112 – ருத்ராதித்யன்
வனயாத்திரை அந்த குடுவையை அடுக்கடுக்காக பெண்களின் கர்ப்பம் போல உருவாக்கி அதில் இருக்கும் சூடு முதல் இன்னபிற கரு வளர தேவையான விஷயங்கள் கிடைக்கும் படியாக அந்த அறையிலேயே ஓர் அடுக்கு தரையை ஏற்படுத்தியிருந்தாள்.
ஒரு நாழிகை கடந்தும் உள்ளே இருக்கும் முதல் துளி நீரின் பிரகாசம் குறையாமல் இருந்தால் கரு நிற்கவில்லை என்று அர்த்தம். அதில் உள்ள பிரகாசம் குறைந்து அடர் நீளத்தில் லேசான வெள்ளை வெளிச்சம் அதில் தெரிந்தால் கரு நின்றுவிட்டதாக அர்த்தம். இதை எல்லாம் கண்மயாவிடம் அங்கேயே நன்றாக கேட்டு கொண்டதால் அவர் கூறிய முறையில் இப்போது முயன்று கொண்டிருக்கிறாள். அவள் இங்கே வந்ததும் ஓலை அனுப்பினால் இவளுக்கான காவல் ஆளை இங்கே அனுப்புவதாகவும் முன்பே பேசி வைத்திருந்தனர்.
கருப்பு காட்டுப் புறா ஒன்றின் காலில் குறிப்பு எழுதி பறக்கவிட்டுவிட்டு மீண்டும் குடுவையை திறந்து பார்க்க வந்தாள்.
அப்போது குடுவையில் மூடியில் இருந்த கூரான முனை அவளது உள்ளங்கையில் கீறியதில் ரத்தம் வெளியேறத் தொடங்கியது. அவள் குடுவையை திறந்தபோது அவளின் ரத்த துளியும் அந்த கருவில் கலந்தது.
அவளின் இரத்தம் சேர்ந்ததும் அந்த கருவின் பலம் கூடியதில் அதன் பிரகாசம் பெருகி மிளிர்ந்தது.
மிளிரும் வெளிச்சத்தைக் கண்டவள் கண்களில் ஆனந்தம் பெருகத் தொடங்கியது. “அம்மா வனதேவி.. உனது வழிகாட்டலில் முதல் படியை தாண்டிவிட்டேன். இக்கரு முழுதாக மனிதனாக பிறப்பெடுக்க நீ தான் அருள் புரிய வேண்டும்.” என வனதேவியை மனதார பிரார்த்தித்து விட்டு அடுத்த கட்ட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
இன்னும் அடுத்த 21 நாட்கள் இதை திறந்து பார்க்காமல் பத்திரமாக வைக்க வேண்டும். கரு வளர தேவையான மற்ற சத்துக்கள் முதல் இதர வளங்கள் அனைத்தும் தொப்புள் கொடி மூலமாக பெண்ணின் கருவில் வடிகட்டி கொடுப்பதைப் போல ஓர் மூலிகை கொடியை எடுத்து வந்து அந்த கருவின் குடுவையில் இணைத்தாள். இதுவும் அந்த பழங்குடி மக்கள் அவளிடம் கொடுத்தது தான். ஓர் மனிதனை மனிதனின் உடல் இல்லாமலே உருவாக்கும் அரிய திறனை அவர்கள் இன்று வரையிலும் காத்து வருவது தான் பெரும் சிறப்பு.
அந்த அற்புதமான ஞான மனிதர்களை காக்க வேண்டிய பொறுப்பும் அவளுக்கு அதிகமிருப்பதை உணர்ந்தாள்.
இங்கே கரு நின்றதும் கண்மயாவிற்கு அதன் தாக்கம் அவள் கண்மூடி தனது எல்லை தெய்வத்தை வணங்கும்போது தெரியவந்தது.
