எழிலரசி
“ஏண்டி இப்படி பண்ண? உனக்கு நாங்க என்ன குறை வச்சோம்? ஏன் புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்தன்னு கேக்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா? இல்ல நாங்க தான் எதுவும் உன்ன கேக்க கூடாதா?” என அவளின் பெரியம்மா வசந்தி அவளிடம் மருத்துவமனை என்றும் பாராமல் கத்திக் கொண்டிருந்தார்.
அவள், எழிலரசி, திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. கணவனுடன் சண்டை எனக் கூறி தந்தையின் வீட்டில் வந்து அமர்ந்து இருக்கிறாள். நேற்று குடும்பமாக அமர்ந்து அதற்கொரு தீர்வு காணவேண்டும் என்று பேசியவர்களின் பேச்சில், தனது உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டாள். அந்நேரத்தில் அங்கே வந்த அவளது தம்பி அவள் கையை தட்டிவிட்டு வலுக்கட்டாயமாக மருத்துவமனை வந்து சேர்த்தான்.
“சொல்லு எழில்.. ஏன் இப்படி பண்ண?” என அவளது மாமன் முறையுள்ள ஒருவர் கேட்டார்.
அவர்கள் பேசிய எதற்கும் அவள் ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை. கண்ணில் இருந்து நீர் மட்டும் வந்தவண்ணம் இருந்தது. ஒரு மணிநேரம் கடந்தும் அவர்களது சத்தம் குறையவில்லை எனவும் ஓர் செவிலி வந்து சத்தம் போட்டார்.
“எல்லாரும் மொத வெளிய போங்க.. எதுக்கு இங்க இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க? இந்த பொண்ணு இப்படி ஒரு முடிவெடுக்க நீங்க தான் காரணம் போல.. அதுவே செத்து பொழச்சி வந்திருக்கு. மறுபடியும் பேசி பேசி சாவடிக்காதீங்க. ஏற்கனவே கஷ்டப்பட்டு காப்பாத்தி வச்சிருக்கோம்.” என அவர் திட்டியதும் அனைவரும் வெளியே சென்றனர்.
அவர்கள் வெளியே சென்றதும் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு அப்படியே கண்மூடி அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளது தம்பி மதன் உள்ளே வந்து அவளது கைப்பிடித்து அமர்ந்தான்.
“என்னடா.. நீயும் ஏதாவது எனை பேசணுமா? பேசிடு..” கண்மூடியபடியே கூறினாள்.
“நீ பேசவேண்டியதை மொத பேசு எழில்.. ஏன் எல்லாத்தையும் மனசுக்குள்ளவே வச்சி புழுங்கற? வெளிய கொட்டிடு. நான் கேக்கறேன்..”
“என்னால உன்கிட்ட சொல்லமுடியுமான்னு தெரியல டா.. என்னால இதுக்கு மேல யாரோட பேச்சையும் தாங்க முடியாது. ஏண்டா எனை இங்க கொண்டு வந்து காப்பாத்தின?” தொண்டை அடைக்க மெல்ல கேட்டாள்.
“நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன் எலி? எனக்கு சாய உன் தோள் வேணும், தூங்க உன் மடி வேணும்.. அப்படி எல்லாம் நீ எனை விட்டு ஈசியா போயிட முடியாது..” எனக் கூறி மதன் அவளது கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
“சொல்லு என்ன பிரச்சனை?”
“டேய்.. மதன்..” என ஆரம்பித்துத் தயங்கிக் கண்மூடிக்கொண்டாள்.
அவளது தயக்கத்தில் விஷயத்தின் வீரியம் புரிய, எழிலரசியின் நெருங்கிய தோழியை தொலைபேசியில் அழைத்து வரச்சொன்னான்.
ஏற்கனவே விஷயம் கேள்விப்பட்டு புறப்பட்டுவிட்ட இலக்கியா ஒரு மணிநேரத்தில் அங்கு இருப்பேன் எனக் கூறினாள்.
