97 – ருத்ராதித்யன்
ருத்ரவிக்னன் நரசிம்மனை சுமந்துக்கொண்டு மலை ஏறியதால் ஒரு நாழிகையில் உச்சியில் இருந்தனர். அங்கே தேவி சர்ப்ப ரூபத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறாள்.
மலை ஏறும் போது வரும் எந்த சிக்கலும் அவனுக்கு இல்லையென்பதால், நேரடியாக அவனது மனதை சோதிக்கும் வகையாக மேலே பல உயிர்கள் பயத்திலும், வலியிலும் துடித்துக் கொண்டிருந்தன.
அவன் உச்சியை அடைந்த மறுநொடி பெரும் சத்தத்துடன் இடியும், மின்னலும் உச்சியில் இருந்த மரத்தினை தாக்க, சிறிதாக ஆரம்பித்த தீ நொடிக்கும் குறைவாக அந்த இடம் முழுதும் பரவியது. உச்சியில் இருந்து சற்று கீழே இறங்கி நிற்கும் இடமெல்லாம் பாம்புகளின் உறைவிடங்கள் இருந்தன. அந்த இடம் முழுதும் நெருப்பு சுற்றிக் கொள்ள, உள்ளிருந்த பாம்பு குட்டிகள் பயத்தில் ஒன்றுக்கு மேலே ஒன்று ஊர்ந்து தப்பிக்க முயன்றுக் கொண்டிருந்தது. சிலவை நெருப்புக்கும் இரையானது.
நரசிம்மன் அந்த இடத்திற்கு மேலே தான் பாறையில் நின்று இருந்தான். நெருப்பைக் கண்டதும் யாளியும் ஒரு பக்கம் மிரள ஆரம்பித்து அங்கும் இங்கும் ஓடியது. அதன் ஓட்டம் அந்த நிலபரப்பை அதிரச் செய்ய, மரங்களும் பாறைகளும் இடம்மாறிக் கொண்டிருந்தன. பாம்பு குட்டிகள் மேலே நரசிம்மன் நின்றிருந்த பாறையோடு கீழே இருந்த மற்ற பாறைகளும் சரிந்து விழ இருந்தது. மகதன் யாளியின் பின்னே ஓட, நரசிம்மன் அந்த பாறையில் இருந்து குதித்து அருகே இருந்த பச்சை கொடிகளையும், வேர்களையும் சில நொடிகளில் ஒன்று சேர்த்து அந்த பாறைக்கு அடி பக்கமாக மண்ணோடு இறுக்கி கட்டி தடுப்பை ஏற்படுத்தினான். சில நிமிடங்கள் அந்த வேர்கள் தாக்கு பிடிக்கும் என்று உணர்ந்ததும் நரசிம்மன் சட்டென அந்த பாம்பு குட்டிகள் பதுங்கி இருந்த பொந்துகளில் கைகளை விட்டு மொத்தமாக கைகளில் சிக்கும் வரை பாம்புகளை வெளியே எடுத்து தனது மேலாடையில் முடிச்சு போட்டு சாக்கு பை போல மாற்றி அதனுள்ளே போட்டான். அந்த நேரத்தில் பல குட்டிகள் அவனது கைகளை கடித்தன.
அவை எல்லாமே கொடூர விஷம் கொண்ட பாம்பு குட்டிகள். நூற்றுக்கும் அதிகமான குட்டிகள் அந்த இடத்தில் இருந்தன. நெருப்பு அந்த இடத்தினை வேகமாக நெருங்க நெருங்க நரசிம்மனும் இன்னும் வேகமாக பாம்புகளை வெளியே எடுத்து அந்த பையில் நுழைத்துக் கொண்டு மேலே ஏற முயன்றபோது, அவன் தடுப்பு வைத்து நிறுத்தி வைத்திருந்த பாறையானது, தன்னை விடுவித்துக் கொண்டு கீழே ஓடியது.
