78 – ருத்ராதித்யன்
இங்கே மகரயாளியுடன் கூட்டப்பாறையின் உள்ளே சென்ற நரசிம்மனை காண்போம் வாருங்கள்…
மகதன் நரசிம்மனை கண்ணின் இமையாக பாதுகாத்துக் கொண்டு உள்ளே நடந்தான். வழியில் பல யாளிகள் அவர்களை உண்ணும் ஆவலோடு முன்னே வருவதும், மூத்த யாளியின் சத்தத்தில் ஒதுங்கி நிற்பதுமாக அந்த இடத்தின் மையப்பகுதிக்கு சென்றுச் சேர்ந்தனர்.
“மகதா … பார்த்தாயா எத்தனை யாளிகள் இங்கே இருக்கின்றன .. இதில் சிலத்தை நாம் வசப்படுத்தி பழக்கப்படுத்தினாலும் போதும் நமது அத்தனை பொக்கிஷங்களும் மிகப்பெரும் பாதுகாப்பை பெரும். நாமும் நமது வீரர்களை வேறு பணிக்கு அமர்த்தி இன்னமும் நாட்டினை வளமாக்கும் முயற்சியில் இறங்கலாம்.. இவற்றை வசப்படுத்தும் முறைப் பற்றி குருநாதர் என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்.. ஆனால் அதற்கான அனுமதி பெறுவது தான் சற்றே கடினமாக இருக்கும்…”, என அவனது காதில் முணுமுணுத்தபடி வந்தான்.
மகதனின் முகத்தில் அத்தனை இறுக்கமும், ஜாக்கிரதை உணர்வும் இதுவரை நரசிம்மன் கண்டதில்லை. மகதனின் நினைவெல்லாம் நரசிம்மனை எந்த ஆபத்தும் நெருங்காமல் காப்பதில் மட்டுமே இருந்தது.
அந்த வயதான மகரயாளி, பெரும் பாறை கூட்டத்தின் நடுவே நின்று ஒலி எழுப்பி மகதனை முன்னே அழைத்தது. மகதனும் மெல்ல உறுமியபடி அங்கே சென்று நின்று அந்த யாளியை வணங்கி நின்றது. நரசிம்மன் மகதன் மீதிருந்து இறங்கி அந்த யாளியின் முன்னே நின்று முதல் வணக்க ஒலியை எழுப்பினான். யாளியும் அவன் அருகே வந்து முகர்ந்து அவனது வாசனையை மனதில் பதிவு செய்துக் கொண்டு மீண்டும் ஒலி எழுப்பியது.
நரசிம்மனும், மகதனும் யாளியுடன் ஒலி சங்கேத பாஷையின் மூலமாக உரையாடிக்கொண்டிருந்தனர். நரசிம்மன் மெல்ல வசப்படுத்த அனுமதி கேட்டான். அதில் கோபம் கொண்ட மூத்த யாளி கோபத்துடன் சத்தம் எழுப்பியது.
அந்த சத்தத்தை கேட்டதும் நரசிம்மனும் தனது வசப்படுத்தும் சவாலுக்கான ஒலியை எழுப்பினான். அதைக் கேட்டதும் மகதன் நரசிம்மனைக் கண்டித்து உறுமினான். நரசிம்மன் மகதனை கண்களால் அடக்கிவிட்டு, மீண்டும் தனது முயற்சியில் இறங்கினான்.
பொதுவாக யாளிகள் குட்டிகளாக இருக்கும்போதே மனிதர்கள் மத்தியில் வைத்து வளர்த்து, நன்றாக உலாவத் தொடங்கியதும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டும். இல்லையென்றால், அவைகள் தங்களது இயற்கையான முரட்டு மூர்க்கக்குணம் கொண்டே வளரத் தொடங்கிவிடும்.
இதுவரை ஆதித்ய அரசில் எந்த அரசரும் யாளியை வளர்க்கவில்லை, அதை கைப்பற்றவும் இல்லை. அந்த முயற்சியில் சிலர் மாண்ட விவரங்கள் மட்டும் அவனுக்கு விலங்குகளுடன் பழக பயிற்சியளிக்கும் போது தெரியவந்தது. சிம்மயாளியை அவர்கள் கைப்பற்ற சென்று, சில ஆயிரம் வீரர்கள் உயிருடன் கோட்டை திரும்பவில்லை என்று பதிவுவிருந்தது.
