மனிதனென்ற அகம்பாவமா?
‘இன்றைய நாட்களில் நமது சமூக ஊடங்கங்கள் இடையே அதிகம் உலாவரும் செய்திகளிள் ஒன்று ‘தெரு’நாய்கள்…
அவைகள் வாழ்வதற்கான எந்த நிரந்தரமான இடமும், உணவும் இல்லாமல் தெருக்களில் ஆங்காங்கே சுற்றி திரியும் நமது இந்திய நாட்டின் நாய் தான் இன்று “தெருநாய்” என்ற பட்டத்துடன் மனிதர்கள் இடையே அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது.
அதுவும் சில மாதங்களாக தெருநாய்களை கொன்றே ஆகவேண்டும் என்று மனிதர்களில் சிலர் கூட்டமாக கிளம்பியுள்ளனர். காரணம் அவைகளினால் விபத்துக்கள் நடக்கிறது, குழந்தைகளை கடிக்கிறது, தெருக்களில் குலைத்து அவர்களின் தூக்கத்தை கெடுக்கிறது.. இப்படியாக பல காரணங்கள் வரிசைக் கட்டி கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் தெருநாய்களை ஆதரிப்பதாக பாவ்லா காட்டும் மக்கள்.. அதென்ன பாவ்லா? தெருநாய்களை பக்கத்தில் விடாமலேயே அவைகளை கொல்லக்கூடாது என்று அவைகள் தான் நம்மை, நமது தெருக்களை பாதுகாக்கின்றன என்று முழங்கியபடி வெளிநாட்டு வகை நாய்கள் வாங்கி வீட்டில் அவைகளுக்கு உயர் ரகமான உணவு மற்றும் இத்யாதி இத்யாதி செய்துக் கொண்டு உயரமான அடுக்குமாடியில் குடியிருக்கிறார்கள்.. அல்லது தனி பங்களாவில் குடியிருந்து கொண்டு தனது செல்லபிராணியை மட்டும் பத்திரமாக பார்த்துக் கொண்டு, அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் தெருநாய்களுக்கு ஒரு பிஸ்கட் கூட போடாமல் விரட்டியடிக்கும் வர்க்கத்தினர்..
இவர்களுக்கு இடையே இரண்டு லாரிகளுக்கு நடுவே பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டியைப் போல வெகுசிலர் தெருநாய்களை கொல்ல வேண்டாம் என்றும் போராடி வருகின்றனர்…’
“இது தான் இன்னிக்கி போட போறியா காவ்யா?” என அவளது தோழி பவித்ரா கேட்டாள்.
“ஆமா பவி.. என் மனச ரொம்ப பாதிச்ச விஷயம் இது.. இதுக்காக நம்ம கொஞ்சமாது பேசணும்..”
“அப்ப இன்னிக்கி நம்ம எஃப். எம் ஒரு வழியாக போகுது.. ஜமாய்…”
“இதுக்கு உன்னோட உதவியும் எனக்கு வேணும் பவி..”
“என்ன உதவி?”
“இந்த 5 வருஷத்துல இந்தியால நடந்த விபத்துக்கள் காரணிகள் வாரியா எனக்கு எடுத்து குடு..”
“கண்டிப்பா எடுத்து தரேன்..”
“நாய்களால 3% சென்னை, டெல்லி, பெங்களூரு ல நடந்திருக்கு. நாய் கடி வாங்கியனது மட்டும் 21 லட்சம் பேருக்கு மேல பதிவாகியிருக்கு..”
“அவ்வளவா?”
“ஆமா.. மனுஷங்களால எவ்ளோ தெரியுமா?”
“ஒரு மணிநேரத்துக்கு 55 விபத்தும், 20 மரணங்களும் இதனால நிகழுதாம்..”
“அடக்கொடுமையே… அப்போ மனுஷன்கிட்ட இருந்து மனுஷன யார் காப்பாத்த போறாங்க?”
“அது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. சரி இந்தா இந்த தன்னார்வலர் இப்போ ஒரு நாய் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு நிலையம் (dog adoption) ஆரம்பிச்சி இருக்காரு. பேரு சர்வேஷ்வரன்.. இவர நிகழ்ச்சிக்கு கூப்பிடலாம்..” என்று ஒரு முகவரி அட்டையை அவளிடம் கொடுத்தாள்.
“இதுக்கு கேள்வி பதில் வைக்கலாமா?”
