100 – ருத்ராதித்யன்
அமரபுசங்கரும், நரசிம்மனும் வனயாத்திரை இருந்த ஆராய்ச்சி கூடம் வந்து சேர்ந்தனர். அமரர் காற்றில் மற்றவர்களையும் தூக்கி பறக்க கற்றுக் கொண்டிருந்ததால், அதிக எடை கொண்ட நரசிம்மனை இப்போது தூக்கி கொண்டு பத்து நிமிடத்தில் அந்த ஆராய்ச்சி கூடத்திற்கு சற்று முன்பு இறங்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.
“இளவலாரே.. நன்றாகவே பறக்க கற்றுக் கொண்டீர். எனையும் சுமந்து பறப்பது எப்படி இருந்தது?” ஆச்சரியம் குறையாமல் கேட்டான்.
“உனை சுமந்து பறந்தபோது எனது வேகம் குறைந்தது யுவராஜா.. ஆனால் நல்ல சமமான எடையுடன் பறந்ததால், என்னால் இன்னும் எனை நிலைப்படுத்தி பறந்து வர முடிந்தது. திசை மாறவில்லை, கண்களும் தெளிவாக காட்சிகளை உள்வாங்கியது. இந்த வேகத்தில் பொதுவாக பறக்க தொடங்கினால், பல விஷயங்களை இனி கற்றுக்கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் பறக்கும் போது எனது உடல் மறைந்து விடுவது கண்டு உனது மனதில் தோன்றிய எண்ணம் என்ன?” என சிரிப்புடன் கேட்டான் அமரன்.
“நானே பறப்பது போல உணர்ந்தேன் இளவலாரே.. ஆனால் எனை முதுகில் சுமந்து வந்ததால் சற்றே குரங்கினைப் போல தெரிந்தேன்.” எனக் கூறி வாய்விட்டு சிரித்தான்.
“நீ இப்படி சிரிப்பதைக் கண்டு பல வருடங்கள் ஆனது நரசிம்மா.. சரி நமது கொடுங்கோல் அரசி இங்கே என்ன என்ன செய்திருக்கிறாள் என்று பார்ப்போம் வா. நிச்சயமாக நமது நெஞ்சத்தினை அசைத்து பார்க்கும்படி ஏதேனும் வைத்திருப்பாள்..” என அமரபுசங்கர் சொல்லியபடியே கதவின் அருகே இருந்த வீரனுக்கு செய்கை செய்தான்.
அவனும் உடனே அந்த பெருங்கதவினை திறந்துவிட்டு தலைவணங்கி நின்றான்.
“இத்தனை பெரிய இடமா கொடுத்திருக்கிறார்கள்? எனது ஆராய்ச்சி கூடத்திற்கு நான் எத்தனை பேசி அந்த இடத்தினை கட்டுமானம் செய்தேன் தெரியுமா? ஆனாலும் இவளின் வாய்ஜாலத்தில் மகாராஜாவும், மகாராணியாரும் இத்தனை மயங்க கூடாது..” என அந்த இடத்தின் விஸ்தீனத்தைக் கண்டு நரசிம்மன் பொறுமினான்.
“ருத்ரக்கோட்டையில் இவளுக்கு இந்த சலுகை கிடைக்காது என்பதால் தான் இங்கே வந்து கொட்டாரம் அமைத்து தங்கியிருக்கிறாள் எனது அழிச்சாட்டிய தங்கை. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது நரசிம்மா. இவளை விட்டால் இந்த பேரரசையே வாய்ஜாலத்தில் வென்று முடி சூடிக் கொள்வாள்.”
“ஹாஹாஹாஹா.. உண்மை தான். இப்போது கூட ஆயுதம் கொண்டு வெல்லவும் அவளுக்கு நல்ல உரம் இருக்கிறது இளவலாரே.. சூட்டிகையாக திரிந்தாலும், காரியத்தில் கண்ணாக இருக்கிறாள்.. அங்கே பாருங்கள் எனது ஆராய்ச்சி கூடத்தை போன்ற பிரதியை இங்கே ஏற்படுத்தி இருக்கிறாள்..” என வலது திசையைக் காட்டினான்.
“கிடைக்கும் அறிவினையும், வளங்களையும் நன்றாக உபயோகிக்க தெரிந்து வைத்திருக்கிறாள். சரி இவள் எங்கே சென்றாள் என்று பார்ப்போமா?”
“நீங்கள் வைத்தியர்களிடம் விசாரியுங்கள் நான் எல்லா இடத்தினையும் சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன்.” என அவன் தனியாக சென்றான்.
