் கொஞ்ச நாளா…. “, என மித்ரா இழுத்தாள்.
“இது வேலை டென்ஷன் இல்ல… மனசுல அழுத்தம் அதிகமாகி இருக்கு… பீபி ஏறுக்கு மாறா இருக்கு… இன்னும் நார்மல் ஆகல… அவங்க மனசுக்குள்ள பெரிய போராட்டமே நடந்துட்டு இருக்கு …. அதிகமா அழுத்த அழுத்த உடம்பும் மனசும் கெட்டு போயிரும்….”
“அவளுக்கு கல்யாணம் பண்ணலாம்னு பேச்செடுத்தோம்…..”
“நல்ல விஷயம் தானே….”, மருத்துவர்.
“இல்ல… ஏற்கனவே ஒரு தடவை கல்யாணம் ஆகி அது விவாகரத்துல முடிஞ்சி போச்சி… எல்லாம் முடிஞ்சி ஒன்றரை வருஷம் மேல ஆகுது… இப்ப கல்யாணம்ன்னு பேச்செடுத்தாலே கோவப்படறா…. இன்னிக்கு அதபத்தி கொஞ்சம் அதிகம் பேசினோம்…”, என இராஜாங்கம் பொதுவாகக் கூறினார்.
“இராஜாங்கம் சார்…. அவங்க மனவுளைச்சல்ல இருக்காங்க. பழைய வலியே இன்னும் வெளியே போகாம மறுபடியும் கல்யாணம்னு சொன்னா ரொம்பவும் பாதிப்பு அதிகமாகும்… அவங்க மனச மொத சரி பண்ணுங்க.. அப்பறம் கல்யாணத்த பத்தி பேசுங்க… இப்படியே போனா அவங்கள நீங்க பார்க்கமுடியாம கூட போகலாம்… உடம்ப விட அவங்க மனசுக்கு தான் மருந்து தேவை….”, எனக் கூறி அவள் தூங்க சில மாத்திரைகள் மட்டும் எழுதிக் கொடுத்தார்.
முகிலமுதன் அவளின் நிலைக்கண்டுத் தன்னைத் தானே நொந்துக்கொண்டான். அன்றிரவு வரை அவளைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறிவிட, இராஜாங்கம் விஷயத்தை வீட்டிற்கு தெரிவித்தார்.
திவாகர் முதலில் ஓடிவந்து தங்கையைக் கண்டான். அவள் கைகளைத் தொட்டதும் மயக்கத்திலும் அவள் கையை விளக்கிக்கொண்டது மனதை தைத்தது. வெளியே சொல்லப்படாத வலிகளும், காயங்களும் அவளுக்குள் இருப்பதை அப்போது தான் உணர்ந்தான்.
அன்பரசியும், பத்மினி தேவியும் அவளைக் கண்டு கவலைக் கொண்டனர்.
அடுத்த நாள் காலை கண்விழித்தவள் அருகில் அமர்ந்த நிலையில் படுத்திருந்த திவாகரைக் கண்டாள்.