“தாராளமா வைக்கலாம்.. என்ன என்ன மாதிரியான கேள்விகள் வருதுன்னு பாக்கலாம்..”
“தெருநாய் ரோட்ல குறுக்க வந்ததால தான் கீழ விழுந்து என் கை கால் உடைஞ்சது.. அதனால தெருநாய்களை ஒழிக்கணும்..”
“என் பசங்க விளையாடிட்டு இருக்கறப்ப கூட்டமா வந்த நாய்ங்க என் புள்ளைய கடிச்சி கால் சதைய மேல வரைக்கும் இழுத்து எடுத்துரிச்சி.. அதனால அதுங்க இருக்கக் கூடாது..”
“வீட்ல தூங்கிட்டு இருந்த பிள்ளைய நாய் கவ்விட்டு ஓடிரிச்சி.. அது கழுத்த கடிச்சத்தால என் குழந்தை இறந்துரிச்சி.. அதனால அதுங்க இருக்க கூடாது..”
“நடுராத்திரில தெரு முழுக்க குலைச்சிட்டு ஓடி வீட்ல வயசானவங்க தூக்கத்த கெடுக்குது. அதனால அவங்க உடம்பு சரியில்லாம போகுது.. இந்த காரணத்தாலும் அதுங்க தெருவுல இருக்க கூடாது..”
“காடுபக்கம் கொண்டு வந்து விட்டா அங்கிருக்க கோழி ஆட்ட அது கடிச்சி கொல்லுது.. அத வளக்கறவங்களோட வாழ்வாதாரம் பாதிக்கபடுது.. அதனால காட்டு பக்கமும் விடக்கூடாது..”
இப்படியாக மனிதனின் வலிகளை மட்டுமே கணக்கில் வைத்து அவற்றை ஒழிக்கவேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்?
“நாய என் குழந்தை மாதிரி வளக்கறேன்.. அதை அன்பா நடத்தினா உங்கள ஏன் வந்து கடிக்குது? அதுக்கு தேவை அன்பு தான்.. ”
“அப்போ சோறு வேணாமா? அது பசிக்கு தானே ரோட்ல அலையுது.. அதுக்கு தேவையான சாப்பாடு கெடச்சா அது சாப்டுட்டு கம்முன்னு இருக்கு..”
“இங்க மனுஷனுக்கே நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கறது இல்ல. இதுல நாய்க்கு நேரத்துக்கு சாப்பாடு வைக்கணுமா?”
“அதுக்குன்னு ஒரு நிர்வாகத்தை உருவாக்கி அதை சரியா கையாண்டாலே இந்த வீட்டு விலங்குகள் பிரச்சனைகள் வராது. அதுக்கான முயற்சிகள் எடுக்கறது தான் இதுக்கான சரியான தீர்வு..”
“இப்படியான பல கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வந்திருக்கு.. இதுக்கான பதில் சொல்ல ஒரு தன்னார்வலர் இங்க வந்திருக்காங்க..”
“வணக்கம் சர்வேஷ்.. இப்படியான சூழ்நிலைக்கு என்ன தீர்வை நீங்க சொல்ல போறீங்க?”
“நெதர்லாண்ட் (netherland) 100 சதவீதம் தெருநாய்கள் இல்லாத நாடு. எப்படி இதை இவங்க செஞ்சாங்க? எல்லா தெரு நாய்களையும் கொன்னுட்டாங்களா?
இல்லை..
*Catch–Neuter–Vaccinate–Return (CNVR) programs
*Imposed high taxes on purebred dogs to encourage adoption
*Over 90% of households adopted pets, driven by strong cultural support
*Enforced strict anti-abandonment laws
மேற்கண்ட இந்த நாலு விஷயங்களை தான் அந்த நாடு கடைப்பிடிச்சது.
முதல் விஷயம் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்வதோடு அவற்றுக்கு முறையான தடுப்பூசிகளும் போடுவது.
இரண்டாவது விஷயம் வெளிநாட்டு இறக்குமதி நாய்களுக்கு அதிக வரி வசூல் செய்வது. இதனால் தெருக்களில் திரியும் நாய்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். வெளிநாட்டு நாய்கள் இங்க நம்ம வாங்காம இருந்தாலே அது சார்ந்த வணிக வியாபாரங்களும் குறையும். நம்ம நாட்டு நாய் இனங்களை அதிகம் பேர் தத்தெடுக்கவும் இது வழி வகுக்கும். இதனால் நம்ம நாட்டு நாய் இனங்கள் அழிந்து போகாது.
