14 – மீள்நுழை நெஞ்சே
“கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன் கனி.. இன்னிக்கு ரவைக்குள்ள கட்டலன்னா அப்டியே ரெண்டு மடங்கு வட்டி கட்டணும். அதான் ..”, எனக் கனிமொழியிடம் காரணத்தை விளக்கினான்.
“எல்லா திருட்டு பயலுகளும் நல்லா தான் சொல்றாங்க காரணம்.. ஏன் கனி இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?”, என துவா அவன் சட்டையை ஆராய்ந்தபடிக் கேட்டாள்.
“இரு துவா .. யார்கிட்ட கடன் வாங்கின ? எதுக்கு வாங்கின ?”, எனக் கனி தனது விசாரணையை ஆரம்பித்தாள்.
“வேற யாரு .. எல்லாம் எங்கத்தகிட்ட தான்.. அது தான் ஊருக்குள்ள இவ்ளோ வட்டி வாங்கற ஒரே ஆளு.. அது இன்னும் போலீஸ்ல சிக்கமாட்டேங்குது ..”, என துவா அவனை அங்கிருந்த திட்டில் ‘அமர’ செய்கைச் செய்தபடிக் கூறினாள்.
“ரெண்டு நாளைக்கு முன்ன தானே கூலி வாங்கின ? அத என்ன செஞ்ச ?”, எனக் கனி துவாவைப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டாள்.
“மங்.. மங்காத்தா ஆடி கைல இருந்த காசு எல்லாம் போயிரிச்சி .. ஆத்தாவுக்கு திடீருன்னு உடம்பு முடியல .. டாக்டர்கிட்ட கூட்டி போகணும் .. அதான்.. “, எனத் தலையைக் குனிந்துக் கொண்டான்.
“ஏண்டா எப்படி டா சூதாட மனசு வருது ? இந்த கூலி வச்சி தானே நீ ஒரு வாரம் ஓட்டனும் .. அறிவுன்னு ஒண்ணு இருக்கா இல்லையா ?”, எனத் துவா திட்டினாள்.
“அந்த மனோஜ் பய தான் துவாரகா வம்பிழுத்தான் .. நானும் ரோஷப்பட்டு போனேன் ..”
“அப்பிடியே எல்லாம் போயிரிச்சி அதானே ?”, துவா அவன் விட்டதை முடித்தாள்.
“என்ன கருமமோ விடு துவா.. இந்த மோட்டார் என்ன வெல தெரியுமா ? இத தூக்கிட்டு போய் வித்துட்டா உனக்கு எப்டி இங்க வேலை இருக்கும் ? நட வீட்டுக்கு ..”, எனக் கனி அதட்டி அவனை அவனின் வீட்டிற்குச் செல்லக் கிளப்பினாள்.
“நீ முன்ன போ கனி.. நான் வயல ஒருமுற பாத்திட்டு, இந்த ரூம் பூட்டிட்டு சாவியோட வரேன்..”, எனத் தூரத்தில் தெரியும் மங்கலான விளக்கைப் பார்த்தபடிக் கூறினாள்.
“சரி சீக்கிரம் வா.. இந்தா இத கைல வச்சிக்க “, என ஒரு பெரிய டார்ச்சை அவளிடம் கொடுத்துவிட்டு அமாவாசையுடன் நடந்தாள்.
துவா வேக வேகமாக மோட்டோர் ரூம் பூட்டி விட்டு, அந்த வெளிச்சம் சென்ற திக்கு நோக்கி ஓடினாள்.
அங்கே அவளின் அத்தை மகன் சில நண்பர்களோடு மைனாவின் வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான்.
“அந்த கழுதைக்கு என்ன தைரியம் இருந்தா பஞ்சாயத்து கூட்டி இருப்பா ? எங்க மாமா பொண்ண கட்ட நான் பாத்துகிட்டு இருந்தா இவளே கெடுத்துடுவா போல ..”, எனப் பேசியபடி நடந்துக்கொண்டு இருந்தான்.
