8 – வேரோடும் நிழல்கள்
“டேய் மச்சான்.. உன் ஆளு இங்க வந்திருக்கா டா.. சீக்கிரம் கிளம்பி வா..” என பார்த்திபன் நீரஜை அழைத்தான்.
“டேய் நீயும் லீவு போட்டுட்டு போயிட்ட இப்ப இங்க யாரும் இல்ல டா.. சட்டுன்னு யாராவது வந்தா கூட யாருக்கும் மேனேஜ் பண்ண தெரியாது.” நீரஜ் அழாத குறையாக புலம்பினான்.
“நீ அந்த மேனேஜர் எருமைக்கு ஃபோன் பண்ணி உன் பாட்டி செத்துபோச்சுன்னு சொல்லிட்டு உடனே கிளம்பி வா.. நா அவங்க எந்த படம் போறாங்களோ அதே படத்துக்கு உனக்கு டிக்கெட் வாங்கி வைக்கறேன்.. கொஞ்சம் சிரிச்ச முகமா உன் ஆளு இப்போ இருக்கா அதனால சீக்கிரம் பறந்து வா..” என வேகவேகமாக பேசிவிட்டு கிரிஜாவை அழைக்க திரும்ப அவள் ஏற்கனவே நிழலினியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“நீ படத்துக்கு யார் கூட வந்த கிரிஜா?” நிழலினி சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தாள்.
“என் ஆளு கூட தான். இதோ வந்துட்டாரு.. பார்த்தி இவ நிழலினி. எனக்கு மாமா பொண்ணு.. நம்ம நிச்சயத்துக்கு கூட வந்திருந்தா ஆனா உடனே கிளம்பிட்டா.. டீச்சர் ரொம்ப சின்சியர்..” என கிரிஜா அவளிடம் வாயாடிக்கொண்டிருந்தாள்.
“அவ சின்சியர் அஹ் இருந்தா பரவால்லங்க எங்களையும் அப்படி தான் இருக்கணும்ன்னு பாடா படுத்துவா அதான் இம்சை..” எனக் கூறியபடி விஷாலி அங்கே டிக்கெட்டுடன் வந்தாள்.
“ஏங்க எத்தன டிக்கெட் வாங்கினீங்க? எனக்கும் மூணு வேணும்..” என பார்த்தி அவளிடம் கூறினான்.
“உங்களுக்கு ரெண்டு ஆளா பாஸ்? எப்டி சமாளிக்கறீங்க? பாருங்க இவன் என் ஃப்ரெண்ட் தான் ஆனா ஒரு பொண்ணு கூட இன்னும் இவன் கரெக்ட் பண்ண முடியாம தெனறிட்டு இருக்கான். நீங்க கொஞ்சம் இவனுக்கு டியூஷன் எடுக்க முடியுமா? அவனுக்கு பீஸ் நான் கட்டறேன்..” என விஷாலி சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்ட கேட்டதும் பார்த்திபன் திரு திருவென விழித்தபடி கிரிஜாவை பார்க்க, அவள் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் கிரி.. அப்படி எல்லாம் இல்லடி.. இந்த பொண்ணு ஏதோ ஒளருது. நான் உங்கண்ணனுக்கு தான் டிக்கெட் எடுக்க சொன்னேன்..” என பார்த்திபன் பதற்றமாக கூறவும் அனைவரும் சிரித்தனர்.
“ஜீ.. நீங்க அவகிட்ட டிக்கெட் கேட்டதுக்கு தான் இந்த ஷாக். இந்தாங்க மூணு டிக்கெட். சிஸ்டர் வந்ததும் சொல்லிட்டாங்க..” என சக்திசிவன் அவனை ஆசுவாசப்படுத்தினான்.
“ஏம்மா ஏன்மா? ஒரு நிமிஷம் எனக்கு நெஞ்சு வலியே வந்துரிச்சி அவ என்னைய பார்த்த பார்வைல.. உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்?” பார்த்தி விஷாலியைப் பாவமாக பார்த்தபடி கேட்டான்.
“என்னைய பாத்தா டிக்கெட் விக்கற ஆளு மாதிரி தெரியுதா? இன்னும் மூணு வேணும்ன்னு சொல்றீங்க..” விஷாலியும் தெனாவெட்டாக பார்த்தபடி பதில் கொடுத்தாள்.
“என்னைய மன்னிச்சிரு ஆத்தா.. போ முன்ன போய் உக்காரு..” என பார்த்தி கையெடுத்து கும்பிட்டுவிட்டு கிரிஜாவைப் பார்க்க அவள் அவனைப் பார்த்துத் துப்பினாள்.
