99 – ருத்ராதித்யன்
சேயோன் நேரடியாக இப்படி வந்து சிக்கியதில் பெரும் பதற்றத்தில் இருந்தான் ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண்பித்துக் கொள்ளவில்லை. மிகவும் சாதாரணமாக, சகல பரிவாரங்களுடன் வேட்டையாட வந்த இளவரசனைப் போல நின்றிருந்தான்.
ஆருத்ரா இரண்டு சமஸ்தான எல்லைக்கோட்டை காவலர்களையும் சேர்த்து அந்த கயவர்களை பகுதி பகுதியாக பிரித்து சிறையில் வைக்க கட்டளையிட்டுவிட்டு சேயோன் முன்னே வந்து அமர்ந்தாள்.
அவள் கண்களில் நெருப்பு எரிவது அவனுக்கு பார்க்காமலே தெரிந்தது. இவளை சமாளித்து இன்று இரவே இங்கிருந்து கடல் வழியாக தப்பிக்க சிந்தனை செய்து கொண்டிருந்தான்.
“என்ன சேயோன் அவர்களே மிகுந்த சிந்தனையில் இருக்கிறீர்கள் போலவே?” என அவனைப் பார்த்து கேட்டபடி தனது சுருள் வாளை அருகே இருந்த மேஜையில் வைத்தாள்.
காவலர் உடையில் இருந்தாலும் ஆருத்ராவின் அழகும், கம்பீரமும் சேயோனை சித்தம் கலங்க செய்துக் கொண்டிருந்தது.
‘இவள் மட்டும் நமது அரசரின் மனைவியானால் நமது பலம் பலமடங்கு அதிகரிக்கும். ஆனால் இவளும் நேர்மை தர்மம் கடமை என்னும் கடின வழியில் நடப்பவள். நமது திட்டங்களுக்கு எப்போதும் இடையூறு தான்..’ என்று என மனதில் நினைத்தபடி அவளிடம் பதில் கூற தயாரானான்.
“ருத்ர கோட்டை இளவரசியார் எனை கொள்ளைக்காரனைப் போல பிடித்து நடத்துகிறீர்.. நான் வழக்கம் போலவே எனது விடுமுறை நாட்களை கொண்டாட கீழ்காட்டு கோட்டை வந்திருக்கிறேன். இங்கே வேட்டையாடுவதும் வழக்கம் தான். அதை ஏனோ நான் பெரும் குற்றம் இழைத்ததை போல தாங்கள் என் வீரர்களையும், நண்பர்களையும் பிடித்துவைத்து சிறை வைப்பது தங்களது அரச கௌரவத்திற்கு அழகல்ல..”
“ஹாஹாஹா.. அரச கௌரவமா? மற்றொரு சமஸ்தான எல்லைக்குள் அனுமதியில்லாமல் நுழைந்து, வேட்டையாடக் கூடாது என்ற அரச கட்டளையை மீறி வேட்டையாடிய உங்களை நான் வேறு எப்படி நடத்தவேண்டுமாம்? ஆதித்ய பேரரசர் இட்ட கட்டளைக்கு உங்கள் விஸ்வக்கோட்டை சமஸ்தானம் செய்யும் மரியாதை இது தானா? அரசவை மந்திரியின் மகன் என்றால் மட்டும் உங்களை விட்டு விட முடியுமா?” சிங்கமாதேவி அவனைப் பார்த்து குரல் அதிராமல் கேட்ட விதத்தில் சேயோன் மனதில் பயம் பெருகத் தொடங்கியது.
“யாரங்கே விசிறியை இயக்கச்சொல்.. அரசவை அதிகாரக்கு வியர்க்கிறது பார்..” என அவன் நெற்றியில் துளிர்த்த வியர்வையைக் கண்டு கட்டளையிட்டாள்.
“நான் நிஜமாக விடுமுறை..” என அவன் மீண்டும் அதையே கூற ஆரம்பிக்க, குறுவாள் ஒன்று அவனது கழுத்தை நோக்கி பறந்து வந்தது. அதை நொடியில் ஆருத்ரா தனது குறுவாளினால் தட்டிவிட்டு சேயோனை பத்திரமாக பூட்டி வைக்க சொல்லிவிட்டு வெளியே ஓடினாள்.
அது ருத்ரக்கோட்டை சமஸ்தானத்தின் எல்லைக் காவல் வீரர்கள் இருக்கும் சிறிய கோட்டை. அங்கிருந்து இருவர் வேகமாக ஓடுவதைக் கண்ட ஆருத்ரா, தனது சுருள் வாலினை வீசி ஒருவனது காலை பிடித்து இழுத்தாள். மற்றவன் அவளுக்கு இடது பக்கம் சென்று காட்டினில் மறைந்து விட்டான்.
