9 – வேரோடும் நிழல்கள்
“எனக்கு புரியல. கொஞ்சம் புரியரமாதிரி சொல்றீங்களா டாக்டர்?” என நீரஜ் கேட்டான்.
“இது சின்ன வயசுல ஏற்பட்ட மனவழுத்தம்னால உண்டாகற ஒரு மனசஞ்சலம். அவங்க உடம்புலையும், மனசுலையும் அதோட தாக்கம் அப்படியே தங்கிடறதால அவங்களோட இயல்பு பாதிக்கப்படும். அந்த பாதிப்பு தான் இது..”
“மனோவியாதி அஹ் ?” பார்த்திபன் கேட்டான்.
“பார்த்தி..” என நீரஜும், கிரிஜாவும் ஒன்றாக அவனை முறைத்தனர்.
“இது மனபாதிப்பு தான். சின்ன வயசுல அவங்க அப்பா அம்மா இவங்க கண்முன்னாடி போட்ட சண்டைங்க தான் இவங்களுக்குள்ள அழுத்தமா தங்கிடிச்சி. தவிர ஒரே பொண்ணா போனதால இவங்களுக்கு ஏற்கனவே இருந்த தனிமை, பெத்தவங்க நடுவுல வர்ற மனஸ்தாபம் வாக்குவாதங்களால தனிமையும், அழுகையும் அதிகமா இருந்து இருக்கு. இவங்கள தேத்தவும் ஆறுதல்படுத்தவும் யாருமே இல்லாம விட்ட நாட்கள் நெறைய இருந்திருக்கு. அதன் விளைவு தான் அவங்க தன்னை தானே சுருக்கி வாழ ஆரம்பிச்சி இருக்காங்க. ஏதோ ஒரு வகைல அவங்க டீச்சர் வேலைய தேர்ந்தெடுத்து வந்ததால மோசமான நிலமைக்கு போகல. ஆனாலும் வீட்ட நெனைச்சாலும், கல்யாணம் குடும்பம்ன்னு யார் பேசினாலும் அவங்களுக்கு பயம் வந்துடுது. அதான் கல்யாணம் வேணாம்ன்னு சொல்றாங்க..”
“இன்னும் இந்த பாதிப்பு என்ன என்ன செய்யும் டாக்டர்?” கிரிஜா கவலையுடன் கேட்டாள்.
“ஒரே அடியா டிப்ரெஷன் போயிடுவாங்க. இல்லனா ஒரு கட்டத்துல வெடிச்சி கத்தவும் செய்யலாம். தன்னை பத்தின நல்ல விஷயங்களை அவங்க நெனைச்சி கூட பாக்க மாட்டாங்க. அவங்களோட நெகட்டிவ் விஷயங்களை மட்டுமே பாத்து எல்லாத்தயும் தனக்கு அதுலாம் சரிவராதுன்னு ஒதுக்கிடுவாங்க..”
ஒரு நொடி தரணி இடைவெளிவிட்டு, “வாழ்க்கை மேல இருக்க நம்பிக்கை போயிடும். இப்போ அவங்களுக்கு குடும்ப வாழ்க்கை மேல நம்பிக்கை இல்லை. கல்யாணம், இதர இணை சேர்க்கும் எந்த விசயத்துலையும் அவங்க உடன்படமாட்டாங்க..”
“இது சரிபண்ணிடலாம் தானே டாக்டர்?” நீரஜ் தவிப்புடன் கேட்டான்.
“பண்ணலாம். அது என்னால மட்டுமே முடியாது அவங்கள சுத்தி உள்ளவங்களும் அதுக்கு தகுந்தமாதிரி நடந்துக்கணும். அப்போ தான் மாற்றம் வரும்..”
“டாக்டர் ஒரு சந்தேகம்..” என ஆரம்பித்து கிரிஜா பாதியில் நிறுத்தினாள்.
“கேளுங்க..”
“இந்த பாதிப்பால அவ தப்பான எந்த முடிவுக்கும் போகமாட்டா தானே?”
அதைக் கேட்டதும் நீரஜ் ஒரு நொடி அதிர்ந்து அவளைப் பார்த்தான்.