“அந்த பொண்ணு தான் வெளிநாடு போகுதாமே .. உனக்கு எப்டி கட்டி குடுப்பாங்க மாப்ள ? அதுவும் இல்லாம அந்த பொண்ணுக்கு உன்ன கண்டாலே பிடிக்காது.. எப்டி உன்ன கட்ட சம்மதிக்கும் ?”, என உடன் நடந்த ஒருவன் கேட்டான்.
“என்ன செஞ்சா கட்டி வைப்பாங்களோ அத செய்வேன் மச்சான் .. மொத இவள முடிச்சி கட்டலாம் வா.. நாளைக்கு இவ வாயவே தொறக்க கூடாது ..”, எனக் கூறிவிட்டு மைனாவின் குடிசை இருக்கும் திக்கு நோக்கிச் சென்றனர்.
துவாரகா அவர்கள் செல்லும் திசை வைத்து அவர்களின் எண்ணத்தை அனுமானித்து அவர்களுக்கு முன் மைனா இருக்கும் குடிசைக்கு விரைந்தாள்.
“மைனா .. மைனா .. சீக்கிரம் கெளம்பு .. என்கூட வா”, என வீட்டின் பின்பக்கம் இருந்த மைனாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டுச் சென்று இருட்டில் மறைந்து நின்றாள் துவா.
“என்ன துவாரகா ?”, என மைனா கேட்கும் முன் அவள் வாயை அடைத்து முன் பக்கம் பார்க்கக் கூறினாள்.
“எங்க டா அவ ? ஆள காணோம் ?”, என உள்ளே வந்தவர்கள் மைனாவை தேடுவது வைக்கப்போர் அருகில் மறைந்திருந்த இருவருக்கும் நன்றாகத் தெரிந்தது.
“என்ன பண்றது இப்ப ?”, மைனா சற்று மிரண்டு போய் கேட்டாள்.
“அமைதியா இரு ..”, எனச் செய்கைக் காட்டிவிட்டு, மெல்ல சத்தம் எழுப்பாமல் சுற்றிக்கொண்டு வீட்டின் முன்பக்கம் சென்றாள்.
“மைனா .. மைனா ..”, என அழைத்தபடி, வாசல் பக்கம் நின்றாள்.
கிராமங்களில் பொதுவாக வாசலில் இருந்தே பேசி செல்பவர்கள் தான் அதிகம். அதே போல இவளும் உள்ளே இருப்பவர்களைப் பார்க்கும் படியானப் பார்வையில் வெளியே நின்று எட்டி எட்டிப் பார்த்து அழைத்துக்கொண்டு இருந்தாள்.
“டேய்.. உன் மாமா பொண்ணு டா..”, என ஒருவன் கூறியதும் மனோஜ் அதிர்ந்து மெல்ல எட்டிப் பார்த்தான்.
வெளியே துவாரகா நின்றுக்கொண்டு உள்ளே எட்டி பார்ப்பது தெரிந்தது. இந்நேரம் தாங்கள் இங்கிருப்பதை அவள் பார்த்தால் நிச்சயம் பிரச்சினைக் கிளம்பும் என்று அமைதியாக அங்கிருந்த நால்வரும் உள்ளே பதுங்கினர்.
“மைனா .. மைனா .. என்ன யாராயும் காணோம் .. வீடு தொறந்து போட்டு இருக்கு ..”, எனக் கூறியபடி உள்ளே வந்தவள் யாரும் இல்லை என்று நினைப்பது போல பாவலா செய்துவிட்டு வீட்டை வெளியே பூட்டிக்கொண்டு பின்பக்கம் வந்து, அங்கும் பூட்டிக்கொண்டு மைனா அருகில் வந்தாள்.
“திருதிருன்னு முழிக்காம என்கூட வா”, என வேகமாக இருட்டுப் படிந்தப் பாதையில் அவளை இழுத்துக்கொண்டு கனிமொழி வீட்டிற்கு வந்தாள்.
இங்கே உள்ளே இருந்தவர்கள் குடிசைக் கூரையை விளக்கிவிட்டு, மேலே ஏறி வெளியே வந்தனர்.
“என்னடா இந்த புள்ள வந்து பூட்டிட்டு போயிரிச்சி..”