“இவனை உள்ளே கட்டி வைத்து வைத்தியம் பாருங்கள் வந்து விடுகிறேன். நான்கு பேர் என்னுடன் வரலாம்..” என அவரசமாக கூறி வேகமாக அவளும் அந்த காட்டில் நுழைந்து ஓடினாள்.
மரங்களை எல்லாம் சாதாரண புற்களைப் போல எண்ணி அவன் ஓடிக் கொண்டிருக்க, ஆருத்ரா மரத்தின் மீதிருக்கும் பரண் மீதேறி அங்கிருந்து மரத்திற்கு மரம் நடந்தும், தாவியும் சென்று கொண்டிருந்தாள்.
ஒடுபவன் கருப்பு நிறத்தில் உடையணிந்திருந்தான். அவனது உயரமும், எடையும் சராசரிக்கும் சற்று குறைவாகவே இருந்தது. சாதாரண மக்கள் கூட்டத்தில் இவன் கலந்து விட்டால் இவனை நிச்சயாமாக பிடிக்கமுடியாது.
இந்த எண்ணம் மனதில் எழுந்ததும் தான் அவன் ஓடும் பாதையை உற்று கவனித்தாள். இன்னும் சில நிமிடங்களில் கீழ்க்காட்டு கோட்டை சமஸ்தானத்தின் பரதவர் வாழும் பகுதி வந்துவிடும். இந்த பரதவர் பகுதியில் இருந்து இரண்டு சமஸ்தான எல்லைகளையும் கவனிக்கலாம்.
அடுத்தடுத்து அவனது ஓட்டத்தின் பின்னே மனதிலெழுந்த எண்ணங்களை எல்லாம் கணக்கிட்டு பார்த்தவள் அவன் அந்த பகுதிக்குள் நுழையும் முன்னே பிடிக்க வேகமாக மரங்களில் அவன் மீது ஒரு கண்ணை வைத்தபடியே ஓடினாள்.
அப்போது அவளுக்கு முன்னே பஞ்சவர்ண கிளி ஒன்று முன்னே அவளுடன் பறந்து வந்தது. அதைக் கண்டவள் நொடியில் அதனிடம் அதன் பாஷையில் சில விஷயங்களைக் கூறிவிட்டு பின்னே தேங்கி நின்று சட்டென மரத்தில் இருந்து கீழே விழுந்தாள்.
முன்னால் ஓடியவன் ஒரு நொடி அவள் கீழே விழுந்து கால்களை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு, அவனது கண்களில் ஓர் ஆசுவாசம் வந்தது. அவளுக்கு பதிலாக அந்த பஞ்சவர்ண கிளி அவனுக்கு முன்னே பறந்து சென்றுக் கொண்டிருந்தது.
ஆருத்ராவின் பின்னால் வந்த வீரர்கள் அவள் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அவளை தூக்கிக் கொண்டு எல்லை காவல் கோட்டைக்கு சென்றனர். அவள் வரும்போது மக்கள் நடமாடும் வழியாக சுமந்து கொண்டு சென்றனர்.
பல முணுமுணுப்புகள் அதன்பின் எழுந்து காற்றிலே கலந்து இரண்டு சமஸ்தானத்திற்கும் சென்றது.
சேயோன் முன்னே மீண்டும் அவள் கால்களில் கட்டிட்டுக் கொண்டு அவனை விசாரிக்க அமர்ந்தாள்.
“என்ன சேயோன் அவர்களே தங்களின் எஜமானர் தாங்கள் சிக்கியதும் தங்களை தீர்த்துக் கட்ட ஆட்களையும் பின்னோடே அனுப்பி வைக்கும் வழக்கம் கொண்டவரோ?” என நக்கலாகக் கேட்டாள்.
“வீர சாகசங்கள் செய்து எனைக் காப்பாற்றிய ருத்ரக்கோட்டை இளவரசிக்கு எனது நன்றிகள். தங்களின் வீரத்தை பற்றி கேள்வியுற்றுயிருக்கிறேன். இன்று தங்களது கைகள் எனது சாவினை தள்ளிப் போட்டிருக்கிறது. நிச்சயம் அதற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.”