“அதுக்கான வாய்ப்பும் இருக்கு. ஏன்னா இந்த பாதிப்பு ரொம்ப வருஷமா இவங்களுக்குள்ள தங்கிட்டதால தான் இத ptsdன்னு சொல்றோம். அவங்களோட சுயத்துல இருந்தே அவங்க விலகி போவாங்க. அவங்க இப்ப இருக்க நிலமை கொஞ்சம் மோசம் தான். உடையப் போற கண்ணாடி மாதிரி.. கீழ விழுந்துட்டாங்க. விரிசலும் விட்டுரிச்சி. விரிசல் ஆரம்பிச்ச எடத்த உடைச்சிவிட்டு எடுத்தா மத்த பகுதிய பாதுகாப்பு பண்ணிடலாம். எடுக்கறவங்க கையவும் இது கிழிக்கும்.. ரணம் படணும். அதுக்கு தயாரா இருந்தா தான் கைய நீட்டணும்.” எனக் கூறியபடி நீரஜை பார்த்தான்.
“அவங்க பிரமை பிடிச்சமாதிரி அப்பப்போ உக்காந்து இருக்காங்களே அதுவும் இதனால தானா டாக்டர்?” என நீரஜ் கேட்டான்.
“ஆமா.. சித்தபிரமை பிடிச்சமாதிரி தான் இருப்பாங்க. நைட் தூக்கம் வராம ரொம்ப நேரம் முழிச்சி இருப்பாங்க. நம்மள மாதிரி ஃபோன், படம்ன்னு எதுவும் பாக்கமாட்டாங்க. அப்படியே ஒரு இடத்த வெறிச்சி பாத்தமாதிரி தூங்காம இருப்பாங்க. அவங்க கண் நரம்புகள் வலி எடுத்து இமை மூடினா தான் கண்ணு மூடுவாங்க. மனசுல பல எண்ணங்கள் ஓடும். இப்படி ஆகிடுமோ அப்படி ஆகிடுமோன்னு பயந்தது போக அந்த டாபிக் பக்கமே போக பயப்படுவாங்க. அவங்க இயல்பயே இந்த அழுத்தம் மறக்கடிச்சிடும்.”
“டாக்டர். நம்ம வீட்ல கூட தான் அப்பா அம்மா சண்டை போடறாங்க எல்லாரும் இப்படியா இருக்காங்க?” பார்த்தி கேட்டான்.
“இது நல்ல கேள்வி. உங்களுக்கு அப்பா அம்மா எப்ப இருந்து சண்டை போட்டாங்கன்னு ஞாபகம் இருக்கா? அந்த சண்டைகள்ல ஏதோ ஒன்னாவது உங்களுக்கு நினைவிருக்கா?”
“சின்ன வயசுல சண்டை போடுவாங்க. நான் வளர வளர அவங்க சத்தம் குறைஞ்சிடிச்சி.. தவிர அவங்களுமே இதுக்கு சண்டை தேவையான்னு யோசிச்சி வருத்தம்ன்னு சொல்லிக்கறதோட சரி.. நானும் ஒரே பையன் தான். அப்பா அம்மா காதல் கல்யாணம் பண்ணவங்க. அதனால தாத்தா பாட்டி ஆதரவும் இல்ல. நாங்க மூணு பேரு தான். “
“வீட்ல ஏதாவது வாங்கினா உங்க விருப்பம் கேட்டுப்பாங்களா?”
“கண்டிப்பா. எனக்கு பிடிச்சி இருக்கா இல்லையான்னு எனக்கு வெவரம் தெரியறதுக்கு முன்ன வாங்கின பொருட்கள்ல கூட என்னோட அபிப்ராயம் கேட்டு தான் செய்வாங்க..”
“இத படிச்சி பாருங்க..” என காலையில் நிழலினி எழுதிய தாளை அவர்களிடம் கொடுத்தான்.
அதில் அப்பா அம்மா எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டிருந்த கேள்விக்கு அவளின் பதில்கள் கீழே..
‘திருமணம் முடிந்து பிள்ளைகள் வந்துவிட்டால் அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். குறைந்தபட்சமாக அவர்களுக்கு வாங்கி கொடுக்கும் பொம்மை முதல் உடுத்திக் கொள்ளும் உடைகள் வரையிலுமாவது அவர்களது விருப்பங்கள் கேட்டு வாங்க வேண்டும்.’