“தம்பி.. யாரையும் அந்த பொண்ண பேசாம கொஞ்சம் பாத்துக்கப்பா.. ஒருமணிநேரத்துல பிபி கண்டமேனிக்கி ஏறி இருக்கு பாரு. அந்த பொண்ணு அவங்ககிட்ட ரணம் தான் படுது.” என எழிலை பரிசோதித்த செவிலி கூறிவிட்டு சென்றார்.
“சரிங்கக்கா.. நான் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடறேன்..” எனக் கூறியவன் அங்கே யாரையும் இருக்கவேண்டாம் என சத்தம் போட்டு வீட்டிற்கு செல்லும்படி அனுப்பிவைத்தான்.
ஒன்றரை மணிநேரம் கடந்து இலக்கியா எழில் அருகே வந்து நின்றாள். அப்போது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
“என்னடா நடந்துச்சி?” மதனிடம் வினவினாள்.
“கல்யாணம் முடிஞ்சி மூணு வருஷம் ஆகப்போகுது. இப்ப அங்க போய் அவனோட வாழமாட்டேன்னு இவ சொல்றா. ஏன் எதுக்குன்னு எனக்கும் தெரியல. அம்மாகிட்ட அவ போன வாரம் ஃபோன்ல பேசி இருக்கா அதுல அம்மாவுக்கு பிபி அதிகமாகி கீழ விழுந்து தலைல அடிபட்டுரிச்சி. அவங்கள பாக்க வந்தவ இப்போ போகாலன்னு வீட்ல சொன்னா, உடனே அப்பா பெரியவங்கள வச்சி பேசலாம்னு நேத்து எல்லாம் வந்து பேசினாங்க..” என மதன் ஒரு நொடி நிறுத்திவிட்டு, “இன்னிக்கி விடியகாலைல பூச்சி மருந்து எடுத்து குடிச்சிட்டா.. நான் வயலுக்கு மருந்து எடுக்க அந்நேரம் அங்க போகவும் உடனே தூக்கிட்டு வந்து இங்க சேத்தி காப்பாத்தி வச்சிருக்கோம். ஏண்டா காப்பாத்தினனு எனை கேக்கறாக்கா..” மதன் கண்களில் நீர் கோர்த்து நின்றது.
“அவ புருஷனுக்கு சொல்லியாச்சா?”
“இல்ல.. நான் சொல்லல.. வேற யாராவது சொன்னங்களான்னு தெரியல..”
“சரி.. எனக்கு ஒரு ரெண்டு பிரியாணி, ஒரு ஃபுல் சிக்கன் க்ரில், ரெண்டு ஃபிஷ் ஃப்ரை எல்லாம் போய் வாங்கிட்டு வா..” எனக் கூறி பணம் கொடுத்தாள்.
அவன் அவளைப் பார்த்து முறைத்தான். “மொரைக்காத.. போய் சீக்கிரம் உங்கக்கா கண்ணு முழிக்கறதுக்கு முன்ன வாங்கிட்டு வா.. அப்படியே ரெண்டு பன்னீர் சோடவும் சில்லுனு இருக்கணும்..ஓடு ஓடு..” என அவனை விரட்டி விட்டுவிட்டு மருத்துவர் அறை நோக்கிச் சென்றாள்.
அவரிடம் அமர்ந்து ஒரு சில விஷயங்களைப் பேசி, எழிலரசியின் உடலில் சில பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டு எழில் அருகே வந்து அமர்ந்தாள்.
வாடி வதங்கிய முகத்துடன் அவளது முகத்தில் அப்பிக் கிடக்கும் சோகம் இலக்கியாவின் மனதினில் பாரம் ஏற்றியது. எப்படி இருந்த பெண் இவள்?
எழிலரசி, மாநிறம் ஆனால் மிகவும் களையான சிரித்த முகம். முகத்தில் இருக்கும் அந்த லட்சணம் யாரையும் அவளைப் பார்த்த நொடி புன்னைகைக்க வைக்கும். பேசுவதும் கூட மிகவும் தன்மையாக, யாரின் மனமும் புண்பட்டுவிடக்கூடாது என்கிற உணர்வோடு தான் பேசுவாள்.
