111 – ருத்ராதித்யன்
அபராஜிதன் கொண்டு வந்த வசிய மருந்து வீணாக போனதில் கடும் கோபத்தோடு காற்றாக கானகத்தில் அலைந்துக் கொண்டிருந்தான். அவனது திட்டத்தை சிதைத்த தீரன் மீது அந்த சினமானது அதீதமாக இருந்தது.
ஆருத்ரா மீதிருந்த மோகத்தால் இந்த காரியத்தில் தனது புத்தி மழுங்கி போனத்தையும் இப்போது உணர்ந்திருந்தான். அவளை தெளிவாக திட்டம் போட்டு தனது வலையில் விழவைக்கவேண்டும். மீண்டும் அவளை தப்ப விடக்கூடாது என்பதில் உறுதி கொண்டு தனது குடிலுக்கு வந்து சேர்ந்தான்.
அதற்கான யோசனையுடன் அவன் ஆதுரசாலை செல்லும் பாதையில் பயணிக்கும் போது சிங்கத்துரியன் அவன் எதிரே வனயட்சியுடன் வந்து கொண்டிருந்தான். சராசரி உயரமும், வலுவான உடலும் கண்களில் அவனது ஞானத்தின் சுடரும் தெளிவாக தெரிந்தது.
அவர்களை கண்டதும் மீண்டும் காற்றாக மாறியவன் அவர்கள் பேசுவதை கேட்கும் தூரத்தில் அவர்களை பின்தொடர தொடங்கினான்.
“ஆம் அம்மா.. வனயாத்திரை தனது ஆராய்ச்சி கூடம் நோக்கி புறப்பட்டு விட்டாள். நிச்சயமாக இம்முறை அவள் அதில் வெற்றி அடைந்து விடுவாள். தாம் தங்களது தயக்கம் உடைத்து ஆதித்ய கோட்டை வரவேண்டும். தாம் அங்கிருந்தால் இன்னும் பல பணிகளை நாம் விரைவாக முடிக்கலாம். தவிர நரசிம்மன் அமரக்கோட்டை எல்லையில் கைப்பற்றிய உயிரினங்கள் தங்களது காருண்யத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அவற்றை எல்லாம் வனயாத்திரையின் ஆராய்ச்சி கூடத்தின் அருகிலே தான் இப்போது அமரரும் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்.”
“ஆனாலும் நீ அவளுக்கு அதிகமாக இடம் கொடுக்கிறாய் மகனே.. அவளின் வேகம் கண்டு என்னுள்ளம் பதறுகிறது.. இப்போது தான் செய்தி வந்தது நமது மேற்காட்டு கோட்டையில் சிறந்த மருத்துவர்கள் பலரை காணவில்லையாம். வனவிலங்குகள் காணாமல் போனது போல இப்போது மருத்துவர்களும் காணாமல் போகின்றனர். இந்த அராஜகம் எல்லாம் என்று தான் நிறைவுக்கு வருமோ தெரியவில்லை.. நான் இவ்விடம் விட்டு கிளம்பினால் நமது குகை பணிகள் பாதியில் நிற்க்குமே மகனே..”
“அதையெல்லாம் அனைத்து கோட்டை இளவரசுகளும் குழு அமைத்து தேடி வருகிறார்கள். நீங்கள் முதலில் நான் கேட்பதை செய்யுங்கள். விரைவாக இங்கிருந்து கிளம்புவது அனைவருக்கும் நல்லது..” என சிங்கத்துரியன் தானே தாயை யானை அம்பாரியில் ஏற்றி ஆதித்ய கோட்டைக்கு வழியனுப்பி வைத்தான்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அபராஜிதன் உடனடியாக தனது அகோரிகள் இருக்குமிடம் பறந்து சென்றான்.
“இங்கே பாருங்கள் அகோரிகளே.. நாம் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் இப்போது அமைந்திருக்கிறது. வனயட்சி ஆணை மீதேறி ஆதித்ய கோட்டை சென்று கொண்டிருக்கிறாள். அவளின் உடல் பொருள் ஆவி அத்தனையும் எனக்கு மட்டுமே அடிமையாக வேண்டும். அவள் ஆதித்ய கோட்டை அரண்மனை நுழையும் போது எனது அடிமையாக நுழைய வேண்டும்..” என அவன் கூறியதும் அதற்கு மறுபேச்சின்றி அங்கிருந்த மூன்று அகோரிகளும் மாயமாய் மறைந்து வனயட்சி செல்லும் பாதையில் அவருக்காக எதிர்பார்த்திருந்தனர்.
