106 – ருத்ராதித்யன்
“வணக்கம் வனயட்சி அவர்களே.. நான் தங்களை காண வெகுதூரத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடம் மருத்துவம் பயிலவேண்டும் என்பது எனது மிகப்பெரும் கனவு. அக்கனவை தாங்கள் நிறைவேற்றுவீர்களா?” எனக் கேட்டபடி அபராஜிதன் மாறுவேடத்தில் வந்து பேசிக் கொண்டிருந்தான்.
“யாரப்பா நீ? எங்கிருந்து வருகிறாய்?” வனயட்சி அவனை ஆராய்ச்சியாக பார்த்தபடி கேட்டார்.
“நான் இரண்டாம் அம்புவிக் கோட்டையில் இருந்து வருகிறேன் அம்மா. எனக்கு தாயில்லை. தந்தையும் கடலோடுபவர். சென்ற முறை வந்த கடற்கோள் அவரையும் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டது. இப்போது நான் யாருமற்ற அநாதை. தங்களை பற்றி எங்கள் ஊரில் பெருமையாக பேசுவதை நான் பல முறை கேட்டிருக்கிறேன். அதனாலேயே மருத்துவம் கற்றுக்கொள்ள தங்களை தேடி வந்தேன்.” மிகவும் ஏற்ற இறக்கத்தோடு அவர் நம்பும் வகையில் தனது நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருத்தான்.
“அது சரி இந்த அர்த்த ராத்திரியில் இங்கே வந்து நிற்கிறாயே நீ.. உனக்கு யார் இந்த இடத்தை பற்றி கூறியது?” அவர் வனத்தில் இருக்கும் குடிசையில் இருந்தார். அங்கே சாதாரண மக்கள் யாரும் வந்து செல்ல அனுமதிக்கபடுவதில்லை.
“நான் வழி தவறி காட்டிற்குள் சுற்றி கொண்டிருந்தேன், அப்போது அதோ அங்கே பரண் மேல் சில வீரர்கள் இருக்கிறார்களே .. அவர்கள் தான் எனை ஒரு ஓநாயிடம் இருந்து காப்பாற்றி இங்கே உங்களிடம் மருந்து வாங்கி போட்டு கொள்ள சொல்லியனுப்பினார்கள். அப்போது தான் நான் தேடி வந்ததும் நீங்கள் தான் என்று தெரிந்து கொண்டேன் அம்மா.. இதோ இங்கே அந்த ஓநாய் நன்றாக பிராண்டிவிட்டது.” என தனது முதுகைக் காட்டினான்.
அவன் முதுகில் நன்கு வளர்ந்த ஓநாயின் நகத்தடம் நன்றாக தெரிந்தது. அவனை அமரவைத்து சுடுநீரில் காயம் கழுவி சுத்தம் செய்து, மூலிகை பொடி தூவி, சில இலைகளை வைத்து நன்றாக கட்டிவிட்டார்.
“சரி இனிமேல் அடவி வழியில் சுற்றாமல் ஊர்களின் வழியாக பயணம் செய்.. நீ இந்த தடத்தை பற்றி சென்றால் கோட்டை சுவர் வரும் அங்கிருந்து ஊருக்குள் சென்று சத்திரத்தில் தங்கி கொள். நாளை மாலை என்னை ஆதுரசாலையில் வந்து பார்த்து கட்டை மாற்றி கொள்..” என அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு கதவடைத்துக் கொண்டார் வனயட்சி.
அபராஜிதன் ஒருமுறை அந்த குடிலையும் அதன் அமைப்பையும் நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டு வனயட்சி சொன்ன வழி சென்று கோட்டைக்கு அருகே இருந்த சத்திரத்தில் தங்கிக் கொண்டான்.
அவனை இருவர் பின்தொடர்ந்து சென்று கண்காணிக்கத் தொடங்கினர். அதை உணர்ந்தும் சாதாரணமானவன் போல நடந்துக் கொண்டிருந்தான்.
இங்கே யாளியில் ஏறிய நால்வரும் நேராக ருத்ரக்கோட்டை வந்துக் கொண்டிருந்தனர். ஊர் சாலைகளை பயன்படுத்தாமல் காடுகளின் வழியே இவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர்.
“என்ன நடந்தது உனக்கு வனயாத்திரை? ஏன் இத்தனை அவரசம் அங்கே செல்வதற்கு?” ஆருத்ரா அவளின் கைப்பிடித்து வினவினாள்.