ஆனால் அவளை தான் அனைவரும் புண்படுத்துவார்கள். காரணம் சற்றே பூசிய உடல்வாகு. வயது பெண்ணிற்குறிய உடல் அமைப்பு அவளுக்கு அமையவில்லை. ஒரு பக்கம் எண்ணை பண்டங்களை அதிகம் உட்கொள்வதாலும் இருக்கலாம், ஆனாலும் அவள் உடல் சிறுவயது முதலே பூசியபடி தான் இருக்கும். குண்டம்மா. குந்தாணி, ரோட்ரோலர் போன்ற பட்டப்பெயர்கள் ஏராளம்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு தனிமையில் அழும் வழக்கமான பெண். ஆனாலும் இவள் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு கணவன் மனைவி நடுவே என்ன பிரச்சனை நடந்திருக்கும் என்ற எண்ணம் இலக்கியாவின் அடிமனதில் உறுத்தியது.
மிகவும் சிரமப்பட்டு தான் இந்த திருமணம் கூட அவளுக்கு முடித்தார்கள். அவளது உடலமைப்பின் காரணமாகவே பலர் அவளை மறுத்தனர். அதில் அவளது பெற்றோரும் அவளும் மிகவும் காயமடைந்தனர். இறுதியில் அவளைப் போலவே பூசிய உடல்வாகு கொண்ட ஒருவரை அவளது தந்தை வழி உறவினர் ஒருவர் கொண்டு வந்து நிறுத்தினார்.
அதன்பின் திருமணம் முடிந்து சொந்தவீடு, கார் என எல்லாம் வாங்கியதாக ஒருமுறை எழிலரசியும் கூறினாள். இன்று இப்படி படுத்துக் கிடக்கிறாள். என்னவாக இருக்கும்?
எழில் மயக்கத்தில் இருக்கும் போதே சில பரிசோதனைகள் செய்ய ஸ்கேன் ரூம் அழைத்து செல்லப்பட்டாள். அங்கே தான் இலக்கியாவிற்கு முக்கியமான விஷயம் தெரியவந்தது. மற்ற விஷயங்களை இனி பேசிக் கொள்ளலாம் என மனதில் ஒரு முடிவோடு ரத்த மாதிரிகளையும், வயிற்றையும் ஸ்கேன் செய்துவிட்டு மீண்டும் அவளது அறையில் கொண்டு வந்துப் படுக்க வைத்தனர்.
“டாக்டர் இதுலாம் சாப்பிடலாம் தானே?” என மதன் கொண்டு வந்தவற்றைக் காட்டிக் கேட்டாள்.
“இவ்ளோ ஹெவி இப்போ வேணாம் இலக்கியா.. ரெண்டு நாள் போகட்டும்.”
“அச்சச்சோ.. இப்ப என்னடா பண்றது?” இலக்கியா மதனிடம் கேட்க, அவன் முறைத்துக் கொண்டிருந்தான்.
“என்னை கேட்டா? இவள பாத்து ஏதாவது நீ பேசி மனசுல இருக்கறத கேட்டு சொல்லுவன்னு உன்ன கூப்பிட்டேன் பாரு.. “ என தலையில் அடித்துக் கொண்டான்.
“சரி விடு நானே சாப்டுக்கறேன்..” என எழில் அருகே இருந்த பலகையில் அனைத்தையும் விரித்து வைத்து வாசனையை உள்ளிழுத்துக் கொண்டே பாதியை சாப்பிட்டு முடித்தாள்.
“ஏய்.. எனக்கும் கொஞ்சம் மிச்சம் வை டி..” என எழில் மெல்ல தொண்டையை சரி செய்தபடிக் கூறினாள்.
“நீ இதுலாம் ரெண்டு நாள் கழிச்சி தன் சாப்பிடணும். இப்ப வேடிக்கை மட்டும் பாரு. மிச்சம் நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறேன்.” எனக் கூறியபடி பன்னீர் பாட்டிலுடன் அவளருகே வந்து அமர்ந்தாள்.