மூன்றாவது விஷயம் 90 சதவீதம் வீடுகளில் தத்தெடுக்கபட்ட பிராணிகளை வளர்க்கிறார்கள். தனியாக பணம் குடுத்து வாங்குவதில்லை. இதனால தெருநாய்கள் போடும் குட்டிகளும் மக்களால் தத்தெடுக்கப்படுகிறது. அவ்வுயிருக்கு ஓர் வாழ்வும் மலர்கிறது.
நான்காவது மிகவும் முக்கியமான ஒன்றும் கூட… வளர்ப்பு பிராணிகளை தெருவில் விடக்கூடாது. அப்படி நிற்கதியாக விட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை என்ற சட்டமும் உண்டு.
இன்று தெருக்களில் சுற்றும் நாய்களில் பாதிக்கும் மேலே ஏதோ ஓர் வீட்டில் வளர்ந்த நாய்கள் தான். அந்த வீட்டில் இருந்து அவைகளை தெருக்களில் விட்டதால் தான் தெருநாயாக தனது இல்லத்தையும், தன்னை வளர்த்த மனிதர்களையும் தேடி அலைக்கிறது. அதனால் நோய் தாக்கிய பிராணியையோ, புதிதாக பல குட்டிகளை ஈன்ற நாய்களையோ தெருக்களில் விட்டால் சட்டம் கடுமையான தண்டனையை வழங்கும்.
இந்த நான்கு விஷயங்களை நமது நாட்டில் செயல்முறை படுத்த ஆரம்பித்தாலே இந்த தெருநாய் பிரச்சனைகள் முடிந்துவிடும்.
“இதுலாம் நடக்குமா ?” காவ்யா கேட்டாள்.
“நடக்கும்.. எந்த விஷயமும் முதல் அடி கஷ்டமானதா, நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயமா தான் தெரியும். உள்ள இறங்கினா தானே என்ன என்ன செஞ்சி எப்படி பிரச்சனைகளை தீர்க்கலாம்ன்னு யோசிச்சி கண்டுபிடிக்க முடியும்..”
“இந்த வழிகள் எல்லாம் குறைந்தது 10 – 15 வருஷத்துக்கு முன்ன இங்க ஆரம்பிச்சி இருக்கணும்ணு ஒரு சிலர் சொல்றாங்களே..”
“15 வருஷத்துக்கு முன்ன இன்னிக்கி இருக்க அளவுக்கு அறிவியல் மற்றும் மருத்துவ வளர்ச்சி இல்ல. இப்போ இவ்ளோ வளர்ச்சி இருக்கறப்போ அதை நமக்கு பயனுள்ளதா இந்த விஷயத்தில் உபயோகம் செஞ்சிக்கலாம் தானே.. எந்த பிரச்சினைக்கும் ஆணிவேர் தேடி சரி பண்ணா தான் மறுபடியும் அதனால பிரச்சினைகள் வராது. கிளைகளை வெட்டினா வேற பக்கம் வேற விதமான பிரச்சினைகள் தான் முளைக்கும்…”
“ஒரு சிலர் கொல்றது ஒண்ணு தான் வழின்னு சொல்லிட்டு இருக்காங்களே.. அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”
“அதைபத்தி உங்க கருத்து என்ன காவ்யா?”
“என்னை பொறுத்தவரைக்கும் கொல்றது தீர்வே இல்லை. இப்போ இருக்க நாய்களை கொன்னுட்டா நாளைக்கு யாரும் அவங்க வளக்கற நாய்களை ஏதோவொரு காரணத்தால தெருவுல விடாம இருப்பாங்களா? அப்போ மறுபடியும் தெருக்களில் நாய்கள் அதிகமாகும் அப்பவும் நம்ம கொன்னுட்டே இருக்கணுமா? அது பாவம் இல்லையா?”
“ஹாஹாஹா.. சரியா சொன்னீங்க மேடம்… பாவம் பண்ணிட்டு காலபைரவருக்கு ஒரு பூசணிக்காய் தீபம் போடுவாங்க.. மத்தவங்க பாவ மன்னிப்பு கேட்டு ஒரு பக்கம் பரிகாரம் பண்ணுவாங்க.. பண்ற தப்பு எல்லாம் பண்ணிட்டு பரிகாரம் பண்ணா தண்டனை இல்லாம போகுமா என்ன? சரி நமக்கு இந்த பஞ்சாயத்து இப்போ வேணாம். இருக்கற விஷயத்தை தெளிவு பண்ணலாம்..
