98 – ருத்ராதித்யன்
நரசிம்மன் எழுந்து குழந்தை வடிவாக நின்ற வனதேவியை வணங்கிவிட்டு பிரயாணத்திற்கு ஏதுவாக, பெற்ற மலர்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து, மெல்லிய பருத்தி துணியில் நன்றாக சுற்றிக் கொண்டு, அதனை மூங்கிலில் அடைத்து யாளியின் மேலே வைத்தான். யாளியின் கழுத்தை சுற்றிலும் ஏற்கனவே கட்டியிருந்த வேரினை நீக்கி புது வேரை யாளியின் கழுத்தை சுற்றிலும் கட்டினான். யாளி எத்தனை வேகமாக சென்றாலும், அதன் மேல் அமர்பவர்கள் கீழே விழாமல் இருக்க ஏதுவாக அதன் உடலில் முன்னும் பின்னுமாக சுற்றிலும் கொடிகளையும், சில மரக்கட்டைகளையும் கட்டி அம்பாரி போல ஏற்படுத்தினான். அதற்கு நடுவே மகதனும், நரசிம்மனும் அமர்ந்து பயணம் செய்யத் தொடங்கினர்.
நரசிம்மன் உடலும் மனமும் பல சோதனைகளையும், வலிகளையும் தாண்டி இன்று வெற்றிகரமாக எட்டு வனதேவிகளின் ஆசிப்பெற்று கோட்டை திரும்புகிறான். அமரபுசங்கன் கூறியவை இப்போது அவனது மனதில் நின்று ஒலிக்கத் தொடங்கியது.
“அமரர் கூறியவகைகளை வைத்து பார்த்தால் அங்கே பெரும் ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இங்கே அபராஜிதன் எமது எல்லைக்குள் வந்துவிட்டான். விஸ்வக்கோட்டை செய்யும் அனைத்து செயல்களும் நமது நேரடி கண்காணிப்பிற்கு வரவேண்டும்…” இப்படியாக நரசிம்மன் சிந்தித்தபடி இருக்கும்போதே ருத்ரவிக்னன் ஆதித்ய கோட்டைக்கு அருகே வந்திருந்தான்.
சுமாராக நான்கு நாட்கள் எடுக்கும் பயணம் இப்போது ஒரு நாளில் முடிந்தது. யுவராஜன் கஜயாளியின் மேலே அமர்ந்து வரும் செய்தி அமரக்கோட்டையில் இருந்து ஆதித்ய கோட்டை செல்லும் வழியெங்கும் பரவியிருந்தது. அவன் யாளியின் மேல் அமர்ந்து வருவதைக் காண மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக, ராஜபாட்டையில் காத்திருந்தனர். ராஜபாட்டை என்பது பெரிய சாலை, பிரதான சாலை. அவை பத்து ரதங்கள் ஒரே வரிசையில் செல்லும் அளவிற்கு அகலமானவை. அதில் கஜயாளியை நடத்திக் கொண்டு கோட்டை திரும்பிக் கொண்டிருந்தான் நரசிம்மன்.
மக்கள் அனைவரும் அவனையும், யாளியையும் கண்டு ஆரவாரம் செய்து அவன் செல்லும் வழியெல்லாம் பூமாரி பொழிந்தனர். மேலாதாளங்கள் முழங்க அவன் அமரக்கோட்டை சமஸ்தான வாயிலில் இருந்து ஆதித்ய கோட்டை சென்று சேரும் வரையிலும் மக்கள் ஆரவாரத்தோடு வரவேற்றனர். இன்னும் சிலர் அவன் பின்னோடு வந்தனர். யாளியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பாதியிலும் நின்றனர். நரசிம்மன் யாளியின் அருகே யாரும் வரக்கூடாது என்று கண்டிப்பான கட்டளையிட்ட பிறகே மக்கள் பின்தொடர்வது குறைந்தது. ருத்ரவிக்னன் நரசிம்மனின் அழுத்தம் கொண்டு அமைதியாகவும், வேகமாகவும் முன்னேறிக் கொண்டிருந்தான். ஒரு நாள் முடிந்து மறுநாள் அதிகாலையில் ஆதித்ய கோட்டை வாசலில் வந்து நின்றான்.
யுவராஜனை வரவேற்க பெரும் ஏற்பாடுகள் செய்து காத்திருந்தனர் அங்கிருந்த அனைவரும். அமரபுசங்கனும் அங்கே வந்து சேர்ந்தான். சிங்கத்துரியன் வாயிலில் நின்று ஆவலாக யாளியைப் பார்த்தான். அதனை நடத்திவரும் யுவராஜன் மேலே அபரிமிதமான மரியாதையும் ஏற்பட்டது.