“நம்ம வந்தத அவ எங்கயோ பாத்து இருக்கா மச்சான்.. அதான் நமக்கு முன்ன வந்து மைனாவ கூட்டிட்டு போயிட்டா .. “, என மனோஜ் கழுத்தை அழுந்தப்பிடித்துத் தலைமுடியைக் கோதியபடிக் கூறினான்.
“இப்ப என்ன டா பண்றது ?”, என உடனிருந்தவன் கேட்டான்.
“வா.. அவ எங்க போவான்னு தெரியும்..”, எனக் கூறிவிட்டு கனிமொழி வீடு நோக்கிப் புறப்பட்டான்.
“இரு மாப்ள .. நீ பாட்டுக்கு வேகமா எங்க போற ? இப்டியே நீ ஊருக்குள்ள போக முடியுமா ? பஞ்சாயத்து கூட்டி இருக்க சமயத்துல நீ ஏன் மைனா வீட்டுக்கு போனன்னு நம்மல தான் மொதல் ஏறுவாங்க அத்தன பேரும்.. அப்பறம் உன் மாமனுங்க ரெண்டு பேரும் வாய் தொறந்தா நம்ம சோளி மொத்தமா முடிஞ்சிடும் .. கொஞ்சம் பொறுமையா இரு டா.. நாளைக்கு பேசிக்கலாம்”, எனக் கூறி அவனை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.
கனிமொழி வீட்டின் பின்வாசல் வழியாக மைனாவை உள்ளே அழைத்து வந்து, கனியின் அறையில் மைனாவை இருக்கும்படிக் கூறிவிட்டு சுற்றிக்கொண்டு மீண்டும் முன்பக்கமாக வந்தாள்.
“எங்க டி சுத்திட்டு வர ?”, என மரகதம் கேட்டதும் அவரிடம் மழுப்பிவிட்டுக் கனிமொழியைத் தேடினாள் துவா.
“கனி எங்கத்த ? இன்னும் வரலியா ?”, எனச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“அமாவாச அம்மாவ ஆஸ்பத்திரி அழைச்சிட்டு போய் இருக்கா.. வந்துடுவா இப்ப.. நீ எங்க போயிட்டு வர ?”, என மீண்டும் அவர் அதே கேள்வியில் நின்றார்.
“நீங்க தானே அத்த மைனா புள்ள பாவம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்க ஏற்படுத்தி தரணும்ன்னு சொன்னீங்க.. அதான் அந்த புள்ளைய காப்பாத்தி கொண்டு வந்திருக்கேன்”, என கூறிவிட்டு அங்கே நடந்ததைக் கூறினாள்.
“என்ன திண்ணக்கம் இருக்கணும் இவனுங்களுக்கு ? நாளைக்கே இந்த புள்ள கழுத்துல தாலி கட்ட வைக்கறேன் அவன”, என ஆவேசமாகக் கூறினார்.
“அப்பறம் .. அப்டியே ஒரு தூக்கு கயிரும் அவன் மாட்டி விட்டு கொன்னுடுவான்.. பரவாலயா ?”, எனக் கேட்டாள் துவா.
“வேற என்ன டி பண்ண சொல்ற ?”, எனக் கேட்டார்.
“மொத அவளுக்கு நாலு தோசை சுட்டு கொண்டு வாங்க.. “, எனக் கூறிவிட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
“இந்தா மைனா தண்ணி குடி..”, எனக் கூறினாள்.
“ப .. ப .. பயமா இருக்கு துவாரகா .. “, என இன்னும் நடுங்கியபடிக் கூறினாள்.
“இவ்ளோ பயம் இருக்கறவ எதுக்கு டி அவன்கூட பழகுன?”, எனக் கேட்டாள்.
“நானா போய் பழகுனேன் அவனா தான் சுத்தி சுத்தி வந்தான்.. எங்காத்தா செத்தப்ப ரொம்ப ஒத்தாசையா இருந்தான்.. அத பாத்துட்டு ..”, என அவள் கூறி முடிக்கும்முன் , “உங்கம்மா சாக காரணமே அவன் தான் தெரியுமா ?”, எனக் கேட்டபடிக் கனி உள்ளே வந்தாள்.
“என்ன சொல்ற கனிமொழி ?”, மைனா திடுக்கிடலுடன் கேட்டாள்.
