114 – ருத்ராதித்யன்
அவனது இரத்தம் அவரின் உடலில் நேராக மூலாதாரம் இருக்குமிடத்தை அடைந்து அவரது ஆத்மாவை கட்டியது. அவரது ஆத்மா அப்போது அடைந்த வேதனையும், துடிப்பும் அவரது மனம் உடல் கூறாக கிழியும் வலியைக் கொண்டதைப் போல காட்டியது. அதில் அவரது கண்ணீர் அபராஜிதனின் உச்சந்தலையில் விழுந்து அவனுடலில் புகுந்து அவனை அவரின் அன்பிற்கு கட்டுப்பட வைத்தது.
“தாயே.. புதிதாக வந்தவன் மேலே தங்களுக்கு இத்தனை அன்பா? இருவரும் கண்களில் நீர் வழிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறீரே.. அப்படி என்ன இவன் மேலே தங்களுக்கு தனியாக அன்பு வந்தது?” என அவரின் அந்தரங்க உதவியாள பெண் கேட்டார்.
“இவனை முதல் முதலாக பார்த்த போதே எனது இரண்டாவது மகனை போன்ற உணர்வு எழுந்தது. எனது வயிற்றில் உதிர்த்து நிலம் தொடாமல் சென்ற கருவாக தான் இவனை நினைக்க தோன்றுகிறது. சரி அந்த மருந்தை எடு இவனது உடல் முழுக்க ரத்தம் வழிகிறது அதை முதலில் வெந்நீர் கொண்டு வந்து துடைத்து விடு.. மற்றவர்களை சென்று உறங்கச்சொல்.. நாளை அதிகாலையே உணவுண்டு இங்கிருந்து கிளம்பினால் உச்சி பொழுதில் கோட்டையை அடைந்து விடலாம்..” எனக் கூறியவர் கண்களில் அபராஜிதன் மேலே புதிதாக அன்பூற்று தோன்றியது.
“உனது பெயர் அறிவானந்தன் தானே? இங்கே இப்படி அமர்ந்து கொள்.. உனது காயங்களை ஆராய வேண்டும்.. நீ எப்போது ருத்ரக்கோட்டையில் இருந்து கிளம்பினாய்?” எனக் கேட்டபடி அவனது காயங்களை ஆராய்ந்தார்.
“நீங்கள் கிளம்பிய சற்று நேரத்தில் சோமன் தான் கூறினான் இனிமேல் நீங்கள் ஆதித்ய கோட்டையில் தான் வசிக்கப் போகிறீர்கள் என்று.. உங்களை விட்டு நான் மட்டும் எப்படி அங்கே இருப்பது? அதனால் அப்போதே உங்களை பின்தொடர முனைந்தேன். ஆனால் அங்கிருந்த தலைமை மருத்துவர் என்னை விடவில்லை. ஆதலால் அன்று இரவு யாரும் அறியாமல் குடிலில் இருந்து கிளம்பி நீங்கள் சென்ற தடம் விசாரித்து வந்து கொண்டிருந்தேன். காட்டு முயலை நான் வேட்டையாடி சாப்பிடும் போது இந்த நாய்கள் எனது உணவிற்காக என்னை துரத்தின. அப்போது தான் நீங்கள் எனை ஆட்களை அனுப்பி காப்பாற்றினீர்கள். மீண்டும் நீங்கள் தான் இரண்டாம் முறையாக காப்பாற்றியிருக்கிறீர்கள். எனது தாய் இறந்த பிறகு தாயின் அன்பை நான் எங்கும் காணவில்லை. உங்களை கண்டது முதல் எனக்கு தாயில்லை என்ற எண்ணமே எழவில்லை..” எனக் கூறி அவரின் பாதத்தில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான்.
“ஏதேது இங்கே தாய் மகன் பாசம் கரைப்புரண்டு ஓடுகிறது போலவே?” என கிண்டலாகப் பேசியபடி உதவியாள பெண் வந்தார்.
“எங்களை கிண்டல் செய்யாமல் முதலில் வேலையை செய்யடி.. என் துரியனை பிரிந்து இனி எப்படி இருப்பேனோ தெரியவில்லை. “
“அதான் உங்களின் இளைய மகன் இருக்கிறாரே பிறகென்ன கவலை? உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கும் சில மாதங்கள் விடுமுறை கொடுத்துவிடுங்கள். எனது சொந்தங்கள் அனைவரையும் பார்த்து பழகிவிட்டு வருவேன்..” எனக் கூறியபடி அவனது காயங்களை நீர் வைத்துத் துடைத்தார்.
“உனது ஊரின் மணம் வந்ததும் எனை தனியாக விட்டு செல்ல எண்ணம் எழுந்துவிட்டதோ?”