மகாராஜாவும், மகாராணியாரும் அவனை கோலாகலமாக வரவேற்று, வெற்றித் திலகமிட்டு கோட்டைக்குள் அழைத்து சென்றனர். நரசிம்மன் நேராக தங்கள் கோட்டையில் இருந்த வனதேவி ஆலயத்திருக்கு சென்று தான் கொண்டு வந்த மலர்களை எல்லாம் சிலைக்கு முன்னே கொட்டி, அவனுக்கு கொடுத்திருந்த மலர்களின் மேல் மட்டும் மூலிகை திரவத்தினை ஊற்றினான்.
மற்ற மலர்களை அங்கேயே பதப்படுத்தி பத்திரமாக வைத்துவிட்டு அங்கே காவலுக்கு மகதனையும், யாளியையும் இருக்கும்படி கூறினான்.
“அவர்களை வனத்திற்கு அனுப்பிவிடலாம் மகனே..” மகாராணியார் கூறினார்.
“இல்லையம்மா.. இவர்களே காக்கட்டும். உங்கள் கைகளால் எனக்கு அன்னம் கொடுங்கள்..” எனக் கூறியபடி அன்னையை அணைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.
மகதனுக்கும் யாளிக்கும் தேவையானவை கோவில் இருக்கும் வேலியின் வாயிலில் வைக்கப்பட்டது. மகதனும் யாளியும் உணவுண்டு விட்டு அங்கேயே ஆளுக்கு ஒரு திசையில் படுத்துக் கொண்டனர். அந்த பக்கம் மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
“மகனே.. பிரயாணத்தில் அதிக சோதனைகள் இருந்ததா?” என மகாராஜா கேட்டார்.
“நாம் தனியாக பேசலாம் தந்தையே.. ஆருத்ராவும், வனயாத்திரையும் இங்கே வந்தால் மொத்தமாக பேசி உடனடியாக செயலில் இறங்கலாம்..” என அவன் கூறியதும் இருவருக்கும் தகவல் உடனே சென்றது.
அமரபுசங்கனை தனியே அழைத்து சென்று சில விஷயங்களை கூறிவிட்டு, அவனையும் கையோடு தனது அறைக்கு அழைத்து சென்றான்.
“21 நாட்கள் செய்ய வேண்டிய பிரயாணத்தை 12 நாட்களுக்குள் முடித்து வந்துவிட்டீர் யுவராஜரே.. மிகவும் பெருமையாக இருக்கிறது..” என அமரன் அவனை காற்றிலே தூக்கி சுற்றினான்.
“அடேய்.. இருவரும் என்னடா செய்கிறீர்கள்? முதலில் நிலத்தில் நில்லுங்கள்..” என மகாராணியார் அதட்டினார்.
“அமரா.. காற்றிலே உன்னால் பறக்க முடிந்தாலும் கூட இந்த அன்னையை வந்து காண உனக்கு இத்தனை நாட்களா?” என அவனிடம் குறைப்பட்டுக் கொண்டார்.
“எனது இந்த நிலை தங்களது மனதை வலிக்கொள்ள செய்யும் என்பது அறிந்து நான் எப்படி வந்து வருத்துவேன்? தவிர சில முக்கியமான விஷயங்களை கண்டறிந்து ஆராய வேண்டியிருந்தது தாயே..” என அவரைக் கட்டிக் கொண்டான். அவனும் உணர்ச்சி வசப்பட்டத்தினால் இப்போது யாரின் கண்கங்களுக்கும் அவனது உடல் தெரியவில்லை.
“இளவலாரே தங்களது உடல் மறைந்துவிட்டது. மனதை கட்டுக்குள் வையுங்கள்.” என நரசிம்மன் கூறியதும் அவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
“யாளியை எப்படி வசப்படுத்தினாய் நரசிம்மா?”
“அவர்கள் இருவரும் வந்தபின் முழுதாக கூறுகிறேன். தாங்கள் எனக்கு நிறைய உணவு தயார் செய்து வையுங்கள். மிகவும் பசிக்கிறது..” எனக் கூறிவிட்டு குளிக்க ஓடினான்.
“பார்த்தீர்களா இவனை.. இவன் மனையாட்டி வராமல் வாய் திறக்க மாட்டானாம்..” என அமரன் வம்பு பேசினான்.
