வாசகருடன் சில நிமிடங்கள் …
1. பெயர் – பார்கவி
2. படிப்பு – BE (ECE)
3. தொழில்/வேலை – ASIC Design Engineer
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
சிறுவயதிலிருந்தே…
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கும் போதும், வேலையினால் உண்டான அழுத்தத்தை குறைக்கும் போதும் கதைகளை நாடுவேன்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
இரண்டிலும்… தற்சமயம் பெரும்பாலும் அலைபேசி வழியிலே…
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
எண்ணிக்கையை கணக்கில் வைத்துக்கொள்வதில்லை…
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
இந்த அவசர உலகத்தில் Ebook வசதியாக இருந்தாலும், புத்தகமாக கையில் வைத்து படிப்பதற்கு இணையாகாது என்பது என் கருத்து.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
என்னை அறியாமலேயே என் குணத்தில், பழக்க வழக்கத்தில் நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
ஆம். பொறுமை, கோபம் ஆகியவற்றில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
அனைத்துமே… முக்கியமாக கதை சுருக்கம்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
என் மனநிலைக்கு ஏற்ப கதையின் வகைகளும் மாறுபடும்.
மர்மம், திகில், அமானுஷ்யம், காதல், எல்லை மீறாத ரொமான்ஸ்.. இப்படி வரிசைப் படுத்தலாம்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிப் பட்ட உறவாக தெரிகிறார்கள்?
அந்தந்த கதைகளை படிக்கும்போது, அந்தந்த எழுத்தாளர்களை மிகவும் நெருக்கமானவர்களாக உணர்வேன். கதைகளிலிருந்து எனக்கு தேவையான அறிவுரைகளை எடுத்துக் கொள்ளும்போது என் நலனில் அக்கறை உள்ளவராகவும் உணர்வேன். சுருக்கமாக, நல்ல நண்பர்!
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
பல கதைகள் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் “The Diary of Anne Franck” என்கிற ஆங்கில புத்தகம்.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
எழுத்துநடை, கற்பனை.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமாக.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
தேவையான இடத்தில் தேவையான மொழி இருத்தல் நலம்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
அவ்வப்போது வாசிப்பேன். பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமி சபதம் ஆகியவை பிடிக்கும்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
நன்றாக இருக்கின்றன. சில கதைகளின் ஒன்லைனர் ஒரே மாதிரி இருக்கின்றன. இருப்பினும், ஆசிரியரின் காட்சியமைப்பும், எழுத்துநடையும் கதையை வித்தியாசப்படுத்திக் காட்டினால், இன்னும் சிறப்பாக இருக்கும்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
பிடிக்கும்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
தினமும் வாசிப்பேன். நேரம் மட்டும் வித்தியாசப்படும்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
பெரிதாக விமர்சனம் கொடுத்ததில்லை. ஆசிரியர்களிடம் தனிப்பட்ட விதத்தில் கருத்துகளை பரிமாறி இருக்கிறேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
ஐந்தில் அடக்கமுடியுமா என்பது சந்தேகமே. சமீபத்தில் படித்ததில் பிடித்தது என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
– பௌர்ணமி அலைகள் சதிராட – சரண்யா ஹேமா
– பன்னீர்ப் பூக்கள் – சுதாரவி
– நேசமு(ர)டன் – ரியாமூர்த்தி
– மழை தேடி நனைவோம் வா! – மேகவாணி
– ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுக்கள் – நிலா பிரகாஷ்
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
நிறைய தகவல்கள் இருக்கின்றன. சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நிறைய வளர்ந்து வரும் எழுத்தாளர்களை காணமுடிகிறது. சிலரின் கதைகள் என்னை ஆச்சர்யப்படுத்தியும் இருக்கிறது. ஆனால், பலரின் நல்ல படைப்புகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
