113 – ருத்ராதித்யன்
“அடடே.. நானின்றி இங்கே பெரும் கூட்டமே கூடி நிற்கிறதே.. எனக்கெல்லாம் அழைப்பு இல்லையா இளைய இளவரசி ?” என வனயட்சியின் பேச்சில் வேறுபாடும், விகல்பமும் அப்பட்டமாக அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது.
“வனயட்சியின் கண்களில் இருந்து யாரும் தப்ப தான் முடியுமா ? இல்லை உங்கள் கண்களில் படாத செயல்கள் தான் இங்கே நிகழ்ந்திடுமா என்ன? வேற்று ஆட்களுக்கு தான் அழைப்பு தேவை உங்களுக்கு அழைப்பு வேண்டுமா வனயட்சி?” என வனயாத்திரையும் அவரின் எதிரே தீரமும், கூர்மையும் கொண்ட கண்களுடன் முன்னே வந்து நின்று கேட்டாள்.
“இந்த வாய் மட்டும் குறைவதே இல்லை உனக்கு. எங்கே கரு நின்று விட்டதா? நான் பார்க்கலாமா?” என ஆவலுடன் கேட்டார்.
“நில்லுங்கள் வனயட்சி. இப்போது தான் 21 நாட்கள் ஆகியுள்ளது. இன்னும் முழுதாக பல மாதங்கள் கழித்து தான் யாரும் கண்களால் காண முடியும். இப்போது கேப்பானை காதில் வைக்கிறேன் அனைவரும் அது உருவாகும் சத்தம் மட்டும் கேட்டுவிட்டு செல்லலாம்..” என திடமாக அபராஜிதனை பார்த்தபடி கூறினாள்.
“அறிவானந்தா பார்த்தாயா இவளை? எனது கைப்பிடித்து நடக்க பழகியவள் எனக்கு கட்டளையிடும் தோரணையை..” எனக் கூறிய வனயட்சி கண்களில் வன்மம் நிறைந்து காணப்பட்டது.
அதைக் கண்ட சிங்கத்துரியன், “அன்னையே.. உங்களின் வழிகாட்டலில் இன்று ஓர் உயர்ந்த செயலினை செய்யும் உங்கள் பிள்ளையை ஆசீர்வதியுங்கள்..” என கூறியதும் அவனை வெறுப்பாக பார்த்து, “நீ பேசாதே துரியா.. உன் தாயின் சொல்படி நடக்காதவன், அவளின் முகம் பார்த்து பேசும் அருகதையும் அற்றவன். நீ இங்கிருப்பது தெரிந்திருந்தால் இங்கே வந்திருக்கமாட்டேன். இதோ எனது மருத்துவக் கலையின் வாரிசான அறிவானந்தன் கேட்டு கொண்டதால் இங்கே வந்தேன். நான் செல்லும்வரை என் முன்னால் வராதே..” என அவனை திட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றார்.
“குருதேவி ஏதோ கோபத்தில் மொழிகிறார்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.. நான் அந்த கேப்பானை காதில் வைத்து கேட்கலாமா? எனக்கும் இது போன்ற ஒரு ஆராய்ச்சி செய்யும் ஆவல் அதிகமுள்ளது. யாரும் வெற்றியடையாத ஒன்றில் தாம் இந்த முதல் படியை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி இளவரசி. தங்களின் உதவியாளனாக வரும் வாய்ப்பு கிடைத்தால் பெரும் பாக்கியம் செய்தவனாவேன்..” என பணிவுடன் கூறினான்.
“இந்நாட்டின் மிகப்பெரும் மருத்துவ சிகாமணியின் வாரிசான நீங்கள் எனக்கு உதவியாளனாக வருவதை நான் விரும்பவில்லை அறிவானந்தரே.. தாம் தங்களின் குருதேவியிடம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. அதை முதலில் கவனியுங்கள். இந்த கேப்பானில் எந்த மூன்றாம் மனிதரும் ஒலி கேட்பதை நான் விரும்பவில்லை. நீங்கள் செல்லலாம்..” என வனயாத்திரை அவனை வெளியே செல்ல கைகள் நீட்டினாள்.
“மிகவும் நயவஞ்சகம் கொண்ட பிசாசு.. இவளை கொன்று எனக்கு ஏவல் புரியும் கொள்ளிவாய் பிசாசாக மாற்றுகிறேன்..” என தனக்குள் முணுமுணுத்தபடி வனயட்சி அருகே வந்து வருத்தம் கலந்த முகபாவத்துடன் நின்றான்.
