25 – வலுசாறு இடையினில்
பானு அங்கே நிற்பதுக் கண்டு முதலில் இளவேணி தடுமாறினாலும், நொடி நேரத்திற்கும் குறைவாகத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டதை தேவராயனும், பானுவும் உணர்ந்தனர்.
“நான் எவ புருஷனுக்கு ஆசை பட்டேன்?” , என அலட்சியமாகக் கேட்டாள்.
“என் புருஷனுக்கு தான் இளவேணி. யார கேட்டு என் மாமாவ இன்னொரு பொண்ணுக்கு கட்டி வைக்க நீ இவ்வளவு வேலை பாக்கற ?”, என நேரடியாகக் கேட்டாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் தான் இன்னும் கல்யாணம் ஆகலியே .. அப்பறம் என்ன மிஸ். பானுதேவி.. மிஸ்டர். தேவராயன விட்டா இந்த ஊர்ல வேற ஆம்பளைங்களா இல்ல?”, என நக்கலாகக் கேட்டாள்.
“ஏன் உனக்கு கூட பொறந்தவன் ஆம்பள இல்லயா ? யாரோ ஒரு பொண்ண இவருக்கு கட்டி வைக்க நீ ஏன் இவ்ளோ போராடணும் ?” , என பானுவும் நக்கலாகக் கேட்டாள்.
“ஏய்.. வார்த்தைய அளந்து பேசு”, என கை நீட்டி மிரட்டினாள் இளவேணி.
பானு அவளின் கையைப் பிடித்து பின்னால் முறுக்கி, ”நீ யாரு என்னனு எனக்கு முழுசா தெரியாது.. ஆனா எனக்கு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் நீ இப்படி இருக்க மாட்ட இளவேணி.. வெறும் ஸ்கூல் முடிச்ச பொண்ணு இவ்ளோ பண்ணுதுன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன்.. உன் தோற்றம் வேணா பதினெட்டு வயசு பொண்ணு மாதிரி இருக்கலாம்.. ஆனா நீ வேற .. சீக்கிரம் கண்டுபிடிக்கறேன்.. அப்பறம் இருக்கு உனக்கு..”, என பானு அவள் காதில் கூறினாள்.
“ஹாஹாஹா.. அவ்ளோ பெரிய ஆளா நீ? ரெண்டு நாள்ல உன் புருஷனுக்கு கல்யாணம்.. முடிஞ்சா அத நிறுத்த ட்ரை பண்ணு மிஸ். பானுதேவி.. இந்த வெட்டி அரட்டல் உருட்டல் எல்லாம் என்கிட்ட வேணாம்..”, என லாவகமாக பானுவின் கையை முறுக்கிக் கூறினாள்.
“நிறுத்தறேன்.. நீ இங்க இருந்து போறியா எங்களுக்கு கொஞ்சம் பெர்சனல்-ஆ பேசணும்” , என பானுவும் சிரித்தபடிக் கூறினாள்.
இளவேணி நகரும் முன் செங்கல்வராயன் அங்கே வந்தான், உடன் தங்கத்துரையும் பேசியபடியே வந்தார்.
“என்னம்மா எல்லாரும் நல்லா பேசிட்டு இருந்தீங்களா?”, என தங்கதுரை இளவேணியிடம் கேட்டார்.
“பேசினோம் மாமா..”, எனக் கூறிவிட்டு செங்கல்வராயனிடம், “அப்பா போலாமா? நேரமாச்சி“ , என அவசரப்படுத்தினாள்.
“என்ன அவசரம் ம்மா? மொத தடவ வந்து இருக்க.. வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்டு போவியாம் ம்மா..” , எனப் பரிவாகக் கூறினார் தங்கதுரை.
“பரவால மாமா.. அதான் கல்யாணம் ரெண்டு நாள்ல வருதே.. அப்போ வந்து சாப்டுக்கறேன் ..”, என மறுத்தாள்.
“அது நடக்காதே ..” , என பானு கூறினாள்.
“என்ன பானு ?” , என தங்கதுரை கேட்டதும், “இல்ல மாமா.. அப்போ நம்ம வீட்டு சாப்பாடு எப்பிடி கெடைக்கும் .. சமையல்காரங்க தானே சமைப்பாங்க.. அத சொன்னேன்”, என பானு ஒரு காரணம் கூறினாள்.