“நான் எங்கே தனியாக விட்டு செல்கிறேன்? நாளை மகாராணியாரை கண்டதும் எங்கள் அனைவரையும் நீங்கள் தான் தனியாக விட்டுவிடுவீர்கள். உங்களின் உற்ற தோழி அவர் தானே.. அவரை கண்டுவிட்டால் உங்களுக்கு வேறெதுவும் கண்களுக்கு தெரியாதே குருதேவி..”
“ஆம். அவரை கண்டு பல ஆண்டுகள் ஆனது. இப்போதும் அதே கம்பீரத்தோடு வலம் வருவதாக கேள்வியுற்றேன். இளைய இளவரசி அவரிடம் மிகவும் அதிகமாகவே சலுகைகள் பெறுவதாகவும் கேள்வியுற்றேன். அதையெல்லாம் கவனிக்க வேண்டும்.” என மனதில் எழுந்த இனிமையான நினைவுகளுடன் சிரித்த முகமாக அவர் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் அப்படி கனிந்த முகமாக அமர்ந்து சரளமாக சரிக்கு சரியாக உதவியாள பெண்ணிடம் பேசுவதை அபராஜிதனும் சில நிமிடங்கள் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் எங்கோ ஓர் ஓரத்தில் ஏதோ ஓர் நினைவும் தடம் காட்டி மறைந்தது.
அந்நேரம் அரசகேசரி காற்றாக அவன் முன்னே வந்து சைகை அனுப்பவும் அவர்களிடம் இருந்து சற்று நேரத்தில் வருவதாக கூறிவிட்டு இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் பாதையில் வேகமாக நடந்தான்.
“இவனை கண்டால் உனக்கு என்ன தோன்றுகிறது கனிமொழி?” என தனது அந்தரங்க உதவியாள பெண்ணிடம் கேட்டார்.
“தாயை இழந்த பிள்ளையின் தவிப்பு தான் தெரிகிறது. ஆனாலும் மனதில் ஏதோ இனம் புரியாத உணர்வும் எழுகிறது குருதேவி..” என குழம்பிய மனதுடன் கூறினார்.
“எனக்கும் அப்படி தான் இருக்கிறது. சரி நீ நாளை காலை உணவுண்டுவிட்டு இங்கிருந்து உனது உறவினர்கள் இருக்கும் ஊருக்கு செல். கோட்டை வந்து சென்றால் கால விரயம் தான். இந்தா இதை வைத்து கொள். மூன்று மாதங்கள் கழித்து கோட்டைக்கு வந்தால் போதும்.”
“கோட்டை வரை வந்து மகாராஜா மற்றும் மகாராணியார் இருவரையும் வணங்கிவிட்டு, தங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்த பின்னர் கிளம்புகிறேன் குருதேவி..”
“இல்லை கனிமொழி. அதான் தேனிசை என்னுடன் இருக்கிறாளே.. நீ அலைய வேண்டாம். உனக்கு குதிரை வேண்டுமா? பல்லக்கு வேண்டுமா?”
“இல்லை.. இருந்தாலும்..” என கனிமொழி தவிப்புடன் கூறினார்.
“நீங்கள் கவலையே கொள்ள வேண்டாம் தாயே.. என் அன்னையை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன். நீங்கள் விசனப்படாமல் தங்களது சுற்றங்களை கண்டுவிட்டு வாருங்கள்..” எனக் கூறியபடி அபராஜிதன்(எ) அறிவானந்தன் மீண்டும் அங்கே வந்து சேர்ந்தான்.
“உனக்கு ஊரும் புதிது, இவரும் புதிது.. நீ எப்படி கவனித்து கொள்வாயாம்?” என கனிமொழி இடக்காகக் கேட்டார்.
அவரின் கைகளை பிடித்ததும் அவர் பிரம்மைக்குள் விழுந்தார். “இன்று முதல் எனை பெற்ற அன்னையின் ஸ்தானத்தில் இவரை வைத்து நான் பார்த்துக் கொள்வேன். இது எனது உயிரின் மீது ஆணை. இப்போது நம்புவீர்களா?” என அவன் கண்களில் நீர் மல்க கேட்க கனிமொழியின் தலையும் அனிச்சையாக அசைந்தது.
அதன்பின் அடுத்த நாள் புலர்ந்ததும் அனைவரும் புத்துணர்வோடு ஆதித்ய கோட்டை நோக்கி செல்லத் தொடங்கினர். அப்போது வனயட்சியை குறிவைத்து அவரை கடத்த சிலர் அவர்களைத் தாக்கினர்.