“நன்றிக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் விஸ்வக்கோட்டையில் இன்னும் இருக்கிறார்களா என்ன? மாற்றான் உட்புகுந்து சூறையாடிய சமஸ்தானத்தை மீட்டெடுத்து, மீண்டும் உடையவர் கைகளில் ஒப்படைத்த ஆதித்ய பேரரசுக்கு அந்த நன்றியில் சிறிது காட்டியிருந்தால் இங்கே இப்படி இத்தனை நூறு மிருகங்களை நீங்கள் வேட்டையாடியிருக்க மாட்டீர்கள்..” ஆருத்ரா தனது கைகளில் இருந்த காயத்திற்கு மருந்து வைத்தபடி ஏளன சிரிப்புடன் கூறினாள்.
சேயோன் ஒரு கணம் மனதில் திடுக்கிட்டு அவளை ஆழ்ந்துப் பார்த்தான். எத்தனை திசைதிருப்பும் நாடகங்கள் ஆடினாலும் இவள் மீண்டும் ஆரம்பத்தில் கேட்ட கேள்வியிலேயே வந்து நிற்பதுக் கண்டு அவன் குழம்பிப் போனான்.
இவன் ஒரு சதி செய்து தப்பிக்க நினைத்தால், இவளும் அதே சூழ்ச்சியில் பிரயாணம் செய்து ஏதும் அறியாதவள் போல நடப்பது சேயோன் மூளையில் ஆபத்தின் வீரியம் அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. இனி இவளுடன் மிகவும் பார்த்து பேசவேண்டும் என்று முடிவெடுத்தவன், அவள் முன்னே அடுத்த நாடகம் இயற்ற தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
“நான் கூறுவது அனைத்தும் பொய் என்ற ரீதியில் பார்த்தால் இளவரசிக்கு அனைத்துமே பொய்யாக தான் தெரியும். நான் உண்மையை மட்டுமே பேசுவேன் என்பது எங்களது கோட்டையில் அனைவரும் அறிவர். இங்கே யாருக்கும் எனது குணநலன்கள் வந்து சேரவில்லை என்பதால் நான் பொய் பேசுகிறேன் என்று அர்த்தமாகாது தேவி அவர்களே..”
“உனை கொல்ல வந்தவன் பற்றி உனக்கு தெரியுமா?”
“நீங்கள் தானே அவனை பிடிக்க ஓடி காலில் கட்டுடன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். அவன் யார்? எதற்காக எனை கொல்ல வந்தான் என்பதும் தாங்கள் கூறினால் அல்லவா எனக்கும் தெரியும்..”
“சரி.. உங்களை ஆதித்ய அரசவையில் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இன்று இரவு இங்கிருந்து கிளம்ப தயாராக இருங்கள்..” எனக் கூறியவள் மெல்ல கால்களை ஊன்றி நடந்து சென்றாள். அவள் கால் வழியே வழிந்த உதிரம் கண்டு சேயோன் வதனம் மென்னகை பூசிக் கொண்டது.
வனயாத்திரை மிகவும் மும்முரமாக திசுக்கள் வளர உதவும் அந்த மூலிகை கொடியினை அரைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாழிகைக்கு ஒருமுறை என அந்த பெரிய குடுவையில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
பொதுவாக ஒரு குழந்தை பெண்ணின் கருவில் உருவாக பத்து மாதங்கள் எடுக்கும். மனிதர்களின் ரத்த மாதிரிகளும், நல்ல ஆரோக்கியமான கருமுட்டையுடன், விந்தை இணைத்து கருவை உருவாக்கி, உருவான கருவை வளர்க்க, மூலிகைகள் மற்றும் சில வேர்களைக் கொண்டு உருவாக்கிய குடுவையில், பல மூலிகை கலவைகளுடன் சேர்த்து சரியான கால இடைவேளையில், அந்த கரு வளர தேவையான அனைத்து சுத்திகரிக்கப்பட்ட அற்புதம் வாய்ந்த மூலிகை சாறுகளை எல்லாம் அவ்வப்போது கொடுத்துக் கொண்டே வந்தால், மனிதனின் உடலில்லாமலே ஓர் உயிரை உருவாக்கலாம் என்ற முயற்சியில் இருக்கிறாள் வனயாத்திரை.
வனதேவியின் ஆராய்ச்சி கட்டுரைகளோடு, சிங்கத்துரியனின் வழிகாட்டுதலும் அவளுக்கு பெரும் கனவை நனவாக்கும் ஆற்றலை கொடுத்திருந்தாலும், ஏதோ ஒன்று அவளை வெற்றியடைய முடியாமல் தடுக்கிறது.
