70 – ருத்ராதித்யன்
“யாத்திரை என்ன பேச்சு இது? உன் தமக்கை இதை கேட்டால் என்ன நினைப்பாள்? “, நரசிம்மன் கோபமாக கேட்டான்.
“அவள் என்ன நினைத்தால் தங்களுக்கு என்ன அத்தான்? நான் மகாராணியாரிடம் கேட்ட கேள்விக்கு தங்களிடம் பதில் இருந்தால் கூறுங்கள்…. சரி தானே மகாராணி?”, யாத்திரை புன்னகை மாறாத முகத்துடன் அவனிடம் வம்பு வளர்க்க தொடங்கினாள்.
“மிக்க சரி…. ஆருத்ராவின் எண்ணம் பற்றி உனக்கு என்ன வந்தது மகனே? நீ தான் விரதமோ, வாக்கோ எதுவும் செய்யவில்லையே…. முதலில் ஒரு பெண்ணை மணந்து கொள், பின்னர் சில வருடம் கழித்து இவள் விரும்பினால் ……”, என அவர் வார்த்தையை முடிக்கும் முன், “நான் மனதாலும், உடலாலும் ஒரு பெண்ணை மட்டும் தான் ஏற்பேன் என்று நரசிம்மரின் முன் சத்தியம் செய்திருக்கிறேன்…. ஆதலால் இருவரும் இந்த வேண்டாத பேச்சை விடுத்து உள்ளே செல்லுங்கள்… நான் அமரருடன் நமது நகரை சுற்றிவிட்டு வருகிறேன்….”, என வந்தவழியே கிளம்பினான்.
“இளவரசே… ஒரு நிமிடம்… நில்லுங்கள்… தங்களை மகாராஜா உடனடியாக அசரவை வரச்சொல்லி கட்டளையிட்டு இருக்கிறார்….”, என ஒரு காவலன் ஓடி வந்து கூறினான்.
“எதற்காக?”, கண்கள் சுருக்கி நரசிம்மன் கேட்டதும் அந்த காவலன் பதறி மந்திரியார் நின்ற பக்கம் பார்த்தான்.
“நரசிம்மா….. குருகுலம் முடித்து வந்தவன் முதலில் அரசரை வணங்கி சற்று இளைப்பாறி, உணவு கொள்… பின்பு நாம் வெளியே செல்லலாம்…”, அமரபுசங்கர் அவனை கையோடு இழுத்துக் கொண்டு அரசவை சென்றார்.
“நீ என்னை இழுத்து செல்லும் விதமும் சரியில்லை, மந்திரியாரின் முழியும் சரியில்லை…. என்ன சதி நடக்கிறது இங்கே?”
“உன் அரண்மனையில், உன் வீட்டில் என்னடா சதி நடக்கிறது என்று கேட்கிறாய்? இளவரசியை காண செல்ல வேண்டுமா? அவர் தங்கை உன்னுடன் வந்த காரணம் என்ன?”, அமரபுசங்கர் இளவரசியை பற்றி பேசியதும் நரசிம்மன் அமைதியாகிவிட்டான்.
“அடப்பாவி…. அரசருக்கு கொடுக்காத முக்கியத்துவம் இளவரசிக்கு கொடுக்கிறாய்…. அது சரி அவர் உன் காதலை ஏற்றுக் கொண்டாரா?”
“உன் தந்தை முறையில் அவள் உனக்கு தங்கை தானே? நீயே அவளிடம் கேட்டு கூறு… இப்போது இங்கே என்ன நடக்கிறது என்று சொல்…..”, அவன் சுற்றி நடக்கும் அதீத ஏற்பாடுகளை கவனித்தபடி கேட்டான்.
“உனக்கு யுவராஜ பட்டம் கட்டப்போகிறார்கள்….. “, எனக் கூறியபடி மகாராணி அவன் அறைக்கு வந்தார்.
“இன்றே எதற்கு இந்த ஏற்பாடு? “
“அரசர் முடிவு…. உனக்கு பொறுப்புகளை சொல்லிக் கொடுக்க இந்த ஏற்பாடு…”
“நான் என்ன பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறேனா? இல்லை நாட்டை பற்றிய அக்கறையின்றி தகாத காரியங்களில் ஈடுபடுகிறேனா?”, கோபமாக கேட்டான்.