“என்ன செம்ம ஜாலி போல.. நேத்து எல்லாம் ஒரே கூத்தாமே?” என பேச்சை ஆரம்பித்தாள்.
“தெரிஞ்சி தானே கேக்கற?”
“நீ என்ன என்கிட்ட சொல்லிட்டா பூச்சி மருந்து குடிச்ச? என்கிட்ட ஐடியா கேட்டிருந்தா கரெண்ட்ல கை வைக்க சொல்லி இருப்பேன். ஒரே செகண்ட் தான் இந்நேரம் உன்ன சொம்புல எடுத்துட்டு வந்திருக்கலாம். இனிமேலாவது என்கிட்ட ஐடியா கேளு எலிக்குட்டி..”
எழில் தலைக்குனிந்து அமைதியானாள். அவள் அப்படி தலையைக் குனிந்ததும் மதன் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான். இலக்கியா அவளையே பத்து நிமிடம் பார்த்துவிட்டு அவளருகே வந்து முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள்.
“என்னாச்சி..?” என அவள் ஒற்றை வார்த்தை கண்களைப் பார்த்துக் கேட்டதும் மொத்தமாக அனைத்தையும் கொட்டிவிட்டாள். அதில் மீண்டும் அவளது ரத்த அழுத்தம் சட்டென கீழே இறங்கவும் மயங்கி சரிந்தவளை செவிலியை அழைத்துப் பார்க்க கூறினாள்.
“ஒண்ணுமில்ல இலக்கியா.. மனசு இறுக்கம் சட்டுன்னு கொறஞ்சிருக்கு. அதான் பிளட் பிரஷர் இறங்கிரிச்சி.. நல்லா தூங்கட்டும்.” என மருத்துவர் அவளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு கூறிச்சென்றார்.
“மதன்.. இங்க வா..” என இலக்கியா அருகே அழைத்து சில விஷயங்களைக் கேட்க் ஆரம்பித்தாள்.
“இன்னும் குழந்தை ஆகலன்னு பேசினாங்களா?”
“எங்கம்மா தான் அடிக்கடி கேப்பாங்க… குண்டா இருக்குறதால பிசிஓடி பிரச்சினை இருக்கு. குழந்தைக்காக ப்ரஷர் எல்லாம் யாருமே பண்ணல..” என்றவனிடம் இன்னும் சிலர் கேள்விகளைக் கேட்டாள்.
அதில் அவனுக்கு பாதி மட்டுமே தெரிந்திருக்க மீதியைத் தெரிந்துக் கொள்ள அவனின் பெற்றோரைக் காணச் சென்றாள்.
அங்கே அவர்கள் கண்களில் நீருடன் ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்திருந்தனர்.
“என்ன மாமா ரொம்ப நல்லா இருக்கீங்க போலவே.. பொண்ண கட்டி குடுத்தாச்சி. சொந்த வீடு, காரு எல்லாம் வாங்கி குடுத்து இருக்கீங்க.. இதுக்கு மேல ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்? அவனும் மாசம் லச்ச ரூபா சம்பளம் வாங்கறான்ல..” எனக் கேட்டபடி அவரின் எதிரே அமர்ந்தாள்.
“இதுக்கு மேல ஒரு பொம்பளைக்கு என்ன வேணும் நீயே சொல்லு கண்ணு.. இவனும் அவகூட சேர்ந்துட்டு பொண்ண அனுப்ப மாட்டேன்னு சொல்றான்..” என ஒரு பெருசு பேசியது.
“அதானே இதுக்கு மேல என்ன வேணும்? வேலா வேலைக்கு ஆக்கி போட தானே இவள அங்க அனுப்பி வச்சிருக்கீங்க. அவன் இவள எப்படி பாத்துகிட்டா என்ன? அடிச்சி கொன்னா தான் என்ன? இவ பொம்பள தானே.. பொறுத்து தான் போகணும் அப்படி தானே தாத்தா..” என அந்த பெரியமனிதரிடம் கேட்பது போல அனைவரையும் பார்த்துக் கேட்டாள்.