அங்கிருந்து மேலே ஏற அவன் பாதையைத் தேட, அவனை சுற்றிலும் நெருப்பு பிடித்து எரிந்துக் கொண்டிருந்தது. மகதனும் ருத்ரவிக்னனும் எங்கே இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. ருத்ரவிக்னனின் பிளிறல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.
அவன் நின்றிருந்த இடம் எல்லாமே நன்றாக காய்ந்த சருகுகளாக இருக்க, நெருப்பும் வேகமாக பரவியது. நிற்கவும் இடமின்றி இத்தனை குட்டிகளை வைத்துக் கொண்டு எப்படி தப்பிப்பது என்று அவன் சிந்தித்தபடி சுற்றிலும் பார்வையை சுழற்றினான்.
அந்த மலையின் கிழக்கு பக்கம் ஓர் அருவி விழுந்துக் கொண்டிருந்தது. இவன் இருப்பதும் அந்த அருவிக்கு சிறிது தூரத்தில் தான். நெருப்பு வளையத்தை விட்டு வெளியே சென்றால், நிற்கவும் இடமில்லை. இருப்பது ஒரே சிறிய தட்டை பாறை தான். அதில் ஏறினால் வேறு எந்த பக்கமும் செல்ல முடியாது. அது மலையில் இருந்து நான்கு அடிகள் நீண்டு அருவிக்கு பத்தடி தூரத்தில் இருந்தது. இந்த பாறைக்கு நேர் கீழே நீர் ஓடும் பாதை தான். ஆனால் ஆழம் மிகவும் குறைவாக இருக்கும் வாய்ப்பு தான் அதிகம்.
குறைந்த பட்சமாக இந்த பாம்பு குட்டிகளை பாதுகாப்பாக நீரில் இறக்கிவிடலாம் என்று நினைத்து அங்கிருந்து கீழே குதித்தான். அவன் மேலிருந்து கீழே குதிக்கும் போதே அந்த நீரோடையின் ஆழத்தை கண்களால் அளந்தான். 5 அடிக்கு மேலே ஆழம் இருக்காது, இத்தனை உயரத்தில் இருந்து குதித்தால் நிச்சயம் கீழே இருக்கும் பாறையில் தான் மோதி நிற்கமுடியும். கைகால்கள் உடைந்தால் பரவாயில்லை, தலையில் அடிபடாமல் இருக்க உடலை உருண்டையாக குறுக்கி நீரில் விழவேண்டும் என்று முடிவெடுத்தவன், அதற்கு முன்னே பாம்பு குட்டிகள் இருக்கும் பையை அருகே தெரிந்த நிலப்பகுதியில் வீசினான்.
உடலை குறுக்கி விழுந்த போதும் கையும், காலும் அதீதமாக அடிபட்டன. ஒரு காலில் லேசாக எழும்பும் கூட விரிசல் விட்டிருந்தது. அவன் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் நீரில் கலந்து சிவப்பு ஆறாக ஓடியது.
தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நீரில் இருந்து வெளியே வந்தான். பாம்புகள் கடித்ததால் விஷம் அவனது உடலில் பரவி மயக்கத்திற்கு தள்ளியது. அவன் கரை ஏறிய இடத்திலேயே வீழ்ந்தான்.
உடல் எங்கும் விஷமும், பாம்பு கடித்ததால் ஏற்பட்ட காயமும், சில பாம்பு பற்களும் கூட உடலில் சிக்கியிருந்தது. உடல் வீங்க தொடங்கவும் அவனுக்கு சுயநினைவு இல்லாமல் போனது.
