108 – ருத்ராதித்யன்
அங்கே வனயட்சியுடன் சென்ற கூட்டமானது காட்டிற்குள் சல்லடைப்போட்டு குகையை தேடிக் கொண்டிருந்தது. அபராஜிதன் மனதிற்குள் நேரத்தை கணக்கிட்டபடி அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டே வனயட்சியை கவனித்துக் கொண்டிருந்தான்.
“நள்ளிரவில் இவர்களை விடுத்து எப்படி செல்வது? இவர்களிடம் சிக்காமல் வசிய பூஜைக்கு சென்று வரவேண்டும்.. “ என மனதிற்குள் முணுமுணுத்தபடி அவன் தனியாக சென்றுக் கொண்டிருந்தான்.
“புதியவனே .. நீ எங்கே இந்த பக்கம் செல்கிறாய்? இந்த திசையில் ஒரு கல் தொலைவு வரை சென்று அங்கிருக்கும் பெரும் பாறைகள் எல்லாம் கணக்கெடுத்து வா..” என அவன் பின்னே வந்தவன் அவனுக்கு வேலைக் கொடுத்தான்.
“தாங்கள் கூறியபடியே செய்கிறேன் ஆசானே..” எனக் கூறியபடி வேகவேகமாக அடற்கானகம் நோக்கி நடந்தான்.
“இவனது நடவடிக்கைகள் யாவும் சந்தேகிக்கும் படியாகவே இருக்கிறது. கோட்டை திரும்பியதும் தலைமை காவலரிடம் கூற வேண்டும்..” என தனக்கு தானே பேசியபடி அவரும் மற்றொரு திசையில் சென்றார்.
அக்கூட்டத்திடமிருந்து தூரமாக வந்ததும் காற்றாய் மறைந்து அகோரிகள் பூஜை செய்யும் இடம் நோக்கிச் சென்றான்.
சரியாக நடுஜாமம் வேளையில் பல உயிர்களை பலியிட்டு ஆருத்ராவின் ரத்த துளியினை வைத்திருந்த வெள்ளி கிண்ணத்தில் சில துளி மூலிகை சாறுகளை விட்டு உடன் அபாராஜிதனின் ரத்த துளியும் சேர்த்தனர். அப்படி சேர்த்ததும் அது சிகப்பு நிறத்தில் கோந்து போல மாறியது. அதிலிருந்து கெட்டவாடையும் பலமாக வந்தது.
“இந்த கலவையை இளவரசியின் உள்ளங்காலில் தடவிவிட்டால் போதும் அவர் என்றும் தங்களின் உடமையாக மாறிவிடுவார். அவரின் எண்ணம், செயல், மனம் என அனைத்திலும் தாங்கள் மட்டுமே நிறைந்து நிலைத்து இருப்பீர்.. இதன் பலன் நாளை நள்ளிரவு வரை மட்டுமே..” என அந்த அகோரி கூறியபடி, ஓர் சிறிய தாமரை இலையில் கட்டிக் கொடுத்தான்.
“இன்று மாலை அவர்கள் இருந்த நெருக்கம் கண்டால் அவர்களின் ஆத்மாவில் பந்தம் அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. நாம் அதை மாற்ற முடியுமா?”
“அவர் ஆத்மாவில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்றால் தாங்கள் பலமுறை அவருடன் இணையவேண்டும். அவரின் ஆத்மாவின் பாதுகாப்பு வளையத்தை உடைக்க நீங்கள் அவருடன் இணைந்திருக்கும் வேளையில் தான் முடியும். அதற்கு அவர் தங்களை எதிர்க்காமல் இருக்க இந்த வசியம் உங்களுக்கு துணை செய்யும்.”
“மறுத்து துடிக்கும் மலரை புணர்வதில் எனக்கு அலாதி பிரியம் தான் அகோரியே ..” என ஆருத்ராவின் மேனியை நினைத்தபடி கூறினான்.
“மற்ற பெண்களை போல இவள் சாதரணமானவள் அல்ல அபராஜிதா.. அவளின் ஆத்ம ஒளியும், பலமும் அன்னை பராசக்தியின் அம்சத்தை கொண்டுள்ளது. அவளை நீ அடக்கவும் முடியாது, வெல்லவும் முடியாது.. அதனால் தான் நாம் இந்த பாதையில் அவளை வசியம் செய்ய முனைகிறோம்..”
“சரி, அவளை அடிமையாக்கி வருகிறேன்..”
