7 – வேரோடும் நிழல்கள்
நிழலினி அதில் கேட்டிருந்த கேள்விகளுக்கு எல்லாம் தன்னை அலசி ஆராய்ந்து பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். பெற்றோரின் கடமையென கேட்டப்பட்ட கேள்விக்கு ஒரு ஆசிரியையாக பதில் கூறியிருந்தாள். தவிர பல மனரீதியான கேள்விகளுக்கும் தன்னால் முடிந்தவரை பதில் கொடுத்திருந்தாள். கிட்டதட்ட அரை மணிநேரம் கழித்து மூவரும் உள்ளே வந்தனர்.
“என்ன நிழலினி எல்லாம் முடிச்சிட்டீங்களா?” எனத் தரணி கேட்டபடி அவளின் எதிரே அமர்ந்தான்.
“எனக்கு தெரிஞ்சவரை பதில் சொல்லியிருக்கேன் டாக்டர்..”
“ஓகே. இத நான் அப்பறம் பாக்கறேன். நீங்க பயப்படற அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உங்க ஏக்கம் தான் உங்களை தெளிவா யோசிக்கவிடாம பண்ணுது. அத கடந்து வந்து நீங்க தெளிவாகணும். அத நம்ம சேர்ந்தே செய்யலாம். சரியா?” என தரணி கேட்டதும் அவள் விஷாலியைப் பார்த்தாள்.
“கண்டிப்பா உங்க ஃப்ரெண்ட் அஹ் நீங்க வரப்போ எல்லாம் கூட்டிட்டு வரணும். உங்கள தனியா நான் வர சொல்லல..” என தரணி கூறவும் நிழலினி மனதில் ஓர் நிம்மதி பரவியது.
சரியென அவள் தலையசைத்து விஷாலியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் தரணி மனதில் குறித்துக் கொண்டு மூவருக்கும் விடைக்கொடுத்தான்.
“அடுத்து எப்ப வரணும் அண்ணா?” சக்திசிவன் கேட்டான்.
“நான் அவங்க பேப்பர் பாத்துட்டு சொல்றேன் சக்தி.. அவங்கள தனியா விடாம பாத்துக்கோங்க.. முடிஞ்சவரை அவங்க வீட்ல ரொம்ப கம்மியா இருக்கறது நல்லது. அவங்க மனநிலை அப்போதான் மாறும்.” எனக் கூறினான்.
“சரிண்ணா.. அவள சரி பண்ணிடுங்க. அது போதும் எங்களுக்கு..”
“ஒரு நிமிஷம்.. அந்த பொண்ணு விஷாலி கமிட் ஆகிடிச்சா?” என ஆர்வமுடன் வினவினான்.
“அந்த பைக் பாத்தீங்களா ? அத பாத்துட்டு எந்த பையனும் கிட்ட வர்றதே இல்ல..” என விஷாலியின் இருசக்கர வாகனத்தைக் காட்டினான். அது ஸ்போர்ட்ஸ் பைக். விலை எப்படியும் 3 லட்சம் வரும். அத்தனை கனமான வண்டியை அவள் ஸ்கூட்டியைப் போல லாவகமாக திருப்பி ஓட்டுவதைக் கண்டவன் கண்களில் ஸ்வாரஸ்யம் கூடியது. அவன் அப்படி பார்ப்பத்தைக் கண்ட சக்தி, “அண்ணா.. ஏன் அவளப்பத்தி கேக்கற?” என சந்தேகமாக வினவினான்.
“இல்ல டா. இந்த நிழலினி அந்த பொண்ண ரொம்ப சார்ந்து இருக்கா. அதான் அவங்க திடீர்னு கல்யாணம் பண்ணி போயிட்டா என்ன பண்றதுன்னு தான் கேட்டேன். சரி நீ பாத்து போ.. சாயிந்தரம் நம்ம பாக்கலாம்..” எனக் கூறி அனுப்பி வைத்தான்.
அதன்பின் மூவரும் தங்களது பள்ளிக்கு சென்றனர். அன்று அந்த பள்ளியின் நிர்வாகி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச ஆசிரியர் கூட்டத்தை கூட்டியிருந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் இதுபோன்ற ஆசிரியர் கூட்டங்கள் அரிதாக நடைபெறும்.
நண்பர்கள் மூவரும் பின் வரிசையின் சென்று அமர்ந்து கொண்டனர்.