மகாராணியார் முறைக்கவும் அமரன் அங்கிருந்து நரசிம்மனுக்கு உதவுவதாக ஓடினான்.
அதன்பின் மிகப்பெரிய விருந்தே தயாராகி இருந்தது. வழக்கமாக சாப்பிடுவதை விட மூன்று மடங்கு அதிகமாக சாப்பிடும் மகனைக் கண்டு தாய் தந்தை இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அவனுடலிலும் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டிருக்குமோ என்று ஐயத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமரனும் வழக்கத்தை விட குறைவாக சாப்பிட்டு விரைவாக எழுந்து மகதன் அருகே சென்றான். மகதன் அவனைக் கண்டதும் முட்டி கீழே தள்ளி விளையாட ஆரம்பிக்க, யாளியும் அவர்கள் விளையாட்டில் பங்குக் கொண்டது.
“ருத்ரவிக்னா.. இந்த இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? மக்களை கண்டு அரண்டு கொள்ளாதே.. உனக்கு முன் மனிதர்கள் பலம் ஒன்றுமே இல்லை..” என யாளியின் கண்களை பார்த்து, அதன் துதிக்கையை பிடித்துத் தடவியபடிப் பேசினான்.
ஆருத்ரா ருத்ரக்கோட்டையின் மறு எல்லையில் இருப்பதால் இரண்டு நாட்கள் ஆகும் என்று செய்தி வந்தது. வனயாத்திரை குடுவையில் ஓர் உயிரை உயிர்க்கொள்ள செய்துக் கொண்டிருப்பதால் அவளும் இரு நாட்கள் ஆகும் என்று செய்தியனுப்பினாள்.
இதைக் கண்ட நரசிம்மன் தாய் தந்தையின் முகத்தைப் பார்த்தான். உடனடியாக அந்தரங்க ஆலோசனை கூடம் அவர்களோடு சென்றான். அமரனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
“சிங்கத்துரியனை அழைக்கவா?” அமரன் கேட்டான்.
“வேண்டாம். இப்போது நாம் பேசி பல முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளது..” எனக் கூறியவன் அவர்கள் கூறும்வரையில் யாரும் அந்த பக்கம் வரக்கூடாது என்ற கட்டளையுடன் அந்தரங்க ஆலோசனை அறைக்குள் நுழைந்தான்.
“என்ன நடந்தது மகனே? ஏன் உனது முகம் இத்தனை கடினமாக மாறுகிறது?” மகாராணி கேட்டார்.
“நாம் மிகவும் அசிரத்தையாக இத்தனை ஆண்டுகள் இருந்துவிட்டோம் தாயே.. விஸ்வக்கோட்டையில் நமது வீரர்கள் இருந்தும் கூட நாம் அவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்காமல் இருந்து மாபெரும் தவறு செய்துவிட்டோம். எத்தனை ஆயிரம் உயிர்கள் வதைபட்டதோ தெரியவில்லை.
அந்த நவ-வர்ம நாட்டின் இளவரசன் நிச்சயம் இந்த பூமியில் பிறந்த ஜென்மமே அல்ல என்று தான் கூறுவேன். அவன் செய்திருக்கும் ஆராய்ச்சிகளும், ஒவ்வொரு உயிரையும் அவன் துடிக்க வைப்பதையும் என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அமரரை அழைத்து அந்த ஜீவன்களை எல்லாம் ஒப்படைத்தேன். அவனை சர்ப்ப மலையில் வாள்வீச்சில் சிக்கவைத்தேன். ஆனால் அவன் நொடிக்கும் குறைவான பொழுதில் சூரியக்கதிர் பட்டதும் புகையாக மாறி தப்பிவிட்டான்.” என ஆரம்பித்து தனது பயணத்தில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.
வரத யோகேந்திர ஆதித்தர் அமைதியாக அவன் கூறியவற்றை எல்லாம் மனதில் அசைப்போட்டுக் கொண்டிருந்தார். மகாராணியாரும் மனதில் எழுந்த உணர்வுகளை அடக்கியபடி அடுத்து என்னென்ன செய்வதென சிந்தையில் இருந்தார்.
அவர்களைப் பார்த்துவிட்டு நரசிம்மன் அமரன் அருகே சென்று அவனது கைப்பிடித்தான். அமரனுக்கு நரசிம்மன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இப்போது தெளிவாக உணரமுடிந்தது. வனதேவி செய்த மருத்துவம் அவனை பல மடங்கு பலசாலியாக, ஆற்றல் மிக்கவனாக மாற்றியிருக்கிறது. அதனால் தான் மூன்று மடங்கு அதிகமாக உணவும் தேவைபடுகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியான அகோர பசி இருக்கும் என்று தெரியவில்லை.