ருத்ரவிக்னன் ஓரளவு அமைதியானதும் மகதன் நரசிம்மனைத் தேடிக் கொண்டு உச்சிக்கு வந்தான். ஆனால் அவன் அங்கே இல்லாது போகவும், அருகே பாறை உருண்ட தடம் கண்டு அந்த பக்கமாக சென்று பார்த்தான். நெருப்பு எரிந்து முடிந்த தழல் ஆங்காங்கே மிச்சம் இருந்தது. மகதன் அவற்றை கண்டு பயம் கொள்ளாமல், நரசிம்மன் நின்றிருந்த பாறைக்கு சென்று பார்த்தான். கீழே நரசிம்மன் சுயநினைவு இன்றி வீழ்ந்து கிடப்பதைக் கண்டதும் பெரும் உறுமலோடு அங்கிருந்து கீழே செல்லும் வழியில் ஓடினான். யாளியும் அவன் பின்னோடு சென்று நரசிம்மன் இருக்குமிடத்தை சில நிமிடங்களில் அடைந்தது.
நரசிம்மன் உடலில் எந்த அசைவும் இன்றி கட்டை போல கிடக்க மகதன் மனம் பயம் கொண்டது. யாளி மகதனின் பயத்தை உணர்ந்ததும் நரசிம்மனைத் தூக்கிக் கொண்டு சென்று மலையின் உச்சியில் இருந்த தேவி சிலைக்கு அருகே அவனைக் கிடத்தியது.
மகதன் நரசிம்மனின் பைகளை அவன் முன்னே கொண்டு வந்து போட்டு, மூலிகைகள் இருக்கும் மூங்கில் குடுவைகளை அவன் நாசிக்கு அருகே கொட்டியது. யாளி மகதன் செய்வதைக் கண்டு, விஷம் முறிக்கும் செடிகளை தேடி மலை இறங்கியது. அந்த மலையில் முழுக்க முழுக்க பாம்புகளே இருப்பதால் அதன் விஷம் முறிக்கும் மூலிகைகளும் அங்கே நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு சென்ற யாளி மலை அடிவாரத்தில் மூலிகையின் வாசனை வருவது உணர்ந்து அங்கே வேகமாக சென்றது.
மலையின் முதல் கால்வாசி பாகம் முழுதுமே விஷம் முறிக்கும் பல மூலிகை செடிகள் வளர்ந்து இருந்தன. அதனை எல்லாம் வேரோடு பிடுங்கிக் கொண்டு யாளி வேகமாக மேலே ஏறியது. அதை பாறையில் வைத்து துதிக்கையால் நசுக்கியதும் வரும் சாறை அவனது உடலில் பூசியது.
மகதனும் யாளியைக் கண்டு அந்த மூங்கில் சட்டத்தில் இருந்ததை காலால் உடைத்து வெளியே எடுத்து நசுக்கியது. ரத்த போக்கை நிறுத்தும் பொட்டலங்களைக் கண்டதும் மகதன் அதை எடுத்து அவனது வாயில் திணிக்க முயன்றது. அவனது வாயினை லேசாக பிரித்து அந்த பொடியை உள்ளே போட்டனர். யாளியும் மற்றதை அவன் உடல் முழுதும் தூவி விட, அவன் கைகால்களில் ஏற்பட்டிருந்த காயத்தினால் வந்த உதிரப்போக்கு உடனடியாக நின்றது.
ஆனாலும் அவனது உடல் பல்வேறு விஷப்பாம்புகள் கடித்ததால் உடல் சூடு ஏறி, கண்கள் திறக்க முடியாமல் மயக்கத்திலேயே இருந்தான். அதற்கு மேலே அவனின் இரு தோழர்களுக்கும் என்ன செய்வதென புரியவில்லை. புலி ஒரு பக்கமும், கஜயாளி ஒரு பக்கமும் அவனுக்கு இருபக்கமும் அமர்ந்து தேவியினை நோக்கி கண்ணீர் சிந்தினர்.
