110 – ருத்ராதித்யன்
வனயாத்திரை அந்த ஆலோசனை அறையில் இருந்து வெளியே வந்ததும் நேராக ஆரதுசாலையின் பின்னால் இருக்கும் மருந்து கிடங்கிற்கு சென்று நின்றாள்.
அங்கே அவளுக்கு தேவையான மூலிகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு கணக்கும் கூறிவிட்டு, வனயட்சியின் தனிபட்ட மருத்துவ அறைக்கு சென்றாள். அங்கே வனயட்சி தான் செய்த மற்றும் செய்யும் அனைத்து ஆராய்ச்சி தரவுகளையும் பத்திரமாகக் குறித்து வைத்திருப்பார். அங்கே கல் தூணிற்க்கு பின்னால் ஓர் இரகசிய அறை உண்டு. அங்கே தான் இந்த குறிப்புகள் தங்கத் தகட்டில் குறித்து வைக்கப் பட்டிருக்கும். தனி தனி நீள் சதுர தகடாக தங்கத்தை உருக்கி, எழுத்துக்களை பொறிக்க ஏதுவாக கொடுத்திருப்பர்.
எத்தனை தகடுகளை வேண்டுமானாலும் கொக்கியில் முன்னும் பின்னுமாக சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கொக்கியில் நூறு முதல் நூற்றி ஐன்பது தங்கத்தகடுகள் இடம்கொள்ளும். ஒவ்வொரு தொகுப்பிலும் முதலில் அதில் அடங்கியிருக்கும் மொத்த தலைப்பும், அதனுடன் சிறிய முன்னுரையும் இடம்பெறும். அதில் எழுத்துக்களைப் பொறிக்கும் கருவி கொண்டு சிறு குறிப்பாக ஒவ்வொரு ஆராய்ச்சியும் அதன் முடிவும் எழுதப்பட்டிருக்கும்.
அதன் நீண்ட ஆழமான விளக்கங்கள் எல்லாம் பின்னால் இருக்கும் தங்கத்தகடுகளில் இருக்கும். இப்படியாக பல நூறு தகடு தொகுப்புகள் அந்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
வனயாத்திரை இதுவரை அந்த அறைக்குள் தான் சென்றதே இல்லை. ஏனென்றால் அந்த அறைக்குள் நுழைய வனயட்சியின் கைவிரல் ரேகை தேவை. அவர் அந்த தூணின் இரண்டாம் அன்னத்தின் இறக்கையில் கட்டைவிரல் வைத்து அழுத்தினால் மட்டுமே இந்த கதவு திறக்கும். அதை இன்று வனயட்சி இல்லாமல் எப்படி திறக்கப்போகிறாள் என்பதே பெரும் பிரச்சனை.
இது போன்ற பிரச்சனைகளுக்கு கணினி யுகத்தில் பல வழிகள் இருந்தாலும், அந்த அரசகால யுகத்தில் எப்படி திறக்க முடியும் என்கிற பெரும் யோசனை வருவது இயல்பல்லவா ?
ஆனால் அங்கே ஓர் ஆச்சரியம் என்னவென்றால் அவளது கைவிரல் ரேகை வைத்ததும் அந்த தூண் கதவு திறந்து கொண்டது தான். அது எப்படி?
அந்த அறைக்குள் சென்றவள் தனக்கு தேவைப்படும் அனைத்து தொகுப்புகளையும் அள்ளி தனது ஜோல்னா பையில் திணித்துக் கொண்டு சத்தமில்லாமல் அங்கிருந்து தனது அறைக்கு சென்று பூட்டி அமர்ந்து கொண்டாள்.
அந்த தகடுகளின் முன்னுரை வைத்து ஒவ்வொன்றையும் பிரித்து தனக்கு இப்போது அவசியம் என்று கருதியவற்றை மட்டும் தனது பிரயாண பெட்டியில் பத்திரமாக வைத்தாள். மற்ற தொகுப்புகளை எல்லாம் தனது அறையிலேயே இருக்கும் ஓர் இரகசிய அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு நரசிம்மனை தேடிச் சென்றாள்.