“உங்கம்மா அன்னிக்கி இவன் வண்டில இடிச்சதால தான் கல்லுல மண்டை பட்டு செத்தாங்க.. அத மேக்கப் பண்ண அவன் நல்லவன் மாதிரி எல்லாம் பண்ணிட்டான். போலீஸ் கேஸ் ஆகிடக்கூடாதுன்னு தான் வேக வேகமா கொண்டு போய் எரிக்க வச்சான்.. “, என நடந்த விவரங்களைக் கூறினாள் கனிமொழி.
“இவ்ளோ நடந்து இருக்கா ?”, என துவாரகாவும் அதிர்ந்துபோய் கேட்டாள்.
“ஆமா துவா.. இந்த பைத்தியக்காரி அது தெரியாம அவன நல்லவன்னு நம்பி இப்போ ஏமாந்து நிக்கறா ..”, கனியின் குரலில் ஆதங்கம் நன்றாகத் தெரிந்தது.
“நான் ஏமாந்துட்டேனா கனி ?“, எனச் சன்னமானக் குரலில் மைனா கேட்டதும் இருவரும் திடுக்கிட்டு அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டனர்.
“ஏமாந்து போறது தப்பில்ல மைனா.. மறுபடியும் மறுபடியும் அவங்ககிட்ட ஏமாற கூடாது .. அது தான் முக்கியம்.. இப்ப நீ சொல்லு.. அடுத்து என்ன பண்ணலாம்?”, எனத் துவாரகா கேட்டாள்.
“என்ன பண்றது துவாரகா ? எனக்குன்னு இப்ப யாரும இல்ல .. நான் அனாதையா நிக்கறேன் .. எனக்கு என்ன பண்ணனும்ன்னு தெரியல.. கனி அம்மா சொன்னதால தான் நான் பிராது குடுக்கவே போனேன்.. ஆனா அதுக்கு ஆதரமா இருந்ததும் இப்போ இல்ல”, என அவள் கூறியதும் தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“மைனா ..”, என இருவரும் ஒருசேர அழைத்தனர்.
“ஆமா .. கலஞ்சிடிச்சி .. “, எனக் கூறி அழுதாள்.
“உன்ன பிடிச்ச கெட்டது விட்டுரிச்சின்னு சந்தோஷப்படு மைனா.. இனிமே நீ சுதந்திரமா உனக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழலாம்..”, எனத் துவாரகா கூறினாள்.
“இந்த ஊர்ல இனி இவ இருக்க முடியுமா டி ? இந்தா மைனா இத சாப்பிடு.. “, என அவளுக்கு தோசையைக் கொடுத்தார், வேண்டாம் என மறுத்தவளைச் சாப்பிட வைத்தார்.
“கஷ்டம் தான். ஆனா தப்பு பண்ண அவன் இங்க ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கறப்ப இவ ஏன் இருக்க கூடாது அத்த ?”
“நடக்கறத பேசுங்க டி.. உங்க விதண்டாவாதம் இந்த ஊர்ல செல்லுபடி ஆகாது..”
“ஏன் மா ஆகாது?”, கனியும் கோபத்துடன் கேட்டாள்.
“ஒழுங்கா இருக்கற புள்ளைங்கலையே எவ்ளோ பழி போட்டு வாழ்க்கைய கெடுக்கறாங்க.. அப்படி இருக்கறப்ப இவள இந்த ஊர்ல வச்சி எப்படி கல்யாணம் பண்றது? சரி விடு அதுகூட மெல்ல ஆகட்டும்.. இனிமே எப்படி இவ தனியா இங்க வாழ முடியும்? மத்த ஆம்பளைங்க எல்லாம் இனி இவள எப்புடி எந்த பார்வைல பாத்து எந்தெந்த அர்த்தத்துல பேசுவாங்க ? இதுலாம் யோசிக்கணும் ..”, மரகதம் நிதர்சனத்தைக் கூறிக்கொண்டு இருந்தார்.
“அப்போ என்ன தான் பண்றது?”, துவா கேட்டாள்.
“நான் சொல்றத பண்ணுங்க.. “, எனக் கூறியபடி துவாரகாவின் அத்தை அங்கே வந்தார்.