‘வெளியிடங்களுக்கு சென்றால் அங்கே மனஸ்தாபம் எழுந்தாலும் அங்கேயே சண்டையிடாமல் வீட்டில் வந்து பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம். தந்தை என்பவர் தாயை மதிக்கவேண்டும். முக்கியமாக வெளியிடங்களில் தன்னுடைய ஆண் திமிரைக் காட்ட சண்டையிடுவதும், கைநீட்டுவதும் தவறு. அது உடன் இருக்கும் குழந்தைகளின் மனதை பாதிக்கும்.’
‘எத்தனை பெரிய பிரச்சனையாக இருந்தாலும் வீட்டில் இருவரும் அமர்ந்து அவர்களுக்குள் பேசி பிரச்சனையை முடித்துக் கொள்ளவேண்டும். அதில் யாரின் சொந்தங்கள் உள்ளே நுழைந்தாலும் பிரச்சினை தீராது. அப்படி வரும் சொந்தங்கள் அவர்களின் பிள்ளைகளிடம் வன்மமான வார்த்தைகளை பேசவிடக்கூடாது.
(எ. கா): இப்படியே இவங்க இருந்தா நீ நடுரோட்ல தான் நிப்ப. உன் அப்பன் ஒருநாள் உங்கம்மாவ அடிச்சே கொல்லப்போறான், நீயாவது ஒளிஞ்சி இருந்து பொழச்சிக்க. இவங்க இப்படியே சண்டை போட்டுட்டு இருந்தா நீ உருப்படமாட்ட, இவங்கள சண்டை போட விடாத. அழுதாவது அவங்கள பிரிச்சி வை அந்த நேரத்துல. நாலு அடி வாங்கியாவது அவங்க சண்டைய நிறுத்தணும்ன்னு உனக்கு தெரியாதா? என்ன புள்ள நீ?’
‘சண்டை முடிந்தாலும் முடியாவிட்டாலும் குழந்தைகளின் முகத்தையும், அவர்களின் நிலையையும் பெற்றவர்கள் அன்று உறங்கும்முன் சரிபார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தைரியம் சொல்லவேண்டும். அவர்கள் மனதை அழுத்தும் பாரத்தில் இருந்து விடுவிக்க ஏதேனும் செய்ய வேண்டும். முக்கியமாக இரவில் அழுதபடி வெறும் வயிற்றில் தூங்கவிடக்கூடாது. இப்படியாக குறைந்த பட்சமாக குழந்தைகளின் மனநலத்தில் அக்கறை எடுக்கவேண்டும்.’
இப்படியாக ஒவ்வொரு பிரிவிற்கும் பிரித்து ஒரு ஆசிரியையாக இருந்து அவள் பல விஷயங்களை கூறியிருந்தாலும் அவளின் மனஏக்கங்கள் அவளது பதில்களில் தெரிந்தது.
சுமாராக 20 பக்கங்களில் அவள் பல விஷயங்களை கூறியிருந்தாள். நீரஜ் அனைத்தையும் படித்துவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தலையை தொங்கப்போட்டுக் கொண்டான்.
மற்றவர்களும் அதையெல்லாம் படித்துவிட்டு நீரஜின் வார்த்தைகளுக்காக காத்திருந்தனர். விஷாலியும் அதற்குள் அவளை தன் வீட்டில் விட்டுவிட்டு சக்தி கூறியதால் இங்கே வந்திருந்தாள்.
அவளும் அதையெல்லாம் படித்துவிட்டு பாரம் ஏறிய மனதுடன் மற்றொரு பக்கம் அமர்ந்தாள்.
“டாக்டர்.. இப்ப இவ என்ன நிலமைல இருக்கா?” விஷாலி தவிப்புடன் கேட்டாள்.
“அவங்கள சரி பண்ணிடலாம் விஷாலி. ஆனா அதுக்கு நெறைய பேரோட ஒத்துழைப்பு நமக்கு வேணும். முக்கியமா வீட்ல அவங்க ரொம்ப நேரம் இருக்ககூடாது. அப்படியே இருந்தாலும் அவங்க அப்பா அம்மா சண்டைய பாக்கக்கூடாது. அது இன்னமும் அவங்கள அதிகம் பாதிப்புக்கு கொண்டு போகும்.”