“எங்கே சென்றாய் நீ? உனை எங்கெல்லாம் தேடுவது? காற்றில் பறக்கும் அமரரே உனை காண முடியவில்லை என்று சோர்வாக படுத்துவிட்டார்..” என நரசிம்மன் சற்று காட்டமாகவே கேட்டான்.
“போதுமடா உங்கள் நடிப்பு.. வீணாக எனை அலைக்கழித்தவனே நீ தான்.. நான் தான் கூறினேனே அவள் ஆதுரசாலை சென்று இருக்கலாம் என்று. நீ எனை அந்த பக்கமே போகவிடவில்லை. இதில் உனை வேறு நான் சுமந்து பறப்பதில் என்னுடல் எத்தனை சக்தியை செலவழிக்கிறது தெரியுமா? எனது முதுகில் ஏறி சவாரி செய்து எனை பாடாய்படுத்திவிட்டு நல்லவன் வேஷம் போடாதே.. இன்னும் கொஞ்சம் பலம் இருந்தால் உனை இப்போதே இங்கிருந்து கீழே வீசி இருப்பேன்..” என அமரன் மூச்சு வாங்கியபடி பேசினான்.
“சரி சரி.. சென்ற காரியம் என்னானது?” என நரசிம்மன் அவளை அழைத்து அமரன் அருகே அமரவைத்துக் கேட்டான்.
“நாம் ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும்போது முடியவில்லை என்று ஏற்றுக் கொண்டதுண்டா யுவராஜரே?” என வனயாத்திரை கூறி கட்டை விரல் உயர்த்திக் காட்டி சிரித்தாள்.
“ரேகை வேண்டுமே என்ன செய்தாய்?” எனக் கேட்டபடி சிங்கத்துரியன் அங்கே வந்தான்.
“குருவே அங்கே ரேகை எல்லாம் தேவையில்லை. அது ஓர் அழுத்தும் கருவி அவ்வளவு தான். ஆனால் என்ன அங்கேயே இரண்டு விதமான அறைகள் உள்ளது. ஒன்று வடக்கு, இன்னொன்று தெற்கு. தங்கள் தாயார் வைத்திருப்பது வடக்கு பக்கமிருக்கும் அறையில். மற்றவர்கள் தெற்கு பக்க அறையில் வைத்திருக்கிறார்கள்.. நாம் அந்த இறக்கையில் எங்கே எப்படி விரல் வைத்து அழுத்துகிறோமோ அதன்படி கதவு திறக்கிறது.”
“இதை நீ எப்படி அறிந்தாய்?” என அமரன் கேட்டான்.
“நமது ஆதுரசாலையில் சோமன் என்ற உதவியாளன் ஒருவன் இருக்கிறான். அவனை ஒரு நாள் நமது தலைமை மருத்துவர் அந்த அறையில் இந்த பக்கமாக அழுத்தக் கூற இவன் எதிர்பதமாக அழுத்தியதும் அந்த பக்க கதவு திறந்து கொண்டது. அதை ஒரு நாள் நான் பார்த்தேன். அதன்பின் தான் தங்களின் தாயாருடன் இரண்டு முறை அவர் அதை திறக்கும் சமயம் அருகிருந்து அவர் கை விரலை வைக்கும் விதம் கவனித்து எத்தனை அழுத்தம் தருகிறார் என்றும் கணக்கிட்டேன். வெகு சுலபம்..” என அவள் கூறிய விதத்தை கேட்டபடி அங்கே வந்த ஆருத்ரா அவளது காதுகளை பிடித்து திருகினாள்.
“இதற்கு தான் இருவரும் நாடகமாடி எங்களை அரண்மனை முழுதும் சுற்ற வைத்தீர்களா?” என கோபமுடன் கேட்டாள்.
“அக்கா.. இது எனது குருநாதர் போட்டுக் கொடுத்த திட்டம். நான் சிறிதாக கண்களில் ஏமாற்றம் காட்டியதுமே எனது அத்தான் எனை உன்னிடம் இருந்து காப்பாற்றி மேற்கொண்ட பணியை முடிக்க உதவினார் அவ்வளவு தான்..” என இப்போது நரசிம்மன் அருகே சென்று உரிமையாக தோள்களில் கைப்போட்டுக் கூறினாள்.