புலியின் கண்ணீரும், யாளியின் கண்ணீரும் மண்ணைத் தொட்டதும் தேவி அவள் சிறு பெண்ணாக உருமாறி அவர்கள் முன்னே வந்தாள். கையில் வைத்திருந்த மூட்டையில் இருந்து மூலிகைகளை எடுத்து நரசிம்மன் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு கட்டிட்டு, விஷம் முறிக்கவும் மருந்தை வாயில் ஊற்றினாள். விஷம் தலை வரை ஏறியதால் அவனது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
பல வகையான பாம்புகளின் விஷம் அவனது உடலில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது. வனதேவி அவனை தனது மடியில் கிடத்தி மனம் முழுதும் சந்தோஷத்துடன் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முழுதாக ஒரு பகலும், இரவும் கடந்த பின் நரசிம்மன் கண் விழித்தான். அதுவரை மகதனும், ருத்ரவிக்னனும் அவனை விட்டு அகலவில்லை. வெறும் நீரை குடித்துவிட்டு மீண்டும் அவன் அருகே வந்து அமர்ந்து அவனை காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
வனதேவி அவர்களிடம் கூட எதுவும் பேசாமல் நரசிம்மன் காதில் மெல்ல பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறியது எல்லாமே அவனது மூளையில் பதிவாகிக் கொண்டிருந்தது. அவன் உடல் முற்றிலும் புது விதமாக, பல மடங்கு பலம் பெற்று, உடல் இயக்கங்களை எல்லாம் நுணுக்கமாக உணரும் விதமாக இப்போது முன்னேறியிருந்தது.
அடுத்த நாள் காலை அவன் முழுதாக நினைவு திரும்பி கண் விழித்தபோது 10 வயது சிறுமி மகதனுடன் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டான். ருத்ரவிக்னன் அவர்களை படுத்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். நரசிம்மன் உடல் அசைவதைக் கண்டதும் எழுந்து ஓடி வந்து அவனைப் பார்த்தான்.
யாளி ஓடியதும் மகதனும் அந்த சிறுமியும் கூட அவன் அருகே வந்து நின்று பார்த்தனர். நரசிம்மன் முகத்தை அழுந்த தேய்த்தபடி எழுந்து அமர்ந்து மகதனைப் பார்த்தான். மகதனும் அவன் நெஞ்சில் முட்டி மீண்டும் அவனை சாய்த்து அவன் மேலே படுத்துக் கொண்டான்.
“எழுந்தவரை மீண்டும் மண்ணில் சாயித்துவிடாதே மகதா.. இந்த பக்கம் வா..” என அந்த சிறுமி அதட்டியதும் மகதன் எழுந்து எதிர்பக்கமாக அமர்ந்து நரசிம்மனைப் பார்த்தான். யாளியும் தனது துதிக்கையால் அவனது மேனி தடவி அவனது உடல்நலத்தை விசாரித்தது.
நரசிம்மன் மனம் நெகிழ்ந்து அந்த துதிக்கையைக் கட்டிக் கொண்டான். அந்த காட்சியைக் கண்ட சிறுமி, “இரவும் பகலுமாக உங்களை நான் மருத்துவம் செய்து காப்பாற்றினால் எனக்கு ஒரு வார்த்தைக் கூட நன்றி செலுத்தாமல் உமது தோழர்களை தான் முதலில் தேடி அன்பு பாராட்டுக்கிறீர்.. இது நியாயம் தானா?” என அவள் சிரிப்புடன் கேட்டாள்.
“ஓர் இரவும் பகலும் எனை பாதுகாத்து பிழைக்க வைத்தவர் வனதேவியன்றி வேறு யாராக இருக்க முடியும் தாயே.. உங்களின் பாதம் பணிகிறேன்..” என நரசிம்மன் அந்த சிறுமியின் பாதம் பணிந்தான்.
“ஆதித்திய நாட்டின் யுவராஜன் என் பாதம் பணிவது பெரும் விஷயம் தான்.” என இடக்காக பேசினாள்.
“தங்களின் பாதம் பணியாமல் வேறு யாரின் பாதம் பணிவேன் அம்மா?”
“புது புது உயிரினங்களை படைக்கும் படைப்பாளி கடவுள் அல்லவா தாங்களும் தங்களது காதலியாரும்.. நீங்கள் எனது பாதம் பணிவது அத்தனை உவப்பாக இல்லை யுவராஜரே..”
“அம்மா.. எங்களின் ஆராய்ச்சி பிழையா?”
