109 – ருத்ராதித்யன்
தீரன் அவனது இடத்தில் இருந்து ஓடி வந்து அந்த வசிய மருந்தினை மண்ணிற்குள் புதைத்து ஆருத்ராவினை தடுத்து நின்றான்.
“என்ன ஆனது தீரா? ஏன் இப்படி முன்னால் வந்து நிற்கிறாய்?” என நரசிம்மன் அவனது கண்களை பார்த்தபடிக் கேட்டான்.
தீரனின் கண்கள் அபராஜிதன் அங்கே காற்றாய் கலந்து நிற்கும் இடத்தினை பார்த்தபடி, “ம்மாஆ..” எனக் கத்தினான்.
“பசிக்கிறதா? இங்கிருக்கும் புற்களை சாப்பிட விருப்பமில்லையா உனக்கு? வா உனக்கு என்ன வேண்டும் கூறு நான் கொண்டு வருகிறேன்..” என ஆருத்ரா அவனது பசியாற்றும் பொருட்டு அவனை அவனது இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றாள்.
ஆருத்ரா அந்த பக்கமாக திரும்பி நடந்து சென்றதும் நரசிம்மன் தீரன் மண்ணில் புதைத்த தாமரை இலையை குச்சி வைத்து கிளறி என்னவென்று பார்த்தான். உள்ளிருந்த சிகப்பு கோந்து மண்ணை தொட்டதும் கருமையாக மாறியிருந்தது.
அதனை கண்டதும் நரசிம்மன் தீரன் பார்த்த திசையை அருகே சென்று பார்த்தான். அங்கே அபராஜிதன் இப்போது இல்லை ஆனால் அவன் அவ்விடம் கடந்து சென்ற தடமாக அவனது காலடி தடம் அங்கே இருந்தது.
நரசிம்மன் மனதில் கோபம் எரிமலையாக கனன்று கொண்டிருந்தது. ஆனாலும் இது நேரடியாக அபராஜிதனுடன் யுத்தம் புரியும் சமயமல்ல என்பதையும் அவன் உணர்ந்தே இருந்தான்.
ஆம்.. அபராஜிதன் இங்கிருப்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டது..
இவர்கள் கோட்டை வந்து சேர்ந்ததுமே அமரனும் அன்று இரவு இங்கே வந்து சேர்ந்தான். மந்திர உச்சாடனங்கள் அவனது வேகத்தை கூட்டியத்தோடு பல அரூபங்களை அவனது கண்களுக்கு இப்போது காட்டிக் கொண்டிருந்தது.
அபராஜிதன் மருத்துவ குழுவில் இணைந்த அடுத்த நாள், வனயட்சி இருக்கும் குடிலுக்கு சற்று தூரம் முன்னே காற்றாய் இருந்து மனிதனாக உருவெடுப்பதை அவன் அப்பக்கமாக பறந்து வரும்போதே கண்டான். அவனது செய்கைகள் யாவும் அவனுக்கு தெரியாமல் கண்காணித்தபடி பின்தொடர்ந்து அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவனுக்கு மேலே பறந்தபடி அமரன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அபராஜிதனுக்கு வேண்டிய பொருட்களும், அவனது அகோரி கூட்டத்தாரும் அங்கிருக்கும் வனத்தில் ஓர் மாய திரை ஏற்படுத்தி அதற்கு நடுவே குடில் அமைத்து தங்களது பணியினைச் செய்துக் கொண்டிருந்தனர்.
காட்டில் சுற்றி திரியும் சில மிருகங்களை வசியம் செய்து தானாக அவை தங்களது உயிரினை பலியிட வைத்து அபராஜிதனுக்கு மந்திர பலத்தை அதிகரிக்க ஏதுவாக அத்தனையும் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த பக்கம் எந்த காவல் வீரனும் வந்து திட புத்தியுடன் நடமாட முடியாமல் அடுத்த நாள் உடல்நிலை மோசமடைந்து விடுப்பு எடுப்பதும் ஆரம்பமானது.
வனயட்சியின் மருத்துவ அறிவினை விஸ்வக்கோட்டை அரசன் மூலமாக முன்பே அபராஜிதன் அறிந்திருந்தாலும் இங்கே நேரில் அவரது திறன்கள் அனைத்தையும் காணும்போது, அவரை முழுமையாக அவனுக்கே அடிமையாக மாற்ற வேண்டுமென்பதில் மிகவும் தீவிரமாக இருந்தான்.