“புருஷன்னா ஒரு கோவத்துல அடிக்க தான் செய்வான். அவனுக்கு வெளிய ஆயிரம் வேலை டென்ஷன் இருக்கும். அத அவன் வீட்ல தானே காட்ட முடியும். இதுக்கு எல்லாம் போய் வாழமாட்டேன்னு சொல்லலாமா?” என எழிலின் பெரியம்மா கேட்டார்.
“கரெக்ட் தான் பெரியத்த.. வாரக்கடைசியானா ஆம்பள குடிக்கறதும், அடிக்கறதும் இப்ப வழக்கம் தானே.. குடிச்சா கண்ட கண்ட கெட்ட வார்த்தை பேசறதும் சகஜம் தான்ல..” என இலக்கியா கேட்டதும் அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர்.
“இன்னிக்கி குடிக்கறது பெரிய விஷயமில்ல. பொம்பள அனுசரிச்சி போனா ஆம்பள கட்டுக்கோப்பா இருப்பான். இப்ப நீ என்னத்துக்கு இங்க வந்து நாட்டாம பண்ணிக்கிட்டு இருக்க?” அந்த மாப்பிள்ளையைப் பேசி முடித்த உறவுக்காரர் கேட்டார்.
“ஓ நீங்களா.. வாங்க வாங்க.. இங்க வந்து உக்காருங்க.. உங்க பொண்ண அவ புருஷன் குடிச்சிட்டு அடிச்சான்னு பஞ்சாயத்து வச்சிங்களே அது எந்த சட்டத்துல வருது ?” என அவள் கேட்டதும் அவரும் வாய் மூடினார்.
“எல்லாரும் இங்க பாருங்க. எழில்காக நான் பேச வந்திருக்கேன். இது அவளோட வாழ்க்கை. இந்த கல்யாண வாழ்க்கை நீடிக்கணுமா? வேணாமான்னு அவ தான் முடிவெடுக்கணும். உங்க வேலைக்கு ஆகாத பஞ்சாங்கத்த எல்லாம் தூக்கிட்டு வந்து இங்க அவ தலைல கொட்டிட்டு இருக்காதீங்க. ரெண்டு நாள்ல அவளே வந்து முடிவ சொல்லுவா.. அதுவரைக்கும் யாரும் அவள வந்து பாத்து தொந்தரவு பண்ணாதீங்க.. இங்க இன்னிக்கி விட்டுப் போனவங்கள கூட ரெண்டு நாள் கழிச்சி கூட்டிட்டு வாங்க.. யாருக்கும் தனி தனியா அவ விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது..” எனக் கூறியவள் எழில் தாயிடம் சென்று தனியாக பேசிவிட்டு மருத்துவமனை சென்றாள்.
இரண்டு நாட்களில் ஓரளவு தேறியிருந்த எழில் வீட்டிற்கு திரும்பினாள். அன்று மாலை அனைவரும் அவள் வீட்டில் கூடி இருந்தனர். அவளது கணவனும் வரவழைக்கப்பட்டிருந்தான்.
“இந்த ஆள் கூட இனிமே என்னால வாழ முடியாது. இது தான் என் முடிவு.” எனக் கூறிவிட்டு இலக்கியாவைப் பார்த்தாள். அவள் கண்கள் மூடி திறந்து நான் இருக்கிறேன் தைரியமாக பேசு என கூறவும் மனதை திடப்படுத்திக் கொண்டு அங்கிருந்த பெரியவர்களைப் பார்த்தாள். அவள் தந்தை, அவருடன் பிறந்த ரத்த உறவுகள், தாயின் ரத்த உறவுகள், கணவனின் வீட்டினர், இந்த சம்பந்தத்தை முன் நின்று பேசி முடித்தவர், என அனைவரும் அங்கே கூடி இருந்தனர்.