“அத்தான்…. எதற்கு இத்தனை கோபம் தங்களுக்கு வருகிறது? இன்று மிகவும் நல்ல முகூர்த்தம் நிறைந்த நாளாம்… இன்று தங்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தால், மொத்த பாரத கண்டமும் தங்களின் செங்கோல் ஆட்சியின் கீழ் வந்துவிடுமாம்…. அதனால் தான் தாங்கள் வந்ததும், நீங்கள் ஆராய்ச்சி கூடம் செல்லும் முன் பொறுப்புகளையும் கொடுத்து தங்களுக்கு இந்த எண்ணத்தை நினைவில் நிறுத்துகிறார் அரசர்….. “, நீளமாக பேசியபடி அவனுக்கு என்று எடுத்த பட்டுடை மற்றும் இதர அணிகலன்களை கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தாள்.
“இதற்கு தான் நீயும் என்னுடன் வந்தே தீருவேன் என்று எனை வழிமறித்து நின்றாயா?”
“வழிமறித்து தங்களுடன் தானே வந்தேன்…. வழிபறிக்க வரவில்லையே….. அண்ணா அமரபுசங்கரே…. இவரை தயார் செய்து 2 நாழிகைக்குள் அசரவை அழைத்து வாருங்கள்…. இது அரசரின் உத்தரவு…. நான் விடைபெறுகிறேன்…..”, என இருகரம் கூப்பி வணங்கியபடி அவனுக்கு நாக்கை துறுத்தி பழிப்பு காட்டிவிட்டு அங்கிருந்து ஓடினாள் யாத்திரை.
“பார்த்தாயா அமரா…. அவளின் செய்கையை…. சரியான வாய்துடுக்கோடு, சடுதியில் அனைவரையும் ஆட்டிவைத்து விளையாடுகிறாள்….. இவளை அனுப்பியது நீயா ? அரசரா ? நான் முக்கியமான ஆராய்ச்சியில் இருக்கிறேன் என்று நீ அறிவாய் தானே? ஆருத்ரா அங்கே கூடம் செல்லும் முன் நான் சென்றாக வேண்டும்….. இன்னும் ஒரு திங்களில் முக்கியமான ஒன்றில் நாங்கள் வெற்றி காண்போம்….”, நரசிம்மன் கோபமாக பேசியபடியே சாரளம் பக்கம் செல்ல, அங்கிருந்து கீழே பார்க்க, மகதன் யாத்திரை உடன் விளையாடுவதை பார்த்தான்.
“இங்கே பார் நரசிம்மா… நீ எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அரசரும் அறிவார்…. உனக்கு ராஜ்ஜியம் பற்றியும் தெரிய வேண்டும் என்பதற்காக தான் பட்டம் சூட்டி நாடு முழுக்க சென்று மக்களையும் நாட்டையும் அறிந்து கொள்ள கூறுவது. இந்த பயணம் உனக்கு அதிக நன்மையை பயக்கும்…. உனது ஆராய்ச்சிக்கும் பெரிதளவில் உதவியாக இருக்கும்…. மனதை சமன்படுத்திக் கொண்டு மகிழ்வோடு இந்த நிகழ்வை ஏற்றுக்கொள்…. வா…. நீராட செல்…”, என சமாதானம் செய்து அவனை அழைத்து சென்றான்.
நரசிம்மன் மனதில் மீண்டும் மீண்டும் தாங்கள் மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி சிந்தனைகள் வலம் வந்தப்படி இருந்தன.
‘ஆருத்ரா தனியாக செய்து முடிப்பாளா ? அவளுக்கு உதவிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும்… வடகிழக்கில் ஒரு இளவரசன் செய்யும் கொடூரமான ஆராய்ச்சிகள் பற்றி குருகுலத்தில் இருந்தபோது கேள்வியுற்றான். அவனையும் அறிய வேண்டும்…’, இப்படியாக நினைத்தபடி நீராடி தயாராகி ராஜநடையுடன் அவன் நடந்து வரும் அழகை கண்டு பெற்றவர்கள் மனம் பூரித்து இருந்தது.