“அய்யா .. எல்லைச்சாமி.. கரு நின்னுரிச்சி.. அத முழுசா வளர்ந்து முழு மனுஷனா மாறுற வரைக்கும் நீ தான் அந்த கருவுக்கும் காவல் இருக்கணும்..” என அவள் மனமார வேண்டிக்கொள்ளவும் எல்லைச்சாமியின் பிரதி உருவம் ஒன்று அங்கே கரு உருவான குடிலுக்கு உள்ளே வந்து அந்த கரு வைத்திருக்கும் இடத்தை தனது காவலுக்குள் கொண்டு வந்தது. இனி இந்தக் கருவை சிதைக்கவோ, திருடவோ யாரேனும் வந்தால் அவர்களது உயிர் பறிக்கவும்படும்.
கரு உருவானது கண்மயாவிற்கு மட்டுமல்ல அமரன், சிங்கத்துரியன், நரசிம்மன், வரத யோகேந்திரர் வரையிலும் இருந்த இடத்திலேயே உணர்ந்தனர். மகாராணியார் உடலிலும் ஓர் மின்னல் பாய்ந்து சென்றது.
அரூபமாக காஞ்சனை தேவியும் அங்கே வந்து அந்த கருவை பார்த்து ஆசீர்வதித்து சென்றார்.
விஸ்வக்கோட்டை அரசகேசரி அறையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்த மூத்த மந்திரவாதியும் இதை உணர்ந்து அரசகேசரிக்கும், அபாராஜிதனுக்கும் செய்தி அனுப்பினான்.
“நாம் பல முறை முயன்றும் முடியாத ஒன்று அவளால் மட்டும் எப்படி முடிந்தது குருவே?” என அரசகேசரி ஆத்திரத்துடன் கேட்டான்.
“நாம் பலத்தை வைத்திருக்கிறோம் ஆனால் அவள் நல்ல மனிதர்களின் ஆசியையும், நட்பையும் சம்பாதித்ததோடு, வனதேவியின் பரிபூரண அருளையும் பெற்று இருக்கிறாள். வனதேவியின் அருள் இன்றி இங்கே எந்த உயிரும் ஜனிக்க முடியாது அரசகேசரி.. இது ஆவேசம் கொள்ளும் சமயமல்ல.. நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இங்கே வா..” என அவனை அழைத்து காதில் சில விஷயங்களை கூறினான்.
அதைக் கேட்டவன் கண்களில் கர்வமும், ஆர்வமும் பொங்கி வழிந்தது. “நிச்சயமாக நீங்கள் சொன்னதை செய்து முடிக்கிறேன் குருவே..” எனக் கூறியவன் தனது அறை உப்பரிகையில் இருந்த பாம்பு குட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு காற்றாய் மாறி வனயாத்திரை இருக்கும் இடத்திற்கு அருகே வந்து மனிதனாக உருமாறி கையில் இருந்த பாம்பின் காதில் ஏதோ கூறி, அவள் இருக்கும் திசையில் விட்டுவிட்டு அங்கிருந்து மறைந்து போனான்.
அந்த பாம்பு குட்டியானது வனயாத்திரையை பின்தொடர்ந்தபடியே வெகுநேரம் சென்றுக் கொண்டிருந்தது. அன்று மாலை சூரியன் மறையும் வேளையில் அது அவளை தீண்டும் நேரம் சரியாக நானிலன் (கண்மயாவின் மகன்) அங்கே வந்து சேர்ந்தான்.
வனயாத்திரையை தீண்டும் சமயம் அவன் அதை தலையில் அடித்து மயக்கமடைய செய்தான்.
“வணங்குகிறேன் இளவரசி அவர்களே.. நானே தங்களின் காவலன் இனி.. ஆழ்துளி பழங்குடியினரின் சார்பாக இங்கே வந்திருக்கிறேன். இதோ எனது அடையாள கருவி..” என அவளிடம் தன்னை முழுதாக ஒப்புவித்து வீர வணக்கம் செலுத்தி எழுந்து நின்றான்.
“நீ தலைவரின் புதல்வன் தானே? நீயே ஏன் இங்கே எனக்கு காவலாக வந்தாய் நானிலா?” என வனயாத்திரை தன்னை விட மூன்று அகவை பெரியவனாக இருந்தவனைப் பார்த்துக் கேட்டாள்.