அமரபுசங்கரை கண்டதும் வனயாத்திரையின் உதவிக்கு வைத்த ஆட்கள் அவ்விடம் ஓடி வந்தனர்.
“வணங்குகிறோம் அரசே.. இளவரசியார் நேற்று மாலை கானகம் சென்றார் இன்னும் வந்து சேரவில்லை என்று தான் தகவல் கொடுத்தோம்..” என ஒருவர் ஆரம்பித்தார்.
“இளவரசியார் எப்போதும் தனியாக செல்வாரா?”
“ஆமாம் அரசே.. சென்றால் ஒரு நாளுக்குள் திரும்பிவிடுவார். இல்லையேல் எங்களுக்கு தகவல் அனுப்பிவிடுவார். நேற்றிலிருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை என்றதால் தான் பயந்து இருக்கிறோம்.”
“சரி.. என்ன என்ன ஆராய்ச்சிகள் இங்கே நடக்கின்றன?” என அமரபுசங்கன் கேட்டதும் அனைவரும் பதில் கூறாமல் அமைதியாக தலைக்கவிழ்ந்து நின்றனர்.
“பதில் கூறுங்கள்..”
“எங்களுக்கு இன்னதென்று முழுதாக தெரியாது அரசே. அவர் கூறும்படி பொருட்களை சுத்திகரிப்பது மட்டுமே எங்கள் வேலை. நாங்கள் யாரும் கூடத்தில் நுழைய அனுமதியில்லை. அனைத்து வேலைகளும் அவர் மட்டுமே செய்வார். பொருட்களை சேர்ப்பதும், அதை பதப்படுத்தி சுத்திகரிப்பதும் மட்டுமே எங்கள் அனைவரின் வேலை.. பேரரசர் உத்தரவு..” எனக் கூறி அனைவரும் அமைதியாக நின்றனர்.
“மிகச்சிறப்பாக இந்த இடம் அமைக்கப்பட்டிருக்கிறது.. சிங்கத்துரியன் கடைசியாக எப்போது இங்கே வந்தார்?” எனக் கேட்டபடி நரசிம்மன் அங்கே வந்து நின்றான்.
“அவர் இங்கே வந்து சென்று பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது யுவராஜரே.. மகாராணியார் மட்டுமே சமீபமாக வந்து சென்றார்..” எனக் கூறினர்.
“சரி.. இளவரசி எந்த பக்கமாக சென்றார்?”
“மேற்கு பக்கமாக சென்றார். ஆனால் உள்ளே நுழைந்த பின் எந்த திசையில் சென்றார் என்று தெரியவில்லை அரசே..”
“சரி நீங்கள் உங்களுக்கு இடப்பட்ட பணிகளை பாருங்கள்..” என நரசிம்மன் கூறிவிட்டு அந்த ஆராய்ச்சி கூடத்தை விட்டு வெளியே வந்தான்.
“என்ன விஷயம் நரசிம்மா?” அமரன் அவனை பின்தொடர்ந்து வந்து கேட்டான்.
“குடுவையில் மனிதனை பிறப்பெடுக்க வைக்க முயற்சி செய்கிறாள். ஆனால் பத்து நாட்களில் கரு களைந்து விடுகிறது. அதனைப் பற்றி அறிந்து கொள்ளத் தான் எங்கேனும் சென்றிருக்க வேண்டும். நமது மலை பகுதிகளில் யாரெல்லாம் வசிக்கிறார்கள்?”
“மலை கிராம வாசிகள் இருப்பார்கள்..”
“அவர்கள் இல்லாமல் நமது சட்டங்களுக்கு உட்படாத பழங்குடி மக்கள் கூட்டம் இந்த மேற்கு தொடரில் எத்தனை இருக்கிறது என்பதனை அறியவேண்டும் இளவலாரே..” என நரசிம்மன் கூறியதும் அதன் பொருள் வீரியத்தை உணர்ந்த அமரன், “யாத்திரை.. யாத்திரை.. உனை பார்த்த பிறகு பேசிக் கொள்கிறேனடி.. எங்களை தவிப்பில் ஆழ்த்துவதே இவளின் பெரும்பான்மையான வேலை..” என முனகியபடி நரசிம்மனை தூக்கிக் கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தான்.
“வாருங்கள் அவள் எங்கே?” என மகாராணியார் ஆவலுடன் ஓடி வந்து கேட்டார்.