அடர்ந்து சுருண்ட சிகையும், அகன்ற மார்பும், உருண்டு திரண்டிருந்த தோள்களும், பாறையையொத்த வயிற்று பகுதியும், வலுவான தொடைகளும், நன்கு விரிந்திருந்த பாதமும் அவனது உடல் திரத்தை நன்றாக காட்டியது.
வடிவான முகத்தில் கூறிய கண்களும், தடித்த இதழும், சிரித்தால் லேசாக கன்னத்தில் விழும் குழியும், முத்துப்பல் வரிசையும் பேரழகன் இவன் என பறைச்சாற்றியது.
அவன் உடல் சுற்றித் தழுவி இருந்த பட்டாடை அவனது கை இறுக்கத்தில் நூலாக மாறும் பணியை தொடங்கவிருந்தது.
“அத்தான்… தங்களது மேலாடை பாவம்.. அதை இறுக்குவதை விடுத்து, முகத்தில் புன்னகை சேர்த்து அவையோரை வணங்குங்கள்… “, வனயாத்திரை இதழ் அசையாமல் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறிவிட்டு அமரபுசங்கன் அருகில் சென்று நின்று கொண்டாள் .
“ என்னிடம் வருவாயல்லவா.. .அப்போது பேசிக்கொள்கிறேன் உன்னை…. “, என அவளிடம் பல்லை கடித்தபடி கூறிவிட்டு அரசரை வணங்கி அவையோரையும் வணங்கி நின்றான்.
“அவையோருக்கு வணக்கம்….. இதோ உங்களின் இளவரசர் குருகுலம் முடிந்து வந்துவிட்டார். இனி ராஜ்ஜிய பரிபாலனமும் ஏற்று மக்களுக்காகவும், நம்மை உருவாக்கிய இயற்கையையும் போற்றி பாதுகாத்து அனைத்து உயிர்களுக்கும் நல்வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பார் என்பதை பெருமையோடு இங்கே மொழிகிறேன்… இன்று இரவு நம் கானகத்தின் வனதேவியிடம் இருந்து யுவராஜா அணிகலன் சேர்க்க தொடங்குவார்…. முழுதாக பொறுப்பேற்றபின் மீண்டும் அவையில் தங்களை சந்திப்பார்…..”, என அரசர் அறிவிக்கவும் வாழ்த்து ஒலிகள் எழுந்தன.
“அண்ணா…. இங்கே பட்டம் சூட்ட மாட்டார்களா?”, யாத்திரை தன் சந்தேகத்தை கேட்டாள்.
“இல்லை யாத்திரை…. யுவராஜா பட்டம் பெறுவதற்கு தகுதி உள்ளதா என்று நிரூபிக்க வேண்டும்…. “
“இப்போது பரிட்சை வைப்பார்களா?”, ஆர்வமோடு கேட்டாள்.
“பரீட்சை முடிந்து 2 ஆண்டுகள் ஆனது… இப்போது பட்டம் மட்டும் நமது அடவிகளில் 8 உயரிய மலைகளில் இருக்கும் 8 வனதேவி கோவில்களுக்கு சென்று அங்கே தேவியின் முன் பணிந்து எழும்போது, தேவியிடம் இருந்து மலர் அவர் தலையில் விழும், அதை சேகரித்தபடி 8 ஆலயத்தில் விழுந்த மலர்களை கொண்டு வந்து அசரர் முதல் ஏனையோர்களிடம் காட்டி, யுவராஜனே தனக்கான அணிகலனை செய்து, மக்கள் முன்பு மகாராணியார் அதை யுவராஜனுக்கு சூடவேண்டும்…. இதே அணிகலன் தான் அவர் அசரன் ஆனாலும் அணிந்து கொள்ளவேண்டும்… “
“ஓஹ்.. என்ன பரிட்சை வைத்தார்கள்? அத்தான் என்ன செய்தார்?”
“மகதன் தான் அவன் வென்ற பரிட்சை…. “, பெருமூச்சோடு கூறினார்.
