107 – ருத்ராதித்யன்
அவளை நோக்கி வேகமாக ஓடி வரும் தீரன் எனும் காளை நரசிம்மனின் சீழ்க்கை ஒலி கேட்டதும் அவன் பக்கமாக திரும்பி ஓடியது. அது ஓடுவதைக் கண்டால் சிறிய கருங்குன்று ஒன்று உருண்டு செல்வதைப் போல தான் தெரியும். சிவத்தீரியம் எனும் வகையில் சேர்ந்தது. இறைவனார் சிவபெருமானிடம் இருக்கும் நந்தீஸ்வரர், இந்த வகை காளை தான் என்றும் ஓர் கருத்துண்டு.
அடங்க மறுக்கும் திமிலும், பாறையையும் மோதியுடைக்கும் பலமான உடலும் கொண்டவை இவை. அதீத அன்பை காட்டும் அதே சமயம் கோபமும் அதிகமாகவே வெளிப்படுத்தும். ஆருத்ரா, அவனைக் கன்றாக இருந்தபோது காட்டில் அடிபட்டு கிடந்தவனை தூக்கி வந்து இங்கே விட்டுவிட்டு குருகுலம் சென்றுவிட்டாள். இடையில் ஒரு முறை தான் வந்து கண்டு சென்றாள். அதன்பின் முழுதாக இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. அதனால் தீரனுக்கு அவளின் மேல் அதீத கோபம்.
சிறு கன்றாக இருந்தபோது அவளின் மடியில் படுத்து உருள்வதை போல இப்போது அவன் செய்தால் அவளது கால் எழும்புகள் நொறுங்கிவிடும் என்பதால் நரசிம்மன் அவனை தன் பக்கமாக வரவைத்து அவனை அங்கும் இங்குமாக ஓடவிட்டுக் கொண்டிருந்தான். எப்படியும் சிறிது நேரத்தில் சலித்து அவன் அமரும் போது இருவரும் அவனை நெருங்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.
ஆனால் நமது தீரன் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமே.. அவன் நாள் முழுதும் கூட நிற்காமல் ஓடும் அளவிற்கு உடலில் வலுக்கொண்டு இருக்கிறான் என்பதை நரசிம்மன் அறியவில்லை.
ஆருத்ரா அவன் உடல் வளைவுகளையும், அவன் ஓடும் பொழுது மேலேழும் தசைகளையும் கண்டு அவனின் வலுவை எடைப்போட்டுக் கொண்டிருந்தாள்.
சிறு புன்னகையுடன் பறவைகளை கொஞ்சிவிட்டு முயல்கள் முதல் மற்ற சிறு மிருகங்களை எல்லாம் பார்த்துவிட்டு தீரன் உறங்கும் இடத்திற்கு வந்து அங்கிருந்த பாறையில் அமர்ந்து கொண்டு அவனை அழைத்தாள்.
“தீரா.. போதும் இங்கே வா..”என அவள் இருகை நீட்டியதும் தீரன் அவளிடம் பாய்ந்து ஓடி வந்தான்.
“ஆருத்ரா கவனம்..” நரசிம்மன் ஒரு பக்கமிருந்து கத்தினான்.
தீரன் நேராக அவளின் மடியில் வேகமாக முட்ட சென்று மெதுவாக அவளின் மடியில் தனது தலையை கொடுத்து மூச்சுவாங்கி கொண்டிருந்தான்.
இத்தனை ஆவேசத்திலும் அவனது வேகம் மற்றும் உடல் கட்டுப்பாடு நினைத்து நரசிம்மன் ஒரு நொடி ஆச்சரியம் கொண்டான்.
“என்னை பாதி காடு துரத்திவிட்டு அவள் மடியில் நீ தலை வைத்து படுப்பாயா? நகரு அவள் என்னவள். நான் தான் தலை சாய்ப்பேன்..” என நரசிம்மன் அவனது தலையை நகர்த்தினான்.
“ம்ஆ….” என அடிக்குரலில் அவனிடம் சிலிர்த்துவீட்டு மீண்டும் நன்றாக அவளின் மடியில் தலையை வைத்து படுத்துக் கொண்டான் தீரன்.