“அக்கா.. இப்போது எந்த கேள்வியும் எனை கேட்க வேண்டாம். நாம் நமது குகையை பாதுகாக்க வேண்டும். நாம் நினைத்ததை விட அவர்கள் இருவரும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இருவரும் மந்திரங்கள் கற்று அதனை மிகவும் திறமையாக செயலாற்றி வருகிறார்கள். நாம் பல படிகள் அவர்களை விட பின்தங்கி இருக்கிறோம். நீ கவனமாக உட்கார்ந்து வா. உனது உடலில் இருந்து இனி ஒரு துளி உதிரம் கூட வெளியே சிந்தக்கூடாது.. கவனம்..” எனக் கூறிவிட்டு அமரன் காதுகளில் சில விஷயங்களை கூறி அவனை அனுப்பி வைத்தாள்.
நரசிம்மன் மட்டும் ஏதும் பேசவில்லை, அவளிடம் எதுவும் கேக்கவும் இல்லை. அவளை ஆழமாகப் பார்த்தபடி வந்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் பயணத்தில் யாளியின் அதீத வேகத்தில் அமரக்கோட்டை எல்லைப்பகுதியில் இருந்து ருத்ரக் கோட்டை வந்து சேர்ந்தனர் மூவரும்.
அவர்கள் அங்கு வந்து சேரும் பொழுதே அபராஜிதன் தனது திட்டத்தின் முதல் படியை கடந்து விட்டிருந்தான். வனயட்சியின் உதவியாளர்களில் ஒருவனாக அவனும் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் தங்கும் குடில்கள் இருக்கும் பகுதியில் ஒரு குடிலும் அவனுக்கு ஒதுக்கபட்டது.
“இனி அந்த கிழவியை எனக்கு அடிமையாக்க வேண்டும். அதற்கான காரியங்களில் இறங்கலாம்..” என அவன் மனதில் சில திட்டங்களை தீட்டினான்.
“மகளே.. உனை காணாமல் நாங்கள் தவித்துவிட்டோம். நீயானால் முதல் துளி எடுக்க யாரிடமும் கூறாமல் சென்று விட்டாய்.. இப்படியா சொல்லாமல் இது போன்ற விஷயங்களில் நீ இறங்குவாய்?” என அவளின் தாயார் அவளைக் கடிந்துக் கொண்டார்.
“அம்மா.. இது போன்ற விஷயங்கள் சொல்லாமல் சென்றால் தான் வெற்றியடையும். அதனால் தான் கூறவில்லை. இதோ நான் கொண்டு வந்திருக்கும் இந்த அதிசயத்தை பாருங்கள்..” என அந்த ஒளி பெற்ற முதல் துளியை அந்த பூவின் இதழ் பிரித்து காட்டினாள். முன்பை விட இப்போது இன்னமும் அதன் ஒளி வீச்சு பெருகி, ஒளியும் அடர்த்தியாகியிருந்தது.
“சரி மகாராணியாரை சந்திக்காமல் இங்கே ஏன் வந்தாய்?” என அவளின் தந்தை கேட்டார்.
“தந்தையே நாம் உடனடியாக சில விஷயங்களை செய்ய தொடங்க வேண்டும். அதில் முக்கியமானது நமது வனயட்சியை யாரும் நெருங்காமல் பார்த்து கொள்ளவேண்டும். அவரை கடத்த போவதாக கேள்வியுற்றேன். தவிர, நமது குகையையும் அதில் இருக்கும் பொருட்களையும் நாம் இடமாற்ற வேண்டும். அந்த இடமும் சில எதிரிகளுக்கு தெரிந்துவிட்டது. அதன் உள்ளிருக்கும் பொக்கிஷங்களை நமது உயிரினும் மேலாக கருதி பாதுகாக்க வேண்டும்.. உடனடியாக எனது தமக்கைக்கும், யுவராஜருக்கும் திருமணம் செய்ய வேண்டும். இதற்கான பணிகளை தொடங்குங்கள்.. மற்றதை நான் பிறகு கூறுகிறேன்..” எனக் கூறிவிட்டு சிங்கத்துரியன் இருக்குமிடம் அறிந்து அவனைக் காணச் சென்றாள்.
“இவள் என்ன நமக்கு கட்டளைக்கு மேல் கட்டளைகளாக இட்டுவிட்டு செல்கிறாள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை அரசே..” என அரசியார் கேட்டார்.