“ மகதனா ? விளக்கமாக கூறுங்கள்…”
“அவனை வழியனுப்பிவிட்டு கூறுகிறேன் இரு யாத்திரை…. “
“அவர் மட்டும் தனியாக செல்லப் போகிறாரா?”
“இல்லை.. மகதன் உடன் செல்ல போகிறார்…. அவர் காப்பாற்றிய உயிரோடு சென்று அன்னையிடம் ஆசிப்பெற்று வரவேண்டும்…. “
“காப்பாற்றிய உயிரா? எனக்கு ஒன்றும் புரியவில்லை…. பொதுவாக அரச குலத்தினர் ஏதேனும் வேட்டையாடி தானே தங்கள் பலத்தை நிரூபிக்கிறார்கள்? “, தன்னுள் தோன்றிய சந்தேகத்தோடு கேட்டாள்.
“ஹாஹாஹா.. சரி நான் கேட்கும் கேள்விக்கு பதில் கூறு…. ஒரு உயிரை வேட்டையாடி கொன்ற சவத்தினை அவன் வீரத்தின் சான்றாக கூறுவது பெரிதா? தான் போராடி காப்பாற்றிய உயிரை பாதுகாத்து வளர்த்து, அதன் இனம் பெருக்கி இப்பூமியில் அதற்கான இடத்தை அளித்து காப்பது பெரிதா?”
“நிச்சயமாக உயிரை காப்பாற்றுவது தான் பெரிது….”
“அதே தான் ஆதித்த வம்சாவழியினர் செய்து வருகிறார்கள்…. உயிரை கொல்வதில் இல்லை வீரம், அதனை காத்து வளர்ப்பதில் தான் இருக்கிறது….. இந்த பூமியில் அனைத்து உயிர்களுக்கும் இடமுண்டு… ஒரு இனத்திற்காக மற்றொரு இனத்தினை அழிக்க கூடாது என்பது இவர்களின் தர்மம்…. அதனால் தான் இன்றும் உயர்ந்து கொண்டே இருக்கிறது இந்த பேரரசு ….”, அமரபுசங்கர் பெருமை பொங்க அடர்ந்திருக்கும் காட்டினை பார்த்தபடி கூறினார்.
“அப்படியென்றால் நாம் உணவுக்காக கொல்லும் உயிர்கள்?”
“உணவுக்காக, மருந்திற்காக என்று பல வணக்கங்கள் அவ்வுயிர்கள் முன் வைத்து, அதற்கான மாற்றுவழியாக அந்த இனத்தினை அதிகமாக பெருக்க செய்து வருவதும் நடக்கிறது… உணவு சங்கிலி என்பதும் இயற்கையின் உருவாக்கம் தானே? அனைத்தும் சரியான அளவில் இருந்தால் இந்த பூமியும் வளமாக இருக்கும்…. ஆனால் அநியாயமாக அழிப்பது தான் மாபெரும் பாவம்… ஒரு இனம் இயற்கை பேரிடரால் அழிவது வேறு…. ஒரு சில குறிப்பிட்ட காரணங்கள் மற்றும் பகையினால் அழிக்க நினைப்பது மாபெரும் தவறு.. அதை தான் நாம் தடுக்க முற்படுக்கிறோம்…. “
யாத்திரை மீண்டும் கேள்வியை ஆரம்பிக்கும் முன் அவள் வாயை தனது உள்ளங்கை கொண்டு மூடி, “உனது அறிவாற்றலை பெருக்க இது சமயமல்ல… வா வழியனுப்பிவிட்டு வரலாம்…..”, என அவளை அழைத்துக் கொண்டு நரசிம்மனும், மகதனும் இருந்த இடத்திற்கு சென்றார்.
“அத்தான்…. வரும்பொழுது எனக்கும் வனதேவியின் ஆசிகளை பெற்று வாருங்கள்…. நானும் தங்களுக்கு உதவியாக இயற்கை உயிர்களை காக்க கடமையாற்றுவேன்… “, என அவன் பாதம் பணிந்து எழுந்தாள்.