“பல வருடங்கள் கழித்து முதல் மழைத்துளி எடுத்திருக்கும் உங்களை காப்பாதை விட பெரிய வேலை எனக்கு அங்கே இல்லை இளவரசி.. உங்களை போன்றவர்களை காப்பதில் தான் வீரமும், தீரமும் நிறைந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதோ நான் வந்ததும் இந்த பாம்பிடம் இருந்து உங்களை காத்தது போல பல ஆபத்துகளில் இருந்தும் உங்களை நான் தவறாமல் காப்பேன்.”
“அந்த பாம்பை கொன்று விட்டாயா?”
“இல்லை. மயங்கவே செய்திருக்கிறேன். இந்த பாம்பு இவ்விடத்தை சேர்ந்தது இல்லை. எந்த இடத்தில் இருந்து வந்திருக்கும் என்பதை தீர ஆராய வேண்டும்.” எனக் கூறியவன் தனது இடைக் கச்சையில் இருந்து கண்மயா அவளுக்கு கொடுத்து விட்ட பரிசினையும் கொடுத்தான்.
“இதை எங்கள் தலைவியார் தங்களிடம் கொடுக்க சொன்னார்..” எனக் கூறி ஓர் குடுவையும், சிறிய மூட்டையும் கொடுத்தான்.
“என்ன இது?”
“திறந்து பாருங்கள். நான் இந்த பாம்பை தெளியவைத்து விசாரித்துவிட்டு வருகிறேன்..” எனக் கூறியவன் அந்த பாம்பின் உடலில் சில இடங்களை அழுத்தி அதன் மயக்கம் தெளியவைத்தான்.
“நீ எந்த இனத்தை சேர்ந்தவன்? நீ எப்படி இங்கே வந்தாய்?” என அதன் பாஷையில் பேசிக்கொண்டே அதற்கு உணவும் பிடித்துக் கொடுத்தான்.
பல நாட்களாக சரியான உணவு இன்றி பலம் இழந்து சோர்ந்து மந்திரத்திற்கு கட்டுப்பட்டிருந்த அந்த பாம்பு இன்று வயிறு நிறைந்த உணவை நன்றாக விழுங்கிவிட்டு தனக்கு உணவு கொடுத்தவனை நன்றாக பார்த்தது.
“வணக்கம் காவலனே.. நான் கருஞ்சி இனத்தை சேர்ந்தவன். எனது கூட்டத்தார் அனைவரையும் கொன்று விட்டு, எங்களை ஈன்றதும் எங்கள் தாயுடன் சிலர் கடத்தி சென்று நவ-வர்ம நாட்டின் எல்லையில் சில காலம் வைத்திருந்தனர். பிறந்தது முதலே எங்களுக்கு சரியான உணவு கொடுக்கவில்லை. மந்திரத்தின் கட்டுக்குள் மயங்கி அவர்கள் சொற்படி நடப்பது மட்டுமே எங்களின் குறிக்கோள் என ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். இன்று நீ எனக்கு வயிறு நிறையும் உணவு கொடுத்து அந்த மந்திர கட்டிற்குள் இருந்து விடுவித்துவிட்டாய். மிக்க நன்றி. உனக்கு என்றுமே நான் கடமைப்பட்டவன்.” என தெளிவாக பேசியது அந்த பாம்பு.
“உன் தாய் என்ன ஆனார்?”
“தெரியவில்லை.. அவரை தனியாக ஓர் கூண்டில் அடைத்து தூக்கி சென்றனர்.” வருத்தமுடன் கூறியது.
“சரி இனி என்ன செய்வதாக இருக்கிறாய்?” என நானிலன் கேட்கும்போது அங்கே வனயாத்திரையும் வந்து அமர்ந்தாள்.
“இவர்கள் இனத்தை சேர்ந்தவர்கள் தெற்கு பக்கமிருக்கும் நதித்தீவில் இன்னும் வசித்து வருகின்றனர். உன்னை அவ்விடம் சேர்க்க சொல்கிறேன்..” என வனயாத்திரையும் பாம்பின் பாஷையில் பேசினாள்.