“தாங்கள் அவளிடம் என்னென்ன வளங்கள் எங்கெங்கே, எப்போது கிடைக்கும் என்பதெல்லாம் கூறினீர்களா?” எனக் கேட்டபடி நரசிம்மன் அவரை தனது அறைக்கு அழைத்து சென்றான்.
“பொதுவாக அவள் இந்த ஆராய்ச்சியை தொடங்கியபின் பார்க்கும்போதெல்லாம் நிறைய விஷயங்களை கூறியிருக்கிறேன.. நீ எதை பற்றி கேட்கிறாய்?”
“பழங்குடி மக்கள் பற்றி.. அவர்கள் இருப்பிடம் மற்றும் அவர்களின் வளங்கள், தனி திறமைகள் பற்றி கூறினீர்களா?” என நரசிம்மன் கேட்டதும் மகாராணியார் திடுக்கிட்டு பார்த்தார்.
“அதை பற்றி நான் கூறவே இல்லையே நரசிம்மா.. அவளின் துடுக்குத்தனம் அறிந்ததால் நமது கட்டுக்குள் இருக்கும் இடங்கள் பற்றி மட்டுமே கோடிட்டு காட்டினேன்.”
“அவள் புத்திசாலி மகாராணி அவர்களே.. அந்த குகை, இவனின் மாற்றம், சிங்கத்துரியனின் ஞானம், வனதேவியின் அருள் அவளை அங்கே அழைத்து சென்று இருக்கிறது..” எனக் கூறியபடி மகாராஜா அங்கே வந்தார்.
“இறைவா.. அந்த கூட்டத்திடம் சிக்கினால் இவள் எப்படி முழுதாக வெளியே வருவாள்? அவர்கள் சாமனியர்கள் இல்லையே.. தந்திரம் செய்தும் தப்பிக்க முடியாதே.. என் குழந்தையை எப்படி அங்கிருந்து மீட்பது?” என தாயாக பரிதவித்தார்.
“வணக்கம் அரசே.. இளவரசி ஆருத்ரா சிங்கமாதேவி வந்திருக்கிறார்.. உள்ளே வர அனுமதி கேட்டு இருக்கிறார்..”
“வரச்சொல்.. முதல் மந்திரியாருக்கு அழைப்பு கொடு. அவர் வந்தபின் யாரும் இந்த பக்கம் வரக்கூடாது..” என வரத யோகேந்திரர் கட்டளையிட்டார்.
“உத்தரவு அரசே..” என வீரன் சென்றதும், ஆருத்ரா வேடர்களை போல வேடமணிந்து காலை நொண்டியபடி உள்ளே வந்தாள்.
“மகளே என்னவாயிற்று?”
பின்னால் கதவு முழுதாக மூடியதும் நன்றாக நடந்து வந்து அனைவரையும் நமஸ்கரித்தாள்.
“என்ன நாடகம் மகளே இது?”
“சேயோன் முன்னே ஆரம்பித்த நாடகம் அரசே. நமக்கான விஷயங்கள் நமது கைகளுக்கு கிடைக்கும் வரையிலும் தொடரவேண்டும். யுவராஜருக்கு எனது வாழ்த்துகள்..” எனக் கூறிவிட்டு அமரன் அருகே சென்று அவன் நலம் விசாரித்தாள்.
“என்னருகே வந்து நலம் விசாரிக்க முடியவில்லை உடனே அவளது தமையனிடம் ஓடுகிறாள். இவளுக்காக நான் எத்தனை ஏங்கி தவித்து இந்த பயணத்தை முடித்து வந்திருக்கிறேன். அதைப் பற்றி கேட்கவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை..” என அவன் வாயிற்குள் முனகுவது அங்கிருந்த அனைவருக்கும் நன்றாகவே கேட்டது.
அப்போது முதல் மந்திரி அங்கே வந்து சேர்ந்தார். அவர் உள்ளே வந்த பின் நரசிம்மன் அனைவரையும் தனது அந்தரங்க அறைக்கு அங்கிருந்து சுரங்கம் வழியாக அழைத்து சென்றான்.
“வனயாத்திரை வரவில்லையா தமையரே ?”
“அவளை மீட்க தான் நாம் செல்ல வேண்டும்..”
“ஏன்? யார் அவளை கவர்ந்து சென்றது?” சினத்துடன் வினவினாள்.
“உன் தங்கை என்ன சிறு குழந்தையா யாரும் கவர்ந்து செல்ல? அவளாகவே சென்று ஓர் இடத்தில் தன்னை ஒப்படைத்து அமர்ந்திருக்கிறாள்..”