அதற்காகவே பல பூஜைகளும், தந்திரங்களும் அவனது மனதிலும், மூளையிலும் உருவாகிக் கொண்டிருந்தது. அவற்றை எல்லாம் நிறைவேற்ற தான் அந்த அகோரிகள் கூட்டம்.
தீவிரமான பக்தி கொண்டவர்கள் இவனது பிடியில் இருந்து அவனுக்கு வேண்டிய வேலைகள் செய்வது தான் என்ன மாயமென்று புரியவில்லை.. அதுவும் விரைவில் ஏனென காண்போம்.
வனயட்சியை அவரே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை முழுதாக முழுமனதுடன் அவனது நலம் விரும்பியாக மாற்றுவதே அவனது திட்டம். அதில் பல தந்திரங்களும் சில மந்திரங்களும் இடம்பெறுகிறது.
அமரன் அவன் சென்று வந்து செய்த அனைத்தும் பார்த்துவிட்டு சத்தமில்லாமல் நரசிம்மன் இருக்கும் அறைக்கு சென்றான்.
“வாருங்கள் இளவலாரே.. ஏன் இவ்வளவு தாமதம்?” என அவனுடன் ஆருத்ராவின் அறைக்கு சென்றான்.
அங்கே அவர்களுக்கு முன் வனயாத்திரையும், சிங்கத்துரியனும் ஆருத்ராவின் அருகே அமர்ந்து தீவிரமாக விவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.
“என்ன அண்ணா இத்தனை நேரமா நான் சொன்னதை செய்து வருவதற்கு?” என வனயாத்திரை அவனது கைகளில் இருந்த சிறு மூட்டையை எடுத்து வந்து அங்கிருந்த மேஜையின் மேல் விரித்து உள்ளிருந்த குடுவையை எடுத்து நிலவொளி படும் இடத்தில் வைத்து தனது உடையில் மறைத்து வைத்திருந்த முதல் துளி நீரை அதனுள்ளே வைத்தாள்.
அந்த நீரானது உடையாமல், தனது நீர் தன்மையையும் இழக்காமல் இப்போது இன்னும் அதிகமாக நீல நிறத்தில் மிளிர்ந்துக் கொண்டிருந்தது.
“இதை வைத்து அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் யாத்திரை?” ஆருத்ரா கேட்டாள்.
“குடுவையில் ஓர் உயிரை பிறக்க வைப்பது தான் உத்தேசம். அதற்கு பின்னே தங்களது ஆராய்ச்சி இதனால் வெற்றி பெறுமா என்பதை ஆராயலாம். குருவே எனக்கு சில மூலிகைகள் வேண்டும். தங்களது தாயார் அறையில் அவை இருக்குமென்று எண்ணுகிறேன்..” என ஆருத்ராவிற்கு பதில் கொடுத்துவிட்டு சிங்கத்துரியனிடம் கேட்டாள்.
“இது உனது கோட்டை யாத்திரை. நீ நுழைய முடியாத இடமென்று எதுவும் இல்லை.. கவனம்.” என்று மட்டும் கூறி தனது அனுமதியை தந்தார் அவர்.
“உங்களுக்கு ஓர் முக்கியமான விஷயம் தெரியுமா?” நரசிம்மன் கேட்டான்.
“நிறைய முக்கியமான விஷயங்கள் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.. எதை குறிப்பிடுகிறீர் யுவராஜரே?” ஆருத்ரா சிரிப்புடன் கேட்டாள்.
“அபராஜிதன் குறித்து..” அமரன் கூறினான்.
“மெல்ல பேசுங்கள் அவனது அடிமை ஆத்மாக்கள் அவனது பெயர் கேட்டால் இங்கே வந்து விடும்..” என வனயாத்திரை கூறியதும் நரசிம்மனும், அமரனும் சிரித்தபடி அவளது காதுகளை பிடித்துத் திருகினர்.