“ஏன் கண்ணு இப்படி சொல்ற? என்ன கண்ணு பிரச்சன?” அவளது பாட்டி கேட்டார்.
“புருஷன் அடிக்கறது எல்லாம் காரணமா சொல்லாத எழிலு..”
“தினம் அடிச்சா கூட சொல்லக்கூடாதா பெரியம்மா?”
“தினமுமா?”
“ஆமா. தினமும் தான். கல்யாணம் ஆன புதுசுல வார கடைசில குடிச்சாரு. அப்போ நிதானம் தவறி ஒரு தடவ ரெண்டு தடவ அடிக்கலாம். அதுவே தினமும் குடிச்சாலும், குடிக்கலன்னாலும், நின்னா நடந்தா.. இவ்வளவு விட என் முகத்த பாத்தாலே அடிக்கறப்போ நான் வாங்கிட்டு கம்முன்னு இருக்கணுமா?”
“அது அவன் புத்தி கெட்டு அப்படி நடந்திருப்பான் மா.. அவன பேசி சரி பண்ணலாம்.” மற்றவர் கூறினார்.
“நீங்க தானே இவர் சம்பந்தம் கொண்டு வந்தீங்க.. என்னை பிடிச்சிருக்குன்னு இவர் சொன்னத நீங்க கேட்டீங்களா?”
“ஆமா கண்ணு. கேட்டு தானே உங்கப்பாகிட்ட வந்து பேசினேன்.”
“என் முகத்த பாக்கவே இவருக்கு பிடிக்கலியாம். நீயெல்லாம் ஒரு பொண்ணான்னு கேக்கறாரு.. அப்பறம் எப்படி உன்கூட குடும்பம் நடத்தறதுன்னு சொல்றாரு..”
“ஏன் கண்ணு மூணு வருஷமா..” என அவளது பாட்டி ஆரம்பித்து பாதியில் நிறுத்திய கேள்விக்கு இல்லையென தலை அசைத்து பதில் கொடுத்தாள்.
“அட சண்டாளா..” என அவர் அவனைத் திட்டினார்.
“நீங்க என்ன பொண்ணையா வளத்து வச்சிருக்கீங்க? காட்டெருமை மாதிரி இருக்கா.. இவள பாத்தா யாருக்காவது ஆசை வருமா? இவள எல்லாம் கல்யாணம் பண்ணி நான் வாழ்க்கை குடுத்ததே பெருசு. இதுல புள்ளைவரம் வேற குடுக்கணுமாம்.”
“அப்பறம் எதுக்கு மாப்ள வீடு கார் எல்லாம் கேட்டீங்க?” அவளின் பெரியப்பா கேட்டார்.
“உங்க பொண்ண நான் கட்டி இருக்கேன்ல அதுக்கு தான். அவ பங்கு சொத்த எழுதி வாங்கிட்டு வான்னு சொல்லி தான் நான் அனுப்பினேன். இங்க வந்து நாடகம் ஆடிக்கிட்டு இருக்கா இவ..”, என வேகமாக அவளிடம் சென்றவன் அவளது கன்னத்தில் அறைந்து, “ஏய்.. ஒரு வேலை கூட உருப்படியா செய்யமாட்டியா நீ? உனக்கு எல்லாம் எவ்ளோ தான் சொல்றது? உனக்கும் அறிவில்ல, உங்கப்பனுக்கும் அறிவில்ல.. கூட்டத்த கூட்டி வச்சி தான் எல்லாம் பேசுவீங்களா?” என அவன் பேச பேச மதன் அவனை அடித்திருந்தான். அதன்பின் பெரும் சண்டையாகி ஆட்களைப் பிரித்துவிட்டு, அவனைக் குடும்பத்துடன் அனுப்பிவைத்துவிட்டு மிச்சம் நடந்ததை அவளிடம் கேட்டனர்.
“இத விட பல மடங்கு அசிங்கமா பேசுவாரு, அடிப்பாரு.. குடிப்பாரு.. இதான் மூணு வருஷமா நடக்குது..”