“இதெல்லாம் அநியாயமடா.. என்னை மட்டும் அவளிடம் நெருங்கவே விடமாட்டேன் என்கிறீர்கள் அனைவரும்.. “ என சிறுப்பிள்ளை போல கோபித்துக் கொண்டு அவளை தன் பக்கமாக நரசிம்மன் இழுக்க, தீரன் அவர்களுக்கு இடையே தலையை நுழைத்து இடைவெளி அதிகரிக்க செய்வதென இருவரும் மாற்றி மாற்றி அவளை பாடாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
“இருவரும் சற்று நேரம் எனை ஓய்வெடுக்க விடுங்களேன். யுவராஜரே நீங்களும் என்ன அவனிடம் சிறுகுழந்தையை போல மல்லுக்கட்டி கொண்டிருக்கிறீர்கள்? அமைதியாக இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக அமருங்கள்.” என கண்டிப்புடன் கூறிவிட்டு நரசிம்மன் நெஞ்சில் தலைச்சாய்த்துக் கொண்டு தீரனின் தலை வருடினாள்.
இத்தனை நேரம் இருந்த தவிப்பும், கோபமும் தீர்ந்தது போல தீரன் அவளது கைகளை நக்கிவிட்டு இருவருக்கும் தனிமைக் கொடுத்து நகர்ந்து சென்று அவர்களுக்கு காவல் காக்க ஆரம்பித்தான்.
“பார்த்தீர்களா அவனை.. எத்தனை பெரிய பிள்ளையாக வளர்ந்துவிட்டான். உடல் அளவிலும் மனதளவிலும்.. நீங்கள் தான் சிறுபிள்ளை போல நடந்து கொள்கிறீர்கள்..” என ஆருத்ரா நரசிம்மனை தனது மடியில் படுக்க வைத்து அவனது கேசத்தில் விரல் நுழைத்து விளையாடியபடிக் கூறினாள்.
“வளர்ந்துவிட்டால் சிறுபிள்ளை போல நடந்து கொள்ளக்கூடாதா என்ன? நமது மனதையும் உடலையும் எப்போதும் புத்துணர்வோடு வைத்துக் கொள்ள, நம் சிறுபிள்ளை தனத்தை தொலைக்காமல் வைத்து கொள்ளவேண்டும் தேவி.. அப்போது தான் நமது மனதின் கனம் சுமக்க வலு கூடும்..” என நரசிம்மன் கூறிவிட்டு அவளது வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்.
“எனது காதலருக்கு இப்போது என்ன கனம் கூடியதாம்?” ஆருத்ரா அவனது காதுகளில் சிறு முத்தம் வைத்து கேட்டாள்.
“தேவி இதுபோல மீண்டும் செய்தால் நமது திருமண சடங்கின் போது நமது பிள்ளை உனது வயிற்றில் இருக்கும். அதற்கு சம்மதமென்றால் மீண்டும் எனை நீ முத்தமிடலாம்.. மற்றபடி நான் உனை முத்தமிடுவதால் ஒன்றும் ஆகாது..” எனக் கூறி அவளை இழுத்து நெற்றியில் முத்தம் வைத்தான்.
அந்த ஒற்றை முத்தம் கொடுப்பதற்குள் அவன் மேற்கொண்ட பாதையானது அவளை பெருமூச்சு எடுக்க வைத்து பெரிதாகவே பாடு படுத்திவிட்டான் அவளின் நாயகன்.
மெல்ல மெல்ல அவளின் தேக பூக்கள் மலரத்தொடங்கி மலர தயாராக இருக்கும் பூவினை போல அவளும் அவனை முத்தாட தொடங்கினாள். இருவரின் மனமும், உடலும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய, தீரனவன் சத்தம் எழுப்பி இருவரையும் மயக்கம் தெளிய வைத்தான்.
“நமக்கு இடையூரே நாம் தான் அல்லவா தேவி..” என நரசிம்மன் அவளை இறுக்கமாக கட்டியணைத்தபடி கூறினான்.
“நமது ஆசையும், பொறுப்பும் எப்படி இடையூறு ஆகுமாம்?” ஆருத்ராவும் அவனது மடியில் சாய்ந்து கொண்டு நளினங்கள் தெரிய கேட்டாள்.
“தேவி.. நீ இப்படி இருந்தால் நான் எப்படி அடுத்த வேலையை கவனிப்பது?” நரசிம்மன் அவளை கொஞ்சியபடி கேட்டான்.
“இதுவும் முக்கியமான வேலையாக கருத வேண்டுமல்லவா? இன்னும் பத்து திங்களில் தங்களின் வாரிசை நான் பிரசவிக்க வேண்டுமென்றால் இப்போதிருந்தே தயாராக வேண்டுமல்லவா?”
“அப்படி யார் சொன்னது?”