“இருக்கும் உயிர்களையே காக்க தெரியவில்லை. இதில் இன்னோர் புது உயிரை நீங்கள் உருவாக்கினால், அதன் ஜனனமும், மரணமும் யார் நிர்ணயிப்பது? அதன் பலமென்ன? பலவீனமென்ன ? ஆரோக்கிய அளவுகள் என்ன? அதற்கோர் வியாதி வந்தால் அதன் விளைவென்ன?” எனக் கேட்டபடி அவன் உடலில் இருந்த பழைய கட்டுகளை அவிழ்த்துவிட்டு, புதிய மருந்து வைத்துக் கட்டினாள்.
நரசிம்மன் அமைதியாக இருப்பதைக் கண்டதும் அந்த பெண் சிரித்தபடி அவனது கண்களை பார்த்தாள்.
“என்ன எனது கேள்விகளுக்கு பதில் தெரியவில்லையா? அல்லது பதிலே யோசிக்கவில்லையா?”
“தாம் ஏற்படுத்திய உயிர்களின் மூலமே மற்றுமோர் உயிர் வடிவு பெறுகிறது. அதன் ஆக்கமும், தாக்கமும் எந்த அளவிற்கு இருக்குமென்று இப்போது நான் அறியவில்லை தாயே. ஆனால் நிச்சயமாக ஓர் சிறந்த உயிராக அதை உருவாக்குவோம். அதற்கு தங்களின் வழிகாட்டுதலும், அருளும் நிச்சயம் தேவை. உங்களின் அனுமதியின்றி இங்கே எதுவும் நடப்பதில்லை. இந்த எண்ணமும் கூட தாங்கள் தான் தோற்றுவித்தீர்கள். இத்தனை தூரம் நாங்கள் வந்ததும் தங்களின் வழிகாட்டுதலினால் தான். இனி செல்லும் பாதையும் தங்களின் வழிகாட்டுதல் படியே நடக்கும். சாதாரண மனிதனாக இந்த இயற்கைக்கு என்னால் முடிந்த நன்றியாக இதை செய்கிறேன். அதை தாங்கள் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்..” என கைக்கூப்பி கேட்டுக் கொண்டான்.
“எந்த செயலுக்கும் இரண்டு வகையான தாக்கங்கள் உண்டு யுவராஜரே.. தங்களது முயற்சியின் தொடக்கம் நல்லெண்ணமாக இருந்தாலும் அதை தீயதாக மாற்றும் நபர்கள் உங்கள் அருகிலேயே இருக்கிறார்கள். ஆனாலும் இது அம்மையப்பரின் திருவிளையாடல். அதன் முடிவு யாதென்று அவர் மட்டுமே அறிவார்.” எனக் கூறிய பெண்ணின் கண்கள் கலங்கியது.
“தாயே தங்கள் கண்கள் கலங்குவதேன்?” நரசிம்மன் பதறிக் கேட்டான்.
“ஒன்றுமில்லை. இதோ தங்களுக்கு எனது மலர்கள்.. இது தாங்கள் உருவாக்கும் இரண்டு உயிர்களுக்கு கொடுங்கள்..” என்று ஓர் குப்பியை அவனிடம் கொடுத்தார். வெளிர் நீல மலர்களை ஒரு கையிலும், குப்பியை மறுகையிலும் பெற்றவன் அவரின் பாதம் பணிந்து வணங்கினான்.
“நரசிம்மா.. நேராக உனது கோட்டைக்கு செல். இன்றே மலர்களை மூலிகை சாறு கொண்டு பதப்படுத்து. நீ உருவாக்கும் உயிர் ஒன்று உருப்பெற்றபின் உனக்கான கிரீடம் உருவாகட்டும். அதற்கான உலோகம் உனக்கு அந்த சமயம் மட்டுமே கிடைக்கப்பெரும். உனது எண்ணம் போல வாழ்வாங்கு வாழ்வாய்..” என ஆசி கூறி நொடியில் மறைந்து போனாள் வனதேவி.