“என்ன இது சிங்கத்துரியரே? ஏன் இந்த நாடகம்?” என ஆருத்ரா அவனைக் கண்டு வினவினாள்.
“இனி வரும் காலங்களில் பல சோதனைகள் நம்மை வந்து சோதிக்கப்போகிறது தேவி. நாம் பல கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயம் வரும். நமது திட்டங்கள் யாவும் எந்த பலனும் கூட கொடுக்காமல் போகும் காலமும் வரும். அதை எல்லாம் எதிர்கொள்ள நம்மாலான சிறு சிறு செயல்களை இப்போதிருந்தே செய்வது நாம் இந்த இயற்கையன்னைக்கு செய்யும் சிறு உபகாரம் தான்..” எனக் கூறி சிங்கத்துரியன் கண்கள் கலங்க அவளைக் கண்டு அவளது கைகளை பிடித்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டான்.
“ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறீர்கள் சிங்கத்துரியரே?” ஆருத்ரா அவனை கனிவுடன் கண்டு கேட்டாள்.
மற்ற மூவரும் கூட கண்களில் பெரும் வலியை சுமந்தபடி அவளை ஓர் நொடி கண்டனர். அதை உணர்ந்து கொண்ட ஆருத்ரா, இனி எந்த விளக்கமும் கேட்டாலும் இவர்கள் பதில் கூறப் போவதில்லை என்பதை உணர்ந்தாள்.
அங்கிருக்கும் நால்வரும் உடல் அளவிலும், மன அளவிலும் பெரும் மாறுதல் கொண்டிருந்தனர். ஆருத்ரா மட்டுமே எந்த அதீத மாற்றமும் இன்றி இன்னும் தனது வழக்கமான பணிகளை செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு அனைத்தும் சொல்லப்படவில்லை. சொல்லப்போவதும் இல்லை. எதிர்வரும் காலங்களில் பல வலிகளும், வேதனைகளும், இழப்புகளும் நிகழத்தான் போகிறது. அதற்காக அப்படியே ஏதும் செய்யாமல் இருந்து விட முடியுமா? காலம் மாறினால் பிராயசித்தமும் உண்டாகும். அப்போது நாம் நமது பணியை செய்ய சில உபகரணங்களும் தேவைப்படும். அதைத் தான் இப்போது இவர்களும் செய்து வருகிறார்கள்.
“சரி.. நான் உங்கள் நால்வரையும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. இனி நான் என்ன செய்யவேண்டும் என்றாவது கூறுவீர்களா? அல்லது ..” என அவள் நரசிம்மனை பார்த்த பார்வையில் அவன் மனதால் பெரும் வலி கொண்டு ஒரே தாவலில் அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.
“எத்தனை சாகசங்களை நாங்கள் செய்தாலும் எங்களின் சக்தி நீ தான் அக்கா.. நீ இல்லையென்றால் நாங்கள் யாருமே இல்லை. நீ தான் எங்களது அச்சாரமும், உயிர் சக்தியும். அதை மட்டும் நினைவில் வைத்து கொள். இதை நான் கூறலாமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நீயும் அத்தானும் காந்தர்வ மணம் செய்து கொள்வது நல்லது. நாளை மறுநாள் தான் நமது தந்தையார் பேரரசரை காண செல்கிறார்… குருவே நான் சகோதரருடன் எனது அறையில் இருக்கிறேன்..” என அவனிடம் கண்காட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
“யுவராஜரே.. நாம் இன்று நள்ளிரவு குகைக்கு செல்லலாம். அதற்கு முன் அதை இடமாற்ற வேறு இடத்தை தேடிப் பிடிக்க எனது அன்னையிடம் முறையிட சென்று வருகிறேன். தாம் சிறிது ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள். வருகிறேன் தேவி..” என இருவரையும் வணங்கி அங்கிருந்து சென்றான்.