“வேறு யார் தாங்கள் தானே என் தங்கையிடம் கூறிவிட்டு வந்தீர்கள்.. “ என ஆருத்ரா கூறியதும் நரசிம்மன் அவளைக் கூர்ந்துப் பார்த்தான்.
“என் கண்களும் காதுகளும் நீங்கள் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வேலை செய்யும் அன்பரே.. தங்களின் கனத்தை என்னிடம் இறக்கி வைத்துவிட்டு செல்லுங்கள்.. நானும் நீங்களும் என்றோ மனதால் இணைந்து விட்டோம். உடலும் இணைவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பானது மிகவும் பெரியது என்பது அறிவேன். ஆனால் எத்தனை ஆபத்தானது என்பதை முழுதாக இன்னும் நாம் யாரும் அறியவில்லை என்றே எண்ணுகிறேன். வேறு எந்த எதிர்மறை எண்ணமும் நமது மனதை ஆட்டுவிக்க ஆரம்பிக்கும் முன் நமது சந்ததியை தெளிவாக நாம் உருவாக்கலாம்… தங்களுக்கு சம்மதமென்றால் இந்த அம்பினை எனது அறையில் உப்பரிகையில் எய்திடுங்கள்..” எனக் கூறி ஆழமாக அவனது இதழில் முத்தமிட்டு அங்கிருந்து சென்றாள்.
நரசிம்மன் நிலை தான் இப்போது பல குழப்பங்களுக்கு இடையே சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. நாளை குகையை மாற்றியபின் எதுவாயினும் முடிவு செய்து கொள்ளலாம் என்று மனதில் ஓர் முடிவெடுத்து அங்கிருந்து அவனும் புறப்பட்டான்.
அவர்கள் அங்கே வந்தது முதல் நடந்த அத்தனையும் அபராஜிதன் தனது கண்களால் அங்கிருந்த உயரமான மரக்கிளையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆருத்ராவை கண்ட நொடி முதல் அவளை ஆள துடித்துக் கொண்டிருப்பவன் கண்ணெதிரே காதல் நாடகம் அற்புதமாக நடப்பதை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
விரைவாக அவளை அடைந்துவிட அவனது மூளை குறுக்கு வழிகளை ஆராயத் தொடங்கியது.
“இவர்களின் நெருக்கம் எனக்கு பெரும் ஆபத்தை கொடுக்கும். அவர்களை இனி சந்திக்கவே விடக்கூடாது.. விடவே கூடாது..” என மனதில் பேசியபடி தனது குடிலுக்கு புறப்பட்டு சென்றான். அங்கே அகோரி ஒருவன் நெல் கொட்டி வைக்கும் குதிருக்குள் அவனுக்காக காத்திருந்தான்.
“வா அபராஜிதா.. எதற்காக எனை அழைத்தாய்?”
“ஆருத்ராவை உடனடியாக என் வசப்படுத்த வேண்டும். அதற்கு முன்னேற்பாடுகள் முடிந்ததா?” எனக் கேட்டான்.
“இன்று நள்ளிரவு நேரம் நடக்கும் வசிய பூஜையில் அவளது ரத்தம் உனது ரத்தத்தோடு கலந்து விட்டால் அவள் இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன்னையே சேருவாள். நீ இன்று நள்ளிரவு நேரம் நமது இடத்திற்கு வந்து விடு.” எனக் கூறிவிட்டு அந்த அகோரி மறைந்தான்.
அதைக் கேட்டவன் சந்தோஷமாக வனயட்சியை தனியே வரவைப்பது பற்றி சிந்திக்கத் தொடங்கினான். அவன் அப்படி சிந்திக்க தொடங்கிய நேரத்தில் சிங்கத்துரியனும், வனயாத்திரையும் வனயட்சியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.
சிங்கத்துரியன் தனது மனதில் வகுத்திருந்த திட்டத்தின்படி முதல் கட்டத்தை நடத்த ஆரம்பித்தான்.
“இன்று நீங்கள் வேறு குகையை கண்டுபிடித்தே ஆகவேண்டும் அம்மா. வனயாத்திரை சொல்வது உண்மையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். நான் நேற்று கேள்வியுற்ற விஷயம் அதை ஊர்ஜிதப்படுத்தவே செய்கிறது..”