“டாக்டர். அவங்கள கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டா?” நீரஜ் கேட்டான்.
“அவங்க மனசு ஒரு உறவுக்கு தயாராகாம கல்யாணம் செய்யறது அவங்கள தற்கொலைக்கு தூண்டும். அது ரொம்ப தப்பு நீரஜ்.”
“அப்பறம் இவள எங்க வச்சி சரிபண்றது?” என விஷாலி கலவையான உணர்வுகளுடன் கேட்டாள்.
“எனை கேட்டா கொஞ்ச மாசம் அவங்க வெளியூர்ல இருந்து வேலை பாக்கறது நல்லது. அவங்க இயல்பு வெளிய வரும். இறுக்கம் குறையும். இயல்பு வெளிய வர்ற ஆரம்பிச்சாலே போதும் நமக்கும் வேலை சுலபம்.” என தரணிதரன் கூறிவிட்டு அவளைப் பார்த்தான்.
“டேய் மச்சி.. இப்பவும் சொல்லு இந்த பொண்ணு தான் வேணுமா?” என பார்த்திபன் நீரஜ் அருகே சென்று கேட்டான்.
“ஏன்டா?” எரிச்சலுடன் கேட்டான்.
“இங்க பாரு நான் சொல்றத கோவப்படாம கேளு. ஒரு சராசரி பொண்ண காதலிக்க வச்சி கல்யாணம் பண்றதுக்குள்ளயே மனுஷன் நொந்து நூடுல்ஸ் ஆகிடுவான். இதுல அந்த பொண்ணு ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் அஹ் இருக்கு. அத நீ மறுபடியும் ரீசெட் பண்ணி கரெக்ட் பண்ணனும். தவிர ரொம்ப பொறுமையா இருக்கணும். வழக்கமான ஆம்பளையா இருக்க முடியாது. பல தியாகங்கள் பண்ணனும். உங்கம்மா உங்கக்கா அப்பா சொல்றது எல்லாம் உடனே கேட்டு நடக்க முடியாது. நடக்க முடியாமலும் கூட போகலாம். முக்கியமா அந்த பொண்ணு மேல நீ பரிதாபம் படக்கூடாது. அப்படி பரிதாபம் வந்தா அதுக்கு பேர் காதல் இல்ல, நீ வாழறது வாழ்க்கையாவும் இருக்காது. ஒரு கொழந்தைய பாத்துக்கற மாதிரி தான் நீ அவக்கூட வாழணும். உன்னால முடியுமா?” பார்த்தி படபடவென கேட்டுவிட்டு நீரஜ் கண்களை பார்த்தான்.
“ஒரு முயற்சி செஞ்சி பாக்கறேன் டா..”
“இதென்ன விளையாட்டா டா? முழுமனசோட சொல்லு. இந்த விஷயத்த உன் அப்பா அம்மாகிட்ட எல்லாம் சொல்லி பெர்மிஷசன் வாங்கி கல்யாணம் பண்ண முடியாது. வேணுமா? வேணாமா? முடியுமா ? முடியாதா?” இது மட்டும் உன்ன நீயே கேட்டுக்க. இந்த பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு வெளிய சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அது யாருக்கும் நல்லது இல்ல.”
“நீ ஏன் பார்த்தி நெருக்கற? அவரு கொஞ்சம் யோசிக்கட்டும்..” கிரிஜா கூறினாள்.
“இது வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயம் கிரி. இப்ப அவனால முடிவெடுக்க முடியலன்னா பின்னாடியும் முடியாம போக வாய்ப்பு அதிகம். காதல் ஆசைக்கு மட்டும் இல்ல, கஷ்டத்துலையும் இருக்கணும். அப்ப தான் அதுக்கு பேரு காதல்.”
“நான் நிப்பேன் டா. நிழலினியவே மனசார சம்மதம் சொல்ல வைப்பேன்.” என பார்த்திபனை முறைத்தபடி கூறினான் நீரஜ்.