ஆருத்ரா அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த கண்களில் கலவையாக பல உணர்வுகள் வந்து போனது. ஆனால் அவளின் மீதான அந்த காதல் உணர்வு மட்டும் அனைத்தையும் தாண்டி ஓங்கி நின்றதையும் ஆத்மார்த்தமாக உணர்ந்தாள்.
“நரசிம்மரே.. தங்களுக்கு பசி எடுத்திருக்கும் நான் உணவு அனுப்புகிறேன். குகைக்கு செல்வதற்கு முன்பு மூலிகை பொடியில் நீராடி விடுங்கள்..” எனக் கூறிவிட்டு அவனிடமிருந்து நகர்ந்து நின்றாள்.
“ஆருத்ரா.. நீயின்றி நான் இல்லையடி..” என உணர்வுகள் பொங்க கூறியவன், அவளை தன்னருகே இழுத்து அவளது நெஞ்சில் புதைந்து கொண்டான்.
“எனது காதலும் நீங்கள் கொண்டிருக்கும் காதலுக்கு சளைத்ததல்ல யுவராஜரே.. இப்போது நாம் அடி வைத்து நடக்கும் பாதையின் ஆபத்தை முழுதாக நான் அறியவில்லை தான். நீங்கள் நால்வரும் பல அரிய விஷயங்களை உடலாலும், மனதாலும் அனுபவித்து வருகிறீர் தான். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் அனைவரும், நான் என்றுமே இயற்கையை மீறி செல்ல மாட்டேன். நேரமாகிறது விடுங்கள்..” எனக் கூறி அவனது முன்நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
நரசிம்மன் ஆருத்ரா கூறியது போல மூலிகை பொடியில் குளித்துவிட்டு, உணவுண்டு சிங்கத்துரியனுக்காக காத்திருந்தான்.
அப்போது தான் அபராஜிதன் வனயட்சியின் குழுவுடன் கானகம் புகுந்து வசியப்பூஜைக்கும் சென்று வந்தது.
அவன் பூஜை செய்யும் வேளையில் இங்கே குகைக்குள் நரசிம்மனும், ஆருத்ராவும் காந்தர்வ மணம் புரிந்து ஒருவருக்குள் ஒருவர் கலந்திருந்தனர். அந்த குகையானது சகல விதமான மாயங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதால் அதீத சக்திகள் கொண்ட அகோரிகளும், அபராஜிதனும் அங்கு நடந்ததை அறியவில்லை.
விடி வெள்ளி வரும் சமயத்தில் குகையில் இருந்து இருவரும் வெளியே வந்து தங்களது அறைக்கு சென்றனர். சிங்கத்துரியன் அவர்கள் வெளியே வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் அங்கிருந்து சென்றான்.
வனயாத்திரையின் வேண்டுகோளின்படி ருத்ரக்கோட்டை அரசரும், அரசியும் குலதெய்வ பூஜைகள் செய்து அரைமனை சுற்றிலும் புனித தீர்த்தம் தெளிக்க வைத்து அபராஜிதனை அரண்மனை பக்கம் வராமல் செய்தாள்.
“விரைவில் வெற்றியுடன் திரும்புகிறேன் அத்தான்.. வருகிறேன் அக்கா.. கவனமாக இரு. இதோ உனக்கு எனது பரிசு..” என ஓர் பெரிய பஞ்சவர்ண கிளியை தனது கைகளில் ஏந்தி ஆருத்ராவின் கைகளில் கொடுத்தாள்.
“இவள் உன் தோழியல்லவா.. என்னிடம் பரிசாக ஏன் கொடுக்கிறாய்?” என ஆருத்ரா அந்த கிளியை கையில் வாங்கியபடி கேட்டாள்.
“பரிசிற்கு காரணம் தேவையில்லை தமக்கையே.. கவனமாக கானங்களில் சுற்று. உனது உதிரம் சிந்தாமல் பார்த்து கொள். நான் விரைவாக வந்து விடுகிறேன்..” என வனயாத்திரை அங்கிருந்து அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
இனி அவள் இதே போல வருவாளா என்று காலம் தான் கூற வேண்டும்..