“இன்னொரு முக்கியமான விஷயம்.. இந்த வசிய திரவத்தை அவள் உள்ளங்காலில் சேர்த்து 7 நாளுக்குள் நீ அவளை இணைந்து இருக்க வேண்டும். அதற்கு மேல் இந்த வசியப்பொருள் பலன் கொடுக்காது. “ என்றும் எச்சரித்து அனுப்பினான்.
பல விஷயங்களை அடியாழம் வரையில் சிந்தித்து செயல்படும் அபராஜிதன் கூட ஆருத்ரா விஷயத்தில் வசியபூஜை முடிந்ததும் அவள் இவனின் அடிமையாகி விட்டாள் என்ற மெத்தனத்தில் மறையாத புன்னகையுடன் மீண்டும் வனயட்சி இருக்குமிடம் வந்து அவன் சென்ற திசையில் சில பெரிய பாறைகள் நூறு அடி நீளம் வரையிலும் நீண்டு இருப்பதாகக் கூறி அவரை அழைத்தான்.
“நீ புதியவன் தானே..? உனை யார் இங்கே அழைத்து வந்தது? தலைமை ஆசான் எங்கே? அவரை உடனடியாக இங்கே வரச்சொல்..” என அவனிடம் கேள்வி கேட்டுவிட்டு மற்றொருவனிடம் கட்டளையிட்டு அனுப்பினார்.
“வணங்குகிறேன் தாயே.. “
“புதிதாக வந்தவனை ஏன் அழைத்து வந்தீர்கள்? நமது விசுவாசிகளை மட்டும் தானே அழைத்து வர சொன்னேன்..” என கோபமாகக் கேட்டார்.
“மன்னிக்கவேண்டும் குருதேவி.. இவனுடன் இருந்தவனை தான் நான் வரச்சொல்லி இருந்தேன். இளைய இளவரசியார் தான் அந்த உதவியாளன் அவருக்கு வேண்டும் என்று கூறி இவன் ஆஜானுபாகுவாக இருக்கிறான் இவனை அழைத்து செல்லும்படி கூறினார்..” என பணிவுடன் சற்று தள்ளி அவரை அழைத்து சென்று கூறினார்.
“அப்படியா.. சரி.. அவனை உமது நேரடி பார்வையில் வைத்து கொள்ளுங்கள். அவனது பெயர் என்ன? இரண்டாம் அம்புவி கோட்டைவாசி என்பதை மட்டும் அறிவேன்..”
“அவனது பெயர்.. ஒரு நிமிடம் குருதேவி அவர்களே..” என அவனை அழைத்தார்.
“தமக்கு புத்தி மழுங்கிவிட்டதா தலைமை ஆசானே? பெயர் கூட அறியாமல் தான் இவனை அழைத்து வந்தீர்களா? அனைவரும் உடனடியாக செல்லுங்கள்.. நானே பார்த்து கொள்கிறேன்..” என கோபப்பட்டு அனைவரையும் அங்கிருந்து விரட்டினார்.
அவரின் கோபத்தை பற்றி ஏற்கனவே அறிந்ததால் அங்கிருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு கோட்டைக்கு திரும்பினார் தலைமை ஆசான்.
இங்கே வந்த வேலை பற்றி முழுதாக அறியாமல் பாதியில் திரும்பி செல்வதில் அபராஜிதன் மனம் பெரிதும் சுணக்கம் கொண்டது. அருகில் வந்தவனிடம் காரணம் கேட்டுக்கொண்டே வனயட்சியை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தான்.
“பினால் திரும்பி பார்க்காதே அதற்கு தனியாக தண்டனை கிடைக்கும். முன்னால் பார்த்து நடந்து வா.. ஆமாம் உனது பெயர் என்ன நான் கூட நேற்றிலிருந்து உன்னிடம் கேட்கவே இல்லை..”
“எனது பெயர் அறிவானந்தன்.. எனது தாயார் ஆனந்தா என அழைப்பார்கள்..” எனக் கூறி பொய்யாக கண்ணீர் வந்ததைப் போல கன்னங்களைத் துடைத்துக் கொண்டான்.
“சரி அழாதே.. நீ இங்கே வந்துவிட்டாய் அல்லவா.. இனி நாங்கள் இருக்கிறோம். நீ அநாதையல்ல ஆனந்தா..” என அந்த உதவியாளன் சோமன் அவனை தோள் மேல் கையிட்டு அணைத்தபடி நடந்தான்.
அபராஜிதனும் குடில் சென்றதும் ஆருத்ராவின் அறைக்கு செல்லும் மார்க்கத்தை சிந்தித்தபடி அவனுடன் நடந்தான்.