தெருநாய்கள் எதனால் உருவாகுது? எதனால் பெருகுது? எப்படி குறைக்கலாம்? எப்படி தெருக்களில் அநாதரவா சுத்தாம பண்ணலாம்? இது எல்லாம் நம்ம யோசிச்சி அதுக்கான செயல்பாடுகளை செய்யவேண்டிய விஷயம். இதை பண்ணாம கொல்ல சொல்றது பழிவெறி மட்டும் தான். மனுஷனுக்கு அடையாளமா இருக்க பகுத்தறிவ இதுல உபயோகம் செஞ்சா தான் இதுக்கான பலன் எல்லாருக்கும் நல்லவிதமா அமையும்.”
“அப்போ நாய்களுக்கும் வீடு வேணும்னு சொல்றீங்களா?”
“நாய் காதலர்கள்ன்னு சொல்லிக்கிட்டா மட்டும் போதுமா அந்த காதலை காட்ட நாய வளக்கறது தப்பில்லையே.. வெளிநாட்டு நாய்கள் மட்டுமில்ல நம்ம நாட்டு நாய்களும் நல்லா வாழணும். அதுக்கும் ஒரு கூரை, ஒரு நாளைக்கு ஒன்னோ, ரெண்டோ வேளை சாப்பாடு கிடைக்கணும். அப்டி இருந்தா எந்த தெருவிலும் நாய்கள் சுற்றாது. ‘தெரு-நாய்’ங்கற வார்த்தையே காலப்போக்கில் மறைந்தும் போயிடும்.. இதுக்காக தான் இப்போ பலபேர் தன்னார்வலர்களா இதுல இறங்கி இருக்காங்க. அவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை செய்யலாம். வெளிநாட்டு வகை நாய்களை வாங்காம நம்ம நாட்டு நாய்களை தத்தெடுக்கலாம்…”
“நம்ம நாட்டு நாய்களை வீட்டில் வளர்க்க முடியுமா?”
“நாய்களை வச்சி படையே உருவாக்கி பிரிட்டிஷ்காரன அலறவிட்ட வரலாறு உள்ள ஊருங்க இது.. வீட்ல வளக்கறதுல என்ன கஷ்டம் இருக்கு?”
“அதை நானும் கேள்விபட்டு இருக்கேன். ஆனா கன்னி வகை எல்லாம் வயக்காடு, பண்ணை போல எடத்துல தான் வழக்க முடியும்ன்னு சொல்றாங்க..”
“வளத்தலாம். கோம்பை எல்லாம் நல்லா வீட்டு காவல் இருக்கும். அதோட தைரியம் சிங்கத்தையும் எதிர்க்கற அளவு இருக்கும். இன்னிக்கி ரொம்பவே குறைவான இந்திய நாட்டு நாய் வகைகள் தான் இருக்கு. வெப்பநிலைக்கு பொறுத்து நாய்களோட உடல் அமைப்பு இருக்கும். நம்ம தமிழ் நாட்ல, இந்த வெயில் தாங்கற நாய் வகைகள் வளக்கறது நல்லது. அவங்க பராமரிப்பு செலவும் கம்மி தான். நம்ம சாப்பாடே சாப்பிடும், தனியா இறக்குமதி பண்ற உணவுகள் தேவை இல்லை. தோல் மற்றும் வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள் பெருசா வராது. பல நன்மைகள் நமக்கும் இதுல இருக்கு..”
“இறக்குமதி பண்ற சாப்பாடு எல்லாம் அதிக விலையா இருக்குமா?”