“வெக்கமா இல்ல? கைய கீழ போடு. வா நிலா உள்ள போலாம்..” என அவளுடன் முன்னே சென்றாள்.
“ஏய் ஏய்.. போச்சா.. போச்சா.. நான் என்கூட கார்னர் சீட்ல உக்காரவச்சிக்கலாம்ன்னு பாத்தா இவ அவனோட என்னை கோர்த்து விட்டுட்டு போறாளே. என் பிளான் மொத்தமும் போச்சி..” என புலம்பியபடி அவன் படிகட்டிலேயே நின்றான்.
சிறிது நேரத்தில் எப்படியோ அலுவலகத்தில் சமாளித்து பர்மிஷன் போட்டுவிட்டு பார்த்திபன் கூறிய திரையரங்கிற்கு வந்து சேர்ந்தான். அதற்குள் உள்ளே படம் ஓட ஆரம்பித்திருந்தது.
“ஏண்டா லேட்?”
“வெங்காயம் வித்துட்டு வர்ற லேட்.. மூடிட்டு உள்ள போ..” நீரஜ் அவனிடம் எரிந்து விழுந்தான்.
“என்னைய கண்டா எல்லாருக்கும் எப்படி தான் இருக்குமோ தெர்ல.. ஆளாளுக்கு ஆசிங்கப்படுத்தறீங்க.. ஒரு நாள் வச்சிக்கறேன் டா..” மெல்லமாக வீர வசனம் பேசியபடி அரங்கிற்குள் நுழைந்தான்.
“எந்த சீட் டா? எங்க டா என் நிலா?” நீரஜ் ஆவலுடன் கேட்டான்.
“இந்த பக்கம் வா.. நமக்கு இந்த ரெண்டு கார்னர் சீட். அவங்க நடுவுல அங்க உக்காந்திருக்காங்க பாரு” என பக்கத்து வரிசையை கைக்காட்டினான்.
“டே அவ பக்கத்துல டிக்கெட் வாங்கலியா நீ? இங்க உக்காந்து அவள எட்டி எட்டி பாக்கவா நான் அவசரமா ஓடி வந்தேன்?”
“நிலா வ எட்டி தான் பாக்கணும்.. வந்து உக்காரு. . நானே செம கடுப்புல இருக்கேன். என் ஆளுகூட ஜாலிய இருக்கலாம்னு வந்தா உன்கூட குப்பை கொட்ட விட்டுட்டு அவ அங்க போயிட்டா..”
நண்பர்கள் இருவரும் மாறி மாறி திட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர். அப்போது காதல் ஜோடி ஒன்று இவர்கள் அருகே வந்து நின்று, “சார்.. இந்த சீட் எங்களுக்கு தரீங்களா? எங்க சீட் அங்க நடுவுல வருது.” என அவர்கள் நிழலினி அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்பக்கம் கைக்காட்டினர்.
“கண்டிப்பா.. நீங்க இங்க உக்காருங்க.. அந்த டிக்கெட் குடுங்க நாங்க அங்க போறோம்..” என வினாடியும் யோசிக்காமல் பார்த்தியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கே ஓடினான்.
“டேய் டேய் மெல்ல போடா.. இருட்டுல ஒண்ணுமே எனக்கு தெரியல..” என கத்தியவனை சட்டை செய்யாமல் நிழலினிக்கு பின் இருக்கையில் வந்து அமர்ந்தனர் இருவரும். நிழலினி அருகே தான் கிரிஜா அமர்ந்து இருந்ததால் பார்த்திபனும் சற்று மனம் ஆறுதல் அடைந்து அவளின் காலை உரசினான்.
முதலில் காலை நகர்த்தியவள் மீண்டும் மீண்டும் அவன் காலை உரசவும் கோபம் கொண்டு பின்னால் திரும்பி பார்த்தாள். பார்த்திபனை கண்டதும் கோபம் இன்னும் அதிகமாக, அவனை அருகே அழைத்து காதில் ஏதோ கூறவும் அவனது முகம் பதற்றம் கொண்டு பரிதாபமாக அவளை பார்த்தான்.
“வேணாம் டி.. பிளீஸ்..” என காதில் விரல் வைத்து அவளிடம் மன்னிப்பு கேட்டான்.
“வெளியா வா உன்ன பேசிக்கறேன்..” என அவனை மிரட்டிவிட்டு படம் பார்க்கத் திரும்பிக் கொண்டாள்.