“என்ன சசி இவரு நான் நெனைச்சமாதிரி ஒண்ணுமே பண்ணல.. கடைசில நம்மகூட உக்காந்து பேசிட்டு அனுப்பிட்டாரு.. என் ஆர்வம் எல்லாம் இப்படி வீணா போச்சே..” என சலிப்பாக பேசியபடி நிழலினி தோளில் சாய்ந்தாள்.
“ உனக்கு படம் காட்டவா நான் கூட்டிட்டு போனேன்? நேரா உக்காரு.. சார் வந்துடுவாரு..” எனக் கூறியபடி அவன் முன்னால் பார்த்தான்.
“இவன் ஒருத்தன்.. நினி நீ சொல்லு உனக்கு பசிக்குதா? நம்ம வெளிய போய் பிரியாணி சாப்பிடலாம்..”
“இப்ப தானே சாப்ட நீ? இன்னும் மூணு மணிநேரம் கூட முழுசா ஆகல.. அதுக்குள்ள என்ன பசி உனக்கு?” நிழலினி அவளிடம் கேட்டாள்.
“ஏண்டி ஒரு மனுஷிக்கு பசிச்சா கூட குத்தமா?”
“சரி மீட்டிங் முடிஞ்சி போலாம்.. சேர்மன் வராறாம்.. என்ன திடீருன்னு இப்ப மீட்டிங் ?”
“யாருக்கு தெரியும்?”
“சரி நான் தூங்கறேன்.. நீ மீட்டிங் முடிஞ்சி எழுப்பி விடு..” எனக் கூறிவிட்டு தலையை கவிழ்த்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
“விஷா.. எந்திரி.. தூங்காத.. சார் பாத்தா அவ்ளோ தான்..” என அவள் எழுப்பிக்கொண்டிருக்கும்போதே சேர்மன் உள்ளே வந்தார்.
“வணக்கம்.. எல்லாரும் உக்காருங்க..” எனக் கூறியவர் அனைவரையும் பார்த்து புன்னகைத்து தனது இருக்கையில் அமர்ந்தார்.
“இன்னிக்கி உங்கள வரச்சொன்னதுக்கு முக்கியமான காரணம் இருக்கு. பசங்கள வச்சிட்டு பேசமுடியாது. அதனால தான் அவங்க இல்லாதப்போ பேசறோம்..” என்றவர் கண்கள் கூர்மையாக அனைவரின் முகத்தையும் ஆராய்ந்தது.
அனைவருக்கும் என்னவாக இருக்கும் என்ற யோசனை முகத்தில் தெரிந்தது. நிழலினியும், விஷாலியும் சக்திசிவனை பார்க்க, அவன் சில தாள்கலோடு சேர்மன் அருகே சென்றான்.
“இதுலாம் பசங்க அவங்க மனஉணர்வுகள சொல்லி இருக்கற பேப்பர்ஸ்.. அவங்களுக்கு எதுல எல்லாம் பயம்? எதுல உதவி வேணும்? மன சஞ்சலம், வீட்டு பிரச்சனை..”
“வீட்டு பிரச்சனை அஹ்?” ஒரு ஆசிரியர் கேட்டார்.
“ஆமா.. அவங்க வீட்ல நடக்கற பிரச்சனை எல்லாம் அவங்கள எந்த அளவுக்கு பாதிக்குதுன்னு சொல்றாங்க. அதனால் அவங்க எவ்ளோ கஷ்டம் படறாங்கன்னும் சொல்றாங்க…” சக்திசிவன் பதிலளித்தான்.
“எந்த கிளாஸ் பசங்க சார்?” மற்றொரு ஆசிரியர் கேட்டார்.
“8த்ல இருந்து 12த் வரைக்கும் இருக்கற பசங்க மேடம். அவங்ககிட்ட சுய அலசல் வினாதாள் கொடுத்தேன். அதுல அவங்க சொல்லி இருக்க விஷயம் இதுல எல்லாம் இருக்கு. நமக்கு பசங்கள புரியணும். அவங்க பிரச்சனை புரியணும். அப்போ தானே அவங்க எதிர்காலத்த சமாளிக்க ஏதுவா நம்ம பயிற்சி தரமுடியும்..”
“சிலபஸ்சே இன்னும் முடிக்காம இருக்கு இதுல இதுலாம் தேவையா சார்?” என வேதியியல் ஆசிரியர் கேட்டார்.