“என்னவாயிற்று ஆனந்தா? ஏன் உனது முகம் வாட்டம் கொண்டுள்ளது?” என வனயட்சி கனிவுடன் கேட்டார்.
“அந்த ஒலி கேட்க ஆசை கொண்டேன் தாயே.. ஆனால் இளவரசி அவர்கள் மறுத்துவிட்டார்கள்.. பரவாயில்லை வெறும் உதவியாளன் இதற்கெல்லாம் ஆசைபடுவது அதிகம் தான் அல்லவா? தாம் இந்த ஆராய்ச்சியை செய்யும் போது நான் கரு வளரும் ஒலி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் விரைவில் இந்த ஆராய்ச்சியை தொடர்வீர்கள் தானே குருதேவி?” என அப்பாவித்தனமான முகபாவத்துடன் கேட்டான்.
“உன்னை நிராகரித்து வெளியே அனுப்பிவிட்டாளா? என்ன திண்ணக்கம் அவளுக்கு? நீ நகரு நான் அவளை ஒரு வழி செய்கிறேன்.” என கோபம் கொண்டார்.
“தாயே.. வேண்டாம்.. வேண்டாம்.. ஏற்கனவே என்னால் தாங்கள் தங்கள் புதல்வரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. இன்று என்னால் இளவரசிக்கும் உங்களுக்கும் பிணக்கம் வருவதை என்னால் தாங்க முடியாது.. அவர் கூறியதும் சரி தானே.. நான் மூன்றாம் மனிதன். தவிர தங்களின் உதவியாளன் அவ்வளவு தானே? எனது தகுதி மறந்து ஆர்வ மிகுதியில் கேட்டது எனது தவறு தான். இனி அப்படி ஏதும் கேட்கமாட்டேன். நீங்கள் கோபம் கொள்ளவேண்டாம். ஏற்கனவே 15 தினங்கள் கழித்து இன்று தான் தாம் தங்களின் ஆதுரசாலையை விட்டு வெளியே புது காற்று வாங்க வந்திருக்கிறீர்கள். நாம் இந்த இடத்தை சுற்றி பார்த்துவிட்டு வரலாம் வாருங்கள்..” என அவன் நைச்சியமாக பேசி அந்த இடத்தில் என்னென்ன இருக்கிறதென காண வனயட்சியுடன் சென்றான்.
“ஒரு நிமிடம் தாயே.. இங்கே மூன்றாம் மனிதர்கள் உலாவ அனுமதியில்லை. தாம் நடைபயில வேண்டுமென்றால் இரண்டாம் சுற்று பாதையில் நடக்கலாம்..” என நானிலன் கூறியபடி அவ்விடம் வந்தான்.
“நான் யாரென்று தெரியுமா?”
“நன்றாகவே அறிவேன் வனயட்சி அவர்களே. ஆனால் இது எனது காவல் கோட்டை. இங்கே நான் கூறும்படி தான் மகாராஜாவும் நடக்க வேண்டும். தாம் இந்த இடத்தில் எந்த வேலையும் செய்யாத பட்சத்தில் மூன்றாமவர் தான். தாங்கள் தங்கள் உதவியாளருடன் அடுத்த வெளி சுற்றில் நடக்கலாம்.. “ என நானிலன் கூற உடன் அஜகரனும் அவன் தோள் மீது நின்று உஷ் என சத்தம் எழுப்பியது.
“இங்கே அவளின் ஆட்சியும் அதிகாரமும் தூள் பறக்கிறது. இருக்கட்டும். அனைத்திற்கும் ஒரு முடிவு கட்டுகிறேன்.” எனக் கோபமாக கூறிவிட்டு வனயட்சி அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
அபராஜிதன் (எ) அறிவானந்தன் நானிலனை முறைத்தபடி வனயட்சி பின்னாலேயே ஓடினான்.
“வணங்குகிறேன் இளவரசி. அவர்கள் இருவரும் கிளம்பிவிட்டார்கள்..” என நானிலன் வந்து கூறினான்.
“நல்லது நீ இங்கே காவலுக்கு நில். நான் இவர்களுடன் உணவருந்தி வருகிறேன். நீ உணவருந்திவிட்டாய் தானே?” என பரிவுடன் கேட்டாள்.
“நானும் அஜகரனும் ஒரு நாள் உணவை முழுதாக விழுங்கிவிட்டோம். நீங்கள் சென்று வாருங்கள் இளவரசி..” என சிரிப்புடன் கூறினான்.
