மீன் குழம்பு
தேவையான பொருட்கள் :
- லோகு மீன் – 1 கிலோ
- கொத்தமல்லி – 100 கிராம்
- வரமிளகாய் – 25 (பெரிது)
- கடலைப் பருப்பு – 1 டீ ஸ்பூன்
- உடைத்த உளுத்தம் பருப்பு – 1/2 டீ ஸ்பூன்
- மிளகு – 2 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- தேங்காய் – ஒரு சின்ன மூடி துருவல்
- சாப்பாட்டு அரிசி – 2 டீ ஸ்பூன்
- பட்டை – 1 இன்ச் (1)
- கிராம்பு – 5
- சோம்பு – 1 டீ ஸ்பூன்
- கசகசா – 1 டீ ஸ்பூன்
- புளி – 250 கிராம் (ஊறவைக்க வேண்டும்
மீன் சுத்தம் செய்தல்:
நன்றாக சுத்தம் செய்த மீனை, சமைக்கும் முன் தயிரில் ஒரு தடவை கழுவ வேண்டும். கல்லுப்பு ஒரு முறை போட்டு கழுவ வேண்டும். தோராயமாக 6 முதல் 8 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். மீன் கசடு எல்லாம் போகும் வரை சுத்தமாக கழுவினால் தான் கவுச்சி வாடை குழம்பில் வராது.
மசாலா அரைத்தல்:
வாணலியில் இரண்டு டீ ஸ்பூன் எண்ணை ஊற்றி சூடானதும், முதலில் அரிசியைப் போட்டு வறுக்கவும் . அரிசி பொறிந்தவுடன், கொத்தமல்லி, மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகு போட்டு வாசம் வரும்வரை அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். வாசம் வந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு, கசகசா போட்டு இறக்கி விடவும்.
லேசாக ஆறவைத்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவளை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
செய்முறை :
கழுவி வைத்த மீனை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த மசாலாவுடன், ஊறவைத்துள்ள புளியை நன்றாக கரைத்து ஊற்றவும். உடன், மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன் மற்றும் கல் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைக்க வேண்டும். இந்த கலவையில் மீன் அரை மணிநேரம் ஊற வேண்டும். ஊறிய வரை குழம்பு ருசியாக இருக்கும்.
அரை மணிநேரம் ஊறியவுடன், மீனை மட்டும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, அடுப்பில் அடி கனமாக உள்ள பெரிய பாத்திரத்தை வைக்கவும். எண்ணை 200 மில்லி கிராம் ஊற்றி நன்றாக காயவிடவும். கடுகு போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை போடவும். மீன் ஊறிய மசாலா கலவையை அதில் ஊற்றவும். அடுப்பில் அது ஒரு மணிநேரம் கொதிக்க வேண்டும். குழம்பு கெட்டியாகி எண்ணை வெளியே வரும் போது, மீனை அதில் போடவேண்டும்.
மீன் போட்டு 5 நிமிடங்களில் அடுப்பில் இருந்து இறக்கி விடவேண்டும்.
மீன் குழம்பை சற்று ஆற விட்டு சாப்பிட ருசியாக இருக்கும். இந்த குழம்பு அடுத்த நாள் இன்னும் சுவை கூடி அருமையாக இருக்கும்.
இந்த குழம்பு சாப்பாடு, இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கும்.
மீண்டும் ஓர் அருமையான உணவு செய்முறையுடன் சந்திக்கலாம்…
எனக்கு மீன் குழம்பு னா உசிரு ….செஞ்சு பாத்துட்டு சொல்றேன்..