“ஆமாம் ஆமாம்.. நாம் அந்த இருவரின் பெயரையும் கூறவே கூடாது. அடையாள சொல் வைத்து குறிப்பிட்டு பேசுங்கள். சிங்கத்துரியரே சரி தானே?” என ஆருத்ரா கேட்கவும் நரசிம்மனும் அமரனும் தங்களது இடையில் இருந்த ஓலை சுருள்களை அவர்கள் முன் வைத்தனர்.
அது அரசகேசரி அபராஜிதனுக்கு அனுப்பிய ரகசிய ஓலைகள். அரசகேசரி ஆதித்ய நாட்டின் குறிப்பிட்ட நில அளவீடு குறிப்புகள் அடையாளங்கள் கூறி எழுதியிருந்தான். அங்கெல்லாம் இவர்களது ரகசிய மையங்கள் தொடங்கி ஆதித்ய நாட்டினையே முழுதாக ஆக்கிரமித்து விடவேண்டும் என்பது தான் முதல் திட்டம். அம்புவிக் கோட்டை தான் அவர்களது முதல் இலக்கும்.
“இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என ஆருத்ரா கேட்டாள்.
“முதலில் நான் எனது பயணத்தில் கண்ட சில விஷயங்களை உங்களிடம் பகிர்கிறேன். எனக்குள் ஓர் எண்ணம் இருக்கிறது. அமரர் கூறியதையும் வைத்து நான் புதுவிதமான சிந்தனையை மேற்கொண்டிருக்கிறேன். அது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பதும் தெரியாது.. சற்றே அதீத கற்பனையாக கூட தோன்றலாம்..” என புதிருடன் நரசிம்மன் ஆரம்பித்தான்.
“யுவராஜரே.. எங்களின் ரத்த அழுத்தத்தை கூட்டாமல் முதலில் விஷயத்தை கூறுங்கள்.. குருவே நமது பாதுகாப்பு வலையை நிறுவலாமா?” என யாத்திரை கேட்டாள்.
“அது ஏற்கனவே நான் நிறுவிவிட்டேன் யாத்திரை. நீ அமைதியாக இங்கே அமர்..” எனக் கூறி ஆருத்ரா அவளை பிடித்துக் கொண்டாள்.
“இப்போது நான் எங்கே ஓட போகிறேன்? ஏன் இப்படி உன் பூப்போன்ற எக்கு கரங்களால் எனை பிடித்துக் கொண்டிருக்கிறாய் அக்கா?”
“நீ அந்த கயவர்களை விடவும் மோசமானவள்.. அவன் ஒளி பட்டு மறைந்தால் நீ கண் இமைக்கும் நொடிக்குள் காணாமல் போவாய்.. உனை இனி எங்கும் நான் தனியாக விடுவதாக இல்லை..”
இப்படியாக இருவரும் மாறி மாறி வசைப்பாடிக்க கொண்டிருக்க ஆண்கள் மூவரும் அவர்களின் செயல்களை குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சகோதரிகளே.. போதும்.. கொஞ்சம் அமைதியாக இருவரும் அமர்ந்தால் நாம் மேற்கொண்டு பேசலாம்..” என அமரன் கூறிய பிறகு இருவரும் வாய்மூடி அமைதியானாலும் கைகள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தன.
“இவர்களின் சண்டைகள் எப்போதும் ஓயாது இளவலாரே.. தாம் பேச தொடங்குங்கள்..” என சிங்கத்துரியன் கூறியதும் நரசிம்மன் ஒரு சில விஷயங்களை மட்டும் கூறிவிட்டு இப்போது தான் செய்திருக்கும் ஏற்பாடுகள் வரை கூறி தனது பேச்சை நிறுத்தினான்.
“தங்களின் புதுமையான சிந்தனை என்ன யுவராஜரே?” என ஆருத்ரா மென்சிரிப்புடன் வினவினாள்.
“அது உனக்கும் தெரியும் தேவி.. இத்தனை நேரத்தில் நீ அதை நூல் பிடித்திருப்பாய் என்றே நினைக்கிறேன்..”
“ஆனாலும் தங்களின் திருவாய் மலர்ந்து கூறுவதில் எனக்கும் ஓர் பலம் கூடும்..”
“இதைப்பற்றி ஏற்கனவே நீங்கள் இருவரும் பேசி இருக்கிறீர்களா?” என அமரன் கேட்டான்.
