101 – ருத்ராதித்யன்
“மழை பொழிய துவங்கிவிட்டது.. அவள் அங்கே நிச்சயம் அந்த வழிபாட்டினை துவங்கியிருப்பாள்..” என மகாராணியார் மனம் பதைபதைக்க கூறினார்.
“இனி கலக்கம் கொள்வதில் பயனில்லை மகாராணி. நாம் அனைவரும் அவளின் முயற்சி வெற்றியடைய பிரார்த்தனை புரிவோம். நரசிம்மா நீ வனதேவி ஆலயம் சென்று உனது தோழர்களுடன் இரு.. அமரா நீ ஆழ்-துளி கூட்டமிருக்குமிடம் சென்று என்ன நடக்கிறது என்று கவனித்தபடி இரு.. இளவரசி ஆருத்ரா.. உனக்கு தான் அங்கே மற்றொரு முக்கியமான வேலையிருக்கிறது. நீயும் அமரனுடன் அவ்விடம் சென்று அந்த மலைக்கு வடமேற்கு பகுதியை நன்றாக ஆராய்ந்து வா..” எனக் கூறிவிட்டு மகாராணியார் மற்றும் முதல் மந்திரியுடன் அங்கிருந்து கிளம்பினார்.
“இவர் என்ன திட்டத்தில் இருக்கிறார்?” ஆருத்ரா கேட்டாள்.
“அவரது மனதில் ஏதோ திட்டம் உதித்துவிட்டது. அவர் சொல்வதை இனி நாம் செயல்படுத்தலாம். நரசிம்மா உனது புது தோழனை ஆருத்ராவிற்கு அறிமுகம் செய்து கொண்டிரு, நான் சிறிது நேரத்தில் அங்கே வந்து இளவரசியை அழைத்து செல்கிறேன்.” எனக் கூறிவிட்டு வேகமாக வைத்தியசாலை நோக்கி சென்றான்.
இப்போது நரசிம்மனும், ஆருத்ராவும் அங்கே தனித்து நின்றிருந்தனர். அவர்களின் பார்வை ஒருவரை ஒருவர் துளைத்து உள்ளே சென்றுக் கொண்டிருந்தது.
“பிரயாணத்தில் ஆபத்து அதிகமாக இருந்ததா இளவரசே?” ஆருத்ரா பேச்சைத் தொடங்கினாள்.
“ஆபத்தில்லாத பிரயாணம் என்று ஏதும் இருக்கிறதா இளவரசி அவர்களே?” கோபத்துடன் அவனும் பதில் கொடுக்கத் தொடங்கினான்.
“தங்களை போன்ற வீரர்களுக்கு ஆபத்துகள் இல்லையென்றால் வாழ்வே முடிந்து விட்டதாக தோன்றும்..”
“வீராங்கனைகளுக்கும் அப்படி தான் அல்லவா? இப்போது உன் தங்கை சென்று ஓர் இடத்தில் அமர்ந்து நம்மை பதைபதைக்க வைக்கிறாளே..”
“அவள் மாற்று திட்டங்கள் இல்லாமல் எங்கும் எதிலும் இறங்க மாட்டாள் இளவரசே.. அவளின் முயற்சி வெற்றி கண்டால் அதன் பயன் அதிகம் தான்.” என அவனுடன் மெல்ல கைகள் உரச நடக்கத் தொடங்கினாள்.
“தோல்வியடைந்தால்?”
“அதற்கு முன் அவளை காக்க அங்கே நாம் இருப்போம். பிறகென்ன கவலை?” மெல்லிய சிரிப்புடன் ஆருத்ரா கூறியதும் நரசிம்மன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
சில நிமிடங்கள் வரை நீண்ட அணைப்பு, அமரன் அங்கே வரும் வரையிலும் முடியவில்லை. அவர்களை அந்நிலையில் கண்டவன் மென்னகைப் புரிந்தபடி சத்தம் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து வேறுபக்கம் சென்று நின்றுக் கொண்டான்.
இரு துளி கண்ணீர் அவன் கண்களில் இருந்து அவளது தோளில் உருண்டது.
“ஆதித்யரே.. என்ன இது சிறுபிள்ளை போல..” ஆருத்ரா மென்மையாகக் கண்டித்தாள்.
“உனை மிகவும் தேடினேன் ருத்ரதேவி.. கடலிலும், புதைகுழியிலும் இருந்து நான் மீண்டு வருவேன் என்றே எனக்கு நம்பிக்கை இல்லை. இறுதியாக சர்ப்ப மலையில் நான் ஒரு முழு பகலும், இரவும் மயக்கத்தில் தான் இருந்தேன். நான் தரிசிக்க சென்ற வனதேவி தான் மருத்துவம் பார்த்து எனக்கு மீண்டும் உயிர்கொடுத்து அனுப்பிவைத்தாள்.” என அவளிடம் அங்கு நடந்தவற்றை கூறியபடியே வனதேவி ஆலயம் வந்து சேர்ந்தான்.