“அவள் நமது மகள் எனும் ஸ்தானத்தை தாண்டி அடுத்த ஞான ஸ்தானத்தை எட்டிக் கொண்டிருக்கிறாள் தேவி.. யுவராஜரே தாங்களும் இளவரசியும் சம்மதம் கூறினால் உடனடியாக பேரரசரை காண நாங்கள் புறப்படுகிறோம். மற்ற ஏற்பாடுகளை ஆருத்ரா கவனித்துக் கொள்ளட்டும்.” என ருத்ரக் கோட்டை அரசர் கூறி நரசிம்மன் முகம் பார்த்தார்.
“நான் சில விஷயங்களை யாத்திரையுடன் காலந்தாலோசிக்க வேண்டும் அரசே.. அதற்கு அனுமதி கொடுங்கள். தவிர இளவரசியார் ஆருத்ரா மட்டுமே என்றும் எனது சரிபாதியாவார். அவரை மணக்க என்றும் எனக்கு முழு சம்மதம் தான். நமது நாட்டின் சூழ்நிலைகள் இப்போது அத்தனை சுமூகமாக இல்லை தான் ஆனால் மக்களுக்கு இதை பற்றி எதுவும் தெரியாது. மக்களுக்கு இங்கே நடக்கும் அநியாயங்களை நாம் வெளிச்சம் போட்டு காட்டும் முன் நமது பக்கத்தை நாம் பலப்படுத்தி கொள்ளலாம். துரோகிகள் முழித்துக் கொள்ளும் முன்பே நாம் அவர்களை சுற்றி வளைத்திருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். இளவரசியார் சம்மத்தம் கூறினால் நீங்கள் மேற்கொண்டு பணிகளை தொடரலாம்..” எனக் கூறியவன் வனயாத்திரை சென்ற திசையில் நடக்கத் தொடங்கினான்.
“ஆருத்ரா.. உனது எண்ணம் என்ன?”
“அரசரிடம் பேசுங்கள் தந்தையே.. ஆடம்பரமாக இல்லாமல் முடிந்தவரை எளிமையாக நடப்பது உத்தமம். இதனை மட்டும் அரசியாரிடம் கூறுங்கள்.. நான் வனயட்சியை சந்திக்க வேண்டும். எங்கே இருக்கிறார் அவர்?” எனக் கேட்டாள்.
“அவர் ஆதூரசாலையில் தான் மாலை வரையிலும் இருந்தார் மகளே.. அதற்கு பின் அவரை நான் காணவில்லை..”
“சரி.. அந்த சேயோனை சிறையில் அடைத்து இருக்கிறீர்களா?”
“இல்லையம்மா.. நீ கூறியது போல பெரிதாக கண்காணிக்காமல் அவனை இங்கே அழைத்து வர ஏற்பாடு செய்தேன். அப்போது பரதவர்கள் வாழும் பகுதி கடக்கும் பொழுது அவன் தப்பித்துவிட்டான். வீரர்கள் அவனை தேடி கொண்டிருக்கிறார்கள்..”
“நல்லது தந்தையே.. அவன் மீது வழக்கு தொடுத்த ஆவணங்களை நகல் எடுத்து விஸ்வக் கோட்டைக்கும், ஆதித்ய அரசிற்கும் அனுப்ப வேண்டும். உடன் நான் எனது தோழர்களை சந்திக்க வேண்டும். அவர்களை சந்தித்துவிட்டு வனயட்சி இருக்குமிடம் அறிந்து அவரை கண்டுவிட்டு வருகிறேன்..” எனக் கூறியவள் அவரின் அருகே வந்து சில விஷயங்களை காதோடு கூறி அங்கிருந்து சென்றாள்.
மகள் கூறியவற்றை கேட்ட தந்தை சில நொடிகள் ஸ்தம்பித்து அரசியாருடன் தனது அறைக்கு சென்று மந்திரியாரை அழைத்து காலந்தாலோசிக்க தொடங்கினார்.
“யாத்திரை.. யாத்திரை.. ஒரு நிமிடம் நில்.. உன்னிடம் சிறிது நான் உரையாட வேண்டும்..” என நரசிம்மன் அவளின் பின்னே வேகமாக சென்று அவளின் கைப்பிடித்து நிறுத்தினான்.