“பரவால பானுக்கா.. நான் இங்க தானே இருக்க போறேன்.. மாமா கல்யாணம் முடிஞ்சதும் இங்க அடிக்கடி வந்து போறேன்.. அப்போ மாமா வீட்டு சாப்பாடு சாபட்டுக்கறேன் ..” , என இளவேணியும் அர்த்தமாகப் பார்த்துக் கூறினாள்.
“அதுவும் சரி தான் .. இந்த கல்யாணம் நடக்க காரணமே உங்கப்பா தான்.. அடிக்கடி வீட்டுக்கு வாங்க..” , என தங்கதுரை செங்கல்வராயனைப் பார்த்துக் கூறினார்.
“சரி தங்கம் நாங்க வரோம் “, என எல்லாரிடமும் பொதுவாக விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பினர் இளவேணியும், செங்கல்வராயனும்.
“மாமா.. இந்த பொண்ணு என்ன படிச்சி இருக்கு?”, என பானு கேட்டாள்.
“ஸ்கூல் தான் முடிச்சி இருக்காம் பானுமா.. பாத்தாலே தெரியுது பதினேழு பதினெட்டு வயசு தான் இருக்கும்”, எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றார்.
“என்ன பானு அந்த பொண்ணு வயசு பத்தி திரும்ப திரும்ப கேக்கற ?”, என தேவராயன் அவள் அருகில் வந்துக் கேட்டான்.
“எல்லாம் காரணமா தான் மாமா.. சரி நீ சொல்லு இந்த கல்யாணத்த எப்புடி நிறுத்த போற? ஏதாவது யோசிச்சியா ?”, என தான் வந்ததன் நோக்கம் பற்றிக் கேட்டாள்.
தேவராயன் அங்கே வேலை செய்தவர்களைத் தூரமாகச் செல்லும்படிக் கூறிவிட்டு, பானுவை அழைத்துக்கொண்டு தண்ணீர் தொட்டி அருகில் சென்று மோட்டார் போட்டு விட்டு அவளை அணைத்துக் கொண்டான்.
அவள் காதோரம் கிசுகிசுத்தபடி அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து சென்றாள் பானு. அவள் பின்னால் பலரின் கிசுகிசு குரலும் பின் தொடர்ந்தது.
இந்த குரலில் ஒன்று தங்கத்துரையை எட்டியதும், அவர் கோபம் கொண்டுத் தேவராயனுக்காகக் காத்து இருந்தார்.
பாண்டியை அருகில் வைத்துக் கொண்டு இரண்டு மாதமாகச் செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு இரவில் தான் வீடு வந்து சேர்ந்தான்.
“ராயா “, என அவனை அழைத்தார்.
“சொல்லுங்க சித்தப்பா”, என அவர் என்ன சொல்ல போகிறார் என்பது நன்றாக தெரிந்துக் கொண்டு ஏதும் அறியாதவன் போலக் கேட்டான்.
“நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல டா .. உனக்கு இன்னும் ரெண்டு நாள்ல வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம்..”, எனக் கூறிவிட்டு அதற்கு மேல் எப்படி பேசுவது என ஒரு நிமிடம் தயங்கினார்.
“அதனால என்ன? அதான் நீங்க முடிவா சொல்லிட்டீங்களே சித்தப்பா”, என அவனும் ஒத்துக்கொண்டான்.
“இப்பவும் நீ பானு கூட நெருக்கமா இருக்கறது நல்லா இல்ல ராயா.. உன்ன நம்பி வர போற பொண்ணுக்கு என்ன பதில் சொல்வ ?”
“நான் ஏன் அந்த பொண்ணுக்கு பதில் சொல்லணும்? நீங்க தானே எல்லாமே முடிவு பண்றீங்க .. நீங்களே பதிலும் சொல்லுங்க.. இல்லயா அந்த செங்கல்வராயன சொல்ல சொல்லுங்க.. நான் எப்பவும் போல தான் இருப்பேன்.. இதான் என் முடிவு.. “, எனத் தீர்க்கமாகக் கூறிவிட்டுத் தனது அறைக்குச் சென்றான்.