அப்போது அறிவானந்தன் வனயட்சியின் மேல் விழுந்த கத்தியை தனது மார்பில் வாங்கிக் கொண்டு அவரை பாதுகாப்பாக ஓர் இடத்தில் அமர வைத்துவிட்டு, பின்தொடர்ந்து வந்த கள்ளர்களுடன் வாள் சண்டையிட்டு அவரைக் காப்பாற்றினான்.
உடல் முழுக்க வெட்டுக் காயம் கொண்டு உயிருக்கும் மேலாக தன்னை காக்க போராடுபவன் மேலே அந்த தாயுள்ளம் ஆழமாக அன்பு கொள்ள ஆரம்பித்தது. இரண்டு நாழிகையில் கோட்டை வீரர்களும் அங்கே வந்து வனயட்சியை பத்திரமாக கள்ளர்களிடம் இருந்து மீட்டு கோட்டைக்குள் அழைத்துச் சென்றனர்.
அவரை வரவேற்க மகாராணியார் செய்த ஏற்பாடுகள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு நேராக அரண்மனை ஆதுரசாலைக்கு அறிவானந்தனை தூக்கி சென்று அங்கே அவனுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
அவனது உயிர் ஆபத்தான கட்டத்தில் துடித்துக் கொண்டிருந்தது. உதிரப்போக்கு என்ன செய்தும் நிற்கவில்லை. அவனது நாடியும் அதீத வேகத்துடன் துடித்துக் கொண்டிருந்தது. அன்றிரவு வரையிலும் போராடி அவனது இரத்தப்போக்கை நிறுத்தியிருந்தனர். ஆனால் அவன் தன்னிலை தப்பிவிட்டான். இனி அவனாக எப்போது கண் விழிப்பானோ கடவுளுக்கு தான் வெளிச்சம். அதனால் தான் வனயட்சி சிங்கத்துரியனை உடனடியாக இங்கு வரும்படி அவசர ஓலை அனுப்பினார்.
அவன் குகை மாற்றும் வேலையில் அங்கிருந்து வரமுடியாது என தீவிரமாக மறுக்கவும் செய்தான். அமரபுசங்கனும் ஒரு வாரம் வரையிலும் அந்த பக்கம் வரவே இல்லை.
அந்த ஒரு வாரமும் அறிவானந்தன் உயிர் ஆபத்தான கட்டத்தில் தான் இருந்தது. நரசிம்மனும், ஆருத்ராவும் மருத்துவர்களை கடத்துபவர்களைக் கூண்டோடு பிடிக்கும் வேட்டையில் இருந்தனர்.
பத்து நாட்கள் கழித்து அரசகேசரி கடத்தி அடைத்து வைத்திருந்த நூறுக்கும் மேற்பட்ட வைத்தியர்களை மீட்டு கோட்டைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்துச் சேர்த்தனர்.
அதன்பின் தான் வனயட்சியை காணச் சென்றார்கள். அபராஜிதன் ஏற்படுத்தியிருந்த மந்திர வளையத்தை விட்டு இந்த பத்து நாட்களும் வெளியே வராமல் அவர் அவனது ஆத்மாவின் போதனையில் அவனின் அடிமையாக முழுதாக மாறியிருந்தார்.
ஆருத்ரா அவரைக் கட்டியணைக்க முயன்றபோது அவர் அவளைத் தள்ளி நகர்த்தி, “இளவரசியார் பிரயாணம் முடிந்து அசதியுடன் இந்த மருத்துவச்சியை காண வந்ததன் நோக்கம் அறியலாமா? யுவராஜருக்கு எனது பணிவான வணக்கங்கள்.. இந்த பரந்த ஆதித்ய நாட்டில் இப்போது மருத்துவர்கள் உயிருடன் சுதந்திரமாக நடமாடுவதும் சிரமமாகிவிட்டது. இனிமேலும் இப்படி தான் தொடருமா?” என அவனிடம் அந்நிய பார்வைக் காட்டிப் பேசினார்.
“வனயட்சி.. என்ன பேசுகிறாய் நீ?” என கோபத்துடன் மகாராணியார் அவ்விடம் வந்தார்.