“விவரமாக கூறுங்கள் யுவராஜரே..”
அதன்பின் அமரபுசங்கரும், நரசிம்மனும் அவர்கள் சென்று கண்டதையும், எங்கே சென்றிருப்பாள் என்று யூகித்து வைத்திருப்பதையும் கூறினர்.
“அவள் அந்த ஆழ்-துளி கூட்டத்தில் தான் இருப்பாள் என்று எங்ஙனம் முடிவுக்கு வந்தீர்கள் யுவராஜரே?”
“அவளின் ஆராய்ச்சியும் அதில் ஏற்படும் தோல்விகளும் அவளை அங்கே தான் அழைத்து சென்றிருக்கும் என்பது எனது எண்ணம் இளவரசி. தங்களின் செல்ல தங்கை தங்களிடம் இதனை பற்றி ஏதேனும் உரையாடியிருக்கிறாளா?” என நரசிம்மன் ஓர் புருவத்தை உயர்த்தி அவளிடம் வம்பு வளர்க்கும் விதமாக கேள்வி கேட்டான்.
“அவள் என்னிடம் பல பழங்குடியினரை பற்றி பேசியிருக்கிறாள். இவர்களிடம் என்ன தனி சிறப்பு இருக்கிறது என்பதை நான் அறியலாமா?”
“சதை பிண்டத்தை உயிராக மாற்றும் சக்தி அவர்களின் இருப்பிடத்தில் தான் அமைந்திருக்கிறது மகளே..” மகாராஜா கூறினார்.
“அங்கே சக்தியின் சிலை இருக்கிறதா மகாராஜா?” என ஆவலுடன் கேட்டாள் ஆருத்ரா.
“இல்லை.. அங்கே விண்ணில் இருந்து விழும் முதல் மழைத்துளி திடமான நீர் போல ஒரு வருடம் காலம் வரையிலும் நிலைக்கொண்டிருக்கும். ஓர் வருடம் முடிந்தபின் வரும் பஞ்சமி திதியில், அவர்கள் கூட்டத்தில் இறப்பை நோக்கி செல்லும் இளம் வயதினருக்கு கொடுத்து, அவர்களின் ஆத்மாவை அவ்வுடலில் சிறிது காலம் தங்க வைப்பார்கள். குறிப்பிட்ட கால கெடுவில் அந்த உடல் ஆரோக்கியம் பெருக தொடங்கினால் அவர்களின் ஆயில் மூன்று மடங்காக பெருகும்.”
“சதை பிண்டத்திற்கு ஆத்மா ஏது?” அமரன் கேட்டான்.
“அதற்கும் அங்கே ஓர் வழிபாடு உள்ளது மகனே.. அந்த பிண்டத்திற்கு தனது ஆத்மாவின் ஒரு பகுதியை கொடுக்க முடியும். அதற்கு இந்த மாதத்தின் முதல் மழைத்துளி சென்று விழும் இடத்தை அவள் கண்டறிந்து அந்த நீரானது திடப்படும் பொழுது அதனை தனது மூலாதாரத்தின் அருகே வைத்து குறிப்பிட்ட நேரம் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட வேண்டும். அந்த நீரில் அவர்களின் ஆத்ம பகுதி உள்நுழைந்தால் நீல நிறத்தில் லேசாக மிளிரும். இல்லையென்றால் அவளின் உடலில் இருந்து பிரிந்த ஆத்ம பகுதி மீண்டும் அவளுடல் சேர முடியாமல் அந்த நீரில் சிவப்பாக மாறி நிலத்தில் கலந்து விடும். அப்படி அந்த முயற்சி தோல்வியுற்றால் அவள், இந்த பிறவி முழுதும் அந்த கூட்டத்தின் கைதியாக மாற்றப்படுவாள். யாராலும் அவளை அங்கிருந்து மீட்கமுடியாது. அவளும் அங்கிருந்து நகர முடியாது..” என முதல்மந்திரி மனம் தடதடக்க கூறினார்.
நரசிம்மனும், ஆருத்ராவும் ஒருவரை ஒருவர் காணும்பொழுதே மழை பெய்ய தொடங்கியது.
இவர்கள் இதெல்லாம் பேசும் நேரத்தில் அங்கே வனயாத்திரை ஆழ்-துளி பழங்குடியினரின் உதவியுடன் முதல் மழைத்துளியைக் கண்டு, சிப்பி போன்ற இலையில் வைத்து, தனது தியானத்தைத் தொடங்கியிருந்தாள்…