“ஆமாங்க.. சராசரியான நல்ல இறக்குமதி நாய் உணவு கிலோ ரூ.350 மேல ஆகுது. ஒரு நாளைக்கு ரெண்டு வேளைனாலும் மாசம் 10-12 கிலோ தேவைப்படும். அப்போ கணக்கு பண்ணி பாருங்க. இதுல steroid கலந்த உணவுகளும் சிலது இருக்கு. அது எல்லாம் குடுத்தா நாய்களுக்கு உடல்நிலை கெட ஆரம்பிக்கும். கிட்னி, லிவர் தான் முதலில் கெடும். அதுக்கு மருத்துவ செலவு எவ்ளோ ஆகும்ன்னு யோசிங்க.. அந்த மருந்துகளும் வெளிநாடுல இருந்து தான் வரும். அதோட விலையும் அதிகமா இருக்கும். ஒரு தடவை மருத்துவமனை கூட்டிட்டு போய்ட்டு வந்தா 2000-3000 ஆகும். என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்க முழு உடல் பரிசோதனைக்கு 5000-7000 வரை இன்னிக்கி ஆகுது… நம்ம நாட்டு மாடுகள் இங்க அழிக்கப்பட்ட மாதிரி தான் நாட்டு நாய்களும் அழிவின் பாதையில் போயிட்டு இருக்கு..”
“மாசம் இதுக்கே பல ஆயிரங்கள் ஆகும் போலவே.. அப்போ வெளிநாட்டு நாய்களை வளக்கவே கூடாதா?”
“அது அவங்கவங்க விருப்பம் தான். ஆனால் நம்ம நாட்டு நாய்களுக்கு முன்னுரிமை குடுக்கலாம்ங்கறது தான் எங்க கருத்து. அப்படி செஞ்சாலே தெருநாய்கள் இப்படி பாதிக்கப்படாது. தெருநாய்களாலும் மக்களுக்கு பாதிப்புகள் வராது..”
“இதுல அரசாங்கம் எந்த விதத்துல பங்கெடுக்கணும்?”
“இதுல முக்கியமான பங்கே அரசாங்கத்தோடது தான் மேடம். விலங்குகள் நல வாரியம் இதுல உயிர்ப்போட செயல்பட்டு இருந்தா இன்னிக்கி இந்த நிலைமை வந்திருக்காது. ஒருத்தர் ஒரு மனு போட்டதும் தான் இவ்ளோ நாய்கள் பெருகினதுன்னு சொல்றது எல்லாம் அவங்க வேலைய சரியா செய்யாம தப்பிக்க சொல்ற காரணம் தான். எந்த காரணத்துனால குறிப்பிட்ட இடத்துக்கு நாய்கள் கொண்டு போக கூடாதுன்னு சொல்றாங்கன்னு கவனிச்சி அந்த இடத்துல இருக்க பிரச்சினைய சரி பண்ணனும். அப்படியும் அவங்க மேல நம்பிக்கை இல்லைன்னா தனிப்பட்ட அதிகாரம் உள்ள ஒரு குழு மூலமா அந்த குறிப்பிட்ட பிரச்சினைய சரி செய்ய வழிகளை ஏற்படுத்தணும். தெருநாய்கள் அநியாயமாக கொல்லப்படக்கூடாது. அதுக்கு சரியான நிர்வாக மேலாண்மை வழிகளை வகுத்து அதன்படி அந்த வாரியம் செயல்பட்டாலே இந்த பிரச்சனைகள் வராது. நாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தால் எலிகள் மட்டுமில்ல இன்னும் பல பிரச்சனைகள் நம்ம வீட்ட சுத்தியும் உருவாகும். நாய்களால அதிக பலன்களை பல நூறு வருஷங்களுக்கும் மேல மனுஷன் தான் அனுபவிச்சிட்டு வரான். நம்ம வீட்லயும், சமுதாயத்துலையும் அதுவும் ஒரு அங்கமாக இருக்கும்போது அதை முழுக்க கொல்ல நினைக்கறது குரூரத்தின் உச்சம். இதுக்கான தீர்வு பிரச்சினையை பகுத்து பார்த்து முடிவெடுத்து செயல்படுத்தறது தான் ..”
“மிகவும் நன்றி மிஸ்டர் சர்வேஷ்.. பல விஷயங்களை எங்களோட பகிர்ந்துகிட்டீங்க.. உங்களோட முயற்சிகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்..”
“இங்க பேச எனக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கும், உங்க எஃப்எம் நிறுவனத்துக்கும் எனது நன்றிகள்..”
“ஹலோ மக்களே.. ‘தெருநாய்கள்’ உருவாகறதுக்கு இத்தனை காரணங்கள் இருக்கறப்போ, அதை சரி செய்யாம அநாதரவா தெருவில் சுற்றி திரியும் நாய்களை மொத்தமா கொல்லணும்ன்னு சொல்றது நாம மனுஷங்கற அகம்பாவத்தால தானே?”
அன்புடன்,
ஆலோன் மகரி.