“என்ன சிஸ்டர் உங்க ஆளு உங்கள கூப்பிடறாரா?” விஷாலி கேட்டாள்.
“அவனுக்கு வேற வேலை இல்ல. நம்ம படம் பாக்கலாம் வாங்க விஷாலி. மறுபடியும் கால உரசினா கன்னத்துல ஒண்ணு விடப்போறேன்..”
“இப்பவே விட்டு இருக்கணும் நீங்க..”
“தனியா கவனிச்சிக்கறேன் அவன.. பப்ளிக்ல அடிச்சா எனக்கு தான் பிரச்சனை.. அவனை கல்யாணம் பண்றவரைக்கும் வேற எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கறது தான் பெருசு..”
“ஏன்?”
“எங்களோடது லவ் மேரேஜ். ரொம்ப போராடி பேசி முடிச்சு இருக்கோம். இத கெடுக்க பல பேர் ரெடியா இருக்காங்க. அதுக்கு இடம் கொடுக்க கூடாதுல..”
“சரிதான்..” என சிரித்தபடி படம் பார்க்க ஆரம்பித்தனர் இருவரும்.
நிழலினி இது எதையும் கவனத்தில் கொள்ளாமல் திரையில் லயித்திருந்தாள். அரவிந்த்சுவாமி முகத்தில் வரும் முகவுணர்ச்சிகளை எல்லாம் அத்தனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கார்த்தி முற்றிலும் அத்தானின் தாசனாக மாறி கொடுத்திருந்த காட்சிகளும் அருமை.
இரு ஆண்களின் ஆழமான அன்பை எத்தனை அழகாக படமாக்கி கொடுத்து இருக்கிறார் இயக்குனர். வெகு காலம் கழித்து எந்த சண்டையும், வழக்கமான கமர்சியல் கலப்புகளும் இல்லாத ஓர் அழகான படைப்பு இது.
இடைவெளியில் கூட நிழலினி அங்கிருந்து எழவில்லை. அவளுக்கு வேண்டியதை விஷாலி வாங்கி வந்து கொடுத்துவிட்டாள். பின்னால் தன்னையே உருகியபடி பார்த்துக் கொண்டிருந்த நீரஜை அவள் பார்க்கவும் இல்லை அறியவும் இல்லை. ஆனால் விஷாலியும், சக்திசிவனும் நீரஜையும், அவன் நிழலினியை பார்ப்பதையும் நன்றாக கவனித்துக் கொண்டனர்.
“அவரு பார்த்திபன் சார் ஃப்ரெண்ட் போல..” சக்திசிவன் கூறினான்.
“அப்டி தான் போல.. ஆனா லவ்வர் கூட வந்தவரு திடீருன்னு ஏன் அவரை வரச்சொல்லனும்? என்னமோ இருக்கு கவனிப்போம். அப்பறம் பேசிக்கலாம். நீ அந்த ஆளப்பத்தி ஏதாவது விசாரிச்சி வை பார்த்திபன்கிட்ட.. எங்கயோ இந்த ஆள பாத்தமாதிரியும் இருக்கு..” என யோசனையுடன் மீண்டும் படம் பார்க்க வந்து அமர்ந்தனர் இருவரும்.
“டேய் ஏதாவது பேசு டா..” பார்த்திபன் கூறினான்.
“வேணாம் டா. அவ சிரிக்கறதே நான் இப்ப தான் பாக்கறேன். அத கெடுக்கவேணாம். அவள நான் கவனிக்கணும். அப்பறம் பேசிக்கலாம்.. அவ முகத்துல இந்த அமைதியும், சிரிப்பும் எப்பவும் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்ல மச்சி..” நிழலினி முகம் எந்த வித இறுக்கமும் இன்றி இயல்பாக இருப்பதை முதல்முறை அவன் பார்த்தான்.
“இப்படியே பார்த்துட்டு இருந்தா எப்ப நீ பேசி எப்டி கரெக்ட் பண்ணுவ? அதோ அந்த பக்கம் ஒரு புள்ள இருக்கு பாரு. அது அவ பக்கம் கூட உன்னைய போகவிடாது. அப்படியாப்பட்ட பயங்கரமான ஆளு அது.. ஜாக்கிரதையா இரு..” எனக் கூறியவன் அவனும் படத்தில் மூழ்கிவிட்டான்.
நீரஜ் நிழலினியை மட்டுமே அந்த படம் ஓடி முடியும் வரையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையை அவ்வப்போது விஷாலியும், சக்திசிவனும் கவனித்துக் கொண்டனர்.