மருதன் இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்தபடித் தந்தை அருகில் வந்தான்.
“அப்பா.. அண்ணே தான் பானு அத்தாச்சிய விரும்புதுன்னு உங்களுக்கு நல்லா தெரியும்ல .. அப்பறம் ஏன் ப்பா அவர கட்டாயப்படுத்தி வேற ஒரு பொண்ணுக்கு கட்டி வைக்க நினைக்கறீங்க ? உங்க பிடிவாதத்துனால மூணு பேர் வாழ்க்கை வீணா போகிடும் ப்பா”, எனக் கூறினான்.
“எனக்கும் எல்லாமே தெரியும் டா.. ஆனா என்னால இதுல ஒண்ணும் இதுக்கு மேல செய்ய முடியாது.. போய் அவனுக்கு சாப்பாடு குடுத்து மாத்தர எடுத்து குடு..” , எனச் சோர்வாகக் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்று விட்டார்.
நங்கை வீட்டில் வினிதா வந்த பின் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சற்று தெளிவாக உணர்ந்தாள். மாலை நடக்க வேண்டிய நழுங்கு விசேஷத்திற்காக, அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக வேம்பு பாட்டி செய்துக் கொண்டு இருந்தார்.
“வாணி.. இத அங்க வை.. அந்த மனைய கெழக்கு பாத்து போடு.. யார்ரா அவன் காத்தாடிய நிறுத்து டா.. வெளக்கு எரியறது கண்ணு தெரியல.. வரதா.. சின்னவன் எங்க டா?” , என எல்லா ஏற்பாடுகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்துக் கவனித்து வழிகாட்டிக் கொண்டிருந்தார்.
“என்ன அத்தே உங்ககொரல் தான் தெருமுனை வரைக்கும் கேக்குது.. பேத்தி கல்யாணம்-ன்னு ரெண்டு ஆளு தெம்பு வந்துரிச்சி போல..”, எனக் கேட்டபடி வினிதாவின் அம்மா கோதை அங்கே வந்தார்.
“இருக்காதா டி.. என் சம்மந்திக்கும் சேத்து நான் தானே எல்லாம் பாக்கணும். அவ கூட இருந்து எல்லாம் நல்ல படியா முடிச்சி வைப்பா டி..”, என கண்களில் சந்தோஷம் மின்னக் கூறினார்.
“சரி நாளைக்கு முகூர்த்தம் நம்ம ஊரு கோவில்ல தானே?”
“ஆமா டி.. மூணு ஊருக்கும் பொது இந்த கோவில் தானே.. கல்யாணம் எல்லாம் இங்க தானே நடக்கணும்..”, எனக் கூறிவிட்டு நங்கையைப் பார்க்கச் சென்றார்.
“முத்து.. முத்து..”, என அழைத்தபடி உள்ளே வந்தவர் தன் பேத்தி புடவைக் கட்டி நிற்பது கண்டு, கண்கள் பூக்க அருகில் சென்று அவளை வாரி அணைத்து உச்சியில் முத்தமிட்டார்.
“என்ன பாட்டி உங்க பேத்திய நல்லா ரெடி பண்ணிட்டேனா?”, என நங்கையின் தலையில் பூ வைத்தபடிக் கேட்டாள் வினிதா.
“அவளுக்கு அலங்காரம் இல்லாமயே மொகம் பளீச்சின்னு தெளிவா தான் இருக்கும் .. பொடவ கட்டி ரொம்ப வருஷம் கழிச்சி இப்ப தான் பாக்கறேன். முழு வளர்ச்சி வந்த அப்பறம் பொடவை கட்டறதுல தான் முழு அழகு இருக்கு, ஒரு கம்பீரம் இருக்கு.. “, எனக் கூறிவிட்டு வினிதா தலையில் பூ வைத்துவிட்டு இருவருக்கும் திருநீறு தனது சுருக்கு பையில் இருந்து எடுத்து முருகனை வேண்டி பூசி விட்டார்.