முதல்காரணம், மேலே சொன்னது போல, எழுத்தாளர்கள் அதிகரித்துவிட்டனர். அவர்களுக்கான போட்டியும் அதிகரித்து விட்டது. இதனாலேயே பலரின் கதைகள் கண்ணில் படமாலேயே போய்விடுகின்றன. எழுத்தாளர்கள் தங்களின் கதைகளை வாசகர்களுக்கு எப்படி சேர்க்க வேண்டும் என்று புதுயுக்திகளை யோசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5 வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்கள் :
நான் அன்றைய எழுத்தாளர்களின் படைப்புகளை மிகுதியாக படித்ததில்லை. எனக்கு பரிச்சயமானவர்களில் பிடித்தவர்கள்…
– கல்கி
– ராஜேஷ்குமார்
– ரமணிச்சந்திரன்
இன்றைய எழுத்தாளர்கள் :
பொதுவாக நான் கதைகருவை வைத்து ரேண்டமாகதான் இப்போது கதைகளை வாசிக்கிறேன். அதில் சில எழுத்தாளர்களின் பல படைப்புகளை வாசித்திருக்கிறேன். சிலரின் ஒரு கதையை மட்டும் கூட வாசித்திருக்கிறேன். அதனால், இன்றைய எழுத்தாளர்களில் மனம் கவர்ந்த ஐவரை மட்டும் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
மேலும், இவை போன்ற வாசகர் தேர்வில் ஒவ்வொருமுறையும் ‘என் பெயர் வந்திருக்கிறதா?’ என்று தேடும் பல வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் நானும் ஒருத்தி. அதனால், சிலரை மட்டும் இங்கு கூறி, பலரை மறதி காரணமாக கூறாமல் விடவும் தயக்கமாக இருக்கிறது.
இன்றைய பல எழுத்தாளர்களின் பல கதைகள் என்னை கவர்ந்திருக்கின்றன. அவற்றை நான் வாசித்தபோதே அவரவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆகையால், இந்த பதிலை படிக்கும் அந்த எழுத்தாளர்கள், உங்களின் பெயரை இதில் இணைத்துக்கொள்ளவும்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
நல்ல கதைகரு, அதற்கேற்ற கற்பனை, தங்கு தடையற்ற காட்சியமைப்பு..
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
நான் இதுவரை பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களின் கதைகளைதான் அதிகமாக வாசித்திருக்கிறேன். அதனால், இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
நான் ரசித்து வாசித்த அனைத்து எழுத்தாளர்களிடம் ஆட்டோகிராப் வாங்கவேண்டும் என்று ஆசையாகதான் இருக்கிறது.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதைக்கு தேவை இருப்பின், எதிர்மறை முடிவுகள் வரவேற்கதக்கதே. அப்படிப்பட்ட கதைகள் தான், இந்த உலகில் எதுவும் நிலையானது இல்லை. எதுவானாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதை மனதில் பதிய வைக்கின்றன.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
நான் இதுவரை ஆடியோ கதைகளை கேட்டதில்லை.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
முதல் கதையை போன்ற சுவாரஸ்யத்தை கொடுக்குமேயானால், அதில் ஒன்றும் தவறில்லை.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
உங்கள் கதைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். மாறாக, உங்கள் கதைகளை வாசகர்களிடம் சேர்க்க புதிய முயற்சிகளை கையாளுங்கள். உதாரணமாக, முடிவுற்ற உங்கள் கதைகளை பகிரும் போது, கதையின் வகை, கதைசுருக்கம், அதிலிருந்து சில வரிகளையும் சேர்த்தால், என்னைப் போன்ற வாசகர்களுக்கு கதையை தேர்வு செய்வது எளிதாக இருக்கும்.
தொடர்ந்து எழுதுங்கள். உங்கள்அனைவரின் எழுதுப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!
ரொம்ப அருமையான தென்றல் போலான உரையாடல் பார்கவி ..
எல்லாமே மிக எளிமையா விளக்கி, அழகா பதில் சொல்லி இருக்கீங்க. உங்க வாசிப்பு பயணம் எப்பவும் இதே போல கணக்கு இல்லாம தொடரணும். உங்க எழுத்து பயணமும் இனிதே தொடர்ந்தபடி இருக்கட்டும். நீங்களே விருபபப்பட்டு வந்து இந்த நேர்காணலில் பங்கேற்றதுக்கு ரொம்ப நன்றி.
வாசிப்பை நேசிப்போம்…