“ஏன் கண்ணு இத்தன நாள நீ வீட்ல சொல்லல?” அவளது மாமா கேட்டார்.
“என் ஃபோன்ல இருந்து எல்லாமே அவரு ஒட்டு பாப்பாரு மாமா. இந்த ஃபோன் வாட்ச் எல்லாமே அவரோட கம்ப்யூட்டர்ல கனெக்ட் ஆகி இருக்கும். என் இதய துடிப்பு கூட அவருக்கு தெரிஞ்சி தான் துடிக்கும். எந்த வகைலையும் நான் சொல்ல முடியல.. பணத்துக்காக தான் இந்த கல்யாணமே பண்ணிக்கிட்டாருன்னு அவரே பல தடவை சொல்லிட்டாரு..”
“அப்பறம் ஏண்டா வீடு வாங்கி குடுத்த?” அவளின் பெரியப்பா அவள் அப்பாவிடம் கேட்டார்.
“மூணு நாள்ல இருவது லச்சம் கேட்டாங்க. உங்க பொண்ணுக்கு தானே வாங்கி தரீங்கன்னு சொல்றப்போ நான் என்ன பண்ணட்டும் அண்ணா? அதான் அவ அம்மா நகைய வித்து காசு குடுத்தேன். அத அவன் பேர்ல வாங்கிட்டான். காரு இவ பேர்ல குடுத்தே ஆகணும்ன்னு நாலு மாசம் முன்ன ராவடி கட்டி அதுக்கு ஆறு லச்சம் வாங்கிட்டு போனான். இவள தனியா இங்க வர்றதுக்கு விடவே இல்ல..” எனக் கூறிவிட்டு தலைக்குனிந்துக் கொண்டார்.
“நீங்க இப்படி தலைக்குனியக் கூடாதுன்னு தான் மாமா அவ தினம் ரணப்பட்டுட்டு இருந்திருக்கா, ஆனா இதுக்கு மேலையும் தாங்க முடியாதுன்னு தான் இங்க தனியா வந்த உடனே எல்லாத்தையும் கொட்டிட்டா..” இலக்கியா எழில் அருகே வந்து அவளது முகத்தைப் பார்த்தாள்.
“எதுக்கு இவ்ளோ பொறுத்திருந்த கண்ணு?” பாட்டி கண்களில் நீருடன் கேட்டார்.
“எனக்கு கல்யாணம் ஆகறதே பெருசா இருக்கு, சண்டை சச்சரவு வந்தா பொறுத்து போகணும்னு நீங்க எல்லாரும் தானே சொல்லி அனுப்பினீங்க.. நானும் குனிஞ்சி குனிஞ்சி உடைஞ்சே போயிட்டேன் ஆச்சி.. அதான் செத்துடலாம்னு முடிவெடுத்தேன்.. நான் வாழாவெட்டியா இருந்தா தானே உங்களுக்கு கௌரவ குறைச்சலா இருக்கும். ஒரே அடியா போயிட்டா யாருக்கும் நான் பாரமாவும் இருக்க மாட்டேன், தடையாவும் இருக்க மாட்டேன்ல..” என எழில் கூறிய விதத்தில் அனைவரின் மனதும் சுருக்கென தைத்தது.
‘அவளை இத்தனை காலமாக இப்படி தானே சொல்லிச் சொல்லி வளர்த்தோம். இன்று அதை அவள் வாயால் கூறும்போது மட்டும் நமக்கு இத்தனை வலிக்கிறதே, அவளுக்கும் நாம் சொல்லும் போதெல்லாம் வலித்திருக்குமே..’ என மிகவும் தாமதாக அனைவரும் யோசித்தனர்.