இருபதாவது முறையாக மீண்டும் அந்த கரு கலைந்து போனது. வனயாத்திரையும் தோல்வியுற்ற ஆத்திரத்தை தீர்க்க வேகமாக அங்கிருந்து வெளியேறி அடர்ந்த கானகத்தில் புகுந்து கொண்டாள். அவளின் உதவிக்கு என்று இருந்தவர்கள், மாலை சென்றவள் அடுத்த நாள் மாலை வரை வராமல் போகவும் பயந்துபோய் அரசியாருக்கு தகவல் அனுப்பினர்.
“என்ன நேற்று சென்றவள் இன்னும் வரவில்லையா? இத்தனை ஆசிரத்தையாகவா இருப்பது? உடனடியாக கானகம் முழுவதும் தேட ஆட்களை அனுப்புங்கள்..” என கட்டளையிட்டவர் அரசாரைக் காண வேகமாக சென்று கொண்டிருந்தார்.
“என்ன தாயே இத்தனை வேகமாக எங்கே செல்கிறீர்கள்?” எதிரில் வந்த அமரன் கேட்டான்.
“வனயாத்திரை நேற்று மாலை கானகம் சென்றவள் இப்பொழுது வரை திரும்பவில்லையாம் அமரா.. மீண்டும் அவளது ஆராய்ச்சி தோல்வியடைந்த விரக்தியில் நேற்று கானகம் சென்று இருக்கிறாள். என்ன தான் ஆற்றலும் வல்லமையும் கொண்டவளாக அவள் இருந்தாலும், சிறு பெண் தானே.. பதினைந்து அகவையில் இத்தனை பெரிய விஷயங்களை செய்வதை விட பெரிய தோல்விகளை தாங்கவும் அவளுக்கு பக்குவம் வேண்டுமே.. சென்ற முறை நான் அவளை கண்டபோதே பைத்தியக்காரியை போல தான் இருந்தாள்.. என் மனம் ஒரு நிலையில் இல்லை மகனே. அரசரிடம் கூறி சிறப்பு படையை அனுப்ப கோரிக்கை வைக்க போகிறேன்..”
“அம்மா.. நாங்கள் இருவரும் இங்கே இருக்கையில் தாங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்? நானும் அமரரும் அவளை அழைத்து வருகிறோம். நான் அரண்மனை திரும்பியதாக செய்தியனுப்பியும் அக்காளும், தங்கையும் இன்னும் எனை வந்து காணவில்லை. நானே நேரடியாக அவளிடம் சண்டையிடப் போகிறேன்..” எனக் கூறிவிட்டு நரசிம்மன் கிளம்பினான்.
“கவலை வேண்டாம் அம்மா. அவளுக்கு ஒன்றும் ஆகாது.. அவளால் தான் மற்றவருக்கு ஆபத்து வரும். அப்படி அவள் ஏதேனும் ஆபத்தில் சிக்கியிருந்தால், அவளை அதில் சிக்க வைத்தவர்களின் நிலையை பற்றி தான் தாங்கள் கவலை கொள்ள வேண்டும். அவளுடன் விரைவில் இருவரும் வருகிறோம். ஆருத்ரா சேயோனை கைது செய்து கொண்டு வருவதாக செய்தி வந்திருக்கிறது. அவனை மீட்க அவன் தந்தையும் இங்கே வருவதாக கேள்வி. தாங்கள் அதை கவனியுங்கள்.” என இருவரும் அவரிடம் விடைப்பெற்று கிளம்பினர்.
அடர்ந்த கானகத்தில் நுழைந்த வனயாத்திரை, வெகுதூரம் நடந்தபடியால் சோர்வுற்று ஓர் இடத்தில் அமர்ந்தாள். அது ஆதிப் பழங்குடியினர் வாழும் பகுதி. இலைகளை ஆடையாக உடுத்தி, அதீத கண்டிப்பு நெறி கொண்டவர்கள். இன்றும் அவர்களின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வாழும் ஒரு சிறிய கூட்டத்தினர். மலைகளில் அசாரதணமாக உலாவும் மலை கிராம வாசிகளை கூட தங்கள் கூட்டத்திடம் அந்த விடாமல் தனி எல்லை வகுத்து வாழ்ந்து வருபவர்கள். யாரேனும் உள்ளே நுழைந்தால், அங்கிருந்து மீள்வது என்பது கனவிலும் நினைக்க முடியாது.
அப்படிப்பட்ட கூட்டத்தின் மத்தியில் தலைவரின் ஆசனத்திற்கு அருகே சமமாக அமர்ந்து பானம் பருகிக் கொண்டிருந்தால் வனயாத்திரை.