காட்டிற்கு சென்ற அனைவரையும் காவலர்கள் உடல் முழுதும் சோதனை செய்து ஆதுர சாலையின் உள்ளே அனுமதித்தனர்.
“நமது சாலைக்குள் நுழைய ஏன் சோதனை செய்கின்றனர் சோமரே?”
“கானகம் சென்று வரும் அனைவருக்கும் இந்த விதி பொதுவானது. நமது கானகத்தில் அரிய விஷயங்கள் பல இருக்கின்றன. அதை யாரும் எடுத்து வந்து வெளியே கொடுக்ககூடாது என்பதற்காக தான் இந்த சோதனை. உனக்கொரு விஷயம் தெரியுமா? நமது கானகங்களில் பல கள்ள வேட்டைக்காரர்கள் பல உயிர்களை சட்டவிரோதமாக வேட்டையாடி கொண்டு செல்கின்றனராம். அதனால் எல்லா கானகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு தலைமை ஏற்று இருப்பது நமது மூத்த இளவரசியார் ஆருத்ரா சிங்கமாதேவி தான். அவரை நீ கண்டிருக்கிறாயா?”
“அப்படியா? இல்லையே சோமரே.. நானே இரண்டாம் அம்புவி கோட்டை விட்டு இங்கு தான் முதன் முதலாக வந்திருக்கிறேன்.. அவர் இளவரசி என்பதால் மிகவும் அழகாக இருப்பாரா?”
“நமது நாட்டில் அனைத்து பெண்களும் அழகும், குணமும், வீரமும் நிறைந்தவர்கள் தான் ஆனந்தா.. ஆனால் ஒரு சிலருக்கு தான் பிறப்பிலேயே ஒரு தேஜஸ்ஸும், கம்பீரமும், ஆளுமையும் பார்த்த நொடியில் தென்படும். அப்படி பட்டவர் தான் நமது ஆருத்ரா சிங்கமாதேவி. அவரது பெயரை போலவே அவரும் அத்தனை கம்பீர அழகும், அடங்காத வீரமும் கொண்டவர்.. அவர் அவ்வப்போது வனதேவி இங்கே இருந்தால் காண வருவார். நேற்று மாலை கூட வந்தார்.”
“அப்படியா.. நான் பார்க்கவில்லையே..” முகத்தை சோகமாக வைத்தபடி கூறினான்.
“சரி கவலை படாதே அடுத்தமுறை அவர் இங்கே வரும்பொழுது நான் உனக்கு கூறுகிறேன்..”
“சரி சோமரே.. அப்போது இளைய இளவரசியார் பெயர் என்ன? அவர் எப்படி இருப்பார்?”
“அவருக்கு இப்போது 15 அகவை தான் முடிந்திருக்கிறது. தமக்கையை போலவே வீரமும், அழகும் நிறைந்தவர். இளையவர் என்பதால் மிகவும் சூட்டிகையானவர். அவரின் மேலே இங்கு அனைவருக்கும் அன்பு அதிகம். அவர் எத்தனை தொல்லைகள் கொடுத்தாலும் வனயட்சி அவர்கள் கோபம் கொள்ளவே மாட்டார்கள். யாருமே அவரிடம் கோபம் கொள்ள முடியாது அப்படியான முகமும் சிரிப்பும் அவருக்கு..”
“நேற்று வந்தது?”
“அது அவரின் பணிப்பெண். அவர் இங்கே அதிகம் வரமாட்டார். வனயட்சி அவர்களின் புதல்வர் சிங்கத்துரியன் தான் அவரது குரு. அதனால் அவருடன் தான் எப்போதும் கலைகள் பயின்று கொண்டிருப்பார்.”
“அவரை குருகுலம் அனுப்பவில்லையா?”