நரசிம்மன் யாளிகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எல்லாம் தேடித் தேடிப் படித்திருந்தான். அதில் அவைகளை வசப்படுத்தும் முன், அந்த கூட்டத்தின் மூப்படைந்த மிருகத்திடம் அனுமதி பெற்றபின், அவைகள் விரும்பி உண்ணும் உணவினை கொண்டு தந்து, குட்டிகளை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும்.
பொதுவாகவே யாளிகள் எல்லாம் 20 அடிக்கு மேல் உயரமும், 10 அடிக்கும் மேல் அகலமும் கொண்டவை. கஜயாளி எல்லாம் இன்னமும் உயரமும், அகலமும் கொண்டவை. மகரயாளி மட்டுமே 10 அடி உயரமும், நீளம் மட்டும் வயதிற்கேற்ப நீண்டு கொண்டே இருக்கும். இவைகள் நிலத்தின் அடியிலும் அசிரத்தையாக பாறைகளை உடைத்து சென்று வரமுடியும். இவைகளின் உடல் தோல் எல்லாம் பாறையின் அளவு கடினமாக இருக்கும். எந்த ஆயுதமும் இவர்களை ஒன்றும் செய்யமுடியாது. இத்தனை பலம் கொண்ட மகரயாளியை தன்வசப்படுத்தியே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்துடன் நரசிம்மன் அங்கே நின்றிருந்தான்.
ஒரு சில ஒலி சம்பாஷனைகளுக்கு பிறகு, நரசிம்மனுக்கு அந்த யாளியின் ஒலியினால் தலை கிறுகிறுக்க தொடங்கியது. அவனது உடலும், மனமும் அவனது அனுமதியின்றி உறக்க நிலைக்கு சென்றது. கீழே விழ இருந்தவனை மகதன் தாங்கி பிடித்து, அந்த மூத்த யாளியிடம் விடைப்பெற்று அந்த கூட்டப்பாறையைத் தாண்டி வெகுதூரம் முன்னேறியிருந்தான்.
பல நாழிகைகள் கழித்து மகதன் அருவிக்காடு பக்கமாக நெருங்கிக் கொண்டிருந்தான். தூரத்திலேயே காற்றில் ஈரம் மிகுந்திருப்பது அவனது நாசிக்கும், உடலுக்கும் தெரிந்தது. வெகு நேரமாக நரசிம்மனை சுமந்து வந்த களைப்பு அந்நொடி அவனுக்கு பெரிதாக உரைக்கவும், ஓர் நதியின் கரையில் நின்று அவனையும் நீரினில் தள்ளினான்.
முகத்தில் சட்டென நீர் பாயவும் தான் நரசிம்மனின் உடலும், புத்தியும் விளித்துக் கொண்டது.
“என்னடா நடந்தது ? எங்கிருக்கிறோம் ?”, என நரசிம்மன் தலையைப் பிடித்தபடிக் கேட்டான்.
மகதன் அவனை முறைத்துவிட்டு, நீரின் நடுவே சென்று அமர்ந்து நன்றாக நீராட ஆரம்பித்தான். பல மைல்கள் நரசிம்மனை சுமந்த வலியினை நீரில் கரைத்துக் கொண்டிருந்தான்.
“எப்படி நான் சுயநினைவிழந்தேன் ? அந்த யாளி மயக்க ஒலியினை எழுப்பியதா ?”, எனக் கேட்டபடி முகத்தில் நீர்அடித்து தன்னை மீட்டுக்கொண்டான்.
“உர் ….”
“சரி எப்படி அவர்களை வசப்படுத்துவது ?”, என மீண்டும் நரசிம்மன் ஆரம்பிக்க மகதன் ஓடிவந்து அவனை முட்டி மீண்டும் நீரினில் தள்ளிவிட்டான்.
அவனை அங்கிருந்து பாதுகாப்பாக அத்தனை யாளிகளுக்கு மத்தியில் இருந்து அழைத்து வருவதற்குள் மகதனின் ரத்தம் வெகுவாக சூடாகி, அவனை இறுக்கமாக்கிவிட்டது.