“அனைவரும் எனது விருந்தினர் அறைக்கு வந்து சிற்றுணவு அருந்தவேண்டும்..” என அனைவரையும் அழைத்துக் கொண்டு உணவருந்தும் கூடம் வந்தாள்.
அனைவருக்கும் தனது கைகளால் பரிமாறிவிட்டு அவர்களை உண்ணச் சொல்லிவிட்டு அடுத்த வகை உணவுகளை பார்க்க உள்ளே சென்றுவிட்டு வந்த போதும் யாரும் உணவில் கை வைக்காமல் எங்கெங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
“என்னவாயிற்று யாருக்கும் உணவின் ருசி பிடிக்கவில்லையா?” எனக் கேட்டாள்.
“எங்கள் மனமெல்லாம் கனத்து கிடக்கிறது மகளே.. எங்களின் வனயட்சி அவனின் கைப்பாவையாக மாறி ஆடுவதை எங்களால் காண முடியவில்லை. இன்னும் எத்தனை காலம் இந்த கொடுமையை நாம் சகிக்க வேண்டும்?” என சிங்கத்துரியனைப் பார்த்து மகாராணியார் கேட்டார்.
“இந்த பிறவி மட்டுமின்றி இனி வரும் பல பிறவிகளிலும் இதே தான் நடக்கும் மகாராணி அவர்களே.. அவர் தனது மனதை கட்டுக்குள் வைத்து அடக்க தெரிந்தால் மட்டுமே அவன் கட்டுக்குள் அடங்காமல் இருப்பார். அடுத்து வரும் காலம் அனைத்தும் நமக்கு சோதனை காலம் தான். அதற்கு மனதை திடப்படுத்துங்கள்.. இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரும் பொறுப்பை நாங்கள் அனைவரும் கையில் எடுத்துள்ளோம். அதை எங்களின் உடல் பொருள் ஆவி அனைத்தும் கொடுத்து நிறைவேற்ற நாங்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்..”
“அதெல்லாம் சரி தான் சிங்கத்துரியா.. அதற்காக பெற்றவள் மனம் படும்பாட்டையும் நீங்கள் உணரவேண்டாமா? வனயட்சி எனது சிறுவயது முதலே நல்ல தோழி. கணவனை இழந்த வேதனையில் அவள் பித்து பிடித்து சுற்றியதால், அவளின் மனநிலை மாறவே ருத்ரக்கோட்டை அனுப்பிவைத்தோம். அவளை பிரிந்திருந்த காலங்களில் நான் பட்ட மனவேதனை எல்லாம் வார்த்தைகளில் கூறி முடிக்க முடியாது. அவள் மீண்டும் எங்கள் ஆதித்ய கோட்டை வருகிறாள் என்றதும் எப்படி கொண்டாட்டமாக அவளை வரவேற்றேன் தெரியுமா? ஆனால் அவள் உள்ளே நுழையும் முன்னே..” என அவர் அந்த நாட்களுக்குள் சென்றார்.
ருத்ரக் கோட்டையில் இருந்து வனயட்சியை ஆதித்ய கோட்டைக்கு அனுப்பி வைத்துவிட்டு சிங்கத்துரியன் அங்கிருந்த குகையை இடமாற்ற ஏதுவான வேலைகளை எல்லாம் காஞ்சனை தேவியின் ஆத்மாவின் வழிகாட்டுதல்படி அமரபுசங்கனும், சிங்கத்துரியனும் முதலில் ஓர் குகையைக் கண்டுபிடித்து அதற்கு பல பூஜைகள் செய்து அனைத்து மாயங்களிலிருந்தும் காக்கும் பலமான பாதுகாப்பு கவசங்களை போட்டுவிட்டு, பழைய குகையில் இருந்த பொருட்களை எல்லாம் புது குகைக்கு அமரன் தூக்கி வந்து கொடுக்க, சிங்கத்துரியன் அனைத்தையும் பழைய குகையில் இருந்தது போலவே அடுக்கியதோடு, அக்குகையின் சீதோஷன நிலை முதல் காற்று வெளிச்சம் முதற்கொண்டு சரளமாக உள்ளே வந்து செல்லும்படியாக செய்தான்.
அனைத்தையும் கொண்டு வந்த அமரனால் அந்த வரைபட கற்களை மட்டும் பெயர்த்து எடுக்க முடியவில்லை. அது நிலத்தோடு நன்றாக ஒன்றிப் போயிருந்தது.