மகதன் ஆருத்ராவை கண்டதும் ஓடி வந்து அவளை கீழே சாய்த்து மேலே படுத்து முகத்தை நாவல் நக்கினான். அதைக் கண்ட நரசிம்மன் அவனை கீழே தள்ளிவிட்டு அவளை தன் கைப்பிடியில் வைத்துக் கொண்டான். மகதனும் நரசிம்மனும் மாறி மாறி ஆருத்ராவின் அண்மைக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆருத்ரா சிரிப்புடன் அவர்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு பின்னே இருந்து தலையை மட்டும் நீட்டி எட்டி பார்க்கும் கஜயாளியைக் கண்டு பிரமித்து நின்றாள்.
அவள் அதன் அருகே மெல்ல மெல்ல நடந்து செல்ல, யாளியும் எழுந்து அவள் அருகே வந்து நின்று தனது துதிக்கையை அவள் முகத்தின் அருகே வைத்து அவளை முகர்ந்துப் பார்த்தது.
“என்னடா நடக்கிறது இங்கே? இருவரும் விளையாட இதுதான் சமயமா? ஆருத்ரா எங்கே ?” என அமரன் அங்கே வந்து கேட்டதும் தான் இருவரும் அமைதியாகி அவளைத் தேடினர்
“ருத்ரதேவி நில்.. நான் வருகிறேன்..” என நரசிம்மன் அவளருகில் ஓட, மகதன் அவனுக்கு முன்னால் யாளியிடம் சென்று அவளை அறிமுகம் செய்துவைத்தான்.
யாளி மகதனையும், நரசிம்மனையும் மாறி மாறி பார்த்துவிட்டு அமரனைப் பார்த்தது.
“அவர்கள் அப்படி தான் உரிமை போர் அடிக்கடி நடத்துவார்கள். உனது பெயரின் ஒரு பகுதி இவருடையது தான் ருத்ரவிக்னா.. ஆருத்ரா சிங்கமாதேவி.. வருங்கால மகாராணியார்.. அவரிடம் நீயும் அபிமானம் பெற்றுக் கொள்வது உனது எதிர்காலத்திற்கும் நல்லது..” எனக் கூறியபடி அருகே வந்து நரசிம்மனை பார்த்துச் சிரித்தான்.
“யுவராஜரே இது என்ன சிறுபிள்ளை விளையாட்டு ? மகதனுடன் போட்டியிடுவது முறையா?”
“அவன் எனது ராணியாரின் மேல் படுத்து கொஞ்சுவது மட்டும் முறையா?” என நரசிம்மன் கேட்டதும் ஆருத்ரா அவனது வாயை மூடினாள்.
“இந்த குணம் மட்டும் தங்களிடம் மாறாதா? குழந்தையிடம் மல்லுக்கு நிற்பதே வேலை.. மகாராஜா சொன்னதை செய்யுங்கள் முதலில்.. எனது தங்கை இல்லாமல் நமது திருமணம் நடக்காது.” எனக் கூறியவள் அமரன் கொண்டு வந்திருந்த மூங்கில் கூடையில் அமர்ந்துக் கொண்டாள்.
அமரன் அவள் அமர்ந்திருந்த கூடையை முதுகில் வைத்துக் கொண்டு பறந்து சென்றான்.
“நான் அவன் முதுகில் குரங்கு போல தொத்தி சென்றபோது எல்லாம் இவனுக்கு இந்த யோசனை வரவில்லை. தங்கை என்றால் அத்தனை பாதுகாப்பு. நான் என்றால் அத்தனை அசிரத்தை. பார்த்தாயா ருத்ரா என் நிலையை? நீயாவது எனது பக்கம் முழுதாக நிற்பாயா எப்போதும்?” என நரசிம்மன் கேட்டான்.
யாளி ஒரு நொடி ஆருத்ரா சென்ற திசையை பார்த்துவிட்டு பாதி தலையை மட்டும் ஆட்டியது.
“நீயுமா எனை மோசம் செய்தாய்? அனைவரும் பெண்பிள்ளைகளை கண்டால் ஆண்களை மறந்து விடுகிறீர்களடா.. சரி விஷயத்திற்கு வருகிறேன். மகதா நீ இங்கிருந்து ஆலயத்திற்கும், மலர்களுக்கும் காவல் புரிந்து கொண்டிரு. நானும் இவனும் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்று வருகிறோம். கவனமாக இரு..” எனக் கூறியவன் அவனது காதுகளில் சில விஷயத்தை கூறிவிட்டு அங்கிருக்கும் அடர்ந்த வானத்தின் உள்ளே யாளியுடன் நுழைந்தான்.