“வனயட்சி உனை எனது அடிமையாக மாற்றியபின் தான் எனது முழு ஆட்டமும் இவர்கள் பார்க்கப்போகிறார்கள்.. எனக்கு எதிராக எனை படைத்தவனே வந்தாலும் அவனையும் எனது அடிமையாக மாற்றி எனக்கு சேவகம் புரியவைப்பேன்.. ஹாஹாஹாஹா.. ஹாஹாஹாஹாஹாஹா… இயற்கையே.. உன்னை இந்த பூமியில் இல்லாமலே செய்கிறேன் பார்..” என கூறி பேய் சிரிப்பாக சிரித்துக் கொண்டிருந்தான்.
இங்கே ஆதித்ய கோட்டை அரசவையில் ஆருத்ராவினால் கைது செய்யபட்ட சேயோன் விசாரணைக்காக நீதிமன்ற அவைக்கு கொண்டு வரப்பட்டான். அங்கே அவனது குற்றங்கள் அனைத்தும் நிரூபணமும் ஆனது.
அவனது தந்தை சாவிலான் அவனுக்காக அங்கிருந்த நீதி அரசர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“நீதி அரசர்கள் இதை குற்றமாக கருத கூடாது. அவன் வழக்கமாக விடுமுறைக்கு கீழ்க்காடு செல்வது வழக்கம் தான். அங்கு வேட்டை தானே பிரதான வீரச்செயல். அதை புரிந்ததற்கு குற்றவாளி எனக்கூறி சிறையில் அடைப்பது எவ்விதத்தில் நியாயமாகும் கூறுங்கள். அவன் வேட்டையாடும் பகுதியில் இருந்த மிருங்கங்களை தான் வேட்டையாடினானே தவிர வேறு எந்த பகுதியில் இருந்த உயிரையும் தீண்டவில்லை. இதற்கான அபராதமாக தாம் எத்தனை பொற்காசுகள் கூறினாலும் நான் நீதியவைக்கு செலுத்த தயாராக இருக்கிறேன்..” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே மகாராணியார் வந்து சேர்ந்தார்.
“விஸ்வக்கோட்டை அரசவை மந்திரியாருக்கு வருமானத்தில் குறைவில்லை என்பதை நிரூபிக்கும் வகையான பேச்சு தான் சாவிலான் அவர்களே.. ஆனாலும் உயிர்க்கு இணையாக பொற்காசுகள் என்றுமே நிகராவதில்லை. உயிருக்கு உயிர் தான் நிகர்..” எனக் கூறி சாவிலானை உயிர் கொய்யும் பார்வை பார்த்தார்.
“வணங்குகிறேன் மகாராணியர் அவர்களே.. தங்களை இங்கே கண்டதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.” என பணிவுடன் கூறினார்.
“ஆனால் எனக்கு தங்களை இங்கே காண்பதில் சந்தோஷமில்லை அமைச்சரே.. தங்களின் புதல்வன் செய்த காரியத்திற்கு தாம் உடன்செல்வது போல நடப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது..”
“மகாராணியார் எனக்கு எங்கள் பக்க நியாயத்தையும் பேச அனுமதியளிக்க வேண்டும்..”
“தாராளமாக கூறலாம். தாங்கள் உங்கள் பக்க நியாயங்களை கூறும் போது சேயோனை கைது செய்த ருத்ரக் கோட்டை இளவரசியும் இங்கே இருக்க வேண்டும். அப்போது தானே இரு பக்க நியாயங்களை ஆராய்ந்து நாங்கள் தீர்ப்பு வழங்க முடியும். அதனால் அவர் இங்கே வந்து சேரும்வரை தாம் விருந்தினர் அறையில் ஓய்வெடுங்கள்..” என மகாராணியார் கூறியதும் சேயோனை மீண்டும் சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர். சாவிலானுக்கும் இருவர் உதவிக்கு இருப்பது போல காவல் காத்தனர்.
“இந்த நியாயவாதி பெண்களை அரசியலில் நுழைத்தால் நமக்கு இது தான் கதி. இதை முதலில் மாற்ற வேண்டும். பெண்கள் என்றால் படுக்கைக்கும் சமையலுக்கும் என்று ஓர் சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் எனை போன்ற விஸ்தீரன அறிவு கொண்ட ஆண்கள் இந்த நாட்டில் சந்தோஷமாக வாழமுடியும்..” என தனக்கு தானே பேசியபடி தன் மகனை எப்படி இங்கிருந்து மீட்டு செல்வது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.