“மிஸ்டர். ராமன்.. உங்கள நான் இங்க சேர்க்கும்போதே என்ன சொன்னேன்? உங்கள இங்க சப்ஜெக்ட் எடுக்க மட்டும் வேலைக்கு சேர்க்கல.. பசங்களையும் கவனிக்க தான் சேர்க்கறேன். அதுக்கு தான் மத்த ஸ்கூல் விட இங்க சம்பளம் அதிகமா குடுக்கறது..” சேர்மன் கண்டிப்போடு கூறவும் அவர் அமைதியானார்.
“சார் என்ன விஷயம்ன்னு தெளிவா சொல்லிட்டா பரவால்லன்னு தோணுது சார்..” என பிரின்சிபால் தயக்கத்துடன் கூறினார். இன்னும் விட்டால் மற்ற ஆசிரியர் ஏதேனும் ஏடாகூடமாக கேட்டு இவர் கோபத்தில் கத்தினால் பிரச்சனை அதிகமாகும்.
“நேரா விஷயத்துக்கு வரேன்.. நம்ம ஸ்கூல்ல பசங்க படிப்பு மட்டும் இல்ல அவங்க குணமும் இங்க நல்லவிதமா வளர்க்கப்படணும். அவங்க குணத்துல கேடு குடுக்கற விஷயங்கள் என்ன என்னவோ, அத எல்லாம் நம்ம கவனத்துக்கு கொண்டு வந்து சரி பார்க்கணும். இத்தன நாள் நல்லா படிச்சவன் திடீருன்னு படிக்காம போறதும், நல்ல கலகலப்பா இருந்த பொண்ணு திடீருன்னு அமைதியாகறதும் ஏன்னு நம்ம தெரிஞ்சிக்கணும். மூர்க்கமா இருக்கற பசங்க, அப்பாவியா இருக்க பசங்க, புத்திசாலியான பசங்க இப்படி நம்ம ஸ்கூல்ல படிக்கற அத்தனை பசங்கள பத்தியும் நமக்கு தெரியணும். அவங்க உலகம் 8 மணிநேரம் தான் ஸ்கூல், மத்த நேரம் வீடு தான். அங்க நடக்கற விஷயங்களும் இவங்கள பாதிக்கும். நல்லவிதமா பாதிச்சா சந்தோஷம், அதுவே அவங்க படிப்புல, குணத்துல பழக்க வழக்கங்கள்ல கெட்ட விதமான பாதிப்பு ஏற்பட்டா அத நம்ம தான் சரி பண்ணனும்..” எனக் கூறியபடி வந்தவர் ஒருநொடி அனைவரின் முகத்தினையும் கூர்ந்து கவனித்து பார்த்துவிட்டு, “நம்ம பசங்களுக்கு மனோதத்துவ கிளாஸ் வைக்கலாம்னு இருக்கேன்.. அவங்கள பாதிக்கற விஷயங்களை அவங்க வாய் திறந்து சொல்லணும்ன்னு அவங்களுக்கு மொதல் தெரியணும், நம்பிக்கை வரணும். அதுக்கான முயற்சி தான் இது. இன்னிக்கி இருக்க சமுதாயம் ரொம்பவே தீய குணங்களால சீரழிஞ்சி போய்ட்டு இருக்கு. நாளைக்கு வர போற தலைமுறைகளுக்கு நம்ம நல்ல விஷயங்கள் நிறைஞ்ச சமுதாயத்த குடுக்க இன்னிக்கி நம்ம இந்த முயற்சி எடுக்கறோம். எல்லாரும் அவங்க போற கிளாஸ் பசங்களப்பத்தி எழுதி தரணும்.. அத வச்சி தான் மேற்கொண்டு என்ன என்ன பண்ணனும்ன்னு முடிவு எடுக்கணும். ரெண்டு நாள் உங்களுக்கு நேரம் குடுக்கறேன். மூணாவது நாள் காலைல எனக்கு ஒவ்வொரு பையன் பொண்ண பத்தியும் ரிப்போர்ட் வரணும். மிச்சம் சக்திசிவன் சொல்வாரு. அதுபடி எல்லாரும் ரிப்போர்ட் குடுங்க..” எனக் கூறிவிட்டு சேர்மன் பரின்சிபாலுடன் அங்கிருந்து சென்றார்.