“சின்னதா வைக்க மாட்டீங்களா பாட்டி? பாருங்க பாதி நெத்தில திருநீறு தான் இருக்கு”, என பாட்டி வைத்த திருநீரை சரி செய்துப் பாதியாக்கினாள்.
“யாரு டி இவ.. எங்கப்பன் முருகன் திருநீர கொறைகிக்கறவ? நெத்தி முழுக்க இருந்த தான் பாக்க நல்லா இருக்கும்.. நான் வச்சிக்கல? “
“நீங்க பட்டை அடிச்சீட்டு இருக்கீங்க பாட்டி.. நாங்களும் அப்படி அடிச்சிக்க முடியுமா என்ன? அப்பறம் நாங்க சந்நியாசம் போறோம்ன்னு நாங்க சொல்லாமலே ஊருக்குள்ள பொறளி கெளப்பி விற்றுவாங்க.. கீழ போலாமா?”, எனக் கேட்டாள்.
“அவ அத்தைங்க வந்து அழைச்சிட்டு போகணும்.. அதுவரை ரெண்டு பேரும் இங்கயே இருங்க டி.. குடிக்க ஏதாவது அனுப்பறேன்..”, எனக் கூறிவிட்டு கீழே சென்று வாசலில் நின்றார்.
வாணி ராஜனின் நடவடிக்கைகளைக் கவனித்தபடி, அவனைப் பார்த்துக் கொள்வது போல பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அவருக்கு அவன் மேல் பலத்த சந்தேகம் மணிக்கு மணி பெருகிக் கொண்டு இருந்தது.
ஏகாம்பரமும் மாமியாரின் செய்கைகளை அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்து, தனது வேலையைப் பார்த்துகொண்டு இருந்தார். அவ்வப்பொழுது ராஜனை வந்துக் கவனித்து நலம் விசாரிக்கவும் தவறவில்லை.
“என்ன மாமா.. பையன் மேல நாலு ஊரு பாசம் வச்சி இருக்கீங்க போலவே.. அரமணிக்கு ஒரு தடவ வந்து நலம் விசாரிக்கறீங்க .. பொண்ண பத்தி ஒரு வார்த்த கூட கேக்க மாட்டேங்கறீங்க “, என வாணி ஒரு முறை வாய்விட்டு கேட்டே விட்டார்.
“அவள சுத்தி தான் பொம்பலைங்க இத்தன பேரு இருக்கீங்க.. என் மகனுக்கு யாரு இருக்கா? நான் தான் பாக்கணும்”, எனக் கூறிவிட்டுச் சென்று விட்டார்.
“சரி சரி.. மகன இனிமே நான் பலமா கவனிச்சிக்கறேன்.. நீங்க கவல படாம கல்யாண வேலைய பாருங்க மாமா”, எனக் கூறிவிட்டு அவரும் நழுங்கிற்கு செய்யும் ஏற்பாடுகளைப் பார்க்கச் சென்றார்.
“என்ன டி அந்த மனுஷன் அரைக்கு ஒரு தடம் வந்துட்டு போராரு?”, என வேம்பு பாட்டி கேட்டார்.
“அவரு மகன அவரு தான் பாக்கணுமாம். வேற யாரும் பாக்கறது இல்லயாம் .”, என நீட்டி முழக்கிக் கூறினார் வாணி.
“அந்த எடுபட்ட பயலுக்கு ராஜ கவனிப்பு வேற பண்ணனுமோ? போதை அடிச்சிட்டு சுத்தற பக்கிக்கு இந்த உபசரிப்பு ஒண்ணு தான் கேடு.. ஏண்டா இப்டி பண்றன்னு கண்டிச்ச புள்ளைய அந்த அடி அடிச்சிபுட்டு வந்து ஒரு வார்த்த, ஏன் ஒரு பார்வ கூட பாக்கல.. அவன இந்த அளவுக்கு விழுந்து விழுந்து வேற கவனிக்கணுமா ? கல்யாணம் முடியட்டும் வச்சி அம்மி கல்லுல அவன அரைச்சி புடறேன் .. இவன உங்கக்கா வளக்கற லட்சணம் பாத்து நீயும் அப்டியே வளத்து தொலைக்காத.. புள்ள வீணா போகும்.. நல்லது கெட்டது, கஷ்ட நஷ்டம் எல்லாம் சொல்லி குடுத்து வள டி ..”, என வாணியிடம் கூறினார்.