இது குழந்தையை சுமக்கும் தாயின் பசியும், குழந்தை ஈன்ற பின் ஏற்படும் பசியும் ஒன்றாக சேர்ந்து வருவதைப் போன்றது. அவனது உடலுக்கு அந்த உணவு இப்போது அதீதமாக தேவைப்படுகிறது. உண்பவை எல்லாம் வேகமாக ஜீரணம் ஆகி, உணவில் உள்ள சத்துக்கள் அவனுடலில் வேகமாக சென்று ஒன்றுகிறது.
“பசிக்கிறதா நரசிம்மா?” அமரன் கேட்டான்.
“ஆம்”
“உனக்கு உணவு கொண்டு வருகிறேன்..” என்று எழுந்தவனை தடுத்தவன், “இருவரும் ஆலோசனை செய்தபின் எனை அழையுங்கள். விடைபெறுகிறேன் மகாராஜா.. எனதறையில் இருக்கிறேன் மகாராணி..” எனக் கூறிக் கிளம்பினான்.
உணவுக்கூடம் சென்று உணவு வகைகளை கூறிவிட்டு தனது அறைக்கு சென்று ஊஞ்சலில் படுத்துக் கொண்டான் நரசிம்மன். அவனது செயல்களில் எப்போதும் வேகம் அதிகமிருக்கும், இப்போது அது நான்கு மடங்காக பெருகியிருக்கிறது.
அவனது மனமும் அந்த அளவிற்கு பக்குவப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் அமரனுக்கு எழுந்தது. அந்த ஊஞ்சலுக்கு அருகே இருந்த ஆசனத்தில் அமர்ந்த அமரன், “என்ன யோசனை யுவராஜரே?”
“நான் அந்த குகைக்கு செல்லவேண்டும் அமரரே.. எனை எப்போது அழைத்து செல்வீர்கள்?”
“செல்லலாம்.. அதற்கு முன் தங்களது உடலை முழுதாக நாங்கள் ஆராய வேண்டும். வனத்தின் வளங்களை பாதுகாக்கும் ஏற்பாடுகளை முடித்துவிட்டு அங்கே செல்வது தான் நல்லது.”
“அதற்கு நான்கு நாட்கள் போதுமா? இல்லை இரண்டு .. இல்லை ஒரு நாள் போதும். மொத்த திட்டமும் தீட்டி நாம் அனைவரும் கலந்தாலோசித்து உடனடியாக செயல்படுத்தி விடலாம். அந்த அபராஜிதன் மிகப்பெரும் மாயக்காரனாக தெரிக்கிறான். நமது உயிர்களை நாம் வதைப்பட விட்டுவிடக்கூடாது..”
அறையில் அங்கும் இங்கும் நடந்தவன் மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்து,
“பல்லாயிர உயிர்களை நாம் இழந்து விட்டோம் அமரரே.. என்னால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை..” என பதற்ற நிலையிலே இருந்தான்.
அவனைக் கண்ட அமரபுசங்கன் அவனுக்கு இப்போது உறக்கம் அவசியமென உணர்ந்தான். நரசிம்மனுக்கு பெரும் விருந்து அறைக்கு வந்து சேர்ந்தது. நரசிம்மன் அவையாவற்றையும் சில நிமிடங்களில் உண்டு முடித்தான். அமரன் அவன் உடலில் ஓர் இடத்தில் விரல் கொண்டு அழுத்த, ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றான் நரசிம்மன்.
இங்கே ருத்ராகோட்டைக்கும், கீழ்காட்டு கோட்டைக்கும் இடையே இருக்கும் எல்லையில் ஆருத்ரா மிகப்பெரும் சட்டவிரோத வேட்டைக் குழுவை சுற்றி வளைத்து அவர்களை மயக்கநிலைக்கு தள்ளினாள். அவர்கள் பிடித்திருந்த உயிருள்ள விலங்குகளை எல்லாம் தனியாக வனத்தில் அதிதீவிர பாதுகாப்பில் வைத்துவிட்டு, அவர்கள் கொன்று குவித்திருந்த மிருக உடல்களைக் கண்டு வன்சினம் கொண்டு ருத்ர காளியாக மாறி, சேயோன் முன்னே அவனை உறுத்துப் பார்த்தபடி நின்றாள்.