“இதை மட்டும் என்ன செய்தும் நகர்த்தக்கூட முடியவில்லை துரியரே.. என்ன செய்வது?”
“தங்கள் அன்னையிடம் ஆலோசனை கேளுங்கள் அமரரே.. இங்கு நடக்கும் அனைத்திற்கும் அவர் தான் முதல் மூலசக்தி. நானும் புது குகையில் இங்கிருப்பது போலவே அனைத்தும் செய்து விட்டேன். ஆனாலும் ஏதோ ஒன்று அங்கே குறைகிறது. அது என்னவென என்னால் கண்டுணர முடியவில்லை.” என சிங்கத்துரியனும் அசதியுடன் அங்கே அமர்ந்தான்.
“இரண்டு இரவு ஒரு பகலில் அனைத்தும் மாற்றிவிட்டோம். சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் துரியரே.. “ என அமரன் வாஞ்சையுடன் அவனின் தோள்தொட்டு கூறினான்.
“இல்லை அமரரே… இந்நேரம் அன்னை ஆதித்ய கோட்டைக்கு அருகே சென்றிருப்பார். அதே நேரம் தான் அவர் அவனின் பிடியிலும் சிக்குவார். இனி என் அன்னையை நான் அதே அன்போடும், இணைப்போடும் நெருங்கவே முடியாது. அது தான் எனது மனதை அதிகம் வாட்டுகிறது.” எனக் கூறியவன் கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகள் வெளியேறின.
அபராஜிதன் ஆணைப்படி வனயட்சியை அபாராஜிதனின் அடிமையாக்கும் பொருட்டு வந்திருந்த அகோரிகள் மூவரில் இருவர் அவரை அபராஜிதனுக்கு வசியப்படுத்தியிருந்தனர்.
மூன்றாவது அகோரி அபராஜிதனின் ரத்ததோடு வனயட்சியின் ரத்தம் இணைத்து பல பிறவிகளுக்கும் அவரை அவனின் அடிமையாக மாற்றும் ஏற்பாடுகளில் அவருக்காக காத்திருந்தார்.
ஆதித்ய கோட்டைக்கு இன்னும் இரண்டு காத தூரம் தொலைவிருந்தது. ஆனால் இரவானதால் அங்கிருந்த சத்திரத்தில் ஓய்வெடுக்க அவரின் பரிவாரம் நின்றது.
“இந்த இடமெல்லாம் நான் பார்த்து பல வருடங்கள் ஆனது. சற்று அந்த பக்கமாக நடந்துவிட்டு வருகிறேன். உணவு தயாரானதும் அனைவரும் முதலில் உண்டுவிட்டு ஓய்வெடுங்கள். எனக்கு தனியாக எடுத்து வைத்துவிடு நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்.” என தன் அந்தரங்க உதவி பெண்ணிடம் கூறிவிட்டு யானை நிற்கும் இடம் தாண்டி இருந்த கரும்பு சோலைக்கு அருகே வரப்பில் மெல்ல நடந்துக் கொண்டிருந்தார்.
அவரின் மனதில் பழைய நினைவுகள் எல்லாம் மேலெழுந்து அவரின் மனதைக் குழைய வைத்துக் கொண்டிருந்தது.
அப்போது அறிவானந்தன் (எ) அபராஜிதன் கரும்பு காட்டிற்குள் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட வனயட்சி கண்ணில் படுபடியாக அவருக்கு முன்னே ஓடினான். அவனை துரத்தியபடி மூன்று காட்டு நாய்கள் பின்னாலேயே ஓடியது.
அதைக் கண்டவர் குரல் கொடுக்க, அவருடன் வந்தவர்கள் அந்த நாய்களை விரட்டிவிட்டு அவனையும் கைத்தாங்களாக அழைத்து வந்தனர்.
“நீ எங்கிருந்தப்பா இங்கே வந்து சேர்ந்தாய்?” என வனயட்சி அவனை கூர்மையாக பார்த்தபடி கேட்டார்.
“தங்களிடம் நான் மருத்துவம் பயிலவே வந்தேன். நீங்கள் எனை விட்டுவிட்டு சென்றதால் உங்களை தேடி தான் வந்தேன் தாயே. இனி நீங்கள் எங்கே சென்றாலும் எனையும் அழைத்து செல்லவேண்டும்..” என அவரின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவரின் உடலில் தனது ரத்த துளியை சேர்த்தான்.
அந்த நொடி முதல்..