“டியர் சார் அண்ட் மேடம்.. இந்த மாதிரி ஒரு பேப்பர்ல பசங்க நேம் போட்டு அவங்களபத்தி கேட்டு இருக்க அடிப்படை கேள்விகளுக்கு பதில் செலக்ட் பண்ணிடுங்க. நீங்க குறிப்பிட்டு சொல்ல நினைக்கர விஷயத்த பின்னாடி பக்கத்துல எழுதி குடுங்க.. உங்களுக்கு மாடல் பேப்பர் மட்டும் இப்ப தரேன். நீங்க எத்தன கிளாஸ் போறீங்க? எத்தன பசங்க இருக்காங்களோ அத்தனை காப்பீஸ் ஆபீஸ் ரூம்ல என்டர் பண்ணிட்டு எடுத்துக்கோங்க..” என சக்திசிவன் கூறியதும் அனைவரும் முணுமுணுத்தபடி அங்கிருந்து எழுந்து சென்றனர்.
“ஏண்டா நல்லவனே நீ தானா?” என விஷாலினி அவன் அருகே வந்ததும் கேட்டாள்.
“ஆமா.. என் கிளாஸ்ல அன்னிக்கி ஒரு பையன் இன்னொருத்தன ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிட்டான்னு சொன்னேன்ல.. வீட்ல ஏதோ பிரச்சனை நடந்திருக்கு அத அவன் இங்க காட்டிட்டான். சேர்மன் வரைக்கும் பிரச்சனை போயிடிச்சி. அவன் வீட்டு சூழ்நிலை தெரிஞ்சதும் எனக்கு கஷ்டமா போயிரிச்சி. பொறுமையான பையனே இந்த அளவுக்கு மாறும்போது இன்னும் எவ்ளோ பிரச்சனைகல இந்த பசங்க சந்திக்கராங்க, எவ்ளோ கெட்ட மாற்றம் வந்திருக்கும்னு யோசிச்சேன். பயம் வந்துரிச்சி. சேர்மன் சாரும் சொன்னாரா அதான் தரணி அண்ணாகிட்ட இதபத்தி பேசிட்டு, இப்படி ஒரு ஏற்பாடு பண்ணேன். இதுல பசங்கள பில்டர் பண்ணிடலாம். யாருக்கு அதிக பிரச்சனையோ அவங்கள அதிக கவனமா பாத்துக்கலாம்.. எப்படி என் ஐடியா?” என காலரை தூக்கிவிட்டு கேட்டான்.
“சும்மா சொல்லக்கூடாது சசி.. உனக்கும் அப்பப்ப மூளை வேலை செய்யுது. இதுக்கான செலவை சேர்மன் நம்ம சம்பளத்துல பிடிக்காம இருந்தா சரி..”
“ஏய் கம்முன்னு இரு டி.. நிஜமா ரொம்ப நல்ல விஷயம் சசி. பல பசங்க வாழ்க்கை இதனால நல்லபடியா மாறும். அந்த புண்ணியம் எல்லாம் உனக்கு தான்.” என நிழலினி மனதார அவனை வாழ்த்தினாள்.
“ஹேய் அப்போ அதுலையும் எனக்கு பங்கு வேணும். நானும் இந்த வேலைக்கு வரேன். இவளும் வருவா.. சரிதானே நினி?” என விஷா கூறியதும், “நீங்க இல்லாமலா? இன்னும் ரெண்டு பேர் நமக்கு தேவை. இதுக்கு தனி டீம் ஃபார்ம் பண்ணனும். அப்போதான் சீக்கிரம் ஸ்டெப்ஸ் எடுக்க முடியும்.” என மூவரும் பேசியபடி அங்கிருந்து கிளம்பி, சேர்மனிடம் பார்த்து பேசிவிட்டு இன்னும் இரண்டு ஆர்வமுள்ள ஆசிரியர்களை இதில் கலந்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்துவிட்டு இல்லம் கிளம்பினர்.
“இப்பவே வீட்டுக்கு போகணுமா?” விஷாலினி கேட்டாள்.
“சினிமா போலாமா?” நிழலினி கேட்டாள்.
“என்ன படம்?”
“மெய்யழகன் போலாம்..” நிழலினி கூறியதும் மூவரும் திரையரங்கு சென்றனர்.
அங்கே இவர்களுக்கு முன் கிரிஜா, பார்த்திபன் இருவரும் நின்றிருந்தனர்.