“சிங்கத்துரியனை விட சிறந்த செயல்முறை ஆசான் யாரும் நான் காணவில்லை அதனால் அவரிடம் தான் நான் அனைத்தும் பயில்வேன் என்று அடம்பிடித்து அவரிடம் தான் கல்வி கலைகள் அனைத்தும் கற்று வருகிறார்.. சிங்கத்துரியரும் மிகவும் திறமைசாலி. வனயட்சி அவர்களின் அறிவும், திறனும் அவருக்கு இரண்டு மடங்காக வந்துள்ளது என்று எங்கள் ஆசான் கூறுவார். தலைமை ஆசானுக்கு சந்தேகம் வந்தால் அவரை அழைத்து தான் மருத்துவம் பார்க்க சொல்வார். அத்தனை கற்றவர் அவர். பல ஆராய்ச்சிகள் செய்து புது புது மருந்துகளை கண்டுபிடிப்பார். இப்போது கூட அவரும் இளைய இளவரசியும் ஓர் முக்கியமான கண்டுபிடிப்பில் மும்முரமாக இருப்பதாக கேள்வியுற்றேன்.. அவர்களது ஆராய்ச்சி கூடம் எல்லாம் கானகத்தின் உள்ளே எங்கெங்கோ அமைந்திருப்பதாக கூறுவர். அவற்றில் ஒன்றையேனும் நான் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். பார்ப்போம். இங்கே நன்றாக வேலை கற்று கொண்டவர்களை இளைய இளவரசியார் அவ்வப்போது வந்து அழைத்து செல்வார். நானும் அப்படியான ஒரு வாய்ப்பிற்காக தான் காத்திருக்கிறேன்..” எனக் கூறியவன் தனது பகுதிக்குள் நுழைந்தான்.
அடுத்த நாள் மதியம் வனயட்சி வரும் வரையிலும் அவர்கள் அனைவரும் ஆதுரசாலையிலேயே இறுத்திவைக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல அபராஜிதன் தான் அங்கிருந்து எங்கும் செல்ல முடியாமல் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
அங்கிருந்த தலைமை ஆசான் அவனை அவரை விட்டு எங்கும் நகரவிடாமல் அவரது கண்பார்வையிலேயே வைத்துக் கொண்டிருந்தார். அவரை அணுவணுவாக கொய்து எடுத்து ஆராய்ச்சி செய்வதென்று மனதிற்குள் முடிவு கட்டி அவரை வஞ்சத்துடன் பார்த்தான்.
நண்பகல் வேளையில் வனயட்சி அங்கே வந்தபின் அங்கிருந்தவர்களை ஓய்வெடுக்க குடில்களுக்கு அனுப்ப ஆணையிட்டதும் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.
அபராஜிதன் மட்டும் மெல்ல மெல்ல அங்கிருந்து கோட்டையை ஒட்டியபடியே நடந்து சென்று உள்ளே செல்லும் மார்க்கம் பார்த்தபடி நடந்தான். அவனின் பின்னே சோமன் வந்து அவனோடு சேர்ந்து பேசியபடியே குடில் பக்கம் சென்றனர்.
“இனி ஒரு நொடியும் தாமதிக்காமல் இவனை மயங்கவைத்துவிட்டு ஆருத்ரா இருக்குமிடம் செல்லவேண்டும்..” என தனக்கு தானே பேசிக்கொண்டு அவனது பின்னங்கழுத்தில் விரல் கொண்டு அழுத்த சோமன் மயங்கி விழுந்தான்.
உடனடியாக அபராஜிதன் கரும்புகையாக உருமாறி அங்கிருந்து ஆருத்ராவின் அறை இருக்கும் பக்கமாக பறந்து சென்றான். அவளது அறை உப்பரிகைக்கு நூறு அடி முன்பே அவனை ஓர் வலிய சக்தி தடுத்தது. அவனால் புகையாக அந்த எல்லையைத் தாண்ட முடியாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தான்.
“நேற்று இவ்விடம் வந்தபோது இப்படி இல்லையே.. இன்று ஏன் ஏதோ ஒன்று தடுக்கிறது..” என அவன் சிந்தித்தபடி முன்னே பார்க்க, ருத்ரக்கோட்டையின் அரசியார் குலதெய்வ உற்சவர் சிலையுடன் சில புண்ணிய தீர்த்தங்களை அரண்மனை முழுதும் தெளித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டதும் அவன் தனது சக்தியை தடுப்பது எதுவென உணர்ந்து அங்கிருந்து சென்று ஆருத்ராவின் வனத்தின் அருகே இருக்கும் ஆலமரத்தில் வந்தமர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து அங்கே நரசிம்மனும், ஆருத்ராவும் ஒன்றாக கைக்கோர்த்தபடி அவ்விடம் நோக்கி வந்தனர். அவர்களின் நெருக்கம் கூடி இருப்பது முதல் பார்வையிலேயே அபாராஜிதனுக்கு தெரிந்தது. அடுத்த நொடி அவன் காற்றாக மாறி அவள் பாதம் வைக்கும் தடத்தில் அந்த வசிய கோந்தை கொண்டு வந்து போட்டு விட்டு சற்று தூரத்தில் மறைந்து நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆருத்ரா சரியாக அதன் அருகே வந்து மேல் கால் வைக்கும்போது..