அங்கிருந்து சென்றவன் நேராக வனயாத்திரை ஆராய்ச்சி கூடம் சென்று யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சில பொருட்களை எடுத்து ஒரு குடுவையில் போட்டு நன்றாக ஆட்டினான். தூளாக உள்ளே சென்ற பொருள் திரவமாக மாறிக்கொண்டிருந்தது. அதனை மென்-சூட்டில் வைக்கும் விதமாக சிறிய அகல்விளக்கை எடுத்து மற்றொரு மண் விளக்கின் அடியில் வைத்து அதற்கு மேலே அந்த சிறிய குடுவையை வைத்துக் கொண்டான்.
வந்த தடம் தெரியாமல் பின்பக்கமாகவே வெளியே வந்தவன் அடர்ந்த மரங்களின் இடையே நின்றிருந்த யாளியின் மேல் வந்து ஏறினான்.
“ருத்ரவிக்னா.. உனது அதீத வேகத்தை இன்று நீ உபயோகிக்க வேண்டும். எத்தன விரைவாக வடமேற்கு பகுதியில் நுழைக்கிறோமோ அத்தனை நமக்கு சாதமான வாய்ப்புகள் அமையும். தவறினால் நமது அற்புதமான உயிரை இழக்க நேரிடும். விரைந்து செல்..” எனக் கூறிவிட்டு கெட்டியாக கயிற்றில் தன்னை கட்டிக்கொண்டு படுத்துக் கொண்டான் யாளி அம்பாரியில்..
வனதேவி ஆலயத்தில் இருந்து கிளம்பிய அமரனும், ஆருத்ராவும் இரண்டு நாழிகை முடியும் தருவாயில் அந்த கூட்டம் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகே வந்து தரையிறங்கினர்.
அந்த இடத்தில் கடும் மழை பொழிந்து முடிந்த தடம் நன்றாகவே தெரிந்தது. மரங்கள் ஆங்காங்கே சாய்ந்தும், கிளைகள் உடைந்தும் காணப்பட்டன. அருகே இருந்த அருவியில் காட்டாறு வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அருவியை தாண்டினால் வரும் மலையுச்சியில் தான் வனயாத்திரை தியானத்தில் அமர்ந்து இருக்கிறாள்.
அவளைச் சுற்றி பதினொரு பேர் அமர்ந்து அவளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவள் நிஜமாகவே ஆத்ம சக்தியை வெளிக்கொண்டு வருக்கிறாளா ? அல்லது மாயங்கள் செய்து முதல் துளியை களவாட வந்திருக்கிறாளா என்று இமை கொட்டாமல் அனைவரும் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நாட்களுக்கு முன்ன அரசகேசரியின் ஆள் ஒருவன் அந்த கூட்டத்திடம் வந்து முதல் மழை துளி பெற மாயாஜாலங்கள் செய்து ஏமாற்றப் பார்த்தான். அவன் அவர்களின் எல்லை காவல் தெய்வத்தை தாண்டமுடியாமல் அந்த நீர் துளியை கீழே தவறவிட்டு இவர்களிடம் மாட்டினான்.
அப்போதிருந்து அந்த கூட்டத்தில் கட்டுப்பாடுகளும், இதுபோன்ற மழை துளி சேகரிக்க வருபவர்களுக்கும் அதீத பரீட்சைகளும் வைத்துப் பார்த்து தான் அனுமதிக்கிறார்கள். அதிகமான தெய்வ அருள் கொண்டவர்கள் மட்டுமே அங்கிருந்து அந்த துளியுடன் வெளியேற முடியும் என்றபடியாக அவர்களது கட்டுபாடுகளும் விதிமுறைகளும் அதீதமாக இருந்தன.
அவர்களின் முக்கால்வாசி பரீட்சைகளை வென்ற யாத்திரை அவர்களின் தியானமுறை பரீட்சையில் சற்றே தடுமாறினாள். வர்மக்கலை பயிலும் போது சிங்கத்துரியன் சொல்லிக்கொடுத்த சில விஷேச முறைகளை வைத்து அவர்களின் மற்ற பரீட்சைகளையும் எப்படியோ வென்று இதோ வனதேவியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு அங்கே முதல் மழை துளியுடன் கண்மூடியமர்ந்து விட்டாள்.