“உண்மையை தான் கூறுகிறேன் மகாராணி அவர்களே.. ஆதித்ய கோட்டையின் தலை நகரத்திலே கூட பாதுகாப்பு இல்லாது போனதால் தானே எனது உதவியாளன் உயிர் பத்து நாட்களாக ஊசலாடும் நிலை வந்தது. அவனது உயிரை பணயம் வைத்து என்னுயிரை காத்தவனை கூட இன்னும் என்னால் கண்விழிக்க வைக்க முடியவில்லை. நான் பெற்ற மகனும் எனக்கு உதவ விரும்பவில்லை. நான் உயிருடன் இருப்பதே அவனுக்கு கசக்கிறதோ என்னவோ? ஆனால் என்னுயிர் காத்தவனை நான் கைவிட முடியுமா? அதோ இன்னும் தன்னிலை திரும்பாமல் கிடப்பவனை காண காண என் நெஞ்சம் கனக்கிறது. என்னை பார்த்ததில் இருந்து அவன் இழந்த தாயின் வருத்தம் மறந்ததாக என்னிடம் பேசிக்கொண்டு வந்தவன் இன்று இந்த தாயை வருந்தவிட்டு படுத்து கிடக்கிறான் உணர்வுகள் ஏதுமின்றி.. ”
“வனயட்சி அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை முதல் முறையாக பார்க்கிறேன். தவிர உங்களுக்காக நால்வர் உயிர் துறந்து மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றதற்கு இறுதி மரியாதை கூட செய்யாமல் புதிதாக வந்த ஒருவனுக்காக தன் மகனையும், நீங்கள் வளர்த்த மகளையும், உங்களது உற்ற தோழியையும் அந்நியப்படுத்தி பேசுவது புதிதிலும் புதிதாக இருக்கிறது.. தங்களிடம் பத்து வருடமாக விசுவாசியாக பணிபுரிந்தவ நால்வர் இறந்தது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? ஏன் அவர்களின் இறுதி மரியாதைக்கு கூட தாங்கள் செல்லவில்லை? அவர்களை விட சில தினங்கள் முன்பு உங்க ஆதுரசாலையில் கடைநிலை உதவியாளனாக சேர்ந்தவன் அத்தனை முக்கியமானவனாக மாறிவிட்டானா? அப்படி அவன் தங்களுக்கு செய்தது என்ன வனயட்சி அவர்களே? யுவராஜனாக கேட்கிறேன் பதில் கூறுங்கள்..” என நரசிம்மன் குரல் உயர்த்தாமல் கேட்டவிதம் வனயட்சியின் மனதை சில நொடிகள் அசைத்தது.
“என்னை கடத்த வழி சொல்லி கொடுத்தவர்களே அவர்கள் தான் யுவராஜரே.. அதனால் தான் நான் இறுதி காரியங்களுக்கு செல்லவில்லை. இவன் கடைநிலை உதவியாளன் தான். ஆனால் மனதால் என்னுடன் மிகவும் நெருக்கமாக நான் பெறாத பிள்ளையாகவே மாறிவிட்டான். எனை தேடி தேடி அவன் வந்து பொழிந்த அன்பு எனை அவனுக்கு தாயாக மாற்றிவிட்டது. இளவரசி ஆருத்ரா அவர்களே தாங்கள் நான் பெறாத மகனுக்கு தங்களின் புதிய மூலிகை பொடியினை கொடுக்க முடியுமா?” எனக் கேட்டார்.
“மன்னிக்க வேண்டும் வனயட்சி அவர்களே.. இன்னும் அது மனிதர்களுக்கு கொடுக்கலாமா என்பதே நிர்ணயம் ஆகவில்லை. தங்களின் மூலிகை மருந்துகளை விட நான் தயாரிக்கும் மருந்து அத்தனை சிறப்பானது அல்ல. தங்களது பெறாத புதல்வனுக்கு தாமே சிறந்த மருத்துவம் பார்க்கலாம். எனக்கு பிரயாணம் செய்த கலைப்பு அதீதமாக இருக்கிறது. மகாராஜாவை சந்தித்துவிட்டு ஓய்வெடுக்க செல்கிறேன். வருகிறேன் மகாராணி. வருகிறேன் யுவராஜரே..” என அவளும் கடினக்குரலில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
நரசிம்மனும் அங்கிருந்து கிளம்ப இப்போது மகாராணி மட்டும் வனயட்சியின் அருகே வந்து கைப்பிடித்து நின்றார்.
“யட்சி.. யாரோ ஒருவனுக்காக நீ தூக்கி வளர்த்த பிள்ளையை மனம் நோக செய்துவிட்டாயே.. ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?”
“என்னுயிர் காத்தவனை நான் காக்க நினைப்பது அத்தனை பெரிய தவறா மகாராணி அவர்களே?” என வனயட்சியும் கேட்டார்.
“நீ முதலில் நன்றாக உறங்கி எழுந்திரு. உன் மனமும் புத்தியும் ஒரு நிலையில் இல்லை. நான் உனக்கு ஏற்பாடு செய்திருக்கும் அறைக்கு சென்று ஓய்வெடு..” என பரிவுடன் கூறினார்.
“ஆனந்தன் கண்விழிக்கும் வரை எங்கும் செல்வதாக இல்லை மகாராணி. எனை தவறாக எண்ணவேண்டாம்.. நானே அருகிருந்து அவனது உடல்நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.