“அதுலாம் நான் சொல்லி தான் வளத்துட்டு இருக்கேன் பெரியம்மா.. எங்கப்பா எங்கள எப்புடி வளத்தாரு, அப்புடி தான் நானும் என் புருஷனும் வளக்கறோம்.. ஊரு ஊரா சுத்தற பொழப்பா இருக்குன்னு தான் ஹாஸ்டல்ல போன வருஷம் சேத்தி விட்டுட்டேன்.. “, எனக் கூறிவிட்டு காமாட்சியிடம் சென்றார்.
“அதுவும் சரி தான்.. ஊர் ஊரா போன புள்ளைங்க படிப்பு தான் கெடும்.. பாத்து சூதானமா இருங்க.. பெரிய பதவி போக போக தான் பயமும் கூடுது டி.. “, எனக் கூறிவிட்டு அவரும் நேரம் பார்த்து மருமகள்களிடம் நங்கையை அழைத்து வரக் கூறி அனுப்பி வைத்தார்.
“பெரியவனே .. சின்னவனே .. ரெண்டு பேரும் முன்ன வந்து நில்லுங்க டா.. நல்லெண்ண எடுத்து வச்சீங்களா ? “, எனக் கேட்டார்.
“ரெண்டு பேரும் பொண்ணு தலைல எண்ணை வைங்க.. குளிப்பாட்ட எல்லாம் எடுத்து வச்சித் தயாரா இருக்கா வாணி?”
“எல்லாமே தயாரா இருக்கு பெரியம்மா.. “
“சரி.. நேரம் ஆச்சி .. பொண்ண பலகைல உக்கார வைங்க “, எனக் கூற, அத்தைமார்கள் இருவரும் அவளை இருபக்கம் சிரித்தபடி அழைத்து வந்து பலகையில் அமர வைத்தனர்.
“சந்தனம் குங்குமம் வைங்க டா ரெண்டு பேரும்”, என மகன்களை அதட்டினார்.
“நீங்க தானே மா எண்ணைய எடுக்க சொன்னீங்க..” ,என சின்னவன் கூறவும், அங்கே சிரிப்பலை எழுந்தது.
“வேம்பு அம்மாவுக்கு பேத்திக்கு கல்யாணம்-ன்னு சொன்னதும் கையும் ஓடல காலும் ஓடல போலவே .. ஆர்வ கோளாறுல எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க”, என உறவினர் கூட்டத்தில் ஒரு பெண்மணி கூறினார்.
“அதுலாம் இருக்கறது தான்.. இது கூட இல்லைன்னா விசேஷம் எப்டி கலை கட்டும்.. என்ன அத்த நான் சொல்றது சரி தானே ?”, என வினிதாவின் தாயார் கூறினார்.
“போதும் போதும் டி.. எல்லாருக்கும் பள்ளு சுளுக்கிற போகுது.. டேய் பெரியவனே .. மொத சந்தனம் குங்குமம் வச்சி அச்சத போட்டு புள்ளைய ஆசீர்வாதம் பண்ணு டா” , எனக் கூறினார்.
அதே போல அவரும் செய்து விட்டு, தம்பியையும் செய்ய வைத்து இருவரும் ஒருவர் பின் ஒருவராக தலையில் எண்ணை வைத்தனர்.
“ஒத்த படைல தான் முடிக்கணும்.. இன்னும் ஒருத்தர் பொண்ணுக்கு மாமன் மொறை இருக்கறவங்கள கூப்டுங்க ..”, என பெண்ணின் தந்தை பக்கம் ஒரு பெரியவர் கூறினார்.
“என் பையன் வைக்கலாமா?”, என வரதன் கேட்டார்.
“வைக்கலாம் ப்பா”, என அவர் கூறியதும் வரதனின் மூத்த பையன் நங்கைக்கு அட்சதை போட்டுவிட்டு எண்ணை வைத்தான்.
“சரி .. பொம்பலைங்க பொண்ண அழைச்சிட்டு போய் குளிப்பாட்டி கூட்டி வாங்க”, எனக் கூறியதும் நங்கையை அழைத்துச் சென்றனர்.