“என்ன இது யாத்திரை? நீ ஏன் என் பாதம் பணிகிறாய்? நீ எங்கள் இதயத்தின் மகாராணி…. உன் அன்பிற்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டவர்கள்…. சற்று கோபமாக உன்னிடம் வந்த நேரம் முதல் பேசிவிட்டேன்…. மனதில் சுணக்கம் கொள்ளாதே…. உனக்கு என்ன வேண்டும் கேள்…”
“விரைவாக என்னை தங்களது மச்சினியாக மாற்றிக் கொள்ளுங்கள்…. இல்லையென்றால் நான் தங்களுக்கு மனையாட்டியாக மாறவேண்டியது இருக்கும்… ஆனாலும் மகாராணியார் இன்னொரு ஆண் பிள்ளையை பெற்று இருக்கலாம்.. தங்கள் அனைவருடனும் நான் எப்போதும் இருந்து இருப்பேன்…”, பெருமூச்சோடு அவள் கூறியதை கேட்டபடி அரசர் அங்கே வந்தார்.
“நானும் அப்படி தான் கூறினேன் மகளே… திலகா தான் மறுத்துவிட்டாள்….”, என யாத்திரைக்கு பதில் கூறியபடி வந்து நின்றார்.
“ஆனாலும் தாங்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக போராடி இருக்கலாம் அரசே.. இப்போது பாருங்கள் நான் தனியாக நிற்கிறேன்…”
“கவலையை விடு.. உனக்கென்று பிறந்தவனை எங்கிருந்தாலும் கொண்டு வந்து கட்டி வைத்து விடுகிறோம்…. “
“இல்லை இல்லை…. எனக்கு அத்தானின் தம்பி தான் வேண்டும்… அதனால் நான் புது ஆராய்ச்சி ஒன்றை செய்ய போகிறேன்….”, என கூறினாள்.
“நாட்டில் வீட்டை விட ஆராய்ச்சி கூடங்கள் அதிகமாகிறது திலகா…. சீக்கிரம் மண வயதில் இருப்பவர்களை எல்லாம் மணம் செய்ய கட்டளையிட வேண்டும் போல இனி…”, சிரிப்புடன் அரசர் கூற மற்றவர்களும் அதில் கலந்துக் கொண்டனர்.
“ஆமாம் ஆமாம்…. முதலில் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, பிறகு நாட்டில் உள்ளவர்களுக்கு கட்டளையிடுங்கள்…. நரசிம்மா…. கவனம்… மகதனை மிக கவனமாக அழைத்து சென்று வா…. மற்போர் நடத்தி காலத்தை விரயம் செய்யாதீர்கள்…. “, என மகனிடம் கூறிவிட்டு மகதன் அருகில் சென்றார்.
“மகதா…. கவனமாக சென்று வரவேண்டும்… அவனை கவனமாக பின்தொடர்ந்து செல்… விளையாட்டாக இருக்காதே.. தேவியின் அருள் நீயும் பெற்று வா….. அன்னை உனக்காக காத்திருப்பேன்….”, என மகதனின் தலை தடவி உச்சியில் முத்தமிட்டார்.
மகதனும் தலையை அவர் மடியுரசி தனது பிரிவு ஏக்கத்தை வெளிப்படுத்தினான்.
“நரசிம்மா…. நலமோடு சென்று வா…. உனை இளைப்பாற விடாமல் இன்றே நான் அனுப்புவது குறித்து உனக்கு வருத்தம் இருக்கலாம்.. பரவாயில்லை சென்று வா…. வந்து ராஜ்ஜியம் பரிபாலனம் தொடங்கு….”, என அவனை கட்டியணைத்து காதில் ரகசியம் கூறினார்.
“விடை பெறுகிறேன் அரசே.. வருகிறேன் அம்மா… வன யாத்திரையை நீயே அழைத்து சென்று ருத்ர சாம்ஸ்தானம் சேர்த்துவிட்டு வா அமரா…. மகதா.. வா கிளம்புவோம்…”, என இருவரிடமும் தலையசைத்து தன் குதிரையில் ஏறிக் கொண்டான்.
கோட்டை கடந்து அவன் செல்வதையும், மகதன் பாய்ந்தபடி ஓடுவதையும் அனைவரும் மேல்மாடத்தில் இருந்து கண்டனர்.