படம் முடிந்து நிழலினி எழுந்து நின்றபோது நீரஜை கண்டவள் ஒரு நொடி புருவம் சுருக்கி யோசித்துவிட்டு முகத்தை கடுகடுவென வைத்தபடி வெளியே சென்றாள்.
விஷாலியின் கண்களுக்கு அவளின் முக மாறுதல்கள் ஒன்று கூட தப்பவில்லை, நீரஜ் அப்போதும் அவளை ரசனையுடன் பார்ப்பத்தையும் கவனித்துவிட்டு வெளியே வந்தாள்.
“நினிக்கு அவர ஏற்கனவே தெரியும் போலவே..” சக்திசிவன் முணுமுணுத்தபடி விஷாலியுடன் நடந்தான்.
“ம்ம்..”
“நிலா.. இவர் தான் நீரஜ் அண்ணா.. அவரோட பெஸ்ட் ஃப்ரெண்ட். சின்ன வயசுல இருந்தே ஃபிரண்ட்ஸ். ஒரே தெருவுல தான் இருக்காங்க. விஷாலியும் நீயும் இருக்கமாதிரி.. ரொம்ப நல்லவரு.. ரெண்டு பெரும் ஒரே இடத்துல தான் வேலையும் பாக்கறாங்க. அவரு அசிஸ்டென்ட் மேனேஜர் அஹ் இருக்காரு.. பார்த்தி ஃபைனான்ஸ் ஹெட்..” என அவனை அறிமுகம் செய்துவைத்தாள்.
“சரி கிரிஜா.. நீங்க பாருங்க. நாங்க கிளம்பறோம் கொஞ்சம் வேலை இருக்கு..” என அவளிடம் கூறிவிட்டு விஷாலி கையை பிடித்து இழுத்துக் கொண்டு வண்டி அருகே சென்றாள்.
“உனக்கு அவரை தெரியுமா நினி?”
“தெரியாது.. ஆனா பாக்க பிடிக்கல.. நம்ம கெளம்பலாம்..” எனக் கூறிவிட்டு அமைதியானாள்.
விஷாலி சக்திசிவனுக்கு கண்கள் காட்டிவிட்டு, பொதுவாக அனைவருக்கும் தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
“பாத்தியா நீ கேட்டது இன்னும் அந்த பொண்ணு மறக்கல.. அதான் இப்படி உன்ன பாத்ததும் ஓடுது.. எப்பவும் பொறுமையா இருக்கறவன் ஏண்டா அவசரப்பட்ட?” பார்த்திபன் அவள் சென்றதும் திட்டினான்.
“அப்ப என்னை அவ ஞாபகம் வச்சிருக்கான்னு தானே அர்த்தம் மச்சி.. விடு பாத்துக்கலாம்.. முழுசா ரெண்டரை மணிநேரம் அவ பக்கத்துல இருந்து அவளை பார்த்தேன். உனக்கு தான் பெரிய தாங்க்ஸ் சொல்லணும்..” என பார்த்தியை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“அடேய்.. ச்சீ.. விட்றா என்னை.. கிரி இங்க பாரு டி இவன.. நீ குடுக்கவேண்டியது எல்லாம் அவன் குடுக்கறான்..” என கிரிஜாவின் பின்னால் வந்து நின்று அவளது துப்பட்டாவில் கன்னத்தை துடைத்துக் கொண்டான்.
“போதும் போதும் உன் நடிப்பு.. அண்ணா.. அவள நிஜமா நீங்க விரும்பறீங்க தானே?” கிரிஜா தயக்கத்துடன் கேட்டாள்.
“ஆமா மா.. இன்னிக்கி தான் அவ முகத்துல ஒரு அமைதியும் சிரிப்பும் முதல் தடவையா பாக்கறேன். அது எப்பவும் அப்படியே இருக்கறமாதிரி அவள பாத்துக்க நெனைக்கறேன்..”
“அது உங்களால முடியும்னு நெனைக்கறீங்களா சார்?” சக்திசிவன் கேட்டான்.
“முடியும்..” உறுதியுடன் கூறினான்.
“அப்ப என்கூட ஒரு எடத்துக்கு வாங்க.. நீங்களும்..” என அனைவரையும் அழைத்துக் கொண்டு தரணியிடம் சென்றான்.
“அவங்களுக்கு PTSD (post traumatic stress disorder) இருக்கு. உங்களால ஹாண்டில் பண்ண முடியுமா?” என தரணி கேட்டதும் அவர்கள் அதிர்ந்தனர்.