“உர் .. உ .. ர் .. ர் .. ர்ர் …… “, காடே அதிரும்படி உறுமினான். அந்த உறுமலில் அத்தனை கோபமும், தவிப்பும் இருப்பதை நரசிம்மன் உணர்ந்து மகதனைக் கட்டிக்கொண்டான். மகதன் கோபம் கொண்டு அவனைத் தள்ளிவிட்டு, எதிரே வந்த ஓநாய் ஒன்றினை வேட்டையாட ஓடினான்.
“அடேய் .. நில்லடா .. எனக்கும் உணவு வேண்டும். பசிக்கிறதடா..”, என நரசிம்மன் கத்துவது காதில் விழும்முன் அடர்ந்த காட்டினில் அதைத் துரத்திக் கொண்டு மறைந்தான்.
“எத்தனை கோபம் வருகிறது இவனுக்கு ? இவனுக்கு அதீதமாக அன்னையும், தந்தையும் அன்பை பொழிந்து கெடுத்து வைத்திருக்கிறார்கள்… திரும்பச் சென்று அவர்களிடம் பேசவேண்டும் …”, என அவன் தனக்கு தானே பேசும்போதே கஜயாளி ஒன்று, அவனுக்கு முன்னால் துதிக்கையை நீட்டி நீரிணை உறிஞ்சத் தொடங்கியது. கிட்டதட்ட 30 அடிக்கும் மேலாக உயரமும், 15 அடிக்கும் அதிகமான அகலமும் கொண்டிருந்தது அந்த கஜயாளி.
நரசிம்மன் சத்தம் எழுப்பாமல் மெல்ல நகர்ந்துப் பாறையின் பின்னே சென்று பதுங்கி அமர்ந்தான். ஒற்றை யானை எத்தனை ஆபத்தோ, அதே போல தான் ஒற்றை கஜயாளியும் ஆபத்தானது. அதனால் நரசிம்மன் பாதுகாப்பான இடத்தில் பதுங்கியபடி அதனைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
பொதுவாக இவைகள் சிம்மயாளிகளுக்கு மட்டுமே சற்று அடங்கி நிற்கும். வேறெந்த மிருகமும் இதன் முன்னால் கால் நொடி கூட தாக்குப் பிடிக்க முடியாது. அத்தனை பலமும், புத்திசாலிதானமும் கொண்டவை இந்த கஜயாளிகள்.
மகதனும் வேட்டையாடி உணவை புசித்துவிட்டு வரும்போது கஜயாளியைக் கண்டு மெல்ல பதுங்கி ஓரிடத்தில் பாறைகளுக்கு இடையே படுத்துக் கொண்டான். அங்கிருந்தே நரசிம்மன் இருக்குமிடத்தை பார்வையால் அளந்து, அவன் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டதும் அமைதியானான்.
அந்த கஜயாளி மெல்ல திரும்பி மரங்களை ஒடித்தபடி திரும்பிச் சென்றது. மூர்க்கமோ, கோபமோ இல்லாமல் ஒற்றை கஜயாளி சென்றதும் நரசிம்மன் மகதனுக்கு சீழ்க்கை ஒலி எழுப்பி வரச் சொன்னான். மகதனும் அடுத்த சில நொடிகளில் நரசிம்மன் முன்னே வந்து நின்றான்.
“ரத்த வாடை வருகிறது.. சென்று நீராடி வா மகதா … “, என நரசிம்மன் கூறியதும் அவனையும் நீரில் தள்ளிவிட்டு தானும் நீரில் குதித்து சிறிது நேரம் விளையாடிவிட்டு கரை ஏறினான். நரசிம்மனும் உடல் அலுப்பு தீர குளித்துவிட்டு உடைமாற்றி பழங்களை பறித்து உண்டபடி நடந்தான்.
“எப்படி மகதா இத்தனை தூரம் என்னை சுமந்து வந்தாய் ? உனக்கு தேவி கோவில்கள் இருக்கும் அனைத்து இடங்களும் தெரியுமா ? எப்படி சரியாக அருவிக்காட்டில் வந்து எனை எழுப்புகிறாய் ?”, என அவன் மகதனிடம் உரையாடியபடியே அடர்ந்த வனத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.
இரண்டு நாழிகை நேர நடைக்கு பின்னே அந்த உயரமான அருவியின் முன்னே வந்து நின்றனர் இருவரும்.