“என்னவென்று நான் அறிவேன் ஆனால் அதற்கான பதிலை இப்போது கூற இயலாது யுவராஜரே.. தாங்களும் உடலில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறீர்கள். நானும் எனது தியானத்தில் பெரும் மாற்றமும், ஏற்றமும் கொண்டே இந்த காரியங்களில் இறங்கி இருக்கிறேன். தமது மனது எனை நம்பும்படி கூறினால் நம்புங்கள். இல்லையென்றால் தங்களது கோட்டையில் இருக்கும் வனதேவி குடிலில் எப்போதும் போல சென்று அவரின் மடியில் படுத்து மனதில் தெளிவு கொண்டு வாருங்கள்.. இனி நமது செயல்கள் யாவும் மின்னலினும் வேகம் கொண்டு நடக்க வேண்டும். நான் இன்னும் 21 நாட்களில் உங்களுக்கு முழுதாக அனைத்தையும் விளக்கம் கூற வருகிறேன். அதுவரையிலும் எனை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வனயட்சிக்கு கூட நமதுதிட்டங்கள் முழுதாக தெரியக்கூடாது. எனை ஆசீர்வதியுங்கள்..” என அவனின் பாதம் பணிந்தாள்.
“இப்படி எனை பேசவே விடாமல் நீ மட்டுமே பேசினால் எனது கேள்வி ஞானங்கள் காணாமல் போய்விடும் அல்லவா யாத்திரை..? எனக்கு ஒரு நாழிகை கொடு. உன்னிடம் பேச வேண்டும்.. நீ மட்டுமே தனியாக இத்தனை பாரத்தை தூக்க வேண்டாம். உனக்கு என்றும் தோள் கொடுக்க நான் இருக்கிறேன்.” என நரசிம்மன் அவளை வலுக்கட்டாயமாக அவளது அறைக்கு அவளை அழைத்து சென்று அவளது காதுகளில் சில விஷயங்களை கூறினான்.
“நிஜமாகவா?” ஆச்சரியம் ததும்ப கேட்டாள்.
“ஆம். எனது அடுத்த முயற்சி அது தான். அதனால் நீ உனது ஆராய்ச்சியில் மட்டும் இப்போது கவனம் செலுத்து மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். உனது ஆத்ம பலத்தை சேமித்துவை. அதை களவாடவும் ஆட்கள் வருவர்.. கவனம்..” என அவளை எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து தனது கோட்டைக்கு புறப்பட்டான்.
ஆருத்ரா தந்தையிடம் உரையாடிய பின் தனது பல்லுயிர் தோழர்களை காண தனது தனி வனத்திற்குள் புகுந்தாள்.
அவளின் வரவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கிளிகள், குருவிகள், குயில்கள், புறாக்கள், அன்னப்பச்சி, சக்கரவாக பறவைகள், மான்கள், முயல்கள், முதல் சிங்கம், புலி, ஓநாய் என அனைத்து வகையான வனவாசிகளும் அங்கே இருந்தனர்.
பறவைகள், மிருகங்கள் மட்டுமின்றி அங்கிருந்த தாவரங்கள் கூட அவளின் வரவுக்காய் ஆவலுடன் காத்திருந்தது. அவளது மூச்சு காற்று பட்டதும் இலைகள் எல்லாம் அவளது வரவை தனது சகத்தோழர்களுக்கு பறைசாற்றி அனைத்தும் குதுகலமாக அவளை வரவேற்க தயாராகின.
அதன் முதல் படியாக அனைவரும் தீவிர சண்டையில் ஈடுபட தொடங்கி ரத்தம் வரும்வரையிலும் அடித்துக் கொண்டனர். அவர்களின் கூச்சல் கேட்டு அங்கிருந்த வீரகள் எல்லாம் வந்து அவர்களை பிரித்து விட முயன்று அவர்களும் காயத்துடன் ஒரு பக்கம் விழுந்து கிடந்தனர்.
ஆருத்ரா தனது வாளை கழற்றி வைத்துவிட்டு பல ஒலிகளை எழுப்பும் ஊதுகுழல்களோடு வேகமாக அவ்விடம் வந்து, அடிவயிற்றில் இருந்து ஓர் ஒலி எழுப்பினாள். அதில் போர் செய்து கொண்டிருந்த அனைத்தும் அப்படியே நிற்க, தூரத்தில் இருந்து ஓர் கருசாம்பல் நிறக் காளை அவளை நோக்கி ஓடி வந்தது..
“தீரா.. நில்..” என ஆருத்ரா கூறியும் கேளாமல் பூமி அதிர அவளை நோக்கி வேகமாக கொம்புகளை முன்னே நீட்டி ஓடி வந்தது காளை.