ஒரு மணிநேரம் கழித்து நங்கை குளித்து முடித்து அழைத்து வரப்பட்டாள்.
மீண்டும் மனையில் (பலகை) அமரவைத்து அவளுக்குப் பட்டுப் புடவைக் கொடுத்தனர் தாய் மாமன்கள் இருவரும்.
அதை உடுத்தி முழு அலங்காரம் செய்து மீண்டும் அவளை மனையில் அமர வைத்து, மாமன்கள் இருவரும் தங்களது சீர்வரிசையை அவளுக்குச் செய்தனர். மாமன்மார்கள் செய்த பின் அத்தைமார்கள் அவளுக்கு சந்தனம் குங்குமம் வைத்து அட்சதைத் தூவி ஆசி வழங்கினர்.
வேம்பு பாட்டியும் தனது பங்கிற்கு, அவளுக்கு சீர் செய்து தனியாக நான்கு தங்க வலையல்களை அணிவித்தார்.
அதன்பின் வந்திருந்த மற்ற உறவினர்கள் அனைவரும் சந்தனம் வைத்து ஆசி வழங்கினர்.
அந்த நிமிடத்தில் இருந்து நங்கை மணபெண்ணாகக் கருதப்பட்டாள். தனியாக எங்கும் செல்ல கூடாது, கையில் எப்போதும் எழுமிச்சை, இரும்பினால் செய்த ஏதேனும் ஒரு பொருள், வேப்பிலை என பல பொருட்களை கைகளில் திணித்தனர் அனைவரும்.
“எதுக்கு இவ்ளோ ?”, என வினிதா பொறுமை இழந்துக் கேட்டாள்.
“கல்யாண பொண்ணா நழுங்கு செஞ்ச அப்பறம் பொண்ணு ஒடம்புல புது வாசம் கெளம்பும். அத காத்து கருப்பு வாசம் புடிச்சி வந்து பொண்ண பிடிக்காம இருக்க தான் இத்தனையும்.. கேள்வி கேக்காம எல்லாத்தயும் பொண்ணு கைல குடு டி .. உன் கல்யாணத்துல நீ கைல வச்சுக்குவியாம் ..” , என ஒரு பாட்டி கதை சொல்லி நங்கை கையில் கொடுத்து விட்டு தான் அங்கிருந்து நகர்ந்தார்.
“நான் ஏன் இத்தனைய கைல வச்சுக்க போறேன்? பொண்ணு செஞ்சதும் என் மாமன் என் கழுத்துல தாலி கட்டிரும்.. “, என அவளும் வம்பு பேசினாள்.
நங்கைக்கு இதில் எதுவும் பெரிதாக விருப்பம் இல்லையென்றாலும், நீண்ட நாட்களுக்கு பின்னர் தன் மனதிற்கு பிடித்தவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரமும், இந்த தருணங்களும் மிகவும் பிடித்து இருந்தது.
அதனால் சிரித்த முகத்துடன் அங்கே நடப்பவைகளை மனதிற்குள் இரசித்துக்கொண்டிருந்தாள்.
இதே போல தேவராயனுக்கும் மாப்பிள்ளை செய்யும் நழுங்கு வைத்து அவனை எங்கும் செல்லக் கூடாது என்று தடை விதித்தனர். அதில் கடுப்பான தேவராயன் பாண்டியை அழைத்தான்.
“என்ன ண்ணே .. கூப்பிட்டிங்கலாம் ..”, எனக் கேட்டபடி வந்து நின்றான்.
“உனக்கு ஒரு வேல இருக்கு “
“சொல்லு ண்ணே “
“இந்தா இத கொண்டு போய் ஒரு எடத்துல குடுத்துரு “, என ஒரு பார்சலை எடுத்துக் கொடுத்தான்.
“அங்கயா ?”, என பாண்டி மலைத்து நின்றான்.
“ஆமா டா.. போ சீக்கிரம்.. அங்க இருந்து எனக்கு ஃபோன் பண்ணனும்.. கெளம்பு..”, என அவனை விரட்டினான்.
பாண்டியின் பின்னே மற்றொருவனும் சென்றான்..