“என்ன கேள்வியுற்றாய்? நீங்க நினைப்பது போல ஒரே இரவில் அங்கிருந்து எல்லாம் மாற்றி வைக்க முடியாது சிங்கத்துரியா.. அது பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. அதை போல அத்தனை முன்னேற்பாடுகளும் செய்து உடனடியாக மாற்றுவது எல்லாம் தற்சமயம் சாத்தியமே அல்ல. நாம் பாதுகாப்பை பலப்படுத்தலாமே தவிர இடமாற்ற முடியாது. அவள் தான் சிறுபெண் நீ ஏன் இப்படி அடம்பிடிக்கிறாய்?”
“நான் சிறுபெண் தான் வனயட்சி ஆனால் இந்த முதல் துளி இந்த சிறு பெண்ணிற்கு வசப்பட்டது போல உனக்கு ஏன் வசப்படவில்லை?” எனக் கேட்டபடி அங்கே வனயாத்திரை தன் உடலில் மறைத்து வைத்திருந்த முதல் துளி காட்டி கேட்டாள்.
அதைக் கண்ட வனயட்சி உடலும் மனமும் அதிர அவளது கைகளுக்கு நடுவே மிளிர்ந்து கொண்டிருந்த துளியைப் பார்த்தார்.
“இப்போதேனும் கூறுவதை கேளுங்கள். உங்களுக்கு அது போன்ற ஒரு இடம் கண்டிப்பாக தெரியவரும். அதற்கான சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன. ஒரே நாளில் மாற்ற முடியாவிட்டாலும் இந்த வாரத்தில் மாற்றி விடலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீங்கள் இதை மட்டும் செய்யுங்கள். நல்ல திடகாத்திரமான உதவியாளர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.” என அவரை அங்கிருந்து வெளியே அனுப்பினான்.
வனயட்சியுடன் அபராஜிதனும் கூட்டத்தில் ஒருவனாக கிளம்பினான். அவர்கள் அனைவரும் கிளம்பியபின், சிங்கத்துரியன் நரசிம்மனை அழைத்துக் கொண்டு அந்த குகைக்குள் ஆருத்ராவுடன் வந்தான்.
“நிச்சயமாக நமது முன்னோர்களின் அறிவானது பிரம்மிக்க தக்கது தான் சிங்கத்துரியரே.. இத்தனை சேகரிப்பை நான் எதிர்பார்க்கவில்லை..” எனக் கூறியபடி ஆருத்ரா வரிசைப்படுத்தி வைத்திருந்த கல் பாதையைக் கூர்ந்து கவனித்தான்.
“இதை நீங்கள் இருவரும் சேர்ந்து தான் முழுதாக கண்டுபிடிக்க முடியும். விடிவதற்குள் பாதையை சரியாக்கிவிடுங்கள்.. தங்களுக்கான உணவும் நீரும் அங்கே இருக்கிறது..” எனக் கூறிவிட்டு சிங்கத்துரியன் அங்கிருந்து சென்று குகை வாயிலை காவல் காக்கத் தொடங்கினான்.
“நமக்கான ஏற்பாடா இது?” நரசிம்மன் ஆருத்ராவின் மையல் கொண்ட விழிகளை பார்த்துக் கேட்டான்.
“ஆணின் சம்மதமின்றி நான் இணை சேரமாட்டேன் யுவராஜரே.. பயம் வேண்டாம் நீங்கள் இந்த குகையை ஆராய்ந்து கொண்டிருங்கள் நான் எனது மிச்ச வேலையை பார்க்கிறேன்..” என ஆருத்ரா கல்மேடை பக்கமாக சென்றாள்.
அவளை தலை முதல் கால வரை அணுவணுவாக ரசித்தவன் கண்களில் அவள் உடை மறைத்த இடங்களும், இருவருக்கும் இடையே இருந்த தூரமும் தான் அவனை வதைக்கத் தொடங்கியது.
அவள் கற்களை குனித்து நிமிர்ந்து எடுத்து அடுக்குவதும், கலைப்பதுமாக நேரம் சென்றது. அவள் மேனி கொண்டிருந்த வாசமானது நரசிம்மனை தேன் உண்ணும் வண்டாக மாற்றிக் கொண்டிருந்தது.
நரசிம்மன் மனமும் புத்தியும் அவளை ஆராய்வத்தில் இருக்க அவன் குகையை ஆராய்வானா என்ன? இதோ இரு காதல் கொண்ட நெஞ்சங்களும் ஒரே புள்ளியில் இணைந்து, நயைந்து, இயைந்து செல்லத் தொடங்கிவிட்டன.. விடிவதற்குள் ஓர் புது ஒளியும் பிறந்திருக்கலாம் அல்லவா?