ஆருத்ரா அடுத்த நாள் தான் வருவார் என்று அறிந்து இன்னமும் மகனை விடுவிக்க முடியாத வருத்தத்தில் அறைக்குள்ளேயே அடைந்துக் கொண்டார்.
இங்கே ருத்ரக்கோட்டையில் சிங்கத்துரியனும், அமரபுசங்கனும் கானகத்தில் நடந்தபடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சென்றனர். நரசிம்மனும் ஆருத்ராவும் தீரன் தனது கொட்டகையில் இருந்து கயிற்றை அறுத்துக் கொண்டு சென்றதை கேள்விபட்டதும் அவனைத் தேடி அவர்கள் இருவரும் கானகம் புகுந்து வெகுநேரம் சென்றதால், இப்போது இவர்கள் உள்ளே சென்று அவர்களை தேடிக் கொண்டிருந்தனர்.
“என்னவாயிற்று அந்த காளைக்கு? ஏன் திடீரென மற்ற மிருகங்களை தாக்கிவிட்டு கானகத்தில் புகுந்து கொண்டது?” அமரன் கேட்டான்.
“அது கானகத்தில் திரியும் காளை வகை தான் அமரரே.. ஆருத்ரா ஓர் நாள் அது குட்டியாக இருந்தபோது அடிபட்டு கிடந்ததை பார்த்து தூக்கி கொண்டு வந்து தனது தனி வனத்தில் வளர்த்துக் கொண்டிருந்தாள். அங்கே பல வகையான மிருகங்கள் உண்டு. குட்டியாக இருந்த போது ஒன்று இரண்டு முறை இதே போல தனது குடும்பத்தை தேடி இது கானகம் புகுந்து ஓடும். ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக இப்படி ஓடவில்லை. இன்று திடீரென ஏன் ஓடியது என்று தெரியவில்லை..”
“இது அவனின் வேலையாக இருக்குமோ?”
“இருக்கலாம் இல்லாமலும் போகலாம். நாம் அடுத்த கட்ட விஷயங்களை இனி வேகமாக தொடங்கவேண்டும்.. வனயாத்திரை அவளது ஆராய்ச்சியை விரைந்து முடித்தால் நமக்கும் பெரும் பலம் வந்து சேரும். இறைவன் தான் அருள் புரியவேண்டும்..” என்று கூறிய சிங்கத்துரியன் குரலில் பெரும் கவலை குடிக்கொண்டிருந்தது.
“கவலை கொள்வதால் நமது பலம் மட்டுமே விரயமாகும். அந்த பக்கமாக ஏதோ அரவம் கேட்கிறது வாருங்கள் சென்று பார்க்கலாம். ஆமாம் இந்த தனி வனத்தில் யாரெல்லாம் நுழையமுடியும்?”
“இளவரசி ஆருத்ரா யாருக்கெல்லாம் அனுமதி கொடுக்கிறாறோ அவர்கள் மட்டுமே இந்த வனத்தில் நுழைந்து நடக்க முடியும்..”
“அனுமதி பெறாதவர்கள்?”
“வனத்திற்கு உரமாக வேண்டியது தான். அதோ பாருங்கள் சென்ற வாரம் ஒருவன் இங்கே இருக்கும் ஓர் கழுகு குஞ்சை தூக்கி போக வந்தான். இங்கிருக்கும் புழுக்கள் முதல் சிங்கம் புலி வரையிலும் அவனை தடுத்து அந்த பாறையின் மேல் சிறை வைத்திருக்கிறது. அவனை காவல் காப்பதில் முறை வைத்து இங்குள்ள உயிரினங்களே பார்த்து கொள்கிறது. அவனுக்கு உணவு கூட மனிதர்கள் கொடுக்க முடியாது.. தூரமாக அந்த தட்டை பாறையில் வைத்தால் ஏதேனும் ஒரு மிருகம் எடுத்து சென்று அவன் அருகே போட்டுவிடும். இப்படி கள்ளத்தனமாக நுழைபவர்களுக்கு மிருகங்களே தண்டனை கொடுக்கும்படியாக தான் இளவரசி ஆருத்ரா இங்குள்ள உயிர்களை வளர்த்து வருகிறார்.” என சிங்கத்துரியன் கூறும்பொழுது அதில் ஓர் பெருமை மிளிர்வதையும் அமரன் கண்டான்.