“இன்னிக்கி இவ இப்படி நிக்க காரணமே நீங்க தான். அவ குண்டா இருக்கா அவளோ தானே? அத ஒரு குறையா சொல்லி சொல்லி அவ மனசுல ஒரு தாழ்வு மனப்பான்மைய ரொம்ப ஆழமா வெதச்சி மரமா வளர வச்சிட்டீங்க. அதோட விளைவு மூணு வருஷமா ஒருத்தி தினம் அடி வாங்கி, மீதி வாங்கி, கேவலமா திட்டு வாங்கிட்டு வாழ்ந்திருக்கா.. உங்க வீட்டு பொண்ண நீங்களே இப்படி வாழ வச்சிருக்கீங்க.. நல்லா இருக்குல்ல..இப்படியே இன்னும் கருப்பா இருக்க, குள்ளமா இருக்க, ரொம்ப உசரமா இருக்கன்னு சொல்லி எத்தன பேர தாழ்வுமனப்பான்மைல தள்ளி அவங்க வாழ்க்கைய நாசம் பண்ணுவீங்க ?” என இலக்கியா கேட்டதில் அனைவரும் ஏதும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தனர்.
“இதுக்கு மேலையும் நீங்க என்னை அவன்கூட தான் வாழணும்ன்னு அனுப்பினா போறேன். ஆனா திரும்ப நான் வரமாட்டேன். இங்க என் தம்பி இருந்தான் காப்பாத்தினான். அங்க அவன் எனை அடிச்சி கொன்னுட்டு நான் தற்கொலை பண்ணிக்கிட்டேன்னு ஆதாரம் ரெடி பண்ணி வச்சிட்டு சொல்வான். அவன் பாக்கற வேலை அவனுக்கு எல்லா தப்பையும் சொல்லி தருது. அவனும் தன்னை காப்பாத்திக்க என்ன வேணா என்னை பத்தி இல்லாதது எல்லாம் சொல்லி தப்பிப்பான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது. அவன் அளவுக்கு தப்ப மறைக்கர திறமை நம்ம ஊர் ஆளுங்க யாருக்கும் இல்லை. இப்பவும் உங்க வார்த்தைய கேக்க நான் தயாரா தான் இருக்கேன். போன்னு சொன்னா போயிருவேன் மறுபடியும் எப்பவும் வரமாட்டேன்..” எனக் கூறிவிட்டு அங்கிருந்து இலக்கியாவுடன் நடந்தாள்.
அவள் சென்றபின் அந்த கூடத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேருக்கும் மனம் கனத்துப் போனது. பின் அனைவரும் ஒரு முடிவாக அவனோடு அனுப்ப வேண்டாமென்ற முடிவெடுத்து மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை செய்ய முனைந்தனர்.
“இலக்கியா.. எனக்கு ஒரு உதவி பண்றியா?”
“பிரியாணி தானே.. வாங்கிட்டு வர சொல்லிட்டேன்..”
“அதில்ல.. எனக்கு இந்த தாழ்வு மனப்பான்மைல இருந்து வெளிய வரதுக்கு உதவி பண்ணுவியா?”
“அது ரொம்ப ஈசி செல்லம்.. அதான் நான் இருக்கேன்ல.. இப்ப உனக்கு பிரியாணி வேணுமா வேணாமா?”
“கண்டிப்பா வேணும்..” என நீண்ட நாட்கள் கழித்து சிரித்த முகமாக இலக்கியாவின் கைப்பிடித்து நடந்தாள் எழிலரசி.
உடல் சம்பந்தப்பட்ட தாழ்வுமனப்பான்மையினால் பலர் மனவுளைச்சல் பட்டு உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான ஆண்கள் கோபம் கொண்டு இணையை துன்புறுத்துகின்றனர். சில பெண்கள் கோபத்தை பேச்சில் காட்டிவிடுகின்றனர். பல பெண்களுக்கு மனதில் அழுத்தம் கூடி கூடி வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் பலரின் திருமண வாழ்க்கை மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வும் வெகுவான பாதிப்பை அடைகிறது.
தனிமனித கிண்டலும், கேலியும் காலம் செல்ல செல்ல தாழ்வுமனப்பான்மையை நோக்கி அழைத்து செல்லாமல் இருக்க பேச்சில் விழிப்புணர்வுடன் இருப்போம்.
அன்புடன்,
ஆலோன் மகரி.