“இல்லை. என்னுடன் பிறந்தவர்களை அந்த கயவர்களிடம் இருந்து மீட்க வேண்டும். அதன்பின் தான் என்னால் நிம்மதியாக வாழ முடியும்.. எனை மன்னித்துவிடுங்கள் உங்களை தீண்ட முனைந்தேன்..” என தலைத் தாழ்த்தி மன்னிப்பு கேட்டது.
“நீ இப்படி வந்ததால் தானே விடுதலை பெற்றாய். விடு.. உன் உடன்பிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?”
“அரசகேசரியின் அறை உப்பரிகையில் பெரும் புற்றில் தான் மந்திரக்கட்டில் வைத்திருக்கிறார்கள்..”
“அங்கே வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்?”
“அரசகேசரி மற்றும் அவனின் குரு இருவரும் தான் அங்கேயே இருப்பார்கள். தவிர பல அகோரிகளும், மந்திரங்கள் கற்றவர்களும் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.. மற்றபடி யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இவையெல்லாம் நான் புற்றுக்குள் இருந்தபோது உணர்ந்த அதிர்வை வைத்து கூறுகிறேன்..”
“பெரும் ஏற்பாடு தான் நடக்கிறது போலவே.. சரி இருக்கட்டும். நீ அங்கிருந்து உன் உடன் பிறந்தவர்களை எப்படி மீட்க போகிறாய்?”
“அது.. அது தான்.. தெரியவில்லை..”
“கவலை வேண்டாம். உங்களை மீட்பதாக எங்கள் யுவராஜர் உனது இனத்தின் தலைவரிடம் வாக்கு கொடுத்திருக்கிறார். தவிர நாங்களும் உனக்கு நிச்சயமாக உதவி செய்வோம். உனது பெயர் என்ன?”
“பெயர் என்றால்?”
“உனை என்னவென்று சொல்லி அழைப்பது? “
“நாமே இவனுக்கு ஓர் பெயர் வைக்கலாம் இளவரசி..” என நானிலன் கூறினான்.
“சரி நல்ல பெயராக வைத்துவிட்டு வா.. நாம் உணவருந்தலாம்..” எனக் கூறிவிட்டு அவள் அவ்விடம் இருந்து சென்றாள்.
“உன் பெயர் அஜகரன்.. சரியா?”
“சரி.. நான் இவ்விடத்தை எந்த நஞ்சுல்ல உயிரினமும் உள்ளே வராமல் பார்த்துக் கொள்கிறேன். எனை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி..” என மீண்டும் கூறிவிட்டு அந்த இடத்தை பாதுகாக்க அதன் இனத்தின் வழக்கத்தில் அந்த மொத்த இடத்தினையும் சுற்றி வந்து வளையம் வரைந்தது. அங்கிருந்த மற்ற வேலையாட்களுக்கும் அந்த பாம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ள கட்டளையிடப்பட்டது.
21 நாட்கள் கழிந்து அமரன், சிங்கத்துரியன், ஆருத்ரா, நரசிம்மன், வரத யோகேந்திர ஆதித்யர், மகாராணியார் சௌந்தர்யதிலகவதியார் வனயாத்திரையின் ஆராய்ச்சி குடிலில் வந்து நின்றிருந்தனர். அன்று தான் கருவின் முதல் வளர்ச்சி உருவம் உருபெருவதை மெல்லிய சத்தம் உணரும் கருவி மூலமாக உணர அனைவரும் வந்து நின்றிருந்தனர்.
நானிலன் உதவியோடு அந்த கரு உயிர் கொண்டிருக்கும் குடுவையின் மேலே கேப்பானை வைத்து மற்றொரு கேப்பானை இவர்கள் ஒவ்வொருவர் காதிலும் வைத்து உள்ளே முதற்கட்ட உடல் அமைப்புகள் உருவாகும் மிக மெல்லிய சத்தம் அனைவரும் கேட்டனர்.
அப்போது வனயட்சி அங்கே அபராஜிதனுடன் வந்து சேர்ந்தார்.