“அண்ணா.. காதலர்கள் நடுவிலே ஆயிரம் கதைகள் பேசப்படும். நமக்கு அதெல்லாம் எதற்கு? நம்மால் முடியாத அந்த வேலை என்னவென்று நாம் அறியலாம்..” என யாத்திரை கூறவும் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
“அப்பாடா.. எல்லாரும் சிரித்துவிட்டீர்கள்.. சரி இப்போது கூறுங்கள் யுவராஜரே.. அப்படி என்ன புதுமையான சிந்தனை உங்களுக்கு தோன்றியது?”
“அவர் அண்ணா.. இவர் குரு.. இவள் அக்கா.. நான் மட்டும் யுவராஜரா உனக்கு?” என நரசிம்மன் அவளிடம் கோபம் கொண்டான்.
“நீங்கள் தங்கள் உயிரை பலமுறை பணயம் வைத்து பெற்று வந்த வெற்றி பட்டத்தினை சொல்லி உங்களை அழைத்தால் தாம் சந்தோஷம் கொள்வீர்கள் என்று நினைத்தேன். சரி உங்களை இளவரசே என்றே அழைக்கவா?” நரசிம்மனின் உரிமை கோபம் புரிந்து வேண்டுமென்றே இடக்காக கேட்டாள்.
“அப்போதும் நான் வேறு ஆள் தானா? நீ இங்கே இருக்க வேண்டியதில்லை. இது யுவராஜனின் கட்டளை. நீ இங்கிருந்து செல்லலாம்..” என நரசிம்மன் கோபமாய் மொழிந்தான்.
“தங்கள் உத்தரவு யுவராஜரே..” என மீண்டும் அழுத்தமாக கூறிவிட்டு வெளியே ஓடினாள் வனயாத்திரை.
“என்ன நரசிம்மா நீ? அவளில்லாமல் நாம் என்ன பேசப்போகிறோம்?” என அமரன் கேட்க, மற்ற இருவரும் நரசிம்மனை முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஏன் இப்படி செய்தீர்கள் யுவராஜரே?” என சிங்கத்துரியன் முதலில் கேட்டான்.
“பதில் கூறுங்கள் யுவராஜரே.. அவளை ஏன் இப்போது இங்கிருந்து விடுவித்தீர்கள்?” என ஆருத்ராவும் கோபமாக கேட்டாள்.
“விடுவித்தானா? என்ன தான் நடக்கிறது இங்கே? சிறு குழந்தை முகம் வாடி செல்கிறாளே என்று நான் அவனை கேட்டால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என அமரன் குழப்பமான முகபாவத்துடன் அவர்களை பார்த்துக் கேட்டான்.
“அவரது ஆசை மச்சினி இங்கே அடைப்பட்டு அமர்ந்திருப்பதை காண சகிக்காமல் இருவரும் நாடகமாடி இப்போது அவள் எங்கள் பிடியில் இருந்து வெளியே ஓடிவிட்டாள்.. இது தான் நடந்தது இங்கே.. இப்போது அவள் எங்கே சென்று எந்த வம்பை விலைக்கு வாங்க போகிறாளோ? நீங்கள் அவளுக்கு அதிகமாக இடம் கொடுக்கிறீர்கள் இளவரசே.. இது நல்லதல்ல..” என ஆருத்ரா கோபமாகவே மொழிந்தாள்.
“இப்போது நான் எனது யோசனையை சொல்வதா வேண்டாமா?” என நரசிம்மனும் கோபமாக கேட்டான்.
“ஒன்றும் தேவையில்லை.. அவளை முதலில் இங்கே அழைத்து வாருங்கள்.. அதுவரை எதுவும் நீங்கள் கூறவும் வேண்டாம் நாங்கள் கேட்கவும் வேண்டாம்..” என ஆருத்ராவும் கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றாள்.
சிங்கத்துரியனும் அங்கிருந்து நரசிம்மன் அருகே வந்து மரியாதை நிமித்தமாக வணங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“அடேய் நான் பல மைல்கள் பறந்து வந்தது உங்களின் கோபத்தை பார்க்கத்தானா? இது தேவையா?” என அமரன் தான் சிறுபிள்ளை போல அவர்களை பின்தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றான்.