இதோ இந்த ஆர்ப்பரிக்கும் உயரிய அருவியின் உச்சியில் இருக்கிறாள் வட-கிழக்கு திசையின் வனதேவி… அவளை தரிசிப்பது அத்தனை எளிதான காரியமல்ல தான். ஆனால் அவளின்மேல் அன்பை வைத்தால் போதும் அவளே உள்ளங்கையில் அவர்களை தூக்கிக் கொண்டு சென்று தன்னிடம் சேர்ப்பித்து விடுவாள்.
மேலே எந்த மலர்களும் கிட்டாது என்பதால், மகதனும் நரசிம்மனும் மலர்கள் சேகரிக்க தொடங்கினர். பச்சை நிற மலர்களைத் தவிர அத்தனை நிற மலர்களும் மூட்டையில் கட்டிக்கொண்டு அந்த அருவிக்காட்டினில் ஏறத் தொடங்கினர்.
சுமாராக 6 நாழிகை நிற்காமல் நடந்தபின் தேவியின் திருவுருவச் சிலையின் முன்னே இருவரும் நின்றனர். அருவியின் ஒரு கிளை நீர் தாயின் தலை முதல் பாதம் வரை குளிர்வித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. அன்னையின் முகத்தில் இருந்த தேஜஸ் இருவரையும் சில மணித்துளிகள் எந்த சலனமும் இன்றி அவள் முக தரிசனம் காண வைத்தது. மகதன் கொஞ்சம் கொஞ்சமாக தாயின் அருகே சென்று அவரின் பாதம் வழிந்த நீரினில் தலை குனிந்து அங்கேயே அமர்ந்துக் கொண்டான்.
மகதனின் முகம் கண்டால் ஏதோ தீவிரமான வேண்டுதல்களையோ ? உரையாடலோ மேற்கொண்டபடி அன்னையின் பாதம் பணிந்து அமர்ந்திருக்கிறான் என்று நரசிம்மனுக்கு புரிந்தது. தானாக அவனது முகத்திலும் புன்னகை விரிந்தது.
அடடே நரசிம்மா .. நீயா சிரிக்கிறாய் ? என்னவொரு வசீகரிக்கும் சிரிப்படா உனக்கு ? இதை அப்படியே ஓவியமாக யாரேனும் தீட்டி வைக்கவேண்டும். ஆஹா .. என்ன ஒளி அந்த கண்களில் அவன் புன்னகைக்கும் போது.. உனது ராஜகளைச் சொட்டும் முகத்தில் முதல்முறையாக நாங்கள் புன்னகை சொட்டுவதை காண்கிறோமடா .. அடிக்கடி இந்த வசீகர தரிசனமும் தந்தால் நாங்களும் மகிழ்வோமடா ஆதித்ய யோகேந்திர நரசிம்மா …
நரசிம்மன் அமைதியாக மகதன் அங்கிருந்து நகரும்வரை அருவியையும், அங்கு சுற்றியுள்ள இடங்களையும் கண்டபடி கண்களை உலாவவிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது மலையின் கீழே, வெகு தூரத்தில் ஒரு கூட்டம் வனத்தில் வேகமாக நுழைந்தது. அதைக் கண்ட நரசிம்மன் மனதில் ஒவ்வாமை தோன்றியது. சாம்பல் நிறத்தில் உடையணிந்து இங்கே வனத்தில் உலாவும் வீரர்கள் யாராக இருப்பார்கள் ? என்று சிந்தித்தபடி அவர்கள் சென்ற திசையைப் பார்த்தபடி இருந்தான்.
சிறிது நேரத்தில் மகதன் எழுந்து நரசிம்மனை அழைக்கவும், தேவியை பூக்களால் அலங்கரித்து மண்டியிட்டு வணங்கி சாஷ்டாங்கமாக விழுந்தான்.
அப்போது அவனது தலையில் மூன்று பச்சை வண்ண மலர்கள் விழுந்தது. மகதன் ஒரு மலரை உட்கொண்டுவிட்டான். மற்ற இரண்டு மலர்களை நரசிம்மன் பாதுகாப்பாக எடுத்து வைத்துக் கொண்டான்.
“செல்லுமிடமெல்லாம் இரண்டு மலர்கள் தேவி தருகிறார்.. யாத்திரை எனக்கு தமையனை உருவாக்கிவிடுவாளோ ?”, என நரசிம்மன் மகதனிடம் பேசியபடி மலையிறங்கத் தொடங்கினான்.