பதின்பருவ மங்கையின் மனதிலும், மூளையிலும் எடுத்த காரியத்தை முடிக்கவேண்டுமென்ற வேகமும், வீரியமும் அதிகமாகவே இருந்தது. அதற்காக தனது உயிரையும் துச்சமாக மதித்து தான் இங்கே வந்து அமர்ந்து இருக்கிறாள். அவர்கள் கெடு கொடுத்திருக்கும் 8 நாழிகை நேரத்தில் அந்த மழைதுளி கெட்டியான புனித நீராக மாறவேண்டும். அப்போது தான் அங்கிருந்து செல்லமுடியும், இல்லையென்றால் அவர்களுக்கு காலத்திற்கும் எந்த விதமான கோட்பாடுகளும் இல்லாத அடிமையாக வாழ்நாளை வாழ்ந்து முடிக்க வேண்டும். சித்திரவதைகள் மூலம் தற்கொலை செய்து கொள்ள வைப்பதோ, கொல்வதோ அவர்கள் செய்வதில்லை. மாறாக அவர்கள் விதி முடியும் வரையிலும் அங்கேயே அவர்களுக்கு அடிபணிந்து வாழ்ந்தாக வேண்டும்.
அந்த கூட்டத்தினரின் அத்தனை விதமான தேவைகளையும் இப்படியான அடிமைகள் செய்யவேண்டும். அடிமைகளுக்கு அங்கே எந்த நியாயமும், தர்மமும், குறைந்தபட்ச மனிதாபிமான கோட்பாடுகள் கூட அவர்கள் வைத்துக்
கொள்வதில்லை. அவர்களை ஏமாற்றி அவர்களின் புனித நீரை களவாடியவர்களுக்கு எந்த இரக்கமும் அவர்கள் காட்டுவதில்லை.
அவர்களுக்கு என்று ஓர் எல்லைக் காவல் தெய்வமும் உண்டு. அவர்கள் கூட்டம் தங்கியிருக்கும் இடம் சுற்றி நான்கு திசைகளில் அந்த காவல் தெய்வத்தை நட்டு வணங்கி வருகின்றனர். மனிதர்கள் ஏமாந்தாலும் தெய்வங்கள் ஏமாறுவதில்லை என்பதால், மந்திரங்கள் மூலம் இவர்களை ஏமாற்றுபவர்கள் கூட அந்த காவல் தெய்வத்தின் அருகே செல்லும்போதே தடுமாறி கீழே விழுந்து புனித நீரை சிதறவிட்டு விடுகின்றனர். அப்படி இவர்களை ஏமாற்றியவர்களுக்கு தண்டைனைகள் அதீதமாக நாம் கற்பனையிலும் என்ண முடியாததாக இருக்கும்.
வனயாத்திரை தியானத்தில் அமர்ந்து 3 நாழிகை நேரம் கடந்திருந்தது. இன்னமும் அந்த மழைத் துளி கெட்டிப்பட ஆரம்பிக்கவில்லை. அதை அமரன் அரூபமாக இருந்து பார்த்துவிட்டு ஆருத்ரா இருக்குமிடம் வந்து நின்றான்.
“அவள் எத்தனை நேரம் கண்மூடி அமர்ந்தாலும் அந்த நீர் புனித நீராக கெட்டிபடாது இளவரசி. அதற்கு தனியாக தியான பயிற்சியும், மந்திர பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். நம்மிடம் ஏதும் கூறாமல் இவள் இங்கே வந்து அமர்ந்திருக்கிறாள். இங்கிருந்து அவளைப் பாதுகாப்பாக அழைத்து செல்வது சற்று கடினம் தான்.”
“நமது ஒப்பந்த அடிப்படையில் நாம் அங்கே போர் செய்யவும் முடியாது…” ஆருத்ராவும் சிந்தித்தபடி இருந்தவள், “மகாராஜா தங்களிடம் என்ன கூறினார்?” எனக் கேட்டாள்.
அவர் நரசிம்மனிடம் ஒரு குறிப்பை கொடுக்கும்படி கூறினார். அதை கொடுத்துவிட்டு தான் வந்தேன்.
“சரி அவர் வரட்டும் அதுவரை நாம் மகாராஜா கூறிய இடங்களை ஆராயலாம் வாருங்கள்..” என அவள் கூடையில் நின்றுக் கொண்டு நிலத்தினைப் பார்க்க ஏதுவாக மறைப்பை மடக்கிக் கொண்டாள்.
அமரனும் அவள் பார்வைக்கு ஏற்றவாறு மெல்ல பறந்து கொண்டிருந்தான். அப்போது வடமேற்கு மலையடிவாரத்தில் சிவப்பாக ஏதோ மிளிர்ந்தது.