“தங்களின் மனம் முழுதும் இரண்டு இளவரசிகளின் திறமை பற்றிய பெருமை தான் நிறைந்திருக்கிறது. இப்படி ஒருவர் உடன்பிறவா சகோதரராக கிடைப்பது பெரும் பாக்கியம் தான், அந்த வகையில் நமது சகோதரிகள் பாக்கியம் செய்தவர்கள் தான்.” என அமரன் கூறவும் சிங்கத்துரியரும், “உம்மை போன்றவரை சகோதரராக நான் பெற்றதும் எனது பாக்கியம் தான் அமரரே..” எனக் கூறிவிட்டு சிரித்தான்.
“அதோ அங்கே இருக்கிறார்கள் போலவே..” என தீரனை பிடித்தபடி நிற்கும் நரசிம்மன் அருகே இருவரும் சென்றனர்.
“என்னவாயிற்று ஆருத்ரா?” என நரசிம்மன் தீரனை சோதனை செய்து கொண்டிருந்த ஆருத்ராவிடம் கேட்டான்.
“போதை கொள்ளும் புகையை இவனுக்கு யாரோ கொடுத்திருப்பார்கள் போலும்.. அதனால் தான் தன்னிலை மறந்து முரட்டுத்தனமாக தனது நண்பர்களையே காயப்படுத்திவிட்டு யாரும் இல்லாத கானகத்திற்கு ஓடி வந்திருக்கிறான். அந்த போதை கொண்ட நிலையிலும் எனது தீரன் சமயோஜிதமாக நடந்திருக்கிறான்.” என ஆருத்ரா அவனது திமிலை கட்டிக்கொண்டு கூறினாள்.
“போதை தெளிந்ததா?” என சிங்கத்துரியன் தீரனின் கண் பார்த்தபடி கேட்டான்.
“அவனே போதை முறிக்கும் மூலிகையும் உட்கொண்டு விட்டான் சிங்கத்துரியரே. நான் வரும்போது அவனாகவே தான் எங்கள் பக்கம் வந்தான்..”
“நாளை வரை இவனை எனது குடிலில் இருத்தி வையுங்கள்.. நான் வேறு சில மருந்தை அவனுக்கு கொடுத்து விடுகிறேன். என்ன போதை புகை அவனுடலில் கலந்தது என்று அறியவேண்டும். யார் புகை போட்டார்கள் இன்று அவனது கொட்டகைக்கு என்றும் விசாரிக்க வேண்டும்..”
“சரி வாருங்கள் கோட்டைக்கு செல்லலாம். ஆருத்ரா நீ எப்போது ஆதித்ய கோட்டை செல்கிறாய்? அங்கே சேயோன் விசாரணைக்கு நீயும் வரவேண்டும் என்று ஓலை வந்துள்ளது.” என அமரன் கேட்டான்.
“இன்று இரவு பயணப்படலாம் என்று இருக்கிறேன். தாம் எனை சுமந்து செல்வதாக இருந்தால் விடிவெள்ளி வந்தபின் கிளம்பினாலும் போதும்..” என சிரித்தபடி ஆருத்ரா கூறினாள்.
“அப்படியென்றால் எனையும் சுமந்து செல்ல வேண்டும் அமரரே..” என நரசிம்மனும் கூறினான்.
“நான் என்ன ரதமா இத்தனை பேரை சுமந்து செல்ல? இருவருமே குதிரையில் போய் வாருங்கள். எனக்கு இங்கே வேலைகள் நிறைய இருக்கின்றன.. வனயட்சி இவ்விடம் வருவதற்குள் வேலையை முடிக்க வேண்டும்.” என அமரன் கூறியதில் இருந்த தீவிரம் பார்த்து அனைவரும் அமைதியாக நடந்தனர்.
வனயாத்திரை தனது ஆராய்ச்சி குடில் சென்று சேர்ந்ததும் மீண்டும் கருவை உருபெற வைப்பதில் மும்முறமாக இருந்தாள். தான் வைத்திருக்கும் முதல் துளி நீரை வனதேவியை வணங்கிவிட்டு அந்த குடுவையில் சேர்த்தாள்.
அதை பாதுகாப்பாக வைத்துவிட்டு அவள் அந்த பக்கம் சென்றதும் இங்கே அந்த கரு மிளிர்ந்து தன்னை நிலைப்படுத்தத்தொடங்கியது.

